Wednesday, August 15, 2018

சுதந்திர தின அழைப்பிதழ்


சுதந்திர தின அழைப்பிதழ்:

நான் அனாமிகா, உங்கள் வசிப்பிடத்திற்கருகே வசிக்கும் மற்றுமொருப் பெண். பணி முடிந்த தினத்தின் இறுதியில் வீடு திரும்ப வாகனம் தேடிக்கொண்டிருப்பவள் , பேருந்தில் கூட்ட நெரிசலில் உங்கள் அருகே சங்கோஜமாக உடல் குறுக்கி நின்று கொண்டிருப்பவள் , ஒரு சக மனுஷி, The so called தாய்க்குலம்.

இந்த கடிதத்துடன் சுதந்திர தின விழாவிற்கான அழைப்பிதழையும் இணைத்துள்ளேன், சுற்றமும் நட்பும் சூழ தவறாது கலந்து கொள்ள வேண்டும். நிச்சயம் நான் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.
நமது அடிமை சாசன பிரமான பத்திரத்தை 1947-ஆம் ஆண்டின் ஆகஸ்டு 15 நள்ளிரவில் வெள்ளைக்கார அரசாங்கம் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கைகளில் ஐந்தைந்து ஆண்டுகள் அடிமைகளாய் கிடக்க சுயாட்சி என்னும் பெயரில் திருத்தி எழுதிக் கொடுத்துவிட்டுப்போனதே , அந்த நிகழ்வின் நினைவாக வருச வருசம் வருகிறதே.. அந்த விடுமுறைதினத்திற்கான அழைப்பிதழ் அல்ல இது.

“நள்ளிரவில் தனி ஒரு பெண் தைரியமாக நடமாடும் நாளே உண்மையான சுதந்திர தினம்” என சொல்லிவிட்டுப்போனாரே காந்தி, அந்த நள்ளிரவுக்கான அழைப்பிதழ்.

கூட்டம் கூட்டமாய் மானபங்கம் செய்யப்பட்ட வாச்சாத்திப்பெண்கள், நிர்பயா, ஜிஷா, ஹாசினி, நந்தினி, தனம், ஆசிஃபா, அழக்கூட தெரியாத அந்த எட்டு மாதக்குழந்தை, லிஃப்டுக்குள் மூச்சுத்திணறிய வடநாட்டு சிறுமி, மீடியா வெளிச்சத்திற்கு வராமல் செத்துப்போன இன்னும் நிறைய பெண்கள், எப்போது நான் என பயத்துடன் வாழும் பெண்கள், இவர்கள் அத்தனை பேரின் சார்பாக அனாமிகாவாகிய நான் உங்கள் அத்தனை பேரின் கைகளிலும் இந்த அழைப்பிதழை கொடுக்க வந்திருக்கிறேன்.

பிறந்து , வளர்ந்து , இரையாகி இறந்து போன அந்த அத்தனை பெண்களிடம் பொதுவாக ஒன்று இருந்தது, ஆம் அந்த ஒற்றைப்பொருளை மையப்படுத்தித்தான் அத்தனை குரூரங்களும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன, நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த ஒற்றைப்பொருளுக்குள் தான் நாம் நமது சமூகத்தின் மான, அவமானங்களையும், கவுரவுத்தையும், ஒழுக்கத்தையும் பூட்டி பூட்டி பாதுகாத்து வைத்து வந்திருக்கிறோம். வைத்தும் கொண்டுள்ளோம்.

ஆதி காலம் தொட்டு இந்த பொருளை அழிப்பதையும் சிதைப்பதையும், அபகரிப்பதையும் தான் வீரம், அதிகாரம், ஒடுக்குமுறை போன்றவற்றின் வெளிப்பாடாக பெரும்பாலுமாக நம் வரலாறுகளின் ரத்தக்கறைபடிந்த பக்கங்களுக்குள் பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதையே நம்மில் பலர் அறியாமையால் நம்பியும் தொலைக்கிறோம்.

நாம் அத்தனை பேருமே பிறப்பதற்கு காரணமாக நம்மை ஒரு சிறுதுளியாக உள்வாங்கி பாதுகாத்து , பராமரித்து, பிரசவித்து முழு மனிதனாக இந்த பூமிக்குள் வெளியேற்றக் காரணமாய் இருந்த அந்த ஒற்றைப் பொருளை, நம் பிறப்பின் வாசலாக இருந்த அந்தப் பொருளை (பெண் உறுப்பை) எப்படி நாம் சிதைக்க முன்வந்தோம் என்றே இப்போதும் யோசித்துக்கொண்டிருக்கிறேன் .

மாதர் தம்மை இழிவு செய்தபடி கொழுத்துத்திரியும் இந்த மடைமயை நாம் கொழுத்த வேண்டாமா ?

Image courtesy: vikatan
                             
பார் புகழும் இந்த பாரத தேசத்தில் பெண் உறுப்பை தெய்வமாக வழிபட கோவிலெல்லாம் கூட இருக்கிறது. அசாம் மாநிலத்திலிருக்கும் காமாக்கியா கோவிலில் யோனி தான் தெய்வமாக நின்று அருள் பாலிக்கிறது. எத்தனை சீரிய நாகரிகம் நம்முடையது. பிறப்பின் ஊற்றாக போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டிய பெண்மையை நாம் எஞ்ஞனம் இழிவு செய்ய முற்பட்டோம்.


மனிதன் தவிர்த்து இந்த பிரபஞ்சத்தில் வாழும் எந்த மிருகமும் தன் சக உயிரின் பெண் உறுப்பின் மீது தனது ஆக்ரோசத்தை, வன்மத்தை, அதிகாரத்தை, ஆனவத்தைக் காட்டி தனது வீரத்தையும், ஆண்மையையும் நிலைநாட்டியதாக நான் கேள்விப்பட்டதில்லை. விருப்பில்லாமல் உறுப்பைத்தொட விரும்பும் கீழோராக நாம் எப்போது மாறிப்போனோம் எனத் தெரியவில்லை.

இப்பொழுதும் கூட  தாமதமில்லை , புள்ளிவிவரங்களால் சதா நம்மை பயமுறுத்திக்கொண்டே இருக்கும் மீடியாக்களை புறந்தள்ளிவிட்டு அகல விழிகளால் இந்த தேசத்தை விசாலப் பார்வையால் கண்போம். 

பெண்மையை மதிக்கும் மனிதர்களின் எண்ணிக்கையோடு , குற்றம் செய்கிறவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பாருங்கள், எண்ணிக்கையில் இங்கு நாம் தான் அதிகம். இனியும் கூட நாம் நினைத்தால் நல்லதொரு தேசத்தை இங்கிருந்து கூட நாம் உருவாக்கலாம். எதிர்கால சமூகத்தை சிருஷ்டிக்க நம்மால் முடியும்.

உங்கள் பிள்ளைகளுக்கு வீரத்தை சொல்லிக்கொடுங்கள், தைரியத்தை சொல்லிக்கொடுங்கள், குற்றம் செய்கிறவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு தற்காப்புக் கற்றுக்கொடுங்கள், தவறானவர்களை தவிர்க்க சொல்லிக்கொடுங்கள். வீரம் மிக்க கதைகளை குழந்தைப்பருவத்திலிருந்தே சொல்லிக்கொடுங்கள், அடங்காப் பிடாரி, அதிகப்பிரசங்கி, பெண்பிள்ளையா அடக்க ஒடுக்கமா இரு, ஆம்பள அழக்கூடாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் பேதம் காட்டி வளர்க்காமல் சமத்துவத்தை சொல்லிக்கொடுங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு அதிக அன்பு காட்டி வளர்ப்பது நல்லது தான் , அதே நேரம் அவர்களையும் அன்பு மிக்க, அன்பை உணரும் ஜீவிகளாக வளருங்கள். தாய்மையை வணங்கும் பண்பு நம் தேசத்தில் மிக முக்கியமான ஒன்று. தாய்மையை மதிப்பது உயிரின் இயல்பு. தாயை, தன் சகோதரியை, தன் வீட்டு பெண்களை மதிக்கும் ஆண் பிற பெண்களையும்  அவர்களின் பெண்மையையும் நிச்சயம் மதிப்பான்.

உங்கள் தர்க்கங்களை நம்பிக்கைகளை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்களுக்கு நல்லது கெட்டதுகளை மட்டும் அடையாளம் காட்டி வெறுமனே அவர்கள் வளர உதவுங்கள்.

தண்டனைகளுக்குப் பயந்து தவறு செய்யாதிருக்க நாம் ஒன்றும் காட்டுமிராண்டி சமூகம் அல்ல , உலகின் பிற தேசத்தினர் காடுமிராண்டிகளாய் வாழ்ந்த காலத்திலேயே நவ நாகரிகமாய், சீரிய பண்பாட்டுடன் வாழ்ந்தவர்கள் நாம். நமக்குத் தெரியும் இனிவரும் உலகை புத்துலகாய் செய்ய என்ன செய்ய வேண்டுமென.

இன்னமும் யோனிகளின் வழியாகத்தான் நாமெல்லாம் பிறந்து கொண்டிருக்கிறோம்.

சுற்றமும் , நட்பும் சூழ இந்த சுதந்திர தினத்திற்கு நிச்சயம நீங்கள் வர வேண்டும். பிறக்கப் போகும் இந்த புதிய தினத்துக்கு நாளும் , இடமும் நாம் குறித்தாக வேண்டும்.


அன்புடன்,
அனாமிகா
15/08/2018 

Post Comment