Saturday, January 30, 2016

வழிப்போக்கனின் வார்த்தைகள் - 1

நல்லவர்களும்...  கெட்டவர்களும்...


" சமநிலையை நோக்கிய பயணமே - பிரபஞ்சத்தின் இயக்க ரகசியம்"
                                                                                                               -வழிப்போக்கன்

துவக்கமும் முடிவும் இன்றி நீண்டுகிடக்கிற மாயப்பாம்பென ஊர்ந்துகொண்டேயிருக்கிறது காலம். காலசர்ப்பத்தின் ஊர்தலின் முன்னால் நம் இருப்பு எத்தனை துச்சம் !! என எண்ணிப்பார்க்கிறேன், இந்த மிகச்சிறிய கால நீளத்திற்குள் தான் நாம் எத்தனை ஆட்டம் போட்டு விடுகிறோம்.

கொலை,கொள்ளை, கற்பழிப்பு எனச் செய்திதாள்களின் பக்கங்கள் நிறைக்கப்படுகின்றன. தீமைகள் வலுத்துவிட்டன, நல்லவர்கள் என்கிற அரிய இனம் அழிவை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறது.

மேம்போக்காகச் சிந்திக்கிற போது அல்லது பார்க்கிற போது தீயவைகள் பெருகி விட்டது போலத்தான் தெரிகிறது, (அப்படி என்றால் அது உண்மை இல்லையா!?)

எங்குப் பார்த்தாலும் சுயநலம், யாரைப் பார்த்தாலும் சுயநலம், ஊருக்குள்ள நலவங்களையே பார்க்க முடியறது இல்லை, எனச் சதா சர்வகால உச்சாடனம் செய்துகொண்டு சுற்றித்திரிகிற சாமானியன் தான் நானும் கூட.

சமீபத்தில் சென்னையை இயற்கை அன்னை தலைமுழுகிவிட முடிவெடுத்து சென்னைக்கு ஜலசமாதி கட்டிக்கொண்டிருந்த வேலையில் அன்பு , பாசம், இரக்கம், கருணை, இன்னபிறக்கள் என அடுத்தடுத்து எடுத்து வைத்துச் சுயநலம்,ஏமாற்றிப்பிழைத்தல்,வஞ்சகம் போன்ற நெகட்டிவ் விசயங்களைச் சரிகட்டிவிட்டு இயற்கை அன்னையின் கையில் இருந்த தராசு தட்டை சமன்செய்து விட்டோம்.இயற்கை அன்னையும் சென்னையை முழுகடிக்கவில்லை. Thank God ! இல்லை இல்லை Thank Humanity! .

நாம் முன்னெச்சரிக்கை, முன்யோசனை, திட்டமிடல் என எத்தனை பிரயத்தனமாக இருந்தாலும் கூட நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டியது நடந்துவிடத்தான் போகிறது.நம்மால் அதை மாற்றி விடவோ ! நடக்காமல் தடுக்கவோ செய்துவிட முடியாது ,ஆனால் நடப்பதிலிருந்து தப்பிக்கவும் தற்காக்கவும் முடியும்.

அந்த வகையில் சென்னை மூழ்கினபோது அதை மீட்டெடுத்த அன்புக் கரங்களைக் கண்டு மெய்யாலுமே மெர்சலாகிவிட்டேன், அடேங்கப்பா !! ரகம் ரகமாய் வகைபிரித்துக்கொண்டு உதவியிருக்கிறார்கள், சமூக ஊடகங்களை இப்படியும் பயன்படுத்த முடியுமா , அதன் மூலம் கூட உதவ முடியுமா என அசத்தியிருக்கிறார்கள் , அரசாங்கம் உதவும், என அசால்ட்டாக இல்லாமல் களம் இறங்கி உதவியிருக்கும் உள்ளங்களை நினைத்துப் பார்க்கையில் மெய் சிலிர்க்கிறது.

ச்ச்ச ! ஊருக்குள்ள நல்லவங்களும் இருக்காங்கப்பா, எல்லாருமே திருடங்க இல்லை !.

"சமநிலையே பிரபஞ்சத்தின் ஆதார தத்துவம்" என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு, எத்தனைகெத்தனை இருள் இருக்கிறதோ அத்தனைக்கத்தனை வெளிச்சம் , எத்தனை நெகடிவோ, அதற்குச் சமமாக அதே அளவு பாஸிடிவ் , அந்த வகையில் எத்தனைக்கெத்தனை தீமைகளும் கொடூரங்களும் இருக்கின்றனவோ அதனைச் சரிப்படுத்திச் சமன் செய்யும் அளவுக்கு நன்மைகளும், மனிதத்தன்மையும் இருக்க வேண்டும் என நம்புகிறேன், சர்வநிச்சயமாக இப்படியாகத்தான் இருக்கும் .

நேற்று மார்க்கெட்டை கடந்து நடந்துபோய்க்கொண்டிருக்கையில் ஒரு காட்சி, சைக்கிளின் பின்புற கேரியரில் கட்டி வைத்திருந்த தக்காளி பை தவறி கீழே விழ , தக்காளிகள் சிதறி ஓட சைக்கிளை ப்ரேக் அடித்து நிறுத்தி திரும்பிப் பார்க்கிறான் அந்தச் சிறுவன். விழுந்த மாத்திரத்தில் யாரென்று தெரியாத யாரோ ஒருவர் சிதறிய காய்கறிகளைப் பையினுள் அடுக்கி பையனிடம் கொடுக்கிறார்.

அந்த இடத்தில் , என்னையும் சேர்த்து நிறையப் பேர் அந்தக் காட்சியின் ஃபிரேமிற்குள் வருகிறார்கள் ...

அந்தப் பையனுக்கு உதவி கிடைத்த அதே இடத்தில் உதவுபவர்களைப் பார்த்துப் பழித்துப் பேசி பிழைக்கத் தெரியாதவன் என்று சொல்கிற நிலை கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். காய்கறிப்பை கீழே விழுவது மாதிரி மாட்டியதற்காக அந்தப் பையனை திட்டுகிற சமநிலைவாதிகளும் இருக்கிறார்கள். பக்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களையும் என்னையும் ஏமாற்றி உதவுகிற மாதிரி பாசாங்கு செய்து பாதிக்குப் பாதியை யாருக்கும் தெரியாமலேயே திருடுகிற ஒட்டுண்ணிகளும் இருக்கிறார்கள்.

அதே இடத்தில்தான் , கவனித்து , பயன் கருதாது உண்மையாக உதவுபவர்களும் இருக்கிறார்கள்.

காமாலை கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் என்பது மாதிரி நம் கண் பிழைகளை மட்டுமே பார்த்துப் பார்த்துப் பழகிப்போய் எல்லோரையுமே திருடர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும், வஞ்சகர்களாகவும் பார்க்கத்துவங்கிவிட்டது.

நாகரிக காட்டு மிருகங்களுக்கு மத்தியில் நம்மைச் சுற்றிலும் ரத்தமும் சதையுமாக , சத்தமும் வார்த்தையுமாக ரகம் ரகமாய் மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்களைக் கண்டுகொள்வதற்கான அடிப்படைத்தகுதிகள் தெளிந்த மதியும் , திறந்த கண்களும் மட்டுமே !

பாதி நிரம்பிய அமுத குவளையைப் பார்த்து , பாதிக் காலியாக இருக்கிறது என்று புலம்பாமல், நிரம்பி இருப்பதை நிறந்து உண்டு இன்புற்று இருந்து வாழ்வோம் !

                                                                                    வார்த்தைகளோடு வருகிறேன்...

Labels: ,

Friday, June 12, 2015

வழிப்போக்கனின் வார்த்தைகள் - 0

"வாழ்க்கையின் கேள்விகள் கடினமாக இருக்கலாம், ஆனால் விடைகள் எளிமையாகத் தான் இருக்கின்றன !"
                                                                                                             - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


வாழ்க்கையின் பயன் என்ன? , எதற்காக இந்த வாழ்க்கை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது?, ஏன் இந்த வாழ்க்கையின் பாதை இத்தனை கரடு முரடாக இருக்கிறது?, எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்கள்?, என்ன வாழ்க்க டா இது ?  .... (கேள்விகள் நீண்டு கொண்டே போகின்றன...).

எண்ணங்களும், வார்த்தைகளும் துவங்கின காலம் துவங்கி யுகம் யுகமாக இந்த கேள்விகள் தொடர்ந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றன என நம்புகிறேன்.

இவைகளுக்கு , நிச்சயமாக என்னிடத்தில் பதிலில்லை, உங்களிடமும் இருக்காது என்றே நம்புகிறேன்.

"என்னப்பா ஆச்சு உனக்கு என்னென்னவோ பினாத்திட்டு இருக்க !" என்கிறீர்களா .  :) . என்னை மாதிரியான பினாத்தல் கேஸ்களை நீங்கள் நிறைய கடந்து வந்திருப்பீர்கள் (இருப்பின் என்னையும் பொருத்தருள்க) அல்லது நீங்களே என்னை மாதிரியொரு பினாத்தல் கேஸாகக் கூட இருக்கலாம்.(Glad to meet you !).

வாழ்க்கையைப் பார்த்து எவ (னா/ளா) வது இப்படியெல்லாம் கேள்விகள் கேட்கிறான்/ள் என்றால் கீழ்காணும் பட்டியலில் உள்ள ஏதேனும் ஒன்றாக அல்லது பலவாக அவர்கள் இருக்கலாம்.

1. கவலையுள்ளவர்கள்
2.குழப்பவாதிகள்
3.விரக்தியடைந்தவர்கள்
4.பொருள் இல்லாதவர்கள்
5.ஞானிகள் (?!!)

உலகின் 99 சதவீதம் பேர் இந்த ஐந்துக்குள் அடங்கி விடுகிறார்கள் என்பதை புள்ளிவிவரக் குறிப்புகளை சேகரிக்கும் அவசியம் இன்றி நான் உறுதியாகச் சொல்வேன்.

அதன் போக்கில் அது அது இயங்கிக் கொண்டிருக்கும் வரையில், பிரச்சனை, கவலை, குழப்பம் ஏதும் இல்லாதிருக்கும் வரையில் வாழ்க்கையை நோக்கி எவரொருவரும் "ச்ச!! என்ன வாழ்க்க டா இது" என கேட்பதே இல்லை.

ராமகிருஷ்ண பரமஹம்சரிடம்  உலகவரிடம் நீங்கள் கண்டு வியக்கும் விசயம் எது என ஒருசமயம் கேட்கப்பட்டதாம்., அதற்கவர்

"உலக மக்கள் யாரும் ஒருபோதும் சந்தோசம் வரும் சமயத்தில், ஏன் எனக்கு மட்டும் என கேட்பதே இல்லை ! ஆனால் கஷ்டம் வருகிற சமயத்தில் மட்டும் ஏன் எனக்கு மட்டும் இப்படி என கேட்கிறார்கள், கடவுளை திட்டுகிறார்கள் இது தான் எனக்கு வியப்பாக இருக்கிறது" என்றாராம்.

நம்மில் அநேகர் இப்படித்தான் இருக்கிறோம். (என்ன செய்ய ! நானும் அந்த அநேகரில் ஒருவன் தான்).

வாழ்க்கை என்பதற்கு ஆளாளுக்கு ஒரு Definition சொல்கிறார்கள், வாழ்க்கை என்பது போர்க்களம், வாழ்க்கை என்பது பரிட்சை, வாழ்வே மாயம்...

நிறைய நிறைய நிறைய விளக்கங்கள்.

எதாவது ஒரு முடிவுக்கு வந்து தானே ஆக வேண்டும் :)

வாழ்க்கை என்பதை நான் ஒரு பயணமாக உருவகித்து நம்புகிறேன், ஒரு புள்ளியில் துவங்கி இன்னொரு புள்ளியில் முடியும் , துவக்கத்தையும், முடிவையும் தீர்மானித்துக் கொண்டு துவங்க முடியாத , அடுத்த நிறுத்ததையோ , திருப்பத்தையோப் பற்றிய எந்தவித முன்னறிவும் இல்லாத ஒரு விசித்திர பயணமாக..

வாழ்க்கை என்பது ஒரு பயணம் !
                               

பயணம் செய்யும் வழியில் எதையெதையோ காண்கிறோம், யார் யாரையோ எல்லாம் சந்திக்கிறோம், பல நேரங்களில் எங்கே போகிறோமென்றே தெரியாமல் எங்கெங்கோவெல்லாம் கூட போகிறோம்.

உங்கள் பயணத்தின் ஒரு சிறு பகுதியில் என்னுடைய இந்த வார்த்தைகளை கடப்பதற்காக நேரம் செலவழிக்கும் ஒவ்வொருவருக்குமாக இந்த கட்டுரைத் தொடரின் ஒவ்வொரு வார்த்தையையும் சமர்ப்பித்து, இந்த தொடரை ஆரம்பிக்கிறேன்.

இக்கட்டுரைத்தொடரை தொடர்ந்து எழுத ... வாழ்க்கையின் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டு பலரின் வாழ்விற்கு Inspiration ஆக இருக்கும்  ஆதர்ஷ பயணிகளின் ஆசிகளையும். தனது சக பயணிகளின் அன்பையும் இந்த வழிப்போக்கன் வேண்டிக் கொள்கிறான்.
                                   
                                                                                                      -  வார்த்தைகளோடு வருகிறேன்... 

Labels: ,