Saturday, December 02, 2017

மின்னணுவியல் நுட்பங்கள் - 1


முன்னுரை:

“If there’s a book that you want to read, but it hasn’t been written yet, then you must write it.” 
                                                                                                                                        ― Toni Morrison

எலக்ட்ரானிக்ஸ் பற்றி ஒரு விரிவான தமிழ் புத்தகம் இல்லையே , என்கிற பெரும் ஏக்கம் எனக்கு எப்போதுமே உண்டு. தீர்ந்தபாடில்லை இன்னும் :)
எலக்ட்ரானிக்ஸ்  உலகம் மிக மிக வசீகரமானது!, ஆச்சரியமானது.

விரல் நகம் அளவு மட்டுமே உள்ள ஒரு எலக்ட்ரானிக் சிப் எத்தனை மாயாஜாலங்களை நிகழ்த்துகிறது. யாதுமாகி நின்றாய் எங்கும் நீ நிறைந்தாய் என்று சர்வம் எலக்ட்ரானிக்ஸ் மயம் ஆகிக்கொண்டிருக்கிறது.



செல்பேசி, கணிப்பொறி, தொலைக்காட்சி, கேமரா, செயற்கைக் கோள்....

சமீபத்தில்  ஒரு ஹியுமனாய்ட் ரோபட்டிற்கு குடியுரிமை (Citizenship) வழங்கி இருக்கிறது ஒரு நாடு.... !

 தொழில்நுட்பம் ராக்கெட் வேகத்தில் சீறிப் பாய்ந்துக் கொண்டிருக்கிறது, ஆமை வேகத்தில் அதை அணுகிக்கொண்டிருக்கிறோம்  நாம்.  நமது தொழில்நுட்ப பாட சிலபஸ்களோ அரதப்பழசாக அப்படியே இருக்கிறது இன்னும் மாறாமல்.  `சுவாரஸ்யமான ஒரு  விசயத்தை  Zombie த்தனமாக சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எலக்ட்ரானிக்ஸ் என்பது ஒரு பாடமல்ல. அது ஒரு கலை , அது ஒரு வித்தை .

ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 186,282  மைல்கள் என்று பாடம் சொன்னால், இத்தனை அதிவேகத்தை எப்படி கணித்தார்கள் என யோசிப்பேன், எலக்ட்ரானின் எடை 9.109×1031 கிலோ என்றால் எப்படி இதை எடை போட்டார்கள் என்று யோசிப்பேன். பாடபுத்தகங்க்கள் எனக்கு ஒரு போதும் திருப்தி அளித்ததில்லை,  ஏன் இந்த புரியாத கணக்குகள்,சமன்பாடுகள் ., இதையெல்லாம் படித்தால் நம்மால் எலக்ட்ரானிக் சாதனங்களை அவை இயங்கும் முறைகளை , புரிந்து கொள்ள முடியுமா?, இவற்றைப் படித்துத் தேறுவதால் எலக்ட்ரானிக் கருவிகளை நம் தேவைக்கேற்ப வடிவமைத்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திவிட முடியுமா? சர்வநிச்சயமாக நம் பாடத்திட்டம் இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லப் போவதில்லை. நாமாகத் தான் தேடி ப் படிக்க வேண்டும். நான் தேடி அடையாளம் கண்டுகொண்ட விதத்தில் எலக்ட்ரானிக்ஸை கொஞ்சம் விரிவாக, புரியும் வகையில் கதைபோல எழுதிச் சொல்லலாம் என இருக்கிறேன்.

யாருக்கானதில்லை,  இத் தொடர் :

விசயங்களை மேலோட்டமாக வெறும் வரையறைகளாக, வார்த்தைகளாக மனப்பாடம் செய்து புரிந்து கொள்வதால் அதை தெரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறவர்கள். விரிவாக தெரிந்து கொள்வது பயனற்றது, இது தான் இது என்று எதையாவது சொல்லி வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், ஆரம்பநிலையிலிருந்து கற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்கள் தயவுகூர்ந்து இத்தொடரை வாசிக்க வேண்டாம்.

எதைப்பற்றிய, யாருக்கான, எப்படிப்பட்ட தொடர் இது ?

 எலக்ட்ரானிக்ஸ் பற்றி  விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டும் என வேட்கை உள்ள யாவருக்குமான , மிகத்தெளிவான, அதேநேரம் கதை போன்ற நடையில் எலக்ட்ரானிக்ஸை கற்றுக்கொள்ள நினைக்கும் யாவருக்குமான தொடர் இது.

இந்த பெறும் முயற்சியை வெற்றிகரமாக்க வேண்டும் என எனக்குத்துணையாய் நின்று என்னை எழுதப் பணிக்கும் இறை சக்தியைப் போற்றி   எழுதத்துவங்குகிறேன். எப்படியேனும் இதை வெற்றிகரமாக தொடர்ந்து எழுத வேண்டும். குறைந்தபட்சம் வாரம் ஒரு பதிவேனும் எழுத வேண்டும் என எனக்கு நானே கட்டளையிட்டுக்கொள்கிறேன்.

                                                                                                                             -கற்போம் 

 

Post Comment

2 comments:

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எலக்ட்ரானை தேடி....அருமை

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....