Saturday, February 02, 2013

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-9கடந்த பதிவில் இணைய உலகின் இணைப்பிற்கு முன்னோடியான தந்தி முறைப்பற்றியும்,இணையம் பற்றி தீர்க்கதரிசனம் சொன்ன ஜூல்ஸ் வெர்னெ பற்றியும் பார்த்தோம்.இந்த பதிவில் கம்பி வழி தகவல் தொடர்பின் அசுர வளர்ச்சியை பார்க்கலாம்.

தகவல் யுகத்தின் உதயம்:

 தகவல் யுகம் தன்னை உருவாக்கி கொண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான்.இதன் பிறப்பு தாமதமாக இருந்தாலும் வளர்ச்சி கொஞ்சம் வேகமாகத்தான் இருந்தது. தந்தி,ரேடியோ,தொலைபேசி,தொலைக்காட்சி என்று வேகமாக வளரத்துவங்கியது.

   கடலுக்கடியில் கம்பி புதைக்கும் பணியை செய்யும் கப்பல்கள் -1858

கண்டங்களை இணைத்த கம்பிகள்:

 தந்தி முறையின் தந்தையான சாமுவேல் மோர்ஸ்,(தந்தி வழியாக பரிமாறிக்கொள்ளப்படும் மோர்ஸ் குறியீடு (படம் பார்க்க:க்ளிக்குக) எனும் ஒலிக்குறிப்புகள் இவர் கண்டறிந்தது தான்) அவர்கள் கடலுக்கடியில் கம்பிகளை அமைத்து கண்டங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என்று அவர் தந்தியை கண்டுபிடித்த காலத்திலேயே கூறியிருந்தார்

 கம்பி வழி தகவல் தொடர்பு வலுப்பெற ஆரம்பித்த உடன் 1857 -ம் வருடத்தில் அமெரிக்க-இங்கிலாந்து நாடுகளுக்கிடையில்  தந்தி தொடர்பு ஏற்படுத்த கடல் வழியாக தகவல் தொடர்பு கம்பிகள் அமைக்க ஏற்பாடு ஏற்படுத்தப்பட்டது.


கடலுக்கடியில் சென்று கண்டங்களை இணைத்த கம்பிகள்....!

(இந்த திட்டத்திற்கான பணத்தை அமெரிக்க -இங்கிலாந்து அரசுகள் பகிர்ந்து கொண்டன.)


கடலுக்கடியில் கம்பி புதைக்கும் இந்த கடினமான பணியை Cyrus West Field மற்றும் Atlantic Telegraph Company ஆகிய இரு நிறுவனங்கள்  அட்லான்டிக் கடலுக்கடியில் துவக்கின.,

பல போராட்டங்களுக்கு பிறகு இவை 1858 ஆகஸ்ட் -ல் செயல்படத் துவங்கின.
ஆகஸ்டு 16 -ல் முதல் முதலாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே வாழ்த்து தந்தி பரிமாறிக்கொள்ளப்பட்டது.கண்டம் விட்டு கண்டம் பரிமாறிக்கொள்ளப்பட்ட முதல் எலக்ட்ரானிக் தகவல் இது தான் .இந்த தந்தியை இங்கிலாந்து மகாராணி விக்டோரியா அனுப்ப  அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் புச்சனன் (James Buchanan)  பெற்றுக்கொண்டார்.

(இந்த கம்பிகள் வழியாக ஒரு எழுத்தை,அல்லது ஒரு எண்ணை அனுப்ப இரண்டு நிமிடம் தேவைப்பட்டது.முதன்முதலில் அனுப்பட்ட செய்தியை முழுமையாக பெற 17 மணி நேரம் ஆனதாம் !)


மூன்று வாரங்களுக்கு பிறகு...

 இந்த இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு சரியாக மூன்று வாரங்கள் கடந்திருந்த வேளையில் கம்பி வழியாக தவறுதலாக அதிக மின்னழுத்தம் (Voltage)அனுப்ப பட்டதன் விளைவாக கம்பிகள் கருகிப்போயின..

 கம்பி நீட்டிய பழைய கம்பிகளில் இருந்த குறைகளை நீக்கி 1866 - ஜூலை 28 ல் மீண்டும் கடல் வழி கம்பி புதைத்தல் பணி மறுபடியும் நிறைவேற்றப்பட்டது.

1866 -ல் மீண்டும் இணைப்பு....! கிரேட் ஈஸ்டர்ன் கப்பல்


           Great Eastern கப்பலில் இருந்த கம்பி புதைக்கும் கருவி (Grappling Hook)

  இந்த புதிய கம்பிகள் மூலம் ஒரு நிமிடத்தில் 8 எழுத்துக்களை அனுப்ப முடிந்தது. அதிக தூரம் தகவல் அனுப்பும் போது ஏற்படும் தகவல் இழப்பை தடுக்க சில புதிய கருவிகளும் இணைப்பில் இணைந்தன.

1870 -ல் ஒரே கம்பி வழியாக பல தகவல்களை அனுப்பும் முறை கொண்டுவரப்பட்டது.

1873, 1874, 1880, மற்றும் 1894 வருடங்களில் மேலும் பல புதிய கம்பிகள் புதைக்கப்பட்டன19-ம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் பிரிட்டிஸ்,பிரான்ஸ்,ஜெர்மனி,அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உரிமையான தகவல் தொடர்பு கம்பிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் நாடுகளை இணைக்க துவங்கியிருந்தன ,கம்பிகளின் உதவியால் கண்டங்கள் இணைய ஆரம்பித்தன...

அடுத்த பதிவில் கணினிகளின் வளர்ச்சியைப்பற்றி பார்ப்போம்:

தொடர்ந்து வாசித்து ஆதரவு தாருங்கள்.தங்கள் சந்தேகங்கள்,கேள்விகள்,கருத்துக்கள் போன்றவைகளை மறக்காமல் கமென்டில் குறிப்பிடவும்


 

Post Comment

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-8


இதுவரை இணைய இணைய உலகின் ஆரம்ப கால கதையை வரலாற்றுப்பார்வையில் பார்த்தோம். இணையத்தின் ஆரம்ப கால கதையை நாம் இந்த பதிவிலிருந்து அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்கலாம். ஒரே விசயத்தை வெவ்வேறு பார்வையில் பார்க்கும்போது அதன் வெவ்வேறு பரிமாணங்களை அறிய முடியும்.

ஆரம்ப கால இணையம்:

 "தேவையே கண்டுபிடிப்பின் தாய்"

றிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதர்களின் தேவையை அடிப்படையாக அடிப்படையாக வைத்து தோன்றியவைதான்.இணையத்தின் தேவை பற்றி மனித மனம் எப்போது சிந்திக்க ஆரம்பித்தது என்று நாம் கால சக்கரத்தை பின்னோக்கி நகற்றும் போது ...(ரொம்ப... பின்னாடி போனால் புறாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.,)

 உலகின் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு.
இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புகளான மின்சாரம்,தந்திமுறை,ரேடியோ போன்றவைகளின் துவக்கம் தான் இணையத்தினைப் பற்றி மனித மனம் சிந்திக்க காரணமாக அமைந்தது.
தந்தி முறையின் பரிணாம வளர்ச்சி தான் இணையற்று விரிந்திருக்கும் இப்போதைய இணையம் என்று ஆணித்தரமாக கூறலாம்.

                                 தந்திக்கருவி

டொக் டொக்....

இந்த கருவி எப்படி செயல்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா?,தகவலை அனுப்பும் இடத்தில் இந்த கருவியை அழுத்தி அழுத்தி மோர்ஸ் குறியீடு அடிப்படையில் ஒலிக்குறிப்புகள் ஏற்படுத்தப்படும். தகவலை பெறும் இடத்தில் அந்த ஒலிக்குறிப்புகள் கேட்கும் (கம்பி வழியாக பயணித்து), இந்த ஒலிக்குறிப்புகளை மீண்டும் தகவலாக மாற்றி புரிந்து கொள்ள வேண்டும். டொக்...டொக் டொக்.... என்று மட்டும் சத்தம் கேட்கும் அதை எழுத்துக்களாக மாற்றி தகவல் புரிந்து கொள்ள வேண்டும்...

இந்த மோர்ஸ் குறியீடுகளை படத்தில் காணலாம். புள்ளி "சின்ன டொக்...". கோடு "பெரிய டொக்..."

                       மோர்ஸ் குறியீடு - ஒலியை மொழியாக்கி புரிந்து கொள்ளுங்கள்....


SOS எனும் மோர்ஸ் குறியீடு மிகவும் பிரசித்தம், Save Our Souls என்று அர்த்தம் கொண்ட இந்த ஒலி க் குறியீட்டை ஆபத்து காலங்களில் பயன்படுத்துகிறார்கள்.இன்றும் கூட ஆபத்து கால தகவலுக்கு SOS என்று தான் பெயர் உள்ளது !                                                    தந்தி கருவி இயக்கப்படுகிறது... டொக்... டொக் டொக்...

தேவை கண்டுபிடிப்புகளின் தாயாக இருக்கிறது என்றால் கற்பனை அவற்றின் தகப்பனாக இருக்கிறது. பெறும்பாலும் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அறிவியல் சார்ந்த பொருளும் ஒரு தனி மனிதனின் அல்லது ஒரு மனித கூட்டத்தின் கற்பனையாகவே முதலில் உருவாகி இருக்கும்.

இணையம் பற்றி இணையம் உருவாவதற்கு முன்பே யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா ?.
1863 -ல் அறிவியல் புனை கதைகளின் மன்னன் என்று அழைக்கப்படும் " ஜூல்ஸ் வெர்னெ "(Jules verne) இணையம் பற்றி சிந்தித்திருக்கிறார், அவர் காலத்தில் தந்தி முறை செயல் பாட்டில் இருந்திருக்கிறது ,இந்த தந்தி முறையில் அந்த காலத்தில் மோர்ஸ் குறியீடுகள் எனப்படும் சங்கேத ஒலிக்குறியீடுகளை அனுப்புவது மட்டுமே அப்போதைய சாத்தியக்கூறாக இருந்தது, ஆனால் "ஜூல்ஸ்" Telegraphy எனப்படும் தந்தி முறையின் மேம்பட்ட வடிவமாக புகைப்பட தந்தி முறை (Photo Telegraphy) பற்றி கற்பனை செய்திருக்கிறார், புகைப்பட தந்திமுறை மூலமாக எழுத்து படைப்புகள், கையெழுத்துக்கள்,புகைப்படங்கள் போன்ற இன்னபிற விசயங்களை அனுப்ப முடியும் என்று கற்பனையில் கண்டறிந்து கூறியிருக்கிறார்.

ஜூல்ஸ் வெர்னே சில குறிப்புகள்:

இவரு தாங்க அந்த ஜூல்ஸ் வெர்னெ

துமட்டுமல்ல இந்த மனிதர் நிலவிற்கு மனிதன் செல்வது பற்றிக்கூட தன் கதைகளில் குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது புத்தகங்களில் சில திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
Twenty Thousand Leagues Under the SeaA Journey to the Center of the EarthAround the World in Eighty DaysThe Mysterious IslandDick Sand, A Captain at Fifteen  போன்றவை குறிப்பிடத்தக்கவை.பிற மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டாவது நபர் இவர் (முதல் நபர் அகதா கிரிஸ்டி).இவர் அறிவியல் புனைக்கதைகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 

இணைப்பு கம்பிகள்:

மின் வழி தகவல் தொடர்பு தந்திவழி தகவல் தொடர்பு முறை,மற்றும் தொலைபேசி முறை வளரத்துவங்கிய காலத்தில் தான் வளரத்துவங்கியது,உலகின் முதல் கம்பிவழி இணைப்பில் தகவல் பரிமாற்றம் 1844 ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாசிங்க்டன் மற்று பால்டிமோர்(Baltimore) ஆகிய இரு இடங்களுக்கிடையே நிகழ்ந்தது 17 வருடங்களில் 1858 வாக்கில் தந்திகம்பிகள் அமெரிக்காவின் பெரும்பான்மை இடங்களை இணைப்பில் கொண்டு வந்திருந்தது.
அந்த கால தொலைபேசி

  
ஜூல்ஸ் வெர்ன் அவர்களின் கற்பனை உயிர் வடிவம் பெற 100 ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டிருக்கின்றன. இணையத்திற்கான இணைப்பின்  அடிப்படையாக இந்த தந்திமுறை தான் இருந்திருக்கிறது,நாம் இன்று பயன்படுத்துவது கூட இதன் மேம்பட்ட இணைப்பு முறைதானே தவிற புதிய சரக்கு கிடையாது.

யோசித்து பாருங்கள்...

 யிரமாயிரம் எண்ணங்கள்,எழுத்துக்கள்,கணக்கில்லா கற்பனைகள்,கவிதைகள்,புகைப்படங்கள்,இசை,தகவல்கள்,பண பரிவர்த்தனைகள்,வியாபாரம் என்று எத்தனையோ விசயங்களை சுமந்து கொண்டு சத்தமில்லாமல் கடலுக்கடியில்,பூமிக்கடியில்(கம்பி வழி இணைப்பு),விண்வெளியில் (செயற்கை-கோள் இணைப்பு) என நம்மை இணைக்கும் இந்த இணையத்தின் பிரமாண்டத்தை...!


                                                                                                                                  இன்னும் கூறுவேன்

மின்னஞ்சல் முகவரி:vijayandurairaj30@gmail.com

 

Post Comment