Wednesday, December 11, 2013

பாரதியின் ரகசியம் :

(பாரதியார் பிறந்த தின சிறப்புக் கட்டுரை)




சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும் "
                                                      -பாரதி

 பாரதியின் சக்திமிக்க வரிகளை வாசிக்கிற பொழுதுகளிலெல்லாம் உள்ளத்திருக்கும் கவலைகள் மறந்து,உள்ளம் உவகை கொண்டாடி மகிழ ஆரம்பித்து விடுகிறது ! தோல்வி,துன்பம்,சஞ்சலம்,குழப்பம் என விதவிதமான பேய்கள் மனதிற்குள் வரும்போதெல்லாம் பேய்களை ஓட ஓட விரட்ட பாரதியின் எழுத்துக்களுக்குள் நான் பல நேரங்களில் தஞ்சம் புகுவதுண்டு!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ! என்று உச்சரிக்கிற போது அச்சம் ஆவியாகிறது, அவன் சக்தியை வேண்டி பாடிய “நல்லதோர் வீணை”, “நின்னை சரணடைந்தேன்” பாடல்களை கேட்டாலோ,பாடினாலோ கவலைக் காரணிகள் அத்தனையும் சர்வ நாசமாகி விடுகிறது.

 அவனது எழுத்துக்களுக்குள் அவன் சதா சர்வகாலமும் வேண்டிக்கொண்டிருந்த அந்த பராசக்தி குடி கொண்டிருக்கிறாள், அதை வாசிக்கிறவர்கள் மனதிற்குள் ஒளியாக நிறைந்து சக்தி தருகிறாள் அவள்.

சக்தி !

 சக்தி- இந்த வார்த்தைக்கு சிவனின் மனைவி என்பதாக இந்துமத சாத்திரங்களின் அடிப்படையில் உங்கள் மனம் அர்த்தம் செய்து கொண்டிருக்கக்கூடும்.

சிவம்-சக்தி ,சிவம் என்றால் ஜடம் என்றும் சக்தி என்றால் ஆற்றல் என்றும் அர்த்தம். அறிவியல் வார்த்தைகளில் இதைச் சொல்லவேண்டுமானால் Matter and Energy என்று சொல்லலாம்.  ஜடப்பொருளுடன்(சிவம்) ஆற்றல்(சக்தி) சேரும்போது இயக்கம் ஏற்படுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு இந்த சிவ-சக்தி இணைவே காரணம் !.
  
சகலமும் சக்தி !!
 பொருட்களை துருவித்துருவி ஆராய்ந்து விஞ்ஞானம் எலக்ட்ரான்,புரோட்டான்,நியூட்ரான்,பாஸிட்ரான்,மீஸான்.. என்று என்னென்னவோ வார்த்தைகளில் சொல்லிக்கொண்டே போகிறது,பிரிக்க பிரிக்க விரிவடைந்து கொண்டே போகிறது அணு, அண்டத்தின் பிரமாண்டம் அணுவினுள்ளும் இருப்பது கண்டு வியக்கிறது விஞ்ஞானம்.

 சிவம்-சக்தி என்ற ஜட மற்றும் இயக்கஆற்றல் தத்துவத்தின் மனிதவடிவ உருவகமே (Anthro-morphic image).கோவில்களில் நாம் காணும் சிவனும்-பார்வதியும்.

  நமது உடலின் உள்ளே இருந்து நம்மை இயக்கிக்கொண்டிருப்பவள் சக்தி தான்!,நம் பழைய இந்திய கலாச்சாரத்தில் உடலுள் உறையும்  சக்தியை குண்டலினி சக்தி என்று அழைத்தனர் .இது பற்றி பல குறிப்புகள் வேதங்களிலும்,உபனிஷத்துகளிலும்,புராணங்களிலும் கிடைக்கின்றன. ("லலிதா சகஸ்ரநாமம்" அர்த்தத்துடன் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தால் கட்டாயம் வாசியுங்கள் ,அதில் சக்திக்கு அளிக்கப்பட்டிருக்கும் பெயர்களை அர்த்தமுடன் நாம் அணுகும்போது சக்தியின் அருள் நமக்கு வாய்க்கபெறும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.).

 எங்கும் ,எதிலும் சக்திதான் வியாபித்திருக்கிறது ! சக்தியின் வேறு வேறு வடிவங்கள் தான் நீங்களும் ,நானும்,எல்லாமும்.என்னை எழுத வைத்தவளும் அவளே,உங்கள் கணிப்பொறியின் திரைகளில் இந்த எழுத்துக்களை ஒளிர வைத்து உங்களை வாசிக்க வைப்பவளும் அவளே !,.இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றின் இயக்கத்திலும் இருப்பவள் அவளே !


 சக்தி என்று பாரதி குறிப்பிடுவது இந்த இயக்க ஆற்றலைத்தான் ,பாரதி எழுதிய சக்திப் பாடல்களை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அதில் சக்தி என்பதற்கான விளக்கத்தை ஒரு பாடலில் சொல்லிப்போகிறான் அவன்.

 
சக்திப் பாடல்
      

 "சின்ன்ஞ்சிறு கிளியே கண்ணம்மா,செல்வக் களஞ்சியமே ". என்ற பாடலில் சக்தியைத் தான் பாரதி குழந்தையாக பாவித்து பாடியிருக்கிறான் என்று சில தமிழறிஞர்கள் சொல்கிறார்கள்.
 பாரதி பாடல்கள் மட்டுமின்றி நிறைய கட்டுரைகளும் கூட எழுதிக் குவித்திருக்கிறான், தன் எழுத்துக்களில் சக்தி பற்றி அவன் நிறையவே சொல்லி இருக்கிறான்.

"ஆத்மா உணர்வு, சக்தி செய்கை
உலகம் முழுவதும் செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இவ்வுலகத்தை ஆளுகின்றன. இதைப்பூர்வ சாஸ்திரங்கள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்று சொல்லும்."


இச்சா-ஞான-கிரியா சக்திகளை ஒரு சிறு உருவகம் கொண்டு விளக்க முற்படுகிறேன் :
 மனதினுள் எண்ண விதை தோன்றுகிறது அது இச்சா சக்தி, விதை செடியாக வளர,மரமாக மாற அவசியப்படும் அத்தனையையும்  சேகரம் செய்கிறது இது ஞான சக்தி, சேகரிக்கப்பட்ட ஞானம் மூலம் செடியாகவோ,மரமாகவோ வளர்கிறது விதை இது கிரியா சக்தி. இந்த மூன்று சக்திகளில் தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இயங்கிக்கொண்டு இருக்கிறது !

அவனின்றி அணுவும் அசையாது என்றொரு சொற்றொடர் உண்டு ,அவன் என்பதை அவள் என்று திருத்திச்சொல்வோம், சக்தி இல்லாது போனால் அனைத்தும் சிவமாகிப் (ஜடம்) போகும். சக்தியே இயக்கக்காரணி.

 சதா சர்வகாலமும் சக்தியையே உபாசனை செய்கிறான் பாரதி ! அவன் எழுதுகிற கடிதங்களை,எழுதத் துவங்குகிற பாடல்களை,கட்டுரைகளை காகிதத்தில் "ஓம் சக்தி" என்று குறியிட்ட பின்பே துவங்குகிறான்!.

 
பாரதி எழுதிய கடிதம்
             
பாரதியின் ஜெயபேரிகை பாடல்


பாரதி தனது கட்டுரையொன்றில் கீழ்காணும் வரிகளைக் குறிப்பிடுகிறான்:

" சக்தியால் உலகம் வாழ்கிறது;
நாம் வாழ்வை விரும்புகிறோம்;
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம். "

சிறு வயதிலேயே வறுமை அவனைப் பிடிக்கிறது,கவலைகள் அவனை சூழ்கிறது,எது வந்து தடுத்தபோதிலும் பாரதியை அசையாது,வழுவாது இயங்க வைத்தது எது.

வறுமையின் பிடியில் இருந்த பொழுதும் கூட "ஜெயமுண்டு பயமில்லை மனமே..." -என அவனால் எப்படி பாட முடிந்தது,
மரணம் அவனை தழுவ வந்த அந்திமக் காலதிலும் கூட " காலா எந்தன் காலருகே வாடா, சற்றே எந்தன் காலால் மிதிக்கிறேன்" என்று அவனால் எப்படிக் கூற முடிந்தது

சர்வ நிச்சயமாக அவன் வேண்டி நின்ற சக்திதான்.

"நின்னை சில வரங்கள் கேட்பேன்" என்றும் "இவை அருள்வதில் உனக்கேதும் தடை உளதோ "என்று சக்தியிடன் அவன் வேண்டிக்கொள்ளும் வித்த்தை நான் வியப்பதுண்டு

பாரதி சொல்கிறான்:

"சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூலதர்மங்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல் சிலைகளையும், கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங்கொடுப்பதில்லை.

வா; நெஞ்சே, பராசக்தியை நோக்கிச் சில மந்திரங்கள் சாதிப்போம்.
நான் விடுதலை பெறுவேன்; எனது கட்டுக்கள் அறுபடும். நான் விடுதலை பெறுவேன்; என்னிச்சைப்படி எப்போதும் நடப்பேன். என்னிச்சையிலே பிறருக்குத் தீங்கு விளையாது. எனக்கும் துன்பம் விளையாது. நன்மைகளே என்னுடைய இச்சைகள். இவற்றை நான் எப்போதும் நிறைவேற்றும்படியாக க்ஷணந்தோறும் எனக்குப் பிராண சக்தி வளர்ந்து கொண்டு வருக. உயிர் வேண்டுகிறேன். தலையிலே இடி விழுந்த போதிலும் சேதப்படாத வயிர உயிர். உடலை எளிதாகவும், உறுதியுடையதாகவும், நேர்மையுடையதாகவும் செய்துகாக்கின்ற உயிர்.
அறிவு வேண்டுகிறேன்; எந்தப் பொருளை நோக்குமிடத்தும், அதன் உண்மைகளை உடனே தெளிந்து கொள்ளும் நல்லறிவு; எங்கும் எப்போதும், அச்சமில்லாத வலிய அறிவு.
பிறவுயிருக்குத் தீங்கு தேடமாட்டேன்; என்னுடைய உயிருக்கு எங்கும் தீங்கு வரமாட்டாது.
பராசக்தி, நின்னருளால் நான் விடுதலை பெற்று இவ்வுலகத்தில் வாழ்வேன்."

பாரதியின் பாடல்கள்,அவனது வீரம் ததும்பும் பேச்சு, சக்தி மிக்க வார்த்தைகள் ,அவனது வாழ்க்கை அத்தனைக்குமான ரகசியம் “சக்தி”

மகா கவியே உன் பாதம் பணிகிறேன் !




பாரதியின் வாழ்க்கைக்குறிப்பு,பாடல்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,கதைகள்,பாரதி தொடர்பான விடியோபதிவுகள் என அத்தனையும் ஒரே இடத்தில்:

Labels: , ,

Sunday, December 01, 2013

பெண் வடிவில் பூக்கும் அதிசய மலர் !!


     சில மாதங்கள் முன்பு அலுவலகத்தில் பழைய மாத இதழ்களை புரட்டிக்கொண்டிருந்தேன்,அதில் ஒன்றில் கீழ்காணும் படத்துடன் - நாரிலதா மலர் - பெண் வடிவில் இமயமலைப்பகுதிகளில் மலரும் அதிசய மலர்.என்று இருந்தது !!


     கவிதைகளிலும்,திரைப்பட பாடல்களிலும், கொஞ்சல்களின் போதும் பெண்களை செல்லமாக பூவே,மலரே என வர்ணித்துச் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம், அட ! ஒரு பூவே பெண் வடிவில் பூத்திருக்கிறதா.

     இந்த செய்தியை வாசித்தபோது நானும் இப்படித்தான் ஆச்சரியப்பட்டேன்.அதன் பின்பாக சில நிமிடத்திற்குள் "அட இப்படி ஒரு பூ இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று என் அறிவு அசரீரி மனதிற்குள் சத்தம் போட்டது"... 
    "மெய்ப்பொருள் காண்பதறிவு " அல்லவா !




    பெண் வடிவ மலர்: (நாரிலதா மலர்) ஒரு அலசல் :



     இந்த மலர் நாரி ஃபூல்,நாரிலதா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது,இதனை ஹிந்தி மொழியில் பிரித்து போட்டு அர்த்தம் கொள்ளும்போது நாரி - பெண், லதா- சிறு கொடி வகை தாவரம், ஃபூல்-பூ என்று அர்த்தங்கள் கிடைக்கின்றன.

     இந்த மலர் இந்தியாவின் இமயமலையின் மலையோர பகுதிகளிலும்,இலங்கை,தாய்லாந்து போன்ற நாடுகளிலும் மலர்வதாக சொல்லப்படுகிறது, லியதம்பர மாலா(Liyathambara Mala)
     என்று இலங்கை யிலும், நரீபொல் (nareephol)என்று தாய்லாந்திலும் இந்த மலருக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

    இன்னொரு முக்கியமான விசயம் இந்த நாரிலதா மலர் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்குமாம் !

    நம்ம பாபாஜி மாதிரியான ரிஷிகள் இமயமலையில் தவம்,தியானம் செய்யும்போது அவர்களின் கவனத்தை கலைக்க இந்த பெண் வடிவ மலர் மலர்வதாக கர்ண பரம்பரை கதை  (செவி வழிக்கதை) ஒன்று சொல்லப்படுகிறது.

    உண்மையிலேயே இப்படியோரு மலர் இருக்கிறதா ?

      இணையத்தில் இந்த மலர் பற்றி தேடினால் , உண்மை என்றும் "பொய்" என்றும் இரண்டு பதில்களும் கிடைக்கின்றன.(அட இன்னாப்பா கன்பீஸ் பண்ற என்று கடுப்பாகாதீர்கள் !)

      இப்படியொரு பெயரில் மலர் ஒன்று இருக்கிறது என்பது உண்மை,ஆனால் இதன் பெயரில் எங்கள் அலுவலக மாத இதழில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படமும்,பெரும்பாலான இணையத்தளங்களில் இருக்கும் படங்களும் பொய்யானவை.

     இணையத்தில் நாரிலதா மலர் என்ற பெயருடைய மலரின் பெயரில் போலியான புகைப்படம் பரப்பப்பட்டுள்ளது,பல தளங்களில் இந்த போலிப்படமும் வியப்புக்கட்டுரையும் தான் உள்ளன,ஒன்றிரண்டு ஆங்கில இணையத்தளங்கள் விளக்கம் தருகின்றன, தமிழில் நிறைய வலைப்பூக்களில் இந்த மலரின் போலியான படத்தை பகிர்ந்து ஆச்சரியக்குறியோடு சில வரிகளையும் டைப்பி வைத்திருக்கின்றனர்.
    விக்கிபீடியாவில் நாரிபொன் என்கிற பெண் வடிவ பழத்தைப் பற்றின கட்டுரை தான் இருக்கிறது.  நரிலதா மலர் பற்றின கட்டுரை முன்பு இருந்ததாகவும் குழப்பத்தின் காரணமாக அது நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.


    போலிப் புகைப்படமும் நாரிலதா மலரும்:


    1.லதா என்றால் கொடி என்று ஹிந்தி மொழியில் அர்த்தம், இது மரத்தில் மலர்வதாக காண்பிக்கப்பட்டுள்ளது
    2.மலருக்கே உரித்தான இதழ்,மகரந்தம் என்ற எந்த பாகமும் தட்டுப்படவில்லை
    3.ஒரு மலரில் மலர்க்காம்பு தலையில் இணைந்துள்ளது,சிலதில் பின்புறத்தில் இணைந்துள்ளது.
    4.அச்சில் வார்த்த மாதிரி அனைத்தும் ஒரே மாதிரி வடிவில் இருக்கின்றன.

     நீங்கள் இந்த படத்தை உற்றுப்பார்க்க பார்க்க உங்களுக்கு இப்படியாக இன்னும் சிலபல விசயங்கள் தட்டுப்படும் !! 

    இந்த படம் போட்டோஷாப் எடிட்டிங்க் ஆகவோ, அல்லது மரத்தில் பொம்மைகளை ஒட்டிவைத்து எடுக்கப்பட்ட புகைப்படமாகவோ இருக்கலாம்.
     ஜப்பானில் தர்பூசணி பழங்களை வளரிளம் பருவத்தில் அவைகளை சதுர வடிவ டப்பாக்களில்,அடைத்துவிடுகிறார்கள்,இவை வளரும் போது டப்பாக்களின் எல்லைகளுக்குள்ளாக அடைபட்டு சதுர வடிவிலேயே வளர்கின்றன,அடுக்கி வைக்க, ஏற்றுமதி செய்ய எளிதாக இருக்கும் என்று இப்படிச் செய்கிறார்களாம்,இந்த படத்தில் இருப்பதும் இப்படியானதொரு எல்லைகளுக்குட்பட்டு வளர்ந்த பழமாக கூட இருக்கலாம்.

    நாரிலதா மலரின் உண்மைப் புகைப்படம் !



    இந்த மலர் ஆர்கிடேசி(Orchidaceae) மலர் குடும்பத்தில் ஹெபனேரியா தொகுப்பைச் சேர்ந்தது ,(Genara of Habenaria).

    கொசுறு தகவல்:
    பெண் வடிவ பழம்:


    சில இணையத்தளங்களில், மேலே நீங்கள் பார்த்த விடியோவில் இருப்பது மாதிரியான ஒரு ஜந்துவை காட்டி இதுதான் நாரிலதா மலர் என சத்தியம் செய்யாத குறையாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
    விடியோவில் அவர்கள் குறிப்பிடும் ஜந்து நரிபொன் அல்லது மக்காளிபொன் என்று தாய்லாந்து பாஷையில் அழைக்கப்படும் ஒரு பழம்  (தாய் பாஷயில் பொன் என்றால் பழம் ).
    தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்-ற்கு அருகேயிருக்கும் புத்த மடாலயத்தில் இந்த பழம் இரண்டு வைத்து பராமரிக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
    தாய்லாந்து புத்த மடாலயம்

    புத்த மத புராணத்தில் இந்த பழத்தின் இருப்பை பறைசாற்றும் பழங்கதையொன்று காணப்படுகிறது. 


    ' பழ' ங்கதை :

    பெண் வடிவ பழம் - நரிபொன்
    இந்த கன்னி ரூப கனி பற்றின கதை புத்த மத நூலான வசந்தரா ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    (புத்தரின் முற்பிறப்புகள் அதாவது முந்தைய புத்தர்கள் பற்றின கதைகளை ஜாதக கதைகள் என புத்தமதத்தில் குறிப்பிடுகிறார்கள்).
    விபஸ்ஸி புத்தரின் காலத்தில் புசத்தி என்ற பெண் வாழ்ந்து வாந்தாள். அவள் புத்தருக்கு சந்தனத்தை அர்ப்பணித்து வணங்குவது வழக்கம். ஒரு நாள் அவள் விபஸ்ஸி புத்தரிடம் அடுத்த புத்தன் தனது வயிற்றில் பிறக்க வேண்டும் என வரம் கேட்கிறாள். அவரும் அருள்கிறார்.

    அதற்கடுத்தப் பிறப்பில் அவள் இந்திரனின் மனைவியாக பிறக்கிறாள், அதற்கடுத்தப் பிறப்பில் உயர்குடிபெண்மணியாக அரசகுலப் பெண்ணாக புசத்தி என்கிற அதே பெயரிலேயே அவதரிக்கிறாள். சஞ்சயன் என்கிற அரசனுக்கு பட்டத்து ராணியாகிறாள். அவளுக்கு கொடுத்த வரத்தின் படி புத்தக்கடவுள் போதி சத்துவர் புசத்தியின் வயிற்றில் பிறக்கிறார். இளவரன் வசந்தரா என்கிற பெயரில் வளர்கிறார்.

    இளவரசன் வசந்தரனுக்கு தேவி மாத்ரி என்கிற பெண் மணம் செய்து வைக்கப்படுகிறாள். இளவரசன் வசந்திரனின் குடும்பத்தை பாதுகாக்க இந்திரன் இமயமலைக்கு அருகே ஹிமாவனம் என்கிற கானகத்தை நிர்மாணித்து வசந்திரனை அவனது மனைவியுடன் குடியமர்த்துகிறான்.

    கானகத்தில் இருக்கும் கந்தர்வர்கள், காம எண்ணம் கொண்ட தவமுனிகள், இன்னபிற துஷ்டர்களிடமிருந்து காக்க பதினாறு மக்காளிபழ மரங்களை தன் மந்திர சக்தியால் உருவாக்குகிறார். அந்த மரத்தில் அச்சு அசலாக பெண் வடிவில் பழங்கள் காய்த்ததாம் !  மோகவயப்பட்ட முனிகளோ கந்தர்வர்களோ, இன்ன பிறர்களோ அந்த கனிகளின் கவர்ச்சியால் கவரப்பட்டு அதனை கவர்ந்து சென்று அதனோடு புணரும்போது அவர்கள் 4 மாத நெடுஉறக்கம் ஆட்கொள்ளுமாம், துயில் கலைந்து எழுகிற போது அவர்கள் வலிவு குறைந்தவர்களாக இருப்பார்களாம் . வலிவில்லாத அவர்களால் வசந்திரனின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படாது!
    உலகின் முதல் Sex Toy :) !!

    இந்த பழங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கனியவில்லை மாற்றாக தேவி மாத்ரி கானகத்தில் பழங்களோ, பூவோ பறிக்க வெளியே செல்லும் போது இந்த மரங்களில் மக்காளி பழங்கள் கனிந்தனவாம். ஒரு கிளையில் 5 கன்னி கனிகளாக கனிந்த இந்த கனிகளுக்கு கனிந்த மூன்றாம் நாளில் மாதவிடாய் ஏற்படுமாம். ஏழாவது நாளில் காய்ந்து சுருங்கிப்போகுமாம்.
    அப்படியாக காய்ந்து சுருங்கிப்போன கனிகள் தான் மேற்சொன்ன தாய்லாந்தின் புத்த மடாலயத்தில் இருப்பது என்றும் சொல்லப்படுகிறது.


    பதினாறு வயது இளம்பெண்ணின் உருவம், தங்கநிற கருமணிகளுடன் கூடிய நீலவிழிகள், கரிய கூந்தல் , கண் பறிக்கும் அழகு, நிர்வாண மேனி என காமுற்றவர்களை கவரும் சகல தகுதிகளுடன் கனிந்த நாள் முதலாய் மரம் முழுக்க ஆடிப்பாடி ஆர்ப்பரித்து அழைப்பு விடுத்து. அழகில் மயங்கி அடைபவர் வலிமையை அழித்தனவாம் .இந்த மரங்கள் இமயமலையின் ஹிமவன பிரதேசத்தில் இன்றளவும் இருப்பதாகவும், தவவலிமை கொண்டவர்களால் மட்டுமே அதை காண முடியும் என்றும் புத்த மத கொள்கையாளர்கள் நம்புகின்றனர்.


    உண்மையை உண்மையென்றும் உண்மையல்லாதவைகளை உண்மையல்லாதவை என்றும் தெரிந்துகொள்.
                                           -கௌதம புத்தர்

       ------------------------------------------------------------------------------------------------
        பின்னிணைப்புகள்:

        உதவிய கட்டுரைகள்: 
        http://www.hoax-slayer.com/nareepol-tree.shtml
        https://en.wikipedia.org/wiki/Nariphon
        http://waynedhamma.blogspot.in/2008/11/origins-of-makaliporn.html
        http://www.pseudoparanormal.com/2011/04/naree-pon.html
        http://waynedhamma.blogspot.in/2009/05/amazing-makkaliporn-of-wat-prangmuni.html

      -----------------------------------------------------------------------------------------------------------------

Labels: , , ,

Saturday, November 09, 2013

பேஸ்புக்கில் டைம்லைன் அத்துமீறல்கள் : தடுப்பது எப்படி !!

(பேஸ்புக்கும் பெண்களும் பாகம்- 7)

ங்கள் பேஸ்புக் டைம்லைனை ஓபன் செய்து பார்க்கிறீர்கள் !நீங்கள் போடாத போஸ்ட்கள் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத போஸ்ட்கள்,உங்களை அவமானம் செய்கிற மாதிரியான போஸ்ட்கள் உங்கள் டைம்லைன் முழுக்க நிறைந்து கிடக்கின்றன.,இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?...

 பிறர் நம் டைம்லைனில் பகிரும் விசயங்கள் நல்ல விசயங்களாக இருப்பின் பிரச்சினையே இல்லை, ஆனால் நம் நன்பர்கள் நம்மை கேலியாக சித்தரித்துப் போடும் புகைப்படங்கள்,கமென்ட்கள் இந்த மாதிரி வகையறாவில் வருகிற இன்னபிற விசயங்களை அவர்கள் நம் டைம்லைனில் போஸ்ட் செய்யும் போது அது நம் நன்பர்கள் பட்டியலில் உள்ள சகலருக்கும் மற்றும் நம் டைம்லைனை பார்வையிடும் எல்லா நபர்களுக்கும் காட்டப்படும் !,

 சில சமயங்களில் நாம் நமது டைம்லைன் சுவரை (Timeline Wall) திறந்த நிலையில் வைத்திருக்கும் போது அது சில எருமைகளுக்கு முதுகு சொறியும் இடமாகவும் மாற வாய்ப்புள்ளது.

சரி.., இந்த பிரச்சினைக்கு தீர்வு உள்ளதா?


இந்த பிரச்சினைக்கு தீர்வளிக்கும் விதமாக facebook -ன் Timeline and Tagging செட்டிங்க்ஸ் உதவுகிறது.

படி:1 உங்கள் பேஸ்புக்கில் "கியர்" படத்தை க்ளிக்கி settings க்குள் நுழைந்து கொள்ளுங்கள் (காண்க: படம் 1)
படம் 1 செட்டிங்க்ஸ் செல்லுதல் 
படி:2 பின் இடதுபுறம் இருக்கும் பட்டியலில் Timeline and Tagging என்றிருக்கும் ஆப்சனை க்ளிக் செய்யவும்.



படி3: இப்போது உங்களுக்கு கீழுள்ள படத்தில் உள்ள மாதிரி செட்டிங்க்ஸ் பக்கம் காட்டப்படும்.இங்கு தான் நாம் நமது அமைப்பு மாற்றத்தை (settings change)  செய்ய இருக்கிறோம்.

  
 இதன் தமிழ் வடிவத்தினை கீழுள்ள படத்தில் தந்துள்ளேன், விளக்கம் இன்றியே விளங்கிக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். (விளக்கம்  வேண்டின் தயங்காது கமென்டிலோ, மெயிலிலோ கேளுங்கள்.)




இந்த செட்டிங்க்ஸ் மூன்று வகையாக பிரிக்கப்படிருக்கிறது.

பிரிவு 1 :

இதில் மூன்று விசயங்களை அவதானிக்க முடியும்:

  1. "who can post on your Timeline " பிரிவில் நீங்கள் உங்கள் நன்பர்களையோ ,அல்லது only me ஆப்சனையோ தேர்வு செய்ய முடியும், only me கொடுத்தீர்கள் என்றால் யாரும் உங்கள் டைம்லைனில் போஸ்ட் போட முடியாது,போஸ்ட் இட முயல்பவர்களுக்கு பேஸ்புக் "இவர்கள் டைம்லைனில் போஸ்ட் செய்ய இயலாது" என அறிவிப்பு காட்டும்

  1. Friends என்று தேர்வு செய்து, அதன் கீழுள்ள   review ஆப்சன் "off" (Disable) என்று கொடுத்தால் ,உங்கள் நன்பர்கள் பட்டியலில் உள்ள நபர்கள் மட்டும் உங்கள் டைம்லைனில் போஸ்ட் இட முடியும்

  1. Friends என்பதை தேர்வு செய்து விட்டு ,அதன் கீழுள்ள review ஆப்சன் "on" (Enable) என்று கொடுத்தால்.உங்கள் நன்பர்கள் டைம்லைனில் சேர்க்கும் விசயங்கள், நேரடியாக உங்கள் டைம்லைனில் காட்டப்படாது, அவை உங்களின் உத்தரவிற்காக காத்திருக்கும், நீங்கள் "டைம்லைனில் காட்ட" அனுமதி கொடுத்தால்,அது டைம்லைனில் போஸ்ட் ஆகும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டும் காட்டப்படும்.( இந்த ஆப்சன் தான் எனது Choice ).





உங்கள் நன்பர் டைம்லைனில் செய்த போஸ்ட்கள்,நேரடியாக காட்டப்படாது,உங்களுக்கு "Notifications" காட்டப்படும் . அதே மாதிரி நீங்கள் பின்வரும் முறையிலும் உங்கள் நட்புகள் செய்துள்ள "டைம்லைன் போஸ்ட்களை" பார்க்க முடியும்.

படி1: டைம்லைனிற்குள் நுழைந்து கொள்ளுங்கள்
படி2: பின் Update info அருகில் இருக்கும் Activity Log ஐ க்ளிக்குங்கள்




படி3:பின் Timeline Review ஆப்சனை க்ளிக்கவும்.. இங்கு உங்கள் நண்பர்கள் ,உங்கள் டைம்லைனில் செய்த போஸ்ட்கள் காட்டப்படும்...




பிரிவு 2 :

இங்குள்ள இரண்டு கேளிவிகளுக்கும் "Only me " கொடுத்துக்கொள்வது நல்லது.

பிரிவு 3 :

  • பிறர் உங்கள் மீது "Tag" செய்யும் படங்கள் உங்கள் டைம்லைனில் உடனடியாக போஸ்ட் செய்யப்படாதிருக்க இந்த ஆப்சனை "On " என்று வைத்துக் கொள்ளவும்.
  • அடுத்த இரண்டு ஆப்சன்களுக்கும் "Friends" என்று இருப்பதில் பிரச்சினை ஏதும் இல்லை.

நீங்கள் செய்ய வேண்டியவை : (ஒரு சின்ன Recap)


விவரங்கள் தெளிவாக தெரியாவிடில் படத்தை பெரிது செய்து கொள்க.
 வாசகர்களின் கேள்விகள், சந்தேகங்கள்,கருத்துக்கள்,தகவல்கள் வரவேற்க படுகின்றன ., vijayandurairaj30@gmail.com என்ற முகவரிக்கு மெயிலாகவோ, அல்லது கமென்ட் பெட்டியிலோ கேளுங்கள்

தொடரின் பிற பாகங்கள்:
1. பாகம்-1 பாதுகாப்பு அடிப்படைகள்
2.பாகம்-2  Sharing செய்யும் போது கவனிக்க வேண்டியவை
3.பாகம்-3  எசரிக்கைபேஸ்புக்கில் உங்கள் படங்கள் திருடப்படுகினறன
4.பாகம்-4  நன்பர்கள் ஜாக்கிரதை
5.பாகம்-5 பேஸ்புக்கால் தற்கொலை செய்து கொண்ட பெண் !!!

Labels: , ,

Tuesday, November 05, 2013

ஆயிஷா

புத்தகக் குறிப்புகள்-2



ஆயிஷா ...
இந்த சின்னப்பெண் என்னை  பலமாகவே அடித்திருந்தாள், அவளது அறிவால்,சிந்தனை வீச்சால்,கேள்விகளால்.

 பார்க்கும் எதையும் தன் அறிவுப் பார்வையால் துளைத்தெடுக்கும் அசாத்திய குழந்தை அவள்.,

 மாணவர்களின் சொந்த அறிவை, சிந்திக்கும் திறனை,கேள்வி கேட்கும் அறிவு தாகத்தை அவமானப்படுத்தி அமரவைக்கும் ஆசிரியர்களை நீங்கள் உங்கள் பள்ளிக்காலங்களில் சந்தித்திருக்கலாம், இன்றும் கூட மாணவர்கள் இப்படிப்பட்ட ஆசிரியர்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.(அதிர்ஷ்டவசமாக மாணவர்களின் மனம் புரிந்து,அவர்களின் அறிவை மதித்து அவர்களை சக உயிராக நடத்தும் சில நல்ல ஆசிரியர்கள் சிலருக்கு வாய்க்கிறார்கள்.)

ஆயிஷாவுக்கும் அப்படித்தான் பிரம்படி பிரயோகம் மூலம் அவளது அறிவாற்றலுக்கு அணை போடும் ஆசிரியைகள் தான் அவளுக்கு அதிகமாக வாய்த்திருந்தார்கள், கொடுமைக்கார ஆசிரியைகளுக்கு மத்தியில் அவளின் கேள்விகளுக்கு காது கொடுக்கவும்,அவள் வாங்கும் அடிகளுக்கு ஆறுதல் சொல்லவும்
ஆயிஷாவுக்கென்று ஆறுதலாக ஒரே ஒரு ஆசிரியை ,கிடைக்கிறார்... ஆயிஷாவை வாசிக்கிற நமக்கும் ஆறுதலாய்.,

 இந்த வீணாய்ப்போன கல்வி முறையை எனக்கு கொஞ்சம் கூட பிடித்ததே இல்லை, கதைப்புத்தகங்கள் போலவோ, இன்னபிற அறிவியல்,வரலாறு புத்தகங்கள் போலவோ பாட புத்தகங்கள் சுவரசியமாக ஏன் இருப்பதில்லை என என் பள்ளிக்காலங்களில் இந்த ஆயிஷாவைப் போலவே நானும் குழம்பியிருக்கிறேன், சில ஆங்கில புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து அர்த்தம் புரியாமல்,புத்தகத்தைவிட டிக்சனரியை அதிகமாக புரட்டிய நினைவுகள் என் நினைவில் இன்னமும் இருக்கின்றன.

  இரவல் அறிவை மூட்டைகட்டி சுமக்கவைத்து ,சிந்திக்கும் திறனை மழுங்கடித்து,மனப்பாடம் செய்து அப்படியே எழுதுபனுக்கு முழு மதிப்பெண் போட்டு,...
 இப்படியாக சிறகுகளை வெட்டிவிட்டு கயிறுகட்டி உயரத்தில் ஏற்ற முயலும் முட்டாள் தனங்கள் தான் நம் கல்விமுறையில் நிறைய இருக்கிறது. இந்த கல்விமுறையினால் படிப்பு என்பது வேலை வாங்குவதற்கான அத்தாட்சி பத்திரம் என்பதாகவே மாற்றப்பட்டிருக்கிறது.

 இந்த கதையின் ஒரு இடத்தில் அடி வாங்கிய தழும்புகளுடன் தனக்கு அதிர்ஷ்டவசமாக,ஆறுதலாக கிடைத்த அந்த அறிவியல் ஆசிரியையிடம் ஆயிஷா கேட்கிறாள்....
" மிஸ் இன்னைக்கு கெமிஸ்ட்ரி பேப்பர் கொடுத்தாங்க,மார்க் சரியா போடலையேனு கேட்டேன்... சொந்த சரக்குக்கெல்லாம் மார்க் கிடையாதாம்,நோட்ஸ்ல உள்ளத அப்படியே எழுதணுமாம்,நோட்ஸ்லயே தப்பா இருந்தா என்ன மிஸ் பண்றது."
இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் சிக்கி அடி வாங்கி,அடிவாங்கி வலி தாங்க முடியாமல் ,
 " அடிச்சா வலிக்காமல் இருக்க மருந்து இருக்கா மிஸ்" என்று ஆயிஷா கேட்கும் போது அவள் வாங்கிய அடிகளின் வலி நமக்குள்ளும் வலிக்கிறது !,

ஆயிஷாக் குட்டி வலிக்காமல் இருக்க மருந்து கண்டுபிடிக்கிறேன் என்று ஆய்வக ரசாயணங்களை கொண்டு தானே மருந்து செய்து தனக்குள் செலுத்திக்கொண்டு வலியின்றி செத்துப்போகிற போது இந்த கல்வி முறையை "பெட்ரோல் ஊற்றி கொழுத்தினால் என்ன" என்று எனக்குள் கோபம் கொப்பளிக்கிறது.

 ஒவ்வொரு முறை ஆயிஷாவை வாசிக்கும்போதும்... கடைசி சில பத்திகளை கடக்கிற போது துளி கண்ணீரால் எழுத்துக்களை மறைத்து விடுகிறது எனது விழிகள் .

 "புத்தக்குறிப்புகளில்" நான் நேசித்து வாசித்த புத்தகங்களில் முதலில் எந்த புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடலாம் என்று யோசித்திருந்தபோது, ஆயிஷா தான் என் முன் வந்து நின்றாள்.

 ஒரு விஞ்ஞான புத்தகத்திற்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்ற தலைப்புடன் ஆரம்பமாகிறது புத்தகம்.
 பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக்கொடுக்கும் எந்திரமாக இருக்கும் எண்ணற்ற ஆசிரியைகளில் ஒருத்தியாக இருந்த அந்த சராசரி ஆசிரியையை ,புத்தகம் எழுதும் அளவுக்கு மாற்றியிருக்கிறாள் ஆயிஷா.

 ஆங்கிலத்தில் வரும் அறிவியல் நூல்களை புரிந்துகொள்ள சிரமமாக இருக்கிறது, சில இடங்கள் புரிய மாட்டேன் என்கிறது.. தமிழில் அறிவியல் நூல்கள் வந்தால் நன்றாக இருக்கும், "மிஸ் நீங்க ஏன் இது மாதிரி அறிவியல் புத்தகங்களை தமிழில் எழுதக்கூடாது"  என்ற ஆயிஷாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக,
 தான் எழுதிய 12 அறிவியல் புத்தகங்களுக்காக தன்னை உருவாக்கிய  ஆயிஷாவின் அறிமுகத்தோடு அவர் எழுதிய முன்னுரையே "ஆயிஷா குறுநாவல்" (அதிகபட்சம் அரை மணியில் படித்துவிடமுடியும்).

 விஞ்ஞானமற்ற முறையில் விஞ்ஞானத்தை சொல்லிக்கொடுக்கும் நம்  மடத்தனம்,மாணவர்களின் அறிவுக்கு ஆசிரியர்கள் தரும் அவமானங்கள் மற்றும் அடிகள்,டியூசன் சம்பிரதாயம்,ஸ்டாப் ரூம் அரட்டைகள், என பள்ளிக்கூடங்களை பலிகூடங்களாக மாற்றி வைத்திருக்கும் இந்த கல்விமுறையினையும்,பெண் பிள்ளைகளுக்கான கல்வி பற்றிய நம்மவர்களின் கருத்துக்களையும் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளாள் ஆயிஷா !

 இந்த ஆயிஷா உங்கள் நினைவலைகளில் நீந்தி உங்களை பள்ளிக்காலம் நோக்கி அழைத்து செல்லக்கூடும், அவளது கேள்விகளால் நிறைந்த உலகத்தை உங்களுக்குக் காட்டி உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும், நீங்கள் சந்தித்த ஏதோ ஒரு ஆயிஷாவை உங்களுக்கு நினைவுபடுத்தக்கூடும்..

ஆயிஷா சில குறிப்புகள்:

இந்த ஆயிஷாவிற்கு சாகா வரமளித்தவர் ரா.நடராசன்  (புத்தகம் வெளியான ஆண்டு: ). இந்த குறுநாவலுக்குப்பின் இவர் பெயர்  "ஆயிஷா நடராஜன் " என்றே மாறிப்போகும் அளவுக்கு இவரை சகலருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்,இவர் அறிமுகப்படுத்தி வைத்த அந்த குட்டிப்பெண் ஆயிஷா.

இந்த புத்தகம் உலக அளவில் 8 மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ளது,பதினேழு பதிப்பகங்கள் ஆயிஷாவை புத்தகமாக செய்துள்ளன. 7 தன்னிகர் கல்லூரிகள்( Autonomous) ,மற்றும் 3 பல்கலைக்கழகங்களில் ஆயிஷா பாடப்புத்தகமாக்கப்படுள்ளாள், இந்த கதை குறும்படமாகவும் (short film)  எடுக்கப்பட்டுள்ளது . ஆசிரியர் பயிற்சி வகுப்புகளின் போது இந்த ஆயிஷா கதையும் ,குறும்படமும் பயிற்சி ஆசிரியர்களுக்கு பயிற்சியின் பகுதியாக இருக்கிறது.

சில கல்லூரி,பல்கலைகழகங்களில் ஆயிஷாவின் கதை பாடப்புத்தகமாக இருக்கிறது அல்லவா ! (என் தங்கையின் கல்லூரியிலும் ஆயிஷா பாடப்புத்தமாக இருக்கிறாள்.இந்த வாரம் பரிட்சையாம் !) இதை நினைக்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வருகிறது,கல்வி முறையின் குறைகளைச் சுட்டிக்காட்டி கல்வி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று உருவாக்கப்பட்ட "ஆயிஷா" வை பாடமாக்கி அவள் கதையை படித்து வரச்சொல்லி வற்புறுத்தி, பரிட்சை எழுத சொல்லி மதிப்பெண் போடும் இந்த மாதிரி ஐடியாவெல்லாம் எவன் தான் கண்டுபிடிச்சானோ !

பிற்குறிப்புகள்:

ஆயிஷா குறும்படம்:





இவரது வலைப்பூவில் ஆயிஷா மின்னூல் இலவச தரவிரக்கம் செய்துகொள்ளும் வகையில் கிடைக்கிறது.

Labels: , , , ,