Monday, February 16, 2015

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைப்புத்தகமும் ஆமீர்கானின் PK திரைப்படமும்


புத்தகக் குறிப்புகள் (5)

ஆலாபனை

(அப்துல் ரகுமான் கவிதைப்புத்தகம்)

புத்தகம்: ஆலாபனை
ஆசிரியர்: கவிக்கோ அப்துல் ரகுமான்
பதிப்பகம்: கவிக்கோ பதிப்பகம்
முதல் பதிப்பு : பிப்ரவரி 1995

(முன் குறிப்பு: தலைப்பில் குறிப்பிடப் பட்டிருக்கும் விசயத்தை தேடி நீங்கள் இங்கு வந்திருப்பின் சிறிது ஸ்க்ரோல் செய்து குறிப்பு :3  PK என்ற தலைப்பிலிருந்து வாசிக்கலாம்)


புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கையை "குறைவு' என்று சொன்னால், அதில் கவிதை வாசிப்பவர்களின் எண்ணிக்கையை "மிகக்குறைவு" என்று சொல்லலாம்.. வேண்டுமானால் உங்கள் நண்பர்களில் புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கையையும், அதில் கவிதைப் புத்தகங்களை  வாசிப்பவர்கள் எண்ணிக்கையையும் ஒரு ஒப்பீடு செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.

கட்டுரைகள், கதைகளைவிட விட கவிதைகள் எளிமையானவை, அதே சமயம் வீரியமானவையும் கூட என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்,  காரணம் வளவள கொழகொழவென்று வார்த்தைகளை வளர்த்துச்செல்லாமல் நச்சென்று சொல்லவந்த்தை சொல்லிச்செல்லும் சொல்வன்மை அதில் இருக்கும். சில சமயங்களில் வார்த்தைகள் மூலம் வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றை சொல்லும் வாக்கு சாதூர்யமும், வல்லமையும் அவற்றில்  எட்டிப் பார்க்கும்.

****************

கவிதைகளை பாடல் வரிகளிலும், வார இதழ்களிலும் மட்டுமே கேட்டும், வாசித்தும் ரசித்துக்கொண்டிருந்த எனக்கு முதன்முதலில் முழுத்தொகுப்பாக கிடைத்த கவிதைப் புத்தகம் "கவிக்கோ. அப்துல் ரகுமான் எழுதிய ஆலாபனை".  "அட!! கவிதைகளை கையில் எடுத்துக்கொண்டு இப்படியும் வித்தை காட்ட முடியுமா?" என என்னை முதன்முதலில் யோசிக்க வைத்தன அதிலிருந்த கவிதைகள். 

பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த கதையிது , எங்கள் பள்ளிக்கூடத்தில் ஏதோ ஆண்டுவிழா நிகழ்த்த இருப்பதாகவும் , மாணவர்கள் அதில் நடனம், நாடகம் என நிகழ்ச்சிகள் செய்யலாம் என்றும் ஆசிரியர்கள் கூறியதற்கிணங்க நாங்கள் நான்கு நண்பர்கள் நடன அரங்கேற்றம் செய்ய முடிவெடுத்தோம்,. அவ்வப்போது இட வசதி தோது பார்த்து நண்பர்கள் வீட்டில் மாறி மாறி  நடனப் பயிற்சி செய்து கொண்டோம்., ஒருமுறை நண்பன் ஒருவன் தங்கள் வீட்டில் அம்மா, அக்காவெல்லாம் வெளியூர் செல்ல இருப்பதாக கூறி இந்த ஞாயிற்றுக்கிழமை அவனது வீட்டில் நடனப்பயிற்சி வைத்துக்கொள்ளலாம் என்றும் சொன்னான். (அவனது அம்மா எங்கள் பள்ளிக்கூடத்தில் தான் ஆசிரியையாக பணிசெய்துகொண்டிருந்தார்.)

 அந்தவார ஞாயிற்றுக்கிழமை நண்பனின் வீட்டில் காத்துக்கொண்டிருந்தோம் , இன்னும் ஒரு நண்பனின் வருகைக்காக .. , சில நிமிடங்கள் கழிந்தபிறகு கையில் இரண்டு குறுந்தகடுடன் (சி.டி) அறைக்குள் நுழைந்தான், அதில் ஒன்று நாங்கள் பயிற்சி செய்யும் நடனப் பாடல் இருந்த சி.டி..

இன்னொன்று..

"என்ன சி.டி. டா இது !" என்றேன்

சி.டி கொண்டுவந்திருந்த நண்பன் எங்களைப் பார்த்து மெல்ல புன்னகைத்தான்,

"டேய் எங்க வீட்ல இதெல்லாம் பார்க்க வேண்டாம் டா" என்று சி.டியை போட விடாமல் வீட்டுக்காரப்பையன் (வீ.பை) தடுக்க. கதவை சார்த்திக்கொண்டோம்.

பவர் கட் !!!

"ச்ச !! "

"வாங்கடா டான்ஸ் ப்ராக்டீஸ் பண்ணலாம்" என்றான் வீ.பை.

"பாட்டு வேணாமா "

"ச்சும்மா ஸ்டெப்ஸ் மட்டும் போடுவோம்"

"ம்"..

சில நிமிடங்களில் நடனப் பயிற்சி முடித்துவிட்டு  அறையில் அமர்ந்தோம், இன்னும் மின்சாரம் வந்திருக்கவில்லை.

நான் பக்கத்திலிருந்த அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்த்ததும் , அவற்றின் ஈர்ப்பில் இழுக்கப்பட்டு அவற்றைப் பார்க்க கிழம்பிவிட்டேன், நண்பர்கள் மூவரும் அறையில் அமர்ந்திருக்க நான் மட்டும்  அலமாரியை துழாவிக்கொண்டிருந்தேன்.

"டேய் சங்கர், இதெல்லாம் உங்க அம்மாவோட புக்ஸா" என்றேன்

“ஆமாம்”  என்றான்.

கண்ணதாசன் பாடல்கள் அத்தனை தொகுதியும் இருந்தது, திருக்குறள், சமையல் புத்தகங்கள்.... சில பல புத்தகங்களை கடந்த பிறகு "ஆலாபனை" புத்தகத்தை கையில் எடுத்தேன், முதலில் நான் அதை கையிலெடுக்க காரணம் அதன் அட்டைப்படம், புத்தகத்தை எடுத்து திறந்தேன், எங்கள் பள்ளிக்கூட Seal முத்திரை இருந்தது, (அது எங்கள் பள்ளி நூலக புத்தகம்). அதை எடுத்து வந்து அறையில் அமர்ந்து சில பக்கங்களை வாசித்தேன்.

தினத்தந்தி குடும்ப மலரில் வாசகர்கள் எழுதும் கவிதைகளையும், நண்பர்களின் டி.ஆர் ஸ்டைல் அடுக்குமொழிகளையும் மட்டுமே கவிதை என்று நம்பிக்கொண்டிருந்த எனக்கு அந்த கவிதைத்தொகுப்பு ஆச்சர்யமாக இருந்தது "அட !! இப்படியும் கூட கவிதை எழுத முடியுமா" என நினைத்துக்கொண்டேன்.

மின்சாரம் வந்த மாதிரி தெரியவில்லை, மதியானமும், பசியும் தான் வந்தது, கொஞ்ச நேரம் அரட்டை அடித்துவிட்டு , மின்சாரத்தை சபித்துவிட்டு , நண்பன் ராசிக் சி.டி யை கையில் எடுத்துக்கொள்ள நண்பர்கள் மூவரும் விடைபெற்றோம்.

"டேய் ராசிக் சாய்ங்காலம் ப்ராக்டீஸ் வரனுமா" என்றேன் நான்

"இல்லை வேண்டாம்.." என சொல்லியபடி சட்டையை தூக்கிக்கொண்டு சி.டி யை வயிற்றில் செருகிக்கொண்டான் .

நான் என் சட்டைக்குள்ளாக வயிற்றுக்குள் செருகிக்கொண்ட "ஆலாபனை" புத்தகத்தை தொட்டுப்பார்த்துக்கொண்டேன்.

****************
குறிப்பு :3  PK
----------------------

சமீபத்தில் ஹிந்தியில் PK என்றொரு திரைப்படம் வெளியாகியிர்ந்தது, அதில் கடவுளுக்கு நாம் அளிக்கும் தகவல்கள் ராங்க் நம்பருக்கு செல்லுவதாகவும் ,அதனால் தான் கடவுள் அவற்றை செவிசாய்த்து கேட்டு நமக்கு உதவுவதில்லை என்றும், சரியான எண்ணிற்கு தகவல் சொன்னால் கடவுள் நமக்கு உதவுவார் என்றும் ஒரு வசனம் அமீர்கான் பேசுவதாக அமைக்கப்பட்டிருக்கும்.

அந்த வசனத்தை நான் கேட்டதும் என் நினைவில் என்றோ ஒருநாள் நான் ஆலாபனை புத்தகத்தில் வாசித்த "தவறான எண்" என்ற அந்த கவிதை நினைவிற்கு வந்தது..

"
தற்செயலாய் ஒரு நாள் தொலைபேசி அழைப்பொன்றில் கடவுள் பேசுகிறார்...

கடவுளோடு தொலைபேசியில் உரையாடுவதாக கவிதை துவங்குகிறது, கவிக்கோ கடவுளிடம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகிறார்...

பதிலேதும் கொடுக்காமல் அமைதியாகவே இருக்கிறது பரம்பொருள்..

மேலும் மேலும் கேள்விகளை கேட்டுக்கொண்டே சொல்கிறார்...

கடுப்பாகிப்போன கடவுள் “ராங்க் நம்பர்” என்று பதில் சொல்லி அழைப்பைத் துண்டித்துவிடுவதாக கவிதை முடிகிறது.

"
****************

தனக்கு தமிழ் சொல்லிக்கொடுத்த ஔவை.சு.துரைசாமி அவர்களுக்கு புத்தகத்தை சமர்ப்பணம் செய்து கவிசொல்ல துவங்குகிறார் கவிக்கோ.

ஆலாபனை புத்தகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமானின் 42 வசன கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன, இக்கவிதைகள் கவிஞர் அவர்களால் வெவ்வேறு காலகட்டத்தில் பாக்யா இதழில் எழுதப்பட்டவை. ஒவ்வொரு கவிதையையும் மணியன் செல்வம் தனது கோட்டோவியங்களால் அலங்கரித்திருக்கிறார்.

இந்த புத்தகத்திற்கு 1999 ஆம் ஆண்டில் தமிழ் மொழிக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.


புத்தகம்: ஆலாபனை
ஆசிரியர்: கவிக்கோ அப்துல் ரகுமான்
பதிப்பகம்: கவிக்கோ பதிப்பகம்
முதல் பதிப்பு : பிப்ரவரி 1995

****************

பின் குறிப்புகள்
---------------------------









Labels: , , ,

Tuesday, November 05, 2013

ஆயிஷா

புத்தகக் குறிப்புகள்-2



ஆயிஷா ...
இந்த சின்னப்பெண் என்னை  பலமாகவே அடித்திருந்தாள், அவளது அறிவால்,சிந்தனை வீச்சால்,கேள்விகளால்.

 பார்க்கும் எதையும் தன் அறிவுப் பார்வையால் துளைத்தெடுக்கும் அசாத்திய குழந்தை அவள்.,

 மாணவர்களின் சொந்த அறிவை, சிந்திக்கும் திறனை,கேள்வி கேட்கும் அறிவு தாகத்தை அவமானப்படுத்தி அமரவைக்கும் ஆசிரியர்களை நீங்கள் உங்கள் பள்ளிக்காலங்களில் சந்தித்திருக்கலாம், இன்றும் கூட மாணவர்கள் இப்படிப்பட்ட ஆசிரியர்களை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.(அதிர்ஷ்டவசமாக மாணவர்களின் மனம் புரிந்து,அவர்களின் அறிவை மதித்து அவர்களை சக உயிராக நடத்தும் சில நல்ல ஆசிரியர்கள் சிலருக்கு வாய்க்கிறார்கள்.)

ஆயிஷாவுக்கும் அப்படித்தான் பிரம்படி பிரயோகம் மூலம் அவளது அறிவாற்றலுக்கு அணை போடும் ஆசிரியைகள் தான் அவளுக்கு அதிகமாக வாய்த்திருந்தார்கள், கொடுமைக்கார ஆசிரியைகளுக்கு மத்தியில் அவளின் கேள்விகளுக்கு காது கொடுக்கவும்,அவள் வாங்கும் அடிகளுக்கு ஆறுதல் சொல்லவும்
ஆயிஷாவுக்கென்று ஆறுதலாக ஒரே ஒரு ஆசிரியை ,கிடைக்கிறார்... ஆயிஷாவை வாசிக்கிற நமக்கும் ஆறுதலாய்.,

 இந்த வீணாய்ப்போன கல்வி முறையை எனக்கு கொஞ்சம் கூட பிடித்ததே இல்லை, கதைப்புத்தகங்கள் போலவோ, இன்னபிற அறிவியல்,வரலாறு புத்தகங்கள் போலவோ பாட புத்தகங்கள் சுவரசியமாக ஏன் இருப்பதில்லை என என் பள்ளிக்காலங்களில் இந்த ஆயிஷாவைப் போலவே நானும் குழம்பியிருக்கிறேன், சில ஆங்கில புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து அர்த்தம் புரியாமல்,புத்தகத்தைவிட டிக்சனரியை அதிகமாக புரட்டிய நினைவுகள் என் நினைவில் இன்னமும் இருக்கின்றன.

  இரவல் அறிவை மூட்டைகட்டி சுமக்கவைத்து ,சிந்திக்கும் திறனை மழுங்கடித்து,மனப்பாடம் செய்து அப்படியே எழுதுபனுக்கு முழு மதிப்பெண் போட்டு,...
 இப்படியாக சிறகுகளை வெட்டிவிட்டு கயிறுகட்டி உயரத்தில் ஏற்ற முயலும் முட்டாள் தனங்கள் தான் நம் கல்விமுறையில் நிறைய இருக்கிறது. இந்த கல்விமுறையினால் படிப்பு என்பது வேலை வாங்குவதற்கான அத்தாட்சி பத்திரம் என்பதாகவே மாற்றப்பட்டிருக்கிறது.

 இந்த கதையின் ஒரு இடத்தில் அடி வாங்கிய தழும்புகளுடன் தனக்கு அதிர்ஷ்டவசமாக,ஆறுதலாக கிடைத்த அந்த அறிவியல் ஆசிரியையிடம் ஆயிஷா கேட்கிறாள்....
" மிஸ் இன்னைக்கு கெமிஸ்ட்ரி பேப்பர் கொடுத்தாங்க,மார்க் சரியா போடலையேனு கேட்டேன்... சொந்த சரக்குக்கெல்லாம் மார்க் கிடையாதாம்,நோட்ஸ்ல உள்ளத அப்படியே எழுதணுமாம்,நோட்ஸ்லயே தப்பா இருந்தா என்ன மிஸ் பண்றது."
இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் சிக்கி அடி வாங்கி,அடிவாங்கி வலி தாங்க முடியாமல் ,
 " அடிச்சா வலிக்காமல் இருக்க மருந்து இருக்கா மிஸ்" என்று ஆயிஷா கேட்கும் போது அவள் வாங்கிய அடிகளின் வலி நமக்குள்ளும் வலிக்கிறது !,

ஆயிஷாக் குட்டி வலிக்காமல் இருக்க மருந்து கண்டுபிடிக்கிறேன் என்று ஆய்வக ரசாயணங்களை கொண்டு தானே மருந்து செய்து தனக்குள் செலுத்திக்கொண்டு வலியின்றி செத்துப்போகிற போது இந்த கல்வி முறையை "பெட்ரோல் ஊற்றி கொழுத்தினால் என்ன" என்று எனக்குள் கோபம் கொப்பளிக்கிறது.

 ஒவ்வொரு முறை ஆயிஷாவை வாசிக்கும்போதும்... கடைசி சில பத்திகளை கடக்கிற போது துளி கண்ணீரால் எழுத்துக்களை மறைத்து விடுகிறது எனது விழிகள் .

 "புத்தக்குறிப்புகளில்" நான் நேசித்து வாசித்த புத்தகங்களில் முதலில் எந்த புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடலாம் என்று யோசித்திருந்தபோது, ஆயிஷா தான் என் முன் வந்து நின்றாள்.

 ஒரு விஞ்ஞான புத்தகத்திற்கு அதன் ஆசிரியை எழுதிய முன்னுரை என்ற தலைப்புடன் ஆரம்பமாகிறது புத்தகம்.
 பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக்கொடுக்கும் எந்திரமாக இருக்கும் எண்ணற்ற ஆசிரியைகளில் ஒருத்தியாக இருந்த அந்த சராசரி ஆசிரியையை ,புத்தகம் எழுதும் அளவுக்கு மாற்றியிருக்கிறாள் ஆயிஷா.

 ஆங்கிலத்தில் வரும் அறிவியல் நூல்களை புரிந்துகொள்ள சிரமமாக இருக்கிறது, சில இடங்கள் புரிய மாட்டேன் என்கிறது.. தமிழில் அறிவியல் நூல்கள் வந்தால் நன்றாக இருக்கும், "மிஸ் நீங்க ஏன் இது மாதிரி அறிவியல் புத்தகங்களை தமிழில் எழுதக்கூடாது"  என்ற ஆயிஷாவின் ஆசையை நிறைவேற்றும் விதமாக,
 தான் எழுதிய 12 அறிவியல் புத்தகங்களுக்காக தன்னை உருவாக்கிய  ஆயிஷாவின் அறிமுகத்தோடு அவர் எழுதிய முன்னுரையே "ஆயிஷா குறுநாவல்" (அதிகபட்சம் அரை மணியில் படித்துவிடமுடியும்).

 விஞ்ஞானமற்ற முறையில் விஞ்ஞானத்தை சொல்லிக்கொடுக்கும் நம்  மடத்தனம்,மாணவர்களின் அறிவுக்கு ஆசிரியர்கள் தரும் அவமானங்கள் மற்றும் அடிகள்,டியூசன் சம்பிரதாயம்,ஸ்டாப் ரூம் அரட்டைகள், என பள்ளிக்கூடங்களை பலிகூடங்களாக மாற்றி வைத்திருக்கும் இந்த கல்விமுறையினையும்,பெண் பிள்ளைகளுக்கான கல்வி பற்றிய நம்மவர்களின் கருத்துக்களையும் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளாள் ஆயிஷா !

 இந்த ஆயிஷா உங்கள் நினைவலைகளில் நீந்தி உங்களை பள்ளிக்காலம் நோக்கி அழைத்து செல்லக்கூடும், அவளது கேள்விகளால் நிறைந்த உலகத்தை உங்களுக்குக் காட்டி உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும், நீங்கள் சந்தித்த ஏதோ ஒரு ஆயிஷாவை உங்களுக்கு நினைவுபடுத்தக்கூடும்..

ஆயிஷா சில குறிப்புகள்:

இந்த ஆயிஷாவிற்கு சாகா வரமளித்தவர் ரா.நடராசன்  (புத்தகம் வெளியான ஆண்டு: ). இந்த குறுநாவலுக்குப்பின் இவர் பெயர்  "ஆயிஷா நடராஜன் " என்றே மாறிப்போகும் அளவுக்கு இவரை சகலருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்,இவர் அறிமுகப்படுத்தி வைத்த அந்த குட்டிப்பெண் ஆயிஷா.

இந்த புத்தகம் உலக அளவில் 8 மொழிகளில் மொழியாக்கப்பட்டுள்ளது,பதினேழு பதிப்பகங்கள் ஆயிஷாவை புத்தகமாக செய்துள்ளன. 7 தன்னிகர் கல்லூரிகள்( Autonomous) ,மற்றும் 3 பல்கலைக்கழகங்களில் ஆயிஷா பாடப்புத்தகமாக்கப்படுள்ளாள், இந்த கதை குறும்படமாகவும் (short film)  எடுக்கப்பட்டுள்ளது . ஆசிரியர் பயிற்சி வகுப்புகளின் போது இந்த ஆயிஷா கதையும் ,குறும்படமும் பயிற்சி ஆசிரியர்களுக்கு பயிற்சியின் பகுதியாக இருக்கிறது.

சில கல்லூரி,பல்கலைகழகங்களில் ஆயிஷாவின் கதை பாடப்புத்தகமாக இருக்கிறது அல்லவா ! (என் தங்கையின் கல்லூரியிலும் ஆயிஷா பாடப்புத்தமாக இருக்கிறாள்.இந்த வாரம் பரிட்சையாம் !) இதை நினைக்கும்போது எனக்கு சிரிப்புத்தான் வருகிறது,கல்வி முறையின் குறைகளைச் சுட்டிக்காட்டி கல்வி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று உருவாக்கப்பட்ட "ஆயிஷா" வை பாடமாக்கி அவள் கதையை படித்து வரச்சொல்லி வற்புறுத்தி, பரிட்சை எழுத சொல்லி மதிப்பெண் போடும் இந்த மாதிரி ஐடியாவெல்லாம் எவன் தான் கண்டுபிடிச்சானோ !

பிற்குறிப்புகள்:

ஆயிஷா குறும்படம்:





இவரது வலைப்பூவில் ஆயிஷா மின்னூல் இலவச தரவிரக்கம் செய்துகொள்ளும் வகையில் கிடைக்கிறது.

Labels: , , , ,