Saturday, February 02, 2013

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-9



கடந்த பதிவில் இணைய உலகின் இணைப்பிற்கு முன்னோடியான தந்தி முறைப்பற்றியும்,இணையம் பற்றி தீர்க்கதரிசனம் சொன்ன ஜூல்ஸ் வெர்னெ பற்றியும் பார்த்தோம்.இந்த பதிவில் கம்பி வழி தகவல் தொடர்பின் அசுர வளர்ச்சியை பார்க்கலாம்.

தகவல் யுகத்தின் உதயம்:

 தகவல் யுகம் தன்னை உருவாக்கி கொண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான்.இதன் பிறப்பு தாமதமாக இருந்தாலும் வளர்ச்சி கொஞ்சம் வேகமாகத்தான் இருந்தது. தந்தி,ரேடியோ,தொலைபேசி,தொலைக்காட்சி என்று வேகமாக வளரத்துவங்கியது.

   கடலுக்கடியில் கம்பி புதைக்கும் பணியை செய்யும் கப்பல்கள் -1858

கண்டங்களை இணைத்த கம்பிகள்:

 தந்தி முறையின் தந்தையான சாமுவேல் மோர்ஸ்,(தந்தி வழியாக பரிமாறிக்கொள்ளப்படும் மோர்ஸ் குறியீடு (படம் பார்க்க:க்ளிக்குக) எனும் ஒலிக்குறிப்புகள் இவர் கண்டறிந்தது தான்) அவர்கள் கடலுக்கடியில் கம்பிகளை அமைத்து கண்டங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என்று அவர் தந்தியை கண்டுபிடித்த காலத்திலேயே கூறியிருந்தார்

 கம்பி வழி தகவல் தொடர்பு வலுப்பெற ஆரம்பித்த உடன் 1857 -ம் வருடத்தில் அமெரிக்க-இங்கிலாந்து நாடுகளுக்கிடையில்  தந்தி தொடர்பு ஏற்படுத்த கடல் வழியாக தகவல் தொடர்பு கம்பிகள் அமைக்க ஏற்பாடு ஏற்படுத்தப்பட்டது.


கடலுக்கடியில் சென்று கண்டங்களை இணைத்த கம்பிகள்....!

(இந்த திட்டத்திற்கான பணத்தை அமெரிக்க -இங்கிலாந்து அரசுகள் பகிர்ந்து கொண்டன.)


கடலுக்கடியில் கம்பி புதைக்கும் இந்த கடினமான பணியை Cyrus West Field மற்றும் Atlantic Telegraph Company ஆகிய இரு நிறுவனங்கள்  அட்லான்டிக் கடலுக்கடியில் துவக்கின.,

பல போராட்டங்களுக்கு பிறகு இவை 1858 ஆகஸ்ட் -ல் செயல்படத் துவங்கின.
ஆகஸ்டு 16 -ல் முதல் முதலாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே வாழ்த்து தந்தி பரிமாறிக்கொள்ளப்பட்டது.கண்டம் விட்டு கண்டம் பரிமாறிக்கொள்ளப்பட்ட முதல் எலக்ட்ரானிக் தகவல் இது தான் .இந்த தந்தியை இங்கிலாந்து மகாராணி விக்டோரியா அனுப்ப  அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் புச்சனன் (James Buchanan)  பெற்றுக்கொண்டார்.

(இந்த கம்பிகள் வழியாக ஒரு எழுத்தை,அல்லது ஒரு எண்ணை அனுப்ப இரண்டு நிமிடம் தேவைப்பட்டது.முதன்முதலில் அனுப்பட்ட செய்தியை முழுமையாக பெற 17 மணி நேரம் ஆனதாம் !)


மூன்று வாரங்களுக்கு பிறகு...

 இந்த இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு சரியாக மூன்று வாரங்கள் கடந்திருந்த வேளையில் கம்பி வழியாக தவறுதலாக அதிக மின்னழுத்தம் (Voltage)அனுப்ப பட்டதன் விளைவாக கம்பிகள் கருகிப்போயின..

 கம்பி நீட்டிய பழைய கம்பிகளில் இருந்த குறைகளை நீக்கி 1866 - ஜூலை 28 ல் மீண்டும் கடல் வழி கம்பி புதைத்தல் பணி மறுபடியும் நிறைவேற்றப்பட்டது.

1866 -ல் மீண்டும் இணைப்பு....! கிரேட் ஈஸ்டர்ன் கப்பல்


           Great Eastern கப்பலில் இருந்த கம்பி புதைக்கும் கருவி (Grappling Hook)

  இந்த புதிய கம்பிகள் மூலம் ஒரு நிமிடத்தில் 8 எழுத்துக்களை அனுப்ப முடிந்தது. அதிக தூரம் தகவல் அனுப்பும் போது ஏற்படும் தகவல் இழப்பை தடுக்க சில புதிய கருவிகளும் இணைப்பில் இணைந்தன.

1870 -ல் ஒரே கம்பி வழியாக பல தகவல்களை அனுப்பும் முறை கொண்டுவரப்பட்டது.

1873, 1874, 1880, மற்றும் 1894 வருடங்களில் மேலும் பல புதிய கம்பிகள் புதைக்கப்பட்டன19-ம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் பிரிட்டிஸ்,பிரான்ஸ்,ஜெர்மனி,அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உரிமையான தகவல் தொடர்பு கம்பிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் நாடுகளை இணைக்க துவங்கியிருந்தன ,கம்பிகளின் உதவியால் கண்டங்கள் இணைய ஆரம்பித்தன...

அடுத்த பதிவில் கணினிகளின் வளர்ச்சியைப்பற்றி பார்ப்போம்:

தொடர்ந்து வாசித்து ஆதரவு தாருங்கள்.தங்கள் சந்தேகங்கள்,கேள்விகள்,கருத்துக்கள் போன்றவைகளை மறக்காமல் கமென்டில் குறிப்பிடவும்

Labels: , , , , ,

Sunday, November 04, 2012

தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை ! ஏன்??



    தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை ! ஏன்??
    தீபாவளி -தீபங்களின் வரிசை எனப்பொருள்படுகிற சமஸ்கிருத சொல்.தீபாவளியை தீபஒளித்திருநாள் என்று நாம் தமிழில் மொழியாக்கம் செய்து கொண்டோம்.இந்த திருநாள் கொண்டாடப்படுவதற்கு ஒன்றிற்கு மேற்பட்ட காரணங்களை பட்டியலிடுகிறார்கள்.

    கதை கதையாம் காரணமாம்...

    1.நராகாசுரனை கிருஷ்னன் வதைத்த நாள்
    2.ராவண வதம் முடிந்து ராமன் அயோத்தியா திரும்பிய நாள்
    3.பாண்டவர்கள் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய தினம்
    4.கோவர்த்தன கிரி மலையை தன் சுண்டு விரலால் தாங்கி மக்களை மழையிலிருந்து கிருஷ்ன்ன் காத்தருளிய நாள்.
    5.பார்கடலை கடையும் போது பூமியில் ஏற்பட்ட விஷத்தின் தாக்கத்தை சரி செய்த தன்வந்திரியின் பிறந்த தினம்.
    6.மகாவீர்ர் ஞானம் பெற்ற தினமாக சமணர்கள் கொண்டாடுகிறார்கள்.
    7.சீக்கியர்கள் தங்கள் ஆறாவது குருவான ஹர் கொவிந்த் சிங்க் -ன் வருகையை குறிக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்...(மொகலாய மன்னன் ஜஹாங்கீர் சீக்கிய குரு மற்றும் 52 மன்னர்களை கைது செய்திருந்தான்,40 நாட்களுக்கு பிறகு குரு ஹர் கோவிந்த் சிங்க் விடுதலை செய்ய்ப்பட்ட தினம் தீபாவளி தினம் .இதன் நினைவாகவே சீக்கியர்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.)
    8.வங்காளத்தில் காளியை வழிபடும் தினமாக கொண்டாடுகிறார்கள்
    9.மார்வாடி இன மக்கள் தீபாவளியை வருடபிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

    இப்படியாக பட்டியல் நீள்கிறது.

    இதில் நரகாசுர வதத்திற்காக தீபாவளி என்பது நம் தமிழ் மக்களிடம் பரவலாக உள்ள நம்பிக்கை ...

      நரகசுர வதம்
    எந்த காரணமாக வேண்டுமானலும் இருந்து விட்டு போகட்டும்.தீபாவளியின் நோக்கம் அல்லது தத்துவம் 
     " தீமையை நன்மை வெற்றி கொள்ளல் " என்று சுருக்கமாக கூற முடியும்."அறியாமை இருளை அறிவு ஒளியால் நிறைக்கும் திரு நாள் " என்று கூட அர்த்தம் சொல்கிறார்கள்.

    இதை நினைவு கூர்ந்து சந்தோசமாக இருப்பதற்குத் தான் தீபாவளி என்னும் பண்டிகை நம்மிடையே கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி திருநாள் இந்தியாவில்:

    குஜராத்,மஹாராஸ்டிரம்,ஆந்திரம்,கேரளம்,பீகர்,வங்காளம்,அசாம்,கோவா,ஒரிசா,கர்நாடகம் ,தமிழகம் போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி தமிழர்களின் பண்டிகை கிடையாது.

    தீபாவளி பண்டிகை வட இந்தியர்கள் துவக்கி வைத்த பண்டிகை.வட இந்தியாவில் ஐந்து நாள் பண்டிகையாக இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.

    5 நாள் பண்டிகையின் முதல் நாள் ஐப்பசி மாதம் (வடநாட்டில் இம்மாதத்தின் பெயர் அஸ்வினி மாதம்) வருகிற தேய்பிறையின்.(கிருஷ்ண பட்சம்) 13 ம் நாள் தன்திரயோதசி என்று பெயரிடப்பட்டு கொண்டாடப்படுகிறது. (தன் என்றால் செல்வம் எனும் பொருள்படும் திரயோதசி என்பது பதிமூன்றாம் நாள் என பொருள் படும்.). இந்த நாளில் தேவ லோக மருத்துவர் தன்வந்திரி பாற்கடலை கடைந்த போது பரவிய விஷத்தின் தாக்கம் போக்க அமிர்த கலசத்துடன் அவதரித்த தினம் என்றும் நம்ப படுகிறது.  

  1. முதல் நாள் முதலாளிகள் தங்கள் புதிய கணக்கு துவங்கும் நாளாக கொண்டாடுகிறார்கள்.
  2. இரண்டாம் நாளை நரகாசுர வதத்தினை நினைவு கூறும் தினமாக கொண்டாடுகிறார்கள்.
  3. மூன்றாம் தினம் (அமாவாசை) செல்வத்தின் நாயகி லெட்சுமியை ஆராதித்து வணங்கி வழிபடும் தினமாக கொண்டாடப்படுகிறது
  4. நான்காம் தினம் கோவர்த்தன பூஜை (கிருஷ்ணன் மலையை தாங்கி மழையின் தாக்கத்திலிருந்து மக்களை காத்த நாள்).ஹிந்து வருட பிறப்பின் துவக்க நாள்.
  5. ஐந்தாம் நாள் யமன் தன் தங்கை யமியை சந்தித்த தினம் என்று கொண்டாடப்படுகிறது.யமன் தன் தங்கைக்கு பரிசுப்பொருட்களை கொடுத்ததாகவும்,யமி தன் அண்ணனுக்கு விருந்து உபசாரம் செய்ததாகவும் சொல்கிறார்கள்.இந்த தினத்தை யம துவிதியை என்று அழைக்கிறார்கள்.இந்த தினத்தில் அண்ணன்மார்கள் தங்கள் தங்கைமார்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்..


  6. இந்த ஐந்து நாள் விழாவில் நம் பணத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் மனநிலை தீபாவளி (பணத்தின் நாயகி லெட்சுமியை வழிபடும் முறை) பண்டிகையை மட்டும் கொண்டாட துணிந்தது.

    தீபாவளி வட நாட்டினரிடமிருந்து தென்னாட்டவருக்கு பரவிய கொண்டாட்ட தினம்.

    பிற நாடுகளில் தீபாவளி:

    தீபாவளி இந்தியா தவிர பிற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.!(அந்த நாடுகளில் இந்தியர்கள் தான் கொண்டாடுகிறார்கள்)

    அவைகளின் பட்டியல் கீழே...

    அந்த நாடுகளில் தீபாவளி கொண்டாட்டம் பற்றிய விவரம் வேண்டுவோர் லிங்கை க்ளிக் செய்து பெற்று கொள்ளலாம்.




    அடுத்த பதிவில் தீபாவளி பண்டிகை பற்றி இன்னும் பேசலாம்...





Labels: , , , , ,