Monday, February 13, 2017

காமம் - காதல் - கண்ணாமுச்சி

  காதல் என்கிறார்களே அப்படியென்றால் என்னவாக இருக்கும் என யோசிக்கிறேன், "You cannot do thinking and loving together" என்று ஒரு ஆங்கில புலவன் சொன்னது நினைவுக்கு வருகிறது. அப்படியென்றால் உணர்ந்து பின் அதை  யோசித்து எழுதும் கவிதைகளில் காதல் இருக்காதா? என அவனிடத்தில் கேட்கவேண்டும்  !.,

Anyhow யோசித்தே ஆக வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன், :)  


காதல் என்றால் என்ன ! 

" மனம் ஒத்த ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் நேசிப்பது (இருதலை) அல்லது ஒரு எதிர்பாலினம் மற்றொரு எதிர்பாலினத்தின் மீது ஆசை கொள்வது (ஒருதலை)."

 பரிட்சையில் இரண்டு மார்க் கேள்விக்கு பதிலெழுதும் தோரணையில் ஒரு வரையறையை எழுதிவிட்டேன் :) ஆனால் அதை வாசித்து யோசிக்கையில் ஆசை ,நேசம் என்கிற வார்த்தைகளில் காதலை சொல்வது அபத்தமாகப் படுகிறது . காதல் என்றால் காதல் தான் , அதற்கு விளக்கம் தர இயலாது,(பின்ன என்னத்துக்கு இந்த கட்டுரை என கோபப் படாதீர்கள்) ஆனால்  அதை விளங்கிக் கொள்ள இயலும் .

காதலை வார்த்தைகளில் சொல்ல முற்படுகிற முயற்சிகள் அத்தனையும் பெரும்பாலும் கவிதையாய் வடிவெடுக்கக் காரணம் அதன் இந்த "விளக்க முடியாது ஆனால் விளங்கிக்கொள்ள முடியும்"  என்கிற விசித்திர மிஸ்ட்ரித்தனத்தினால் தான்.

யோசித்துப்பார்த்தால் மிஸ்ட்ரி மாதிரி தான் தெரிகிறது , எதையும் தன்னால் விளக்க முடியும் என்கிற  விஞ்ஞானம் காதல் என்கிற வஸ்துவை  ஹார்மோன்கள் செய்யும் விளைவின் கெமிஸ்ட்ரி என்கிறது.

 கண்ணுக்குத் தெரியாத மிஸ்டரியா  இல்லை கண்ணுக்குத்தெரிந்த  கெமிஸ்டரியா என இந்த கட்டுரையில் காதலை ஆராயலாம்.

காமம் - காதல்- கண்ணாமூச்சி:

"Sex is the genesis of Love"
                                       -Osho


     "இந்த பிரபஞ்சத்திலுள்ள அத்தனை விசயங்களும்
      சமநிலையை நோக்கியே பயணிக்கின்றன ".

எதிர் எதிர் விசயங்களின் இணைவு தான் சமநிலை,அதுவே முழுமையும் கூட.இரவும் பகலும் இணையும் போதுதான் ஒரு நாள் முழுமை பெறுகிறது, எதிர்களின் இணைவுதான் முழுமை என்பதை கொஞ்சம் யோசித்தால் நாம் புரிந்து கொள்ள முடியும் இருட்டு-வெளிச்சம்,இன்பம்-துன்பம்,இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்,

இது போலவே ஆண் பெண் இணைவும் முழுமையை சொல்கிறது.ஆண் மீது பெண்ணும், பெண் மீது ஆணும் கொள்ளும் ஈர்ப்பு சம நிலைக்கான தேடல் தான்.

ஒரு குழந்தை தாயின் கர்பத்தில் உருவாகும் போது அது ஆணாகவோ பெண்ணாகவோ உருவாவதில்லை, ஆண்தன்மை,பெண்தன்மை இரண்டும் ஒருங்கே பெற்ற நிலையாக உருவாகிறது.இந்த நிலையை இரண்டுமற்ற நிலை(ரெண்டுங்கெட்டான்) என்று சொல்வதை விட இரண்டுமான நிலை என்று சொல்வது பொருந்தும்.ஒருவார காலம் வரை அந்த குழந்தை ஆண்,பெண் இரண்டும் கலந்த அர்த்தநாரியாகவே அதாவது 100% முழுமையானதாக இருக்கிறது (விஞ்ஞானம் இதனை ஆதரபூர்வமாக நிரூபித்துள்ளது).ஒரு வாரத்திற்கு பிறகே அது ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றம் அடைகிறது.ஆணுக்கும் மார் காம்புகள் இருப்பதற்கு இது தான் காரணம் என்கிறது அறிவியல். அப்படி அந்த கரு ஆணாக மாற்றம் அடையும் போது பெண் என்கிற தன்மையை தன்னகத்தே இழந்து விடுகிறது.பெண்ணாக மாற்றம் அடையும் போது ஆண் என்கிற தன்மையை தன்னகத்தே இழந்து விடுகிறது.

ஆண்,பெண் என்று அந்த குழந்தை பால் வேறுபாட்டுடன் பிறக்கும் போது முழுமையின் இழப்பாகவே பிறக்கிறது.இழந்துவிட்ட பாகத்தை இணைத்துக்கொள்ள ஆர்வம் கொள்கிறது.ஒரு உயிர் முழுமை பெற வேண்டுமானால் ஆண்,பெண் இணைவு அவசியமாகிறது.(சில ஞானிகளும்,யோகிகளும் தங்களுக்குள் மறைந்துவிட்ட அந்த ஆண் அல்லது பெண் தன்மையை இணைத்துக் கொண்டு பிற உயிரின் துணையின்றியே முழுமை பெறுகிறார்கள்,ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமில்லை)

முழுமை பெற வேண்டும் என்ற பேரார்வம் ஆணுக்கு பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பாக பரிமானம் எடுக்கிறது.
இந்த ஈர்ப்பு தான் காமம்.காமத்தின் காரணமாகத்தான் பூ மலர்கிறது, குயில் கூவுகிறது,தோகை விரித்து மயில் ஆடுகிறது.

தூய காதல் என்பது மனசை பார்த்து வருவது, உடம்பை பார்த்து வருவதெல்லாம் உண்மையான காதலாக இருக்காது என டயலாக் பேச ஆசையாகத் தான் இருக்கிறது, நிதர்சனமாக சொல்லவேண்டுமென்றால் காதலில் காமம் கலந்து இருக்கிறது, இந்த உலகத்தில் காமம் இருப்பதினால் தான் இந்த காதலும் இருக்கிறது.

 செவ்வி தலைப்படுதல் :

 இன்னொன்றும் சொல்லியாக வேண்டி இருக்கிறது, உதாரணமாக தாகம் என்பது ஒரு உணர்வு , தாகமெடுத்தால் நீர் தேடுகிறோம்,குடிக்கிறோம். நீரை பார்க்கிற போதெல்லாம் எனக்கு தாகமெடுக்கிறது என்றால் அது நோய்மை, அது அரோக்கியமானதன்று, அப்பேர்ப்பட்ட , 'சீர்கெட்ட, நீர் ண்ட  போதெல்லாம் அதை தாகத்தோடு அணுகும் ஒரு சமூகத்தை ' உருவாக்கி வைத்திருக்கிறோம் நாம்., தாகம் கொண்டு பானையை உடைக்கும் கயவர்களுக்கு தண்டனைகளைக் கொடுப்பதைப் பற்றிய பேச்சை எடுக்கும் நாம்., இந்த நோய்மை சமூகத்துக்கு மருந்து கண்டறிந்து கொடுக்க வேண்டும் என யோசிக்க வேண்டும்.

மொழியின் பண்பட்ட வடிவம் கவிதை என்பது போல, காமத்தின் பண்பட்ட வடிவை காதல் எனலாம்.

உலகின் நிலைப்பாட்டிற்காக இயற்கை நமக்குள்ளே வைத்துள்ள ரகசியம் காமம்.

கோபம்,சந்தோசம்,அழுகை இது போல காமம் என்பதும் ஓர் உணர்வு,ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் முன் இடம்,பொருள்,ஏவல்...காலம்,நேரம்,பின் விளைவு என சகலவிதமான முறைகளில் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். இது காம உணர்வுக்கும் பொருந்தும்.இல்லையென்றால் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வேறுபாடு இல்லை.

"எல்லா உயிர்களின் உள்ளேயும் காமமாய் உருவெடுத்து நிற்கும் தேவியே ! உன்னை வணங்குகிறேன்"  - என்ற அர்த்தத்தில்  ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது .(உடனே ஸமஸ்கிருதத்தை எதிர்க்க கிளம்பி விடாதீர்கள் ! . இதன் ஆழ்ந்த அர்த்தத்தை அரை நொடி அசைபோடுங்கள்., நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் ஏற்றுக்கொள்வது தான் தமிழன் கலாச்சாரம்).

கலாச்சாரம், நாகரிகம் என்றெல்லாம் நாகிழிய வக்கணையாக பேசுகிறோமே! அதெல்லாம் போலித்தனமான கேலிக்கூத்து தானோ என நினைக்கத்தோன்றுகிறது.பழந்தமிழ் இலக்கியங்களில் சர்வ சாதரணமாக பேசப்பட்ட விசயங்களையெல்லாம் இந்த நவநாகரிக யுகத்தில் கெட்ட வார்த்தைகளாக மாற்றி வைத்திருக்கிறோம்

 "
மலரினும் மெல்லியது காமம் -சிலரதன் 
செவ்வித் தலைப்படுவார்                                    -  திருக்குறள்: 1289

                                                               "

மலரை விட மெல்லியது என  வள்ளுவன் சொல்கிறான், மலரைவிட மெல்லியது என நாம் நினைக்க வேண்டிய விசயத்தை கொலை ஆயுதத்தின் கொடியதாக சித்தரித்து வைத்திருக்கிறோம்.

ஒரு பெண்ணை நான் இச்சையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற கண்ணோட்டதில் பார்ப்பதற்கும் காதலோடு பார்ப்பதற்கும் ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது.,அதைத் தான் இந்த வள்ளுவன் செவ்வி தலைப்படுவர் சிலர் என்கிறானோ என்னவோ ! .

காமம் என்கிற அந்த ஜீவசக்தியை எதிர்த்து போரிட்டு ஒழிக்க முற்படுவதெல்லாம் கடைந்தெடுத்த முட்டாள் தனம், அதை புரிந்துகொண்டு கடந்து போக வேண்டும், காதல் என்பது அதற்கான  அநேக வழிகளில் ஒரு வழி.
 

Post Comment

Monday, February 06, 2017

"சகிக்கல" ஆட்சியில் தமிழகம்...


அன்பார்ந்த தமிழினமே!

நக்கலும் நையாண்டியுமாக பேசிச்செல்வதிலும்,பேஸ்புக்கில் கமென்ட் இடுவதிலும்,மீம்ஸ்,வீடியோ என காமெடி செய்து பகிர்வதிலும்,ரசிப்பதிலும் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு நிகரென இந்திய தேசத்தின் எந்த மாநிலத்தவரும் இல்லை, உலகின் எந்த நாட்டினரும் இல்லை என சர்வ நிச்சயமாக நம்புகிறேன்.

"இடுக்கன் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வதஃதொப்ப தில்"

என்ற அய்யனின் வாக்குப்படி செயல்படுகிறோமா , இல்லை இது இப்படித்தான் என சர்வசாதரணமாக எடுத்துக்கொண்டு நகரும் வகைக்கு மரத்துப்போன மனிதர்களாக ஆக்கப்பட்டு விட்டோமா !

"பீட்டாவை தடை செய்" "ஜல்லிக்கட்டு வேண்டும்" என கொதித்தெழுந்த சிங்கத் தமிழினமே , புரட்சிக்கு புதிய இலக்கணம் செய்து அறப்போராட்டமாக ஆர்ப்பாட்டம் செய்த வீரத் தழினினமே ! இலங்கையில் நம்மவரை சித்திரவதை செய்தபோது சேர்ந்தழுத அன்புத் தமிழினமே !

உரிமைகள் பறிக்கப்பட்டது குரல் கொடுத்தோம், உண்மைகள் மறுக்கப்பட்டது குரல் கொடுத்தோம். இது குரல் கொடுப்பதற்கான நேரம் என நம்புகிறேன்,உண்மைக்காக ,உரிமைக்காக உரக்கக் குரல் கொடுப்போம் என நம்புகிறேன்.

உலகின் அறிவார்ந்த இனம் என அறியப்பட்ட இனம், அறியப்பட்டுக்கொண்டிருக்கும் இனம் ஆள்வதற்கு ஆளின்றி நிராதராவாக நின்றுகொண்டிருக்கிறது.

வெட்கம்,வேதனை,வருத்தம்

மக்களால் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சிக்குப்பெயர் தான் மக்களாட்சியாம். எம் மக்கள் ஒட்டுமொத்தமாக வேண்டாமென சேர்ந்தொதுக்கும் ஆட்சி எப்படி எங்களுக்கு மக்களாட்சி ஆகும்.

எண்ணம் தான் புரட்சியின் விதை, ஒரே எண்ணம் ஒன்றுபோலான எண்ணம்,ஒன்றுபட்ட எண்ணம். நாம் எண்ணத்தால் ஒன்றுபட்டிருக்கிறோம் என நம்புகிறேன், ஒற்றுமையாக செயல்படுவோம் என்றும் நம்புகிறேன்.

பேஸ்புக்கும், வாட்சப்பும் அமெரிக்க சந்தைப்பொருட்கள் தான், ஆனால் அவை கருத்துப்பறிமாற்றத்திற்கான சமூக வலைத்தளங்கள்., இவற்றைக்கொண்டு என்ன செய்துவிட முடியும் நக்கலும்,நையாண்டியும் செய்து மீம்ஸ்சும்,வீடியோக்களும் உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள முடியும், ஸ்டேட்டஸ் போட்டு , செல்பி எடுத்து லைக்குகள் வாங்க முடியும், பொழுதுபோக்க முடியும் ,அதே சமயம் , சமூகத்தின் அவலங்களை அடித்துநொறுக்கி அதை பழுதும் பார்க்க முடியும்.ஒத்த கருத்துடைய நபர்களை ஒன்றிணைத்துப் புரட்சியும் செய்ய முடியும்.

சமீபத்தில் (2011 ல்) எகிப்தின் துனீஷிய தேசத்திலே சர்வதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெகுண்டெழ காரணமாக இருந்த விதை யூட்யூபில் பதியப்பட்டு,பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒற்றை வீடியோ தான் . மக்களை ஒன்றினைத்து புரட்சி செய்ய துணையாய் நின்றது பேஸ்புக் தான்.

அறிவார்ந்த தமிழினமே ! எதை செய்தால் மாற்றம் சாத்தியமோ அதை செய்ய துணிந்தெழு. சிரித்துவிட்டு நகர்வதிலும்,அழுது புலம்புவதிலும் பயனில்லை,பலனில்லை.

மீம்ஸ்களும் ,ஸ்டேட்டஸ்களும் தவறில்லை, நக்கல்,நையாண்டி,காமெடி என்பதையும் தாண்டி உன் அறிவை பட்டைத்தீட்டு ,மாற்றம் சித்திக்கும் என மனதாற நம்பு., ஒன்றுபட்ட மனங்களை ஒன்று திரட்டு ஒன்றாய் போராடுவோம் !

இது மக்களாட்சி, நம் தேசம் ஜனநாயக தேசம், என்ன செய்தால் தீர்வு கிடைக்கும் என தீர்மாணி, அறிவையையும் உணர்வையும் சரியாக கையாண்டு தீர்வு கொள் !

 

Post Comment