Saturday, September 14, 2013

சிட்டுக்குருவியின் வானம் 1.1

சிட்டுக்குருவியின் வானம் (1.1)
எவளோ ஒருத்தி  !!
   எங்கே பார்த்தாலும்,எந்தப் பக்கம் பார்த்தாலும் எவளோ ஒருத்தி எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிறாள்.அரைகுறை ஆடையுடனோ,ஆள் மயக்கும் புன்னகையுடனோ,பகிரங்கமான அங்க அரங்கேற்றத்துடனோ கண்டவனின் கண்களை மட்டுமின்றி கண்டவனையே கொள்ளை கொள்வது மாதிரி...

  சுவர் வரைபடமாக, வாரப்பத்திரிகை அட்டைப்படமாக, சினிமா போஸ்டராக விளம்பர பேனராக,கவர்ச்சி நடிகையாக,ஹீரோயினாக,மாடலிங்க் மங்கையாக ,இன்னும் உள்ள ஏதோ ஒன்றாக எவளோ ஒருத்தி எப்போதுமே என் பார்வையில் மட்டுமின்றி எல்லோரது பார்வையிலும் பட்டுக்கொண்டே இருக்கிறாள் முந்தின பத்தியில் பார்த்த மாதிரியாக..

   ஆண்களுக்கான செருப்பு விளம்பரம்,ஆண்களுக்கான உள்ளாடை விளம்பரம் ,என்று பெண்கள் தேவையே இல்லாத விளம்பரத்துக்கு கூட  விளம்பரத்துக்காக அரைகுறை ஆடை அணிந்த அம்மணி ஒருத்தி தேவைப்படுகிறாள்.
  உங்கள் வீட்டில் பழைய வார ,மாத இதழ்கள் இருக்க கூடுமானால் அதை பரப்பிப் போட்டு ஒரு பார்வை இடுங்கள், முக்கால் வாசியில் அந்த "எவளோ ஒருத்தி" இருந்தே தீருவாள்.
அட்டைப்பட அழகிகள்

   அதெல்லாம் சரி...
  "எவளோ ஒருத்தி எப்படி இருந்தாள் உனக்கென்ன வந்தது?"  என்று நீங்கள் என்னைக் கேட்க முயலலாம் ., இதே கேள்வியை நானும் கூட என்னிடம் கேட்கத்தான் செய்கிறேன்!, என்ன செய்ய?? , நம்மவர்கள் மோசம் போய் கிடக்க  அந்த "எவளோ ஒருத்தி" மறைமுகமாக நேரடி காரணமாக இருக்கிறாள் எனும் போது கேள்வி கரைந்து காலியாகி விடுகிறது!!
எவளோ ஒருத்திக்காக நான் ஏன் புலம்ப வேண்டும் !!!...
 சமீப காலமாக செய்தி தாள்களில் வெளியாகும் செய்திகளில் சிலவற்றை என்னால் வாசிக்க  முடிவதே கிடையாது,தலைப்பே தடுமாற செய்து விடுகிறது,.
கற்பழிப்பு,பாலியல் வன்முறை, தற்கொலை.. 
 சில சமயம் தவறிப்போய் செய்திக்குள் நுழைந்தால் கோபப்படவும், வருத்தம் கொள்ளவும்,அடுத்தவரிடம் அந்த செய்தியைக்காட்டி ஆதங்கப் படவும் மட்டுமே என்னால் முடிகிறது என்று என் மீதே கோபம் கோபமாக வருகிறது.,
   யாரோ ஒருவரின் வாழ்வில் ஆணிவேரையே பிடுங்கும் படியாக இருக்கும் அந்த அதிர்ச்சி செய்திகளை என்னைப்போலவே நம்மில் பெறும்பாலானோர்,காபி,டீ,அரட்டை என அசல்டாக கடந்துவிடத்தான் செய்கிறோம் தினம் தினம்...
   முகமறியாத எவளோ ஒருத்தியின் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறைக்கு பின்னால் அரைகுறையோடு கவர்ச்சியாக அங்கம் காட்டும் முகம் தெரிந்த அந்த எவளோ ஒருத்தியின் சிரிப்பு இருக்கத்தான் செய்கிறது, நானோ,நீங்களோ இல்லையென்று அடித்துக் கூறினாலும் கூட..

பாரத மாதா அழுது கொண்டிருக்கிறாள்...
                  
(இன்னும் பார்க்கலாம் விரிவாக...)

                                               சிட்டுக்குருவி சிறகடிக்கும்

படங்கள் உதவி:
1.http://www.canada.com/story.html
2.indiatimes.com
3.http://dinasarinews.blogspot.in/2013/07/12.html


 

Post Comment

Wednesday, September 11, 2013

சிட்டுக்குருவியின் வானம் (0)


து நாள் வரை உங்களுக்கு தொழில்நுட்பக்கட்டுரைகள்,மற்றும் சிற்சில கவிதை,கட்டுரைகள் என்று அறிமுகமான நான் ,சிட்டுக்குருவியின் வானம் என்ற இந்த தலைப்பின் கீழ் இதுவரை பேசாது விட்ட சில விசயங்களை  பேசலாம் என்றிருக்கிறேன்...

ந்த சின்னச் சிட்டுக்குருவிக்கு இறக்கைகள் சிறியது தான் என்றாலும் அதற்கு,வானத்தில் பறக்கத்தெரியும் .வானத்தின் நிழல் பல நேரங்களில் அதன் பயணங்களில் , அந்த குருவியின் மீது விழத்தான் செய்கிறது,புல் மீதிருக்கும் பனித்துளிக்குள் காடு ,மலை,வானம்,வீடு என சகலமும் உள்ளடங்கி பிரதிபலிப்பது மாதிரி இந்த சிட்டுக்குருவியின் சிறிய கண்களுக்குள் இந்த வானம் முழுக்க அடங்கியிருக்கிறது என்பதை அது நம்புகிறது..அது உண்மையா பொய்யா என்கிற வியாக்கியாயங்களுக்குள் நுழைய வேண்டிய அவசியங்கள் தேவையில்லை,ஏனென்றால் அது இந்த சிட்டுக்குருவியின் தனிப்பட்ட எண்ணம்.

"பரந்துவிரிந்த இந்த பிரபஞ்சத்தில் எல்லோரையும் போல... எல்லாவற்றையும் போல.. நானும் ஒரு சிறுதுகள்"

ந்த வார்த்தை கோர்வைதான் நான்  என்னைப்பற்றி (about me) என்கிற இடத்தில் இந்த வலைப்பூவை ஆரம்பித்த அன்றைய தினத்தில் முதன்முதலாக டைப்பிய வரிகள்

ந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு நொடித்துளியும் ஆச்சரியங்களாலும்,பிரமாண்டங்களாலும்,பிரமிப்புகளாலும் மட்டுமே நிறைந்திருக்கிறது,ஒவ்வொரு விசயத்தை பார்க்கும் போதும் நிறைய நிறைய கேள்விகள்,விடைகள் கிடைத்தாலும் கூட மனம் அமைதி கொள்வதில்லை,விடைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் வினா விதை விதைக்கப்பட்டே கிடைக்கிறது போலும்,விடைகள் மீண்டும் நம்மை கேள்விகளை நோக்கி நகற்றுகின்றன...


இந்த சிட்டுக்குருவி தன் சிறிய சிறகுகளை அசைத்து பறந்து விரிந்த வானத்தின் கீழே பறந்து கொண்டிருக்கிறது.வானம் மிகப்பெரியது என்பது அந்த சிட்டுக்குருவிக்கு தெரியும் ஏனோ அது தனது சின்னஞ்சிறிய சிறகுகள் கொண்டு வானத்தை அளந்துவிட முடியும் என்று முயற்சிக்கிறது...
அடுத்த பதிவு முதல்...
நிறைய பேசலாம்..பேசாதுவிட்ட பல விசயங்களை....
                                             -சிட்டுக்குருவி சிறகடிக்கும்
லேபில்கள்:சிட்டுக்குருவியின் வானம்,விஜயன் துரைராஜ்,விஜயன்,விஜயன்துரை,vijayan,durai,vijayan durairaj,vijayandurairaj,chittukkuruviyin vaanam,கடற்கரை

 

Post Comment

Thursday, September 05, 2013

ஆசிரியர் தின சிறப்பு பதிவு



இரண்டு வருடம் ஆகிவிட்டது இன்றிலுருந்து மிகச்சரியாக.,

  கல்லூரி வாழ்க்கைக்குள் நான் முதலாக கால் வைத்தது, இன்று போலொரு ஆசிரியர் தினம் ஒன்றில் தான், பள்ளி வாழ்க்கைக்கு bye bye சொல்லிவிட்டு கல்லூரிக்குள் நுழைந்த போது டீன் ஏஜ் பருவத்தின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்தேன் நான், எல்லை என்றாலே எப்போதுமே ஆபத்திற்கு உட்பட்டது தானே, காதல்,ஆசை,காமம்,குழப்பம்,இச்சை என குழந்தை பருவத்தில் அனுபவிக்காத எத்தனையோ விசயங்கள் விடலை வயதில் விருட்சம் போல வளர்ந்து ஒவ்வொரு பதின்ம வயது பையன்களையும் பெண்களையும் பயமுறுத்த துவங்கிவிடுகிறது.

நானும் பயந்து தான் போயிருந்தேன்,பதின்ம வயதின் எல்லைக்கோட்டை நோக்கி நகர நகர இந்த பயமும் அதிகமாகிக்கொண்டே செல்லும், என்பதை அனுபவபூர்வமாக.. மனப்பூர்வமாக.. Authentic காக என்னால் சொல்ல முடியும்.

பள்ளிப்படிப்பு,எனக்கு வாய்த்தது,இராமேஸ்வரம் என்று அனைவராலும் அழைக்கப்படும் அந்த குட்டித்தீவில்தான் , (எங்கள் ஊர்,ஊர்மக்கள் பற்றியெல்லாம் இன்னொரு நாளில் விரிவாக பேசலாம்). குழந்தைப்பருவம் என்பது ரொம்பவே special அல்லவா,கவலைகள் ,குழப்பங்கள்,சிக்கல்கள்,பொறுப்புகள்,வெறுப்புகள் இப்படி நிறைய "கள்" களுக்கு குழந்தைகள் ராஜாங்கத்தில் ஊசி நாட்டும் அளவிற்கு கூட இடமில்லை !குழந்தைப்பருவம் என்பது எந்த வயது வரை என்று சரியாக எனக்கு சொல்லத்தெரியவில்லை,ஏனென்றால் அது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது என்பது என் கருத்து.குழந்தையாக பிறக்கும் நம்மிடமிருந்து  குழந்தைத் தனங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்க துவங்கிவிடுகிறது இந்த உலகம்,சிலர் சீக்கிரமே குழந்தைதனங்களை தொலைத்து விடுகிறோம்,சிலர் கொஞ்சம் தாமதமாக,அதிர்ஷ்டவசமாக அதை தொலைக்காத அபூர்வமான வெகு சிலரும் இருக்கக்கூடலாம்.

சரி, கட்டுரையின் ஆரம்பத்தில் கல்லூரி என்று ஆரம்பித்திருந்தேன் அல்லவா,அதை தொடரலாம்...

கல்லூரிக்குள் நுழைந்த முதன் நாள் ,ஒரு விழா போலவே இருந்தது, புதிதாக கல்லூரி வந்திருந்த அத்தனை பேரும் ஆடிடோரியத்தில் (Auditorium ) குழுமி இருந்தோம் கல்லூரி பற்றிய அறிமுக உரையுடன் ஆரம்பித்த அந்த மேடை நிகழ்வு இன்னும் என் நினைவில் இருக்கிறது.
கல்லூரி வாழ்க்கைக்கு புதியவர்களுக்கான அட்வைஸ்கள் ,ராகிங்க்,தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகள்,என பல விசயங்களை பேசி முடித்துவிட்டு எங்களையெல்லாம் வகுப்புவாரியாக வரிசைப்படுத்தி வகுப்பறைகளுக்குள் அனுப்பிவைத்தனர்.

முதல் வருடம் கனவுகளுடன் ஆரம்பித்தது கல்லூரி வாழ்க்கை, "ஹையா நானும் காலேஜ் படிக்கிறேன்" இந்தியாவில் மேல்நிலை கல்வி முடித்து மேற்படிப்புக்குள் நுழையும் அந்த முப்பத்திச் சொச்சம் சதவீத மாணவர்களுள் நானும் ஒருவனாக கல்லூரிக்குள் நுழைந்திருந்தேன் !!

படிப்பு என்பதற்கு மேலாக பல விசயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறது கல்லூரிவாழ்க்கை,இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடலாம் என்று நினைக்கிறேன்

1.புதிய இடமும்,அது சார்ந்த பழக்கமும்
2.வயது

பதின்ம வயதின் எல்லையில் நின்றிருக்கும் சமயத்தில் தான்  பலர் கல்லூரிக்குள் நுழைகிறோம் !
பதின்ம வயதின் படியில் கால் வைத்து வருடங்கள் சில கழிந்திருந்தாலும் கூட ஆரம்ப நிலையை விட இந்த எல்லை நிலை கொஞ்சம் slippery ஆனது என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

நல்லவேலையாக இந்த வழுக்குத்தரைப் பருவம் எனக்கு வழுக்கவில்லை,:)

ஆண் பெண் என இருபாலரில் பலர் இந்த slippery வயதில் தான் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறார்கள்,அதுவும் Co-Ed கல்லூரிகளில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் எனலாம்.

அதே போல சில பழக்கங்கள் நம்மை அடிமையாக்க முயல்வதும் இந்த பதின் பருவத்தில் தான்,அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகும் அற்புத பருவம் பலருக்கு அற்பமாக முடிவது இப்படித்தான்.,

கல்லூரி முதல் வருடம் பரிட்சை முடிந்து பரிட்சை பலன்களை அண்ணா யூனிவர்சிட்டி வெளியிட்டிருந்தது. கிணறு தாண்டும் பூனை போல முதல் வருடத்தை தாவிவிட்டேன், "ஆத்தா நான் பாஸாயிட்டேன்..." முதல் வருட தாவல் சில பல குருட்டு நம்பிக்கைகளைக் கொடுத்திருந்தது,பர்ட்சைக்கு முதல் நாள் படித்தாலே போதும் (சிலருக்கு இது உண்மையாக இருக்கக்கூடும்,இந்த விதிக்கு அடியேன் விதிவிலக்கு போலும்..),எதையெழுதி வைத்தாலும் வாத்தி மார்கள் மார்க் போட்டுவிடுவார்கள்,இன்னும் நிறைய... பாஸாகி விடலாம் என்ற தெனாவட்டு கொஞ்சம் நிறையவே வந்திருந்த்து...
இரண்டாம் வருடம்...
கல்லூரி வாழ்வில் அநேக பேருக்கு ஆப்பு வைத்து கொண்டிருந்த அல்லது வைத்துக்கொண்டிருக்கும் அந்த அரியர்ஸ் என் வாழ்க்கையிலும் வந்தது.செமஸ்டர் ரிசல்ட் பார்த்து செம கடுப்பான சமயம் அது.முட்டிக்கொண்டிருந்தது கண்ணீர்,எனக்கு கம்பேனி கொடுக்க சக நன்பர்கள் சகவாசத்தில் இருந்தாலும் ,ஆசுவாசப்பட என் மனம் தயாராய் இல்லை.அட வுடு மச்சி காலேஜ் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று அரியர் அனுபவசாலிகள் அட்வைஸ் செய்தார்கள் !!... ம்ம் ஹூம் ....அன்றைய தினம் ரிசல்டுக்கு முன் ரிசல்டுக்கும் பின் என இரண்டாக பிரிக்கப்பட்டது.
யாருடனும் சரியாக பேசவில்லை,உண்மையை சொல்ல வேண்டுமானல் பேச முடியவில்லை,பேச பிடிக்கவில்லை..

பாஸாகி விட்டு குதிக்கும் நபர்களை குரு குரு வென பார்த்திருந்தேன்,அவர்களின் சந்தோசம் ஏனோ எனக்கு மட்டும் (எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை) கோபத்தை கொடுத்தது.

அரியருக்கு புதியவர்களை தேடிப் பிடித்தது என் பாழாய்ப்போன மனம், அதில் என் நன்பர்கள் இரண்டு பேர் கிடைத்தார்கள்,அதிர்ஷ்டவசமாக நாங்கள் மூவரும் ஒரே ரூம் ??? (அதனால தான் அரியர் வந்திருக்குமோ?) எங்கள் ரூம் மேட்களில் பாலா ஒருவன் மட்டும் ஆல் க்ளியர் !!

குரு,பாலாஜி,நான் மூவரும் குழுவாக இணைந்து அரியர்ஸ் தந்த ஆப்பினை வீட்டில் எப்படி சொல்வது,இந்த மனக்குழப்பத்தை தீர்க்க வழி என்ன என்று யோசிக்கத் துவங்கினோம் (அடக் கடவுளே!! )

ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தோம் "நம்மால் முடிவு எடுக்க முடியவில்லை,என்கிற முடிவுக்கு" முடிவில் ஒரு ஆசிரியரிடம் சென்று இது பற்றியெல்லாம் சொல்லி அட்வைஸ் வாங்க முடிவு கட்டினோம் !

அந்த அரியரின் ஆரம்ப தினத்தின் பொன்மாலை பொழுதில் ...கல்லூரி முடிந்து எல்லோரும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள்,ஏனோ நாங்கள் வீடு திரும்பாமல் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம் !

எங்கள் இயற்பியல் பேராசிரியரின் அறை திறந்திருந்தது! திறமையாக பாடம் சொல்லித்தரும் மிக்க்குறைவான ஆசிரியர்களில் அவரும் ஒருவர், கல்லூரி முதல் வருடத்தில் பரிட்சயம் ஆனவர் அவர்,முதல் வருடத்தின் இரண்டு செமஸ்டர்களும் அவரே எங்களுக்கு பிஸிக்ஸ் வாத்தியார்!!.

வகுப்புக்கு நோட்ஸ் கொண்டுவராமல் மனப்பாடமாக பாடம் சொல்லித்தருவார்,பாடம் முடித்ததும் கேள்வி கேட்க நேரம் தருவார்,நேரம் போதவில்லை என்றால் ஓய்வு நேரத்தில் வர சொல்வார், வகுப்பில் உள்ள அத்தனை மாணவர்களையும் நம்பர்களாக அல்லாமல் நன்பர்களாக பார்க்கும் நல்ல ஆசிரியர் அவர் !! வகுப்பில் இருக்கும் அத்தனை பேரையும் பெயர் சொல்லி அழைக்க கூடியவர் (நான் அவரின் ஞாபக சக்தியை வியப்பதுண்டு).

மனம் முன் ஓடிய பிலாஸ் பேக்கினை மையமாக்க் கொண்டு ,இவரிடம் போய் அட்வைஸ் கேட்கலாம் என்று ஒருவாறு முடிவு செய்தோம்! அறைக் கதவின் அருகே போய் மூன்று பேரும் நின்றிருந்தோம், எதுவும் பேசவில்லை,எதுவும் கேட்கவில்லை...

நேரத்துளிகள் காலமெனும் கடலுக்குள் காலமாகிக்கொண்டிருந்தன... அவரே எங்களைப் பார்த்தார் !! என்ன விசயம் என்பதை அவர் பாணியில் ஆச்சரியமாக,புன்னகையுடன் கேட்டார்..

நானே முதலில் வாய் திறந்தேன், அரியர் பற்றி சொல்லிக்கொண்டு அழுதே விட்டேன்,முட்டிக்கொண்டிருந்த கண்ணீர் கொட்டியே விட்டது !...

தன் பணியை அன்று ஒரு நாள் எங்களுக்காக ஒதுக்கி வைத்துவிட்டு எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எங்கள் ஒவ்வொருவருக்குமாக  கவுன்ஸ்லிங்க் கொடுத்தார், பேசினோம்... 

என்ன பேசினோம் என்பதை அடுத்தப்பாகத்தில் பகிர்ந்து கொள்கிறேன் (வாசகர்கள் விரும்பின் மட்டும்) ,அது ரொம்பவே சென்சிடிவான விசயம் என்பதால்...

காலமெனும் வெள்ளத்தில் நான் திசை மாற்றப்படவில்லை.இந்த ஆசிரியர் தினத்தில் எங்க ராஜா சாருக்காக நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்..

Hats Off sir, 

ஆசிரியர் தினம் பற்றிய எனது பழைய கட்டுரை,மறக்காம இதையும் படிங்க...!! :)

எனக்கு ஆசிரியர்களை சுத்தமா பிடிக்கவே பிடிக்காது


                                                                                 

 

Post Comment