Wednesday, December 11, 2013

பாரதியின் ரகசியம் :

(பாரதியார் பிறந்த தின சிறப்புக் கட்டுரை)




" சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி, 
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும் "
                                                      -பாரதி

 பாரதியின் சக்திமிக்க வரிகளை வாசிக்கிற பொழுதுகளிலெல்லாம் உள்ளத்திருக்கும் கவலைகள் மறந்து,உள்ளம் உவகை கொண்டாடி மகிழ ஆரம்பித்து விடுகிறது ! தோல்வி,துன்பம்,சஞ்சலம்,குழப்பம் என விதவிதமான பேய்கள் மனதிற்குள் வரும்போதெல்லாம் பேய்களை ஓட ஓட விரட்ட பாரதியின் எழுத்துக்களுக்குள் நான் பல நேரங்களில் தஞ்சம் புகுவதுண்டு!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே ! என்று உச்சரிக்கிற போது அச்சம் ஆவியாகிறது, அவன் சக்தியை வேண்டி பாடிய “நல்லதோர் வீணை”, “நின்னை சரணடைந்தேன்” பாடல்களை கேட்டாலோ,பாடினாலோ கவலைக் காரணிகள் அத்தனையும் சர்வ நாசமாகி விடுகிறது.

 அவனது எழுத்துக்களுக்குள் அவன் சதா சர்வகாலமும் வேண்டிக்கொண்டிருந்த அந்த பராசக்தி குடி கொண்டிருக்கிறாள், அதை வாசிக்கிறவர்கள் மனதிற்குள் ஒளியாக நிறைந்து சக்தி தருகிறாள் அவள்.

சக்தி !

 சக்தி- இந்த வார்த்தைக்கு சிவனின் மனைவி என்பதாக இந்துமத சாத்திரங்களின் அடிப்படையில் உங்கள் மனம் அர்த்தம் செய்து கொண்டிருக்கக்கூடும்.

சிவம்-சக்தி ,சிவம் என்றால் ஜடம் என்றும் சக்தி என்றால் ஆற்றல் என்றும் அர்த்தம். அறிவியல் வார்த்தைகளில் இதைச் சொல்லவேண்டுமானால் Matter and Energy என்று சொல்லலாம்.  ஜடப்பொருளுடன்(சிவம்) ஆற்றல்(சக்தி) சேரும்போது இயக்கம் ஏற்படுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு இந்த சிவ-சக்தி இணைவே காரணம் !.
  
சகலமும் சக்தி !!
 பொருட்களை துருவித்துருவி ஆராய்ந்து விஞ்ஞானம் எலக்ட்ரான்,புரோட்டான்,நியூட்ரான்,பாஸிட்ரான்,மீஸான்.. என்று என்னென்னவோ வார்த்தைகளில் சொல்லிக்கொண்டே போகிறது,பிரிக்க பிரிக்க விரிவடைந்து கொண்டே போகிறது அணு, அண்டத்தின் பிரமாண்டம் அணுவினுள்ளும் இருப்பது கண்டு வியக்கிறது விஞ்ஞானம்.

 சிவம்-சக்தி என்ற ஜட மற்றும் இயக்கஆற்றல் தத்துவத்தின் மனிதவடிவ உருவகமே (Anthro-morphic image).கோவில்களில் நாம் காணும் சிவனும்-பார்வதியும்.

  நமது உடலின் உள்ளே இருந்து நம்மை இயக்கிக்கொண்டிருப்பவள் சக்தி தான்!,நம் பழைய இந்திய கலாச்சாரத்தில் உடலுள் உறையும்  சக்தியை குண்டலினி சக்தி என்று அழைத்தனர் .இது பற்றி பல குறிப்புகள் வேதங்களிலும்,உபனிஷத்துகளிலும்,புராணங்களிலும் கிடைக்கின்றன. ("லலிதா சகஸ்ரநாமம்" அர்த்தத்துடன் வாசிக்கும் வாய்ப்பு அமைந்தால் கட்டாயம் வாசியுங்கள் ,அதில் சக்திக்கு அளிக்கப்பட்டிருக்கும் பெயர்களை அர்த்தமுடன் நாம் அணுகும்போது சக்தியின் அருள் நமக்கு வாய்க்கபெறும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.).

 எங்கும் ,எதிலும் சக்திதான் வியாபித்திருக்கிறது ! சக்தியின் வேறு வேறு வடிவங்கள் தான் நீங்களும் ,நானும்,எல்லாமும்.என்னை எழுத வைத்தவளும் அவளே,உங்கள் கணிப்பொறியின் திரைகளில் இந்த எழுத்துக்களை ஒளிர வைத்து உங்களை வாசிக்க வைப்பவளும் அவளே !,.இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொன்றின் இயக்கத்திலும் இருப்பவள் அவளே !


 சக்தி என்று பாரதி குறிப்பிடுவது இந்த இயக்க ஆற்றலைத்தான் ,பாரதி எழுதிய சக்திப் பாடல்களை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அதில் சக்தி என்பதற்கான விளக்கத்தை ஒரு பாடலில் சொல்லிப்போகிறான் அவன்.

 
சக்திப் பாடல்
      

 "சின்ன்ஞ்சிறு கிளியே கண்ணம்மா,செல்வக் களஞ்சியமே ". என்ற பாடலில் சக்தியைத் தான் பாரதி குழந்தையாக பாவித்து பாடியிருக்கிறான் என்று சில தமிழறிஞர்கள் சொல்கிறார்கள்., 
 பாரதி பாடல்கள் மட்டுமின்றி நிறைய கட்டுரைகளும் கூட எழுதிக் குவித்திருக்கிறான், தன் எழுத்துக்களில் சக்தி பற்றி அவன் நிறையவே சொல்லி இருக்கிறான்.

"ஆத்மா உணர்வு, சக்தி செய்கை
உலகம் முழுவதும் செய்கை மயமாக நிற்கிறது. விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இவ்வுலகத்தை ஆளுகின்றன. இதைப்பூர்வ சாஸ்திரங்கள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என்று சொல்லும்."


இச்சா-ஞான-கிரியா சக்திகளை ஒரு சிறு உருவகம் கொண்டு விளக்க முற்படுகிறேன் :
 மனதினுள் எண்ண விதை தோன்றுகிறது அது இச்சா சக்தி, விதை செடியாக வளர,மரமாக மாற அவசியப்படும் அத்தனையையும்  சேகரம் செய்கிறது இது ஞான சக்தி, சேகரிக்கப்பட்ட ஞானம் மூலம் செடியாகவோ,மரமாகவோ வளர்கிறது விதை இது கிரியா சக்தி. இந்த மூன்று சக்திகளில் தான் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சமும் இயங்கிக்கொண்டு இருக்கிறது !

அவனின்றி அணுவும் அசையாது என்றொரு சொற்றொடர் உண்டு ,அவன் என்பதை அவள் என்று திருத்திச்சொல்வோம், சக்தி இல்லாது போனால் அனைத்தும் சிவமாகிப் (ஜடம்) போகும். சக்தியே இயக்கக்காரணி.

 சதா சர்வகாலமும் சக்தியையே உபாசனை செய்கிறான் பாரதி ! அவன் எழுதுகிற கடிதங்களை,எழுதத் துவங்குகிற பாடல்களை,கட்டுரைகளை காகிதத்தில் "ஓம் சக்தி" என்று குறியிட்ட பின்பே துவங்குகிறான்!.

 
பாரதி எழுதிய கடிதம்
             
பாரதியின் ஜெயபேரிகை பாடல்


பாரதி தனது கட்டுரையொன்றில் கீழ்காணும் வரிகளைக் குறிப்பிடுகிறான்:

" சக்தியால் உலகம் வாழ்கிறது;
நாம் வாழ்வை விரும்புகிறோம்;
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம். "

சிறு வயதிலேயே வறுமை அவனைப் பிடிக்கிறது,கவலைகள் அவனை சூழ்கிறது,எது வந்து தடுத்தபோதிலும் பாரதியை அசையாது,வழுவாது இயங்க வைத்தது எது.

வறுமையின் பிடியில் இருந்த பொழுதும் கூட "ஜெயமுண்டு பயமில்லை மனமே..." -என அவனால் எப்படி பாட முடிந்தது,
மரணம் அவனை தழுவ வந்த அந்திமக் காலதிலும் கூட " காலா எந்தன் காலருகே வாடா, சற்றே எந்தன் காலால் மிதிக்கிறேன்" என்று அவனால் எப்படிக் கூற முடிந்தது

சர்வ நிச்சயமாக அவன் வேண்டி நின்ற சக்திதான்.

"நின்னை சில வரங்கள் கேட்பேன்" என்றும் "இவை அருள்வதில் உனக்கேதும் தடை உளதோ "என்று சக்தியிடன் அவன் வேண்டிக்கொள்ளும் வித்த்தை நான் வியப்பதுண்டு

பாரதி சொல்கிறான்:

"சக்தி வணக்கம் இத்தனை சாதாரணமாக இருந்த போதிலும், அந்த மதத்தின் மூலதர்மங்களை ஜனங்கள் தெரிந்துகொள்ளவில்லை. வெறுமே பொருள் தெரியாமல் சிலைகளையும், கதைகளையும் கொண்டாடுவோர்க்குத் தெய்வங்கள் வரங்கொடுப்பதில்லை.

வா; நெஞ்சே, பராசக்தியை நோக்கிச் சில மந்திரங்கள் சாதிப்போம்.
நான் விடுதலை பெறுவேன்; எனது கட்டுக்கள் அறுபடும். நான் விடுதலை பெறுவேன்; என்னிச்சைப்படி எப்போதும் நடப்பேன். என்னிச்சையிலே பிறருக்குத் தீங்கு விளையாது. எனக்கும் துன்பம் விளையாது. நன்மைகளே என்னுடைய இச்சைகள். இவற்றை நான் எப்போதும் நிறைவேற்றும்படியாக க்ஷணந்தோறும் எனக்குப் பிராண சக்தி வளர்ந்து கொண்டு வருக. உயிர் வேண்டுகிறேன். தலையிலே இடி விழுந்த போதிலும் சேதப்படாத வயிர உயிர். உடலை எளிதாகவும், உறுதியுடையதாகவும், நேர்மையுடையதாகவும் செய்துகாக்கின்ற உயிர்.
அறிவு வேண்டுகிறேன்; எந்தப் பொருளை நோக்குமிடத்தும், அதன் உண்மைகளை உடனே தெளிந்து கொள்ளும் நல்லறிவு; எங்கும் எப்போதும், அச்சமில்லாத வலிய அறிவு.
பிறவுயிருக்குத் தீங்கு தேடமாட்டேன்; என்னுடைய உயிருக்கு எங்கும் தீங்கு வரமாட்டாது.
பராசக்தி, நின்னருளால் நான் விடுதலை பெற்று இவ்வுலகத்தில் வாழ்வேன்."

பாரதியின் பாடல்கள்,அவனது வீரம் ததும்பும் பேச்சு, சக்தி மிக்க வார்த்தைகள் ,அவனது வாழ்க்கை அத்தனைக்குமான ரகசியம் “சக்தி”

மகா கவியே உன் பாதம் பணிகிறேன் !




பாரதியின் வாழ்க்கைக்குறிப்பு,பாடல்கள்,கவிதைகள்,கட்டுரைகள்,கதைகள்,பாரதி தொடர்பான விடியோபதிவுகள் என அத்தனையும் ஒரே இடத்தில்:

Labels: , ,

Tuesday, October 02, 2012

மகான் ! காந்தி மகான் !



காந்தி மகானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  இன்று தேசத் தந்தை காந்தியடிகளின் 141வது பிறந்த நாள். அவரை சிலருக்கு பிடிக்கும் ,சிலருக்கு பிடிக்காது.அவர் நல்லவரா? கெட்டவரா? என்று என் நன்பர்கள் பலருடன் நான் விவாதித்திருக்கிறேன் 
அவர் நல்லவரா ? கெட்டவரா ? என்று எனக்கு தெரியாது....
ஆனால் அவர் நிச்சயம் மகாத்மா என்பதை நான் உறுதியாக கூறுவேன்.

அவரை பற்றிய சில தகவல்களை இன்று நாம் தெரிந்து கொள்வோம்.இத்தொகுப்பு ஆனந்த விகடன் வெளியிட்டது.,இன்று இதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.


மகாத்மா காந்தி - 25


  • காந்தி, அரிச்சந்திரனின் ரசிகர். சத்திய சோதனையாளர். அரையாடைப் பக்கிரி, அகிம்சைப் போராளி!
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக 1869 அக்டோபர் 2-ல் பிறந்தார். மகாத்மா காந்தியாக 1948 ஜனவரி 30-ல் மறைந்தார். காந்தியின் பிறந்தநாள் உலகம் எங்கும் சர்வதேச அகிம்சை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது!
  • காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி தேசிய விடுமுறை, குடியரசு தினம், சுதந்திரம் தினம் ஆகியவை மற்ற இரண்டு விடுமுறைகள்!
  •     முதன்முதலில் `தேசத் தந்தை’ என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், `மகாத்மா’ என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்!
  •     காந்தி தொடங்கிய `இந்தியன் ஒப்பீனியன்’ குஜராத்தி. இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது!
  •     தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர்தான் `ஹரிஜன்’ என்பது , அதன் பொருள், `கடவுளின் குழந்தைள்’!
  •     `உடற் பயிற்சியின் அரசன் நடைப் பயிற்சி’ என்று சொன்ன காந்தி, லண்டனில் சட்டம் பயிலும்போது, ஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று காசை மிச்சப்படுத்திப் படித்தார்!
  •     காந்தி ஒரு துறவியைப் போன்றவர்தான், அனால், அவரிடம் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை. 1931-ல் லண்டனுக்குச் சென்றபோது, பிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தார் காந்தி. ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோது, அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒருவர், இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா’ என்று கேட்டார். `எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து மன்னரே அணிந்திருந்தார்’ என்று பதில் அளித்தார் காந்தி!
  •     வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது, காந்தி சொன்ன வாக்கியம்தான்..... `செய் அல்லது செத்து மடி!’
  •     கொள்கை இல்லாத அரசியல் வேலை செய்யாமல் வரும் செல்வம், மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம், பண்பு இல்லாத அறிவு, நியாயம் இல்லாத வணிகம், மனிதம் மறந்த அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு’. இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள்!
  •     தபால் அட்டைகள்தான் உள்ளதிலேயே மிகவும் சிக்கனமான தகவல் தொடர்புச் சாதனம் என்று கருதியவர் காந்தி’!
  •     கடிதங்கள் மிக நேர்த்தியாக மடிக்கப்பட்ட பின்பே உறையில் இட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார். காரணம், கடிதம் மடிக்கப்பட்டு இருக்கும் முறையிலேயே உங்களைப்பற்றிய அபிப்ராயம் தோன்றிவிடும் என்பார்!’
  •     யாருக்குக் கடிதம் எழுதினாலும் `தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்’ என்று எழுதியே கடிதத்தை முடிப்பார்!
  •     கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார். எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும், உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார். அதை அவரும் கடைப்பிடித்தார்!
  •     ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்கொண்டவராக இருந்தார். அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது!.
  •     `சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று வெள்ளையர்கள் சொன்னபோது, அதற்கு காந்தி, தன் 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். அதில் 11-வதாக இருந்த திட்டம், `சுய பாதுகாப்புக்குத் தேவையான வெடி பொருட்களையும் ஆயுதங்களையும் தயாரித்துக்கொள்வதற்கான உரிமம் வழங்குதல்.’ அகிம்சையைப் போதித்தவருக்குள் எப்படி இந்த எண்ணம் உதித்தது என்பது இன்று வரை பலரின் கேள்வி!
  •     எந்த நிலையிலும் ஆங்கிலேயரை உடல் அளவில் காயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. `நாம் அவர்களை எதிர்த்துப் போராடவில்லை. அவர்கள் நம் மீது திணிக்கும் அதிகாரத்தைத்தான் எதிர்க்கிறோம்’ என்று அதற்கு விளக்கமும் அளித்தார்!.
  •     தான் தவறு செய்தால், அதற்காக மெளன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால், அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார். இந்த குணம், அவர் தாய் புத்தலிபாயிடம் இருந்து வந்ததாகும்!.
  •     ஆரம்ப காலங்களில், ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிராத்தனைக் கூட்டங்களில், `கடவுள் உண்மையானவர்!’ என்று சொல்லிவந்தார். விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, `உண்மையே கடவுள்’ என்று மாற்றிக்கொண்டார்!.
  •     இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு எது தெரியுமா? அவர் தன் வாழ்நாளியில் மிதிக்காத நாடான அமெரிக்காதான் அது. இது நடந்தது 1961 ஜனவரி 26-ல்!.
  •     ராட்டைச் சக்கரத்துக்கு முன் காந்தி அமர்ந்து இருப்பதுபோல இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம், மார்கேட் பூர்க் ஒயிட் என்பவரால் பிரபல லைஃப் இதழுக்காக எடுக்கப்பட்டது!.
  •  `என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு’ என்று காந்தி அழைத்து வினோபா பாவேவைத்தான்!.
  •     மார்டின் லூதர்கிங், தலாய் லாமா, ஆங் சான் சூகி, நெல்சன் மண்டேலா,அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம், காந்திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஆனால், காந்திக்கு நோபல் பரிசு தரவில்லை!.
  •     இந்தியா சுகந்திரம் அடைந்தபோது, அதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் காந்தி, இன்னொருவர் தந்தை பெரியார்!.
  •     போர்பந்தரில் பிறந்த காந்தி ஆரம்பித்த சபர்மதி ஆஸ்ரமத்தின் நினைவாகத்தான் `சபர்மதி எக்ஸ்பிரஸ்’ ரயில் விடப்பட்டது.ஆனால், 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தில் இந்த ரயில் எரிக்கப்பட்டு, குஜராத் கலவரத்துக்கு வித்திடப்பட்டது.காலத்தின் முரண்களில் இதுவும் ஒன்று!.
  •     `கனவில் இருந்து நிஜத்துக்கு, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, மரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு!’- காந்தி நினைவு மண்டபத்தில் எழுதிவைக்கப்பட்டு இருக்கும் வாசகம் இது!.

பிதாவே! உமக்கு எம் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

Labels: , , , , ,

Saturday, December 10, 2011

என்றும் அழியா பாரதி ....



"இன்று புதிதாய் பிறந்தோம் என்று நீவிர் -
எண்ணமதை திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்
தீமையெல்லாம் ஓடிப்போம் திரும்பி வாரா.."
                                         -பாரதி

 " பாரதி ஒரு அற்புதமான கவிஞன்,வித்தியசமான மனிதன் ! ",
அவன் வரலாற்றை படிக்கிற எவரும் சட்டென்று இந்த உணர்வு நிலையில் தான் கட்டுண்டாவோம் .


பாரதி....
கவிஞன், எழுத்தாளன், பத்திரிக்கையாளன், சமூக சீர்திருத்தவாதி,விடுதலை வீரன்,  என  பல்வேறு தலங்களில் புரட்சி ஒளி வீசிய புது ஞாயிறு அவன் .

இலக்கணமுறை சிரிதும் பிறழாமல் (பாமர ஜனங்களுக்கு புரியாத மாதிரி) கவி 
செய்த  அக்கால கவிகளுக்கு மத்தியில்...
"புரிகிற வடிவில் கவியை எளிதாக்கி,
புரட்சி விதையை கவியுள் பதுக்கி 
புரட்சி செய்த புதுக்கவிஞன்"

மூட நம்பிக்கையில் மூழ்கி கிடந்த மக்களை கரையேற்ற வந்த கடவுள்.

தமிழ் மொழியை புது நடையில் பேசவைத்தவன்

"கவிதை எழுதுபவன் கவியன்று.
கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன்,
அவனே கவி "   
                                    - பாரதி.


நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்  என்று கூறி வாழ்வையே கவிதையாக வாழ்ந்த மகாகவி

பாரதியார் பல கவிஞர்களுக்கு மானசீக குருவாக இன்றளவும் இருக்கிறார். என் மனம் அவரது பாடல்களை கேட்கிற போதும், உச்சரிக்கிற போதும் புது உணர்வு பெற்று உற்சாகம் அடைய தவறியதே இல்லை.

என் மனம் சோர்வு அடைகிற வேளைகளில் எல்லாம்

"நல்லதோர் வீணை செய்தே........."

"தேடிச் சோறுநிதந் தின்று......."

"நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா..."

"அச்சமில்லை அச்சமில்லை...."

போன்ற பாடல்களில் என்னை பாரதி உர்ச்சாகமூட்டுகிறான்,


வருமையின் பிடியில் இருந்த பொழுதும் கூட 
"ஜெயமுண்டு பயமில்லை மனமே..." 
-என அவனால் எப்படி பாட முடிந்து,
மரணம் அவனை தழுவ வந்த அந்திமக் காலதிலும் கூட
" காலா எந்தன் காலருகே வாடா, சற்றே எந்தன் காலால் மிதிக்கிறேன்" 
-என்று அவனால் எப்படிக் கூற முடிந்தது -என நான் அடிக்கடி யோசிப்பதுண்டு...

'தனக்கென்று மட்டும் வாழ்கிற மனிதர்கள் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு ஒப்பானவர்கள், ஆனால் பிறர்க்கென்று வாழ்கிற உயர்ந்த உள்ளங்கள் இறந்தும் கூட இருக்கின்றார்கள்.'-என்று நாம் படித்திருக்கிறோம்...

தனக்கு அழிவில்லை, தனக்கு மரணமில்லை என்று தன் பாடல்களில் பாரதி கூறியிருக்கிறான்.
நிச்சயம் அது உண்மை தான்.
அவன் இன்னும் உயிரோடு தான் இருக்கிறான்
பாரதியின் பெயரை உச்சரிக்கிற போது....
பாரதியின் பாடல்களை கேட்கிற போது....
பாரதியின் எழுத்துக்களை வாசிக்கிற போது....

உச்சரிக்கிறவனிடம்
கேட்கிறவனிடம்
வாசிக்கிறவனிடம் அவன் தன்னை புதுப்பித்துக் கொண்டு இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான்....

என்றும் புதிதாய் பிறந்து கொண்டு இருக்கிறான் பாரதி 

                                                                                                                                                                    

மகாகவியே உன் பாதம் பணிகிறேன்.... 


பாரதியாருக்காக தொடுக்கப்பட்ட சில வலைப் பூக்கள்:


(பிறவிக்கவிஞர் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை கவிதைவடிவில்)



(கவிதைகளின் தொகுப்பு)

3. 






                                                                                                                                                              -விஜயன்

Labels: , , , ,