Saturday, March 25, 2017

பாரதிச்சூடி-1

அச்சம் தவிர் !



எதிர்கொள்ளல் என்பதில் தான் எல்லாமுமே இருக்கிறது , நம்மை சார்ந்தவை , நாம் சார்ந்தவை , சந்திக்கும் நிகழ்வுகள் ,சிந்திக்கும் நினைவுகள் , எதிர்படும் உறவுகள், அது தரும் உணர்வுகள் என எல்லாமுமே

எதிர்கொள்ளுதல்  என்பதை எளிமையாய் எதிர்கொள்வதற்கான எளிய மந்திரம் "அச்சம் தவிர்" .

 அச்சம் என்பது survival instinct எனப்படும் உயிர் வாழ தேவையான அவசிய உணர்வு, இயற்கை ஆபத்துக்களில் இருந்தும், தீங்கில் இருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ளவே இந்த அச்சம் என்கிற உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது, ஆனால் பல சமயங்களில் பலரிடத்தில் தற்காக்க உதவ வேண்டிய அச்சம் நம்மை முன்னேற விடாமல் முடக்கிவிட முயல்கிறது.

பயம் என்பது மேல்மனம் சார்ந்தது, அச்சம் என்பது ஆழ்மனம் சார்ந்தது.அச்ச உணர்வு உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது. உயிரை காத்துக்கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் உபாயம் அச்சம், அதனால் தான் அச்சம் ஏற்படும் போது இதயம் அதிக ரத்த ஓட்டத்தை நிகழ்த்த இதயத்தை வேகப்படுத்தி துடிப்பை அதிகம் செய்கிறது. அச்சத்தை அடுத்து நாம் இயங்க வேண்டுமாயின் , அந்த ஆபத்திலிருந்து தப்ப வேண்டுமாயின் அச்ச உணர்வை அதன் பின் தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.

பாரதியின் வார்த்தை சாதூர்யத்தை கவனியுங்கள் அச்சத்தை ஒழி என்று அவன் சொல்லவில்லை , அச்சம் தவிர் என்கிறான், அது வரத்தான் செய்யும் ,இயற்கை உணர்வு , ஆழ்மன பதிவு அச்சத்தை அழிப்பதென்பது இயலாது, அது தவறானதும் கூட ஆகவே தான் அது வந்த பின் அதை தவிர் என்கிறான்.

அச்சம் என்கிற உணர்வு இல்லாத ஒன்றை இருப்பதாக நினக்கிறபோது அல்லது இருக்கிற ஒன்றை இல்லாமல் போய்விடுமோ என்று நினைக்கிற போது உருவாகிறது. அச்சம் உடலியல் சார்ந்த தற்காப்பு உணர்வு தான் ஆனால் அது கடந்த கால நிகழ்வுகளின் பதிவுகள் மற்றும் எதிர்கால கற்பனைகளால் ஆனது. ஆக அது 90 சதவீதம் மனம் சார்ந்த உணர்வு எனவே அதை தவிர்த்தல் மனம் வைத்தால் சாத்தியமானதே!

அச்சம் தவிர் என்று அவன் சொல்வது , அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்கிற condition apply குறியீட்டோடுதான் :) .  நெருப்பு சுடும் , சுடத்தான் செய்யும் அறிவேன் அதை நான் தொடுவேன் என்பது அறியாமை. அச்சம் தவிர் என்பது நம் எதிர்கொள்ளும் வலிமையை அதிகப்படுத்துவதற்கானது, அதிக பிரசங்கித்தனங்களுக்காக அல்ல .

விமானம் கீழே விழுந்தால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற அச்சத்தின் விளைவு தான் பாராசூட் என்ற உயிர்காக்கும் உபாயம். காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல் , என்றொரு பாடல் வரி உண்டு. அச்சம் அவசியம் ஆனால் அதன் பின் நாம் செயல்பட்டாக வேண்டும், முன்னேறியாக வேண்டும் , நம் செயலை இந்த அச்சம் என்கிற உணர்வால்   முடக்கவிடுவது முட்டாள்த்தனம்.

அச்சம் வரும் ,வரத்தான் செய்யும் வந்தபின் மனதிற்குள் சொல்லிக்கொள்வோம், "அச்சமில்லை அச்சமில்லை  !!" மனம் நம்பும் , அச்சம் விலகும் , செயல்படுவோம், வெற்றிகொள்வோம் .

10 Comments:

At Sat Mar 25, 07:43:00 am , Blogger வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. பாராட்டுகள்.

 
At Sat Mar 25, 07:51:00 am , Blogger சீனு said...

அட்டகாசம்

 
At Sat Mar 25, 11:31:00 am , Blogger மனஸிகன் said...

செம....

 
At Sat Mar 25, 02:06:00 pm , Blogger KANIMOZHI D said...

This comment has been removed by the author.

 
At Sat Mar 25, 04:09:00 pm , Blogger Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நேர்மறையான கருத்தைத் தரும் அருமையான பதிவு.

 
At Sun Mar 26, 01:39:00 pm , Blogger ஜீவன் சுப்பு said...

பாரதிச்சூடி நறுக்கு தெரித்தாற்போல இருக்குடோய்...

 
At Mon Mar 27, 07:18:00 am , Blogger முனைவர் அ.கோவிந்தராஜூ said...

Nice
Bharathi soodi in between ch is not required

 
At Mon Mar 27, 10:29:00 am , Blogger Vijayan Durai said...

பாரதி + ஆத்திச்சூடி "ச்" வரவேண்டும் தான், வலி மிகு இடம் தான் இது மிகுதல் பிழையன்று என நினைக்கிறேன் :) @govindaraju Arunachalam ஐயா

 
At Mon Mar 27, 10:33:00 am , Blogger Vijayan Durai said...

வெங்கட் அண்ணா, விஜய் அண்ணா, சீனு அண்ணா, ஜீவன் அண்ணா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி :)

 
At Wed Mar 29, 07:36:00 am , Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு நல்ல தமிழாசிரியர் தரும் விளக்கம் போல உள்ளது.சிறப்பான சிந்தனை பாராட்டுகள்

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home