Monday, February 03, 2014

புத்தகக்குறிப்புகள் (3)

        சிற்பியே உன்னை செதுக்குகிறேன்

விதிவிலக்கில்லாமல் விதிகள் இல்லை
                              -வைரமுத்து

                     

  றிவுரைகள் அளிப்பதென்பதில் அனைவருக்கும் அலாதியானதொரு இன்பம் இருக்கிறது, அதேநேரத்தில் அறிவுரைகளுக்கு காது கொடுப்பதென்பது கசப்பானதொரு அனுபவமாக இருக்கிறது. அறிவுரைகளின் விசயத்தில் இப்படி, கொடுப்பதற்கும் ,பெறுவதற்கும் இடையே முரண்பாட்டுத்தனம் இருப்பது ஏன் !

 இதற்கு பின் ஒரு உளவியல் காரணம் மறைந்திருக்கிறது., அறிவுரைகளை  கூறும் போது கூறுகிற நபர் தன்னை ஒரு மகா அறிவாளியாகவும், கேட்பவரை விவரம் தெரியாதவர் என்பதாகவும் மனதிற்குள் ஒரு மனபிம்பம் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார், அதன் பின்பே அறிவுரைகளை அள்ளித்தெளிக்க ஆரம்பிக்கிறார். என்னதான் தெரிந்தவர், நெருக்கமானவர், உற்றார்,உறவினர் என அறிவுரை வழங்கினாலும் கூட தெரிந்தோ தெரியாமலோ இந்த காரணம் மறைந்திருந்து மர்மப்புன்னகை செய்கிறது,

அறிவு உரை கொடுப்பவர் அறிவாளியாக தன்னை நினைக்கிறார் என்றால் அதை வாங்கிக்கொள்பவர் கட்டாயம் அவரைவிட அறிவு குறைந்தவராக தன்னை நினைக்க முனைகிறார். இந்த நினைப்பிற்கும் நிதர்சனத்திற்கும் இடையேயான மோதல் அறிவுரைகளை யாரவது வழங்க வருகிற போது விலக்குவிசையாக செயல்பட்டு நம்மை அறிவுரை கூற வருகிறவரிடமிருந்த விலக செய்கிறது, "கேட்டே ஆக வேண்டிய" கட்டாயம் வந்ததென்றால் கவனத்தை வேறு திசையில் நகற்ற வழி வகுத்துக் கொடுக்கிறது.
இப்படியொரு அழுத்தமான காரணம் இருப்பதால் தான் நம்மில் பெரும்பாலானோருக்கு அறிவுரைகளை  கொடுக்கிற போது இருக்கிற சந்தோசம் , பெற்றுக்கொள்கிற போது இருப்பதில்லை. !

விதிவிலக்க்கில்லாத விதிகள் இல்லை என்ற விதிக்கு விளக்கமாக அறிவுரையின் பிறப்பிற்கு மூலமான அறிவாளி-முட்டாள் வியாக்கியானம் சில நேரங்களில், சில இடங்களில் ,சில நபர்கள் தரும் அறிவுரைகளுக்கு செல்லுபடியாகாமல் போகிறது., அக்கரை,அதீத அன்பு இப்படியான உன்னதமான காரணங்களின் காரணமாக தோன்றுகின்ற அறிவுரைகள் இந்த விதியிலிருந்து விதிவிலக்குப் பெறுகின்றன.,

"சிற்பியே உன்னை செதுக்குகிறேன்" புத்தகத்தை வெறும் அறிவுரைகளின் தொகுப்பு என்று சொல்லிவிடமுடியாது, வைரமுத்துவின் அனுபவங்களின் தெறிப்பில் விளைந்த ஞானத்தின் சாரம் இந்த புத்தகம், இது தன்னினமான இளையதலைமுறையினர் மீது கோபம் கொண்ட ஒரு இளைஞன் எழுதி போட்ட எழுத்துக்களின் பிரதி. வைரமுத்து இப்புத்தகத்தை எழுதி முதல் பிரதி பிரசுரமானபோது அவருக்கு 31 வயது !

முப்பதுகளை தொட்டுவிட்ட பருவத்தில் , தான் கடந்துவந்த இருபதுகளில் பெற்ற அனுபவங்களை ,இருபதை நோக்கிவரும் , இருபதுகளில் இருக்கும் இளையசமூகத்திற்கு பதிவு செய்து புத்தகமாக கொடுத்துள்ளார்.

".......இன்றைய சமூகம் இளைஞர்களின் தகுதிக்குறைவுகளைச் சுட்டிக்காட்டத் தயாராக இருக்கிறதே தவிர அவர்களை தகுதிப் படுத்தத் தயாராக இல்லை.
இளைஞனுக்கென்று ஒரு தனி முகமில்லை,இளைஞனுக்கென்று தனி நிறமில்லை,தாய் தந்தையர் அவன் தன் குலத்தின் நிறம் கொண்டவனாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்,அரசியல் வாதிகள் அவன் தன் கட்சி நிறம் கொண்டவனாய் இருந்தால் போதும் என்று எதிர்பார்க்கிறார்கள்., சித்திரை மாத்த்து ஓடை போல் நம்பிக்கை வற்றிப்போன இந்த காலத்து இளைஞர்கள் வாழ்க்கைக்கு வெளியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இன்றைய இளைஞர்கள் கொண்டிருக்கும் விரக்திக்கும் ஒரு வகையான கலாச்சார சீரழிவுக்கும் அவர்களது அவநம்பிக்கைக்கும் அவர்கள் மாத்திரமே காரணமல்லர் ,வேர்களில் புழு விழுந்தால் இலைகளின் மேலென்ன வழக்கு......... "

என்று வருத்தபட்டபடியே தன் வார்த்தைகளை உளிகளாக்கி ,வாசிப்பவனை செதுக்க முயற்சிக்கிறார்...

என்றென்றும் இருக்கும் இளைய தலைமுறைக்கு என்கிற சமர்ப்பணத்தோடு துவங்குகிறது புத்தகம்.

புத்தகத்தை நீங்கள் கையில் எடுத்து வாசிக்க ஆரம்பிக்கும் போது கவிதை மொழி கொண்டு , "கவனமாய் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை உளிகளால்" உருவாக்கப்பட்ட கடிதங்கள் மூலம் வைரமுத்து உங்களோடு உரையாடி உறவாட ஆரம்பிப்பார்...
இப்புத்தகம் மற்ற சுயமுன்னேற்ற நூல்களை போல அதை செய்,இதை செய் என்று உங்களுக்கு கட்டளைகள் இடப்போவதில்லை,தன் அறிவாளித்தனத்தை வெளிக்காட்டி அறிவுரைகளால் உங்களை வெறுப்பேற்றப் போவதில்லை., நம்மருகே வந்து நமக்காக நம்பிக்கையாக பேசும் ஒரு தோழனைப் போல தட்டிக்கொடுத்து,வலிக்காமல் அடித்து,சின்ன சின்ன கோபங்கள் கொண்டு நம்மோடு பேசுகிறது .

சிற்பியே உன்னை செதுக்குகிறேன் சில குறிப்புகள் :

                     
லட்சியம்,இலக்கு,உறவுமுறை சிக்கல்கள்,தலைமுறை இடைவெளிகள்,காதல்,காமம்,சோம்பல்,ஓய்வு,தடைகளை எதிர்கொள்ளும் பக்குவம்,மொழிப்பற்று,தேசம் என இளமைக்கு தேவையான தலைப்புகளில் முகவரி எழுதப்படாத கடிதங்கள் ,புத்தகம் முழுக்க கிடக்கின்றன...


19 அத்தியாயங்கள் கொண்ட குட்டிப் புத்தகம்!
வெளியான ஆண்டு : செப்டம்பர் 1985 
பதிப்பகம் :சூர்யா
இப்புத்தகத்தின் புதிய பதிப்பில் அவர் தன் மகன் "மதன் கார்க்கி" க்கு எழுதிய கடிதம் ஒன்றும், அவரது நான்கு இலக்கியப் பேச்சுக்களும் பதிப்பிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

புத்தகத்திலிருந்து சில வைர வரிகள்....

"நமது ரசனைதான் நமது கலாசாரம்.
நமது ரசனைதான் நமது அளவுகோல்.
புலங்களின் பசி நியாயமானது.
ஆனால் புலங்களின் பசி புலங்களையே தின்றுவிடுவது அநியாயமானது....."

" விபத்து என்பது மற்றவர்களை நாம் மீது மோதிவிடாமல் பார்த்துக்கொள்வது மட்டுமல்ல;நம் மீது மற்றவர்வர்கள் மோதிவிடாமல் காத்துக் கொள்வதுமாகும்... "

"முதுமை என்பது அனுபவங்கள் என்னும் நிலக்கரியை மட்டும் நிறையச் சேர்த்து வைத்திருக்கிறது ,நீயோ செயல்வீரம் என்னும் நெருப்பை மட்டும் நெஞ்சு நிறைய சேமித்து வைத்திருக்கிறாய். உனக்குள் அந்த அனுபவ நிலக்கரிகளை அள்ளிப் போட்டுக்கொள் அதனால் - உலகை வெல்லும் சக்தி உற்பத்தியாகும். "

பிற்குறிப்புகள்:

இந்த புத்தகத்தின் முதல் அத்யாயம் PDF வடிவில் (வாசிக்க அல்லது டவுன்லோடு செய்ய  க்ளிக் செய்யவும்)

வைரமுத்துப் பற்றிய ஷீஜூ சிதம்பரத்தின் இந்த பதிவு என்னை சிலிர்க்க வைத்தது  (சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் புத்தகத்தை ஷீஜு முழுதும் மனப்பாடம் செய்து வைத்திருப்பதாக சொல்கிறார் !!)

வாலிபத்தின் நதிக்கரையில் குழப்பத்தோடு நிற்கும் சகலருக்கும் வாழ்க்கை நதியில் வழுக்காமல் நடந்துபோக வழிசொல்லும் பெயர்பலகை, இந்த புத்தகம்.



Labels: , , ,

6 Comments:

At Mon Feb 03, 06:50:00 pm , Blogger Priya said...

நல்ல அறிமுகம் பதிப்பகம் பற்றிய குறிப்பினையும் சேர்த்திருந்தால் வாங்க நினைப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்...

 
At Mon Feb 03, 06:57:00 pm , Blogger திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைக்கு அறிவுரைக்கும் ஆலோசனைக்கும்... கேட்கத் தான் ஆளில்லை...!

நல்லதொரு சுருக்கமான விமர்சனம்... நன்று...

pdf இணைப்பிற்கு நன்றி...

 
At Mon Feb 03, 10:01:00 pm , Blogger Vijayan Durai said...

சூர்யா பதிப்பகம் ! பதிவில் பதிப்பகத்தின் பெயரை சொல்லிவிட்டேன் !

 
At Mon Feb 03, 10:03:00 pm , Blogger Vijayan Durai said...

நன்றி அண்ணா ! :)

 
At Thu Feb 06, 11:00:00 am , Blogger வெங்கட் நாகராஜ் said...

நல்ல அறிமுகம். வைரமுத்து அவர்களின் சில புத்தகங்கள் படித்ததுண்டு..... இந்தப் புத்தகத்தினையும் படிக்க வேண்டும்....

 
At Wed Feb 19, 03:26:00 pm , Blogger Jayaprakash said...

எனக்கு இது தான் முதன் அறிமுகம் வைரமுத்து பற்றிய குறிப்பு படிக்கிறேன் நன்றி அண்ணா ..... http://www.itjayaprakash.blogspot.com

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home