Sunday, June 29, 2014

கண்ணீர்

 (அழுகை,கண்ணீரின்  ரகசியங்களையும் காரணங்களையும் கூறும் குட்டிப்  பதிவு)


துக்கம்,கவலை,ஆத்திரம்,இயலாமை,வெறுப்பு , அதீத சந்தோசம்...  என மனம் நிரம்பிப்போகிற பொழுதுகளிலெல்லாம் மனதின் நுழைவாயிலான கண்களின் வழியாக இமைக் கதவுகளை திறந்துகொண்டு இந்த மாய-திரவம் துளித்துளியாய்  கசிவதுண்டு.

கோபம்,சந்தோசம் என அதீத உணர்வுகள் அத்தனையின் காரணமாகவும் இந்த கண்ணீர் தோன்றுகிறதென்றாலும் கூட,  பெறும்பாலும் இது அழுகையுடனேயே நமக்கு அறிமுகமாகிறது. பிறந்தவுடனேயே மனிதக் குழந்தை செய்கிற முதல் வேலை அழுகை, பிறந்த பொழுதில் கண்களில் கண்ணீர் சுரப்பிகள் இருப்பதில்லை என்பதால் முதல் அழுகையின் போது கண்ணீர் வெளிப்படுவதில்லை,  குழந்தை பிறந்து சில வாரங்கள் ஆனபிறகே  அழுகையோடு இணைசேர்ந்து கண்ணீர் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

கண்களில் ஏதாவது தூசி விழுந்தால் நீரில் நிறைத்து அதை ஓரம் கட்டி வெளியேற்றி வெளித்தள்ளவோ, அல்லது இமைகளின் உராய்வில் கண் கலைப்புறாதிருக்கவோ, கண் வறண்டு போகாமல் காக்கவோ தான் பரிணாம வளர்ச்சியின் பரிசாக இந்த கண்ணீர் என்கிற விசயத்தை இயற்கை நமக்கு கொடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அழுகை
                              

னக்கும் இந்த கண்ணீருக்குமான உறவு  தேவபந்தம் ,ஜீவ பந்தம் என்னும் அளவுக்கு கெட்டியாக இருக்குமோ என எனக்கு சந்தேகமாக இருக்கிறது, சோகமோ,கோபமோ என்னையும் மீறி கன்னங்களின் வழியாக பாதையமைத்துக்கொண்டு  கடல்சேரத் துடிக்கும் நதியைப்போல கண்ணீர் ஓட துவங்கிவிடுகிறது...,கரைசேரத் துடிக்கும் அலையைப் போல உணர்வுகள் அலைபாயத் துவங்கிவிடுகிறது...

பிறந்துவிட்ட எல்லாருக்குமே "காலம்"  நிறையவே கற்றுக்கொடுக்கிறது ,சிலர் கற்றுக்கொள்கிறோம், சிலர் கற்றுக்கொள்வதில்லை... அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்ளும் விசயங்கள் அழிக்கமுடியாத அளவுக்கு ஆழமாய்ப் போய் ஆழ்மனதிற்குள் பதிந்துவிடுகின்றன .   எல்லோர் மனதிற்குள்ளும் ஏதோ ஒன்று எழுதப்பட்ட...  பலகையொன்று  ஆணி அடித்து மாட்டி வைக்கப் பட்டிருக்கும் என்பதை என்னால் அடித்துக் கூற முடியும்..

நான் அழத்துவங்கும் போதெல்லாம் என் மனம்  பிலாஸ்பேக் ஒன்றை ஓட்டிப் பார்த்து ஆறுதல் செய்து கொள்கிறது.,

கருவாக இருந்த நான் குழந்தையாய் பிறந்த பொழுதில் , இந்த உலகத்தைப் பார்த்து அழவில்லையாம்...  அழுகைக்கான ஸ்பேர் பார்ட்ஸ் உடலுக்குள் வளரத்துவங்கும் முன்னரே உலகத்திற்குள் என்னை அந்த புண்ணியவதி பெற்றுப்போட்டு விட்டாள் போல... 8 மாத குழந்தையாக அழாமல் கிடந்த என்னை ஜடமென்று சொல்லி வீசிவிட்டுப் போகச் சொன்னதாம் ஒரு கூட்டம்.

முந்திரிக்கொட்டைமாதிரி மாதம் பொறுக்காமல் பிறந்த விட்டதால் என்னை ஒரு Incubator கருவிக்குள் வைத்து வெப்பமும், அணைப்பும் கொடுத்திருக்கிறார்கள்...

பசிக்கு பால் கேட்டு அழக்கூடத்தெரியாத ஒரு குழந்தையாகத் தான்  நான் பிறந்திருக்கிறேன்...

இப்போதிருக்கும் "நான்" அப்போதிருந்த நான்-ஐ விட எவ்வளவோ  பரவாயில்லை என என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்..,

சரி .., (No more புலம்பல்ஸ்... :) )

 கண்ணீரின் காரணங்கள் :

கலக்கம் கொள்கிற போதெல்லாம் கண்களை கலங்க வைத்தபடி கண்ணிருந்து இந்த திரவம் கசிவதன் காரணம் என்னவென்று  பல நேரங்களில் நான் சிந்திப்பதுண்டு.

கண்ணீரின் காரணத்தை மூன்றாய் வகைப்பிரித்திருக்கிறது ஒரு ஆராய்ச்சி முடிவு.

காரணம் 1.
கண்ணுக்குள் விழும் அந்நியப் பொருளை நீரில் நனைத்து கண்ணோரமாய் கொண்டு சேர்த்து வெளியேற்றுவதற்காக

காரணம் 2.
கண்கள் காய்ந்துவிடாமல் காப்பதற்காக

காரணம்3.
அதீத,ஆழமான உணர்வுகளின் போது (வலி,கவலை,வெறுமை etc..,)

காரணம் 1 மற்றும் 2 ஆல்  கண்ணிலிருந்து கசிகிற கண்ணீருக்கும் காரணம் 3 -ன்  (உணர்வுகளின் ) போது வெளியாகிற கண்ணீருக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது...

சோகத்தின் காரணமாக, கவலையின் காரணமாக, வலியின் காரணமாக உடலுக்குள் ஒரு வித நச்சுத்தன்மை கொண்ட சுரப்புகள் உருவாகின்றனவாம், இவை உடலுக்குள் சேகரமாகும் பட்சத்தில் உடல் நலிவடைகிறது....

மனதிற்குள் சோக,வலி... உற்பத்திக்கு காரணமாய் இருக்கும் ஹார்மோன்களையும், நச்சு சுரப்புகளையும் 3 ஆம் காரணத்தால்  வெளியாகிற கண்ணீர் வழியாக கலந்து வெளியேற்றுகிறதாம் நம் உடல்.

மற்ற நேரங்களில் வெளிப்படும் கண்ணீரைவிட உணர்வுப்பெருக்கில் ஊற்றெடுக்கும் கண்ணீருக்கு அடர்த்தி அதிகம்,

அழுகையின் பிறகு மனம் கொஞ்சம் லேசாகிப் போனதாய் , ஆறுதல் கொண்டதாய் நாம் உணர்வதற்கு இந்த "கண்ணீரோடு கலந்து வெளியேற்றும் செயல்" தான் காரணமாக இருக்க வேண்டும்.

நம் சமூகத்தில் கண்ணீர் என்பதை வலிமையற்றதன் அடையாளம் என்பதாய் தப்பர்த்தம் செய்து வைத்திருக்கிறோம்.. அழுகை என்பது ஆணுக்கு இழுக்கு, அழுகையும் கண்ணீரும் கோழைத்தனமான செயல்கள் என்றெல்லாம் இட்டுக்கட்டி வைத்திருக்கிறோம்...


பெட்டி செய்தி:
மூக்கு நீர்
கண்ணீர் சுரப்பிகள் முகத்தில் மூக்குத் துவங்கும் இடத்திற்கு சற்றே மேலே கண்களின் ஓரத்திற்குள் அமைந்திருப்பதால் அழும் போது மூக்கிலிருந்தும் நீர் வருகிறது
அழுகாச்சி நோய்கள்:
காரணமிருந்தும் அழாததும், காரணமின்றி அழுவதும் நோய் என்கிறது மருத்துவத்துறை., இதற்கு பெயரெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள்...
காரணமின்றி அழுவது : Pseudobulbar Affect (சுருக்கமாக PBA)
காரணமிருந்தும் அழுகை வரவில்லை : Alexithymia
முற்றும் துறந்த ஞானிகளுக்கு இது பொறுந்தாது என நினைக்கிறேன்முதல் கண்ணீர்:

ஆண் அழுகை


மனிதனின் முதல் கண்ணீர் பற்றி அமெரிக்க பழங்குடி கதை ஒன்றுள்ளது...

முன்னொரு காலத்தில் , சீல் என்கிற கடல் சிங்க வேட்டைக்காக
கடலுக்குச் செல்கிறான் ஒருவன் . கடலோரமாய் கண்களை வீசியபடி கத்தியுடன் கைவீசி நடந்திருந்த அவன் பார்வையில் கூட்டம் கூட்டமாய் ஒரே இடத்தில் குழுமி இருந்த சீல் -களின் காட்சி படுகிறது, பார்த்த மாத்திரத்தில் அவன் மனம் துள்ளிக்குதிக்க ஆரம்பித்து விடுகிறது. அவனது பெண்டாட்டி பிள்ளைகளுக்கு நல்லதொரு விருந்து கிடைக்கப் போவதை எண்ணி பெரும் சந்தோசம் கொண்டவனாய் சீல்களின் அருகே மெல்ல மெல்ல தவழ்ந்து ஊர்ந்து செல்கிறான், அவனை கண்ட வேகத்தில் வேகமெடுத்து கடலுக்குள் பாயத் துவங்குகின்றன  சீல்கள்... கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய் விடக்கூடாது என்கிற சிந்தனையில் அவன் தன் வேகத்தை குறைக்கிறான்... கடலுக்குள் குதிக்கத்துவங்குகின்றன சீல்கள்... அந்த சீல் கூட்டத்தில் ஒரே ஒரு சீல் மட்டும் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது., நன்கு கொழுத்திருந்த சீல்... கிடைத்தது வேட்டை என சந்தோசமானான், இதை கொண்டு போய் கொடுத்தால் தன் மனைவி எவ்வளவு சந்தோசப் படுவாள் மனைவியின் சந்தோச முகத்தை மனதிற்குள் வரைந்துகொண்டான்... ஊர்ந்து செல்லும் சீல்-ஐ நோக்கி கைசெலுத்தி அழுத்திப்பிடிக்கிறான்... கைவிட்டு வழுக்கி பிடிகொடுக்காமல் நகர்ந்து ஓடி மறைந்து கூட்டத்துடன் கலந்து கடலுக்குள் செல்கிறது அந்த கொழுத்த சீல்..

கடுப்பாகிப் போய் எழுந்து நிற்கிறான் அவன் ... இதுவென்று பிடிபடாத ஒரு வித வினோத உணர்வு அவனை ஆட்கொள்கிறது கண்களில் இருந்து நீர் வெளிவரத் துவங்குகிறது., கைவைத்து தொட்டு அந்த நீரை சுவைக்கிறான் உப்பு கரிக்கிறது... மனம் கொண்ட வெதும்பலின் சத்தங்கள் அவன் வாய் வழியாக வெளிப்படத்துவங்குகிறது..

அவனது சத்தம் வீடு வரை கேட்கிறது... தந்தையின் வெதும்பல் சத்தம் கேட்டு என்னவென்று பார்க்க அம்மாவையும் கூட்டிக்கொண்டு ஒடி வருகிறான் மகன். கண்கள் ஈரமாகி இருப்பதையும்,வெதும்பல் சத்தத்தின் காரணத்தையும் கேட்கிறாள் அவன் மனைவி...

தான் சீல் பிடிக்கப்போன கதையையும் , அவை தப்பி ஓடின கதையையும் சொல்லத்துவங்குகிறான்... கதை கேட்டவுடன் அம்மா,மகன் இருவர் கண்களில் இருந்தும் அதே திரவம் வெளிவருகிறது,அவர்களும் வெதும்பல் சத்தத்தை வாய்வழியாக உதிர்க்கிறார்கள்.

இப்படியாகத்தான் உலகின் முதல் மனிதன் முதன் முதலில் அழத்துவங்கினான் என்கிறது அந்த கதை..

அதன்பின் தந்தையும் மகனும் இணைந்து வேட்டையாடி சீல்களை கொள்கிறார்கள், பின் சீல்- பிராணியின் தோலை பயன்படுத்தி ஒருவித "சீல்- பொறி " செய்து மேலும் மேலும் சீல்கள் பிடித்து சந்தோசமாய் வாழ்ந்தார்கள் என்று சுபம் போட்டு அந்த பழங்குடிக் கதை முடிக்கப்படுகிறது.


சீதை அசோக வனத்தில் இருந்தபோது அழுத கண்ணீர் ஆறாக பெருகி அதில் அவள் அன்னம் போல் நீந்தினாள் என்கிறார் கம்பர் , “Alice in Wonderland” - ல் ஆலிஸ் தான் அழுத கண்ணீரால் கண்ணீர் குளத்தை உருவாக்கி விடுவதாய் Lewis Caroll  எழுதுகிறார் ..
பழங்கால இந்திய புராணங்கள் ருத்ராஷ்ம் என்பது சிவ பெருமானின் கண்ணீர் என்பதாய் கதை ஒன்றை சொல்கின்றன (ருத்ரன் = சிவன் ஆக்ஷம் = கண்ணீர்).
Fairy tales, கடவுள் கதைகள் என... கண்ணீரை மையமாக வைத்து ஏகப்பட்ட கதைகள் உலகம் முழுதும்  புலக்கத்தில் இருக்கின்றன.

கதைகள் கிடக்கட்டும் நாம் நிஜத்திற்கு வருவோம்...

விலங்குகள் அழுமா??

சரி !! மனிதனைப் போல சோகம்,கவலை கொண்டு மற்ற மிருகங்கள் அழுது கண்ணீர் வடிக்குமா !!

தன் துணை யானைகள் கூட்டம் விட்டு பிரிந்தாலோ, இறந்தாலோ யானைகள் கண்ணீர் விட்டு அழுகின்றன. மனிதனின் பரிணாம முன்னோடிகள் என கூறப்படுகிற குரங்குகள் அழுகின்றன. தன்னை வளர்க்கிறவர்களின் உள்ளம் சோகம் கொண்டால் அதை உணர்ந்து வளர்ப்பு நாய்கள் அழுகின்றன.

வலி ஏற்படும் போது பெரும்பான்மை விலங்குகள் அழுகின்றன., அவற்றின் அழுகை பெரும் சத்தம் கொண்ட குரலாக ஒலிக்கிறது...

கண்களில் கண்ணீர் சுரப்பிகள் கொண்ட விலங்குகள் எல்லாமும் கண்ணீர் சிந்துகின்றன ( முதலைகள் கூட ... )..

என்றாலும்...

சோகம்,துக்கம்,கவலை,இயலாமை,இழப்பு,இறப்பு,கருணை போன்ற காரணங்களுக்காக யானைகள் ,குரங்குகள்,நாய்கள் தவிர அநேகமான விலங்குகள் கண்ணீர் சிந்துவது கிடையாது...

 கண்ணீர் நல்லது :
உடலையும் , மனதையும் கெடுக்க வருகிற ஒவ்வொரு அயல் காரணி மீதும் அசாத்திய துணிச்சலுடன் போரிட்டு வெளியேற்றுகிற வலிமையை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இந்த இயற்கை கொடுத்திருக்கிறது.

உடலுக்குள் புகுந்துவிட்ட நோய்க்கிருமியை காய்ச்சல் மூலம் காய்ச்சி எடுப்பது, காற்றோடு கலந்து மூக்குக்குள் செல்லும் தூசியை தும்மல் மூலம் வெளித்தள்ளுவது,

இருமல்,விக்கல்,புரையேறல்...

இப்படியாக அந்நிய காரணியை வெளியேற்ற மனித உடல் மேற்கொள்ளும் போர் நடவடிக்கைகளில் ஒன்று தான் இந்த கண்ணீரும்.,

துன்பம்,துக்கம் காரணமாக உடலுக்குள் உருவாகும் தேவையற்ற நச்சுப் பொருட்களையும், நம்மை சோக கீதம் பாட வைக்க காரணமாக இருக்கும் ஹார்மோன் களையும் அடித்து துவ்ம்சம் செய்து கூட்டி,பெருக்கி சுத்தம் செய்து கண்களுக்கு கொண்டுவந்து கண்ணீருடன் கலந்து உடல் விட்டு தூர வெளியேற்றும் செயல் தான் அழுகை


அழுகை என்பதை சோகத்தால் ஆட்பட்ட மனம் ஆனந்தமாக்கலுக்காக தன்னை ஆயத்தப்படுத்தும் செயல் எனச்சொல்லலாம்..

 உள்ளம் கொள்கிற உணர்வுகளையெல்லாம்  கண்கள் வழியாக கசிய வைத்து காணமல் போக செய்கிறது இந்த கண்ணீர் ...

கண்ணீர் என்பது உண்மையிலேயே அற்புதமான விசயம்.அழுவதற்கு வாய்ப்புக் கிடைத்தால் முழுமையாய் அழுதுவிடுங்கள்...

முழுமையாக சிரிக்க நினைக்கிற எவரும் முழுமையாக அழ வேண்டும் !! சோகக் காரணிகளை கண்ணீராய் வெளியேற்றத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே சந்தோசத்தின் கதவுகள் முழுமையாகத் திறக்கப்படுகின்றன...
பின் குறிப்பு 1:

1.அழுது முடித்ததும் கண்ணீரை துடைத்துவிட்டுக்கொள்ளுங்கள். 
2.துடைத்துவிட கைகள் ஏதும் வந்தால் தட்டிவிடாதீர்கள்.(அவை கண்ணீரை துடைப்பதற்காகத் தான் வருகின்றன என்றால் மட்டும்)
3.அழவைப்பவர்களை கூடுமான வரை தவிர்த்துவிடுங்கள், அடித்து நொறுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் போட்டுத் தாக்கிவிடுங்கள் J .

பின்குறிப்பு 2:

அழுது முடித்ததும்... நீங்கள் இந்த விசயங்களில் ஏதேனும் “...லாம்” களை மேற்கொள்ளலாம்...

1.   நன்பர்களுடன் (அ) நெருக்கமானவர்களுடன் மனம் விட்டுப் பேசலாம்
2.   தலையணைக்குள் முகம் புதைத்து தூங்கி விடலாம்
3.   மனதை லேசாக்கும் திரைப்படங்கள் பார்க்கலாம்
4.   பாடல்கள் கேட்கலாம்
5.   பிடித்தமான புத்தகங்கள் வாசிக்கலாம்
6.   செல்லப் பிராணியை செல்லமாய் இம்சிக்கலாம்
7.   காலாற நடக்கலாம்
8.   குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கைப் பார்க்கலாம்
9.குழந்தைகள் அனுமதி கொடுத்தால் அவர்களோடு விளையாடலாம்
10.   நீங்கள் ஜிம்-பாயாக இருந்தால் எக்ஸர்சைஸ் செய்யலாம்
11.குத்துச் சண்டை பயிற்சி கொடுக்க ஒரு மூட்டை வைத்திருப்பார்களே அதை வாங்கி வைத்துக்கொண்டு குத்தி விளையாடலாம்
11. உங்கள் மனதிற்கு பிடித்தமான விசயத்தை செய்யலாம்
12. இது மாதிரி சமூகத்திற்கு கருத்துச் சொல்கிறேன் பேர்வழி என எதையாவது “BLOG- ல் எழுதி வைக்கலாம் J


கருத்துக்கள் இருப்பின் மறக்காமல் பகிரவும்...


           JJJJJJJJ

 

Post Comment

Saturday, June 14, 2014

சிட்டுக்குருவியின் வானம் 1.2

சிட்டுக்குருவியின் வானம் 1.2

கவர்ச்சியும்... காரணமும்...

 வளோ ஒருத்திகாட்டுகிற கவர்ச்சிக்கும் எவளோ ஒருத்தியின் அழுகைக்கும் "மறைமுகமான ஒரு நேரடி தொடர்பு " இருக்கிறது என்று கடந்த பதிவில் புலம்பியிருந்தேன்..
இந்த விசயத்தை பெரும்பாலானோர் ஆம் என்று ஆமோதித்தாலும், அதெப்படி !! என்று கேட்கத்தான் செய்கிறார்கள் சிலர்.

அதெப்படி !!
 விளம்பரப்படங்களை நீங்கள் கூர்ந்து கவனித்தால் ஒரு விசயத்தை உங்களால் கவனிக்க முடியும்.
 ஆண்களுக்கான சேவிங்க் கிரீம், ஆண்களுக்கான Body ஸ்ப்ரே, ஆண்களுக்கான உள்ளாடை,இப்படி ஆண்களுக்கான விளம்பரங்களை ஆண்களிடம் விளம்பரப்படுத்த கவர்ச்சி என்கிற ஒரு காரணம் தேவைப்படுகிறது,
அதேசமயம் !! ,பெண்களுக்கான பொருட்களின் விளம்பரங்களில் ஆண் என்பவன் இருந்தாலும் கூட அரைகுறை ஆடையில் கவர்ச்சி காட்டும் அவசியம் அவனுக்கு இருப்பதில்லை
 வார இதழ் ,மாத இதழ், சிறப்பிதழ் போன்றவைகளின் அட்டைப்படங்களை ஆண்களைவிட,பெண்களே அதிகம் அபகரிக்கின்றார்கள்.,கவர்ச்சி நடிகைகளுக்கு இருக்கும் செல்வாக்கு கவர்ச்சி நடிகர்களுக்கு இல்லை.

 பெண்ணை ஒரு கவன ஈர்ப்பு காரணியாக பயன்படுத்தும் வித்தையையே விளம்பர நிறுவனங்களும்,சினிமாக்களும் செய்து கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. "பெண்" கவன ஈர்ப்பு காரணியாக மாற்றப்பட்டதன் காரணம் என்னவாக இருக்கும் ?, கவர்ச்சிக்கும்,ஆணின் உணர்விற்கும் என்ன சம்பந்தம்?.இந்தியா இந்த விசயத்தில் மோசம் போக என்ன காரணம்.

 இந்த விசயங்களின் பின்னால் மறைந்திருக்கும் அறிவியல் ,உளவியல் மற்றும் சமூகவியல் காரணிகளை சுருக்கமாக பார்த்து விடலாம்

ஆதியாகமம்:
 
ஆதியாகமம்
 ஆதாம் என்கிற ஆண் தான் முதலில் தோன்றியவன் என்று பெரும்பான்மையான மதங்கள் முன்மொழிகின்றன.ஆனால் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்,உலகில் முதலில் தோன்றியது ஆண் கிடையாதாம் பெண் தானாம்.,
 குரங்கிலிருந்து மனிதனாக பரிணமிக்க துவங்கிய வரலாற்றில் (க்ரோமேக்னன்,நியான்டர்தால்,ஹோமோ ரொடீசியன்ஸ், ஹோமோ எரக்டஸ்,...) என்று வாயில் நுழையாத பெயர் கொண்ட அந்த பட்டியலில் தற்காலத்திய மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸின் வித்தாக முதன் முதலில் அவதரித்தவள் பெண் என்பதற்கான தொல்லியல் சான்றுகள்,டி.என்.ஏ ஆய்வுகள் போன்றவற்றை கொண்டு " பரிணாம வளர்ச்சியில் ஆணின் முன்னோடி பெண் தான் " என்ற  தன் ஆராய்ச்சி முடிவை எடுத்துவைத்து ஆதாரத்துடன் அடித்துக்கூறுகிறது அறிவியல்.
  இன்றளவிலும் கூட உடல் முதிர்ச்சி,மனப்பக்குவம் போன்ற விசயங்களில் ஆண் இனத்தைவிட பெண்ணினமே முதலில் பரிணமிக்கிறது என்பது கண்கூடான உண்மை.(இந்த விசயத்தை பிறிதொரு பதிவில் விளக்கமாக அலசலாம்)

 ஆதிகாலத்தில் அதாவது,மனித இனம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்திருந்த காலக் கட்டத்தில் தனக்கான ஆணை தேர்வு செய்யும் உரிமையை பெண்ணே பெற்றிருந்தாள் வலிய இனம் தன் மூலம் பெருக வழி வகுக்கும் விதமாக.நல்ல பலசாலியான,தனக்கு வேட்டையாடி உணவு கொண்டுவந்து தர வக்குள்ளவனாகப் பார்த்துப் பார்த்து அவள் இணை சேர்ந்தாள்.

 ஆண் இனமும் பெண் தனக்கானவனாக தன்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகவே தன்னை பலசாலியாக நிரூபிக்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பிக்கின்றது

காட்டுமிராண்டி காலத்திலேயே ஆண்கள் , பெண்ணை பார்க்கிற போதெல்லாம் தன்னை வீரனாக காட்டிக்கொள்ளவும்,தான் பெண்ணை வைத்து காப்பாற்ற வக்குள்ளவன் என்று நிரூபிக்கவும், என்னவெல்லாம் வழிமுறைகள் உண்டோ அவை எல்லாவற்றையும் செய்யத்துணிகின்றார்கள்.

 நமது இந்தியக் கலாச்சாரத்தில் கூட ராமாயணம்,மகாபாரதம் போன்ற ராஜா காலத்து கதைகளில் பெண்ணானவள் வீரம்,அழகு எனப் பகுத்தாய்ந்து தனக்கானவனை தேர்வு செய்ததை பற்றிய கதைகள்  காணப்படுகின்றன.காளையை அடக்குபவனுக்கே பெண் என்கிற பழந்தமிழ் பண்பாடு கூட நம்மிடையே இருந்திருக்கிறது. உலகின் இன்னபிற பாரம்பரிய கலாச்சாரங்கள் அத்தனையிலும் வீரம் காட்டி பெண் பிடிக்கும் கதைகள் இருக்கின்றன. 
 ஆணாக பிறந்தவன் பெண்ணுக்கான பாதுகாப்பாக தன்னை நிரூபித்து பெண்ணை மணந்து கொள்ளும் காலம் அப்போது இருந்திருக்கிறது என்பதை இந்த தகவல்களின் அடிப்படையில் நாம் புரிந்துகொள்ள முடிகிறது

காட்டுவாசி - நாட்டுவாசி:
 பரிணாம வளர்ச்சியில் காட்டுவாசி நாட்டுவாசியாக மாறிய பிற்பாடு," ஆண் என்பவன் பெண்ணுக்கான பாதுகாப்பு" என்கிற கருத்து ஆண் மனதில் ஆழமாக பதிய ஆரம்பித்து விடுகிறது, நாகரிகம்,சமூகம்,அரசாங்கம் என்று முன்னேறிய பிறகு பெண்ணை பாதுகாப்பது ஆணின் கடமை என்பதாக பல்வேறு "பெண் காப்பு" சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

நம் இந்திய கலாச்சாரத்தில் பெண் பற்றிய அடிமை எண்ணங்களெல்லாம் இடையில் வந்தவைகள் ,காலச்சக்கரத்தை ரொம்ப பின் நோக்கி நகற்றுகிறபோது நம் இந்திய பண்பாட்டில் பெண்ணை அடிமை செய்யும் போக்கு இருந்திருக்கவில்லை,என்று தெளிவாக தெரிகிறது.
உலகின் அநேகமான மதங்கள் கடவுளை ஆண் பாலாக மட்டும் வைத்து அழகுபார்த்த அந்த காலத்திலேயே பெண்ணை தெய்வமாக வழிபடும் சாக்தம் என்ற சக்தி வழிபாடு இங்கு இருந்திருக்கிறது.நதி,கடல்,பூமி போன்றவைகளுக்கு பெண் பெயரிட்டு தாயாக காணும் பண்பாடு இருந்திருக்கிறது,பெண்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை,ஆணுக்கு போட்டியாக வாதம் , தர்க்கம் போன்ற போட்டிகளில் பங்கேற்று அவனை தோற்கடிக்கும் அளவுக்கு அறிவாற்றல் இருந்திருக்கிறது... 
" தையல் சொல் கேளீர் " என்று ஒரு பெண்ணே சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு சுதந்திரம் இருந்திருக்கிறது.
நீதி மறுக்கப்பட்ட தன் கனவனுக்காக தானே சென்று வாதாடி சண்டைபோட்டு ஒரு நகரத்தையே தீமூட்டும் அளவுக்கு வீரமும்,திராணியும்,வாய்ப்பும் இருந்திருக்கிறது..


 காலம் நகர நகர ...

 இந்திய நாகரிகத்தில் , பெண் என்பவள் ஆணின் நிழலிலேயே வாழ வேண்டிய உயிரினம்.அவளுக்கென்று சுதந்திர எண்ணங்கள் இருக்கக்கூடாது.இருந்தால் தவறு ,பிறந்த பின் தந்தையின் பராமரிப்பில் தந்தையின் கருத்துகளுக்கு கட்டுப்பட்டு இருப்பவளாக வளர்ந்து, வளர்ந்த பிறகு கனவனின் பராமரிப்பில் பணிவிடை செய்து,கனவனே கண்கண்ட தெய்வம் என்று அவன் சொல்வதன்படியே வாழ்ந்து தன் காலத்தை கழிக்க வேண்டியவளாக  இருக்க வேண்டும்.(கனவன் இறந்தவுடன் அவனை எரிக்க மூட்டப்பட்ட தீயிலேயே அவளும் விழ வேண்டும் என்ற வழக்கம் கூட இருந்திருக்கிறது).

இவைகளெல்லாம் பின் எப்படி நம்மவர்களிடையே வந்திருக்கும் !

                                             சிட்டுக்குருவி சிறகடிக்கும்...


 லேபில்கள்: பெண் அடிமையானது ஏன்,இந்தியாவில் பெண்கள் நிலை,உடன் கட்டை ஏறும் வழக்கம்,பெண்கள் நிலை,ஆண்,பெண்,காமம்,அறிவியல் பின்னனி,மனோதத்துவம்,சைக்காலஜி,ஆண் பெண் நிலை,இந்தியப்பெண்,பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள்,ஆதாம் ஏவாள்,ஹோமோ சேப்பியன்ஸ்,விளம்பரம்,பாலிவுட்

 

Post Comment