Sunday, October 21, 2012

நகர (நரக) மழை

           மழைநீரில் தன்னை முழுவதும் நனைத்திருக்கும் மின் கம்பி:         இடம்:சென்னை கோயம்பேடு


மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்த மழை


(மழையை ரசிப்பதற்கும்,மழையில் நனைவதற்கும் நம் அன்றாட பணிகள் மற்றும் அலுவல்களுக்கிடையில் நேரம் இருப்பதில்லை,அன்பின் ஊற்றாக வானம் பூமி மீது ஊற்றும் மழை மீது நமக்கு பெறும்பாலும் வெறுப்பு தான் வருகிறது,நகர வாழ்வில் மழை என்பது நரகமாக தான் இருக்கிறது)

அன்றைக்கு மழையின் வீச்சு பூமி மீது கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.மழையை திட்டிய படியே என் அலுவலக பணிக்கு பேருந்து பிடிக்க சாலையில் நடந்து போய் கொண்டிருந்தேன்...சரசர ஓசையில் மெல்லிய குரல் ஒன்று கேட்டது... அது வெறும் மழையின் சரசரப்பு தான் யாரோ பேசுவது போலவே என் காதுகளுக்கு கேட்டது.துளித்துளியாக பூமி வரும் மழையில் ஒரு துளி மெல்ல என் காதருகே வந்து என்னோடு பேச துவங்கிற்று...

இப்பொழுதெல்லாம்...
எங்களை ஏன் யாரும் ரசிப்பதே இல்லை?
எங்களின் வாழ்வின் அதாரம் "நீர்" என்று
எப்போதும் எங்களை வாயார புகழ்வீர்களே!
எங்கே போனீர் எங்களை வரவேற்காமல்...

நித்தமும் நீங்கள் வேண்டுகிறவர்கள்
மொத்தமாய் வந்திருக்கிறோம்
வரவேற்க வில்லை என்றாலும் பரவாயில்லை
கொட்டித்தீர்க்கும் எங்களை திட்டி தீர்க்காதீர்கள்

சாலைகளை சிதைத்து
சாக்கடைகளை நிறைத்து
தொல்லை தர பூமி வந்த 
தொல்லை கும்பல்
இல்லை நாங்கள் !

மரங்களின் கையசைப்பில் மனமிரங்கி
தரை இறங்கி தரணி வந்தவர்கள்
வற்றிக்கொண்டிருக்கும் உயிர்த்துளியை
துளித்துளியாய் நிறைக்க வந்தவர்கள்

வேலைகளை முடக்க வந்த 
முட்டாள் மழையென்று
முனுமுனுப்பு செய்பவர்களே !

அன்றாட வாழ்வை பாதிக்க வந்த
படுபாவி மழையென்று
பல்லவி பாடுபவர்களே !

கொஞ்சம் கவனியுங்கள்

ஓய்வின்றி சுற்றும் பூமி
காய்ந்து விடாதிருக்க
கடவுள் அனுப்பிவைத்த
கருணை மனுக்கள் நாங்கள்

பால் வற்றிப்போன 
பூமியின் தனங்களில்
மீண்டும் பால் சுரக்க
மருந்தாய் வந்தவர்கள்

எம்மை சேமிக்க சொல்லி 
விளம்பரங்கள் செய்கிறீரே !

நாங்கள் நகரக்கூட
இந்த நகரத்தில் இடமில்லை
வரவுக்கே "வழி"யில்லை
எம்மை எங்கே சென்று சேமிப்பீர்

பாராட்ட சொல்லியோ!
வசைபாட சொல்லியோ!
உங்களை ஒருபோதும்
நாங்கள் கேட்டதில்லை !

எங்களுக்கும் அரசியல் தெரியும்
அதிகம் பெய்து அழிக்கவும் செய்வோம் !
அளவாய் பெய்து காக்கவும் செய்வோம் !
பெய்யாதிருந்து வதைக்கவும் செய்வோம் !

நீங்கள் வசிக்கும் உலகை
வளர்த்து விட்டவர்கள் நாங்கள்
உறுதியாய் கூறுவோம்
உங்களுக்கு உயிர் தந்தவர்கள் நாங்கள்

பூமி காப்பது உங்களுக்கு கடமை
பூமி காப்பது எங்களுக்கு உரிமை
                                                                                           -விஜயன்



இது எனது 50 வது பதிவு.நான் கவிதைகளை தனியாக வானம்பாடி என்ற தளத்தில் எழுதி வருகிறேன்,இனி கடற்கரையிலும் எழுத தீர்மானித்துள்ளேன்,கவி வானில் சுற்றி திரியும் வானம்பாடி இனி என் எண்ண அலைகள் சங்கமிக்கும் கடற்கரையிலும் பறக்கும்.





 

Post Comment

14 comments:

  1. மழையில் அதிகமாக நனைந்துவிட்டீரோ?

    அருமையான ரசனை நண்பரே!

    //மழைநீரில் தன்னை முழுவதும் நனைத்திருக்கும் மின் கம்பி// உயிர் உறைகிறது நண்பரே!


    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நன்பரே மழை என்னை மிகவும் நனைத்துவிட்டது,கடந்த சில நாட்களாக மழையில் நனைந்து கொண்டு தான் அலுவலகம் செல்ல வேண்டியதாக உள்ளது..(குடை இன்னும் வாங்க வில்லை :)

      Delete
  2. முதல் படம் பதட்டத்தை ஏற்படுத்துகிறது...

    நல்ல வரிகள்...

    முடிவில் இரு வரிகள் குறள் எண் 12-யை ஞாபகப்படுத்தியது...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கெடுப்பதும் கொடுப்பதும் மழை என்று வள்ளுவன் அன்றே இரு வரியில் சொல்லிவிட்டேன்...நான் கொஞ்சம் அதிகமான வரிகளில் அதை சொல்லி விட்டேன்...நன்றி அண்ணா

      Delete
    2. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு,, இத்தனை தளங்களுக்கு பின்னூட்டமிட உங்களுக்கு நேரம் எவ்வளவு,எப்படி கிடைக்கிறது????அறிய ஆஆஆவல்!!!!!!!!

      Delete
    3. Please Contact 9944345233 or dindiguldhanabalan@yahoo.com

      Delete
  3. அத்தனை வரிகளும் அற்புதம் விஜயன்.உங்களுக்கு கவிதை நன்றாக வருகிறது.
    வாழ்த்துக்கள் தொடர்க

    ReplyDelete
  4. என்ன ஒரு ஒற்றுமை இருவருமே ஐம்பதாவது பதிவில் இருக்கிறோம்...

    பெரிய கவிதை, ஆனாலும் அற்புதமான வார்த்தைகள்... ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. அரை சதம் அடித்து விட்டோம், சேம் பின்ச் அண்ணா!

      Delete
  5. மழையே பேசுவதாக அமைந்துள்ள கவிதை அற்புதம் விஜயன்!
    முதல் படம் நம் நாட்டில் மனித உயிர்களைப் பற்றிய கவலை இன்மையை கூறுகிறது. பார்க்கும் போதே குலை நடுங்குகிறது.

    50 பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்மா... வாழ்த்துக்களுக்கும் வரவுக்கு மிக்க நன்றி

      Delete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....