Wednesday, March 09, 2016

கனவுகள் (3)


னித உடல் என்பது பல அடுக்குநிலைகளாலான  உடல்களின் தொகுப்பு என்கிற நம்பிக்கை நம் பழங்கால இந்திய கலாச்சாரத்தில் இருந்திருக்கிறது, சமணர்கள் மனித உடல் ஒன்பது உடல்களின் தொகுப்பு என்கிறார்கள், புத்த மதத்தினர் 7 உடல்களின் தொகுப்பு என்கிறார்கள், பதஞ்சலியின் யோக சாஸ்திரம் , உபநிடதங்கள் மற்றும் நம் தமிழ் கலாச்சாரத்தின் மிக முக்கிய நூலான திருமந்திரம் போன்றவற்றில் மனித உடல் ஐந்து உடல் அடுக்குகளாக பரவி இருக்கிறது என்கிற குறிப்புகள் உள்ளன.

ஓஷோ  " The psychology of esoteric" என்கிற உரையில் மனித உடலின் ஒவ்வொரு உடல் அடுக்குக்கும் கனவு நிலைகள் உண்டு என்கிறார். அதாவது ஒவ்வொரு உடலும் அதற்கேயுரிய பிரத்யேக கனவுலகில் சஞ்சாரிக்கிறது என்கிறார்.

ஆனால் எல்லோர் உடலும் எல்லா அடுக்குகளாக வளர்வதில்லை, What you feed, will grow , என்கிற சித்தாந்தத்தின் படி எந்த அடுக்கை நாம் வளர்க்கிறோமோ அது வளரும்.அதன் கனவுகளை நாம் காண முடியும்.

புத்த மத தத்துவத்தின் அடிப்படையில் ஓஷோ கூறும், ஏழு உடல் அடுக்குகளையும் அதனதன் கனவு நிலைகளையும் சுருக்கமாக பார்க்கலாம்.

1. முதல் உடல் அடுக்கு: பூத உடல் (Physical Body)

நமது புற உடலில் ஏற்படும் பாதிப்புகள் இந்த உடலடுக்கின் கனவுகளை பாதிக்கிறது, "கண்ணில் ஒரு வழி இருந்தால்... கனவுகள் வருவதில்லை..." என வைரமுத்து பாடுவது இந்த உடல் சார்ந்த கனவுகள் தான்,  காய்ச்சலாக இருக்கும் போது நமக்கு துர்கனவுகள் ஏற்படுவது. வெளியே கேட்கும் பாடலை கனவுக்குள் கதை , திரைகதை, வசனம், டைரக்சன் செய்து கனவிற்குள் நிகழ்த்திக்காட்டுவது , அம்மா எழுப்பிவிட மேலே ஊற்றும் தண்ணீரை மழையாக மாற்றுவது எல்லாம் முதல் உடல் அடுக்கு சார்ந்த கனவுகள். பிராய்ட் சொல்லும் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளால் ஏற்படும் கனவுகள் கூட முதல் வகை தான்.

2.வெளி உடல் (Etheric Body)

இதுவரை சந்தித்தே இராத நபர்களை சந்தித்தல், உண்மையான சாமியார்கள் கனவில் வந்து அருள் வாக்கு சொல்லுதல், (சாய் பாபா ஒருவர் கனவில் தோன்றி அவரை அங்கே நீ செல்லாதே என்றிருக்கிறார், அவர் செல்ல வில்லை, அடுத்த நாள் அங்கே ஒரு பெரு விபத்து நிகழ்ந்திருக்கிறது,  //எல்லோர் கனவிலும் போய் சொல்ல வேண்டியது தானே என்கிறீர்களா !!  Remember நாம் எந்த உடலுக்கு தீனி போடுகிறோமோ அந்த உடல் வளர்கிறது, அது சார்ந்த கனவு காட்சிகள் தெரிகிறது.// ),  பார்த்தே இராத இடங்களை பார்த்தல் , தெய்வீக கனவுகள் , ராஜா கனவுகளில் தெய்வம் தோன்றி அந்த இடத்தில் தோண்டு என கூறி அங்கே அவர் அடுத்த நாள் தோண்ட அங்கே தெய்வ சிலை இருப்பது எல்லாம் இந்த வகை கனவுகள் தான்.

3.ஆகாச உடல் (Astral Body)

கனவுலகில் கடந்த ஜென்மங்களுக்கு செல்லுதல்,ஆகாச உடலின் கனவுகளில் சாத்தியமாம். கால, வெளிக்கு அப்பாற்பட்ட கனவுகள் இவை என்கிறார்கள். கடந்த ஜென்மத்திய நினைவுகளை இந்த கனவுகள் தான் தருகின்றனவாம்.நவீன மனோவியலில் கர்ல் ஜங்க் கூறும் Collective Unconcious என்கிற வகை  இது.

4.மன உடல் (Mental Body)

நம் கடந்த கால நினைவுகள் மட்டுமின்றி எதிர்கால நிகழ்வுகளையும் காட்டும் வல்லமை இந்த மன உடல் கனவுகளில் சாத்தியப்படுகிறதாம். நெருங்கிய உறவுகள் இறக்கப்போவதை, அவர்களுக்கு ஏற்படப்போகும் வாதைகளை காட்சிகளாக இந்த உடல்சார் கனவுகள் தான் நிகழ்த்துகின்றன என்கிறார்கள்.அதேபோல விஞ்ஞானிகளுக்கு விடை தெரியாத சிக்கலான விசயங்களுக்கு விடை தருவது , படைப்பாளிகளுக்கு படைப்பு தருவது எல்லாம் இந்த வகையறா கனவுகள் தான்.

5.ஆன்ம உடல் (Spiritual body)

தனிமனித அளவிலான உடல் அடுக்கு விரிவடைவது இங்கிருந்துதான், ஆன்மீக கருத்துக்கள், மத சார் நம்பிக்கைகள், Myths , போன்றவையெல்லாம் இந்த வகை கனவுகளால் தான் உருவாகியுள்ளன என்கிறார் ஓஷோ, ஆன்ம உடல் வளர்ச்சி பெற்ற பல நபர்களால் ஒரே கனவை ஒரே நேரத்தில் காண முடியும் என்கிறார். உலகின் வெவ்வேறு மதங்களுக்குள் ஒரே மாதிரியான Concepts இருப்பதற்கு இவ்வகை கனவுகள் தான் காரணம் என்கிறார்.

6.பிரபஞ்ச பேருடல்(Cosmic Body)

பிரம்மம் , மாயை, இறை தத்துவம், இறைவன் ஒருவரே, மற்றும் பல ஆன்மீகத்தின் உயரிய கருத்துகள் யாவும் இந்த உடலின் கனவுகள் தான் பெற்றுத்தந்தன என்கிறார்.

7.ஏதுமற்ற உடல் (Nirvanic Body)

உருவமற்ற உருவம், சத்தமற்ற சத்தம் ,போன்றவைகளை காணும் கனவு., அதாவது கனவற்ற நிலை இது , இதனை ஓஷோ முடிவிலாத கனவு (Eternal Dream)  என்கிறார் . Seems mysterious.


தலையை சுற்றுகிறது... :) . இன்றைக்கு இது போதும்

ஒருவரது கனவிற்குள் நாம் நுழைய முடியுமா !, அடுத்தவர் என்ன கனவு காண வேண்டும் என்பதை நாம் நிர்மாணிக்க முடியுமா, அடுத்தவர் காணும் கனவுகளை நாம் பார்க்க முடியுமா !  அடுத்த பதிவில் பார்க்கலாம்.

கனவுகள் தொடரும் (4)

 

Post Comment

3 comments:

 1. ஆஹா!! கனவில் இத்தனை கனமா? தலை சுற்றத்தான் செய்கிறது :)
  தொடர்கிறேன் விஜயன், வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. உங்கள் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன்
  http://thaenmaduratamil.blogspot.com/2016/03/blog-post.html
  நன்றி

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....