Saturday, January 30, 2016

வழிப்போக்கனின் வார்த்தைகள் - 1

நல்லவர்களும்...  கெட்டவர்களும்...


" சமநிலையை நோக்கிய பயணமே - பிரபஞ்சத்தின் இயக்க ரகசியம்"
                                                                                                               -வழிப்போக்கன்

துவக்கமும் முடிவும் இன்றி நீண்டுகிடக்கிற மாயப்பாம்பென ஊர்ந்துகொண்டேயிருக்கிறது காலம். காலசர்ப்பத்தின் ஊர்தலின் முன்னால் நம் இருப்பு எத்தனை துச்சம் !! என எண்ணிப்பார்க்கிறேன், இந்த மிகச்சிறிய கால நீளத்திற்குள் தான் நாம் எத்தனை ஆட்டம் போட்டு விடுகிறோம்.

கொலை,கொள்ளை, கற்பழிப்பு எனச் செய்திதாள்களின் பக்கங்கள் நிறைக்கப்படுகின்றன. தீமைகள் வலுத்துவிட்டன, நல்லவர்கள் என்கிற அரிய இனம் அழிவை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறது.

மேம்போக்காகச் சிந்திக்கிற போது அல்லது பார்க்கிற போது தீயவைகள் பெருகி விட்டது போலத்தான் தெரிகிறது, (அப்படி என்றால் அது உண்மை இல்லையா!?)

எங்குப் பார்த்தாலும் சுயநலம், யாரைப் பார்த்தாலும் சுயநலம், ஊருக்குள்ள நலவங்களையே பார்க்க முடியறது இல்லை, எனச் சதா சர்வகால உச்சாடனம் செய்துகொண்டு சுற்றித்திரிகிற சாமானியன் தான் நானும் கூட.

சமீபத்தில் சென்னையை இயற்கை அன்னை தலைமுழுகிவிட முடிவெடுத்து சென்னைக்கு ஜலசமாதி கட்டிக்கொண்டிருந்த வேலையில் அன்பு , பாசம், இரக்கம், கருணை, இன்னபிறக்கள் என அடுத்தடுத்து எடுத்து வைத்துச் சுயநலம்,ஏமாற்றிப்பிழைத்தல்,வஞ்சகம் போன்ற நெகட்டிவ் விசயங்களைச் சரிகட்டிவிட்டு இயற்கை அன்னையின் கையில் இருந்த தராசு தட்டை சமன்செய்து விட்டோம்.இயற்கை அன்னையும் சென்னையை முழுகடிக்கவில்லை. Thank God ! இல்லை இல்லை Thank Humanity! .

நாம் முன்னெச்சரிக்கை, முன்யோசனை, திட்டமிடல் என எத்தனை பிரயத்தனமாக இருந்தாலும் கூட நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டியது நடந்துவிடத்தான் போகிறது.நம்மால் அதை மாற்றி விடவோ ! நடக்காமல் தடுக்கவோ செய்துவிட முடியாது ,ஆனால் நடப்பதிலிருந்து தப்பிக்கவும் தற்காக்கவும் முடியும்.

அந்த வகையில் சென்னை மூழ்கினபோது அதை மீட்டெடுத்த அன்புக் கரங்களைக் கண்டு மெய்யாலுமே மெர்சலாகிவிட்டேன், அடேங்கப்பா !! ரகம் ரகமாய் வகைபிரித்துக்கொண்டு உதவியிருக்கிறார்கள், சமூக ஊடகங்களை இப்படியும் பயன்படுத்த முடியுமா , அதன் மூலம் கூட உதவ முடியுமா என அசத்தியிருக்கிறார்கள் , அரசாங்கம் உதவும், என அசால்ட்டாக இல்லாமல் களம் இறங்கி உதவியிருக்கும் உள்ளங்களை நினைத்துப் பார்க்கையில் மெய் சிலிர்க்கிறது.

ச்ச்ச ! ஊருக்குள்ள நல்லவங்களும் இருக்காங்கப்பா, எல்லாருமே திருடங்க இல்லை !.

"சமநிலையே பிரபஞ்சத்தின் ஆதார தத்துவம்" என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு, எத்தனைகெத்தனை இருள் இருக்கிறதோ அத்தனைக்கத்தனை வெளிச்சம் , எத்தனை நெகடிவோ, அதற்குச் சமமாக அதே அளவு பாஸிடிவ் , அந்த வகையில் எத்தனைக்கெத்தனை தீமைகளும் கொடூரங்களும் இருக்கின்றனவோ அதனைச் சரிப்படுத்திச் சமன் செய்யும் அளவுக்கு நன்மைகளும், மனிதத்தன்மையும் இருக்க வேண்டும் என நம்புகிறேன், சர்வநிச்சயமாக இப்படியாகத்தான் இருக்கும் .

நேற்று மார்க்கெட்டை கடந்து நடந்துபோய்க்கொண்டிருக்கையில் ஒரு காட்சி, சைக்கிளின் பின்புற கேரியரில் கட்டி வைத்திருந்த தக்காளி பை தவறி கீழே விழ , தக்காளிகள் சிதறி ஓட சைக்கிளை ப்ரேக் அடித்து நிறுத்தி திரும்பிப் பார்க்கிறான் அந்தச் சிறுவன். விழுந்த மாத்திரத்தில் யாரென்று தெரியாத யாரோ ஒருவர் சிதறிய காய்கறிகளைப் பையினுள் அடுக்கி பையனிடம் கொடுக்கிறார்.

அந்த இடத்தில் , என்னையும் சேர்த்து நிறையப் பேர் அந்தக் காட்சியின் ஃபிரேமிற்குள் வருகிறார்கள் ...

அந்தப் பையனுக்கு உதவி கிடைத்த அதே இடத்தில் உதவுபவர்களைப் பார்த்துப் பழித்துப் பேசி பிழைக்கத் தெரியாதவன் என்று சொல்கிற நிலை கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். காய்கறிப்பை கீழே விழுவது மாதிரி மாட்டியதற்காக அந்தப் பையனை திட்டுகிற சமநிலைவாதிகளும் இருக்கிறார்கள். பக்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களையும் என்னையும் ஏமாற்றி உதவுகிற மாதிரி பாசாங்கு செய்து பாதிக்குப் பாதியை யாருக்கும் தெரியாமலேயே திருடுகிற ஒட்டுண்ணிகளும் இருக்கிறார்கள்.

அதே இடத்தில்தான் , கவனித்து , பயன் கருதாது உண்மையாக உதவுபவர்களும் இருக்கிறார்கள்.

காமாலை கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் என்பது மாதிரி நம் கண் பிழைகளை மட்டுமே பார்த்துப் பார்த்துப் பழகிப்போய் எல்லோரையுமே திருடர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும், வஞ்சகர்களாகவும் பார்க்கத்துவங்கிவிட்டது.

நாகரிக காட்டு மிருகங்களுக்கு மத்தியில் நம்மைச் சுற்றிலும் ரத்தமும் சதையுமாக , சத்தமும் வார்த்தையுமாக ரகம் ரகமாய் மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்களைக் கண்டுகொள்வதற்கான அடிப்படைத்தகுதிகள் தெளிந்த மதியும் , திறந்த கண்களும் மட்டுமே !

பாதி நிரம்பிய அமுத குவளையைப் பார்த்து , பாதிக் காலியாக இருக்கிறது என்று புலம்பாமல், நிரம்பி இருப்பதை நிறந்து உண்டு இன்புற்று இருந்து வாழ்வோம் !

                                                                                    வார்த்தைகளோடு வருகிறேன்...


 

Post Comment

1 comment:

  1. துரியோதனன்களின் பார்வை மாறாது...

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....