Friday, November 30, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் -பாகம்-12



கணினி வரலாறு -பாகம்-2

கடந்த பதிவில் தற்காலத்தில் நாம் பயன்படுத்தும் கணினியின் முன்னோர்களான அபாகஸ்,நேப்பியர் கட்டைகள்,நழுவு அளவி,கணக்கிடும் கடிகாரம்,மற்றும் பாஸ்கலின் ஆகிய கருவிகளை பற்றி பார்த்தோம்...

கணினியின் முன்னோடிகளான இந்த கணக்கிடும் கருவிகளில் கணினியின் சுவடு சிறிது கூட இல்லாமல் இருப்பதை நம்மால் கவனிக்க முடிகிறது..,இருப்பினும் கணினிக்கு அச்சாரமிட்ட இந்த முற்கால கணக்கிடும் கருவிகளுக்கு இக்கால கணிப்பொறிகள் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் அவை இல்லை என்றால் இவை இல்லை :)

பாஸ்கலினுக்கு அடுத்து வந்த கணக்கிடும் கருவிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்...
அதற்கு முன் இரு முக்கியமான விசயங்கள்:

விசயம்:1
கணக்கிடும் கருவிகளை இரு வகையாக பிரிக்கலாம் (இந்த பிரிவுகள் நானாக செய்தவை ,புத்தகங்களில் இல்லை) கணினிக்கு முன் வந்த கருவிகளை புரிந்து கொள்ள இந்த பிரிவுகள் அவசியம்.

1.கணக்கிடும் கருவிகள் (இவை நாம் தரும் கணக்குகளை செய்து விடை சொல்லும். எடுத்துக்காட்டாக : பாஸ்கலின்).

2.கணக்கிட பயன்படும் துணைக்கருவிகள் (இவைகளின் உதவியுடன் கணக்கு செய்வது சுலபம் ஆனால் விடையை நாம் தான் கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக : அபாகஸ்,நேப்பியர் கட்டைகள்,நழுவு அளவி).

இந்த இரண்டு பிரிவுகளின் படி நீங்கள் கருவிகளை புரிந்து கொள்ள வேண்டும்.

விசயம்:2

 கணினிக்கு முன்னோடியான கருவிகள் பற்றி ஆராயும் போது நிறைய கருவிகள் தட்டுப்படுகின்றன.,அவை அத்தனையையும் பற்றி நாம் பார்க்க முயன்றால் இந்த தொடரின் பயணம் பல வருடங்கள் கூட நீளும் என்பதால் கணினிக்கு வித்திட்ட முக்கிய கருவிகள் பற்றி மட்டும் பார்ப்போம்.(மேலதிக தகவல் வேண்டுவோர் கமென்ட் ,அல்லது மெயில் செய்யுங்கள்.)

இத்தாலி நாட்டில் 1650 ல் ஆட்சி செய்த Ferdinando II மன்னர் தன் அரண்மனையில் புதிய தொழில்நுட்பங்களை நிறுவுவதில் ஆர்வம் கொண்டவர், அவர் தொலைநோக்கிகள்,தெர்மாமீட்டர்,ஹைக்ரோமீட்டர்(hygrometer- காற்றின் ஈரப்பதம் அறியும் கருவி),பாரோமீட்டர் (Barometer-அழுத்தமானி) போன்ற கருவிகளை வைத்திருந்தார்,அந்த கருவிகளை கண்டுபிடிக்கும் அறிஞர்களை கௌரவம் செய்தார்.
பாஸ்கலின் கருவி கண்டுபிக்கப்பட்ட சிலபல வருடங்களுக்கு பிறகு
Tito Livio Burattini என்ற இத்தாலிய அறிஞர் (கட்டட பொறியியல்,வானவியல்,கணிதம்,எந்திரவியல் அறிஞர்).பிரான்ஸ் நாட்டிலும் அதன் அருகாமை நாடுகளிலும் பயன்பாட்டில் இருந்த பாஸ்கலின் கருவி பற்றி கேள்விப்பட்டு அதைப்போலவே ஒரு கணக்கிடும் கருவியை செய்து Ferdinando II மன்னரிடம் கொடுக்க வேண்டும் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு கருவியை கண்டுபிடித்தார். இதன் பெயர் : Ciclografo. ஹாலிவுட் படங்களை தமிழ் டைரக்டர்கள் தமிழ் பெயரில் ரீமேக் செய்வது மாதிரி இவர் புது வடிவில் பாஸ்கலின் கருவியை ரீமேக் செய்திருந்தார்.

.


Tito Livio Burattini-ன் கணக்கிடும் கருவி 1659 (© Istituto e Museo di Storia della Scienza அருங்காட்சியகம்) இடம் :Florence, Italy



சாமுவேல் மொர்லான்ட் -ன் கணக்கிடும் கருவிகள்:




                         சாமுவேல் மூர்லான்ட்

 Sir Samuel Morland ஒரு சிறந்த கணிதவியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் .இவர் கணக்குகளை எளிய முறையில் செய்ய மூன்று கருவிகளை கண்டுபிடித்தார்.

1
கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை செய்யும் கருவி (கண்டுபிடிக்கப்பட்ட வருடம்:1666)
2
பெருக்கல் மற்றும் வகுத்தல் கணக்குகள் செய்யும் கருவி (கண்டுபிடிக்கப்பட்ட வருடம்:1662)
3
(முக்கோணவியல்)Trignometry கணக்குகள் செய்யும் கருவி (கண்டுபிடிக்கப்பட்ட வருடம்:1663)


 1673 ம் வருடம் இவர் "The description and use of two arithmetick instruments" என்ற தனது நூலில் இந்த கருவிகளை பற்றி விளக்கியுள்ளார்.கணிதவியல் கருவிகளை பற்றி விளக்கமாக எழுதப்பட்ட முதல் புத்தகம் இதுவே !.



  மூர்லான்ட்-ன் "The description and use of two arithmetick instruments "

கருவி:1 கூட்டல்-கழித்தல் எந்திரம்:

 இந்த கருவி தான் உலகின் முதல் பாக்கெட் கால்குலேட்டர்,இதற்கு முன் வந்த பாஸ்கலின் கருவி மற்றும் Ciglografo போன்ற கருவிகளை விட சிறிய வடிவில் இதை மோர்லான்ட் வடிவமைத்தார்.(மோர்லான்ட் ஒரு சிறந்த கடிகாரம் செய்யும் வல்லுனர் என்பது குறிப்பிட்த்தக்கது)
இதன் அளவு : க்கு இன்ச் கால் இன்சுக்கும் குறைவான தடிமன் (120 x 70 x 8 mm)
 இக்கருவி வெள்ளி மற்றும் வென்கலத்தால் செய்யப்படிருந்தது.இக்கருவியில் உள்ள டயல்களை சுற்ற ஒரு குச்சி (Stylus) கொடுக்கப்பட்டது !.இந்த டயல்களை கடிகார சுழல் திசையில் (Clock-wise )சுற்றி கூட்டல் கணக்குகளையும்,எதிர் திசையில்(Anti clock-wise)சுற்றி கழித்தல் கணக்குகளையும் செய்ய முடிந்தது!


                 உலகின் முதல் பாக்கெட் கால்குலேட்டர்
கருவி:2 பெருக்கல் கருவி:

 மோர்லான்ட் -ன் இரண்டாவது கருவி பெருக்கல் கருவி ,இது நேப்பியர் கட்டைகள் அடிப்படையில் இயங்கியது.மோர்லான்ட் இந்த கருவிக்கு Cyclologica  என்று பெயரிட்டு தனது புத்தகத்தில் விளக்கியுள்ளார்.இக்கருவியை நேப்பியர் கட்டைகளின் எளிய வடிவம் என்று சொல்லலாம்.
இதன் அளவு: 18 x 55.5 cm.
இக்கருவி:வெள்ளி,வென்கலம்,மரம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டது.


      பெருக்கல் கருவி (© Istituto e Museo di Storia della Scienza, Florence)




The description and use of two arithmetick instruments புத்தகத்திலிருந்து பெருக்கல் கருவி பற்றிய பக்கம் (© United States Library of Congress)

கருவி:3:முக்கோணவியல் கருவி




 இக்கருவியின் உதவியுடன் முக்கோணவியல் கணக்குகளை  செய்ய முடிந்தது.இக்கருவியில் உள்ள அளவிகள் உதவியுடன் எந்த வித முக்கோணத்தை வேண்டுமானாலும் பேனா பேப்பர் உதவி இல்லாமல் அமைத்து கணக்கீடுகள் செய்ய முடிந்தது.சாமுவேல் இக்கருவிக்கு Maccina Cyclologica Trigonometrica என்று பெயரிட்டிருந்தார்,இந்த கருவி பற்றியும் இவர் தன் புத்தகத்தில் கூறியுள்ளார்.

 சாமுவேலின் கருவிகள் நடைமுறையில் பெரிய அளவில் பயன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
இவரின் கருவிகள் பற்றி இவரது ஆசிரியர் Samuel Pepys (formerly Morland's tutee at Cambridge) கீழ்கண்டவாறு கூறுகிறார்:

 Samuel pepys -ன் 1667-6 வருட டயரிக்குறிப்பு
" the machine of Morland is very pretty, but not very useful  "

"மூர்லான்ட்-ன் கருவிகள் அழகாக உள்ளன ,ஆனால் அவற்றால் பெரிய அளவில் பயனில்லை."

விஞ்ஞானி ராபர்ட் ஹூக் (Robert Hooke அவரது டயரியில் 31 january, 1673 :தேதியிட்டு 
" Saw Sir S. Morland's Arithmetic engine Very Silly"

"சாமுவேல் மூர்லான்ட்-ன் கருவி சிறுபிள்ளை தனமாக உள்ளது."

என்று குறிப்பிட்டுள்ளார்.

சாமுவேல் மூர்லான்டின் கருவிகள் நடைமுறையில் பெரிய அளவில் பயன்படாவிட்டாலும் உலகின் முதல் சிறிய கணக்கிடும் கருவிகள் என்ற பெருமைக்கு உரியவை...!

அடுத்த பதிவில் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் ஆகிய நான்கு செயல்களையும் செய்த உலகின் முதல் கால்குலேட்டர் பற்றி பார்க்கலாம்
அடுத்த பதிவிலும் கணினி வரலாறு தொடரும்......
 
வாசகர்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள்., 
கருத்துக்கள்,விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களை மறக்காமல் கமென்ட் பெட்டியில் கூறுங்கள் அல்லது இமெயில் செய்யுங்கள்!
vijayandurairaj30@gmail.com.



 

Post Comment

Wednesday, November 21, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் (பாகம்-11)



கணினி வரலாறு பாகம்-1:

உலகின் முதல் கம்ப்யூட்டர்:
லகின் முதல் கம்ப்யூட்டர் பற்றி உங்களுக்கு தெரியுமா?, இந்த கேள்விக்கு ஏதாவதொரு கருவியின் பெயரை உங்கள் மூளை பதிலாக சொல்லலாம்... நிச்சயமாக அது தவறு .உலகின் முதல் கம்ப்யூட்டர் மனிதர்கள்...!.அட ரொம்ப யோசிக்காதீங்க !.கம்ப்யூட்டர் என்ற பெயர் ஒரு காலத்தில் கணக்கு போடும் வேலை செய்யும் நபர்களை குறிக்க பயன்பட்ட வார்த்தை,அதாவது கணக்கு போடுகிற வேலையை (Computation) செய்த நபர்கள் கம்ப்யூட்டர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.


                           மனித கம்ப்யூட்டர்கள்

 இந்த மனித கம்ப்யூட்டர்கள் ஒரே மாதிரியான கணக்கு போடும் வேலையை,அட்டவனை படுத்துதலை (Tables) திரும்ப திரும்ப செய்ய வேண்டியதாக (Repetitive calculations) இருந்தது.இந்த வேலை இதை செய்யும் மனித கம்ப்யூட்டர்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்தது. கணக்கு வேலையால் வந்த கடுப்பலைகள்,கணக்கு போடும் வேலையை செய்ய ஒரு கருவி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று மனித மனத்தை சிந்திக்க வைத்தது.

கம்ப்யூட்டரின் கதை:
 கணினி என்பது கணக்கிடும் கருவியாகத்தான் தன் பரிணாம வளர்ச்சியை துவக்கிற்று.நாகரிகத்தின் பக்கம் நகர ஆரம்பித்த மனிதன் பொருட்களை எண்ண கற்றிருந்தான்.கணக்கிற்கு மனிதன் அப்போது புதியவன்,கணக்கு என்பதும் மனிதனுக்கு புதிது .எண்ணுவதற்கு தன் கைகளிலும் கால்களிலும் உள்ள விரல்களை முதலில் பயன்படுத்தியிருக்கிறான்.பின் சுவற்றில் கோடு போட ஆரம்பிக்கிறான்,அதன் பின் கற்களை கொண்டு எண்ண ஆரம்பிக்கிறான்.கணக்கு போட உருப்படியான கருவி என்று ஒன்றை கண்டுபிடித்தவர்கள் பாபிலோனியர்கள்,அதன் பெயர் அபாகஸ் கி.மு 300 ல் அவர்கள் இந்த கருவியை பயன்படுத்தினர் என்பதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

                           நவீன அபாகஸ்
அபாகஸின் மேல் அடுக்கில் உள்ள இரண்டு மணிகள் இரு கைகளையும்,கீழுள்ள     5 மணிகள் ஐந்து விரல்களையும் குறிப்பதாக கூறப்படுகிறது.

 அதற்கு பிறகு 16 ம் நூற்றாண்டு வரையில் கணிதம் எனும் துறை வளர்ச்சி அடைந்ததே தவிர கணக்கு போட கருவிகள் கண்டுபிடிக்கபடவில்லை.
1617-ல் ஜான் நேப்பியர் என்ற ஸ்காட் விஞ்ஞானி பெருக்கலை எளிதாக செய்ய ஒரு கருவியை கண்டுபிடித்தார்.

                                   ஜான் நேப்பியர் கண்டுபிடித்த பெருக்கல் கருவி
இவர் இந்த கருவியை தந்தம் மூலம் தயாரித்திருந்தார்.இதை நேப்பியர் எழும்புகள் (Napier Bones) என்று அழைக்கிறார்கள்


         நேப்பியர் போன்ஸ் உதவியில் 46732 ம் வாய்ப்பாட்டை கணித்தல்


      ஸ்லைடு ரூல் கருவி

1632 ல் நேப்பியர் கட்டைகளுக்கு பிறகு ஸ்லைடு ரூல் என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது.ஸ்லைடு என்றால் நழுவுதல் என்றும் ரூல் என்றால் அளவி என்றும் அர்த்தப்படுத்தி இதை புரிந்துகொள்ளலாம்.இந்த கருவி  1960 களில் கூட பயன்பாட்டில் இருந்தது.(நாசாவின் ஐந்து அப்போலோ விண்கல ஆராய்ச்சிகளில் இந்த "நழுவுஅளவி" பயன்படுத்தப்பட்டிருக்கிறது, நிலவில் மனிதனை இறக்கும் செயல்முறையின் போதும் இந்தகருவி நாசா விஞ்ஞானிகளால் பயன்படுத்தபட்டதாம் !).

நழுவு அளவிக்கு பின் கியர் வைத்த கணக்கிடும் கருவிகள் வர ஆரம்பித்தன.உலகின் முதல் கியர் வைத்த கணக்கிடும் கருவி கணக்கிடும் கடிகாரம்



               ஸ்கிகார்ட்'ன் கணக்கிடும் கடிகாரம்

இந்த கணக்கிடும் கடிகாரம்1623 ஆம் வருடம் ஜெர்மானிய கல்லூரி பேராசிரியர் வில்லெம் ஸ்கிக்கார்ட்(Wilhelm Schickard ) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.இக்கருவிக்கு கணக்கிடும் கடிகாரம் என்று பெயரிட்டவரும் அவரே !.இந்த கருவி அவ்வளவாக பிரபலமடையவில்லை காரணம் இதன் காரணகர்த்தாவான வில்லெம் ஸ்கிகார்ட் கண்டுபிடித்த  சில வருடங்களிலேயே மரணமடைந்தார்... பிளேக் நோயால்  இதனால் இக்கருவி  மாற்றம் ,ஏற்றம் ஏதும் இன்றி மக்களிடையே பிரபலமடையாமல் போய்விட்டது.

பிளய்ஸி பாஸ்கல் என்ற 19 வயது சிறுவன் வரி வசூல் செய்யும் வேலை செய்து கொண்டிருந்த தன் தந்தைக்கு உதவும் எண்ணத்தில் 1642 ஆம் வருடம் பாஸ்கலின் எனும் கருவியை உருவாக்கி கொடுத்தான்.இந்த கருவியின் உதவியால் கூட்டல் கணக்குகள் மட்டுமே செய்ய முடிந்தது.பாஸ்கல் ஆறு இலக்க கூட்டல் கணக்குகள் செய்யும் விதமாகத்தான் முதலில் இதை வடிவமைத்தார் பின் எட்டு இலக்க கூட்டல் கருவியாக அதை மேம்படுத்தினார்.இந்த கருவி நம் வீடுகளில் இருக்கும் மின்சார மீட்டரில் (டிஜிட்டல் மீட்டர் இல்லை பழைய மீட்டர்) உள்ள மாதிரி எண்கள் சுழன்று மாறும் மெக்கானிசத்தில் இயங்கியது.அதாவது ஒரு சக்கரம் 10 சுழற்சி சுற்றினால் அருகிருக்கும் சக்கரம் ஒரு சுற்று சுற்றும்.
டாக்டர்கள் ஊசி போட பயன்படுத்தும் சிரிஞ்ச்சை கண்டுபிடித்தவர் பாஸ்கல் தான்.அதுமட்டுமில்லை கணிதத்தில் நிகழ்தகவு (Probability Theory) எனும் விசயத்தை கண்டுபிடித்தவர் இவரே !.பாஸ்கல் கண்டுபிடிப்பாளர்,கணிதமேதை மற்றும் தத்துவவியலாளர் என மூன்று பரிணாம மனிதராக இருந்திருக்கிறார் !


                     8 இலக்க பாஸ்கலின் கருவி



          கியர்களுடன் கூடிய கருவியின் உள்ளமைப்பு(6 இலக்க கருவி)



அடுத்த பதிவிலும் கணினி வரலாறு தொடரும்......
வாசகர்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள்., 
கருத்துக்கள்,விமர்சனங்கள் மற்றும் சந்தேகங்களை மறக்காமல் கமென்ட் பெட்டியில் கூறுங்கள் அல்லது இமெயில் செய்யுங்கள்!
vijayandurairaj30@gmail.com.

 


 

Post Comment

Thursday, November 08, 2012

தீபாவளி : சில நிபந்தனைகள்


(தீபாவளி கொண்டாடுபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பகுதி)

தீபாவளி -நடைமுறை கண்ணோட்ட அலசல்: (Practical Perception on Diwali)

முன்குறிப்பு:
இது தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை ஏன்எனும் பதிவின் தொடர் பதிவு.நான் இந்த தலைப்பிட்டதை பலர் ஏன்?? என்று சுட்டியிருந்தார்கள்இந்த தலைப்பை முதலில் பயன்படுத்திய நபர் தந்தைப் பெரியார் -  பெரியார் 94ஆவது பிறந்தநாள் விழா  "விடுதலைஇதழில் தீபாவளி தமிழர் விழாவாஎன்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.(இங்கு கிளிக் செய்து அந்த கட்டுரையை படிக்கலாம்).

தீபாவளியும் நானும்:
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.தீபாவளி கொண்டாட எந்த காரணம் வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.அது நம் தமிழர் பண்டிகையாக இல்லாமல் இருந்தால் என்னஅதை நாம் கொண்டாடக்கூடாதாநடைமுறை சார்ந்த கண்ணோட்டத்தில் இந்த தீபாவளி பண்டிகையை இந்த பதிவில் அலசலாம்.

 னது குழந்தை பருவத்தை நினைத்து பார்க்கிறேன்....தீபாவளி பண்டிகையை தேடி காலண்டரை அடிக்கடி புரட்டி நாட்களை எண்ணும் அந்த சின்னஞ்சிறு வயதை நினைத்து பார்க்கிறேன்....

 தீபாவளி பெரியவர்களுக்கு சந்தோசம் தருகிறதோ இல்லையோகுழந்தைகளுக்கு பாரபட்சம் காட்டாமல் சந்தோசம் காட்ட தீபாவளிகள் எப்போதும் தயாராகவே இருக்கின்றன.எனக்கும் கூட அப்படித்தான் தீபாவளி அறிமுகமாகியது(வயது நினைவில்லை).அதிகாலை எண்ணெய் குளியல்,புத்தாடை,மூத்தோர் காலில் விழுந்து ஆசி பெறல்,பின்பு இனிப்பு,பலகாரம்,சாப்பாடு என செம கட்டு கட்டுதல்,அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளல்பட்டாசு வெடித்து மகிழ்தல்.

னக்கு விவரம் தெரிந்த வரையில் என் தீபாவளிகள் பெரும்பாலும் இப்படியாகத்தான் இருந்திருக்கின்றன.நான் பத்தாம் வகுப்பு முதல் ஒரு மூன்று வருடம் தினமலர் நாளிதழ் போடும் சிறுவனாக இருந்திருக்கிறேன்,தீபாவளி அன்று தினமலருக்கு விடுமுறை கிடையாது,இலவச இணைப்பாக சீயாக்காய் பொடி,ஷாம்பூ இது போன்ற விசயங்களையும் நாழிதளுடன் அவர்கள் தருவார்கள்.அதிகாலையில் நாளிதழுடன்,இலவச இணைப்பையும்,தீபாவளி வாழ்த்துக்களையும் வீடு வீடாக இறைத்துவிட்டு ஏழு மணிக்குள்ளாக வீடு வந்து தீபாவளியை தொடர்வேன்.
வயது ஆக ஆக தீபாவளி மீதான சுவரசியம் எனக்கு குறைந்து கொண்டே வந்திருப்பதை என்னால் கவனிக்க முடிகிறது.தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்த்தல்,தீபாவளியன்று ரிலீஸ் ஆகிய படங்களுக்கு செல்லுதல் என்று கொண்டாட்டம் சிறு வட்டத்தில் சுற்ற ஆரம்பித்தது
 தீபாவளி ஏன் எதற்காக?..கொண்டாட வேண்டுமாவேண்டாமா?... தமிழர் பண்டிகையாஆரியர் பண்டிகையாஎன்று கேள்வி கேட்பதெல்லாம் வீண் வேலை தான் ,கொண்டாட ஒரு நாள் இருக்கிறதென்றால் கொண்டாட யோசித்து நாளை இழப்பதை விடுத்து கொண்டாடி மகிழ்ந்திருப்பதே மேல்.

கொண்டாடுவதற்கு முன் சில நிமிடம்...:

 தீபாவளி என்றவுடன் நம் நினைவிற்கு எது வருகிறதோ இல்லை பட்டாசுகள் நிச்சயம் வரும்.பணம் இல்லா நபர்கள் கூட கடன் வாங்கியாவது பட்டாசு வாங்கி வெடித்து மகிழும் நடைமுறை நம்மவர்களிடம் உண்டுகாசை கரியாக்குதல் என்று இந்த பட்டாசு வெடிக்கும் நடைமுறைக்கு செல்லப்பெயரும் உண்டு.
பட்டாசில்லாத தீபாவளி, Green diwali, என்று சமூக சிந்தனையாளர்களும்,சுற்று சூழல் அறிஞர்களும் கூறுகிறார்கள்.பட்டாசில்லாத தீபாவளியாநினைத்து கூட பார்க்க முடியாது நம்மால்.

தீபாவளியும் -பட்டாசும்:

ட்டாசு உற்பத்தியில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆக இருப்பது நம் சிவகாசி தான்,உலகிலேயே அதிக பட்டாசு உற்பத்தி செய்யும் இரண்டாவது இடம். (முதல் இடத்தில் இருப்பது சீனாவின் லியூயாங்க் (Liuyang in Hunan province of China). (மேலதிக விவரத்திற்கு). இரண்டாவது  பட்டாசு உற்பத்தி செய்யும் நகரம் நம்மிடம் உள்ளது என்று நீங்கள் பெறுமைபட்டு கொள்ளலாம்
 6-14 வயதுடைய குழந்தைகள் 33,000 பேர் குழந்தை தொழிலாளர்களாக சிவகாசியில் இருப்பதாக ஐ.நா வின் அறிக்கை சொல்கிறது.(கணக்கில் தெரிந்து இவ்வளவு தெரியாமல் எத்தனையோ?) உலகில் அதிக குழந்தை தொழிலாளர்கள் கொண்ட நகரம் சிவகாசி.நாம் வெடிக்கும் பட்டாசுகளை தயாரித்து கொடுத்த அந்த பிஞ்சு விரல்களை  பட்டாசை கையிலெடுக்கும் நொடிகளில் நினைத்துப் பார்க்க வேண்டும்.பட்டாசு வெடித்து சிதறுவது கண்டு,எத்தனை குழந்தைகளின் கனவுகள் இப்படி வெடித்து போயிருக்கும் என்று யோசித்து கொள்கிறேன்.,வெடி சத்தத்தை என்னால் இப்போது ரசிக்க முடியவில்லை.

தீ விபத்துகளில் உலகின் முதல் இடத்தில் இருக்கும் சீன பட்டாசு தொழிற்சாலையை விட இரண்டாம் இடத்தில் இருக்கும் நம் சிவகாசி முதல் இடத்தில் இருக்கிறது.இது வரை ஆயிரக்கணாக்கானவர்கள் நம் பட்டாசுகளை தயார் செய்ய உயிர் இழந்து இருக்கிறார்கள்.அரசாங்க புள்ளிவிவரம் (TNFAMA மற்றும் IANS) கடந்த 12 வருடங்களில் 237 உயிர்கள் பலியாகியுள்ளன மற்றும் 200 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கட்டுக்கதை கட்டுகிறது.

பட்டாசு இல்லாமல் தீபாவளியா ?

 நரகாசுரனை வதம் செய்த கிருஷ்ன பரமாத்மா கட்டாயம் பட்டாசு வெடித்து தான் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கட்டளை இட்டாராஎன்ன?.

லர் "நான் பட்டாசு வெடிக்க மாட்டேன் என்று சொல்கிற நபர்களை பாமரத்தனமாகத்தான் பார்க்கிறார்கள்.பட்டாசு வெடிப்பது என்பது தீபாவளியின் சம்பிரதாயம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.
பட்டாசுகள் தீய சக்திகளை விரட்ட  2ம் நூற்றாண்டில்  சீனர்கள் கண்டுபிடித்தவை.கிபி.581 -907 வரை சீனாவை ஆட்சி செய்த சூயீ மற்றும் டாங்க் காலத்தில் (Sui and Tang Dynasties ) பல ரக பட்டாசுகள் பட்டையை கிளப்ப ஆரம்பித்தன.(1300 களில் மார்கோபோலோ ஐரோப்பியர்களுக்கு சீனர்களின் இந்த பழக்கத்தை அறிமுகம் செய்தார்மூங்கில் குழாய்களில் வெடிமருந்தை நிரப்பி வெடித்து மகிழும் இந்த பழக்கம் மெல்ல பல நாடுகளில் பிரபலமடைந்து,இன்று நாம் பயன்படுத்தும் நவீன பட்டாசுகளாக நாகரிக வளர்ச்சி அடைந்திருக்கிறது.

பட்டாசும் சிவகாசியும்:

 ம் சிவகாசியில் 1934 ல் திருசன்முக நாடார் மற்றும் திரு ஐய நாடார்  ஆகிய இருவரால் வெடி தொழிற்சாலையின் விதை இடப்பட்டது.இவர்கள் ஆரம்பித்த தொழிற்சாலைக்கு தேவையான பொருட்கள்,வெடிமருந்துகள் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
காலப்போக்கில் இந்தியா முழுமைக்கும் பட்டாசு விற்பனை செய்யும் பிரம்மாண்ட நகரமாக அவதாரம் எடுக்க துவங்கியிருந்தது சிவகாசிNational Fireworks, Kaliswari Fireworks மற்றும் Standard Fireworks  1942-ல் ஆரம்பிக்கப்பட்டன.
சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை:
1934 -1 அல்லது 2
1942-  3
1980-  189
2001-   450



சிவகாசி சில தகவல்கள்:

  • இந்தியாவின் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தான் தயாராகின்றன.
  • இந்தியாவின் 80 சதவீதம் தீப்பெடிகள் இங்குதான் தயாராகின்றன.
  • சிவகாசியில் வருடம் முழுக்க தயாராகும் பட்டாசுகள் இந்தியா முழுக்க மூன்றே நாட்களில் வெடித்து தீர்க்க படுகின்றன.
  • வேலையில்லா திண்டாட்டம் இங்கு கிடையாது !
  • சிவகாசியை குட்டி ஜப்பான் என்று செல்லப்பெயர் இட்டவர் ஜவஹர்லால் நேரு.

தீபாவளியை பட்டாசு இன்றி கொண்டாட முடியுமா?

பட்டாசுகளை நாம் விரும்பாவிட்டாலும் குழந்தைகள் விரும்புகின்றன,அதனால் அதை வாங்க வேண்டிய அவசியம் உள்ளது என பலர் சொல்கிறார்கள்,கொஞ்சம் யோசியுங்கள் பட்டாசு கண்டு பயப்படும் குழந்தைகளுக்கு பட்டாசை அறிமுகம் செய்தது யார் என்று?,குழந்தைகளுக்கு பட்டாசின் தீமைகளை எடுத்து சொல்லுங்கள்வெடியே வெடிக்க வேண்டாம் என்று சொல்லாதீர்கள்,குறைத்து கொள்ளுங்கள்.,குறைகளை சொல்லுங்கள்.
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தமாம் நம்மில் எத்தனை பேர் வீடுகளில் தீபாவளிக்கு விளக்கேற்றுகிறோம்.(பட்டாசு கொளுத்துவதோடு சரி)

பட்டாசினால் விளையும் தீமைகள்:

1.மாசு (காற்று மற்றும் ஒலி)
2.மிருகங்களை மிரள வைக்கும்
3.தீ விபத்துகளுக்கு காரணமாகும்
4.வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் தொல்லை தரும்
5.குழந்தை தொழிலாளர்.
6.தயாரிக்கும் இடத்தில் விபத்து
7.வெடிக்கும் நபருக்கும் பாதிப்பு தரும்

பட்டயை கிளப்பும் பட்டாசுகள்:

நரகாசுரனை வதம் செய்த கிருஷ்ணன்

 தீபாவளி லஷ்மியை சிறப்பிக்கும் தினம் அந்த தினத்தில் அந்த லஷ்மி படத்தை சுற்றி இருக்கும் லட்சுமி வெடிகளையும்,சரஸ்வதி வெடிகளையும் ,இன்ன பிற கடவுள் உருவம் சுற்றிய வெடிகளையும் நாம் வெடிக்கிறோம்எது எதுக்கோ போராட்டம் செய்றாங்க....இதுக்கெல்லாம் செய்ய மாட்டாங்க !

எங்கும் சந்தோசம் நிறைந்திருக்கட்டும்..எல்லா வளமும் நலமும் பெற்று இனிது வாழ்க !
அனைவருக்கும் என் இனிய தீபாவளி           வாழ்த்துக்கள் ! 

கட்டுரைக்கு உதவியவை:
புதிய தலைமுறை 20/9/2012
http://sivakasionline.com/ மற்றும்
wikipedia கட்டுரைகள்



 

Post Comment