Thursday, December 11, 2014

பட்டியலிடப்படாத புது சித்தன்

கவிச்சித்தன் பாரதி 

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா
 யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்
                                      -பாரதி

ரலாற்றை கி.மு , கி.பி எனப் பிரித்து அடையாளப் படுத்துவது மாதிரி , தமிழ் கவிதையின் காலகட்டத்தை பாரதிக்கு முன், பாரதிக்குப் பின் என பிரித்துச் சொல்லலாம். அவனுக்கு முன் புழக்கத்தில் இருந்த கவிமரபை ,கவிதைக்கான வடிவத்தை, அதில் ஊடாடும் சொல்வரிசைகளை, வார்த்தைகளை புதிதாக்கி கவி செய்தவன் பாரதி. புதுக்கவிதை வடிவத்தை தமிழுக்குள் அறிமுகம் புகுத்தியவன் பாரதியே என்றே சொல்லலாம்.

சொல் புதிது, பொருள் புதிது
சோதி மிக்க நவ கவிதை
எந்நாளும் அழியாத மாகவிதை

என்று தன் கவிதைகளுக்குத் தானே ஒரு வரையறை சொல்கிறான். பாரதியின் கவிக்குழந்தைகளை இசைத்தொட்டில் கட்டி ஆட்டுவித்தால் இன்றளவும் கூட ரசிப்பதற்கு ஆளுண்டு.

தேச விடுதலை, தெய்வப் பாடல்கள், மனஉறுதிப் பாடல்கள், மாமனிதர்களைப் பற்றிய பாடல்கள் என பல பாடுபொருள்களைக் கொண்டு பாடியிருக்கிறான்., அவை அத்தனையையும் மொத்தமாய்ச் சேர்த்தால் சில நூறு பக்கங்களில் அடக்கிவிடலாம், அவனது மொத்தக் கவிதைகளையும் குறைந்தபட்சம் 50 ரூபாய் கொடுத்து மலிவுவிலை பதிப்பாக வாங்கி விடலாம்.

சரி,  நாம் கட்டுரைக்கிட்ட தலைப்பை கவனிப்போம் :)

பாரதி தனக்கென சுயசரிதை ஒன்றை எழுதுவதற்கெண்ணமிட்டு ஒரு பாட்டுத்தொடரை ஆரம்பித்தான் , அவனது அதிர்ஷ்டமோ , நம் அதிர்ஷ்டமோ என்னவோ அது 66 பாடல்கள் மட்டுமே எழுதப்பட்ட நிலையிலேயே பாரதி தனது உலக வாழ்வை முடித்துக்கொண்டான்.

அதன் முதல் வரியிலேயே தன்னை ஒரு சித்தன் என பறைசாற்றிக்கொண்டு ஆரம்பிக்கிறான். நான் இன்ன தேதியில் பிறந்தேன், தாய் தந்தையர் இன்னார் என்றெல்லாம் கதை சொல்லி அதை வாழ்க்கைக்கோப்பாகச் செய்யாமல் வாழ்வியல் கோப்பாக செய்திருக்கிறான்.   
பாரதி 66 


இந்த பாடல் கோப்பை கூர்ந்து நோக்கும் போது சுயபுரணம் பாடாமல் சுயமாய் தான் உணர்ந்த உண்மைகளை அவன் உரைப்பதை உணர முடியும் .சக்தி உபாசனை, கவலையொழித்தல்,மெய்ஞான உரைகள், தான் கண்ட மனிதர்கள் என கூறிக்கொண்டு போகிறான் , ஒரு பாடலில் இப்படி சொல்கிறான்.,

விசமருந்தியும் சாகமல் இருக்கும் வித்தை கற்றால், வேறென்ன வேண்டும் எனக்கிங்கு என,

இதேபோல அநேகமான பாடல்களில் மரணமில்லை தனக்கென சொல்லிக்கொள்கிறான்.அதே சமயம் அதை வாசிப்போருக்கும் அப்படிச் சாகதிருப்பதற்கான சாத்திரத்தையும் கற்பிக்கிறான்.

இம்மாதிரியாக பாரதி பாடிய ஞானப் பாடல்களைக் கவனிக்கும் போது அவன் சித்தர்களின் மனோநிலையில் நின்று அதை அமைத்துக் கொடுத்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

பெரிய பெரிய மேற்கோளெல்லாம் கூட வேண்டாம், இளையராஜா மெட்டமைத்து பாரதி திரைப்படத்தில்  "நிற்பதுவே , நடப்பதுவே " என்றொரு பாடல் வருமே,  கேட்டிருக்கிறீர்களா .

அதில் அவன்  எல்லாமே மாயையா, இது, அது, நான் என எல்லாமே மாயையா !!, கற்றது, கேட்டது, கருதுவது எல்லாமே மாயையா !!, காட்சிப்பிழையா, தோற்ற மயக்கங்களா !! என புலம்பித் தீர்க்கிறான்... ஒரு மாபெரும் குழப்ப சுழலை உருவாக்கி அதில் குதிக்கிறான்.

அதே நேரம் அந்த பாடலின் கடைசி வரியில் (பாரதி திரைப்பட பாடலில் இந்த கடைசி வரி பாடப்படவில்லை) ஒரு முடிவுக்கு வருகிறான்.

 காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்ப மென்றோ?
வீண்படு பொய்யிலே- நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை
காண்பது சக்தியாம் – இந்தக் காட்சி நித்தியமாம்.


எதையெல்லாம் பார்க்கிறேனோ அது எல்லாம் உண்டு, உண்மை, நித்தியம் என.

பாரதியிடம் எனக்கு மிக மிகப் பிடித்த குணாதிசயம் இது தான், தானே கேள்விச்சுழலை உருவாக்கி உள்ளே குதித்துப் பின் வார்த்தை கயிறொன்றைக் கட்டி ,அதைப் பிடித்துக்கொண்டு வெளிவந்துவிடுவான்.இதே வகையறாவில் இன்னும் நிறைய பாடல்களைச் சொல்லலாம்.

" நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா !" பாடலில் கூட

"பொன்னை,  உயர்வை, புகழை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத்தகாதென்று " புலம்பிக்கொண்டே சென்று, இறுதியில் துன்பமில்லை ,தோல்வியில்லை என முடித்திருப்பான்.

குழப்பம் கொண்டு, மீண்டு வருதல் என்பதுதான் சித்தர்கள் உருவாக ஆதார காரணம், பட்டினத்தார்,இடைக்காடர் என அநேக சித்தர்கள் அப்படித்தான் வந்திருக்கிறார்கள். பாரதியும் அப்படித்தான் , ஒருமுறை அப்படி முழுவதும் மூழ்கி, பின் ஆழ்ந்த தெளிவு பெற்று  வெளிவந்த பின்னர் அவர்களை துன்பம் எதுவும் அணுகுவதில்லை.

புரட்சிக் கருத்துக்களை தூவிவிட்டதை காரணம் சொல்லி  வெள்ளையர்கள் பாரதியை சிறைபிடிக்க முயல்கிறார்கள், வறுமை, துன்பம், கவலை, என பல விசயங்கள் அவரைத் துரத்துகின்றன. இருந்தும் அவரது பாடல்களில் அந்த துன்பத்தின் சுவடு அணுத்துகள் அளவுகூட கிடையாது.

The Law Of Attraction என்று ஒரு தியரி சொல்கிறார்கள் துன்பமில்லை , துன்பமில்லை என சொல்லிக்கொண்டே இருந்தால் துன்பம் இல்லாதொழிந்து போகும், நான் வெற்றிகொள்வேன் என மனப்பூர்வமாக அவநம்பிக்கை சிறிதுமின்றி எண்ணிக்கொண்டே இருந்தால் வெற்றி கிடைக்கிறது. சதா கஷ்டம் தான்., இறைவனிட்ட வழி இது, எல்லாம் தலையெழுத்து எதுவும் மாறப்போவதில்லை என சொல்லிக்கொண்டிருந்தால் துன்பம் நீங்காதிருந்து வதைக்கிறது,

நினைத்ததே நிகழ்கிறது என்பதே நிதர்சனம்  .

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆன்ந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று " என சுதந்திரம் வருவதற்கு முன்பே பாடிவைத்தவன் பாரதி

இதைச் சுட்டிக்காட்டி பலர்,  பாரதி ஒரு தீர்க்கதரிசி என்கிறார்கள் , இன்னொன்றும் சொல்வேன் நான் , அவன் அத்தனை தீர்க்கமான சிந்தனையுடன் , எண்ணச்செறிவுடன் , சதா சர்வ காலமும் சுதந்திர நினைவுடன்  அதை பாடியதால் தான் , அந்த பாடலை அவன் பாடிச்சென்ற சில வருடங்களிலேயே சுதந்திரம் கிடைத்தது, வெள்ளையன் நம் நாடு விட்டு அகன்றான் .

                                 ***********

மகாகவி பாரதியார்

ம்மை இதை செய், அதை செய் என்றெல்லாம் உள்ளிருந்து இயக்கும்  அந்த கண்ணுக்குப் புலப்படாத செயலிக்கு (சாப்ட்வேர் புரோக்ராமிற்கு ) Mind என பெயரிட்டுள்ளோம், இந்த மைன்டை பழங்கால சாத்திரங்கள் மனம்,புத்தி,சித்தம்,அஹங்காரம் என பிரித்துள்ளன.

அஹங்காரம் : நான் என்ற உணர்வு

மனம் – இந்த நான்கிற்கான கூட்டுப்பெயர், பிறந்தது முதலாய் நாம் கற்றுக்கொள்ளும் அத்தனையும் +  கடந்த ஜென்மத்திய நினைவுகளின் சாரம்

(ஒப்பீடு : கணினியில் பதியப்பட்ட டேட்டா,கோப்புகள்)

புத்தி- ஹார்ட் டிஸ்கில் பதியப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம் மாதிரி, நமக்குள் பதிவானவை

(ஒப்பீடு: Software)

சித்தம்: எதை செய்ய வேண்டும் என்று சொல்கிற செயல் உணர்வு, நிகழ்வுகளுக்கேற்ப நமது response ஐ தருவது.
(ஒப்பீடு: Software ஐ வேலை செய்ய வைக்கும் இயங்கு செயலி (executor))

சித்தம் குழம்புவதால் தான் இன்ப,துன்பங்கள் எல்லாம் ஏற்படுகின்றன, (எந்த நேரத்தில் எந்த புரோகிராமை எக்ஸ்கியூட் செய்ய வேண்டும் எனத் தீர்மாணிப்பது சித்தம் தானே)

சித்த தெளிவு கொண்டவனே சித்தன்., (சித்து வேலை செயனல்ல J )

ஒரு பாடலிலே பாரதி மாயை உடன் சண்டை பிடிக்கிறான்.,

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே- நீ
சித்தத் தெளிவெனுந்த் தீயின்முன்
நிற்பாயோ? – மாயையே !

சித்த தெளிவு கிடைத்து விட்டால் மாயை இருக்காது என்பதைத் தான் கால காலமாக சித்தர்கள் அனைவரும் நிரூபணம் செய்து வந்துள்ளனர்,
சித்தம் தெளிவாக்கு , அல்லால் இதை செத்த உடலாக்கு என சித்த சுத்தியை வேண்டிய நம் பாரதியும் ஒரு புதுயுக சித்தன் தான்.

சிவ வாக்கிய சித்தர் கல்லை சிவமென்று வணங்குபவர்களை நோக்கி
செங்கலும், கருங்கலும் சிவந்த சாதிலிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவனிருப்பான் என்கிறீர்
உம்பதம் அறிந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்தநாதர் ஆடல் பாடலாகுமே  -    என சொல்கிறார்

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ? – பல
பித்த மதங்களிலேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?  - என கோப்ப் படுகிறார் பாரதி.

சில பாடல்களில் அது வேண்டும், இது வேண்டும் என அன்னை பராசக்தியை ஆசை கொண்டு கேட்கும் அதே பாரதி , வேறு சிலதில் ஆசை தவறென்கிறான்,

சினம் கொள்ளாதே என்கிற அதே பாரதி தான்

சாத்திரம் பேசுகிறாய்- கண்ணம்மா !
சாத்திர மேதுக் கடீ !
ஆத்திரங்க் கொண்டவர்க்கே, -கண்ணம்மா
சாத்திரமுண்டோ டீ !

ஆத்திரம் கொண்டவர்க்கு சாத்திரம் எதற்கடி என கண்ணம்மாவை கடிந்துகொண்டே கன்னத்தில் முத்தம் கேட்கிறார்
அவரது முரண்களுக்குள் எல்லாமொரு இணைப்புக் கண்ணி இருக்கிறது., காரணம் இருக்கிறது, ஒரு அழகும் இருக்கிறது.

சித்தர்களை புரிந்து கொள்வது சிரமம், அவர்களது செயல்கள் சாதரணர்களுக்கு கிறுக்குத் தனங்கள் போலும் கூட தெரியலாம். அதற்காக கிறுக்கர்களையெல்லாம் சித்தன் என்றுவிட முடியாது. ( All dogs barks, but all who barks are not dogs என்பது மாதிரி.). பாரதியின் வாழ்வில் இருந்து பல நிகழ்வுகளை ஆதாரம் சொல்ல முடியும்.

வீட்டில் உள்ளவர்க்கே சோறில்லை என இருக்கும் போது காக்கைக் குருவிகளுக்கு அதை எடுத்து தூவிக் கொண்டிருப்பது, தாழ்ந்த ஜாதியினர் என ஒதுக்கி வைத்தவர்களௌக்கு பூநூல் போட்டு உயர்குடி ஆக்குவதற்கு முயல்வது, சிங்கத்திடம் சென்று “நீ காட்டு ராஜன் நான் ,கவி ராஜன் என ராஜ சந்திப்பைக் கோருவது .,  மதம் பிடித்த யானையைப் பார்த்து ஊரே ஓடும் போது அதை நேருக்கு நேர் எதிர்கொள்வது., மரணித்த பின்னாலும் சாகாதிருப்பது.


பாரதியை ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது , அவனை ரசிக்காமல்,வியக்காமல் இருக்க முடிவதில்லை.,

மகாகவியே உன் பாதம் பணிகிறேன்....

 

Post Comment

Tuesday, December 02, 2014

எச்சரிக்கை

இலக்கியங்கள் - ஜாக்கிரதை“நான் என் பாட்டுக்கு எழுதிக் கொண்டே போவேன், நீ புரிந்துகொண்டால் புரிந்துகொள் , இல்லாவிட்டால் சொறிந்துகொண்டு போ என்கிற மனப்பான்மை நல்லதல்ல”
                                                                                                                       -சுஜாதா
 தேர்ந்த பெண்ணியவாதி ஒருவரின் கவிதை ஒன்றை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதில் அவர் என்ன சொல்கிறார் என்பதை ஏனோதானோ என ஏதோ ஒன்றாகத் தான் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது . வாசிக்கிறோம், வாசித்துப் புரியவில்லை ,திரும்ப திரும்ப வாசிக்கிறோம் ,புரிந்து கொள்ள முற்படுகிறோம் ,புரிகிறதோ இல்லையோ ஆனால் நம் மனம் ஒரு புரிதலை தானே சித்தரித்துக்கொள்கிறது.

 இப்படியான அரைகுறை புரிதல்கள் சரிதானா, என எனக்குள் சிந்திக்கும் போது, சர்வ நிச்சயமாக தவறுதான் என உள்ளுணர்வு சொல்கிறது.
தர்க்கரீதியாக என்னை நானே சமாதானம் செய்தபடி,எனக்கு நானே கூறிக்கொள்கிறேன், “சரியான ஒரு விசயத்தை தவறாக புரிந்துகொள்வது எப்படி தவறோ, அதேமாதிரி சரியான ஒரு விசயத்தை தவறாக புரிந்து கொள்ளப்படுகிற மாதிரி கூறுவதும் தவறுதான் “

இலக்கியம் என்றாலே ஏன் பெரும்பான்மையான மக்கள் பயந்து தலை தெறிக்க ஓடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு அது புரியவில்லை என்பது தான் காரணம். 

நம்மவர்களில் பெரும்பான்மையினரின் உலகம் என்பது அவசர அவசரமாக எழுந்து, இயற்கை உந்துதல்களை முடித்து, பல் தேய்த்து , குளியல் என்கிற பெயரில் தூக்கத்தை தண்ணீர் ஊற்றி கலைத்து ,துரித கதியில் தயாராகி வேகவேகமாக இட்லியையோ, தோசையையோ விழுங்கிவிட்டு அலுவலகம், பள்ளிக்கூடம்,கல்லூரி, தொழிற்சாலை என எங்காவது செல்கிறவர்களாலும், அரக்க பறக்க கனவனையோ , குழந்தையையோ பணிக்கோ, பள்ளிக்கோ தயார் செய்கிற தாய்க்குலங்களாலும் தான்  நிறைந்திருக்கிறது.

ஆங்காங்கே கிடைக்கிற ஓய்வு நேரங்களை தூங்கிக் கழித்தும் ஓய்வெடுத்துக்கொண்டும் கழிக்கவே பெரும்பான்மை சமூகம் விரும்புகிறது, இந்த இடைப்பட்ட ஓய்வு நேரத்தில் களைத்துப்போய் கிடக்கிறவர்களுள் என்னை மாதிரி யாராவது ஒருத்தர் அதிகப்பிரசங்கித்தனமாக கவிதைப் படிக்கிறேன், இலக்கியம் வாசிக்கிறேன் என இலக்கியமில்லாத இலக்கியத்தையும், கவிதையல்லாத கவிதைகளையும் கையில் எடுக்கிற போது , “ஓ !! இலக்கியம் என்றால் இதுதான் போல !!”  என்கிற ஆற்றாமையிலும் ,பயத்திலும் கடுப்பாகவோ அல்லது “ஐ !! கவிதை எழுதுவது இத்தனை எளிதா “ என்கிற விசப்பரிட்சையிலோ இறங்கி விட நேர்கிறது.

என்டர் கவிதைகளையும், புரியாத இலக்கில்லாத இலக்கிய குப்பைகளையும் சேர விட்ட பெருமை , சாட்சாத் நவயுக எழுத்தாளர்களையே சாரும் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.
முடிவில்லாத Dominos Effect  மாதிரி , இன்னமும் அடுக்கி வைத்த அத்தனையும் விழுந்துகொண்டே இருக்கிறது, விழுகிற ஒவ்வொன்றும் விழாதிருப்பதை விழுத்தாட்டிக்கொண்டே செல்கிறது.
எழுத்துலகில் Updation  அவசியம் தான் ஆனால் புதுமை என்கிற பெயரில் அர்த்தமற்ற குப்பைகளை குவித்தல் தவறு.

சரி.,

வாசிக்கிறவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது., அதிலும் தமிழ் வாசிக்கிறவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைந்துவிட்டது என சொல்லிக்கொண்டிருக்கிறார்களே அது உண்மையா ?,  உண்மை போல் தான் தெரிகிறது., அதேநேரம் வாசகர்களுக்கு பிடித்த மற்றும் தேவையான விசயங்களை புரிகிற வகையில் சலிப்புத்தட்டாத நடையில் எழுதித்தருகிற எழுத்தாளர்களும் குறைந்துவருகிறார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை, தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்க்காரன் என்கிற மாதிரி எழுதிக்குவிக்கிறவனெல்லாம் எழுத்தாளன் என்கிற மூடநம்பிக்கை பரவலாக பரவி வருகிறது.

கண் ஆரோக்கியம் பற்றிய புத்தகம் ஒன்றின் அட்டையில் கண்ணாடியுடன் போஸ் கொடுக்கிறார் ஒரு எழுத்தாளர், தமிழ் வழிக்கல்வி பற்றி பேசுகிற எழுத்தாளர் ஒருவர் தன் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்.

எழுத்தாளன், கவிஞன், படைப்பாளி என்கிற அரியாசனங்கள் பல அற்புத  மனிதர்கள் ஏறியவை, ஏறுவதற்கு முன் ஏறுவதற்காக தயார் செய்து கொள்ளுங்கள், ஏறியிருக்கிறவர்கள் பொறுப்போடு எழுத்தாளுங்கள் !
ஒரு குட்டிக்கதை சொல்லிவிட்டு ஆரம்பித்து வைத்த விசயத்தை முடித்து விடுகிறேன் !

கொசுப்பிரச்சினையைக் குறைக்க வேண்டும் என்று சட்டசபையில் சில நாட்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை நடந்ததே !!, அந்த மாதிரி மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் அவர்கள் ஊரில் பெருகிவரும் எலித்தொல்லையைக் குறைக்க வேண்டும் என பேச்சுவார்த்தை ஆரம்பித்தது, ஆளாளுக்கு ஒரு ஐடியா கொடுத்தார்கள், முடிவில் பூனை வளர்க்கும் ஐடியா பெரும்பான்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டது, வீட்டுக்கொரு பூனை அரசு சார்பில் இலவசமாக தரப்படும் என தீர்மாணம் எழுதப்பட்டது.

இலவச பூனை விநியோகம் இனிதே ஆரம்பித்தது.., அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், சாமானியர்கள், பணக்காரன் ,ஏழை என எல்லோருக்கும் வழங்கப்பட்டது.

தெனாலிராமன் வீட்டிற்கும் ஒரு பூனை கொடுக்கப்பட்டது, “ராஜா பூனையை மட்டும் தருகிறாரே , பூனை வளர்க்க மானியம் எதுவும் தரவில்லையே , எப்படி அந்த மானியத்தை அரசரிடமிருந்து சமயோசிதமாக வாங்கலாம்” என யோசனை செய்த தெனாலிராமனுக்கு ஒரு பொறி தட்டியது.

பூனையை கட்டிப்போட்டு பசியோடு போட்டான் , பசித்த பூனைக்கு சுடச்சுட சூடான பாலை வைத்தான்., குடிக்க முயன்று நாக்கை வைத்து வெந்துபோனது., தொடர்ந்து சூடான பாலையே வைக்கிறான், சூடான பதார்த்தங்கள், சூடான பால் , சூடு கண்டு சூடு கண்டு பாலையும், உணவையும் வெறுத்து விடுகிறது பூனை.
சில நாட்களுக்குப் பிறகு..,

அரசவை சார்பாக பூனைகளை வீட்டிற்கு வீடு சென்று சோதனை செய்யும் இலாகா தன் பணியை ஆரம்பிக்கிறது, தெனாலிராமனின் பூனையைப் பார்த்து அதிர்ச்சியான அரசு ஊழியர்கள் என்ன இது என விசாரிக்கிறார்கள் “ நான் என்ன செய்யட்டும் இந்த பூனை பாலையே குடிக்க மாட்டேன் என்கிறது, பாலைப் பார்த்தாலே பயந்து ஓடி விடுகிறது. “ எனக்கூறுகிறான்

“பால் குடிக்காத பூனையா... விளையாடுகிறாயா நீ ?”

“நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்..”

“அட ! ஆமாம், என்னடா இது வினோதமாய் இருக்கிறது”

அரசர் முன் அழைத்துச் செல்லப்படுகிறான் , அரசர் விசாரணையை ஆரம்பிக்கிறார், இவன் செய்த தில்லாலங்கடி வேலை யாருக்குமே பிடிபடவில்லை, அரசரே அவனிடம் வினவுகிறார் “ஏய் ராமா ! வழக்கம் போலவே இது நிச்சயம் உன் தந்திரமாகத் தான் இருக்க வேண்டும், எதற்காக இந்த தந்திரம்”  என்று

அரசனிடம் தன் சமயோசிதத்தைப் பயன்படுத்தி பரிசு பெருகிறான்  அதன்பின் மக்களுக்கு பூனை வளர்ப்பு மானியமும் பெற்றுத்தருகிறான் என்பதாக கதை முடிகிறது.

தற்கால வாசகனும் தெனாலி ராமன் வளர்த்த பூனை மாதிரி தான் பாடப்புத்தகம் பயமுறுத்தும் பயமுறுத்தல்களிடமிருந்து தப்பி வாசிப்பதற்காக புதிதாக புத்தகம் எடுப்பவனை கனமான, வாசிக்க சிரமமான, வாசித்தால் களைப்பாகிற வகையறா எழுத்துக்களைக் காட்டி பயமுறுத்தினால் அவன் என்ன செய்வான் !!
புத்தகங்களை கண்டு ஓடுவதைத் தவிர...

(இன்னும் பேசலாம்... ) 

Post Comment