Tuesday, January 29, 2013

கண்ணீர் துடைத்த கவிதை விரல்

  
வன் எண்ணங்கள் சிகரம் தொடும் உயரம் செல்லக்கூடியவை !,அவன் எண்ணங்கள் உயரே கிளம்புகிற பெரும்பான்மையான சமயங்களில் மற்றவர்களின் கேலியும்,கிண்டலும் அவன் எண்ணங்களுக்கு உயரத் தடை  ஆவதுண்டு ,அவனிடம் பேசுகிறவர்கள் தகாத வார்த்தைகளை சொல்லி ,தாழ்வு மனப்பான்மைக்குள் அவனை தள்ளி விடுகிற சமயங்களிலெல்லாம் அவன் கண்ணீருக்குள் மூழ்கி விடுவதுண்டு ,பிரபஞ்சத்தை பிரதிபலிக்கும் அவன் கண்கள் கண்ணீரில் நிறைந்திருந்த ஒரு ராத்திரியில் கவிதை ஒன்று அவனோடு பேச ஆரம்பித்தது !


னவுகளால் நிறைந்தவனே !
கண்ணீரில் மிதப்பவனே !
கண்ணிருக்கும் கண்ணீரை
துடைத்துவிட்டு வா உடனே !

முட்டாள் நீயென்று உலகம் சொன்னவுடன்
முட்டாளாய்  மாறிவிடும் முட்டாள் நீயில்லை !
 சொற்களை நம்பி சோகம் கொள்வதும் ,
வார்த்தைகள் கேட்டு வருத்தம் கொள்வதும்
மடையர்கள் வேலை , மடையன் நீயில்லை !
 மேகம் மறைத்தாலும் காகம் பறந்தாலும்
வானம் மாறாது வையத்தில் வீழாது

ன்னைப் பார்த்து உலகம் சொல்லும்
இழிமொழி கேட்டு தாழ்ந்து விடாதே!
கனவுகள் கலைக்க கணைகள் தொடுக்கும்
கரங்கள் கண்டு கலங்கி விடாதே !

வானம் போல வாழப்  பழகு
புல்நுனி மீது பனித்துளி போல
முள் நுனி மீதும் உறங்கப் பழகு

ட்டி வைத்த கோட்டை தனை
கண்ணீரில் கரைத்திடாதே !
மனம்  வரைந்த சித்திரத்தை
அழுதழுது அழித்திடாதே!

ன்னை அழவைத்த
உலகம் இதைப்பற்றி
உனக்கு தெரியுமா ?

"தைசெய் " "இதைசெய் " என்று
அறிவுரை ஆயிரம் சொல்லும்
உந்தன் வருத்தம் போக்க
ஆறுதல் வார்த்தை சொல்லும்
வெற்றி பெற வழிகள் சொல்லி
வேறு பாதை உனை திருப்பும் ;
ஆடு நனைய அழுகை கொள்ளும்
அதிசய ஓநாய்க்  கூட்டம்

யார் மீதும் முழுதாக
நம்பிக்கை  கொள்ளாதே!
எவர்பற்றி எவரிடமும்
எப்போதும் சொல்லாதே !
சுவரில்லா சித்திரங்கள்
பார்வைக்கு படுவதில்லை

சுவரை முதலில் கட்டு
சித்திரம் அதன்பின் தீட்டு

னவுகள் கண்ணீரில்
மூழ்கி விடக்கூடாது !

னவை கனலாக்கி
கண்ணீர் காயவை!
உணர்வை உணவாக்கி
கனவை வாழவை !

னவுகளால் நிறைந்தவனே !
கண்ணீரில் மிதப்பவனே !
கண்ணிருக்கும் கண்ணீரை
துடைத்துவிட்டு வா உடனே !

(இந்த உலகத்திற்கு நான் வந்து இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றன ...!)


 

Post Comment

Friday, January 18, 2013

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் -16




கடந்த பதிவில் உலகின் முதல் ஹார்டுவேர் -சாப்ட்வேர் இணைப்பாக வடிவமைக்கப்பட்ட ஜேகுவார்ட் தறி பற்றி பார்த்தோம் .கைத்தறிக்கும் கணிப்பொறிக்கும் என்ன சம்பந்தம்?...கடந்த பதிவை கேள்வியுடன் முடித்திருந்தது நினைவிருக்கலாம் . 

ஆரம்ப கால கணினிகள் துளை இடப்பட்ட அட்டைகள் (punched cards ) பயன்படுத்தின ,அதே அட்டைகளை தான் கைத்தறிகளும் பயன்படுத்தின 


இந்த பதிவில் கணிப்பொறியின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்தின் துவக்கத்தையும் பார்க்கலாம் .

கைத்தறி கணிப்பொறி : 
 

ஜேகுவார்ட் கைத்தறி  உலகின் முதல் நிரல்படு சாதனம்(programmable device).,புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால் மனிதன் தரும் கட்டளைகளை புரிந்து வேலை செய்யும் சாதனம் .

மனிதனின் கட்டளைகளை எந்திரம் எப்படி புரிந்து கொள்ளும் ?

 எந்திரங்களுக்கு நாம் பேசுகிற மொழி புரியாது ,மனித மொழியை புரிய வைக்கவும் முடியாது (இதற்கு ஒரு சின்ன எடுத்துக்காட்டு :இந்த கட்டுரையின் ஏதேனும் பத்தியை கூகுள் மொழி பெயர்பில் கொடுத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பாருங்கள் ).மொழி இயங்கும் முறை மிகவும் சிக்கலானது,எந்திரம் மனித மொழியை புரிந்து கொள்ள காலங்கள் பல ஆகலாம் .
  சரி நாம் விசயத்திற்கு வருவோம் எந்திரத்திற்கு புரிகிற மாதிரி கட்டளை இட இரண்டே வழிமுறைகள் தான் இருக்க முடியும்
 1. மனித மொழியை எந்திரத்திற்கு கற்று தரும் கடினமான வழிமுறை
2.எந்திரத்தின் மொழியை நாம் கற்றுக்கொண்டு கட்டளை இடும் எளிய வழிமுறை
 இதில் இரண்டாவது வழிமுறை மூலமாகவே எந்திரங்களுக்கு கட்டளைகள் இடப்படுகின்றன .

எந்திரம்... மந்திரம்... தந்திரம்... :
 
எந்திரங்களுக்கு  எந்திர மொழி மூலமாக கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன ,அதை எந்திரங்கள் புரிந்துகொண்டு வேலையை முடித்துக்கொடுக்கின்றன ,அது சரி மனிதனுக்கு எப்படி எந்திர மொழி தெரியும் ??,(ரொம்ப யோசிக்காதீர்கள் ).அது எப்படி என்பதை அடுத்த பத்தியில் இருந்து  பார்க்கலாம் .

தண்ணீர் குழாயை வல இடமாக சுற்றினால் குழாயில் இருந்து தண்ணீர் வருகிறது,அதை திசை - மாற்றி திருகினால் தண்ணீர் நின்று விடுகிறது ,தண்ணீர் குழாயின் மொழி இது .தண்ணீர் குழாய்  இரண்டு கட்டளைகள் மட்டுமே தெரிந்த ஒரு குழந்தை எந்திரம் .இந்த இரு கட்டளைகளை நாம் எப்படி மாற்றி மாற்றி கொடுத்தாலும் அது செய்யும் , இது போன்று ஒவ்வொரு எந்திரத்திற்கும் ஒவ்வொரு மொழி உண்டு .ஆனால் பாவம் தண்ணீர் குழாய்க்கு "வாசிக்க தெரியாது " ,சில எந்திரங்களுக்கு வாசிக்க தெரியும்...(எப்படி வாசிக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளவர்கள் கமெண்ட்-ல் சொல்லுங்கள் அல்லது vijayandurairaj30@gmail.com   மெயில் அனுப்புங்கள் )

எந்திர மொழிகளை  பற்றிய ஞானம் மனிதனுக்கு எப்போது வந்தது ???

1880 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு தனது நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது , அதை நடத்தி கணக்குப்போட்டு ,எண்ணிக்கையை சொல்ல அமெரிக்க அரசாங்கம் எடுத்துக்கொண்ட கால அளவு ஏழு ஆண்டுகள் (அம்மாடியோவ்!),
 1890-ல் மீண்டும்  கணக்கெடுப்பை நிகழ்த்த திட்டமிட்டது ,இந்த காலகட்டத்தில் மக்கள் தொகை ஓரளவு வளர்ச்சி அடைந்திருந்தது ,இதனால் இம்முறை சென்சஸ் கணக்கெடுப்பை செய்ய 13 வருடம் ஆகலாம் என்று தோராயமான கணிப்பு சொல்லப்பட்டது .இதற்கு ஏதேனும் மாற்று வழி உள்ளதா? என்று ஆராய்ச்சி செய்து சென்சஸ் கணக்கெடுப்பை விரைவாக நடத்த வேண்டும் என்று  அமேரிக்கா முடிவு செய்தது .

கணக்கெடுப்பை எளிதாக்கிய துளை இடப்பட்ட அட்டைகள் :

ஹெர்மன் ஹாலரித் (Herman Hollerith) என்ற புள்ளியியலாளர்  இந்த பிராஜக்ட் பற்றிய சிந்தனையுடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் ,அப்போது ரயிலில் டிக்கெட் கொடுக்கும் நபர் டிக்கெட்டில் துளை  இடுவதை பார்த்தார் ,அந்த துளைகள் பயணியின் வயது மற்றும் அவரது பாலினம் ஆணா அல்லது பெண்ணா என்கிற தகவல்களை குறிக்கும் விதமாக இருந்தன . (நம்மூர் பேருந்துகளில் கட்ரக்டர்கள் கிழித்து தரும் டிக்கெட்டில் அந்த கிழிந்த இடம் நாம் வண்டியில் ஏறின இடத்தை குறிக்கும் )

டிக்கெட்டில் துளை இடும் எந்திரம் ரயில் கண்ட்ரக்டருடன் 


                                                                               துளை இடப்பட்ட டிக்கெட்

அவர் மனதில் ஒரு மின்னல் ,இதே முறையை நாம் சென்சஸ் கணக்கெடுக்க பயன்படுத்தினால் என்ன ?,சென்சஸ் கணக்கெடுப்பு பிரச்சனைக்கு தீர்வுடன் ரயிலில் இருந்து இறங்கினார் ஹாலரித்.


ஹாலரித்  சென்செக்ஸ் எடுக்க பயன்படுத்திய அட்டைகள் 12 வரிசை மற்றும் 24 நெடுவரிசை (12 rows  ,24 columns  ) உடைய அட்டைகள்

அந்த அட்டைகள் சென்செக்ஸ் கணக்கெடுப்பில் எப்படி உதவின ?,துளை இடப்பட்ட அட்டைகள் எப்படி கணினி வளர்ச்சிக்கு காரணமாயின என்றும் அடுத்த பதிவில் பார்க்கலாம்...







 

Post Comment

Friday, January 04, 2013

மாயஉலகம் (தொடர்பதிவு -15)


(உலகின் முதல் ஹார்ட்வேர் -சாப்ட்வேர் தொழில்நுட்பம் )
இது பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன் ஒரு அடிப்படை விசயத்தை புரிந்து கொள்வோம் ...

ஹார்ட்வேர் என்றால் என்ன ?? சாப்ட்வேர் என்றால் என்ன ??, உங்களுக்கு இதற்கான விடை தெரிந்திருக்கலாம்,இருந்தாலும் இதன் விளக்கத்தை இன்னொரு முறை(சாதரண வார்த்தைகளில்) தெரிந்து கொள்வோம் .

வன்பொருள் (hardware ) -மென்பொருள் (software ) ??:

மனிதனின் செயலை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட "பல அல்லது சில பொருட்களின் கூட்டாக "(compound)உருவாக்கப்பட்ட எந்தவொரு சாதனமும் "எந்திரம்" என்றழைக்கப்படும்.எந்திரம் மனிதனால் இயக்கப்படும் பொருளாக மட்டும் இருந்து வந்த காலங்களில் வன்பொருள் மென்பொருள் என்று பாகுபடுத்தி பார்க்கும் அவசியம் இல்லாதிருந்தது ,எந்திரத்தை தானாக (automatic ) ஒரு வேலையை செய்ய வைக்க முயன்ற முயற்சியின் விளைவாக விளைந்தது தான் மென்பொருள் எனும் விஷயம் .தானாக வேலை செய்யும் எந்திரம் (automatic machine ) என்று அழைக்கப்படும் எந்திரங்கள் உண்மையில் தானாக வேலை செய்கின்றனவா??

தானியங்கி எந்திரங்கள் :

ஆழமாக யோசித்து பார்த்தால் தானாக வேலை செய்யும் எந்திரங்கள் என்று ஒன்று இல்லவே இல்லை , மனிதனின் கட்டளைகளின் படியே அவை வேலை செய்கின்றன , தானியங்கி எந்திரங்கள் எப்படி வேலை செய்ய வேண்டுமென்று முன்பே அவைகளின் மூளைகளில் கட்டளைகள் எழுதப்படுகின்றன ,இந்த கட்டளைகளின்படியே அவை வேலைகளை "தானாக" செய்கின்றன.

வன்பொருள்:

கண்ணால் பார்க்க முடியும் எந்திர பாகங்கள்.

மென்பொருள்:

எந்திரங்களை தானாக வேலை செய்ய அவற்றின் மூளைகளில் எழுதப்படும் கட்டளைகளின் தொகுப்பு .


உலகின் முதல் ஹார்டுவேர் -சாப்ட்வேர் :
உலகின் முதல் தானியங்கி கருவி ஒரு நெசவு எந்திரம் ,இந்த தானியங்கி நெசவு எந்திரத்தை 1801- ல் ஜோசப் மேரி சார்லஸ் (செல்லப்பெயர் ஜேக்குவார்ட் ) என்றழைக்கப்பட்ட வியாபாரி ஒருவர் வடிவமைத்தார் ,இந்த தானியங்கி நெசவுக்கருவி "ஜேக்குவார்ட் -தறி "(jacquard loom ) என்று சார்லஸ் -ன் செல்லப்பெயரின் மூலமே செல்லமாக அழைக்கப்பட்டது .

ஜேக்குவார்ட் தறி வடிவமைக்கபடுவதற்கு முன்பே சிற்சில தானியங்கி தறிகள் நடைமுறையில் இருந்துள்ளன.இவைகள் நமது ஜேக்குவார்ட் -தறியின் முன்னோடிகள் . இந்த கருவிகளை மேம்படுத்தியே ஜேகுவார்ட் தறி வடிவமைக்கப்பட்டது.ஆனால் முதல் வெற்றிகரமான தானியங்கி கருவி ஜேக்குவாட்-னுடையதே .இந்த கருவி மூலமாக நாம் விரும்பும் வடிவமைப்புகளை துணிகளில் உருவாக்க முடிந்தது .

நெசவு :
நெசவு செய்யும் எந்திரத்தில் பக்கவாட்டில் நூலிழைகள் இறுக்கி கட்டப்பட்டிருக்கும் (Weft),பக்கவாட்டில் உள்ள நூலிழைகளின் ஊடாக நெட்டுவாக்கில் (warp) நூலிழைகளை பிண்ணுதல் என்ற முறையில் துணிகள் நெசவு செய்யப்படுகின்றன


.


ஜேக்க்வார்ட் தறியின் உதவியுடன் சிக்கலான வடிவமைப்புகளை கூட துணிகளில் டிசைன் செய்ய முடிந்தது ...

,இந்த டிசன்களின் படங்களையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள படங்களில் காணலாம் .
BROKAT
DAMASK
MATELASSE

ஜேகுவார்ட் நெசவு எந்திரத்தின் உதவியுடன் டிசைன் செய்யப்பட்ட ஜேகுவார்ட்

ஜேக்குவார்ட்-ன் இந்த படம் இவர் உருவாக்கிய தறி எந்திரத்தின் உதவியில் உருவாக்கப்பட்டது
இதை உருவாக்க 24,000 துளை இடப்பட்ட அட்டைகள் (punched card ) பயன்படுத்தப்பட்டன ! ,இந்த துணி தற்போது லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தில் உள்ளது

எப்படி இயங்கியது இந்த கருவி ??
இந்த தறியில் punched cards என்றழைக்கப்பட்ட ஓட்டை போடப்பட்ட அட்டைகள் பயன்படுத்தப்பட்டன (இவைதான் மென்பொருள் (software),அட்டைகளில் இருந்த துளைகளின் மாறுபாடுகளுக்கு ஏற்ப டிசைன்கள் உருவாக்கப்பட்டன.
இவைதான் மென்பொருள் (software )
ஜேக்குவர்ட் தறியில் போலுஸ் (bolus hooks ) எனும் சிறப்பு வகை கொக்கிகள் இருந்தன .இந்த கொக்கிகள் மூலமாகவே நெசவு எந்திரத்தில் நூற்பு வேலை செய்யப்பட்டது .
போலுஸ் (bolus hooks )

ஓட்டை அட்டைகளில் (punched cards ) துளை உள்ள பகுதி அடைப்பு பகுதி என இரு பகுதிகள் இருக்கும் ,போலுஸ் கொக்கிகள் நூலை தறியில் நூற்பு செய்யும் போது இந்த அட்டைகளில் உள்ள துளையுள்ள பகுதியில் நூலின் அடர்த்தி அதிகமாகவும் ,துளைஇல்லாத இடங்களில் நூலின் அடர்த்தி குறைவாகவும் நெய்யப்படும் ,இப்படியாக ... அடர்த்தி குறைவு மற்றும் அடர்த்தி மிகுதி அடிப்படையில் துணியில் டிசைன்கள் ஏற்படுத்தப்பட்டன.,(ஒரே டிசைன்-பேட்டர்ன் துணியில் திரும்ப திரும்ப வரும் படியாகவும் செய்ய முடிந்தது).
நெசவு எந்திரத்துக்கும் கணிப்பொறிக்கும் என்ன தொடர்பு ? அடுத்த பதிவு வரை காத்திருங்கள்....







 

Post Comment