Saturday, March 26, 2016

கனவுகள் (4)

ஒரு பட்டாம்பூச்சியின் கனவு

னது சேகரித்து வைத்திருக்கும் குப்பைகளின் பலனாகவே பெறும்பாலும்  அன்றாடம் நாம் காணும் கனவுகள் தோன்றுகின்றன (கடந்த பதிவில் நாம் பார்த்த தெய்வீக கனவுகள் இதற்கு விதிவிலக்கு ). மனம் தனக்குள் குவிந்திருக்கும் குப்பைகளை Sleep mode  ல் கிடக்கும் போது கிளறுவதன் காரணமாகவே கனவுகள் ஏற்படுகின்றன. அவரவர் மனதிற்குள் எந்த ரக குப்பைகள் இருக்கிறதோ அந்த ரக கனவுகள் அவரவர்க்கு ஏற்படுகின்றன.

உதாரணமாக , பிறவியிலேயே கண்பார்வை இல்லாத நபரின் கனவுகளில் காட்சிகள் அறவே இருப்பதில்லை சத்தமும் , ஸ்பரிசமும், வாசனையுமாகவே அவர்கள் கனவு காண்கிறார்கள். அதேமாதிரி கருவிற்குள் இருக்கும் குழந்தை சத்தம் மற்றும் தொடுதல் உணர்வுகளாலான கனவுகளை காண்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கனவுகளற்ற தூக்கம் தான் நிம்மதியான ஆனந்தமயமான தூக்கம் என இந்தியாவின் பாரம்பரிய மருத்துவமான ஆயூர்வேதம் சொல்கிறது. (எனக்கும் இது தான் சரி என படுகிறது )

மனதின் இரைச்சல்கள் இல்லாத , கனவுகளற்ற தூக்கம் !

சீன த்த்துவஞானி ‘ச்சுவாங்க் சௌ’ தனது கனவில் தன்னை ஒரு ‘பாடி பறந்து திரியும் பட்டாம்பூச்சியாக’ ஒருமுறை காண்கிறார், அதன் தாக்கத்தில் அவர் எழுதின கதை ஒன்றில் பின்வரும் விசயத்தை முன்வைக்கிறார்.

“நான் என்னை பட்டாம்பூச்சியாக கனவில் கண்ட போது நான் தான் ‘ச்சுவாங்க் சௌ ‘ என்கிற நினைவு எனக்கு துளி கூட இல்லை ,நான் திடீரென எழுந்து கொண்டேன், இப்போது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. நான் தான் பட்டாம்பூச்சியை கனவில் சற்று நேரத்திற்கு முன் கண்டேனா ! இல்லை ஒரு பட்டாம்பூச்சி என்னை அதாவது இந்த மனிதனை தன் கனவில் கண்டு கொண்டு இருக்கிறதா ! ” .

இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் அந்த பரந்தாமனின் கனவு என வைஷ்னவத்தில் ஒரு கருத்து வருகிறது.
நாம் நிஜம் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை, யாரோ ஒருத்தரின் கனவாக கற்பனை செய்து பார்க்கும் போது மனம் ஸ்தம்பித்து சில வினாடிகளாவது நின்று போய்விடுகிறது.

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம் தானோ என பாரதியார் புலம்புவது மாதிரி புலம்பலாம் போல இருக்கிறது.

விஞ்ஞானத்தை பேசி பேசி அலுத்துவிட்டது இந்த கட்டுரையில் இன்னும் கொஞ்சம் வேதாந்தம் பேசலாம் !

கனவுகள் தொடரும் ...



 

Post Comment

Wednesday, March 09, 2016

கனவுகள் (3)


னித உடல் என்பது பல அடுக்குநிலைகளாலான  உடல்களின் தொகுப்பு என்கிற நம்பிக்கை நம் பழங்கால இந்திய கலாச்சாரத்தில் இருந்திருக்கிறது, சமணர்கள் மனித உடல் ஒன்பது உடல்களின் தொகுப்பு என்கிறார்கள், புத்த மதத்தினர் 7 உடல்களின் தொகுப்பு என்கிறார்கள், பதஞ்சலியின் யோக சாஸ்திரம் , உபநிடதங்கள் மற்றும் நம் தமிழ் கலாச்சாரத்தின் மிக முக்கிய நூலான திருமந்திரம் போன்றவற்றில் மனித உடல் ஐந்து உடல் அடுக்குகளாக பரவி இருக்கிறது என்கிற குறிப்புகள் உள்ளன.

ஓஷோ  " The psychology of esoteric" என்கிற உரையில் மனித உடலின் ஒவ்வொரு உடல் அடுக்குக்கும் கனவு நிலைகள் உண்டு என்கிறார். அதாவது ஒவ்வொரு உடலும் அதற்கேயுரிய பிரத்யேக கனவுலகில் சஞ்சாரிக்கிறது என்கிறார்.

ஆனால் எல்லோர் உடலும் எல்லா அடுக்குகளாக வளர்வதில்லை, What you feed, will grow , என்கிற சித்தாந்தத்தின் படி எந்த அடுக்கை நாம் வளர்க்கிறோமோ அது வளரும்.அதன் கனவுகளை நாம் காண முடியும்.

புத்த மத தத்துவத்தின் அடிப்படையில் ஓஷோ கூறும், ஏழு உடல் அடுக்குகளையும் அதனதன் கனவு நிலைகளையும் சுருக்கமாக பார்க்கலாம்.

1. முதல் உடல் அடுக்கு: பூத உடல் (Physical Body)

நமது புற உடலில் ஏற்படும் பாதிப்புகள் இந்த உடலடுக்கின் கனவுகளை பாதிக்கிறது, "கண்ணில் ஒரு வழி இருந்தால்... கனவுகள் வருவதில்லை..." என வைரமுத்து பாடுவது இந்த உடல் சார்ந்த கனவுகள் தான்,  காய்ச்சலாக இருக்கும் போது நமக்கு துர்கனவுகள் ஏற்படுவது. வெளியே கேட்கும் பாடலை கனவுக்குள் கதை , திரைகதை, வசனம், டைரக்சன் செய்து கனவிற்குள் நிகழ்த்திக்காட்டுவது , அம்மா எழுப்பிவிட மேலே ஊற்றும் தண்ணீரை மழையாக மாற்றுவது எல்லாம் முதல் உடல் அடுக்கு சார்ந்த கனவுகள். பிராய்ட் சொல்லும் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளால் ஏற்படும் கனவுகள் கூட முதல் வகை தான்.

2.வெளி உடல் (Etheric Body)

இதுவரை சந்தித்தே இராத நபர்களை சந்தித்தல், உண்மையான சாமியார்கள் கனவில் வந்து அருள் வாக்கு சொல்லுதல், (சாய் பாபா ஒருவர் கனவில் தோன்றி அவரை அங்கே நீ செல்லாதே என்றிருக்கிறார், அவர் செல்ல வில்லை, அடுத்த நாள் அங்கே ஒரு பெரு விபத்து நிகழ்ந்திருக்கிறது,  //எல்லோர் கனவிலும் போய் சொல்ல வேண்டியது தானே என்கிறீர்களா !!  Remember நாம் எந்த உடலுக்கு தீனி போடுகிறோமோ அந்த உடல் வளர்கிறது, அது சார்ந்த கனவு காட்சிகள் தெரிகிறது.// ),  பார்த்தே இராத இடங்களை பார்த்தல் , தெய்வீக கனவுகள் , ராஜா கனவுகளில் தெய்வம் தோன்றி அந்த இடத்தில் தோண்டு என கூறி அங்கே அவர் அடுத்த நாள் தோண்ட அங்கே தெய்வ சிலை இருப்பது எல்லாம் இந்த வகை கனவுகள் தான்.

3.ஆகாச உடல் (Astral Body)

கனவுலகில் கடந்த ஜென்மங்களுக்கு செல்லுதல்,ஆகாச உடலின் கனவுகளில் சாத்தியமாம். கால, வெளிக்கு அப்பாற்பட்ட கனவுகள் இவை என்கிறார்கள். கடந்த ஜென்மத்திய நினைவுகளை இந்த கனவுகள் தான் தருகின்றனவாம்.நவீன மனோவியலில் கர்ல் ஜங்க் கூறும் Collective Unconcious என்கிற வகை  இது.

4.மன உடல் (Mental Body)

நம் கடந்த கால நினைவுகள் மட்டுமின்றி எதிர்கால நிகழ்வுகளையும் காட்டும் வல்லமை இந்த மன உடல் கனவுகளில் சாத்தியப்படுகிறதாம். நெருங்கிய உறவுகள் இறக்கப்போவதை, அவர்களுக்கு ஏற்படப்போகும் வாதைகளை காட்சிகளாக இந்த உடல்சார் கனவுகள் தான் நிகழ்த்துகின்றன என்கிறார்கள்.அதேபோல விஞ்ஞானிகளுக்கு விடை தெரியாத சிக்கலான விசயங்களுக்கு விடை தருவது , படைப்பாளிகளுக்கு படைப்பு தருவது எல்லாம் இந்த வகையறா கனவுகள் தான்.

5.ஆன்ம உடல் (Spiritual body)

தனிமனித அளவிலான உடல் அடுக்கு விரிவடைவது இங்கிருந்துதான், ஆன்மீக கருத்துக்கள், மத சார் நம்பிக்கைகள், Myths , போன்றவையெல்லாம் இந்த வகை கனவுகளால் தான் உருவாகியுள்ளன என்கிறார் ஓஷோ, ஆன்ம உடல் வளர்ச்சி பெற்ற பல நபர்களால் ஒரே கனவை ஒரே நேரத்தில் காண முடியும் என்கிறார். உலகின் வெவ்வேறு மதங்களுக்குள் ஒரே மாதிரியான Concepts இருப்பதற்கு இவ்வகை கனவுகள் தான் காரணம் என்கிறார்.

6.பிரபஞ்ச பேருடல்(Cosmic Body)

பிரம்மம் , மாயை, இறை தத்துவம், இறைவன் ஒருவரே, மற்றும் பல ஆன்மீகத்தின் உயரிய கருத்துகள் யாவும் இந்த உடலின் கனவுகள் தான் பெற்றுத்தந்தன என்கிறார்.

7.ஏதுமற்ற உடல் (Nirvanic Body)

உருவமற்ற உருவம், சத்தமற்ற சத்தம் ,போன்றவைகளை காணும் கனவு., அதாவது கனவற்ற நிலை இது , இதனை ஓஷோ முடிவிலாத கனவு (Eternal Dream)  என்கிறார் . Seems mysterious.


தலையை சுற்றுகிறது... :) . இன்றைக்கு இது போதும்

ஒருவரது கனவிற்குள் நாம் நுழைய முடியுமா !, அடுத்தவர் என்ன கனவு காண வேண்டும் என்பதை நாம் நிர்மாணிக்க முடியுமா, அடுத்தவர் காணும் கனவுகளை நாம் பார்க்க முடியுமா !  அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கனவுகள் தொடரும் (4)

 

Post Comment

Tuesday, March 08, 2016

கனவுகள் (2)


நாம் விழித்திருக்கும் நேரங்களில் நம் உடலில் அடினோசின் எனும் வேதிச்சுரப்பு சுரந்து ரத்தத்தில் கலப்பதால் தான் நாம் அசதியாக உணர்கிறோம், இந்த அடினோசினாகப்பட்டது இதய துடிப்பின் வேகம், தசைகளின் இயக்கம், மூச்சு என சகலத்தையும் வேகம் குறைத்து தூக்கம் என்கிற உணர்வை தருகிறது. எவ்வளவு விழித்து இயங்குகிறோமோ அவ்வளவு அடினோசின், எவ்வளவோ அடினோசினோ அவ்வளவு தூக்கம். இயற்கையான போதை .

அதுசரி நம் உடல் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் வேளையில் களைத்துப்போய் கவிழ்ந்திருக்கும் நேரத்தில் காட்சிப்பதிவுகளை ஓட்டி கனவுகளை ஏன் ஏற்படுத்த வேண்டும்.கனவுகள் இல்லாத உறக்கமே முழுமையான ஓய்வு என இந்திய சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கனவுகளுக்கு காரணங்கள் என்ன, கடந்த பதிவில் அறிவியல் உலகம் கூறும் காரணங்களில் சிலவற்றைப் பார்த்தோம். சிலர் கனவுகள் காரணத்தோடு நிகழ்கின்றன என்கிறார்கள், சிலர் அவை காரணமற்ற கண்டபடியான காட்சிப்பதிவுகள் என்கிறார்கள் , நம் வகையில் இரண்டு வகைக் கனவுகளும் இருக்கின்றன என நம்பி வைப்போம் :)

பொதுவாக நமக்கு வரும் அத்தனை கனவுகளையும் கீழ்காணும் நான்கு வகைகளாக கூறிவிடலாம்.

1 அர்த்தமற்ற கனவுகள்
2 அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக வரும் கனவுகள்
3 எதிர்காலம் பற்றிய கனவுகள்
4 நமக்கு மேலே உள்ள பிரபஞ்ச சக்தி நமக்கு ஏதேனும் அறிவிக்கும் கனவுகள்

அதுசரி, அர்த்தமற்ற கனவுகள் என்று ஒரு வகை சொல்கிறீரே !!
நாம் காணும் கனவுகளுக்கு ஏதேனும் அர்த்தங்கள் இருக்கின்றனவா.,
சிக்மன்ட் பிராய்ட்,கார்ல் ஜங்க் பொன்ற மனோ விஞ்ஞானிகள் துவங்கி நம்மூர் மரத்தடி ஜோசியர் வரைக்கும் கனவுகளுக்கு அர்த்தம் சொல்கிறார்கள்.
நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம், (அப்போதெல்லாம் இன்டர்நெட் பரிட்சயம் இல்லை) நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துவந்து ஒரு பழைய நோட்டுப்புத்தகத்தில் இன்ன கனவுக்கு இன்ன அர்த்தம் என குறிப்பெடுத்துக்கொண்டிருந்தேன் . இரண்டு ,மூன்று புத்தகங்களை Refer செய்திருப்பேன்.

கீழ்காணும் கனவு பலன்கள் ஒரு புத்தகத்தில் சிக்கியது...

திருமணம் பற்றிக் கனவு கண்டால் தீயது நடக்கும்.

கனவில் தாமே இறந்துவிட்டதாகக் கனவு கண்டால் ஆயுள் பெருகும்.
இறந்தோர் கனவில் வந்து அழைத்தால் மரணம் வரும்.

கனவில் கோயிலைக் கண்டால் குடும்பத்தில் சண்டை வரும்.

வீடு தீப்பற்றி எரிவது போல் கனவு கண்டால் செல்வம் பெருகும்.

உத்தரகாமிகாமகமஹாதந்திரம் என்கிற புத்தகத்தில் ஸ்வப்னாத்யாய விதி என்கிற படலத்தில் சில கனவு பலன்கள் கூறப்பட்டிருக்கின்றன அதில் மரணத்தை கனவில் காண்பது அசுபம் என்றும் மங்கல சின்னங்களை காண்பது சுபம் என்றும் எழுதியிருக்கிறார்கள்.,

பல்லிவிழும் பலன்கள் மாதிரி கனவுகளுக்கு பலன் கள் கூறும் அந்த புத்தகங்கள் ,ஒவ்வொன்றும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு விளக்கம் தரும். கடுப்பாகிப் போய் கனவுக்கு அர்த்தம் சொல்லும் பிராஜெக்டுக்கு பாதியிலேயே முற்றும் போட்டுவிட்டேன்.

Dreams are just Dreams , we project our own meanings into it என்கிறார் ஓஷோ, உண்மை தான்
நம் நமது புலன் உறுப்புகளின் உதவியோடு மனதிற்குள் சேகரித்த குப்பைகள் தான் கனவுகளாக தூக்கத்தின்போது அலையாடி விளையாடுகின்றன,
பிறவியிலிருந்தே பார்வையற்றவராக இருக்கும் ஒருவரின் கனவு சத்தங்களாகவும் ,வாசனைகளாகவும் மட்டுமே இருக்க முடியும், காட்சிகள் அதில் வருவதில்லை.

நாம் பார்த்த, கேட்ட அல்லது உணர்ந்த, விசயங்கள் தான் கனவில் வருகின்றன, அதேபோல கனவில் புதிய விசயங்கள் எதுவும் வருவதில்லை, என்கிறார்கள் விஞ்ஞானிகள்

நேற்று என் கனவில் நான் இதுவரை சந்தித்தே இராத ஒரு புதுப் பெண் என் Dream Girl வந்தாளே ! அது எப்படி என யோசிக்கிறபோது, சப்கான்சியஸாக, அல்லது அன்கான்சியஸாக உன் கண் உன்னையும் அறியாது கூட்டத்தில் இருந்த பெண் யாரையாவது மனதிற்குள் குறிப்பெடுத்திருக்கும், அந்த குறிப்பு தான் கனவின்போது கிளம்பி உன்னை Dream Girl ஐ தேடி அலைய கிளப்பி விடுகிறது என்கிறார்கள் கனவு விஞ்ஞானிகள் (oneirologists) .

Alright, அப்படியென்றால் கனவில் எதிர்காலம் வருவதெல்லாம் கப்ஸா என்கிறீர்களா !

பார்ப்போம்


கனவுகள் தொடரும் ... (3)

 

Post Comment

Monday, March 07, 2016

கனவுகள் (1)

.

மீபத்தில் எனக்கொரு கனவு வந்தது ... , இது போன்றதொரு கனவு இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறது, அதற்கு பின் இப்போது தான்.

நாம் உறங்கும் இடமும் நமது கனவுகளை பாதிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்று என படித்தாக நியாபகம்., நைட் ஷிஃப்ட் -ல் நான் வழக்கமாக தூங்கும் இடத்தை மாற்றியது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.  கடந்த முறை இதேபோன்ற கனவு சென்னையில் வேலை தேடும் படலத்தில் ஈடுபட்டிருந்த நாளொன்றின் உண்டு மயங்கிய மதியத்தில் நன்பரொருவரின் அறையில் தட்டியது.  வினோதமான கனவுகள் !

கனவுக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறேன், அங்கே ஒரு கனவு நிகழ்ந்து கொண்டிருக்கிறது, ஒரு கட்டத்தில் புறக்காரணி ஒன்று நிஜ உலகில் என்னை உறக்கத்திலிருந்து எழுப்புகிறது , சென்னைக் காலத்தில் பூட்டியிருந்த  அறைக்கதவு தட்டப்பட்டது., நேற்றைய கனவில் எங்கள் ஹோட்டல் செக்யூரிட்டி எழுப்புகிறார்.

நிஜ உலகில் நான் இன்னமும் துயிலில் தான் கிடக்கிறேன் .  இரண்டு சம்பவங்களின் போதும் இதே கதை தான்.

கனவு சம்பவம் - 1 

இடம்: நன்பரின் அறை

அறையின் உள்ளே : நான் மட்டும்

எழுப்பிவிட்ட புறக்காரணி : கதவு தட்டும் சத்தம்

சத்தம் கேட்டதும் எனது  கனவின் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த தூக்கத்திலிருந்து நான் விழித்துக்கொள்கிறேன், கனவின் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த கனவு களைந்துவிடுகிறது, தட்டப்பட்ட கதவை எழுந்து சென்று திறந்து விடுவது மாதிரியும்  சீக்கிரம் திறக்க மாட்டியா என என்னைத் திட்டியபடி  நன்பன் அறைக்குள் வந்து கட்டிலில் சாய்வது மாதிரியும் ,  திறந்த அந்த கதவை நான் மறுபடியும் சார்த்திவிட்டு அறைக்குள் வந்து மீண்டும் தூங்குவது மாதிரியும் கனவில் காட்சிகள் built up செய்யப்படுகின்றது. ,

ஆனால் நிஜத்தில் நான் எழுந்திருக்கவே இல்லை. திரும்பவும் கதவு தட்டப்படும் சத்தம் திரும்பவும் திறக்கிறேன், திரும்பவும் சத்தம் , சத்தம், சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கதவு திறந்தும் எப்படி சத்தம் மட்டும், தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல... சிலிர்ப்பியதில் நிஜ உலகிலிற்குள் எழுந்து கொள்கிறேன், நிஜ உலகில் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. போய் திறந்து விட்டேன். எவ்வளவு நேரமா தட்டிட்டே இருக்கேன் ... திட்டியபடியே நன்பன் அறைக்குள் வந்து கட்டிலில் சரிகிறான், நானும் .

கனவு சம்பவம்-2 

இடம்: ஜெனரேட்டர் அறை

அறையின் உள்ளே : நான் மட்டும்

எழுப்பிய புறக்காரணி : செக்யூரிட்டியின் குரல்

சத்தம் கேட்டதும் எனது  கனவின் உள்ளே நிகழ்ந்துகொண்டிருந்த தூக்கத்திலிருந்து நான் விழித்துக்கொள்கிறேன்,  , காலை ஆகிவிட்டது  விடிந்துவிட்டது என்ற காரணத்தால் தான் அவர் எழுப்பி இருக்கிறார் , கனவின் உள்ளே இருந்த உறக்கத்திலிருந்து நான் எழும்பி அன்றைய பணிகளை செய்ய ஆரம்பிக்கிறேன், தண்ணீர் ஏற்றும் மோட்டாரைப் போடுகிறேன் தண்ணீர் சிந்தி என் மேல் சிதற நான் நிஜ உலகிற்குள் பிரவேசிக்கிறேன், " என்னப்பா நல்ல தூக்கமா !"  "ம்.." கண்ணைக்கசக்கிக்கொண்டு எழுந்திரித்து மோட்டார் போட செல்கிறேன். தண்ணீர் தெளிக்கிறது.

 எனது இந்த கனவுகளின் பின்னாலான அறிவியல் காரணம் என்னவென்று தெரியவில்லை ,தெரிந்தவர்கள் சொல்லலாம்.

சரி, கனவுகள் பற்றி கொஞ்சம் உருப்படியாக எதாவது பேசலாம்.

 கனவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ...

கனவுகள் பற்றி பேச்சை ஆரம்பிக்கலாம் என யோசிக்கையில் மனதில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் ஓடுகின்றன.

அறிவியல் , ஆன்மீகம், தத்துவார்த்தம் என ஒவ்வொரு டிபார்ட்மென்டிலும் கனவுக்கான Chapter கள்  இருக்கின்றன. கனவுகள் ஏன் வருகின்றன, அவற்றின் காரணம் என்ன, அவற்றின் அர்த்தங்கள் என்ன? , கெட்ட கனவுகள் எதனால் வருகின்றன? ,  கனவுகள் எதிர்காலத்தை சொல்லுமா ? , வித்தியாசமான கனவுகள், கனவுகள் பற்றிய ஆச்சரிய தகவல்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாம் :)

கனவுகள் எதனால் வருகின்றன !

ஆழ்மனதின் ஆழத்தில் பதிந்துபோன உணர்வுகள் மற்றும் ஆசைகளே கனவுகளாக எழுகின்றன என்கிறார் நவீன மனோவியலின் தந்தை என அழைக்கப்படும் சிக்மன்ட் பிராய்ட். அதுமட்டுமின்றி அவர் தனது Interpretations of Dreams புத்தகத்தில் கனவுகள் எதுவாயினும் அதற்கு Sexual Motive ஒன்று  கட்டாயம் இருக்கும் என்கிறார்.

கார்ல் ஜங்க் என்ற சைக்காலஜிஸ்ட் கனவுகள் என்பவை stress எனப்படும் மன உலைச்சலில்  லிருந்து  விடுபெற நிகழ்கின்றன என்கிறார், ஏழை ஒருவன் செல்வந்தனாக இருப்பபது போல் கனவு காண்பது , நமக்கு வேண்டாத அந்த நபர் செத்துப்போவது போல காண்பது, அலுவலகம் வெள்ள நீருக்குள் மூழ்கிப்போவது  போன்றவை இவ்வகை தான் என்கிறார்.

கனவுகள் ஆராய்ச்சியை பொறுத்தவரை விஞ்ஞானம் கத்துக்குட்டி நிலையில் தான் இருக்கிறது என தோன்றுகிறது. காலத்திற்கு ஒரு கதை சொல்லிக்கொண்டு, ஆளாளுக்கு ஒரு ஆராய்ச்சி முடிவை சொல்லிக்கொண்டு, சகட்டுமேனிக்கு Theory களை சொல்லிக்கொண்டு திரிகிறது.  ஒரு சின்ன  Sample !

ஆரம்பத்தில் கனவுகள் REM எனப்படும் தூக்கத்தின் முதல் நிலையில் தான் வருகின்றன, மற்ற நிலைகளில் வருவதில்லை என்றது,

Rapid Eye Movement அதாவது "அதிவிரைவு கண் அசைவு " என்பதன் சுருக்கமே REM , உறங்கிகொண்டிருப்பவரின் மூடிய கண்கள் இமைகளுக்கு உள்ளாக அங்குமிங்குமாக அசையுமே அது தான் REM.

பின் REM - ல் கனவுகள் அதிகம் வருகின்றன., மற்றவைகளில் கம்மி என்றது .இப்போது , REM உறக்கத்தில் தூக்கமும் விழிப்பும் இருப்பதால் கனவுகள் நினைவில் இருக்கின்றன, மற்றவற்றில் ஆழ்நிலை உறக்கநிலைக்கு சென்று விடுவதால் கனவுகள் நினைவில் இருப்பதில்லை என்கிறது.

ஆழ்ந்த உறக்கம் இல்லாதபோது விழிப்பும் தூக்கமும் கலந்த நிலையில் இருப்போம் ,அப்போது நமக்கு வரும் கனவுகள் நியபகமாக இருக்கும், கனவுகள்  சில இடங்களில் படுக்கும் போது அதிகமாக இருக்க இதுதான் காரணமாம்  (எல்லா கனவுகளும் நியாபகம் இருக்கும்).

இன்னும்  என்னவெல்லாம் சொல்கிறார்கள் !

1) கனவுகள் பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகளை அனெய்ரோலாஜி ( oneirology ) என்கிறார்கள், கனவுகளின் போது உடல் செயல் நடவடிக்கைகள், உள்ளுருப்புகளின் செயல்கள், மூளைச் செயல்பாடுகள், மூளை வெளியிடும் அலைகள் போன்ற இத்யாதிகளை ஆராய்கிறார்கள். கனவுகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள்  இதில் இல்லை அது தனி டிபார்ட்மென்ட்- ல் வருகிறது :) . கெட்ட கனவுகள் ஏன் வருகின்றன , அவை வராமல் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பதை கூடிய விரைவில் கண்டுபிடித்து விடுவோம் என்கிறார்கள் oneirologist கள். !

2) நமது உடலின்  புலன்கள் sleep mode ற்கு மாறும்போது, மூளை semi sleep mode ல் உடல் உயிருடன் இருப்பதற்கான அத்தியாவசிய இயக்கங்களான மூச்சு, இதயத்துடிப்பு, போன்ற இத்யாதிகளை கவனித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அது தன்னையும் , நியூரோ டிரான்ஸ்மிட்டர்களையும். (தகவலை கடத்தும் நரம்புகள்)  Refresh செய்துகொள்கிறது  இதை synaptic Efficacy Refreshment என்கிறார்கள்.அநேகமாக இது REM உறக்கத்தில்தான் நிகழ்கிறதாம். அப்போது மூளைக்குள்  குறைந்த அதிர்வெண்ணில் (14 Hz, என்கிற அளவில்) அதிர்வலைகள் எழுகின்றன, இந்த இயக்கத்தின் பலனாகவே  அதாவது மூளை தான் கண்ட ,கேட்ட, உணர்ந்த காட்சிகளை எல்லாம் consolidate செய்து தன்னை refresh செய்து கொள்வதால் தான் கனவுகள் எழுகின்றன என்கிறார்கள். 

4) நாம் தூங்கும் போது மூளை நரம்புகளுக்குள் நிகழ்கிற குருட்டாம்போக்கான சிக்னல் பரிவர்த்தனைகள் காரணமாகவே கனவுகள் நிகழ்கின்றன என்கிறார்கள்.


5) கனவுகளுக்கு அர்த்தம் சொல்வது, கனவுகள் எதிர்காலத்தை சொல்வது, கனவுகள் பல சிக்கல்களுக்கு விடை சொல்வது போன்றவைகளுக்கு விஞ்ஞானம் பதில் சொல்லவில்லை. 

கனவுகளுக்கு விஞ்ஞானிகள் கண்டபடி காரணம் சொல்கிறார்கள், ஆனால் இன்று வரை அது ஒரு புதிராகவே நிலைத்து நிற்கிறது...

கனவுகள் தொடரும் ....

 

Post Comment

Sunday, March 06, 2016

நிலா (சிறுகதை)

நிலா


 ப்படி ஆரம்பிப்பது? “.. எழுத ஆரம்பிக்கிற பொழுதுகளில் எல்லாம் இந்த கேள்வி என் மண்டையை குடையாமல் இருந்ததேயில்லை இதே கேள்வியுடன் தான் அரைமணி நேரமாய் அமர்ந்திருந்தேன்...

நாளைக்குள்ளாக எழுதிக் கொடுத்தாக வேண்டும் எழுத உட்கார்ந்திருக்கும் இந்தக் கதையை . வாரம் ஒரு கதைக்கு நான் பொறுப்பு என எடிட்டரிடம்  ஜம்பமாய் வாக்குக் கொடுத்துள்ளேன் , கொடுக்காமல் விட்டால் , வாங்குகிற சம்பளத்தைவிட அதிகமாய் வாங்கிக்கட்டிக்கொண்டாக வேண்டும்.

சரி , வெளியில் ஒரு நடை நடந்துவிட்டு வந்தாலாவது சிந்தனை ஓட ஆரம்பிக்கும் என சிந்தித்தபடி . எழுந்து நெட்டி முறித்துக்கொண்டே என்னை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் திரையின் மீது படர்ந்திருந்த பார்வையை ஜன்னல் கம்பிகளின் வழியாக வெளியில் அனுப்பினேன்...

பாதி திறந்த ஜன்னல் வழியே நான் பார்வை செலுத்திய போது பாராமுகமாய் நிலா எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தது.
ஜன்னலை சார்த்திவிட்டு வாசற்புறமாய் நகர்ந்தேன்...

வெளியே, கவிதா மீனுக்குட்டிக்கு சோறூட்டிக் கொண்டிருந்தாள், வழக்கம் போலவே தலையை திசைக்கொருமுறையாய் திருப்பித் திருப்பி தின்னாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் மீனுக்குட்டி.

மீனுக்குட்டி , கவிதாவின் அச்சு அசல் 3D மினிஜெராக்ஸ் . ரெண்டு வருசத்துக்கு முன்னால் என்னை அப்பாவாக்கி , உயிராக அவதாரம் எடுத்த என் முதல் உயிர்த்துளி.

“மீனு.... சாப்டலைனா பூச்சாண்டிட்ட பிடிச்சுக் கொடுத்துடுவேன்” என குழந்தைக்கு பூச்சாண்டிக் காட்டிக்கொண்டிருந்தாள் கவி, மிரட்டி வேலை வாங்குவதில் பொல்லாத கில்லாடி அவள்... ஏன் மீனு மட்டும் இவள் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறாள் என புரியவில்லை !!..

அப்படியே கதவோரம் நின்றபடி கவிதாவின் பார்வையில் படாமல் கவிதாவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். பூச்சாண்டி என என்னைக் காட்டிச் சொன்னாலும் சொல்லிவிடுவாள்.

அம்மாவான பின்னாலும் கூட அழகு குறையாமல் அப்படியே தான் இருக்கிறாள் என் கவிதா, கவியின் குட்டிப்பிரதி “மேய்ய்ய்ங்க் மா....!” என குதலைமொழியில் எதையோ பேசிக்கொண்டிருந்தாள்.இல்லாத அந்த பூச்சாண்டிக்காக மீனுக்குட்டி பயப்படுவதாக தெரியவில்லை...

வேறு எதாவது சொல்லித் தான் அவளுக்குச் சோறூட்டியாக வேண்டும்.
கவிதாவின் கை வான் நோக்கி நீளத்துவங்கியது.,

“நிலாப் பாரு.... நிலாப் பாரு...”

மீனுக்குட்டி , அங்குமிங்குமாய் ஆட்டிக்கொண்டிருந்த தலையை மெல்லமாய் மேலே உயர்த்தி நிலாப் பார்த்தாள்.
மேலே தலை உயர்த்தியதால் தானாக திறக்கப்பட்ட வாய்க்குள் சோற்றை அள்ளித் திணித்தாள் கவிதா.

“ஆஆஆங்க்ங்க்.....”

கன்னம், உதடு, மூக்கு என சோறு பரவ ஆரம்பித்திருந்தது...

மெல்லமாய் நான் அவள் பக்கமாய் நகர ஆரம்பித்திருந்தபோது மீனுவை சேலை முந்தானையால் துடைத்துவிட்டபடி  சிரித்துக்கொண்டிருந்தாள் ...

“சாப்டலைனா அப்பாவ அடிக்கச் சொல்லுவேன்....இந்தாங்க இவளுக்கு ரெண்டு கொடுங்கங்க..”  என என்னை மீனுவிடம் வில்லனாக்கிக் கொண்டிருந்தாள்,

மீனு மெல்லமாய் என்னைப் பார்த்து சிரித்தாள்., அவள் சிரித்ததன் காரணம் தெரியவில்லை, ஒருவேளை நான் அடிக்கப்போவதாய் நினைத்து அடியிலிருந்து தப்பிக்க அவள் பிரயோகிக்கும் ஆயுதமா, இல்லை நானா அடி கொடுக்கப் போகிறேன் என கிண்டலுக்குச் சிரிக்கிறாளா !

“கவி நீ சோறு ஊட்டிட்டு இரு நான் அப்படியே ஒரு வாக் போயிட்டு வந்துட்றேன்”

“ சார் தம் பத்தவைக்க போறீங்க்ளோ  !!”

அவள் கேட்டக் கேள்வியை கேட்டும் கேட்காதது போல கேட்டுக்கொண்டே... அசட்டு சிரிப்புடம் மெல்ல நகர்ந்தேன்...

“ இந்த கன்ட்றாவிய விடுங்க னு சொன்னா கேக்குறீங்க்ளா!! “

நானும் விட வேண்டும் என்று தான் நினைக்கிறேன், ,  A temporary solution for the creativity dryness  என்பதாக  என்னைத் தொற்றிக்கொண்டு நிரந்தரமாகிப் போயிருக்கும் அன்றாட பழக்கமாகிவிட்டது., இப்போதைக்கு நாளுக்கு 2 எனக் குறைத்துள்ளேன்., விட்டுவிட வேண்டும்.

மேகங்களுக்கிடையே நீந்தி விளையாடிக்கொண்டிருந்த நிலவை நோக்கி புகை ஊதிக்கொண்டு நின்றிருந்தேன்,

நிலால ஒரு பாட்டி வடைசுடுகிறாளாம்... கவிதாவின் கதையை வாய்பிளந்து நம்பிக் கொண்டிருந்தாள் மீனு, ஒருகாலத்தில் நானும் கூட இந்த மீனுவைப் போல எங்க அம்மா சொன்ன வடைசுட்டக் கதையை வாய்பிளந்து நம்பிக்கொண்டிருந்திருப்பேனோ !!

நானும் கூட கவிதாவின் கதையை காதில் வாங்கியபடி நிலாவையே வெறித்துக்கொண்டிருந்தேன்.

அட !! இன்னமும் கூட அந்த பாட்டி நிலாவிலேயே தான் இருக்கிறாள் !! , வடைசுட்டப் படியே !! அவளைப் பார்க்கிற கண்களில் மட்டுமே அவள் படுகிறாளோ... ஒருவேளை கவிதாவுக்கு உதவி செய்வதற்காக கவிதாவின் கதையிலிருந்து நிலாவிற்கு இடம் மாறி மீனுவை வாய்ப் பிளக்க வைத்து கவிதாவை மீனுவுக்கு சோறு ஊட்ட வைத்து வேடிக்கைப் பார்க்க நிலாவிற்கு சென்றிருப்பாளோ !.

படர்ந்து வந்த மேகமொன்று நிலவை மறைக்கத் துவங்கியிருந்தது., மீனு “நிங்க்..ங்க் ங்க். மா...”என காற்றில் கைபிசைந்து கொண்டிருந்தாள்... ஒரு வேளை நிலா எங்கே என கேட்டிருப்பாளோ, என்னவோ !

பிடிக்கப் பிடிக்காமல் பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை காலின் கீழிட்டு கசக்கி விட்டு... அவள்புறமாய் நடந்தேன்...

கவிதாவும் மீனுவும் நிலா பார்த்து கொண்டு நின்றிருந்தார்கள்.. பரவாயில்லை., ஒரு கிண்ணத்துச் சோற்றை மீனுவை தின்ன வைத்துவிட்டார்கள் கவியும், நிலாவும், நிலாவில் வடைசுட்டுக் கொண்டிருந்த பெயர் தெரியாத பாட்டியும் சேர்ந்து.

கிண்ணத்தை என் கைகளில் கொடுத்து “உள்ள வச்சுருங்க” என சொல்லியபடியே மீனுவை கீழிருந்து மேலாக இடுப்புரசி இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

 “எழுத்தாளரே ரொம்ப யோசிச்சு யோசிச்சு சொட்டத் தலை ஆயிராதீங்க !!... சாப்பிட்டுவிட்டு எனர்ஜடிக் கா உக்கார்ந்து எழுதுங்க !   “ எனச் சொல்லிவிட்டு கண்ணடித்தாள்.

மெல்ல நகன்ற அவளை எட்டிப்பிடித்தேன்,

கவிதாவின் கண்களுக்குள் பிரதிபலித்துக் கொண்டிருந்த நிலா என் கண்களுக்குள் அவள் கண்களோடு சேர்ந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

சாப்பிட்டுவிட்டு முடித்ததும், ஜன்னலை திறந்து வைத்து விட்டு என் கம்ப்யூட்டர் டேபிளில் மறுபடியும் உட்கார்ந்தேன்.

பாராமுகமாய் இருந்த நிலவின் பார்வை இப்போது என் பக்கமாய் விழுந்து கொண்டிருந்தது ..


நிலவைப் பார்த்து புன்னகைத்தபடியே “நிலா” எனத் தலைப்பிட்டு இந்த கதையை எழுத ஆரம்பித்திருக்கிறேன்... 


 

Post Comment

Wednesday, March 02, 2016

கவிதையோடு சில நிமிடம் (கவிஞர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு)


ரவு தன் அகண்ட கருவிழிகளைக் காணும் திசையெங்கும் பரப்பியபடி விழித்திருந்தது. என் காதுகளுக்குள் விக்கலும், விசும்பலும், அழுகையுமாகக் கேட்ட அந்தக் குரலை பின் தொடர்ந்து தூங்காத எனது இன்னொரு இரவை விழித்த விழிகளுடன் கடந்து கொண்டிருந்தேன்.

யாருமற்ற தனிமையில் யாரோடும் பேசாமல் வார்த்தைச் சுழலுக்குள் சிக்கி மூச்சுத் திணறியபடி அழுது கொண்டிருந்தது கவிதையொன்று. வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான இடைவெளியில் நின்றபடி உயிர்கயிறை இறுக்கமாக பற்றி ஊசலாடிக்கொண்டிருந்தது.

என்ன செய்துவிட முடியும் என்னால் , தவித்துக்கொண்டிருக்கும் கவியைச் சற்றே தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தேன். அதன் மூச்சுத்திணறல் இன்னும் இன்னும் அதிகமாகிக்கொண்டேயிருந்தது...

தண்ணீர் வேண்டுமா ? “ கையிலிருந்த தண்ணீர் புட்டியை நீட்டினேன்.

நீட்டிய புட்டியை நீள்கரம் கொண்டு பற்றி நீரினை பருகியபடிநீர் !” என்றது.

நானா?”

ஆம்

கேள்வி கேட்டது கவிதை என்பதால் கர்வத்தோடுநான் ஒரு கவிஞன்என்றேன்.

பெரும் சிரிப்புச் சிரித்தது தனது மூச்சுத் திணறல் மறந்து, அழுகையை மறந்து...

ஏன் சிரிப்பு ?

மறுபடியும் இடைவெளி இல்லாத அந்தச் சிரிப்பு.

“இத்தனை அழகாய் சிரிக்கிறாயே... , ஏன் அழுதுகொண்டிருந்தாய்...!”

கட்டாயம் சொல்கிறேன், தண்ணீர் தந்தவனாயிற்றே!“

சொல்என்றேன்

உன் மனக்கோப்பைக்குள் மணித்துளிகள் நிரப்பிக்கொள் !”

ம்என்றபடி நான் சன்னமாகச் சிரித்தேன்.

ஏன் சிரிப்புஎன்றது.

அதொன்றுமில்லை கவிதை ஒன்று கவிஞனாகி கவிதை சொன்னதால் , கவிஞன் எனக்குள் கவிதை உதித்துச் சிரிப்பாகக் கசிந்துவிட்டது.”

அது சரி , இப்போது நான் பேசியதை கவிதை என்கிறாய் !! , அழகான வார்த்தைகளை அடுத்தடுத்து அடுக்கி வைத்தால் கவிதை , என்று எவன் உன்னிடத்தில் சொல்லிக்கொடுத்தான்.” சிரித்தது.

நானும் சிரித்தேன்.. இருவருமே சிரித்துக் கொண்டோம்.

அது இருக்கட்டும் நீ ஏன் கவிஞன் ஆனாய்என்றது.

அது ஒரு விபத்து, நீ மூச்சுத்திணறி அழுது கொண்டிருந்ததன் காரணத்தைச் சொல்கிறேன் என்றாயே !”

சொல் மூட்டைப் பொதியொன்றின்
சுமை பொறுக்க முடியாமல்,
தப்பிக்கத் தலைப்பட்டேன்
முடியாமல் சிறைபட்டேன்,
சொல் மூட்டை எனை வதைக்க
வார்த்தைக்குள் அடைபட்டு
வாய்திறக்க முடியாமல்
சுவாசம் தடைபட்டேன்,
உந்தன் கண்பட்டேன் ! “

சொல்மூட்டையின் பொதியால் இறக்கும் நிலை வரையில் சென்றாயா ! ஆச்சரியமாக உள்ளதே. “

மௌனமாக இருந்த அதை நோக்கி கேட்டேன்எத்தனை வார்த்தைகளை அல்லது சொற்களை உம்மால் சுமக்க முடியும், இத்தனை என்று எதுவும் வரைமுறை, விதிமுறைகள் உள்ளனவா ?”

இத்தனை என்று வரைமுறையெல்லாம் எதுவுமில்லை, எத்தனை சொல்லும் சுமப்போம் யாம் !”.

இதென்னடா ! குழப்பம், முரணாகத் தெரிகிறதே, எத்தனை சொல்லும் சுமப்பாய் என்றால் சொற்பொதி தாளாது சோர்ந்தது ஏன்”.

எங்களால் சொற்களைச் சுமக்க முடியும் , ஆனால் சொற்களால் உருவாக்கப்பட்ட மூட்டைகளை அல்ல”.

விளங்கவில்லையே... கொஞ்சம் விளக்கிச் சொல்வாயா !”.

என் கையைப் பிடித்து, உள்ளங்கை விரித்து அதிலொரு காகிதத்தை எடுத்து வைத்தது.

காகிதம் பறக்கும், சரிதானே...”

ம், காற்று வீசினால் பறக்கும்என்றேன்.

அந்தக் காகிதத்தைக் கசக்கி ஒரு பந்து போலாக்கி மறுபடியும் என் கையில் வைத்தது.

இது பறக்குமா !”

சத்தியமாகச் சாத்தியமில்லை, வேண்டுமென்றால் நன்றாகக் காற்று வீசினால் நகரும்”.

பெருங்குரலெடுத்துப் பேசத்துவங்கியது, “ சொல் என்பது பொதுவாகவே சுமை தான், சொற்களின் கூட்டம் என்பது பெருஞ்சுமை, கசங்கின காகிதம் மாதிரி அவைகளால் ஒருபோதும் பறக்க இயலாது, சொற்களை ஏதொரு மாற்றமுமின்றி , காரணமின்றிக் கண்டபடி அடுக்கி வைத்து எம்மீது ஏற்றினால் மூச்சுத் திணறாது என்ன செய்யும். பல சமயங்களில் மூச்சுத் திணறி, சுவாசம் சுத்தமாக நின்றுபோய் நாங்கள் மரித்துப்போவதும் கூட உண்டு., தண்ணீர் பிரிந்த மீன் குஞ்சுகள் போலத் துடிதுடித்துச் செத்துப்போயிருப்போம்... வார்த்தைக் குவியல்களுக்குள் கவிதையின் பிணங்கள் அமிழ்ந்து கிடக்குமே கண்டதில்லையா நீ !”

ம்..”

கவிதையின் பிணங்களில் பின்னப்பட்ட வார்த்தை அடுக்குகள் ஒருபோதும் கவிதையல்ல , புரிந்துகொள் அவற்றை உயிர்ப்பிக்க முடியாது, பார்... நான் கூடச் செத்திருப்பேன் நீர் ஊற்ற ஆளின்றி நிராதரவாய் நின்றிருந்தால்,”. கூப்பிய அதன் கரத்தைத் தொட்டு ஸ்பரிசித்தேன்.

உயிரோடு உம்மை வார்த்தைக்கோட்டைக்குள் சிறை வைக்க இயலாதா ?”.

பறவைகளைச் சிறை வைத்தல் பழிச்செயல்”.

பின் எப்படி உங்களை வார்த்தைகளில் , வார்த்தைகளால், வார்த்தைகளுக்குள் வசப்படுத்த முடியும்”.

கண்ணுக்குப் புலப்படாமல் கண்முன்னாலேயே நிற்கும் எங்களைக் கண்டுகொள்ளப் பழக வேண்டும், முதலில் “.

அப்புறம்

கண்டுபிடித்த எங்களை வார்த்தைக் கயிற்றில் வலிக்காமல் மெல்ல கட்ட வேண்டும்,”.

கட்டுதல் தவறில்லையா”.

அன்னைத் தன் குழந்தையை வேலை செய்து கொண்டிருக்கையில் கட்டி வைத்திருந்து பின் கட்டி அணைத்துத் தூக்குவதில்லையா ?, அதே மாதிரி

ஓ !

பின், கட்டிய வார்த்தைக் கயிற்றை வார்த்தையாலேயே அவிழ்த்து எம்மை விடுவிக்க வேண்டும்”.

அதெப்படி சாத்தியம்

அது கவிஞனின் சாமர்த்தியம்

.”

சொல்லின் சுமை களைந்து அதைச் சிறகுகள் போலாக்கி எம்மைச் சுற்றிலும் ஒட்ட வேண்டும், தேர்ந்த சிறகுகள் கொண்டு இறக்கைகள் செய்து எமக்கு அணிவிக்க வேண்டும்”.

வானமென்ற அந்த நீலப்பெரும்பறவை இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்தையும் தூக்கி பறக்கிறதே அது போல எம்மை வாசிக்கிற அத்தனை பேரையும் தூக்கி சுமந்து பறக்கும் வல்லமையைத் தர வேண்டும்

தூக்கி சுமக்கையில் சுமை இருக்காதா உமக்கு

அது சொற்களால் பின்னப்பட்ட எம் இறக்கைகளின் வலிமையைப் பொருத்தது”.

இப்போது உன் சுமை எப்படி இருக்கிறது என்றேன்”.

இன்னும் அப்படியே தான் இருக்கிறது, உம்மோடு பேசியதில் கொஞ்சம் மறந்திருந்தேன்”..

மெல்ல அதன் மீது ஒட்டியிருந்த சொற்களை ஒவ்வொன்றாய்க் களைந்தெறிந்தேன்.

அந்த இரவு முழுவதும்  அது என்னோடு பேசிக்கொண்டேயிருந்தது...

பின் என்னிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு சிறகுகள் இல்லாமல் , இறக்கைகள் இல்லாமல், அப்போது தான் வெளுத்திருந்த அந்த நீல வானின் கீழே நீல நிறமாகி சொற்கள் ஏதுமின்றிச் சுதந்திரமாய்ப் பறக்கத்துவங்கியது.

அதன் பறத்தலை பார்வையால் பின் தொடர்ந்து வானத்தையே பார்த்தபடி நின்றேன் ! சில நிமிடங்களுக்கெல்லாம் வானமாகிப் போயிருந்தது.










 

Post Comment