Monday, November 16, 2015

மழை அதிகாரம்

                                 மழை அதிகாரம்


மழையைப் பழித்தல் 
வேலைக்குப் போக முடியல,
பொழப்ப கெடுத்துருச்சு,
நாசமாய்ப்போற மழை,
மழையால டிராபிக் ஜாம் ஆகிடுச்சு,
சாக்கடை நெரஞ்சுடுச்சு,
ரோட்டுல நடக்க முடியல

நமக்குலாம் மழை தேவையா !,
போய் வேற எங்கயாவது பெய்ய வேண்டியதுதானே !
நாம இப்ப மழைய கேட்டோமா ?!


மழையை வியத்தல்:


 வானிருந்து பூமி வருதலால் அது அமிழ்தம்

                           - அறத்துப்பால் அதிகாரம் 2 .  வான் சிறப்பு

லகில் உயிர் நிலைத்திருப்பதற்கான மூலக் காரணங்களுள் தண்ணீரின் பங்கு கணிசமானது, அதிமுக்கியமானது.

தண்ணீர் - உலகிலும் சரி , உடலிலும் சரி முக்கால்வாசி இடத்தை இதுதான் ஆக்கிரமித்திருக்கிறது.நிலமும் சரி, உடலும் சரி தண்ணீர் போட்ட பிச்சை தான்.

எல்லா வகையிலும் மழை தான் தண்ணீரின் ஆதாரம்..

மழையைப் பொருத்தவரை அசுரத்தனம், அதீதம், அநியாயம், அதிகம் என்றெல்லாம் வரையறைகள் வைப்பது தவறு. பூமியின் தேவைக்கருதி அது பெய்கிறது., உங்களுடைய, என்னுடைய தேவைகருதி அல்ல.

சிலப்பதிகாரத்தின் வாழ்த்துப்பாடலில் இளங்கோவடிகள் மாமழை போற்றுதும் எனப் பாடி மழையை வணங்குகிறார், ( தற்போது தமிழகம் கண்டுகொண்டிருப்பது ஒருவகையில் மாமழை தான். மா.. மழை !).

                                    *****

டந்த சில தினங்களாக முன்பெப்போதும் போலில்லாது மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அநேக இடங்களை மூழ்கடித்து இன்னமும் பெய்துகொண்டிருக்கிறது. சில இடங்களை சிறிதும் இரக்கமின்றி தலைமுழுக தயாராகிக் கொண்டிருக்கிறது.

மழையில் நனைந்தபடி நடத்தல், மழையை ரசித்தபடி தேநீர் பருகுதல், பெய்து தேங்கிய மழைநீரில் காகிதக்கப்பல் விடுதல்... இவையெல்லாம் ரசிப்பதற்கும், நினைப்பதற்கும் அழகாய்த்தான் இருக்கின்றன. ஆனால் உண்மை வேறுவிதமாக வடிவெடுத்திருக்கிறது.

"வேலைக்கு போக முடியல", " பொழப்ப கெடுத்துருச்சு, "நசமாய்ப்போற மழை", " இந்த மழையால டிராபிக் ஜாம் ஆகிடுச்சு, சாக்கடை நெரஞ்சுடுச்சு, ரோட்டுல நடக்க முடியல", ...

அநேக இடங்களில் மழை அழையா விருந்தாளியாக அவமதிக்கப்படுகிறது. நன்றியை தன் வாழ்வின் அங்கமாக கொண்ட தமிழினம் நன்றிகெட்டு எப்படி இப்படி ஆனதென்று தெரியவில்லை. உனக்கு வந்தா தெரியும் என என்னை நீங்கள் கைகாட்டலாம்., எனக்கு கவலையில்லை., மழையைப் பழித்தல் தவறு என்கிற என் கருத்தை நான் மாற்றிக்கொள்ளப்போவதில்லை.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ! பெரும்பாலும் நாம் சுயநலமானவர்கள், குடை கொண்டுபோகாத போது , ஒதுங்குவதற்கு இடம் இல்லாதபோது, கொடியில் துணி காயப்போட்டிருக்கும்போது, மாடியில் கருவாடோ,வடகமோ,வற்றலோ உலரும்போது, மழை பெய்ய ஆரம்பித்தால் மழையைப் பழிக்கிறோம்.

வீடுநோக்கி செல்லும் குடையற்ற தினங்களில் நான் வீட்டிற்கு போகும் வரை மழை பெய்ய வேண்டாம் என நினைத்துக்கொள்கிறோம்.

பள்ளி/கல்லூரி நாட்களில் மழையின் காரணமாக விடுமுறை ஆக வேண்டுமென அடைமழை வேண்டி ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம். வேண்டாத தினங்களில் அலுவலகங்கள் மழைக்குள் மூழ்கி விடுமுறை கிடைக்காதா ? என ஏங்குகிறோம்.

நமக்கு உதவுவது மட்டும்தான் நல்லது, என்கிற சித்தாந்தம் நமக்குள் வேர்விட்டு ,கிளைவிட்டு மரமாகி காடாக விரவிக்கிடக்கிறது. எதுவும் உடனுக்குடன் பலன் தர வேண்டும் என்கிற இன்ஸ்டன்ட் கலாச்சார புத்திக்கு மழைநீர் நிலத்திற்குள் சென்று நாளைய சந்த்திக்கு உதவும் என்று சொன்னால் உறைக்கப்போவதும் இல்லை, அவர்கள் அதை நம்பபோவதும் இல்லை.

மாமழை !

சென்னையைப் பற்றி பேசியே ஆக வேண்டும் , சென்னையைப்பற்றி பேசாவிட்டால் இந்த மழைக் கட்டுரை ஜென்ம சாபல்யம் அடையாது. 
இந்திய பெருநகரங்களில் தண்ணீரை மிகக்குறைவாகப் பயன்படுத்தும் புண்ணியபூமி சென்னை என்கிறது ஒரு புள்ளிவிவரம். காரணம் தண்ணீர் சிக்கனம் இல்லை, தண்ணீருக்கான பற்றாக்குறை. பற்றாக்குறையைப் போக்கிக்கொள்ள மக்கள்கூட்டம் ஆழ்துளையிட்டு பூமிக்குள்ளிருக்கும் நீரை உறிஞ்சுகிறது.

தமிழக தலைநகராம் சென்னையில் ஒரு வருடம் குப்பைக்கொட்டியவன் என்கிற முறையில் ஒரு விசயம் சொல்கிறேன். தமிழகத்திலேயே மிக மோசமான குடிநீர் சென்னையில் தான் இருக்கிறது, அதற்கு மெட்ரோ வாட்டர் என புனைபெயர் வேறு !

தண்ணீரை காசுக்கு வாங்கி குடிப்பது கௌரவம் என்னும்  நிலை மாறி சாவைத்தள்ளிப்போடும் சாகசக்கலை என்னும் அளவிற்கு சென்னையின் நிலைமை இருக்கிறது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் ,

சமநிலை என்பது பிரபஞ்ச தத்துவம். 

குறைகிற போது நிறைத்து சமன்செய்ய முயல்வது தான் இயற்கையின் குணம். காற்றழுத்தம் குறைவுபட்டால் அதிகமாக இருக்கும் இடத்திலிருக்கும் காற்று குறைவழுத்தத்தை நோக்கி நகரும், எலக்ட்ரான்களை குறைவு படுத்தினால் மின்னோட்டம் உருவாகி அவை சம்மாகும், நிலத்திற்குள்ளிருக்கும் நீரின் அளவை குறைத்துக்கொண்டே வந்தால் சமப்படுத்த தன்னால் ஆனதை இயற்கை செய்யும்.

மழையே பெய்யாது என நம்பி ! தண்ணீர் வற்றிப்போன ஆறு, குளம் , ஏரி, கண்மாய் என அத்தனையிலும் வீடுகட்டிக்கொண்டு வாழ்கிறோமே ! அந்த இடங்களில் மழை நீர் வந்தால் அது மழையின் பிழை என்று சொல்வது நியாயமா !?

அண்டை மாநிலங்களிடம் நீர் கேட்டு அழுகிறோமே கேரளத்திலும், கர்நாடகத்திலும் மரங்கள் அதிகம் இருக்கின்றன, அங்கே மனிதர்களுக்கு மட்டுமின்றி மரங்களுக்கும் காடுகள் இருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் நாம் யோசிக்கின்றோமா !
                                          *****


  • தமிழகத்தில் காமராசர் ஆட்சிக்குப் பிறகு அணைகளே அமையவில்லையாமே !!
  • பெய்த மழைத் தண்ணீரை வெளியேற்ற அரசாங்கம் என்ன செய்யும் , மோட்டார் போட்டு மறுபடியும் மண்ணுக்குள் அனுப்புமா, வடிகால் அமைத்து கடலுக்கு அனுப்புமா !? வற்றட்டும் என அப்படியே விட்டுவிடுமா !!
  • நிவாரண நிதி என்று எவ்வளவு பணம் கொடுப்பார்கள்
  • வரப்போகும் புயலுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் ?
  • இந்த மழை எப்போது நிற்கும்?

ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது ! வீட்டிற்கு வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது,

கட்டுரையை பதிவதற்கு முன் மழையை எட்டிப்பார்த்தேன்..

சர சர குரலில் மறுபடியும் ஒரு மழைத்துளி என்னிடத்தில் பேசியது ...

"வியக்கவும் வேண்டாம், பழிக்கவும் வேண்டாம் .. , நகர மட்டும் கொஞ்சம் இடம் கொடுங்கள். "

அடித்தாலும் அணைத்தாலும் அவள் அன்னை என்போமே மழையும் கூட நம் அன்னை தான் !
ஹையா!! லீவு உட்டாச்சு 
 

Post Comment

Tuesday, September 29, 2015

கணினிக்குத் தமிழ் கற்றுக்கொடுப்போம் !

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
- மகாகவி பாரதிட்டுத்திக்கும் சென்று எல்லாக் கலைகளையும் தமிழுள் சேர்த்தால் தமிழ் சாகாவரம் பெற்று சாகாது நிலைத்திருக்குமெனச் சாத்திரமுரைக்கிறார் பாரதி.
மெல்லத் தமிழ் இனி சாகுமெனக் கூறிய பேதையொருவனின் வாக்கைப் பொய்ப்பிக்கத் தமிழ்த் தாய் தமிழர்களை நோக்கி அறைகூவல் விடுத்து கூறுவது போலப் பாரதியார் மேற்காண் வரிகளைத் தன் கவிதையொன்றில் குறிப்பிடுகிறார்.

தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் யுகத்தைக் கலியுகம் என்று குறிப்பிடுவதைவிடக் கணினி யுகம் என்று குறிப்பிடுவது மிகப்பொருத்தமாக இருக்கும். எங்கும் எதிலும் கணினியின் பயன்பாடு. எல்லாத் திக்குகளிலும் பரவிக்கிடக்கிறது கணினியின் ஆதிக்கம்.

இன்னொரு முக்கியமான விசயம், தற்காலத்தில் எல்லோருக்கும் துளியளவேனும் கணினியின் பரிட்சயம் வாய்த்திருக்கிறது.

கரன்ட் பில்ல நெட்ல கட்டு!எனப் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத என் அம்மாச்சி சொல்கிறார். படிப்பறிவு அறவே இல்லாத பலருக்கும் கூடப் பேஸ்புக், வாட்ஸாப், இணையப் பயன்பாடு இவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது. நம்முள் தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்களுக்குக் கூட இணையத்தைத் தமிழில் கையாள தெரிந்திருக்கிறது. கையடக்கச் சமர்த்து (Smart gadgets ) கருவிகளைக் கையாளும் சாமர்த்தியம் இருக்கிறது. இணையத்தில் அவர்கள் செய்திகள் வாசிக்கிறார்கள், யூட்யூபில் காணொளி பார்க்கிறார்கள், தமிழ் வலைப்பூக்களை வாசிக்கிறார்கள் , வலைப்பூக்கள் எழுதவும் செய்கிறார்கள்.

கணினி யுகத்தில் தமிழ்:

உலகின் இன்னபிற மூலைகளில் இருந்த இனங்கள் காட்டுமிராண்டிகளாகக் காலம் கழித்துக்கொண்டிருந்த காலத்திலேயே கவிதை, இலக்கியம், இலக்கணம், என வளர்ந்த மொழியாய் வலம் வந்த மொழி நமது. அறம்,பொருள்,இன்பம் என மறை வகுத்து வாழ்ந்த மக்கள் நாம்.

நம் தமிழ் மொழிக்கு ஆயுள் ரொம்பக் கெட்டி ! நம் தமிழை அழிந்துவிடும் நிலையில் இருக்கும் அரிய மொழி என்று யாராவது கூறினால் எனக்கு அவ்வளவு கோபம் வரும் . உலகில் தமிழ் பேசுபவர்களின் மொத்த எண்ணிக்கை 68,776,460 என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறார்கள். கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம் !. உலக மக்கள் தொகை 7.3 பில்லியன் (73 க்குப் பக்கத்தில் எட்டு பூஜ்ஜியங்கள்). தமிழர்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் தோராயமாக 0.9 சதவீதம் வருகிறது. தமிழ் அழிந்துபோகும் என்பதில் எனக்கு அபிப்ராயம் இல்லை.

கடல்கோளினால் முற்றிலும் அழிக்கப்பட்டபின்பும் கூட அழியாது அவனியில் இருக்கிறது, மூவாயிரம் வருடத்திற்கு முன் எழுதின தமிழ் புத்தகங்களையெல்லாம் இன்றும் கூடப் பத்திரமாக வைத்திருக்கிறோம். (இணைய நூலகங்களிலும் !). ஆண்டாண்டு காலத்திற்கும் அழியாதிருக்கும் அபூர்வ வரம் நம் தமிழ் மொழிக்கு வாய்த்திருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியும் தமிழும்?

தொழில்நுட்ப வளர்ச்சியால் தமிழ் நசிந்து வருகிறது என்று நம்மில் ஒருசாரார் சொல்லிக்கொண்டு திரிகிறோம், அதேபோல கணினி வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஆங்கிலம் மீதான மோகத்தை அதிகரித்திருக்கிறது , தமிழ் மீதான பற்றைக் குறைத்துள்ளது எனவும் சொல்கிறோம்..

 சமூகத்தின் இத்தகைய சிந்தனை போக்குகளால் தொழில்நுட்பம் கற்றவர்கள் தமிழை ஒதுக்கித்தள்ளுறார்கள் என்கிற கருத்தும் பரவலாக பரவியுள்ளது.

இவையெல்லாம்  உண்மைதானா !?

தமிழின் வாசனையே இல்லாத பன்னாட்டு நிறுவனப் பணிகளில் பணிபுரியும் பலரும் கூட இன்று தமிழில் வலைப்பூக்கள் எழுதுகிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் அயல் தேச தமிழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்கள். (ஆங்கிலமே உயர்வு என்று சொல்லி தமிழைத் தரக்குறைவாக மதிப்பிடும் ஒரு சில அரைவேக்காட்டு ஆங்கிலச் சூரப்புலிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள், இருந்தாலும் தமிழ் பற்றுடைய தொழிநுட்பவியலாளர்களால் அவர்களின் ஒளி மங்கி விடுகிறது) .

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் , நம் தமிழ் மொழிக்கு கணினி எழுத்துருக்கள் (Fonts) உருவாக்கி, அதற்கு பிரத்யேக இருமக்குறிகளை சித்தரித்து செந்தமிழை கணினிக்குள் கொண்டுவந்தது தமிழ் பற்று கொண்ட ஒரு தொழில்நுட்பவியளாளரின் முயற்சி தானே !

ஒரு காலத்தில் தமிழை கணினிகள் புரிந்து கொள்ளும் வடிவில் குறிமாற்றம் (Encoding) செய்வதில் பல குளறுபடிகள் இருந்திருக்கின்றன, TSCII , TAM, TAB, ஸ்ரீலிபி, இன்டோ-கோடிங்க் .. இப்படி பல்வேறு கோடிங்க் முறைகளை பயன்படுத்தி தமிழை கணினிக்குள் உள்ளீடு செய்திருக்கிறோம்!

ஒரு கணினியில் ஒருவகை குறிமாற்ற முறையில் எழுதப்பட்ட தமிழ், அத்தகைய குறிமாற்றமுறை (Encoding) இல்லாத வேறொறு கணினியில் கட்டமும், வட்டமுமாக, தமிழாக அல்லாமல் வேறு ஏதோ ஒன்றாக தெரிந்திருக்கிறது. அதேபோல அத்தகைய encoding  அறியாத அச்சுப்பொறியில் அவ்வெழுத்துக்கள் அச்சாகாது.

( ஒருவகையாக இந்த குளறுபடிகளெல்லாம் இப்போது குறைந்திருக்கின்றன. :) )

இப்படியாக பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களை குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்று இன்றைக்கு  எல்லாக் கணினிகளிலும் நாம் படிக்கும் (TACE-16 Unicode encoding  )  தொழில்நுட்பமாகக் கொண்டுவந்தது தொழில்நுட்பம் கற்ற தமிழர்களின் முயற்சி தானே !

கல்வெட்டுக்கள், களிமண் வார்ப்புகள், ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், காகிதங்கள் எனத் தனது எழுத்துப்பதிவை பதித்த தமிழ் இன்று சிலிக்கன் சில்லுகளுக்குள் ஈரிலக்க குறிமுறையில் (Binary Encoding) பதியப்படுகிறது.

தமிழ் இலக்கியங்கள், புத்தகங்கள், அகராதிகள், நிகண்டுகள் எனத் தமிழ் மொழி இலக்கமுறையாக்கதின்பாற்பட்டு (Digitalization) கணினிக்குள் வந்துவிட்டது !

இப்போதைய காலகட்டத்தில்..

கணிப்பொறியை தமிழ் மொழி இடைமுகத்தின் (Tamil System Interface) மூலம் இயக்கக்கூடிய இயக்குத்தளங்கள் (Operating Softwares) வந்திருக்கின்றன, தமிழில் இயங்கக்கூடிய கையடக்கக் கருவிகள் வந்திருக்கின்றன.

கணினிக்குத் தமிழ் கற்றுக்கொடுத்து , தமிழ் மூலம் கணினிக்கு நிரல் எழுதும் (கட்டளை இடும்) எழில்” , "ஸ்வரம்" என்கிற கணினி மொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப உலகத்திற்குள் தமிழ் தனது காலடித் தடத்தைப் பதித்து மெல்ல நடைபயிலத் துவங்கியிருக்கிறது.

ஊர் கூடி தேர் இழுப்போம் !
(கணினித்தமிழ் வளர்ச்சியில் நம் பங்கு)

கணினித் தமிழ் வளர்ச்சியில் நம்மால் பங்களிக்க முடியுமா ?

கட்டாயம் முடியும்.

தமிழ் விக்கிப்பீடியாவில்  கட்டுரைகள்  இன்னும் நிறைய தகவல் எழுதப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள், அதை ஒரு முழுமையான தகவல் களஞ்சியமாக மாற்ற ,  நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும்  வேண்டும். அதில் யார் வேண்டுமானாலும் பெயரை பதிவு செய்து கொண்டு கட்டுரை எழுதலாம், நிபுனர்கள்,அறிஞர்களின் சரிபார்ப்புக்குப் பின் நம் தகவல்கள் அங்கீகரிக்கப்படும்,

 உதாரணமாக உங்கள் ஊர் ஒரு உலகறியா கிராமமாக இருந்து அதற்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கம் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், அதை நீங்களே தகவல் சுத்தமாகத் தெளிவான சான்றுகளோடு எழுதலாம். இது போல இன்னும் விடுபட்ட பல விக்கிப் பக்கங்களை நாம் எழுதலாம். அதேபோல பிழையான செய்திகள்,தகவல்கள் நம் கண்ணில் படக்கூடுமானால் அதை திருத்தி எழுதலாம். இப்பணியில் கற்றறிந்த சான்றோர் பலர் தங்கள் பங்களிப்பை அளித்திருக்கிறார்கள் இன்னும் அளிக்கப்பட வேண்டும்.

பத்திரிக்கைகளில் நம் படைப்புகளைப் பிரசுரம் செய்யும் முன் அதன் பதிப்பாசிரியர்க்குழு அதிலிருக்கும் பிழைகளைச் சரிபடுத்திப் பின் வெளியிடும் ஆனால் நாமே ஆராய்ச்சி செய்து, நாமே சிந்தித்து, நாமே தட்டச்சுச் செய்து, நாமே எழுதும் வலைப்பூக்களில் வெளியிடும் படைப்புகளில் அந்த வாய்ப்பு இல்லை . ஆக இயன்ற வரை தமிழ் மொழியை இணையத்தில் பிழையின்றிப் பதிவு செய்வோம்.

வெறும் எழுத்துப் பதிவுகளோடு மட்டும் நின்றுவிடாது ஒளி,ஒலி வடிவத்திலும் நல்ல தமிழ் படைப்புகள் இணையத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.


தொழில்நுட்பக்கல்வி தமிழ் வழியில் புரிகிற வடிவில் , நடைமுறையில் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் சொல்லித்தரப்படவேண்டும். பாரதியார் சொல்வது மாதிரி அயல் தேச மொழியினர் கண்ட நுட்பங்களை, அறிவை தமிழில் சேர்க்க வேண்டும். படைப்பிலக்கியப் பங்களிப்போடு நிறைய அறிவியல் புத்தகங்களும் எழுதப்பட வேண்டும். (தெரிந்து., தெரியாதவர்கள்., தெரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பட வேண்டும்)

விரலி, பணிபட்டை, கோப்பகம்... எனத் தமிழில் ஆங்கிலக் கலைச்சொற்களைத் தமிழ்ப்படுத்திச் சேர்ப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதை விடுத்து தொழில்நுட்ப கருவிகளைத் தமிழர்கள் கண்டுபிடிக்க வேண்டும் ,
அவைகளுக்குத் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் . தமிழ் உலகெங்கும் உச்சரிக்கப்படச் செய்ய வேண்டும்.

ஆங்கிலம் என்பது வெறும் மொழி அறிவே ! அது பிற அறிவியல் நுட்பங்களைக் கற்க உதவுகிறது. தமிழில் பிற நாட்டினர் கண்டறிந்த அறிவுசார் கலைகளைக் கொணர்ந்து வந்து தொழில்நுட்பம் கற்க ஆங்கிலம் அவசியம் என்கிற மொழிக்கட்டுப்பாட்டை உடைத்தெறிய வேண்டும்.

எதிர்காலத் தமிழ் கணினி:

எதிர்காலக் கணினிகள்  என்னவெல்லாம் செய்யும் !!

அவை தமிழ் படிக்கும். தமிழ் பேசும் , தமிழைப் புரிந்து கொள்ளும்.

தமிழ் மொழி ஆங்கிலம் போல அசையற்ற மொழி கிடையாது. So என்றால் ஸோ, Me என்றால் மீ, Some என்றால் ஸோமீ கிடையாது சம் என்று கேடுகெட்ட ரகத்திலான விதிகள் கிடையாது, ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான உச்சரிப்பு முறை உண்டு, மிகத்தெளிவான புணர்ச்சி விதிகள், இலக்கண விதிகள் உண்டு, ஆகக் கணினிக்குத் தமிழ் வாசிக்கக் கற்றுக்கொடுப்பது எளிதான காரியமாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

புத்தகங்களை நகலெடுத்துக் கணினியில் ஏற்றி அதை எழுத்தாக மாற்றும் OCR மென்பொருட்கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் நம் கையில் இருக்கும் ஒரு புத்தகத்தைக் கணினி வாசித்துக்காட்டும், பார்வை அற்றவர்களுக்கு வார்த்தைகளை வாசித்துக்காட்டி அவர்கள் படிக்க உதவி செய்யும். அவர்கள் சொல்லும் வார்த்தைகளை எழுத்துக்களாக்கும் ஒலிவார்ப்பு மென்பொருள்கள் (Speech to text converter) அவர்கள் எழுதுவதற்கு உதவி செய்யும்.

எதிர்காலத்தில் Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு சித்தாந்தம் மூலம் கணிப்பொறிக்கு நாம் தமிழ் கற்றுக்கொடுப்போம். அடம்பிடிக்காமல் அந்த இயந்திரக்குழந்தை நம்மிடமிருந்து , கற்றுக்கொள்ளும்.

இலக்கிய மொழி இன்று இலக்க மொழியாகி (Digital Language) இணையம் வரைக்கும் வந்திருக்கிறது.இன்னும் இது வளரும் என வாழ்த்துவோம்

                             தரணியெங்கும் தழைத்தோங்கட்டும் தமிழ் !


உறுதிமொழி:

கணினிக்குத் தமிழ் கற்றுக்கொடுப்போம் " எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்.
இப்படைப்பு, வகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப் போட்டி
(கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரை) வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காக எழுதப்பட்டது

உதவிக்குறிப்புகள் :

புள்ளிவிவரங்கள்:

தமிழ் மென்பொருட்கள் பட்டியல்:

தமிழ் இலக்கண விதிகள்:
http://tech.neechalkaran.com/p/tamil-grammar.html

சந்திப்பிழை திருத்தி:

http://dev.neechalkaran.com/p/naavi.html

தமிழ் இயக்குத்தளங்கள்:


 

Post Comment

Tuesday, July 28, 2015

அப்துல் கலாம் இறக்கவில்லை !!

 எழுந்திரிச்சு வாருமய்யா !
--------------------------------------------------

கண்டதையும் எண்ணி மனம்
கவலை கொண்ட வேலையிலே
கனவின் விதையெடுத்து
கண்களில் விதைத்தவனே
கண்ணுறக்கம் கொண்டாயோ !

நம்பிக்கை ஒளியிழந்து
சோர்ந்திருந்த பொழுதுகளில்
வார்த்தைகளாய் வந்தெனக்கு
நல் வாக்கு கொடுத்தவனே
கண்ணுறக்கம் கொண்டாயோ !

நீ பிறந்த மண்ணினிலே
பிறந்தவன் நானென்று
பெருமை பாடி நான் திரிய
புகழ சேர்த்து வச்சவனே
கண்ணுறக்கம் கொண்டாயோ !

வாழ்ந்து கெட்ட தேசமிது
மறுபடியும் வாழுமென்று
வாக்கு ஒன்னு கொடுத்தாயே !

நீ கண்ட பெருங்கனவ
நெசமாக்கிப் பார்க்குமுன்னே
என்னையா அவசரம்
உனக்கிப்ப கண்ணுறங்க !

பாரத தேசமிதை
பார்புகழும் நாள் காண
நீ இங்கு வேணுமய்யா !
உன் கனவு நெசமாகும்
எழுந்திரிச்சு வாருமய்யா !

நீ விதைச்ச விதையெல்லாம்
நாளைக்கு மரமாகும்
முளைச்ச மரமெல்லாம்
உனைப் பார்க்க உயிரேங்கும்
எழுந்திரிச்சு வாருமய்யா !

விழிப்பில்லா தூக்கம் கொண்டு
நீ தூங்கி விட்டதாக
எல்லோரும் சொல்லுறாங்க
அவங்க வாக்கைப் பொய்யாக்க
எழுந்திருச்சு வாருமய்யா !

யார் யாரோ வந்தாங்க
யார் யாரோ போனாங்க
நடமாடும் உயிராக
நான் பார்த்த ஒரு தலைவன்
நீ மட்டும் தானய்யா !

கோடித்துளி கண்ணீர் கொட்டி
தேசமே அழுகுதய்யா !

எழுந்திரிச்சு வாருமய்யா !

மாணவர்கள் மத்தியிலே
பேசிக்கொண்டே மறஞ்சுப்போக

பேச்சோடு பேச்சாக
மூச்சோடு மூச்சாக

காத்தோடு கரைஞ்சுப் போக
கனவெதுவும் கண்டீரோ !

உன்னதமானவர்களின்
உன்னத கனவுகள்
உண்மையாகுமென்று
உரைத்துப்போனவரே !

உம் கனவு பலிக்குமென்று
எனக்கு நம்பிக்கை இருக்குதய்யா !

எழுந்திரிச்சு வாருமய்யா !


(தலைவனே உம்மை தலைவணங்குகிறேன். நீ இறக்க மாட்டாய் என எப்போதும் நம்புகிறேன்)


 

Post Comment

Friday, June 12, 2015

வழிப்போக்கனின் வார்த்தைகள் - 0

"வாழ்க்கையின் கேள்விகள் கடினமாக இருக்கலாம், ஆனால் விடைகள் எளிமையாகத் தான் இருக்கின்றன !"
                                                                                                             - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


வாழ்க்கையின் பயன் என்ன? , எதற்காக இந்த வாழ்க்கை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது?, ஏன் இந்த வாழ்க்கையின் பாதை இத்தனை கரடு முரடாக இருக்கிறது?, எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்கள்?, என்ன வாழ்க்க டா இது ?  .... (கேள்விகள் நீண்டு கொண்டே போகின்றன...).

எண்ணங்களும், வார்த்தைகளும் துவங்கின காலம் துவங்கி யுகம் யுகமாக இந்த கேள்விகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றன என நம்புகிறேன்.

இவைகளுக்கு , நிச்சயமாக என்னிடத்தில் பதிலில்லை, உங்களிடமும் இருக்காது என்றே நம்புகிறேன்.

"என்னப்பா ஆச்சு உனக்கு என்னென்னவோ பினாத்திட்டு இருக்க !" என்கிறீர்களா .  :) . என்னை மாதிரியான பினாத்தல் கேஸ்களை நீங்கள் நிறைய கடந்து வந்திருப்பீர்கள் (இருப்பின் என்னையும் பொருத்தருள்க) அல்லது நீங்களே என்னை மாதிரியொரு பினாத்தல் கேஸாகக் கூட இருக்கலாம்.(Glad to meet you !).

வாழ்க்கையைப் பார்த்து எவ (னா/ளா) வது இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கிறான்/ள் என்றால் கீழ்காணும் பட்டியலில் உள்ள ஏதேனும் ஒன்றாக அல்லது பலவாக அவர்கள் இருக்கலாம்.

1. கவலையுள்ளவர்கள்
2.குழப்பவாதிகள்
3.விரக்தியடைந்தவர்கள்
4.பொருள் இல்லாதவர்கள்
5.ஞானிகள் (?!!)

உலகின் 99 சதவீதம் பேர் இந்த ஐந்துக்குள் அடங்கி விடுகிறார்கள் என்பதை புள்ளிவிவரக் குறிப்புகளை சேகரிக்கும் அவசியம் இன்றி நான் உறுதியாகச் சொல்வேன்.

அதன் போக்கில் அது அது இயங்கிக் கொண்டிருக்கும் வரையில், பிரச்சனை, கவலை, குழப்பம் ஏதும் இல்லாதிருக்கும் வரையில் வாழ்க்கையை நோக்கி எவரொருவரும் "ச்ச!! என்ன வாழ்க்க டா இது" என கேட்பதே இல்லை.

ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்  உலகவரிடம் நீங்கள் கண்டு வியக்கும் விசயம் எது என ஒருசமயம் கேட்கப்பட்டதாம்., அதற்கவர்

"உலக மக்கள் யாரும் ஒருபோதும் சந்தோசம் வரும் சமயத்தில், ஏன் எனக்கு மட்டும் என கேட்பதே இல்லை ! ஆனால் கஷ்டம் வருகிற சமயத்தில் மட்டும் ஏன் எனக்கு மட்டும் இப்படி என கேட்கிறார்கள், கடவுளை திட்டுகிறார்கள் இது தான் எனக்கு வியப்பாக இருக்கிறது" என்றாராம்.

நம்மில் அநேகர் இப்படித்தான் இருக்கிறோம். (என்ன செய்ய ! நானும் அந்த அநேகரில் ஒருவன் தான்).

வாழ்க்கை என்பதற்கு ஆளாளுக்கு ஒரு Definition சொல்கிறார்கள், வாழ்க்கை என்பது போர்க்களம், வாழ்க்கை என்பது பரிட்சை, வாழ்வே மாயம்...

நிறைய நிறைய நிறைய விளக்கங்கள்.

எதாவது ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும் :)

வாழ்க்கை என்பதை நான் ஒரு பயணமாக உருவகித்து நம்புகிறேன், ஒரு புள்ளியில் துவங்கி இன்னொரு புள்ளியில் முடியும் , துவக்கத்தையும், முடிவையும் தீர்மானித்துக் கொண்டு துவங்க முடியாத , அடுத்த நிறுத்ததையோ , திருப்பத்தையோப் பற்றிய எந்தவித முன்னறிவும் இல்லாத ஒரு விசித்திர பயணமாக..

வாழ்க்கை என்பது ஒரு பயணம் !
                               

பயணம் செய்யும் வழியில் எதையெதையோ காண்கிறோம், யார் யாரையோ எல்லாம் சந்திக்கிறோம், பல நேரங்களில் எங்கே போகிறோமென்றே தெரியாமல் எங்கெங்கோவெல்லாம் கூட போகிறோம்.

உங்கள் பயணத்தின் ஒரு சிறு பகுதியில் என்னுடைய இந்த வார்த்தைகளை கடப்பதற்காக நேரம் செலவழிக்கும் ஒவ்வொருவருக்குமாக இந்த கட்டுரைத் தொடரின் ஒவ்வொரு வார்த்தையையும் சமர்ப்பித்து, இந்த தொடரை ஆரம்பிக்கிறேன்.

இக்கட்டுரைத்தொடரை தொடர்ந்து எழுத ... வாழ்க்கையின் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டு பலரின் வாழ்விற்கு Inspiration ஆக இருக்கும்  ஆதர்ஷ பயணிகளின் ஆசிகளையும். தனது சக பயணிகளின் அன்பையும் இந்த வழிப்போக்கன் வேண்டிக் கொள்கிறான்.
                                   
                                                                                                      -  வார்த்தைகளோடு வருகிறேன்... 


 

Post Comment

Tuesday, June 09, 2015

அதிக சம்பளம் வாங்கித் தரும் படிப்புகள் !

கல்லூரி கட்டணம் முதல் மாத சம்பளம் வரை...

 ஒரு காலத்தில் என்ஜினியரிங் படிப்பு என்பது மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. அதற்கு கல்லூரிகளின் எண்ணிக்கை, கட்டணம், பொருளாதாரம், நுழைவுத் தேர்வு என பல்வேறு காரணங்கள் இருந்தன.

ஆனால்.,

இன்றைய நிலைமையில், தடுக்கி விழுந்தால் என்ஜினியரிங் படிப்பு என்றாகிவிட்டது. 552 என்ஜினியரிங் கல்லூரிகளை (தமிழ்நாட்டில்) வைத்துக்கொண்டு வருடந்தோறும் இலட்சோப இலட்சம் பொறியாளர்களை உருவாக்குகிறோம் . விளைவு, பொறியியல் என்கிற விசயம் அதன் மகத்துவத்தை இழந்து வருகிறது.

தடுக்கி விழுந்தால் என்ஜினியரிங் கல்லூரி


கிராமப்புற மாணவர்களும் கூட பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தான் நுழைவுத் தேர்வு நீக்கம், கட்ஃஆஃப் மதிப்பெண் குறைப்பு இவையெல்லாம் நிகழ்த்தப்பட்டதாக சொல்லிக்கொள்கிறார்கள் ! இதன் இன்னொரு பரிமாணம் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. 

என்ஜினியரிங் என்றால் என்ன? , அதன் பயன் என்ன? என்று கூட தெரியாத அளவுக்கு பல ஆயிரக்கணக்கான பொறியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

எஞ்சினியரின் விடைத்தாள் :) !
                              

ஒருபுறம் கல்லூரிகளில் வளாகத் தேர்வு மூலமாக அனைத்து துறை மாணவர்களையும் (கணிணி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமெண்டேசண் … மேலும் பல துறைகள்) தேர்வு செய்து அவர்களுக்கும் படிப்புக்கும் தொடர்பில்லாத வேலைகளில் அமர்த்துகிறார்கள்.

இது மான்கள், புலிகள், குதிரைகள், பசுக்கள் போன்ற எல்லா விலங்குகளையும் தேர்வு செய்து உங்களுடைய வேலை நரியை போன்று நடிப்பது என்பது போல் உள்ளது. (இது நிறுவனங்களின் தவறு கிடையாது. அவர்களின் தேவை அவ்வளவுதான்.)

மறுபுறம் 5000, 6000 ரூபாய் சம்பளத்துக்கு கால் சென்டர், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேலும் பல படிப்புக்கு சம்பந்தமில்லாத வேலைகளில் காலத்தை ஓட்டுகிறார்கள்.
5 இலட்சம் ரூபாய் செலவு (கடன் வாங்கி) செய்து 4 வருடங்கள் என்ஜினியரிங் படித்தவனும், 50,000 ரூபாய் செலவு செய்து 3 வருட டிகிரி படித்தவனும் ஒரே வேலை செய்கிறான்.

இன்னொரு புறம், கிடைக்கும் வேலையை படிப்பிற்கு தகுதி இல்லாத வேலை என்று சொல்லிக் கொண்டும், குறைந்த சம்பளத்திலாவது எதாவது வேலை கிடைக்காதா என்ற ஏக்கத்துடனும் எத்தனையோ வேலை இல்லா பட்டதாறிகள் நாட்டில் இருக்கிறார்கள்.

இந்த நிலைமைக்கு கல்லூரிகளையோ, அரசாங்கத்தையோ குறை கூறுவதை விட மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் தான் குறை கூற வேண்டும்.

மற்ற எல்லா படிப்புகளைப் போல என்ஜினியரிங்கும் ஒரு படிப்புதான். பிறகு ஏன் இதற்கு மட்டும் இவ்வளவு பெரிய மோகம்? சிந்தியுங்கள்….   

இந்தியாவில் சில நிறுவனங்களே மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்து, உரிய பயிற்சிகளை கொடுத்து அந்தந்த வேலைக்கு தகுந்தவாறு மாற்றுகிறார்கள்.

பெரும்பாலான நிறுவனங்கள் அந்தந்த வேலைக்கு தேவையான அனைத்து திறமைகளும் (skills) உள்ள பட்டதாரிகளை தான் எதிர்பார்க்குகிறார்கள். ஆட்களை எடுத்து அவர்களுக்கு உரிய பயிற்சிகளை கொடுப்பதற்கு அந்த நிறுவனங்களுக்கு நேரமும் பணமும் தடையாக உள்ளன. இந்த நிறுவனங்களின் பெரும் குற்றச்சாட்டு என்னவென்றால் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அந்தந்த வேலைக்கு தகுதியான திறமைகள் உள்ள ஆட்கள் கிடைப்பதில்லை.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, நம்முடைய கல்லூரி பாடத்திட்டம் மட்டும் நம்முடைய வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை. மேலும் வேலைக்கு தேவையான பல திறமைகளை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது.

பெரும்பாலான மாணவர்கள் ஐ.டி (IT) வேலை என்றால் ப்ரொக்ராம்மிங் (Programming), டிசைன் (Design) சார்ந்த வேலை மட்டும் தான் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் இவை தவிர ஐ.டி இன்டஸ்ட்ரியில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. [SEO, Social Media Marketing, Testing, Business analyst, multimedia, L&D, Sales, marketing, Admin, HR, finance.. etc].
                          

இதே போன்றே எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் என இதர துறைகளிலும் அறியப்படாத அதே சமயம் ஆட்கள் தேவைப்படும் அநேக கிளைத்துறைகள் இருக்கின்றன.

ஆகவே மாணவர்கள் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளையும், அதற்கான திறமைகளையும் ஆராய்ந்து தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் சுய திறமைகளை கண்டறிந்து அதை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும்.

ஒரு சின்ன புள்ளிவிவரம்: (துறைவாரியாக சம்பள சதவீதம்) !

                                 

கட்டுரையாக்கம்: வினோத்குமார்.R
                   http://vinothkumar.in/ 

Post Comment