தீபாவளி : சில நிபந்தனைகள்
(தீபாவளி கொண்டாடுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பகுதி)
தீபாவளி -நடைமுறை கண்ணோட்ட அலசல்: (Practical Perception on Diwali)
முன்குறிப்பு:
இது தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை ஏன்? எனும் பதிவின் தொடர் பதிவு.நான் இந்த தலைப்பிட்டதை பலர் ஏன்?? என்று சுட்டியிருந்தார்கள். இந்த தலைப்பை முதலில் பயன்படுத்திய நபர் தந்தைப் பெரியார் - பெரியார் 94ஆவது பிறந்தநாள் விழா "விடுதலை" இதழில் தீபாவளி தமிழர் விழாவா? என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.(இங்கு கிளிக் செய்து அந்த கட்டுரையை படிக்கலாம்).
தீபாவளியும் நானும்:
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.தீபாவளி கொண்டாட எந்த காரணம் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.அது நம் தமிழர் பண்டிகையாக இல்லாமல் இருந்தால் என்ன? அதை நாம் கொண்டாடக்கூடாதா? நடைமுறை சார்ந்த கண்ணோட்டத்தில் இந்த தீபாவளி பண்டிகையை இந்த பதிவில் அலசலாம்.
எனது குழந்தை பருவத்தை நினைத்து பார்க்கிறேன்....தீபாவளி பண்டிகையை தேடி காலண்டரை அடிக்கடி புரட்டி நாட்களை எண்ணும் அந்த சின்னஞ்சிறு வயதை நினைத்து பார்க்கிறேன்....
தீபாவளி பெரியவர்களுக்கு சந்தோசம் தருகிறதோ இல்லையோ, குழந்தைகளுக்கு பாரபட்சம் காட்டாமல் சந்தோசம் காட்ட தீபாவளிகள் எப்போதும் தயாராகவே இருக்கின்றன.எனக்கும் கூட அப்படித்தான் தீபாவளி அறிமுகமாகியது(வயது நினைவில்லை).அதிகாலை எண்ணெய் குளியல்,புத்தாடை,மூத்தோர் காலில் விழுந்து ஆசி பெறல்,பின்பு இனிப்பு,பலகாரம்,சாப்பாடு என செம கட்டு கட்டுதல்,அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளல், பட்டாசு வெடித்து மகிழ்தல்.
எனக்கு விவரம் தெரிந்த வரையில் என் தீபாவளிகள் பெரும்பாலும் இப்படியாகத்தான் இருந்திருக்கின்றன.நான் பத்தாம் வகுப்பு முதல் ஒரு மூன்று வருடம் தினமலர் நாளிதழ் போடும் சிறுவனாக இருந்திருக்கிறேன்,தீபாவளி அன்று தினமலருக்கு விடுமுறை கிடையாது,இலவச இணைப்பாக சீயாக்காய் பொடி,ஷாம்பூ இது போன்ற விசயங்களையும் நாழிதளுடன் அவர்கள் தருவார்கள்.அதிகாலையில் நாளிதழுடன்,இலவச இணைப்பையும்,தீபாவளி வாழ்த்துக்களையும் வீடு வீடாக இறைத்துவிட்டு ஏழு மணிக்குள்ளாக வீடு வந்து தீபாவளியை தொடர்வேன்.
வயது ஆக ஆக தீபாவளி மீதான சுவரசியம் எனக்கு குறைந்து கொண்டே வந்திருப்பதை என்னால் கவனிக்க முடிகிறது.தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்தல்,தீபாவளியன்று ரிலீஸ் ஆகிய படங்களுக்கு செல்லுதல் என்று கொண்டாட்டம் சிறு வட்டத்தில் சுற்ற ஆரம்பித்தது.
தீபாவளி ஏன் எதற்காக?.., கொண்டாட வேண்டுமா? வேண்டாமா?... தமிழர் பண்டிகையா? ஆரியர் பண்டிகையா? என்று கேள்வி கேட்பதெல்லாம் வீண் வேலை தான் ,கொண்டாட ஒரு நாள் இருக்கிறதென்றால் கொண்டாட யோசித்து நாளை இழப்பதை விடுத்து கொண்டாடி மகிழ்ந்திருப்பதே மேல்.
கொண்டாடுவதற்கு முன் சில நிமிடம்...:
தீபாவளி என்றவுடன் நம் நினைவிற்கு எது வருகிறதோ இல்லை பட்டாசுகள் நிச்சயம் வரும்.பணம் இல்லா நபர்கள் கூட கடன் வாங்கியாவது பட்டாசு வாங்கி வெடித்து மகிழும் நடைமுறை நம்மவர்களிடம் உண்டு. காசை கரியாக்குதல் என்று இந்த பட்டாசு வெடிக்கும் நடைமுறைக்கு செல்லப்பெயரும் உண்டு.
பட்டாசில்லாத தீபாவளி, Green diwali, என்று சமூக சிந்தனையாளர்களும்,சுற்று சூழல் அறிஞர்களும் கூறுகிறார்கள்., பட்டாசில்லாத தீபாவளியா? நினைத்து கூட பார்க்க முடியாது நம்மால்.
தீபாவளியும் -பட்டாசும்:

6-14 வயதுடைய குழந்தைகள் 33,000 பேர் குழந்தை தொழிலாளர்களாக சிவகாசியில் இருப்பதாக ஐ.நா வின் அறிக்கை சொல்கிறது.(கணக்கில் தெரிந்து இவ்வளவு தெரியாமல் எத்தனையோ?) உலகில் அதிக குழந்தை தொழிலாளர்கள் கொண்ட நகரம் சிவகாசி.நாம் வெடிக்கும் பட்டாசுகளை தயாரித்து கொடுத்த அந்த பிஞ்சு விரல்களை பட்டாசை கையிலெடுக்கும் நொடிகளில் நினைத்துப் பார்க்க வேண்டும்.பட்டாசு வெடித்து சிதறுவது கண்டு,எத்தனை குழந்தைகளின் கனவுகள் இப்படி வெடித்து போயிருக்கும் என்று யோசித்து கொள்கிறேன்.,வெடி சத்தத்தை என்னால் இப்போது ரசிக்க முடியவில்லை.
தீ விபத்துகளில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் சீன பட்டாசு தொழிற்சாலையை விட இரண்டாம் இடத்தில் இருக்கும் நம் சிவகாசி முதல் இடத்தில் இருக்கிறது.இது வரை ஆயிரக்கணாக்கானவர்கள் நம் பட்டாசுகளை தயார் செய்ய உயிர் இழந்து இருக்கிறார்கள்.அரசாங்க புள்ளிவிவரம் (TNFAMA மற்றும் IANS) கடந்த 12 வருடங்களில் 237 உயிர்கள் பலியாகியுள்ளன மற்றும் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கட்டுக்கதை கட்டுகிறது.
பட்டாசு இல்லாமல் தீபாவளியா ?
நரகாசுரனை வதம் செய்த கிருஷ்ன பரமாத்மா கட்டாயம் பட்டாசு வெடித்து தான் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கட்டளை இட்டாரா? என்ன?.
பலர் "நான் பட்டாசு வெடிக்க மாட்டேன் என்று சொல்கிற நபர்களை பாமரத்தனமாகத்தான் பார்க்கிறார்கள்.பட்டாசு வெடிப்பது என்பது தீபாவளியின் சம்பிரதாயம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.
பட்டாசுகள் தீய சக்திகளை விரட்ட 2ம் நூற்றாண்டில் சீனர்கள் கண்டுபிடித்தவை.கிபி.581 -907 வரை சீனாவை ஆட்சி செய்த சூயீ மற்றும் டாங்க் காலத்தில் (Sui and Tang Dynasties ) பல ரக பட்டாசுகள் பட்டையை கிளப்ப ஆரம்பித்தன.(1300 களில் மார்கோபோலோ ஐரோப்பியர்களுக்கு சீனர்களின் இந்த பழக்கத்தை அறிமுகம் செய்தார்) மூங்கில் குழாய்களில் வெடிமருந்தை நிரப்பி வெடித்து மகிழும் இந்த பழக்கம் மெல்ல பல நாடுகளில் பிரபலமடைந்து,இன்று நாம் பயன்படுத்தும் நவீன பட்டாசுகளாக நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கிறது.
நம் சிவகாசியில் 1934 ல் திரு. சன்முக நாடார் மற்றும் திரு ஐய நாடார் ஆகிய இருவரால் வெடி தொழிற்சாலையின் விதை இடப்பட்டது.இவர்கள் ஆரம்பித்த தொழிற்சாலைக்கு தேவையான பொருட்கள்,வெடிமருந்துகள் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
காலப்போக்கில் இந்தியா முழுமைக்கும் பட்டாசு விற்பனை செய்யும் பிரம்மாண்ட நகரமாக அவதாரம் எடுக்க துவங்கியிருந்தது சிவகாசி, National Fireworks, Kaliswari Fireworks மற்றும் Standard Fireworks 1942-ல் ஆரம்பிக்கப்பட்டன.
சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை:
1934 -1 அல்லது 2
1942- 3
1980- 189
2001- 450
சிவகாசி சில தகவல்கள்:
- இந்தியாவின் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தான் தயாராகின்றன.
- இந்தியாவின் 80 சதவீதம் தீப்பெடிகள் இங்குதான் தயாராகின்றன.
- சிவகாசியில் வருடம் முழுக்க தயாராகும் பட்டாசுகள் இந்தியா முழுக்க மூன்றே நாட்களில் வெடித்து தீர்க்க படுகின்றன.
- வேலையில்லா திண்டாட்டம் இங்கு கிடையாது !
- சிவகாசியை குட்டி ஜப்பான் என்று செல்லப்பெயர் இட்டவர் ஜவஹர்லால் நேரு.
தீபாவளியை பட்டாசு இன்றி கொண்டாட முடியுமா?
பட்டாசுகளை நாம் விரும்பாவிட்டாலும் குழந்தைகள் விரும்புகின்றன,அதனால் அதை வாங்க வேண்டிய அவசியம் உள்ளது என பலர் சொல்கிறார்கள்,கொஞ்சம் யோசியுங்கள் பட்டாசு கண்டு பயப்படும் குழந்தைகளுக்கு பட்டாசை அறிமுகம் செய்தது யார் என்று?,குழந்தைகளுக்கு பட்டாசின் தீமைகளை எடுத்து சொல்லுங்கள், வெடியே வெடிக்க வேண்டாம் என்று சொல்லாதீர்கள்,குறைத்து கொள்ளுங்கள்.,குறைகளை சொல்லுங்கள்.
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தமாம் நம்மில் எத்தனை பேர் வீடுகளில் தீபாவளிக்கு விளக்கேற்றுகிறோம்.(பட்டாசு கொளுத்துவதோடு சரி)
பட்டாசினால் விளையும் தீமைகள்:
1.மாசு (காற்று மற்றும் ஒலி)
2.மிருகங்களை மிரள வைக்கும்
3.தீ விபத்துகளுக்கு காரணமாகும்
4.வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் தொல்லை தரும்
5.குழந்தை தொழிலாளர்.
6.தயாரிக்கும் இடத்தில் விபத்து
7.வெடிக்கும் நபருக்கும் பாதிப்பு தரும்
தீபாவளி லஷ்மியை சிறப்பிக்கும் தினம் அந்த தினத்தில் அந்த லஷ்மி படத்தை சுற்றி இருக்கும் லட்சுமி வெடிகளையும்,சரஸ்வதி வெடிகளையும் ,இன்ன பிற கடவுள் உருவம் சுற்றிய வெடிகளையும் நாம் வெடிக்கிறோம். எது எதுக்கோ போராட்டம் செய்றாங்க....இதுக்கெல்லாம் செய்ய மாட்டாங்க !
அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !
கட்டுரைக்கு உதவியவை:
புதிய தலைமுறை 20/9/2012
http://sivakasionline.com/ மற்றும்
wikipedia கட்டுரைகள்
12 Comments:
நல்ல சிந்தனை விஜயன்.
பட்டாசு வேண்டாம் சரி. அதையே நம்பி வாழும் - ஆபத்து என்று தெரிந்திருந்தும் அங்கு வேலை செய்யும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேறு வேலை தேடிக் கொடுத்து இட்டு இதை சொல்ல வேண்டும் இல்லையா?
நல்ல பகிர்வு. பட்டாசினால் ஏற்படும் தீமைகள் பற்றி தரவுகளுடன் அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.
இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.
தீபாவளி பற்றி விரிவான அலசல் நன்று விஜயன். வெடி வெடித்தலை விரும்புவதற்கு ஏதேனும் உளவியல் காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
நல்ல அலசல்...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
அதுவும் சரி தான்! அரசின் கையில் உள்ளது இதன் பதில்.
நல்ல பதிவு! நானும் சிவகாசிப் பெண் தான். குழந்தைத் தொழிலாளர் பற்றிச் சொல்லி இருந்தீர்கள், இப்போது முன்பு போன்ற நிலை இல்லை. என் அம்மா சிறு பிள்ளையாய் இருந்த பொது, நிறைய குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தார்களாம். இப்போது, எனக்குத் தெரிந்து அவ்வளவு இல்லை.
எவ்வளவு கஷ்டம் என்றாலும் இன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் தான் அதிகம்.
பிறகு, தயவு செய்து பட்டாசு வெடிக்காமல் தீபாவளி எல்லாம் கொண்டாடாதீர்கள்.
இங்கிருக்கும், நிறைய பேருக்கு பட்டாசைத் தவிர வேறு எதுவுமே தெரியாது.
பட்டாசு தான் இங்கு சோறு போடுகிறது! நீங்கள் பட்டாசு வாங்குவதைக் குறைத்தால், இவர்கள் உணவு உண்பது ஒரு நேரமாய்க் குறையும்!
ரஞ்சனி அம்மா சொன்னது போல, இவர்களுக்கு வேறு வழி செய்து கொடுக்காமல், நீங்கள் இப்படி உறுதி மொழிகள் எடுப்பது, சரியாக இருக்காது.
பெரியார் அவர்களது கட்டுரைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பில் அந்தக் கட்டுரை இல்லை :( சரி பாருங்கள்.
"சண்முக நாடார், ஐய நாடார்" - ஐயா நாடார் இல்லை :)
போராட்டம் செய்ய புதுசா ஐடியா எல்லாம் குடுத்திருக்கிங்க :) ஏற்கனவே நடக்குற போராட்டங்களுக்கே சரியா முடிவு கெடச்ச மாதிரி இல்லையே, இதுல இது வேறையா?
நிறைய வாசித்து, அருமையாகத் தொகுத்து எழுதி இருக்கிறீர்கள்.
இனிய தீபாவளி நல வாழ்த்துக்கள் - உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும்.
----
கண்மணி அன்போடு!
மிக்க நன்றி அக்கா, உங்களுக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்
T.N.MURALIDHARAN Said
//தீபாவளி பற்றி விரிவான அலசல் நன்று விஜயன். வெடி வெடித்தலை விரும்புவதற்கு ஏதேனும் உளவியல் காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன்.//
நிச்சயமாக இருக்க வேண்டும்.நான் இப்படி யோசிக்கிறேன்...
ஆச்சரியமான விசயங்களை மனம் விரும்புவது இயற்கை தானே.திரியில் தீ வைத்ததும் வெடிக்கும் பட்டாசு அதிசயம் அதனால் அதை விரும்புகிறோமோ?,நமக்குள் மறைந்திருக்கும் கோப உணர்வு,வெறி உணர்வு,வன்முறை போன்றவைகளுக்கு வடிகாலாக இருப்பதால் சிலர் விரும்புகிறார்கள்.
மறுமொழி @ கண்மனி
மிக்க நன்றி கண்மனி விரிவான கருத்துரைக்கு .
குழந்தை தொழிலாளர்கள் குரைந்திருப்பது மகிழ்ச்சி.
//ரஞ்சனி அம்மா சொன்னது போல, இவர்களுக்கு வேறு வழி செய்து கொடுக்காமல், நீங்கள் இப்படி உறுதி மொழிகள் எடுப்பது, சரியாக இருக்காது//
உண்மை தான்.
//"சண்முக நாடார், ஐய நாடார்" - ஐயா நாடார் இல்லை :)//
சரி செய்து விட்டேன்.
பட்டாசு வெடிப்பது சரியா? சரியில்லையா? என்று எனக்கு தெரியவில்லை ,பாட்டாசுக்கு அதிகம் செலவு செய்வது எனக்கு முட்டாள் தனமாக தான் படுகிறது.
//போராட்டம் செய்ய புதுசா ஐடியா...//
ஏதோ பல நாளா மனதில் இருந்த விசயத்தை சொன்னேன் அவ்வளவு தான்...
//இது தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை ஏன்? எனும் பதிவின் தொடர் பதிவு.நான் இந்த தலைப்பிட்டதை பலர் ஏன்?? என்று சுட்டியிருந்தார்கள்//
தமிழர்களின் பண்டிகையை மட்டுமா தமிழ்நாட்டில் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள்?
பட்டாசு வெடிப்பது உலக இயற்க்கை சூழலுக்கு திங்கு விளைவிப்பதால் பட்டாசு வெடிக்காத தீபாவளி கொண்டாடபட வேண்டும். பட்டாசு வெடிக்க கூடாது என்பதில் நான் உங்களுடன்100% உடன்படுகிறேன். குழந்தை தொழிலாளர்களை வைத்திருப்பது தடைசெய்யபட்டது. 33000 பேர் குழந்தை தொழிலாளர்களாக சிவகாசியில் இருக்கும் காட்டுமிரண்டிதனத்தை பார்த்து கொண்டிருப்பது இந்திய அரசு. அதை கண்டித்து அரசை குழந்தை தொழிலாளர்களை வைத்திருப்போர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பண்ண வேண்டுமே தவிர தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை என்பது சரியல்ல.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...
நல்ல சமூக அக்கறை கொண்ட பதிவு தான்.. சிவகாசியில் 33000 குழந்தை தொழிலாளர்கள் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? அதே போல் TANFAMA என்பது அரசாங்கம் சார்ந்த இலாகா இல்லை.. நாம் அணியும் ஆடையினால் திருப்பூர் போன்ற பகுதிகளில் நீராதாரம் பாதிப்படைகிறது என்பதால் ஆடை அணியக்கூடாது என்று சொல்லலாமா? Sustainable development என்பது இன்றைய தேதியில் எங்கும் இல்லை. ஒரு ஊரின், நூற்றுக்கணக்கான கிராமங்களின் சோற்றை அழித்து தான் நீங்கள் பட்டாசு ஆலைகளை மூட வேண்டும்..
Post a Comment
கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....
Subscribe to Post Comments [Atom]
<< Home