பாரதி தின பிரார்த்தனைகள் !
பிரார்த்தனைகள்:
கடவுளுக்கு சக்தி இருக்கிறதோ !இல்லையோ!, கடவுளைவிட , நாம் வேண்டும் பிரார்த்தனைகளுக்கு பல மடங்கு சக்தி உண்டு ! இங்கு, இப்போது, இந்நிலையில், எனக்கே எனக்காக பாடி வைத்தது போலிருக்கும் பாரதியின் ரெடிமேட் வரிகளை மனதாற மறுபடியும் வாசித்துக் கொள்கிறேன்... .
எல்லாம் வல்ல அந்த மகாசக்தி எல்லோரையும் காத்து அருள் செய்யட்டும் !
கீழ்களின் அவமதிப்பும்-தொழில்
கெட்டவ னிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல்-செய்யும்
முயற்சியெல் லாங்கெட்ட முடிவதுவும்,
ஏழ்கட லோடியுமோர்-பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்,
வீழ்கஇக்கொடு நோய்தான் !
-பாரதி (தெய்வப் பாடல்கள் )
"ஆங்கொரு கல்லை வாயிலில் படியென்
றமைத்தனன் சிற்பிமற் றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான்; உலகினோர் தாய்நீ;
யாங்கணே எவரை எவ்விதம் சமைத்தற்
கெண்ணமோ அவ்விதம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன் என்னை
இருங்கலைப் புலவனாக்குதியே."
-பாரதி (பராசக்தி வணக்கம்- பாஞ்சாலி சபதம்)
கீழோர்களின் அவமதிப்பும் , தனக்கான தொழிலைச் செய்யாது கெட்டவர்களின் இணக்கமும், கிணற்றிற்குள் மூழ்கிய ஒளி விளக்கினைப்போல், எடுத்த முயற்சியெல்லாம் கெட்டு முடிவதும், இயன்றவரை ஓடியும் பயனெய்திட வழியின்றி இருப்பதும்,... இந்த கொடிய நோய் வீழட்டும், அழியட்டும்.
"சிற்பி , ஒரு கல்லை வாசற்படியாய் அமைத்தான் , மற்றொன்றை கடவுளின் வடிவத்தில் அமைத்தான், உலகினோர் யாவருக்கும் தாய் நீ ! அந்த சிற்பியைப்போல , எந்தக்கல்லை எப்படி செய்ய எண்ணமோ, (யாரை எந்தவிடத்து வைக்க வேண்டுமோ!) அந்தக்கல்லை அவ்விதம் செய்திடுவாய், இங்குனை சரண் புகுந்தேன், என்னை பரந்துபட்ட கலைகளில் வல்லோனாய் , புலவனாய் ஆக்கிடு"
என்னுள் இருக்கும் மிடிமையையும் (சோம்பல்) அச்சத்தையும் கொன்றழித்து என்னை இவ்வையம் பயனுற வாழ அருள் புரிவாய் ! எடுத்தக் காரியும் யாவும் வெற்றியடைய அருள் புரிவாய்.
மகாகவியே உம் பாதம் பணிகிறேன் !!
பாரதி பற்றிய பிற பதிவுகள் :
Labels: பாரதி, பாரதியார், பிரார்த்தனை, மகாகவி
0 Comments:
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home