Wednesday, November 09, 2016

வார்தைகளின் வார்த்தைகள்



எல்லா இடத்திலும் எல்லோரிடத்திலும் எல்லோராலும் ஒரே மாதிரி இருந்துவிட முடிவதில்லை , ஆளுக்கேற்ற மாதிரி ஆடை உடுத்தி இடத்திற்கேற்ற மாதிரி நடிக்க வேண்டிய நாகரீக கோமாளிகளாகத்தான் நாமனைவரும் இருக்கிறோம், "உண்மையாக யாருமே இல்லை" என வருத்தப்படுகிறவர்களால் கூட உண்மையான முகங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதும், அவர்களால் கூட உண்மையான முகத்துடன் எப்போதும் இருக்க முடிவதில்லை என்பதும் தான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

அவன் ஒரு நடிக்கத்தெரியாத அப்பாவி, மிக எளிதில் மனமுடைந்து போகும் இலகுமன பிராணி , ஆளுக்கேற்ற மாதிரி பச்சோந்தியாக தெரியாத படுபாவி., போலிகளை கண்டு கண்டு கடுப்பாகி வெறுப்பின் உச்சத்தில் யாவரையும், யாவற்றையும் வெறுத்து ,தனது நம்பிக்கையை வார்த்தைகள் கொண்டு கிழித்தெறிந்து எரித்தழிக்க முயல்கிறான் அவன் . வார்த்தைகள் மெல்ல மெல்ல அர்த்தமிழந்து அவனிடத்தில் மௌனமாகிப்போய் நிற்கிற போது அவன் வார்த்தைகளை வார்த்தைகளால் ஏசுகிறான்... (வார்த்தைகளும்  வாய்திறந்து அவனோடு பேசின ...)

ஏய் வார்த்தைகளே !!
ஏய் வார்த்தைகளே !!

உங்களை வீசித்தானே எல்லோரும்
காரியம் சாதித்துக் கொள்கிறார்கள் !
என் கைக்கு மட்டும் ஏன் உங்களை
வீசி எரியும் வித்தை வாய்க்கவில்லை

உங்களை கொண்டு தானே
என்னை ஏமாற்றுகிறார்கள்
ஏன் நீங்கள் என்னிடத்தில்
வாய் திறந்து சொல்லவில்லை !

உங்களை நம்பித்தானே
என்னையே மறுதலித்து
என்னையும் அடமானம் வைத்தேன்
ஏன் நீங்கள் தடுக்கவில்லை !

அவனி முழுக்க நிறைந்திருக்கும்
அத்தனை வர்த்தைகளும்
ஆதரவேதுமின்றி !
அர்த்தமிழந்து அலையட்டும் !

ஹ்ம் ..

உங்களை ஏசக் கூட
உங்கள் உதவிதானே
தேவைப்படுகிறது
எங்களுக்கு !
அந்த திமிரோ ?

உங்களையே சேர்த்து
உங்களிடத்தில் கேட்கிறேன்
உள்ளது உள்ளபடி
உண்மை சொல்வீர்களா ??

உங்களின் நிரந்தர இருப்பிடம் எங்கே ?
எங்கே இருக்கிறீர்கள் நீங்கள் ?
பேச்சின் பின்னாலா ?
எழுத்தின் பின்னாலா ?
வாசிப்பின் பின்னாலா ?

பின்னும் நாங்களில்லை
முன்னும் நாங்களில்லை
எல்லாமும் எல்லோரும்
எங்கள் பின் இருப்பதனை
அறியாயோ மானிடனே !
சர்வம் வார்த்தை மயம் !!

உங்களைக்கொண்டு தானே
நாங்களே பேசிக்கொள்கிறோம்
நீங்கள் கூட பேசுவீர்களா?
இத்தனை கால மௌனம்
உடைபட்ட மாயம் ?

இதுவரைக்கும் எம்மை யாரும்
உம்மைப்போல எரித்ததில்லை
உண்மையைச் சொல்லச் சொல்லி
உலுக்கியும் எடுத்ததில்லை.

ஓ!
அழுதிட்ட பொழுதுகளில்
அறுதலாய் வரவில்லை
அடித்துலுக்கிக் கேட்கையிலே
பதில் சொல்ல வந்தீர்களோ??

பேசப்படும் பொருளும்
பேச்சும் பொருளும் நாமே !!
பேச்சில் மறைந்திருக்கும்
சத்தமும் அமைதியும் நாமே !!

கேட்கிற சக்தியிருந்தால்
கேட்கமலேயே கேட்கும்
நாங்கள் கூறும்
ஆறுதல்கள் அறிவுரைகள்
அமைதியான பேருரைகள் !

ஏனெனக்குக் கேட்கவில்லை?

அழுகிற பொழுது அழுகையிலும்
சிரிக்கிற பொழுது சிரிப்பினிலும்
பேசுகிற போழுது பேச்சினிலும்
எதன்போதும் ஏதோ ஒன்றால்
எப்போதும் எம் குரலை
மறைத்து விடுகிறீர்கள் !!

மறுபடியும் உம்மை கேட்கிறேன்
ஏனெனக்கு
உங்களை வீசியெறிந்து
காரியம் சாதித்துக் கொள்ளும்
வல்லமை வாய்க்கவில்லை?

யாருக்கும் கேட்டிராத எம் குரலை கேட்பவனே !!
வல்லமை இல்லையென்று
சொன்னவன் எவனுனக்கு !!
எதைக் கொண்டு எமையிழுத்தாய் !

 எப்போதும் எம்மருள் தப்பாது உமக்குண்டு !
 ஒரு நிமிசம்....
 கயவர்களுக்கும் கூட
 உன் வல்லமை வாய்த்திருக்கிறதே ??
 காரணம் ??

 எம்மை நம்பி வாய்திறக்கும் யாவருக்கும்
 நன்று தீது பாராமல் எங்களருள் கிடைப்பதுண்டு !!

 எல்லோர் வார்த்தைகளையும் நம்பி விடாதே
 ஆனால் வார்த்தைகளின் உள்ளிருக்கும்
 வார்த்தைகளின் வார்த்தைகளை நம்பு !!....
 வேறு யாரோ கூப்பிடுகிறார்கள்
 வருகிறோம் !!!!
    
   

Labels: , , ,

Tuesday, January 29, 2013

கண்ணீர் துடைத்த கவிதை விரல்

  
வன் எண்ணங்கள் சிகரம் தொடும் உயரம் செல்லக்கூடியவை !,அவன் எண்ணங்கள் உயரே கிளம்புகிற பெரும்பான்மையான சமயங்களில் மற்றவர்களின் கேலியும்,கிண்டலும் அவன் எண்ணங்களுக்கு உயரத் தடை  ஆவதுண்டு ,அவனிடம் பேசுகிறவர்கள் தகாத வார்த்தைகளை சொல்லி ,தாழ்வு மனப்பான்மைக்குள் அவனை தள்ளி விடுகிற சமயங்களிலெல்லாம் அவன் கண்ணீருக்குள் மூழ்கி விடுவதுண்டு ,பிரபஞ்சத்தை பிரதிபலிக்கும் அவன் கண்கள் கண்ணீரில் நிறைந்திருந்த ஒரு ராத்திரியில் கவிதை ஒன்று அவனோடு பேச ஆரம்பித்தது !


னவுகளால் நிறைந்தவனே !
கண்ணீரில் மிதப்பவனே !
கண்ணிருக்கும் கண்ணீரை
துடைத்துவிட்டு வா உடனே !

முட்டாள் நீயென்று உலகம் சொன்னவுடன்
முட்டாளாய்  மாறிவிடும் முட்டாள் நீயில்லை !
 சொற்களை நம்பி சோகம் கொள்வதும் ,
வார்த்தைகள் கேட்டு வருத்தம் கொள்வதும்
மடையர்கள் வேலை , மடையன் நீயில்லை !
 மேகம் மறைத்தாலும் காகம் பறந்தாலும்
வானம் மாறாது வையத்தில் வீழாது

ன்னைப் பார்த்து உலகம் சொல்லும்
இழிமொழி கேட்டு தாழ்ந்து விடாதே!
கனவுகள் கலைக்க கணைகள் தொடுக்கும்
கரங்கள் கண்டு கலங்கி விடாதே !

வானம் போல வாழப்  பழகு
புல்நுனி மீது பனித்துளி போல
முள் நுனி மீதும் உறங்கப் பழகு

ட்டி வைத்த கோட்டை தனை
கண்ணீரில் கரைத்திடாதே !
மனம்  வரைந்த சித்திரத்தை
அழுதழுது அழித்திடாதே!

ன்னை அழவைத்த
உலகம் இதைப்பற்றி
உனக்கு தெரியுமா ?

"தைசெய் " "இதைசெய் " என்று
அறிவுரை ஆயிரம் சொல்லும்
உந்தன் வருத்தம் போக்க
ஆறுதல் வார்த்தை சொல்லும்
வெற்றி பெற வழிகள் சொல்லி
வேறு பாதை உனை திருப்பும் ;
ஆடு நனைய அழுகை கொள்ளும்
அதிசய ஓநாய்க்  கூட்டம்

யார் மீதும் முழுதாக
நம்பிக்கை  கொள்ளாதே!
எவர்பற்றி எவரிடமும்
எப்போதும் சொல்லாதே !
சுவரில்லா சித்திரங்கள்
பார்வைக்கு படுவதில்லை

சுவரை முதலில் கட்டு
சித்திரம் அதன்பின் தீட்டு

னவுகள் கண்ணீரில்
மூழ்கி விடக்கூடாது !

னவை கனலாக்கி
கண்ணீர் காயவை!
உணர்வை உணவாக்கி
கனவை வாழவை !

னவுகளால் நிறைந்தவனே !
கண்ணீரில் மிதப்பவனே !
கண்ணிருக்கும் கண்ணீரை
துடைத்துவிட்டு வா உடனே !

(இந்த உலகத்திற்கு நான் வந்து இன்றுடன் 22 வருடங்கள் ஆகின்றன ...!)

Labels: , , , , ,