Monday, February 16, 2015

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைப்புத்தகமும் ஆமீர்கானின் PK திரைப்படமும்


புத்தகக் குறிப்புகள் (5)

ஆலாபனை

(அப்துல் ரகுமான் கவிதைப்புத்தகம்)

புத்தகம்: ஆலாபனை
ஆசிரியர்: கவிக்கோ அப்துல் ரகுமான்
பதிப்பகம்: கவிக்கோ பதிப்பகம்
முதல் பதிப்பு : பிப்ரவரி 1995

(முன் குறிப்பு: தலைப்பில் குறிப்பிடப் பட்டிருக்கும் விசயத்தை தேடி நீங்கள் இங்கு வந்திருப்பின் சிறிது ஸ்க்ரோல் செய்து குறிப்பு :3  PK என்ற தலைப்பிலிருந்து வாசிக்கலாம்)


புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கையை "குறைவு' என்று சொன்னால், அதில் கவிதை வாசிப்பவர்களின் எண்ணிக்கையை "மிகக்குறைவு" என்று சொல்லலாம்.. வேண்டுமானால் உங்கள் நண்பர்களில் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கையையும், அதில் கவிதைப் புத்தகங்களை  வாசிப்பவர்கள் எண்ணிக்கையையும் ஒரு ஒப்பீடு செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

கட்டுரைகள், கதைகளைவிட விட கவிதைகள் எளிமையானவை, அதே சமயம் வீரியமானவையும் கூட என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்,  காரணம் வளவள கொழகொழவென்று வார்த்தைகளை வளர்த்துச்செல்லாமல் நச்சென்று சொல்லவந்த்தை சொல்லிச்செல்லும் சொல்வன்மை அதில் இருக்கும். சில சமயங்களில் வார்த்தைகள் மூலம் வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றை சொல்லும் வாக்கு சாதூர்யமும், வல்லமையும் அவற்றில்  எட்டிப் பார்க்கும்.

****************

விதைகளை பாடல் வரிகளிலும், வார இதழ்களிலும் மட்டுமே கேட்டும், வாசித்தும் ரசித்துக்கொண்டிருந்த எனக்கு முதன்முதலில் முழுத்தொகுப்பாக கிடைத்த கவிதைப் புத்தகம் "கவிக்கோ. அப்துல் ரகுமான் எழுதிய ஆலாபனை".  "அட!! கவிதைகளை கையில் எடுத்துக்கொண்டு இப்படியும் வித்தை காட்ட முடியுமா?" என என்னை முதன்முதலில் யோசிக்க வைத்தன அதிலிருந்த கவிதைகள். 

பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த கதையிது , எங்கள் பள்ளிக்கூடத்தில் ஏதோ ஆண்டுவிழா நிகழ்த்த இருப்பதாகவும் , மாணவர்கள் அதில் நடனம், நாடகம் என நிகழ்ச்சிகள் செய்யலாம் என்றும் ஆசிரியர்கள் கூறியதற்கிணங்க நாங்கள் நான்கு நண்பர்கள் நடன அரங்கேற்றம் செய்ய முடிவெடுத்தோம்,. அவ்வப்போது இட வசதி தோது பார்த்து நண்பர்கள் வீட்டில் மாறி மாறி  நடனப் பயிற்சி செய்து கொண்டோம்., ஒருமுறை நண்பன் ஒருவன் தங்கள் வீட்டில் அம்மா, அக்காவெல்லாம் வெளியூர் செல்ல இருப்பதாக கூறி இந்த ஞாயிற்றுக்கிழமை அவனது வீட்டில் நடனப்பயிற்சி வைத்துக்கொள்ளலாம் என்றும் சொன்னான். (அவனது அம்மா எங்கள் பள்ளிக்கூடத்தில் தான் ஆசிரியையாக பணிசெய்துகொண்டிருந்தார்.)

 அந்தவார ஞாயிற்றுக்கிழமை நண்பனின் வீட்டில் காத்துக்கொண்டிருந்தோம் , இன்னும் ஒரு நண்பனின் வருகைக்காக .. , சில நிமிடங்கள் கழிந்தபிறகு கையில் இரண்டு குறுந்தகடுடன் (சி.டி) அறைக்குள் நுழைந்தான், அதில் ஒன்று நாங்கள் பயிற்சி செய்யும் நடனப் பாடல் இருந்த சி.டி..

இன்னொன்று..

"என்ன சி.டி. டா இது !" என்றேன்

சி.டி கொண்டுவந்திருந்த நண்பன் எங்களைப் பார்த்து மெல்ல புன்னகைத்தான்,

"டேய் எங்க வீட்ல இதெல்லாம் பார்க்க வேண்டாம் டா" என்று சி.டியை போட விடாமல் வீட்டுக்காரப்பையன் (வீ.பை) தடுக்க. கதவை சார்த்திக்கொண்டோம்.

பவர் கட் !!!

"ச்ச !! "

"வாங்கடா டான்ஸ் ப்ராக்டீஸ் பண்ணலாம்" என்றான் வீ.பை.

"பாட்டு வேணாமா "

"ச்சும்மா ஸ்டெப்ஸ் மட்டும் போடுவோம்"

"ம்"..

சில நிமிடங்களில் நடனப் பயிற்சி முடித்துவிட்டு  அறையில் அமர்ந்தோம், இன்னும் மின்சாரம் வந்திருக்கவில்லை.

நான் பக்கத்திலிருந்த அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்த்ததும் , அவற்றின் ஈர்ப்பில் இழுக்கப்பட்டு அவற்றைப் பார்க்க கிழம்பிவிட்டேன், நண்பர்கள் மூவரும் அறையில் அமர்ந்திருக்க நான் மட்டும்  அலமாரியை துழாவிக்கொண்டிருந்தேன்.

"டேய் சங்கர், இதெல்லாம் உங்க அம்மாவோட புக்ஸா" என்றேன்

“ஆமாம்”  என்றான்.

கண்ணதாசன் பாடல்கள் அத்தனை தொகுதியும் இருந்தது, திருக்குறள், சமையல் புத்தகங்கள்.... சில பல புத்தகங்களை கடந்த பிறகு "ஆலாபனை" புத்தகத்தை கையில் எடுத்தேன், முதலில் நான் அதை கையிலெடுக்க காரணம் அதன் அட்டைப்படம், புத்தகத்தை எடுத்து திறந்தேன், எங்கள் பள்ளிக்கூட Seal முத்திரை இருந்தது, (அது எங்கள் பள்ளி நூலக புத்தகம்). அதை எடுத்து வந்து அறையில் அமர்ந்து சில பக்கங்களை வாசித்தேன்.

தினத்தந்தி குடும்ப மலரில் வாசகர்கள் எழுதும் கவிதைகளையும், நண்பர்களின் டி.ஆர் ஸ்டைல் அடுக்குமொழிகளையும் மட்டுமே கவிதை என்று நம்பிக்கொண்டிருந்த எனக்கு அந்த கவிதைத்தொகுப்பு ஆச்சர்யமாக இருந்தது "அட !! இப்படியும் கூட கவிதை எழுத முடியுமா" என நினைத்துக்கொண்டேன்.

மின்சாரம் வந்த மாதிரி தெரியவில்லை, மதியானமும், பசியும் தான் வந்தது, கொஞ்ச நேரம் அரட்டை அடித்துவிட்டு , மின்சாரத்தை சபித்துவிட்டு , நண்பன் ராசிக் சி.டி யை கையில் எடுத்துக்கொள்ள நண்பர்கள் மூவரும் விடைபெற்றோம்.

"டேய் ராசிக் சாய்ங்காலம் ப்ராக்டீஸ் வரனுமா" என்றேன் நான்

"இல்லை வேண்டாம்.." என சொல்லியபடி சட்டையை தூக்கிக்கொண்டு சி.டி யை வயிற்றில் செருகிக்கொண்டான் .

நான் என் சட்டைக்குள்ளாக வயிற்றுக்குள் செருகிக்கொண்ட "ஆலாபனை" புத்தகத்தை தொட்டுப்பார்த்துக்கொண்டேன்.

****************
குறிப்பு :3  PK
----------------------

சமீபத்தில் ஹிந்தியில் PK என்றொரு திரைப்படம் வெளியாகியிர்ந்தது, அதில் கடவுளுக்கு நாம் அளிக்கும் தகவல்கள் ராங்க் நம்பருக்கு செல்லுவதாகவும் ,அதனால் தான் கடவுள் அவற்றை செவிசாய்த்து கேட்டு நமக்கு உதவுவதில்லை என்றும், சரியான எண்ணிற்கு தகவல் சொன்னால் கடவுள் நமக்கு உதவுவார் என்றும் ஒரு வசனம் அமீர்கான் பேசுவதாக அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த வசனத்தை நான் கேட்டதும் என் நினைவில் என்றோ ஒருநாள் நான் ஆலாபனை புத்தகத்தில் வாசித்த "தவறான எண்" என்ற அந்த கவிதை நினைவிற்கு வந்தது..

"
தற்செயலாய் ஒரு நாள் தொலைபேசி அழைப்பொன்றில் கடவுள் பேசுகிறார்...

கடவுளோடு தொலைபேசியில் உரையாடுவதாக கவிதை துவங்குகிறது, கவிக்கோ கடவுளிடம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகிறார்...

பதிலேதும் கொடுக்காமல் அமைதியாகவே இருக்கிறது பரம்பொருள்..

மேலும் மேலும் கேள்விகளை கேட்டுக்கொண்டே சொல்கிறார்...

கடுப்பாகிப்போன கடவுள் “ராங்க் நம்பர்” என்று பதில் சொல்லி அழைப்பைத் துண்டித்துவிடுவதாக கவிதை முடிகிறது.

"
****************

னக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த ஔவை.சு.துரைசாமி அவர்களுக்கு புத்தகத்தை சமர்ப்பணம் செய்து கவிசொல்ல துவங்குகிறார் கவிக்கோ.

ஆலாபனை புத்தகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமானின் 42 வசன கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன, இக்கவிதைகள் கவிஞர் அவர்களால் வெவ்வேறு காலகட்டத்தில் பாக்யா இதழில் எழுதப்பட்டவை. ஒவ்வொரு கவிதையையும் மணியன் செல்வம் தனது கோட்டோவியங்களால் அலங்கரித்திருக்கிறார்.

இந்த புத்தகத்திற்கு 1999 ஆம் ஆண்டில் தமிழ் மொழிக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.


புத்தகம்: ஆலாபனை
ஆசிரியர்: கவிக்கோ அப்துல் ரகுமான்
பதிப்பகம்: கவிக்கோ பதிப்பகம்
முதல் பதிப்பு : பிப்ரவரி 1995

****************

பின் குறிப்புகள்
---------------------------










 

Post Comment

4 comments:

  1. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆலாபனை...

    ReplyDelete
  2. அருமையான நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து பதிவாக்கி விட்டீர்கள் தங்களின் அழகான நடையால் அருமை வாழ்த்துகள் நண்பரே...
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  3. நான் தங்களது 100 வது இணைப்பாளர் நண்பா.

    ReplyDelete
  4. நன்றி நன்பரே

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....