Tuesday, November 05, 2013

ஆயிஷா

புத்தகக் குறிப்புகள்-2



ஆயிஷா ...
இந்த சின்னப்பெண் என்னை  பலமாகவே அடித்திருந்தாள், அவளது அறிவால்,சிந்தனை வீச்சால்,கேள்விகளால்.

 பார்க்கும் எதையும் தன் அறிவுப் பார்வையால் துளைத்தெடுக்கும் அசாத்திய குழந்தை அவள்.,

 மாணவர்களின் சொந்த அறிவை, சிந்திக்கும் திறனை,கேள்வி கேட்கும் அறிவு தாகத்தை அவமானப்படுத்தி அமரவைக்கும் ஆசிரியர்களை நீங்கள் உங்கள் பள்ளிக்காலங்களில் சந்தித்திருக்கலாம், இன்றும் கூட மாணவர்கள் இப்படிப்பட்ட ஆசிரியர்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.(அதிர்ஷ்டவசமாக மாணவர்களின் மனம் புரிந்து,அவர்களின் அறிவை மதித்து அவர்களை சக உயிராக நடத்தும் சில நல்ல ஆசிரியர்கள் சிலருக்கு வாய்க்கிறார்கள்.)

ஆயிஷாவுக்கும் அப்படித்தான் பிரம்படி பிரயோகம் மூலம் அவளது அறிவாற்றலுக்கு அணை போடும் ஆசிரியைகள் தான் அவளுக்கு அதிகமாக வாய்த்திருந்தார்கள், கொடுமைக்கார ஆசிரியைகளுக்கு மத்தியில் அவளின் கேள்விகளுக்கு காது கொடுக்கவும்,அவள் வாங்கும் அடிகளுக்கு ஆறுதல் சொல்லவும்
ஆயிஷாவுக்கென்று ஆறுதலாக ஒரே ஒரு ஆசிரியை ,கிடைக்கிறார்... ஆயிஷாவை வாசிக்கிற நமக்கும் ஆறுதலாய்.,

 இந்த வீணாய்ப்போன கல்வி முறையை எனக்கு கொஞ்சம் கூட பிடித்ததே இல்லை, கதைப்புத்தகங்கள் போலவோ, இன்னபிற அறிவியல்,வரலாறு புத்தகங்கள் போலவோ பாட புத்தகங்கள் சுவரசியமாக ஏன் இருப்பதில்லை என என் பள்ளிக்காலங்களில் இந்த ஆயிஷாவைப் போலவே நானும் குழம்பியிருக்கிறேன், சில ஆங்கில புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து அர்த்தம் புரியாமல்,புத்தகத்தைவிட டிக்சனரியை அதிகமாக புரட்டிய நினைவுகள் என் நினைவில் இன்னமும் இருக்கின்றன.

  இரவல் அறிவை மூட்டைகட்டி சுமக்கவைத்து ,சிந்திக்கும் திறனை மழுங்கடித்து,மனப்பாடம் செய்து அப்படியே எழுதுபனுக்கு முழு மதிப்பெண் போட்டு,...
 இப்படியாக சிறகுகளை வெட்டிவிட்டு கயிறுகட்டி உயரத்தில் ஏற்ற முயலும் முட்டாள் தனங்கள் தான் நம் கல்விமுறையில் நிறைய இருக்கிறது. இந்த கல்விமுறையினால் படிப்பு என்பது வேலை வாங்குவதற்கான அத்தாட்சி பத்திரம் என்பதாகவே மாற்றப்பட்டிருக்கிறது.

 இந்த கதையின் ஒரு இடத்தில் அடி வாங்கிய தழும்புகளுடன் தனக்கு அதிர்ஷ்டவசமாக,ஆறுதலாக கிடைத்த அந்த அறிவியல் ஆசிரியையிடம் ஆயிஷா கேட்கிறாள்....
" மிஸ் இன்னைக்கு கெமிஸ்ட்ரி பேப்பர் கொடுத்தாங்க,மார்க் சரியா போடலையேனு கேட்டேன்... சொந்த சரக்குக்கெல்லாம் மார்க் கிடையாதாம்,நோட்ஸ்ல உள்ளத அப்படியே எழுதணுமாம்,நோட்ஸ்லயே தப்பா இருந்தா என்ன மிஸ் பண்றது."
இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் சிக்கி அடி வாங்கி,அடிவாங்கி வலி தாங்க முடியாமல் ,
 " அடிச்சா வலிக்காமல் இருக்க மருந்து இருக்கா மிஸ்" என்று ஆயிஷா கேட்கும் போது அவள் வாங்கிய அடிகளின் வலி நமக்குள்ளும் வலிக்கிறது !,

ஆயிஷாக் குட்டி வலிக்காமல் இருக்க மருந்து கண்டுபிடிக்கிறேன் என்று ஆய்வக ரசாயணங்களை கொண்டு தானே மருந்து செய்து தனக்குள் செலுத்திக்கொண்டு வலியின்றி செத்துப்போகிற போது இந்த கல்வி முறையை "பெட்ரோல் ஊற்றி கொழுத்தினால் என்ன" என்று எனக்குள் கோபம் கொப்பளிக்கிறது.

 ஒவ்வொரு முறை ஆயிஷாவை வாசிக்கும்போதும்... கடைசி சில பத்திகளை கடக்கிற போது துளி கண்ணீரால் எழுத்துக்களை மறைத்து விடுகிறது எனது விழிகள் .

 "புத்தக்குறிப்புகளில்" நான் நேசித்து வாசித்த புத்தகங்களில் முதலில் எந்த புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடலாம் என்று யோசித்திருந்தபோது, ஆயிஷா தான் என் முன் வந்து நின்றாள்.

 ஒரு விஞ்ஞான புத்தகத்திற்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்ற தலைப்புடன் ஆரம்பமாகிறது புத்தகம்.
 பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக்கொடுக்கும் எந்திரமாக இருக்கும் எண்ணற்ற ஆசிரியைகளில் ஒருத்தியாக இருந்த அந்த சராசரி ஆசிரியையை ,புத்தகம் எழுதும் அளவுக்கு மாற்றியிருக்கிறாள் ஆயிஷா.

 ஆங்கிலத்தில் வரும் அறிவியல் நூல்களை புரிந்துகொள்ள சிரமமாக இருக்கிறது, சில இடங்கள் புரிய மாட்டேன் என்கிறது.. தமிழில் அறிவியல் நூல்கள் வந்தால் நன்றாக இருக்கும், "மிஸ் நீங்க ஏன் இது மாதிரி அறிவியல் புத்தகங்களை தமிழில் எழுதக்கூடாது"  என்ற ஆயிஷாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக,
 தான் எழுதிய 12 அறிவியல் புத்தகங்களுக்காக தன்னை உருவாக்கிய  ஆயிஷாவின் அறிமுகத்தோடு அவர் எழுதிய முன்னுரையே "ஆயிஷா குறுநாவல்" (அதிகபட்சம் அரை மணியில் படித்துவிடமுடியும்).

 விஞ்ஞானமற்ற முறையில் விஞ்ஞானத்தை சொல்லிக்கொடுக்கும் நம்  மடத்தனம்,மாணவர்களின் அறிவுக்கு ஆசிரியர்கள் தரும் அவமானங்கள் மற்றும் அடிகள்,டியூசன் சம்பிரதாயம்,ஸ்டாப் ரூம் அரட்டைகள், என பள்ளிக்கூடங்களை பலிகூடங்களாக மாற்றி வைத்திருக்கும் இந்த கல்விமுறையினையும்,பெண் பிள்ளைகளுக்கான கல்வி பற்றிய நம்மவர்களின் கருத்துக்களையும் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளாள் ஆயிஷா !

 இந்த ஆயிஷா உங்கள் நினைவலைகளில் நீந்தி உங்களை பள்ளிக்காலம் நோக்கி அழைத்து செல்லக்கூடும், அவளது கேள்விகளால் நிறைந்த உலகத்தை உங்களுக்குக் காட்டி உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும், நீங்கள் சந்தித்த ஏதோ ஒரு ஆயிஷாவை உங்களுக்கு நினைவுபடுத்தக்கூடும்..

ஆயிஷா சில குறிப்புகள்:

இந்த ஆயிஷாவிற்கு சாகா வரமளித்தவர் ரா.நடராசன்  (புத்தகம் வெளியான ஆண்டு: ). இந்த குறுநாவலுக்குப்பின் இவர் பெயர்  "ஆயிஷா நடராஜன் " என்றே மாறிப்போகும் அளவுக்கு இவரை சகலருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்,இவர் அறிமுகப்படுத்தி வைத்த அந்த குட்டிப்பெண் ஆயிஷா.

இந்த புத்தகம் உலக அளவில் 8 மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ளது,பதினேழு பதிப்பகங்கள் ஆயிஷாவை புத்தகமாக செய்துள்ளன. 7 தன்னிகர் கல்லூரிகள்( Autonomous) ,மற்றும் 3 பல்கலைக்கழகங்களில் ஆயிஷா பாடப்புத்தகமாக்கப்படுள்ளாள், இந்த கதை குறும்படமாகவும் (short film)  எடுக்கப்பட்டுள்ளது . ஆசிரியர் பயிற்சி வகுப்புகளின் போது இந்த ஆயிஷா கதையும் ,குறும்படமும் பயிற்சி ஆசிரியர்களுக்கு பயிற்சியின் பகுதியாக இருக்கிறது.

சில கல்லூரி,பல்கலைகழகங்களில் ஆயிஷாவின் கதை பாடப்புத்தகமாக இருக்கிறது அல்லவா ! (என் தங்கையின் கல்லூரியிலும் ஆயிஷா பாடப்புத்தமாக இருக்கிறாள்.இந்த வாரம் பரிட்சையாம் !) இதை நினைக்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வருகிறது,கல்வி முறையின் குறைகளைச் சுட்டிக்காட்டி கல்வி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று உருவாக்கப்பட்ட "ஆயிஷா" வை பாடமாக்கி அவள் கதையை படித்து வரச்சொல்லி வற்புறுத்தி, பரிட்சை எழுத சொல்லி மதிப்பெண் போடும் இந்த மாதிரி ஐடியாவெல்லாம் எவன் தான் கண்டுபிடிச்சானோ !

பிற்குறிப்புகள்:

ஆயிஷா குறும்படம்:





இவரது வலைப்பூவில் ஆயிஷா மின்னூல் இலவச தரவிரக்கம் செய்துகொள்ளும் வகையில் கிடைக்கிறது.

Labels: , , , ,

22 Comments:

At Tue Nov 05, 08:38:00 pm , Blogger வெற்றிவேல் said...

நல்ல நூல் அறிமுகம்... புத்தகங்கள் பற்றி நிறைய எழுதுங்கள்... நல்ல பதிவு. நேரம் கிடைக்கும் போது ஆயிஷாவை வாசித்துவிட வேண்டியது தான்...

சிறந்த பதிவு... பாராட்டுகள் நண்பா...

 
At Tue Nov 05, 11:39:00 pm , Blogger Vijayan Durai said...

மிக்க நன்றி வெற்றி :)

 
At Wed Nov 06, 02:38:00 am , Blogger Seeni said...

arimukathirku nantri sako..!

 
At Wed Nov 06, 06:37:00 am , Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விமர்சனம் நன்று விஜயன். அரசு பள்ளியில் உள்ளவர்களுக்கு ஆயிஷாவைப் பற்றி தெரியும்.ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை மதிப்பெண் முறையிலான கல்வி ஆசிரியர்களுக்கு கொடுக்கப் படும் அழுத்தம் போன்றவை இதற்கு காரணமாக அமைகிறது.ஒன்று ஆசிரியர்கள் மிகக் கொடுமையானவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள்.அல்லது மிக உத்தம குணம் நிறைந்தவர்களாக காட்டப் படுகிறார்கள். இரண்டுமே நடைமுறையில் சாத்தியமில்லை.எனக்குத் தெரிந்து ஆசிரியர் பணியை விரும்பி வந்தவர்கள் மிகக் குறைவு.சராசரி மனிதர்களின் வேலை வாய்ப்பை அளிக்கும் தொழிலாக ஆசிரியர் பணிஇருந்து வருவதுதான் யதார்த்தம்.
மாற்றுக் கல்வி முறை சிறப்பாக அமையும் வரை இது தொடரவே செயும். விரிவாக விவாதிக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. இளைஞர்களிடத்தில் கல்வி முறை மாற்றம் பற்றிய சிந்தனை ஏற்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது.
வாழ்த்துக்கள் தொடரட்டும் நல்ல நாள்களின் அறிமுகம்

 
At Wed Nov 06, 07:49:00 am , Blogger ஜோதிஜி said...

இனிய பாராட்டு. குறும்படத்தை பகிர்ந்துள்ளேன்.

 
At Wed Nov 06, 07:53:00 am , Blogger வெங்கட் நாகராஜ் said...

நல்ல அறிமுகம் விஜயன். நிச்சயம் புத்தகத்தினை படிக்கிறேன். பக்கத்தினை புக்மார்க் செய்துவிட்டேன்....

 
At Thu Nov 07, 12:15:00 am , Blogger Jayaprakash said...

அருமையான புத்தக குறிப்பு அண்ணா ...இன்று தான் தெரிந்து கொண்டேன்

//மனப்பாடம் செய்து அப்படியே எழுதுபனுக்கு முழு மதிப்பெண் போட்டு,...//
பெரும்பாலும் இவை பெண்கள் தான் !!!!

இப்பவும் ஆயிஷா போல திறமையான நிறைய மாணவ ,மாணவி பள்ளி,கல்லூரிகளில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாரும் அழைப்பது 35007 தான்.



 
At Fri Nov 08, 07:29:00 am , Blogger Vijayan Durai said...

வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி சீனி அண்ணா

 
At Fri Nov 08, 07:35:00 am , Blogger Vijayan Durai said...

ஆம் சார், மதிப்பெண் முறையிலான கல்வி முறையில் ஆசிரியர்கள் மீது அரசு கொடுக்கும் அழுத்தத்தை அவர்கள் மாணவர்கள் மீது இடமாற்றம் செய்கிறார்கள், என்ன தான் ஒருவர் நல்ல ஆசிரியராக இருந்தாலும் சிலர் அவரையும் குறை சொல்வதற்கு இருப்பார்கள்..
மாற்றுக்கல்வி முறை பற்றி நீங்கள் உங்கள் கருத்துக்களை உங்கள் பிலாகில் பதிவாக பகிருங்கள் சார்,என் போன்ற மாணவர்களுக்கு அவை பயன்படும். கருத்துக்கு மிக்க நன்றி சார்

 
At Fri Nov 08, 07:46:00 am , Blogger Vijayan Durai said...

பாரட்டிற்கும், படப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி

 
At Fri Nov 08, 07:47:00 am , Blogger Vijayan Durai said...

மிக்க நன்றி வெங்கட் சார் ! ,கட்டாயம் படியுங்கள், ஆயிஷா காத்துக்கிடக்கிறாள் :)

 
At Fri Nov 08, 07:52:00 am , Blogger Vijayan Durai said...

அட ஆமாம் தம்பி ! மனப்பாட கேஸ்கள் தான் பெறும்பாலும் படிப்பாளிகள் அறிவாளிகள் என்றெல்லாம் பட்டம் வாங்குகிறார்கள்! 53007 ஆ? (LOOSE ?? ) என்ன தம்பி ! இப்படி சொல்லி விட்டாய், :) நம் பற்றி பிறரின் அபிப்ராயங்களில் சரியானவற்றையே மதிக்க வேண்டும் என்று ஆயிஷா மாதிரி மாணவர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன் ! (பிறர் கூறும் காலி அபிப்ராயங்களை மதிக்கக்கூடாது தம்பி ).

 
At Fri Nov 08, 03:56:00 pm , Blogger Jayaprakash said...

முதலில் என்னை மன்னிக்க வேண்டும் அண்ணா !!! தவறுக்கு

இப்பொழுது தான் புரிந்து கொண்டேன் ஆயிஷா அவர்களை போன்று மதித்து நடக்க வேண்டும் என்பதை .உங்கள் கருத்துகளுக்கு நன்றி ...<<<<<<<<<<<~~.~~~~~~~~~~~~~^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^~~~~~~~~~~~~~~~~>>>>>>>>>>>>>>>

 
At Sat Nov 09, 02:44:00 pm , Blogger சிவக்குமார் said...

நானும் படித்திருக்கிறேன் என்னையும் இந்நூல் உலுக்கி விட்டது. அனைவருக்கும் பரிந்துரைக்கத்தக்க சிறு அற்புதம் இந்த ஆயிஷா

 
At Sat Nov 09, 02:48:00 pm , Anonymous Anonymous said...

வணக்கம்
ஆயிஷாசாவின் புத்தகம் பற்றி எழுதிய விதம் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 
At Sun Nov 10, 08:55:00 pm , Blogger Priya said...

ஆயிஷா என்னையும் உலுக்கிப் போட்டாள்... அவளுடைய எஃஸ்பெரிமென்ட் சக்சஸ் மிஸ் என்ற வார்த்தையை படிக்கும் பொழுது என் பள்ளியின் கெமிஸ்ட்ரி லாப் கண் முன் வந்து சென்றது..இன்றிய ப்ள்ளிகளின் கல்வி முறை குறித்து முகத்தில் அறைந்து சொல்கிறாள் ஆயிஷா... இவளைப்போள் எத்தனை எத்தனை பேரோ அறியப்படாமல்.. ஒரு மேரி கியூரியைப் போல் இந்தியாவில் பெண் விஞ்ஞானிகள் ஏன் இல்லை மிஸ் என்ற ஆயிஷாவின் கேள்வி இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்குத் தொடர வேண்டுமோ தெரியவில்லை... :(

 
At Mon Nov 11, 09:00:00 am , Blogger Kanmani Rajan said...

எப்படி சொல்லனுமோ அப்படி சொல்லி இருக்கிங்க புத்தகத்தப் பத்தி, நன்றி.

 
At Mon Nov 11, 09:37:00 am , Blogger Kanmani Rajan said...

புத்தகத்தின் இணைப்பும் சேர்த்துக் கொடுத்ததற்கு நன்றி. படித்தேன். எனக்கு நான் பள்ளியில் புரியாமல் படித்தது நினைவிற்கு வந்தது. நல்ல வேளை, கல்லூரியில் எப்படிக் கேள்வி கேட்க வேண்டும், படிக்க வேண்டும் என்று புரிந்தது. இப்போது இருக்கும் பேராசிரியர்கள் அத்தனை அருமையாகச் சொல்லித் தருகிறார்கள். இதே போல சிறு வயதில் இருந்து படித்திருந்தால், இன்று நிறைய தெரிந்திருக்குமே என்று பல நேரம் யோசிப்பதுண்டு. பள்ளியில் புரியாமல் படித்த பல விஷயங்களை இப்போது, மீண்டும் நானாகப் படிக்கும் நிலை!

நல்ல புத்தகம், அறிமுகத்திற்கு நன்றி.. :)

 
At Mon Nov 11, 10:41:00 pm , Blogger Vijayan Durai said...

:) மிக்க நன்றி கண்மணி !

 
At Mon Nov 11, 10:50:00 pm , Blogger Vijayan Durai said...

மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குதல் என்பது நமக்கு சிறுவயதில் சொல்லித்தரப்படுகிறது,இதனால் புரிந்து படிப்பதைப் பற்றி நமக்கு புரிதல் வரவும், புரிந்து படிக்க புத்தி வரவும் தாமதம் ஏற்படுகிறது, சின்ன வயசிலேயே நம்ம கேள்விகளுக்கு மரியாதை கொடுக்க ஆரம்பிச்சாங்கன்னா !, ஆயிஷா வுக்கு கிடைச்ச டீச்சர் மாதிரி, தாமஸ் ஆல்வா எடிசனுக்கு கிடைத்த அம்மா மாதிரி யாராவது நமக்கு வாய்த்தால் ,புரிந்து படிப்பதை புரியும் வாய்ப்பு சிறு வயதிலேயே நமக்கு வாய்த்திருக்கக்கூடும் !. // சிறு வயதில் இருந்து படித்திருந்தால், இன்று நிறைய தெரிந்திருக்குமே என்று பல நேரம் யோசிப்பதுண்டு.// :)

 
At Mon Nov 11, 10:56:00 pm , Blogger Vijayan Durai said...

ஆயிஷாவை உடனுக்குடன் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கண்மணி :)

 
At Wed Nov 20, 08:35:00 am , Blogger Vijayan Durai said...

:(

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home