Tuesday, December 02, 2014

எச்சரிக்கை

இலக்கியங்கள் - ஜாக்கிரதை



“நான் என் பாட்டுக்கு எழுதிக் கொண்டே போவேன், நீ புரிந்துகொண்டால் புரிந்துகொள் , இல்லாவிட்டால் சொறிந்துகொண்டு போ என்கிற மனப்பான்மை நல்லதல்ல”
                                                                                                                       -சுஜாதா
 தேர்ந்த பெண்ணியவாதி ஒருவரின் கவிதை ஒன்றை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதில் அவர் என்ன சொல்கிறார் என்பதை ஏனோதானோ என ஏதோ ஒன்றாகத் தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . வாசிக்கிறோம், வாசித்துப் புரியவில்லை ,திரும்ப திரும்ப வாசிக்கிறோம் ,புரிந்து கொள்ள முற்படுகிறோம் ,புரிகிறதோ இல்லையோ ஆனால் நம் மனம் ஒரு புரிதலை தானே சித்தரித்துக்கொள்கிறது.

 இப்படியான அரைகுறை புரிதல்கள் சரிதானா, என எனக்குள் சிந்திக்கும் போது, சர்வ நிச்சயமாக தவறுதான் என உள்ளுணர்வு சொல்கிறது.
தர்க்கரீதியாக என்னை நானே சமாதானம் செய்தபடி,எனக்கு நானே கூறிக்கொள்கிறேன், “சரியான ஒரு விசயத்தை தவறாக புரிந்துகொள்வது எப்படி தவறோ, அதேமாதிரி சரியான ஒரு விசயத்தை தவறாக புரிந்து கொள்ளப்படுகிற மாதிரி கூறுவதும் தவறுதான் “

இலக்கியம் என்றாலே ஏன் பெரும்பான்மையான மக்கள் பயந்து தலை தெறிக்க ஓடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு அது புரியவில்லை என்பது தான் காரணம். 

நம்மவர்களில் பெரும்பான்மையினரின் உலகம் என்பது அவசர அவசரமாக எழுந்து, இயற்கை உந்துதல்களை முடித்து, பல் தேய்த்து , குளியல் என்கிற பெயரில் தூக்கத்தை தண்ணீர் ஊற்றி கலைத்து ,துரித கதியில் தயாராகி வேகவேகமாக இட்லியையோ, தோசையையோ விழுங்கிவிட்டு அலுவலகம், பள்ளிக்கூடம்,கல்லூரி, தொழிற்சாலை என எங்காவது செல்கிறவர்களாலும், அரக்க பறக்க கனவனையோ , குழந்தையையோ பணிக்கோ, பள்ளிக்கோ தயார் செய்கிற தாய்க்குலங்களாலும் தான்  நிறைந்திருக்கிறது.

ஆங்காங்கே கிடைக்கிற ஓய்வு நேரங்களை தூங்கிக் கழித்தும் ஓய்வெடுத்துக்கொண்டும் கழிக்கவே பெரும்பான்மை சமூகம் விரும்புகிறது, இந்த இடைப்பட்ட ஓய்வு நேரத்தில் களைத்துப்போய் கிடக்கிறவர்களுள் என்னை மாதிரி யாராவது ஒருத்தர் அதிகப்பிரசங்கித்தனமாக கவிதைப் படிக்கிறேன், இலக்கியம் வாசிக்கிறேன் என இலக்கியமில்லாத இலக்கியத்தையும், கவிதையல்லாத கவிதைகளையும் கையில் எடுக்கிற போது , “ஓ !! இலக்கியம் என்றால் இதுதான் போல !!”  என்கிற ஆற்றாமையிலும் ,பயத்திலும் கடுப்பாகவோ அல்லது “ஐ !! கவிதை எழுதுவது இத்தனை எளிதா “ என்கிற விசப்பரிட்சையிலோ இறங்கி விட நேர்கிறது.

என்டர் கவிதைகளையும், புரியாத இலக்கில்லாத இலக்கிய குப்பைகளையும் சேர விட்ட பெருமை , சாட்சாத் நவயுக எழுத்தாளர்களையே சாரும் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.
முடிவில்லாத Dominos Effect  மாதிரி , இன்னமும் அடுக்கி வைத்த அத்தனையும் விழுந்துகொண்டே இருக்கிறது, விழுகிற ஒவ்வொன்றும் விழாதிருப்பதை விழுத்தாட்டிக்கொண்டே செல்கிறது.
எழுத்துலகில் Updation  அவசியம் தான் ஆனால் புதுமை என்கிற பெயரில் அர்த்தமற்ற குப்பைகளை குவித்தல் தவறு.

சரி.,

வாசிக்கிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது., அதிலும் தமிழ் வாசிக்கிறவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைந்துவிட்டது என சொல்லிக்கொண்டிருக்கிறார்களே அது உண்மையா ?,  உண்மை போல் தான் தெரிகிறது., அதேநேரம் வாசகர்களுக்கு பிடித்த மற்றும் தேவையான விசயங்களை புரிகிற வகையில் சலிப்புத்தட்டாத நடையில் எழுதித்தருகிற எழுத்தாளர்களும் குறைந்துவருகிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்க்காரன் என்கிற மாதிரி எழுதிக்குவிக்கிறவனெல்லாம் எழுத்தாளன் என்கிற மூடநம்பிக்கை பரவலாக பரவி வருகிறது.

கண் ஆரோக்கியம் பற்றிய புத்தகம் ஒன்றின் அட்டையில் கண்ணாடியுடன் போஸ் கொடுக்கிறார் ஒரு எழுத்தாளர், தமிழ் வழிக்கல்வி பற்றி பேசுகிற எழுத்தாளர் ஒருவர் தன் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்.

எழுத்தாளன், கவிஞன், படைப்பாளி என்கிற அரியாசனங்கள் பல அற்புத  மனிதர்கள் ஏறியவை, ஏறுவதற்கு முன் ஏறுவதற்காக தயார் செய்து கொள்ளுங்கள், ஏறியிருக்கிறவர்கள் பொறுப்போடு எழுத்தாளுங்கள் !
ஒரு குட்டிக்கதை சொல்லிவிட்டு ஆரம்பித்து வைத்த விசயத்தை முடித்து விடுகிறேன் !

கொசுப்பிரச்சினையைக் குறைக்க வேண்டும் என்று சட்டசபையில் சில நாட்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை நடந்ததே !!, அந்த மாதிரி மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் அவர்கள் ஊரில் பெருகிவரும் எலித்தொல்லையைக் குறைக்க வேண்டும் என பேச்சுவார்த்தை ஆரம்பித்தது, ஆளாளுக்கு ஒரு ஐடியா கொடுத்தார்கள், முடிவில் பூனை வளர்க்கும் ஐடியா பெரும்பான்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டது, வீட்டுக்கொரு பூனை அரசு சார்பில் இலவசமாக தரப்படும் என தீர்மாணம் எழுதப்பட்டது.

இலவச பூனை விநியோகம் இனிதே ஆரம்பித்தது.., அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், சாமானியர்கள், பணக்காரன் ,ஏழை என எல்லோருக்கும் வழங்கப்பட்டது.

தெனாலிராமன் வீட்டிற்கும் ஒரு பூனை கொடுக்கப்பட்டது, “ராஜா பூனையை மட்டும் தருகிறாரே , பூனை வளர்க்க மானியம் எதுவும் தரவில்லையே , எப்படி அந்த மானியத்தை அரசரிடமிருந்து சமயோசிதமாக வாங்கலாம்” என யோசனை செய்த தெனாலிராமனுக்கு ஒரு பொறி தட்டியது.

பூனையை கட்டிப்போட்டு பசியோடு போட்டான் , பசித்த பூனைக்கு சுடச்சுட சூடான பாலை வைத்தான்., குடிக்க முயன்று நாக்கை வைத்து வெந்துபோனது., தொடர்ந்து சூடான பாலையே வைக்கிறான், சூடான பதார்த்தங்கள், சூடான பால் , சூடு கண்டு சூடு கண்டு பாலையும், உணவையும் வெறுத்து விடுகிறது பூனை.
சில நாட்களுக்குப் பிறகு..,

அரசவை சார்பாக பூனைகளை வீட்டிற்கு வீடு சென்று சோதனை செய்யும் இலாகா தன் பணியை ஆரம்பிக்கிறது, தெனாலிராமனின் பூனையைப் பார்த்து அதிர்ச்சியான அரசு ஊழியர்கள் என்ன இது என விசாரிக்கிறார்கள் “ நான் என்ன செய்யட்டும் இந்த பூனை பாலையே குடிக்க மாட்டேன் என்கிறது, பாலைப் பார்த்தாலே பயந்து ஓடி விடுகிறது. “ எனக்கூறுகிறான்

“பால் குடிக்காத பூனையா... விளையாடுகிறாயா நீ ?”

“நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்..”

“அட ! ஆமாம், என்னடா இது வினோதமாய் இருக்கிறது”

அரசர் முன் அழைத்துச் செல்லப்படுகிறான் , அரசர் விசாரணையை ஆரம்பிக்கிறார், இவன் செய்த தில்லாலங்கடி வேலை யாருக்குமே பிடிபடவில்லை, அரசரே அவனிடம் வினவுகிறார் “ஏய் ராமா ! வழக்கம் போலவே இது நிச்சயம் உன் தந்திரமாகத் தான் இருக்க வேண்டும், எதற்காக இந்த தந்திரம்”  என்று

அரசனிடம் தன் சமயோசிதத்தைப் பயன்படுத்தி பரிசு பெருகிறான்  அதன்பின் மக்களுக்கு பூனை வளர்ப்பு மானியமும் பெற்றுத்தருகிறான் என்பதாக கதை முடிகிறது.

தற்கால வாசகனும் தெனாலி ராமன் வளர்த்த பூனை மாதிரி தான் பாடப்புத்தகம் பயமுறுத்தும் பயமுறுத்தல்களிடமிருந்து தப்பி வாசிப்பதற்காக புதிதாக புத்தகம் எடுப்பவனை கனமான, வாசிக்க சிரமமான, வாசித்தால் களைப்பாகிற வகையறா எழுத்துக்களைக் காட்டி பயமுறுத்தினால் அவன் என்ன செய்வான் !!
புத்தகங்களை கண்டு ஓடுவதைத் தவிர...

(இன்னும் பேசலாம்... )



 

Post Comment

8 comments:

  1. இன்றைக்கு தெனாலிராமன் போல் தான் செயல்பட வேண்டும்... வேறு வழியில்லை...

    ReplyDelete
  2. இலக்கியங்கள் ஜாக்கிரதை தலைப்பு அட்டகாசம் புரிந்துகொள்ளப் படாமல் எழுதப் படுவதுதான் இலக்கியம் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் இருக்கிறது. புரியவில்லை என்றால் இதெல்லாம் உனக்கு ப் புரியாது. அறிவாளிகளுக்குத் தான் புரியும். என்பார்கள்

    ReplyDelete
  3. :) ஆமா ங்க சார். அப்படித்தான் நிறைய பேரு சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் ..யாருக்குமே புரியாததை யாருக்குத்தான் எழுதுகிறார் கள் அவர்கள் என எனக்கு டவுட்டு ..., பாராட்டிற்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete
  4. //என்டர் கவிதைகளையும், புரியாத இலக்கில்லாத இலக்கிய குப்பைகளையும் சேர விட்ட பெருமை , சாட்சாத் நவயுக எழுத்தாளர்களையே சாரும் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.
    முடிவில்லாத Dominos Effect மாதிரி , இன்னமும் அடுக்கி வைத்த அத்தனையும் விழுந்துகொண்டே இருக்கிறது, விழுகிற ஒவ்வொன்றும் விழாதிருப்பதை விழுத்தாட்டிக்கொண்டே செல்கிறது.
    எழுத்துலகில் Updation அவசியம் தான் ஆனால் புதுமை என்கிற பெயரில் அர்த்தமற்ற குப்பைகளை குவித்தல் தவறு./// இது முற்றிலும் உண்மை இதை நான் அப்படியே ஏற்கிறேன். ஆனால் வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டமைக்கு மொழியின் கடினத் தன்மைதான் காரணமென்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.... தமிழ் மொழி இதை விட கடினமாக இருந்த காலத்திலேயே இப்போதை விட அதிகமான இலக்கியப்படைப்புகளையும் வாசகர்களையும் கொண்டிருந்த மொழி தமிழ்...வாசிப்பு குறைந்து விட்டமைக்கு புத்த்கங்களையும்வாசிப்பின் முக்கியத்துவத்தையும் அடுத்த அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லாததே காரணம், சிறு வயதில் நான் படித்த அம்புலிமாமா கோகுல்ம் காமிக்ஷ் போன்ற புத்தகங்களே இப்போதைய எனது வாசிப்பு பழக்கத்திற்கு காரணம் என்னைப் போல பலருக்கும் அப்படியே... ஆனால் இப்போதைய தலை முறையில் எத்தனை பேருக்கு அப்படியான புத்தகங்களைக் குறித்து தெரியும்? எத்தனை வீட்டில் பெரியவர்களிடம் முதலில் வாசிப்பு பழக்கம் இருக்கிறது? இப்போதைய தலைமுறையின் 60% சதவீத நேரத்தை பள்ளிப் புத்தகங்களே பறித்துக் கொள்கின்றன மீதி இருப்பதில் இருக்கும் ஓய்வு நேரமும் கணிப்பொறி, கைப்பேசி விளையாட்டுகளிலும், தொலைக்காட்ச்சியிலும் தொலைந்து போகிறது, இதில் இவர்கள் எங்கே வாசிப்பை பற்றி யோசிக்க மூத்த தலைமுறையே தொலைக்காட்சியில் தன்னை தொலைத்து நிற்க இதில் இளைய தலைமுறையை என்ன சொல்ல... வாசிப்பு பெருக வேண்டுமானால் முதலில் அதன் முக்கியத்துவம் குழந்தைப் பருவம்முதலே உணர்த்தப்பட வேண்டும், தினப்படி நடவடிக்கைகளில் ஒன்றாக வாசிப்பும் பழக்கப் படுத்தப் பட வேண்டும், இல்லையெனில் எத்தனை அருமையாக எத்தனை எளிமையாக எழுதினாலும் இங்கே வாசகர்கள் பெருகப் போவதில்லை

    ReplyDelete
  5. Suganya SaminathanSat Apr 18, 05:42:00 pm

    முடிவில்லாத Dominos Effect மாதிரி , இன்னமும் அடுக்கி வைத்த அத்தனையும் விழுந்துகொண்டே இருக்கிறது, விழுகிற ஒவ்வொன்றும் விழாதிருப்பதை விழுத்தாட்டிக்கொண்டே செல்கிறது.
    எழுத்துலகில் Updation அவசியம் தான் ஆனால் புதுமை என்கிற பெயரில் அர்த்தமற்ற குப்பைகளை குவித்தல் தவறு.///

    Muttrilum unmai....Aanal priya solvadhai pola padipavargal kuraindhadharku karanam adhan magathuvathai naam marandhadhe....Ungal padithupugalai padikum pozhudhu enaku padipin menmaiyai unarthiya en ammavirku manadhaara nandri solgiren.....

    ReplyDelete
  6. உண்மை தான் என் பள்ளித்தோழனே.....! நீ இவ்வளவு எழுதுவாய் என்பது எனக்கே இப்போதுதான் தெரிகிறது ... வாசிப்பு பழக்கம் அதிகமாக வேண்டுமானால் புரியாத கவிதைகளை புறக்கணிக்காமல், புரிந்து கொள்ள முயற்சித்தால் கண்டிப்பாக அர்த்தம் புலப்படும் .. மற்றும், வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டுமானால் நிச்சயம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நாம் குறைத்தாக வேண்டும். அதை குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்த வேண்டும்...!

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....