Sunday, June 29, 2014

கண்ணீர்

 (அழுகை,கண்ணீரின்  ரகசியங்களையும் காரணங்களையும் கூறும் குட்டிப்  பதிவு)


துக்கம்,கவலை,ஆத்திரம்,இயலாமை,வெறுப்பு , அதீத சந்தோசம்...  என மனம் நிரம்பிப்போகிற பொழுதுகளிலெல்லாம் மனதின் நுழைவாயிலான கண்களின் வழியாக இமைக் கதவுகளை திறந்துகொண்டு இந்த மாய-திரவம் துளித்துளியாய்  கசிவதுண்டு.

கோபம்,சந்தோசம் என அதீத உணர்வுகள் அத்தனையின் காரணமாகவும் இந்த கண்ணீர் தோன்றுகிறதென்றாலும் கூட,  பெறும்பாலும் இது அழுகையுடனேயே நமக்கு அறிமுகமாகிறது. பிறந்தவுடனேயே மனிதக் குழந்தை செய்கிற முதல் வேலை அழுகை, பிறந்த பொழுதில் கண்களில் கண்ணீர் சுரப்பிகள் இருப்பதில்லை என்பதால் முதல் அழுகையின் போது கண்ணீர் வெளிப்படுவதில்லை,  குழந்தை பிறந்து சில வாரங்கள் ஆனபிறகே  அழுகையோடு இணைசேர்ந்து கண்ணீர் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

கண்களில் ஏதாவது தூசி விழுந்தால் நீரில் நிறைத்து அதை ஓரம் கட்டி வெளியேற்றி வெளித்தள்ளவோ, அல்லது இமைகளின் உராய்வில் கண் கலைப்புறாதிருக்கவோ, கண் வறண்டு போகாமல் காக்கவோ தான் பரிணாம வளர்ச்சியின் பரிசாக இந்த கண்ணீர் என்கிற விசயத்தை இயற்கை நமக்கு கொடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அழுகை
                              

னக்கும் இந்த கண்ணீருக்குமான உறவு  தேவபந்தம் ,ஜீவ பந்தம் என்னும் அளவுக்கு கெட்டியாக இருக்குமோ என எனக்கு சந்தேகமாக இருக்கிறது, சோகமோ,கோபமோ என்னையும் மீறி கன்னங்களின் வழியாக பாதையமைத்துக்கொண்டு  கடல்சேரத் துடிக்கும் நதியைப்போல கண்ணீர் ஓட துவங்கிவிடுகிறது...,கரைசேரத் துடிக்கும் அலையைப் போல உணர்வுகள் அலைபாயத் துவங்கிவிடுகிறது...

பிறந்துவிட்ட எல்லாருக்குமே "காலம்"  நிறையவே கற்றுக்கொடுக்கிறது ,சிலர் கற்றுக்கொள்கிறோம், சிலர் கற்றுக்கொள்வதில்லை... அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ளும் விசயங்கள் அழிக்கமுடியாத அளவுக்கு ஆழமாய்ப் போய் ஆழ்மனதிற்குள் பதிந்துவிடுகின்றன .   எல்லோர் மனதிற்குள்ளும் ஏதோ ஒன்று எழுதப்பட்ட...  பலகையொன்று  ஆணி அடித்து மாட்டி வைக்கப் பட்டிருக்கும் என்பதை என்னால் அடித்துக் கூற முடியும்..

நான் அழத்துவங்கும் போதெல்லாம் என் மனம்  பிலாஸ்பேக் ஒன்றை ஓட்டிப் பார்த்து ஆறுதல் செய்து கொள்கிறது.,

கருவாக இருந்த நான் குழந்தையாய் பிறந்த பொழுதில் , இந்த உலகத்தைப் பார்த்து அழவில்லையாம்...  அழுகைக்கான ஸ்பேர் பார்ட்ஸ் உடலுக்குள் வளரத்துவங்கும் முன்னரே உலகத்திற்குள் என்னை அந்த புண்ணியவதி பெற்றுப்போட்டு விட்டாள் போல... 8 மாத குழந்தையாக அழாமல் கிடந்த என்னை ஜடமென்று சொல்லி வீசிவிட்டுப் போகச் சொன்னதாம் ஒரு கூட்டம்.

முந்திரிக்கொட்டைமாதிரி மாதம் பொறுக்காமல் பிறந்த விட்டதால் என்னை ஒரு Incubator கருவிக்குள் வைத்து வெப்பமும், அணைப்பும் கொடுத்திருக்கிறார்கள்...

பசிக்கு பால் கேட்டு அழக்கூடத்தெரியாத ஒரு குழந்தையாகத் தான்  நான் பிறந்திருக்கிறேன்...

இப்போதிருக்கும் "நான்" அப்போதிருந்த நான்-ஐ விட எவ்வளவோ  பரவாயில்லை என என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்..,

சரி .., (No more புலம்பல்ஸ்... :) )

 கண்ணீரின் காரணங்கள் :

கலக்கம் கொள்கிற போதெல்லாம் கண்களை கலங்க வைத்தபடி கண்ணிருந்து இந்த திரவம் கசிவதன் காரணம் என்னவென்று  பல நேரங்களில் நான் சிந்திப்பதுண்டு.

கண்ணீரின் காரணத்தை மூன்றாய் வகைப்பிரித்திருக்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு.

காரணம் 1.
கண்ணுக்குள் விழும் அந்நியப் பொருளை நீரில் நனைத்து கண்ணோரமாய் கொண்டு சேர்த்து வெளியேற்றுவதற்காக

காரணம் 2.
கண்கள் காய்ந்துவிடாமல் காப்பதற்காக

காரணம்3.
அதீத,ஆழமான உணர்வுகளின் போது (வலி,கவலை,வெறுமை etc..,)

காரணம் 1 மற்றும் 2 ஆல்  கண்ணிலிருந்து கசிகிற கண்ணீருக்கும் காரணம் 3 -ன்  (உணர்வுகளின் ) போது வெளியாகிற கண்ணீருக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது...

சோகத்தின் காரணமாக, கவலையின் காரணமாக, வலியின் காரணமாக உடலுக்குள் ஒரு வித நச்சுத்தன்மை கொண்ட சுரப்புகள் உருவாகின்றனவாம், இவை உடலுக்குள் சேகரமாகும் பட்சத்தில் உடல் நலிவடைகிறது....

மனதிற்குள் சோக,வலி... உற்பத்திக்கு காரணமாய் இருக்கும் ஹார்மோன்களையும், நச்சு சுரப்புகளையும் 3 ஆம் காரணத்தால்  வெளியாகிற கண்ணீர் வழியாக கலந்து வெளியேற்றுகிறதாம் நம் உடல்.

மற்ற நேரங்களில் வெளிப்படும் கண்ணீரைவிட உணர்வுப்பெருக்கில் ஊற்றெடுக்கும் கண்ணீருக்கு அடர்த்தி அதிகம்,

அழுகையின் பிறகு மனம் கொஞ்சம் லேசாகிப் போனதாய் , ஆறுதல் கொண்டதாய் நாம் உணர்வதற்கு இந்த "கண்ணீரோடு கலந்து வெளியேற்றும் செயல்" தான் காரணமாக இருக்க வேண்டும்.

நம் சமூகத்தில் கண்ணீர் என்பதை வலிமையற்றதன் அடையாளம் என்பதாய் தப்பர்த்தம் செய்து வைத்திருக்கிறோம்.. அழுகை என்பது ஆணுக்கு இழுக்கு, அழுகையும் கண்ணீரும் கோழைத்தனமான செயல்கள் என்றெல்லாம் இட்டுக்கட்டி வைத்திருக்கிறோம்...


பெட்டி செய்தி:
மூக்கு நீர்
கண்ணீர் சுரப்பிகள் முகத்தில் மூக்குத் துவங்கும் இடத்திற்கு சற்றே மேலே கண்களின் ஓரத்திற்குள் அமைந்திருப்பதால் அழும் போது மூக்கிலிருந்தும் நீர் வருகிறது
அழுகாச்சி நோய்கள்:
காரணமிருந்தும் அழாததும், காரணமின்றி அழுவதும் நோய் என்கிறது மருத்துவத்துறை., இதற்கு பெயரெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள்...
காரணமின்றி அழுவது : Pseudobulbar Affect (சுருக்கமாக PBA)
காரணமிருந்தும் அழுகை வரவில்லை : Alexithymia
முற்றும் துறந்த ஞானிகளுக்கு இது பொறுந்தாது என நினைக்கிறேன்முதல் கண்ணீர்:

ஆண் அழுகை


மனிதனின் முதல் கண்ணீர் பற்றி அமெரிக்க பழங்குடி கதை ஒன்றுள்ளது...

முன்னொரு காலத்தில் , சீல் என்கிற கடல் சிங்க வேட்டைக்காக
கடலுக்குச் செல்கிறான் ஒருவன் . கடலோரமாய் கண்களை வீசியபடி கத்தியுடன் கைவீசி நடந்திருந்த அவன் பார்வையில் கூட்டம் கூட்டமாய் ஒரே இடத்தில் குழுமி இருந்த சீல் -களின் காட்சி படுகிறது, பார்த்த மாத்திரத்தில் அவன் மனம் துள்ளிக்குதிக்க ஆரம்பித்து விடுகிறது. அவனது பெண்டாட்டி பிள்ளைகளுக்கு நல்லதொரு விருந்து கிடைக்கப் போவதை எண்ணி பெரும் சந்தோசம் கொண்டவனாய் சீல்களின் அருகே மெல்ல மெல்ல தவழ்ந்து ஊர்ந்து செல்கிறான், அவனை கண்ட வேகத்தில் வேகமெடுத்து கடலுக்குள் பாயத் துவங்குகின்றன  சீல்கள்... கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய் விடக்கூடாது என்கிற சிந்தனையில் அவன் தன் வேகத்தை குறைக்கிறான்... கடலுக்குள் குதிக்கத்துவங்குகின்றன சீல்கள்... அந்த சீல் கூட்டத்தில் ஒரே ஒரு சீல் மட்டும் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது., நன்கு கொழுத்திருந்த சீல்... கிடைத்தது வேட்டை என சந்தோசமானான், இதை கொண்டு போய் கொடுத்தால் தன் மனைவி எவ்வளவு சந்தோசப் படுவாள் மனைவியின் சந்தோச முகத்தை மனதிற்குள் வரைந்துகொண்டான்... ஊர்ந்து செல்லும் சீல்-ஐ நோக்கி கைசெலுத்தி அழுத்திப்பிடிக்கிறான்... கைவிட்டு வழுக்கி பிடிகொடுக்காமல் நகர்ந்து ஓடி மறைந்து கூட்டத்துடன் கலந்து கடலுக்குள் செல்கிறது அந்த கொழுத்த சீல்..

கடுப்பாகிப் போய் எழுந்து நிற்கிறான் அவன் ... இதுவென்று பிடிபடாத ஒரு வித வினோத உணர்வு அவனை ஆட்கொள்கிறது கண்களில் இருந்து நீர் வெளிவரத் துவங்குகிறது., கைவைத்து தொட்டு அந்த நீரை சுவைக்கிறான் உப்பு கரிக்கிறது... மனம் கொண்ட வெதும்பலின் சத்தங்கள் அவன் வாய் வழியாக வெளிப்படத்துவங்குகிறது..

அவனது சத்தம் வீடு வரை கேட்கிறது... தந்தையின் வெதும்பல் சத்தம் கேட்டு என்னவென்று பார்க்க அம்மாவையும் கூட்டிக்கொண்டு ஒடி வருகிறான் மகன். கண்கள் ஈரமாகி இருப்பதையும்,வெதும்பல் சத்தத்தின் காரணத்தையும் கேட்கிறாள் அவன் மனைவி...

தான் சீல் பிடிக்கப்போன கதையையும் , அவை தப்பி ஓடின கதையையும் சொல்லத்துவங்குகிறான்... கதை கேட்டவுடன் அம்மா,மகன் இருவர் கண்களில் இருந்தும் அதே திரவம் வெளிவருகிறது,அவர்களும் வெதும்பல் சத்தத்தை வாய்வழியாக உதிர்க்கிறார்கள்.

இப்படியாகத்தான் உலகின் முதல் மனிதன் முதன் முதலில் அழத்துவங்கினான் என்கிறது அந்த கதை..

அதன்பின் தந்தையும் மகனும் இணைந்து வேட்டையாடி சீல்களை கொள்கிறார்கள், பின் சீல்- பிராணியின் தோலை பயன்படுத்தி ஒருவித "சீல்- பொறி " செய்து மேலும் மேலும் சீல்கள் பிடித்து சந்தோசமாய் வாழ்ந்தார்கள் என்று சுபம் போட்டு அந்த பழங்குடிக் கதை முடிக்கப்படுகிறது.


சீதை அசோக வனத்தில் இருந்தபோது அழுத கண்ணீர் ஆறாக பெருகி அதில் அவள் அன்னம் போல் நீந்தினாள் என்கிறார் கம்பர் , “Alice in Wonderland” - ல் ஆலிஸ் தான் அழுத கண்ணீரால் கண்ணீர் குளத்தை உருவாக்கி விடுவதாய் Lewis Caroll  எழுதுகிறார் ..
பழங்கால இந்திய புராணங்கள் ருத்ராஷ்ம் என்பது சிவ பெருமானின் கண்ணீர் என்பதாய் கதை ஒன்றை சொல்கின்றன (ருத்ரன் = சிவன் ஆக்ஷம் = கண்ணீர்).
Fairy tales, கடவுள் கதைகள் என... கண்ணீரை மையமாக வைத்து ஏகப்பட்ட கதைகள் உலகம் முழுதும்  புலக்கத்தில் இருக்கின்றன.

கதைகள் கிடக்கட்டும் நாம் நிஜத்திற்கு வருவோம்...

விலங்குகள் அழுமா??

சரி !! மனிதனைப் போல சோகம்,கவலை கொண்டு மற்ற மிருகங்கள் அழுது கண்ணீர் வடிக்குமா !!

தன் துணை யானைகள் கூட்டம் விட்டு பிரிந்தாலோ, இறந்தாலோ யானைகள் கண்ணீர் விட்டு அழுகின்றன. மனிதனின் பரிணாம முன்னோடிகள் என கூறப்படுகிற குரங்குகள் அழுகின்றன. தன்னை வளர்க்கிறவர்களின் உள்ளம் சோகம் கொண்டால் அதை உணர்ந்து வளர்ப்பு நாய்கள் அழுகின்றன.

வலி ஏற்படும் போது பெரும்பான்மை விலங்குகள் அழுகின்றன., அவற்றின் அழுகை பெரும் சத்தம் கொண்ட குரலாக ஒலிக்கிறது...

கண்களில் கண்ணீர் சுரப்பிகள் கொண்ட விலங்குகள் எல்லாமும் கண்ணீர் சிந்துகின்றன ( முதலைகள் கூட ... )..

என்றாலும்...

சோகம்,துக்கம்,கவலை,இயலாமை,இழப்பு,இறப்பு,கருணை போன்ற காரணங்களுக்காக யானைகள் ,குரங்குகள்,நாய்கள் தவிர அநேகமான விலங்குகள் கண்ணீர் சிந்துவது கிடையாது...

 கண்ணீர் நல்லது :
உடலையும் , மனதையும் கெடுக்க வருகிற ஒவ்வொரு அயல் காரணி மீதும் அசாத்திய துணிச்சலுடன் போரிட்டு வெளியேற்றுகிற வலிமையை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இந்த இயற்கை கொடுத்திருக்கிறது.

உடலுக்குள் புகுந்துவிட்ட நோய்க்கிருமியை காய்ச்சல் மூலம் காய்ச்சி எடுப்பது, காற்றோடு கலந்து மூக்குக்குள் செல்லும் தூசியை தும்மல் மூலம் வெளித்தள்ளுவது,

இருமல்,விக்கல்,புரையேறல்...

இப்படியாக அந்நிய காரணியை வெளியேற்ற மனித உடல் மேற்கொள்ளும் போர் நடவடிக்கைகளில் ஒன்று தான் இந்த கண்ணீரும்.,

துன்பம்,துக்கம் காரணமாக உடலுக்குள் உருவாகும் தேவையற்ற நச்சுப் பொருட்களையும், நம்மை சோக கீதம் பாட வைக்க காரணமாக இருக்கும் ஹார்மோன் களையும் அடித்து துவ்ம்சம் செய்து கூட்டி,பெருக்கி சுத்தம் செய்து கண்களுக்கு கொண்டுவந்து கண்ணீருடன் கலந்து உடல் விட்டு தூர வெளியேற்றும் செயல் தான் அழுகை


அழுகை என்பதை சோகத்தால் ஆட்பட்ட மனம் ஆனந்தமாக்கலுக்காக தன்னை ஆயத்தப்படுத்தும் செயல் எனச்சொல்லலாம்..

 உள்ளம் கொள்கிற உணர்வுகளையெல்லாம்  கண்கள் வழியாக கசிய வைத்து காணமல் போக செய்கிறது இந்த கண்ணீர் ...

கண்ணீர் என்பது உண்மையிலேயே அற்புதமான விசயம்.அழுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால் முழுமையாய் அழுதுவிடுங்கள்...

முழுமையாக சிரிக்க நினைக்கிற எவரும் முழுமையாக அழ வேண்டும் !! சோகக் காரணிகளை கண்ணீராய் வெளியேற்றத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே சந்தோசத்தின் கதவுகள் முழுமையாகத் திறக்கப்படுகின்றன...
பின் குறிப்பு 1:

1.அழுது முடித்ததும் கண்ணீரை துடைத்துவிட்டுக்கொள்ளுங்கள். 
2.துடைத்துவிட கைகள் ஏதும் வந்தால் தட்டிவிடாதீர்கள்.(அவை கண்ணீரை துடைப்பதற்காகத் தான் வருகின்றன என்றால் மட்டும்)
3.அழவைப்பவர்களை கூடுமான வரை தவிர்த்துவிடுங்கள், அடித்து நொறுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் போட்டுத் தாக்கிவிடுங்கள் J .

பின்குறிப்பு 2:

அழுது முடித்ததும்... நீங்கள் இந்த விசயங்களில் ஏதேனும் “...லாம்” களை மேற்கொள்ளலாம்...

1.   நன்பர்களுடன் (அ) நெருக்கமானவர்களுடன் மனம் விட்டுப் பேசலாம்
2.   தலையணைக்குள் முகம் புதைத்து தூங்கி விடலாம்
3.   மனதை லேசாக்கும் திரைப்படங்கள் பார்க்கலாம்
4.   பாடல்கள் கேட்கலாம்
5.   பிடித்தமான புத்தகங்கள் வாசிக்கலாம்
6.   செல்லப் பிராணியை செல்லமாய் இம்சிக்கலாம்
7.   காலாற நடக்கலாம்
8.   குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கைப் பார்க்கலாம்
9.குழந்தைகள் அனுமதி கொடுத்தால் அவர்களோடு விளையாடலாம்
10.   நீங்கள் ஜிம்-பாயாக இருந்தால் எக்ஸர்சைஸ் செய்யலாம்
11.குத்துச் சண்டை பயிற்சி கொடுக்க ஒரு மூட்டை வைத்திருப்பார்களே அதை வாங்கி வைத்துக்கொண்டு குத்தி விளையாடலாம்
11. உங்கள் மனதிற்கு பிடித்தமான விசயத்தை செய்யலாம்
12. இது மாதிரி சமூகத்திற்கு கருத்துச் சொல்கிறேன் பேர்வழி என எதையாவது “BLOG- ல் எழுதி வைக்கலாம் J


கருத்துக்கள் இருப்பின் மறக்காமல் பகிரவும்...


           JJJJJJJJ

 

Post Comment

17 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. கொஞ்சம் எழுத்துப்பிழையுள்ளது திருத்திக் கொள்ளவும்

  ReplyDelete
 3. பதிவு அற்புதம் விஜயன். பதிவோடு சேர்த்து சில சொந்த இன்ப துன்பங்களையும் ஆங்காங்கு தூவிவிட்டது அருமை. நல்ல தேர்ந்த எழுத்து நடை.

  ReplyDelete
  Replies
  1. :) நன்றிங்க அண்ணா

   Delete
 4. வணக்கம்
  அற்புதமான கதை மூலம் பதிவை நகர்த்தியுள்ளீர்கள் சொந்தச்சுமையும் பிற சுமையும் சேர்ந்த கலவை நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கதை கொண்டு பதிவை வாசித்து நகர்ந்தமைக்கு நன்றி ரூபன்

   Delete
 5. அருமை. :) எனக்கு கண்ணீர் அனுபவம் அதிகம் உண்டு. கொஞ்சமே கொஞ்சமாக சோகம் என்றாலும் கூட அப்படி அழுவேன். ஆனால், அழுது முடித்ததும், "இந்தப் பிள்ளயா இவ்வளவு அழுதுச்சு?"னு கேட்கும் அளவு சிரிச்சிட்டு இருப்பேன். அவ்வளவு பெரிய நிம்மதி கிடைக்கும்.

  நல்ல பதிவு :)

  ReplyDelete
  Replies
  1. :) கண்ணீர் என்பது வரம் !! ... வருகைக்கும்,வாசிப்புக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி கண்மணி

   Delete
 6. அருமை அருமை
  கண்ணீரைப் பற்றிக் கூட இவ்வளவு இனிமையாக கூற முடியுமா
  வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கும் வரவிற்கும் நன்றி ஐயா

   Delete
 7. கண்ணீர் பற்றிய நிறைய விசயங்களை தெரியப்படுத்தி விட்டீர்கள்.
  //அழுது முடித்ததும்
  இது மாதிரி சமூகத்திற்கு கருத்துச் சொல்கிறேன் பேர்வழி என எதையாவது “BLOG”- ல் எழுதி வைக்கலாம்//
  ஏன் அழுதீர்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. Dear Admin,
   You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

   To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

   To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
   1. Facebook: https://www.facebook.com/namkural
   2. Google+: https://plus.google.com/113494682651685644251
   3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

   தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

   நன்றிகள் பல...
   நம் குரல்

   Delete
 8. தம்பி மிகவும் அருமையான கட்டுரை... படிக்க படிக்க ஆழமாய் சென்று ஆச்சர்யப் படுத்தி விட்டாய்... உண்மைதான் தம்பி கண்ணீர் மிகவும் அற்ப்புதமான விடயம் தான்.... பிறந்த குழந்தைகள் உயிர்ப்புடன் இருப்பதைக் காட்டுவது அதுதானே( வாழும்போதும் உயிர்ப்பை அதே கண்ணீர்தான் காட்டுகிறது).. கன்ணீர் நிச்ச்யம கட்டுபடுத்தி வைக்க வேண்டிய விடயம் அல்ல அதே நேரத்தில் ஒரு பொது இடத்தில காட்டப் பட வேண்டிய அவசியமும் இல்ல... கண்ணீர் அதை நாம் பகிர்ந்து கொள்ளும் தோள்களைப் பொறுத்து அர்த்தம் கொள்கிறது, மதிப்பும் பெறுகிறது...


  கட்டுரையின் கடைசியில் நீ பகிர்ந்து கொண்ட விடையங்கள் அனைத்தும் அருமை... இதில் ஒரு நீண்ட அழுகைக்குப் பின் நான் செய்வது ஒரு நீண்ட உறக்கம், அது மனதை புத்துணர்வு கொள்ளச் செய்யும்.

  //கண்ணீர் என்பது உண்மையிலேயே அற்புதமான விசயம்.அழுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால் முழுமையாய் அழுதுவிடுங்கள்.../// சரியாக சொன்னாய்... வாழ்த்துக்கள் தம்பி

  ReplyDelete
  Replies
  1. நன்றி அக்கா :) //பிறந்த குழந்தைகள் உயிர்ப்புடன் இருப்பதைக் காட்டுவது அதுதானே...// அக்கா நான் பிறக்கும் போது உயிர்ப்பு இல்லைனு சொல்றீங்களா :) :)
   //கண்ணீர் அதை நாம் பகிர்ந்து கொள்ளும் தோள்களைப் பொறுத்து அர்த்தம் கொள்கிறது, மதிப்பும் பெறுகிறது...// மிகச்சரி... அர்த்தமறியா நபர்கள் அழுவதை கேலியாகத்தான் பார்ப்பார்கள்...

   வாசிப்பிற்கும் ,வாழ்த்திற்கும் நன்றி அக்கா :)

   Delete
 9. கண்ணீரில் இவ்வளவு விழயம் இருக்கா என்று உங்கள் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன் இப்படி ஓர் நீண்ட பதிவிக்கு மிக்க நன்றி ,

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....