Sunday, December 24, 2017

மின்னணுவியல் நுட்பங்கள் - 4


அத்தியாயம் 0 

எலக்ட்ரானைத் தேடி ...

1600-ல் பியர்ரி கஸாண்டி (Pierre Gassendi) என்ற பிரெஞ்சு அறிஞர் லுக்ரடியஸின் “பொருட்களின் இயல்நிலை பற்றி” என்கிற கவிதைத்தொகுப்பை வாசித்துவிட்டு  அணு பற்றிய கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்படுகிறார்., அதுபற்றி அதிதீவிரமாக யோசிக்கிறார்.,

  • அணுக்களே, நம் அகிலத்தின் விதைகள்.
  • பொருட்களின் உருவாக்கம் , சிதைவு, உருமாற்றம் மற்றும் அதன் அழிவு என்பதெல்லாம் அணுக்களின் இணைவு மற்றும் தளர்வின் காரணமாகவே ஏற்படுகிறது, 
  • அணுக்கள் நகரும், சத்தம் என்பது அணுக்களின் நகர்வினாலேயே ஏற்படுகிறது.
  •  காற்று அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் காற்று அணுக்கள் நெருக்கம் அடைவது தான் .. 
என்றெல்லாம் இவர் அணு பற்றி மேலும் சில புதிய சிந்தனைகளை சொல்லி வைக்கிறார்,

அணுவைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதை ஆராய்ச்சி செய்து மட்டும் தான் அறிந்து கொள்ள முடியும் என இவர் கூறிய கருத்து அணு என்கிற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?, அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது என அவர் காலத்திய அறிவு ஜீவிகள் பலரை யோசிக்க வைத்தது.

 அணு பற்றிய ஆராய்ச்சி என்கிற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தியதாலோ என்னவோ! இவரை நவீன அணுவியல் கொள்கையின் தந்தை என அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள்.


 இந்திய அணுக்கொள்கை : கி.மு 600 களில் இந்தியாவில் ஆச்சார்யர் கனத் என்றழைக்கப்பட்ட கஷ்யப முனிவர் தனது வைஷேசிக சூத்திரம் என்கிற புத்தகத்தில் “ உலகில் உள்ள அனைத்தும் அணு என்கிற கண்ணுக்கேத் தெரியாத துகளால் உருவானவை, அவை ஒன்றோடொன்று இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகிறது”, என்று கிரேக்க அறிஞர்கள் அணு பற்றி யோசிப்பதற்கு முன்னரே குறிப்பிட்டு இருக்கிறார். (இந்த நூல் கி.மு.648-ல் யுவான்சுவாங்க்- ஆல் சீன மொழியில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டிருக்கிறது,) ஆனால் அணு பற்றிய இந்திய`க் கருத்துக்கள் உலகம் முழுக்க பரவிட வில்லை, அதேசமயம் நம் பழங்கால இந்திய அறிவு புற உலகம் சார்ந்து விஞ்ஞானமாக விரியாமல் அக உலகம் சார்ந்து யோகம்,தியானம் என்று மெய்ஞானமாக மலர்ந்திருக்கிறது..
                           
                             ***************************
           
அணு பற்றிய ஆராய்ச்சிகள்:


பியர்ரி கஸாண்டியின் கருத்துக்களை  அடிப்படையாகக் கொண்டு அணு என்னும் வஸ்து இருக்கிறதா என்று 1662-ல் ராபர்ட் பாய்ல் எனும் வேதியியல் விஞ்ஞானி  ஆராய்ச்சி செய்கிறார். முதன் முதலில் அணுவின் இருப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர் இவரே ! 

அவர் எப்படி , எதை வைத்து , என்ன ஆராய்ச்சி செய்தார் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னர்,  ஆராய்ச்சி செய்வது என்பதைப் பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ளலாம், 

ஆராய்ச்சி செய்வது எப்படி?

அறிவியல் உலகம் ஆராய்ச்சி செய்து முடிவுகளை கண்டறிய நான்கு படிநிலைகளைக் கொண்ட ஒரு வழிமுறையை வகுத்துள்ளது.,


  1. கவனித்தல் & தகவல் சேகரிப்பு : நிகழும் ஒரு விஷயத்தை உற்று நோக்கி , அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும், பின் அதுசார்ந்த தகவல்களை புத்தகங்கள், அதைப் பற்றிய முந்தைய ஆராய்ச்சிக் குறிப்புகள், வல்லுநர்களின் பதில்கள் , என எப்படியெல்லாம் சேகரிக்க முடியுமோ அப்படியெல்லாம் முயன்று போதுமான வகையில்   சேகரித்துக்கொள்ள வேண்டும் . ராபர்ட் பாய்ல் அவருக்கு முந்தைய அறிவியலாளர்கள் அணு பற்றி கூறின அத்தனை தகவல்களையும் திரட்டிக்கொண்டார்.
  2. கருத்துரு உருவாக்குதல்: அதன்பின் நமது ஆராய்ச்சியின் பலனாக என்னக் கிடைக்கப்போகிறது என்பதை ஒரு கருத்துருவாக உருவாக்க வேண்டும், ஆங்கிலத்தில் இதை Hypothesis என்கிறார்கள் .  இந்த கருத்துருக்கள் உண்மையா? அல்லது பொய்யா ?என்பதை கண்டறிவதே ஆராய்ச்சியின் நோக்கம்.
  3. சோதனை: இது தான் முக்கியமான படிநிலை,  அதாவது நாம் உருவாக்கி வைத்திருக்கும் Hypothesis  உண்மையா , பொய்யா என கண்டறியும் வழிமுறை. என்ன செய்ய வேண்டும் ,எப்படி செய்ய வேண்டும் எத்தனை முறை சோதனை செய்ய வேண்டும், என்பவைகளையெல்லாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். , சோதனைகள் செய்தல், சோதனை முடிவுகளை பட்டியலிடுதல் பொன்ற செயல்பாடுகள்  இந்த நிலையின் கீழ் வருகின்றன.
  4.   சோதனை முடிவு: ஆராய்ச்சி ,நமக்குதோன்றின கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறதா, நாம் கற்பிதம் செய்து கொண்ட Hypothesis சரியா ? , ஆராய்ச்சியின் பலனாக வேறு ஏதாவது புதிய விஷயங்கள் கிடைத்துள்ளனவா என்று ஒரு முடிவுக்கு வருதல்.
ராபர்ட் பாய்லின் ஆராய்ச்சி: 
ராபர்ட் பாய்ல்
ராபர்ட் பாயில்  தனது ஆரய்ச்சிக்கு  எடுத்துக்கொண்ட  Hypothesis கள் : 

1)காற்று என்பது அணுக்களால் ஆனது
2)காற்று அணுக்களால் ஆனது என்று நிரூபணம் செய்தால் அணுவின் இருப்பு உண்மை .

இந்த ஆராய்ச்சிக்கு ராபர்ட் பாய்ல்  எடுத்துக்கொண்டது  5மீட்டர் நீளமுள்ள  ஒரு  J வடிவ குழாய் அதன், மேல்முனை திறந்த நிலையிலும், கீழ்முனை அடைக்கப்பட்டும்  இருந்தது. மேல்முனை வழியே  திரவ நிலை உலோகமான பாதரசத்தை ஊற்றினார்.

ஊற்றப்பட்ட பாதரசம் படத்தில் காட்டப்பட்டிருப்பது மாதிரி , J  வடிவ  குழலினுள் சிறிது காற்று வெளியை விட்டுவிட்டு நிரம்பிக் கொண்டது,  பிறகு அவர்  இன்னும் கொஞ்சம் பாதரசத்தை ஊற்றினார் , இப்போது காற்று மேலும் அழுத்தப்பட்டது, பாதரசத்தை ஊற்ற ஊற்ற காற்று இன்னும் இன்னும் அழுத்தப்படுவதை பாய்ல் கவனிக்கிறார்.

பாயிலின் பரிசோதனை

எந்த விகிதத்தில் அதாவது இத்தனை எடை பாதரசம் ஊற்றும் போது, இத்தனை இன்ச் அளவு காற்று அழுத்தப்படுகிறது என்பதை  ஒவ்வொரு முறையும்  குறிப்பெடுத்துக்கொள்கிறார்,  (அழுத்தமும், அளவும் நேர்விகிதத்தில் இருக்கிறது, இவ்விரணடின் பெருக்கற்பலன் மாறிலி என பாய்ல் சொன்ன, இந்த விதி  பாய்லின் விதி என்று அழைக்கப்படுகிறது.)

எப்படி காற்று அழுத்தப்பட்டது ? , சிறிய வெளிக்குள் அது எப்படி பொருந்திக்கொண்டது ? என்றெல்லாம் பாய்ல் யோசித்து ஒரு லாஜிக்கல் முடிவுக்கு வருகிறார். ஒரு பஞ்சை அழுத்தும் போது அது சிறியதாக சுருங்குகிறது,அதேமாதிரி  ஒரு பிரெட்டை அழுத்தும்போது அது சிறியதாக சுருங்குகிறது., ஏனென்றால் அவற்றில் சிறு சிறு துளைகள் கொண்ட இடைவெளிகளுடன் கூடிய அமைப்பு  இருக்கிறது. அழுத்தும்போது அவைகளின் சிறுசிறு துளை இடைவெளிகளில் இருக்கும் காற்று வெளியேறி பஞ்சின் பகுதிகள் அல்லது பிரெட்டின் பகுதிகள் நெருங்கி வருகின்றன.

 காற்றை அழுத்தும் போதும் இதே மாதிரியான ஒரு விஷயம் தான் நிகழ்ந்திருக்க முடியும் , அதாவது காற்றில் உள்ள அணுக்கள் அதிக இடைவெளிகள் கொண்டவை, அவற்றை அழுத்தும் போது, நெருக்கும்போது  அவை அந்த இடைவெளிகளை மீறி நெருங்கி வருகின்றன. ஆக காற்றும் சிறு சிறு அணுக்களால் ஆனவை தான் , ஆக அணு என்கிற ஒன்று நிச்சயம் கற்பனை வாதம் கிடையாது, அப்படி ஒன்று சர்வ நிச்சயமாக இருக்கிறது என  தன் ஆய்வு  முடிவை  உலகுக்கு உரைக்கிறார்.

இடைவெளிகளுடன் காற்றணுக்கள்: அழுத்தம்=நெருக்கம்


அணு பற்றிய  இன்னபிற முக்கியமான ஆராய்ச்சிகளையும் , எலக்ட்ரான் எப்படி கண்டறியப்பட்டது என்பது பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்...


                                                                                                                            -----அறிவோம்...

 

Post Comment

Monday, December 11, 2017

பாரதி தின பிரார்த்தனைகள் !

பிரார்த்தனைகள்:

கடவுளுக்கு சக்தி இருக்கிறதோ !இல்லையோ!, கடவுளைவிட , நாம் வேண்டும் பிரார்த்தனைகளுக்கு பல மடங்கு சக்தி உண்டு  ! இங்கு, இப்போது, இந்நிலையில், எனக்கே எனக்காக பாடி வைத்தது போலிருக்கும் பாரதியின்  ரெடிமேட் வரிகளை  மனதாற மறுபடியும் வாசித்துக் கொள்கிறேன்... . 


எல்லாம் வல்ல அந்த மகாசக்தி எல்லோரையும் காத்து அருள் செய்யட்டும் !


கீழ்களின் அவமதிப்பும்-தொழில்
கெட்டவ னிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல்-செய்யும்
முயற்சியெல் லாங்கெட்ட முடிவதுவும்,
ஏழ்கட லோடியுமோர்-பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்,
வீழ்கஇக்கொடு நோய்தான் !

                                                 -பாரதி  (தெய்வப் பாடல்கள் )


"ஆங்கொரு கல்லை வாயிலில் படியென்
றமைத்தனன் சிற்பிமற் றொன்றை
ஓங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினான்; உலகினோர் தாய்நீ;
யாங்கணே எவரை எவ்விதம் சமைத்தற்
கெண்ணமோ அவ்விதம் சமைப்பாய்.
ஈங்குனைச் சரணென் றெய்தினேன் என்னை
இருங்கலைப் புலவனாக்குதியே."

                                       -பாரதி (பராசக்தி வணக்கம்- பாஞ்சாலி சபதம்) 


கீழோர்களின் அவமதிப்பும் , தனக்கான தொழிலைச் செய்யாது கெட்டவர்களின் இணக்கமும், கிணற்றிற்குள் மூழ்கிய ஒளி விளக்கினைப்போல், எடுத்த முயற்சியெல்லாம் கெட்டு முடிவதும், இயன்றவரை  ஓடியும் பயனெய்திட வழியின்றி இருப்பதும்,...  இந்த கொடிய நோய் வீழட்டும், அழியட்டும்.

"சிற்பி , ஒரு  கல்லை வாசற்படியாய் அமைத்தான்  , மற்றொன்றை கடவுளின் வடிவத்தில் அமைத்தான், உலகினோர் யாவருக்கும் தாய்  நீ ! அந்த சிற்பியைப்போல , எந்தக்கல்லை எப்படி செய்ய எண்ணமோ, (யாரை எந்தவிடத்து வைக்க வேண்டுமோ!) அந்தக்கல்லை அவ்விதம் செய்திடுவாய், இங்குனை சரண் புகுந்தேன், என்னை பரந்துபட்ட கலைகளில் வல்லோனாய்  , புலவனாய் ஆக்கிடு"

என்னுள் இருக்கும் மிடிமையையும் (சோம்பல்) அச்சத்தையும் கொன்றழித்து என்னை இவ்வையம் பயனுற வாழ அருள் புரிவாய் ! எடுத்தக் காரியும் யாவும்  வெற்றியடைய அருள் புரிவாய்.
மகாகவியே உம் பாதம் பணிகிறேன் !!


பாரதி பற்றிய பிற பதிவுகள் :


 

Post Comment

Sunday, December 03, 2017

மின்னணுவியல் நுட்பங்கள் - 3

அத்தியாயம் – 0

எலக்ட்ரானைத் தேடி ...

கிமு 450 ,

கிரேக்க அறிஞர் லியூசிப்பஸ் (Leucippus )  ஒரு கல்லை எடுத்து கையில் வைத்தபடி யோசனை செய்ய ஆரம்பித்தார். “இந்தக் கல்லை உடைத்தால் சிறுசிறு கற்கள் கிடைக்கும், அதையும் உடைத்தால் மணல் போன்ற துகள்கள் கிடைக்கும், அந்த துகள்களையும் மேலும் மேலும் உடைத்துக்கொண்டே போனால்... முடிவில், என்னக் கிடைக்கும் ? ”.
அந்தக் கல்லை அடித்து நொறுக்க ஆரம்பித்தார், அந்த மணல் போன்ற மிகமிகச்சிறிய துகளைப் பார்த்தபடி ஒரு முடிவுக்கு வந்தார்.
ல்யூசிப்பஸ் (leucippus ,கிமு 450)

 “எந்தவொரு பொருளையும் உடைத்துக்கொண்டே போனால் முடிவில் உடைக்கவே முடியாத ஒரு பொருள் கிடைக்கும், அதாவது உலகில் உள்ள எல்லாப்பொருட்களும் உடைக்க முடியாத இப்படியான இந்த சிறுசிறு துகள்களின் இணைவில் உருவானவை தான்” என.
தான் யோசித்துக் கண்டறிந்த இந்த உண்மையை லியூசிபஸ் தனது சீடர்களுடன் அமர்ந்து விவாதிக்கலானார்.
டெமாக்ரிடஸ் (கி.மு 460 – கி.மு. 370) 
அவரது சீடர்களுள் ஒருவரான டெமாக்ரிடஸ் (Democritus, கி.மு 460 – கி.மு. 370) என்பவரை இந்த சிந்தனை அதிகம் பாதிக்கிறது, பிரிக்க முடியாத அந்த இறுதித் துகளை டெமாக்ரிடஸ் உடைக்க முடியாத பொருள் என்று கிரேக்க மொழியில் அர்த்தம் வரும் வகையில் A-TOM-OS என்று பெயரிடுகிறார்.

குருவை மிஞ்சும் சிஷ்யனாக அவர் இந்த கருத்தை மேலும் யோசித்து அவரது சிந்தனை முடிவுகளை புத்தகமாக வெளியிடுகிறார்.

1.   உலகில் உள்ள எல்லாப் பொருட்களுமே வெவ்வேறு வடிவிலான, வெவ்வேறு எடையிலான வெவ்வேறு குணங்களை உடைய கண்ணுக்குத்தெரியாத மிகமிகச்சிறிய ரகரகமான ஆட்டமஸ்களால் Atomos ஆனவை.
2.   ஆட்டமஸ்களை ஆக்கவோ அழிக்கவோ இயலாது.
3.   ஆட்டமஸ்கள் இணையும் போது ஏற்படும் இடைப்பட்ட இடைவெளியில் எதுவும் இல்லை ,அது வெற்றிடம்.
4.   கனமான பொருட்களில் ஆட்டமஸ்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
5.   ஆட்டமஸ்களை அவற்றின் இடவமைவுகளை மாற்றி அமைத்தால் ஒரு பொருளை இன்னொரு பொருளாக மாற்றவியலும்.

எந்தவொரு பொருளையும் முடிவின்றி பிரித்துக்கொண்டே போக முடியாது, எல்லாப் பொருட்களும் பிரிக்க முடியாத மிகமிகச் சிறிய துகள்களால் ஆனவை என்று டெமாக்கிரிடஸ் சொன்ன இந்த கொள்கை  Atomism எனப்படுகிறது.

அணு பற்றி அண்டம் பற்றி ஆராய்ச்சி செய்து டெமாகிரிடஸ் 72 புத்தகங்கள் வெளியிடுகிறார். டெமக்கிரிடஸின் ஆட்டமிஸக் கருத்துக்கள் அரிஸ்டாட்டில் போன்ற அவர் காலத்திய பிரபல அறிஞர் பெருமக்கள் பலரால் ஆதரிக்கப் படவில்லை 

அந்தக் காலத்தில் புத்தகங்களை அச்சடிக்க அச்சு எந்திரங்கள் எல்லாம் கிடையாது, ஒவ்வொரு பிரதியையும் பாபிரஸ் இலைகளால் தயாரிக்கப்பட்ட காகிதங்களில் கைப்பட எழுதி பிரதி செய்து தான் வெளியிட வேண்டும். டெமக்கிரிடஸின் கருத்துகள் பிரபலமடையவில்லை , ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் அவரது புத்தகங்கள் அதிகம் பிரதியெடுக்கப்படவில்லை. டெமாக்ரிடஸின் 72 புத்தகங்களில் ஒன்றுகூட தற்போது இல்லை.
பாப்பிரஸ் புத்தகம்

ஆனால் அவர்கூறிய அணு பற்றிய கொள்கைகளை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட பிற நூல்கள் மூலம் டெமக்கிரிட்டஸின் கருத்துக்கள் தற்காலம் வரைக்கும் தப்பிப் பிழைத்திருக்கின்றன.

டெமாகிரிடிஸின் கருத்துக்களை ஆதரித்தவர்களுள் மிக முக்கியமானவர் கிரேக்க அறிஞர் எபிக்யூரஸ் (Epicurus ,கி.மு 341 – கி.மு. 270.)  எபிக்யூரஸ் தனது புத்தகங்களில் டெமாகிரிடிஸின் ஆட்டமிஸ கருத்துக்களை ஆதரித்து எழுதுகிறார், 
எப்பிகியூரஸ்

எபிக்யூரஸ் கூறிய கருத்துக்களை விளக்கும் வகையில் அவரது சீடர்களில் ஒருவரான  டைட்டஸ் லுக்ரடியஸ் (Titus Lucretius, கி.மு 99- கி.மு 55 ) என்ற ரோமானிய கவிஞர்  ஆறு சிறு புத்தகங்களாக (புத்தகங்கள் = அத்தியாயங்கள்) பிரித்து,  7400 அடிகளில்  “பொருட்களின் இயல்நிலை பற்றி” (“De Rerum Natura” ) என்ற ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிடுகிறார்.
Lucretius (கி.மு 99- கி.மு 55 )

அதில் முதல் இரு புத்தகங்கள் ஆட்டமிஸம் பற்றியவை.
எபிக்யூரஸ், எழுதிய புத்தகங்களின் பிரதிகளில் சிதிலிமடைந்து சிதைந்து போன நிலையில் சிக்கிய சில பக்கங்களும் , புராதன கிரேக்க நூலகம் ஒன்றில் கிடைத்த  லியூக்ரடியஸின் முழுக்கவிதைத்தொகுப்பும்  டெமாக்கிரிடஸின் ஆட்டமிஸக்கருத்துக்களை அழியாமல் காத்தவைகளுள் முக்கியமானவைகள்.

இந்த கவிதைத் தொகுப்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு புராதான புத்தகங்களை பராமரிக்கும் நூலகங்களால் பிரதியெடுத்து பராமரிக்கப்படுகின்றன.

கி.பி.1417 –ல் டைட்டஸ் லியூக்ரடியஸின் கவிதையை Poggio Bracciolini  என்ற பழங்கால எழுத்துக்களை பராமரிக்கும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்  பிரதியெடுத்து வைக்கிறார். 

Poggio Bracciolini 


1454-ல் கட்டன்பெர்க் Guttenberg என்ற ஜெர்மானியரால் அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் சிதிலமடைந்த புராதான நூல்கள் பல மறு உயிர் பெற்றன எனலாம், அவ்வகையில் டெமக்கிரடஸின் ஆட்டமிஸ கருத்துக்களை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட லுக்ரடியஸின் “பொருட்களின் இயல்நிலை பற்றி” என்கிற கவிதைத்தொகுப்பு 1473 ல் அச்சிலேறுகிறது.

"பொருட்களின் இயல்நிலைப் பற்றி"  அச்சடிக்கப்பட்ட பிரதி 

அச்சிலேறிய பிறகு கிரேக்க அறிஞர்கள் சிந்தனையில் மட்டும் ஆட்டம்போட்ட ஆட்டமிஸம் என்கிற அணு பற்றிய சித்தாந்தம் உலகின் பிற தேசத்தினராலும் படிக்கப்படுகிறது.

                                                              கற்போம் 

Post Comment

Saturday, December 02, 2017

மின்னணுவியல் நுட்பங்கள் - 2

அத்தியாயம் - 0


எலக்ட்ரானிக்ஸ் என்றால் என்ன ?

Electronics: 

எலக்ட்ரான் மெக்கானிக்ஸ்( Electron - Mechanics) என்கிற வார்த்தையின் இருபெயரொட்டு தான் எலக்ட்ரானிக்ஸ். எல்க்ட்ரான்களை இயங்க வைத்துச் செய்யும் மெக்கானிக்ஸ்.

இங்கே போ !, இங்கே போகாதே ! நின்று போ! ஓடு! நின்று பிறகு ஓடு ! என எலக்ட்ரான் களை இயங்க வைத்துச் செய்யும் மெக்கானிக்ஸ் தான் எலக்ட்ரானிக்ஸ்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எலக்ட்ரான்கள் என்னவெல்லாம் செய்யும் என்பதை தெரிந்துகொண்டு , நம்மிடம் இருக்கும் ரெசிஸ்டர்,கெபாசிட்டர்,இண்டக்டர்,டயோட், டிரன்சிஸ்டர் போன்ற எலக்ட்ரானிக்ஸ் கருவிகளை பயன்படுத்தி அவற்றை  என்னவெல்லாம் செய்யவைக்கலாம் என்ற வித்தையே எலக்ட்ரானிக்ஸ்.

எலக்ட்ரான் இயக்கவியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் சாதனங்கள்/ கருவிகள்/பொருட்கள் போன்றவையும் செல்லமாக எலக்ட்ரானிக்ஸ் என்றே அழைக்கப்படுகின்றன.

எலக்ட்ரான் கள் என்பவை அணுவிற்குள் இருக்கும் மிகமிகச் சிறிய இம்மியளவு துகள், இந்த இம்மியளவு துகள் தான் நாம் இன்று வியந்து நோக்கும் டிஜிட்டல் மயமான இந்த விஞ்ஞான உலகத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறது.
                                                                                                                             -கற்போம்


 

Post Comment

மின்னணுவியல் நுட்பங்கள் - 1


முன்னுரை:

“If there’s a book that you want to read, but it hasn’t been written yet, then you must write it.” 
                                                                                                                                        ― Toni Morrison

எலக்ட்ரானிக்ஸ் பற்றி ஒரு விரிவான தமிழ் புத்தகம் இல்லையே , என்கிற பெரும் ஏக்கம் எனக்கு எப்போதுமே உண்டு. தீர்ந்தபாடில்லை இன்னும் :)
எலக்ட்ரானிக்ஸ்  உலகம் மிக மிக வசீகரமானது!, ஆச்சரியமானது.

விரல் நகம் அளவு மட்டுமே உள்ள ஒரு எலக்ட்ரானிக் சிப் எத்தனை மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது. யாதுமாகி நின்றாய் எங்கும் நீ நிறைந்தாய் என்று சர்வம் எலக்ட்ரானிக்ஸ் மயம் ஆகிக்கொண்டிருக்கிறது.செல்பேசி, கணிப்பொறி, தொலைக்காட்சி, கேமரா, செயற்கைக் கோள்....

சமீபத்தில்  ஒரு ஹியுமனாய்ட் ரோபட்டிற்கு குடியுரிமை (Citizenship) வழங்கி இருக்கிறது ஒரு நாடு.... !

 தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் சீறிப் பாய்ந்துக் கொண்டிருக்கிறது, ஆமை வேகத்தில் அதை அணுகிக்கொண்டிருக்கிறோம்  நாம்.  நமது தொழில்நுட்ப பாட சிலபஸ்களோ அரதப்பழசாக அப்படியே இருக்கிறது இன்னும் மாறாமல்.  `சுவாரஸ்யமான ஒரு  விசயத்தை  Zombie த்தனமாக சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எலக்ட்ரானிக்ஸ் என்பது ஒரு பாடமல்ல. அது ஒரு கலை , அது ஒரு வித்தை .

ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 186,282  மைல்கள் என்று பாடம் சொன்னால், இத்தனை அதிவேகத்தை எப்படி கணித்தார்கள் என யோசிப்பேன், எலக்ட்ரானின் எடை 9.109×1031 கிலோ என்றால் எப்படி இதை எடை போட்டார்கள் என்று யோசிப்பேன். பாடபுத்தகங்க்கள் எனக்கு ஒரு போதும் திருப்தி அளித்ததில்லை,  ஏன் இந்த புரியாத கணக்குகள்,சமன்பாடுகள் ., இதையெல்லாம் படித்தால் நம்மால் எலக்ட்ரானிக் சாதனங்களை அவை இயங்கும் முறைகளை , புரிந்து கொள்ள முடியுமா?, இவற்றைப் படித்துத் தேறுவதால் எலக்ட்ரானிக் கருவிகளை நம் தேவைக்கேற்ப வடிவமைத்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திவிட முடியுமா? சர்வநிச்சயமாக நம் பாடத்திட்டம் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போவதில்லை. நாமாகத் தான் தேடி ப் படிக்க வேண்டும். நான் தேடி அடையாளம் கண்டுகொண்ட விதத்தில் எலக்ட்ரானிக்ஸை கொஞ்சம் விரிவாக, புரியும் வகையில் கதைபோல எழுதிச் சொல்லலாம் என இருக்கிறேன்.

யாருக்கானதில்லை,  இத் தொடர் :

விசயங்களை மேலோட்டமாக வெறும் வரையறைகளாக, வார்த்தைகளாக மனப்பாடம் செய்து புரிந்து கொள்வதால் அதை தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறவர்கள். விரிவாக தெரிந்து கொள்வது பயனற்றது, இது தான் இது என்று எதையாவது சொல்லி வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், ஆரம்பநிலையிலிருந்து கற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்கள் தயவுகூர்ந்து இத்தொடரை வாசிக்க வேண்டாம்.

எதைப்பற்றிய, யாருக்கான, எப்படிப்பட்ட தொடர் இது ?

 எலக்ட்ரானிக்ஸ் பற்றி  விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டும் என வேட்கை உள்ள யாவருக்குமான , மிகத்தெளிவான, அதேநேரம் கதை போன்ற நடையில் எலக்ட்ரானிக்ஸை கற்றுக்கொள்ள நினைக்கும் யாவருக்குமான தொடர் இது.

இந்த பெறும் முயற்சியை வெற்றிகரமாக்க வேண்டும் என எனக்குத்துணையாய் நின்று என்னை எழுதப் பணிக்கும் இறை சக்தியைப் போற்றி   எழுதத்துவங்குகிறேன். எப்படியேனும் இதை வெற்றிகரமாக தொடர்ந்து எழுத வேண்டும். குறைந்தபட்சம் வாரம் ஒரு பதிவேனும் எழுத வேண்டும் என எனக்கு நானே கட்டளையிட்டுக்கொள்கிறேன்.

                                                                                                                             -கற்போம் 

 

Post Comment