Tuesday, August 14, 2018

பொதுபுத்தி பாலியல் வறட்சியும் – தனி நபர் கற்பழிப்புகளும் | #Yours Shamefully

யூட்யூபில் அதிகம் பார்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அதிகம் பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த வைரல் குறும்படமான Yours Shamefully  பற்றிய விவாதம் தான் இந்த கட்டுரை…



Yours Shamefully
Yours Shamefully

12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வக்கிரங்களுக்கு மட்டுமே தூக்கு தண்டனை என்கிற சட்டத்திருத்தம்  நடைமுறைப் படுத்தப்பட்ட நடப்பு ஆண்டில் (2018 ஆம் வருடம் ) நடப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது கதை. 12 வயதும் 45 நாட்களுமான குழந்தை ஃபாத்திமா, ஆதவன் மற்றும் டேனியல் தாமஸ் என்கிற இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட  வழக்கிற்கு இறுதித் தீர்ப்பு வழங்கவிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெமினி . இது தான் இந்த குரும்படத்தின் ஒன்லைன் கதை.
தூக்குத் தண்டனை கட்டாயமில்லை என்கிற நிர்பந்தம் – 2067 க்குப் பிறகான பெண்களின் நிலை பற்றி அவரது மகளின் திருமண பந்தத்தை தொடர்புபடுத்தி நீதிபதிக்கு வரும் ஒரு Fantasized  கனவு – அவர் என்ன தீர்ப்பு வழங்கினார் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு. இந்த மாதிரி வழக்குகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்கிற டைரக்டர் விக்னேஷ் கார்த்திக்- ன் கருத்து தான் இந்தப் படத்தின்  ஹார்ட் பீட்.

இக்குறும்படம் கிட்டத்தட்ட இதை  பார்க்கும் எல்லோராலும் பாராட்டப்படுகிறது, இக்குறும்படத்திற்கு வந்திருக்கும் டிஸ்லைக்குகளும், நெகடிவ் கமெண்ட்களும் முழு படம் பார்க்க பொறுமை இன்றி அந்த நீதிபதி காணும் கனவு காட்சியை மட்டும் கண்டுவிட்டு கடுப்பானவர்கள் என்றே நினைக்கிறேன்.  2067- க்கு பின் நடப்பதாகக் காட்டப்படும் அந்தக் காட்சி மட்டும் படமாக எடுக்கப்பட்டிருப்பின் ஒட்டுமொத்தமாக எல்லோரும் நெகடிவாகத்தான் இந்த படத்தை விமர்சித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
2067-க்குப் பிறகான பெண்களின் நிலை என்று காட்டப்படும் அந்தக் காட்சியில் போலிஸ் பாதுகாப்போடுதான் பெண்கள் நடமாடுகிறார்கள், பாலியல் கொடுமைகளாலும், பெண் குழந்தைகளை விரும்பாத பெற்றோர்களாலும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து குறைந்து (2013- 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் , 2026ல்  –  1000 ஆண்களுக்கு 785 பெண்கள் என 2064 – ல் 1000 ஆண்களுக்கு 270 பெண்கள் எனக்  குறைவதாக இந்த குறும்படத்தில் ஒரு பயடேட்டா முன்வைக்கப்படுகிறது. 2016 ல் மட்டும இந்திய தேசம் முழுக்க 36000 பாலியல் வக்கிர புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவாம்! ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே போகும் இந்நிலை இப்படியே தொடர்ந்தால்.. பெண் குழந்தைகள் வளரும் முன்னரே பாலியல் பசிக்கு இறையாகி சாகடிக்கப்படுவார்கள்.
இந்நிலை இப்படியே தொடர்ந்தால்… என்கிற நூலைப் பிடித்துக்கொண்டு மிக நேர்த்தியாக தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் விக்னேஷ் கார்த்திக். கடந்த காலம் எப்படி இருந்ததோ அதன் அடிப்படையில் தான்  நிகழ்காலம் இருக்கும் , அதே மாதிரி நிகழ்கால செயல்களின் தாக்கம் எதிர்காலத்தை பாதிக்கும். தற்போதைய நிலவரப்படி தினசரி 50 க்கும் மேற்பட்ட பாலியல் கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக அரசு புள்ளிவிவரம் சொல்கிறது. பதியப்படாமல் பலியாகும் அபலைகள் எத்தனை பேரோ தெரியவில்லை! இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பெண்களின் எண்ணிக்கை குறைந்து விடும் தான், இக்கருத்தைத் தான் இக்குறும்படத்தின் முதல் பகுதி சித்தரித்திருக்கிறது.
நீதிபதி ஜெமினியின் கனவில் வரும் காட்சியில் 2067ம் வருடத்திய இந்திய அரசு ஒவ்வொரு பெண்ணும் ஆண்களின் எண்ணிக்கையை ஈடு கட்டுவதற்காக குறைந்தது இரண்டு திருமணமாவது செய்து கொள்ள வேண்டும் என சட்டம் போடுகிறது, தனது மகளுக்கு இரண்டாம் கனவனை தேடிக் கட்டிவைக்கும் கணம் நீதிபதி அவர்கள் இரண்டு கணவன்மார்களுடன் படுக்கையில் தன் மகள் இருக்கும் திடுக்கிடும் காட்சியைக்கண்டு அதிர்ச்சியில் கண் விழிக்கிறார்.
இந்த குறும்படம் எழுப்பும் கேள்விகள்:
1)ஹாஸினி, ஆசிஃபா பானு, என எத்தனை குழந்தைகளை நாம் காமுகர்களுக்கு சாகக்கொடுக்கப் போகிறோம்.
2)இத்தகைய மிருகங்களை கொடுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.வெறுமனே தூக்குதண்டனை போதாது. அப்பொழுது தான் இதற்குப் பின் வருகி்ற காமுகர்கள் இதை பாடமாக எடுத்துக்கொண்டு திருந்துவார்கள் .
3)கற்பழிப்புக் கொலைகள் தொடரும் பட்சத்தில் ஆண்களுக்கான பெண்களின் எண்ணிக்கை குறைந்து போய் 1000 ஆண்களுக்கு வெறும் 270 பெண்கள் என்பதாக குறைந்துபோகும் காலம் வரலாம். அப்போது ஆண்களின் ஆசையை ஈடுகட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் 2 திருமணங்கள் கட்டாயம் எனும் சட்டபூர்வமாக சொல்லப்படலாம்.

இந்தக் குறும்படம் நிலைப்படுத்தும் கேள்விகள் நம் பொதுபுத்தி மனோநிலையில் ஏற்கனவே இருந்த ஒன்று தான், நம் வீட்டாருக்கு இப்படியொரு நிலைமை வந்தால் நாம் என்ன செய்வோம் என்கிற சைக்காலஜிக்கல் தாக்குதல் தான் இதுவும் “நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல” என்கிற வசவின் மாறுபட்ட வடிவம் தான் இத்திரைப்படம் சொல்லும் விசயமும், நாம் இத்தகு பிரச்சினைகளுக்கு சிந்திக்கும் தண்டனைகளும்.
ஏன் நாம் ஒரு விசயத்தை சரியா, தவறா என மனசாட்சிப்படி சிந்திக்காமல், பயத்தின் அடிப்படையில் சிந்திக்கிறோம், பயமுறுத்தும் வகையில் தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்று ஏன் யோசிக்கிறோம்?
Yours Shamefully
பொதுபுத்தி பாலியல் வறட்சியும் – தனி நபர் கற்பழிப்புகளும் :
தாகம் வந்தால் தண்ணீர் குடிக்க வேண்டும், என்பது நடைமுறை நியதி ஆனால் தண்ணீரைப் பார்க்கும்போதெல்லாம் தாகம் கொள்ளும் மனப்பான்மை நோய்மை. பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் காமுறும் வக்கிர சமூகமாக நாம் மாறி இருக்கிறோம். இந்த குறும்படத்தை விளம்பரபடுத்தி அதிக பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட யுக்தியைப் பாருங்கள். படுக்கையில் இரண்டு ஆண்களுக்கு நடுவில் படுத்திருக்கும் ஒரு பெண். அந்த யூட்யூப் சேனலில் பகிரப்படும் விசயங்கள் பெரும்பாலும் பாலியல் சார்ந்தவைகளும், கிசுகிசுகளுமாகத்தானே இருக்கிறது.
நாமும் யூடியூபில் அதிகமாய் இப்படிப்பட்ட கருமங்களைத் தானே தேடித்தேடி  பார்க்கிறோம்.  டிரெண்டிங்க் ஆக்கித் தொலைக்கிறோம், கண் சிமிட்டும் கன்னி, புருவம் உயர்த்தி புன்னகைக்கும் அழகி இப்படி நாம் டிரெண்டிங் செய்த வீடியோக்களின் பின்னனியில் நம் மனதிற்க்குள் இருக்கும் காம உணர்வை நாம் சொறிந்து கொண்டு சுகப்படும் காரணம் மறைமுகமாக இருக்கத்தானே செய்கிறது. தேடி பல வீடியொக்கள் பார்த்து , பிறர் வாட பல செயல்கள் செய்யும் நல்லவர்கள் தானே நாமெல்லாம்.
மறைமுகமாக மனதிற்குள் தவறு செய்யும் மனிதர்களான நாம்,  உணர்ச்சிப்பெருக்கு எல்லைமீறி டோபமைன் சுரப்பில் சுரணைகெட்டு தன் சுயநினைவு மறந்து வெளிப்படையாக தவறு செய்பவர்களை தண்டிக்க சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம்.
வெறிபிடித்த மன நிலையில் இருக்கும் ஒருவனுக்கு என்ன சொன்னாலும் எடுபடாது, ஆக வெறிபிடித்த எல்லோரையும் கொன்றுவிட வேண்டும், வெறி பிடிக்கும் அபாயம் இருக்கும் எல்லோரையும் கொன்று விட வேண்டும்.
மனங்கள் தோறும் கொலைவெறித்தனம் தலைவிறித்தாடும், அரசாங்கமே கொலை செய்கிறது கொலை செய்வது பாவமில்லை, தவறு செய்பவன் என நம் மனதிற்கும் தோன்றும் பட்சத்தில் கொன்று போடலாம் தவறே இல்லை என சப்கான்ஷியஸாக நம்பும் சமூகமாக நாமெல்லாம் கொலைகார சமூகமாக மாறுவோம். சர்வ நிச்சயமாக மாறுவோம்.
பயமுறுத்த வேண்டும், ஆணுருப்பை பொது இடத்தில் வைத்து அறுக்க வேண்டும், தலையை வெட்டிக்கொள்ள வேண்டும், சுட்டுக்கொள்ள வேண்டும் …  யாவரும் காணும் வகையில் சித்திரவதை செய்து சாகடிக்க வேண்டும்.இதை பார்க்கும் யாரும் அடுத்த இப்படி செய்ய பயப்பட வேண்டும்… சரி தான் , இந்த தண்டனைகள் யாவுமே சரிதான் , சிகரெட்டு டப்பாக்களில் புற்றுநோய் புகைப்படத்தை  மிகக்கொடுரமாக சித்தரித்து , வாங்கிப் புகைத்தால் உனக்கும் இது வரும் என பயமுறுத்துகிறோமே, போதாக்குறைக்கு திரைப்படங்கள் துவங்கும் முன் புகையின் பாதிப்பை சொல்லி பயமுறுத்துகிறோமே! பயமுறுத்தி பயப்பட்டு நல்லவர்களாகிவிடும் நல்லவர்களா நாம்.
உடனடி நிவாரனம், தற்காலிக விடுதலை என்கிற மனப்பான்மை உடன் சிந்திக்கும் நாம், நிரந்தர தீர்வு பற்றியும் யோசிக்க வேண்டும்.
நிரந்தர தீர்வுகள்  என்பவை மனதளவில் நம் எதிர்கால ஆணும் , பெண்ணும் ஒருவரையொருவர் பரஸ்பரமாக சக உயிராக பாவித்து, புரிந்து வாழும் சூழலை உருவாக்குவதில் இருந்து துவக்கலாம்.
எதிர்கால சமூகம் என்பது நம் குழந்தைகள் தானே. அவர்களுக்கு நல்லது கெட்டதுகளை உளவியல் ரீதியில் மனதில் பதியும் படி புரிய வைப்பது மூலம்  நல்லதொரு அரோக்கியமான  சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும். என் மனதில் பட்ட சில நிரந்தர தீர்வுகளை இங்கு தருகிறேன்.
நீங்கள் உங்களுக்கு பட்டதை கமெண்ட்டில் கருத்தாக பதிவு செய்யுங்கள்…
1) திருத்தவே முடியாத மிருகங்களை கொல்வதில் தவறில்லை, ஆக 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு தூக்குதண்டனை என்பது எல்லா வயது பெண்களுக்கு நடக்கும் கொடூரங்களுக்கும் தரப்பட வேண்டும்.
2) பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும் அவர்கள் நம் சக உயிரிகள் என்ற சிந்தனை ஆண் குழந்தைகள் மனதில் ஆழமாக பதிக்கப்பட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை நிறுவனங்கள் இதை முன்னெடுக்க வேண்டும், அரசு சிலபஸ் போடும் அதன் பின் சொல்லிக்கொடுப்போம் என எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். (ஒரு பெண்ணின் பிறப்புறப்பில் கைவிட்டு அவள் குடலை ஒருத்தன் இழுக்கிறான் என்றால், அவளை அவன் உயிரினமாகவே மதிக்கவில்லை என்று தானே பொருள்).
3) பாலியல் வறட்சியை ஏற்படுத்தும் சமாச்சாரங்களிலிருந்து விலகி இருக்க மனோ தி்டம் வேண்டும். கலை, இலக்கிய ஈடுபாடும், பெண் பிள்ளைகளுடன் சகஜமாக இயல்பாக பழக உரையாட பதின்மத்தில் இருக்கு ஆண் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
4)ஆண் பெண் உடலில் நடக்கும் பதின்ம மாற்றங்களை பக்குவமாக சொல்லிக்கொடுக்க வேண்டும்.
5)  பெண்களுடன் ஆரோக்கியமாக பழகும் ஆண்களை பெண்கள் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும்., காதல் எனப்பழகி நண்பர்களுக்கு இரையாக்கும் நல்ல உள்ளங்களிடமிருந்து விலகி இருக்க , கெட்டப்புத்திக்காரர்களை நல்லவர்கள் என நம்பாதிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.



#Yours Shamefully 

 

Post Comment

2 comments:

  1. இந்த குறும்படத்தை போடாமல் பிரச்சனைகளை நீங்கள் விவாதித்திற்கலாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. ������������

      Delete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....