Wednesday, December 11, 2013

பாரதியின் ரகசியம் :

(பாரதியார் பிறந்த தின சிறப்புக் கட்டுரை)




சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும் "
                                                      -பாரதி

 பாரதியின் சக்திமிக்க வரிகளை வாசிக்கிற பொழுதுகளிலெல்லாம் உள்ளத்திருக்கும் கவலைகள் மறந்து,உள்ளம் உவகை கொண்டாடி மகிழ ஆரம்பித்து விடுகிறது ! தோல்வி,துன்பம்,சஞ்சலம்,குழப்பம் என விதவிதமான பேய்கள் மனதிற்குள் வரும்போதெல்லாம் பேய்களை ஓட ஓட விரட்ட பாரதியின் எழுத்துக்களுக்குள் நான் பல நேரங்களில் தஞ்சம் புகுவதுண்டு!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ! என்று உச்சரிக்கிற போது அச்சம் ஆவியாகிறது, அவன் சக்தியை வேண்டி பாடிய “நல்லதோர் வீணை”, “நின்னை சரணடைந்தேன்” பாடல்களை கேட்டாலோ,பாடினாலோ கவலைக் காரணிகள் அத்தனையும் சர்வ நாசமாகி விடுகிறது.

 அவனது எழுத்துக்களுக்குள் அவன் சதா சர்வகாலமும் வேண்டிக்கொண்டிருந்த அந்த பராசக்தி குடி கொண்டிருக்கிறாள், அதை வாசிக்கிறவர்கள் மனதிற்குள் ஒளியாக நிறைந்து சக்தி தருகிறாள் அவள்.

சக்தி !

 சக்தி- இந்த வார்த்தைக்கு சிவனின் மனைவி என்பதாக இந்துமத சாத்திரங்களின் அடிப்படையில் உங்கள் மனம் அர்த்தம் செய்து கொண்டிருக்கக்கூடும்.

சிவம்-சக்தி ,சிவம் என்றால் ஜடம் என்றும் சக்தி என்றால் ஆற்றல் என்றும் அர்த்தம். அறிவியல் வார்த்தைகளில் இதைச் சொல்லவேண்டுமானால் Matter and Energy என்று சொல்லலாம்.  ஜடப்பொருளுடன்(சிவம்) ஆற்றல்(சக்தி) சேரும்போது இயக்கம் ஏற்படுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு இந்த சிவ-சக்தி இணைவே காரணம் !.
  
சகலமும் சக்தி !!
 பொருட்களை துருவித்துருவி ஆராய்ந்து விஞ்ஞானம் எலக்ட்ரான்,புரோட்டான்,நியூட்ரான்,பாஸிட்ரான்,மீஸான்.. என்று என்னென்னவோ வார்த்தைகளில் சொல்லிக்கொண்டே போகிறது,பிரிக்க பிரிக்க விரிவடைந்து கொண்டே போகிறது அணு, அண்டத்தின் பிரமாண்டம் அணுவினுள்ளும் இருப்பது கண்டு வியக்கிறது விஞ்ஞானம்.

 சிவம்-சக்தி என்ற ஜட மற்றும் இயக்கஆற்றல் தத்துவத்தின் மனிதவடிவ உருவகமே (Anthro-morphic image).கோவில்களில் நாம் காணும் சிவனும்-பார்வதியும்.

  நமது உடலின் உள்ளே இருந்து நம்மை இயக்கிக்கொண்டிருப்பவள் சக்தி தான்!,நம் பழைய இந்திய கலாச்சாரத்தில் உடலுள் உறையும்  சக்தியை குண்டலினி சக்தி என்று அழைத்தனர் .இது பற்றி பல குறிப்புகள் வேதங்களிலும்,உபனிஷத்துகளிலும்,புராணங்களிலும் கிடைக்கின்றன. ("லலிதா சகஸ்ரநாமம்" அர்த்தத்துடன் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தால் கட்டாயம் வாசியுங்கள் ,அதில் சக்திக்கு அளிக்கப்பட்டிருக்கும் பெயர்களை அர்த்தமுடன் நாம் அணுகும்போது சக்தியின் அருள் நமக்கு வாய்க்கபெறும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.).

 எங்கும் ,எதிலும் சக்திதான் வியாபித்திருக்கிறது ! சக்தியின் வேறு வேறு வடிவங்கள் தான் நீங்களும் ,நானும்,எல்லாமும்.என்னை எழுத வைத்தவளும் அவளே,உங்கள் கணிப்பொறியின் திரைகளில் இந்த எழுத்துக்களை ஒளிர வைத்து உங்களை வாசிக்க வைப்பவளும் அவளே !,.இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றின் இயக்கத்திலும் இருப்பவள் அவளே !


 சக்தி என்று பாரதி குறிப்பிடுவது இந்த இயக்க ஆற்றலைத்தான் ,பாரதி எழுதிய சக்திப் பாடல்களை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அதில் சக்தி என்பதற்கான விளக்கத்தை ஒரு பாடலில் சொல்லிப்போகிறான் அவன்.

 
சக்திப் பாடல்
      

 "சின்ன்ஞ்சிறு கிளியே கண்ணம்மா,செல்வக் களஞ்சியமே ". என்ற பாடலில் சக்தியைத் தான் பாரதி குழந்தையாக பாவித்து பாடியிருக்கிறான் என்று சில தமிழறிஞர்கள் சொல்கிறார்கள்.
 பாரதி பாடல்கள் மட்டுமின்றி நிறைய கட்டுரைகளும் கூட எழுதிக் குவித்திருக்கிறான், தன் எழுத்துக்களில் சக்தி பற்றி அவன் நிறையவே சொல்லி இருக்கிறான்.

"ஆத்மா உணர்வு, சக்தி செய்கை
உலகம் முழுவதும் செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இவ்வுலகத்தை ஆளுகின்றன. இதைப்பூர்வ சாஸ்திரங்கள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்று சொல்லும்."


இச்சா-ஞான-கிரியா சக்திகளை ஒரு சிறு உருவகம் கொண்டு விளக்க முற்படுகிறேன் :
 மனதினுள் எண்ண விதை தோன்றுகிறது அது இச்சா சக்தி, விதை செடியாக வளர,மரமாக மாற அவசியப்படும் அத்தனையையும்  சேகரம் செய்கிறது இது ஞான சக்தி, சேகரிக்கப்பட்ட ஞானம் மூலம் செடியாகவோ,மரமாகவோ வளர்கிறது விதை இது கிரியா சக்தி. இந்த மூன்று சக்திகளில் தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இயங்கிக்கொண்டு இருக்கிறது !

அவனின்றி அணுவும் அசையாது என்றொரு சொற்றொடர் உண்டு ,அவன் என்பதை அவள் என்று திருத்திச்சொல்வோம், சக்தி இல்லாது போனால் அனைத்தும் சிவமாகிப் (ஜடம்) போகும். சக்தியே இயக்கக்காரணி.

 சதா சர்வகாலமும் சக்தியையே உபாசனை செய்கிறான் பாரதி ! அவன் எழுதுகிற கடிதங்களை,எழுதத் துவங்குகிற பாடல்களை,கட்டுரைகளை காகிதத்தில் "ஓம் சக்தி" என்று குறியிட்ட பின்பே துவங்குகிறான்!.

 
பாரதி எழுதிய கடிதம்
             
பாரதியின் ஜெயபேரிகை பாடல்


பாரதி தனது கட்டுரையொன்றில் கீழ்காணும் வரிகளைக் குறிப்பிடுகிறான்:

" சக்தியால் உலகம் வாழ்கிறது;
நாம் வாழ்வை விரும்புகிறோம்;
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம். "

சிறு வயதிலேயே வறுமை அவனைப் பிடிக்கிறது,கவலைகள் அவனை சூழ்கிறது,எது வந்து தடுத்தபோதிலும் பாரதியை அசையாது,வழுவாது இயங்க வைத்தது எது.

வறுமையின் பிடியில் இருந்த பொழுதும் கூட "ஜெயமுண்டு பயமில்லை மனமே..." -என அவனால் எப்படி பாட முடிந்தது,
மரணம் அவனை தழுவ வந்த அந்திமக் காலதிலும் கூட " காலா எந்தன் காலருகே வாடா, சற்றே எந்தன் காலால் மிதிக்கிறேன்" என்று அவனால் எப்படிக் கூற முடிந்தது

சர்வ நிச்சயமாக அவன் வேண்டி நின்ற சக்திதான்.

"நின்னை சில வரங்கள் கேட்பேன்" என்றும் "இவை அருள்வதில் உனக்கேதும் தடை உளதோ "என்று சக்தியிடன் அவன் வேண்டிக்கொள்ளும் வித்த்தை நான் வியப்பதுண்டு

பாரதி சொல்கிறான்:

"சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூலதர்மங்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல் சிலைகளையும், கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங்கொடுப்பதில்லை.

வா; நெஞ்சே, பராசக்தியை நோக்கிச் சில மந்திரங்கள் சாதிப்போம்.
நான் விடுதலை பெறுவேன்; எனது கட்டுக்கள் அறுபடும். நான் விடுதலை பெறுவேன்; என்னிச்சைப்படி எப்போதும் நடப்பேன். என்னிச்சையிலே பிறருக்குத் தீங்கு விளையாது. எனக்கும் துன்பம் விளையாது. நன்மைகளே என்னுடைய இச்சைகள். இவற்றை நான் எப்போதும் நிறைவேற்றும்படியாக க்ஷணந்தோறும் எனக்குப் பிராண சக்தி வளர்ந்து கொண்டு வருக. உயிர் வேண்டுகிறேன். தலையிலே இடி விழுந்த போதிலும் சேதப்படாத வயிர உயிர். உடலை எளிதாகவும், உறுதியுடையதாகவும், நேர்மையுடையதாகவும் செய்துகாக்கின்ற உயிர்.
அறிவு வேண்டுகிறேன்; எந்தப் பொருளை நோக்குமிடத்தும், அதன் உண்மைகளை உடனே தெளிந்து கொள்ளும் நல்லறிவு; எங்கும் எப்போதும், அச்சமில்லாத வலிய அறிவு.
பிறவுயிருக்குத் தீங்கு தேடமாட்டேன்; என்னுடைய உயிருக்கு எங்கும் தீங்கு வரமாட்டாது.
பராசக்தி, நின்னருளால் நான் விடுதலை பெற்று இவ்வுலகத்தில் வாழ்வேன்."

பாரதியின் பாடல்கள்,அவனது வீரம் ததும்பும் பேச்சு, சக்தி மிக்க வார்த்தைகள் ,அவனது வாழ்க்கை அத்தனைக்குமான ரகசியம் “சக்தி”

மகா கவியே உன் பாதம் பணிகிறேன் !




பாரதியின் வாழ்க்கைக்குறிப்பு,பாடல்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,கதைகள்,பாரதி தொடர்பான விடியோபதிவுகள் என அத்தனையும் ஒரே இடத்தில்:


 

Post Comment

21 comments:

  1. "சக்தியின்" சக்தியை உங்களின் ஆழமான அலசலில் புரிந்து கொள்ள முடிந்தது.. சில முன்பே படித்திருந்தாலும் உங்க எழுத்துக்கள் அவற்றை எளிமையாக்கி விளங்க வைத்தது..தொடருங்க;

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆ.வி. சக்தியின் அருள் உங்களுக்கும் கிட்டட்டும் ! பாரதி தின வாழ்த்துக்கள் , ஆழ்ந்த வாசிப்புக்கும்,அன்பான கருத்துக்கும் நன்றிகள்

      Delete
  2. வணக்கம்..

    பாரதி பற்றியும் சக்தி பற்றியும் மிக அழகாக கூறியுள்ளீர்கள். பாரதியின் எழுத்துக்களை முதன்முதலாக பார்க்கிறேன். இருப்பினும் பாரதியை அவன் என்று ஒருமையில் அழைப்பது ஏற்புடையதாக இல்லை...

    கட்டுரை அருமை... பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. :) பாரதியை அர் என்று அழைக்காது அன் என்று சொல்லும்போது நெறுக்கம் அதிகமாவதாக உணர்கிறேன்.,விகுதி மாற்றி சொன்னாலும் என் தலைவனின் தகுதி மாறிப்போகாது . வாசிப்புக்கும், கருத்துக்கும்,அன்புக்கும் நன்றி வெற்றி !

      Delete
  3. அனைத்து தரப்பையும் தன் பால் ஈர்த்த பாரதியின் வரிகளைப் போலவே ஒரு சக்தி விளக்கத்தையும் அளித்தாய் தம்பி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அக்கா ! "பாரதி" என்ற பெயரே சக்திதான் :).சக்தியின் அருள் சகலருக்கும் கிட்டட்டும்

      Delete
  4. பாரதியின் மனதுணிச்சலும் வேட்கையும் வறுமையுமே பாரதியை இப்படியெல்லாம் எழுதச் சொன்னது

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி கவியாழி அவர்களே !

      Delete
  5. வணக்கம்
    பாரதி பற்றிய புது விடயங்களை தங்களின் பதிவின் மூலம் படிக்க கிடைத்துள்ளது பதிவு அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. சக்தி பாடல் உட்பட அனைத்தும் சிறப்பு... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி DD

      Delete
  7. பாரதியார் பிறந்த தினம் அன்று அவறை பற்றி உங்கல் தளத்தில் தான் படித்து தெரிந்து
    கொண்டேன் மிக அழகாய் எழுதி உள்ளிர்கள் படிக்க ஆர்வமாய் இருந்தது பாரதி என்றால் நினைவுக்கு வருவது அவர் துனிச்சல் தான் அவர் பாடல் அனைத்திலும் வீரன் மிகுந்த வரிகள் தான் எ.கா சக்திப் பாடல் பதிவு மிக அருமை !!!^^^!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தம்பி !

      Delete
  8. பாரதியாரை அவருக்கு பிடித்த சக்தி மூலம் ஆராய்ந்திருப்பது நன்றாக இருக்கிறது, விஜயன்.
    //சொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்களெல்லாம்
    வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழியென்ரு துதிப்போம் // எனக்குப் பிடித்த பாரதியார் பாடல் இது.
    பாராட்டுகள், விஜயன்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும்,வாசிப்புக்கும் ,அன்புக்கும் மிக்க நன்றி ரஞ்சனி அம்மா :)

      Delete
  9. அருமை விஜயன் .பாரதி ஒரு சக்தி உபாசகர். இவ்வளவு ஆழமாக படித்து விவரித்தது பாராட்டத் தக்கது. அவருடைய பிறந்த நாளில் சிறப்பான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளி சார் :)

      Delete
  10. எங்கள் பள்ளியிலும் பாரதி பிறந்தநாள் கொண்டாடினோம்...பாரதி ஒரு அதிசயப்பிறவி...அவரைப் புரிந்துகொள்ளாதவர்கள் அற்பப் பிறவிகள்...

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், விஜயன்

    ReplyDelete
  12. பாரதியாரைப் பற்றி பயனுள்ள பல தகவல்கள்!
    மிகச் சிறப்பு சகோ!

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....