Thursday, June 30, 2016

பேஸ்புக்'கில் ஆபாச படம்: உஷார் பதிவு (பேஸ்புக்கும் பெண்களும் பாகம்- 8)

(பேஸ்புக்கும் பெண்களும் பாகம்- 8)

பேஸ்புக்'கில் ஆபாச படம்: மாணவி தற்கொலை

   "  'பேஸ்புக்'கில், தன் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வெளியானதால், அதிர்ச்சியுற்ற இளம்பெண் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.    "
                                                   -தினமலர் 28.6.2016 

                              


சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி என்ற அந்த ஊரில் ஒரு தறி நெசவாளியின் மகள் வினுப்பிரியா, 21 வயது. பி.எஸ்.சி பட்டப்படிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு உதவியாக இருந்து வந்திருக்கிறாள். படித்த பிள்ளையாயிற்றே  பேஸ்புக்கில் இல்லாமல் இருப்பாளா ! 

பேஸ்புக்கில் விஸ்தாரமான நட்புவட்டத்தை வளர்த்து வைத்திருந்திருக்கிறாள். 

 "செம", "super", "cute", "அழகா இருக்க" என பெண் பிள்ளைகளிடம் வழிகிற கூட்டம், இவளிடமும் வலிய வந்து வழிந்திருக்கிறது. வயசுக்கோளாறு, ஆர்வக்கோளாறு வினுப்பிரியாவும் தனது புகைப்படங்களை பேஸ்புக்கில் அவ்வப்போது பதிந்து கொண்டு வந்திருக்கிறாள். 

இந்நிலையில் கடந்த பதினாறாம் தேதி "மைதிலி வினுப்பிரியா" என்கிற பெயரில் போலி பேஸ்புக் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் வினுப்பிரியாவின்  புகைப்படங்கள் அரைநிர்வாண நிலையில் இருக்கும் வேறு படங்களுடன் மார்ப்பிங்க் செய்யப்பட்டு வினுப்பிரியாவின் அப்பாவின் செல்பேசி எண்ணுடன் பரப்பப்பட்டிருக்கிறது., ( மார்ப்பிங்க் :  ஒரு படத்தின் உடல் அமைப்புடன் வேறு புகைப்படத்தில் இருக்கும் தலையை கணினி உதவியுடன் ஒட்டும் செயல்)  .அதே தினம் வினுப்பிரியாவின் அப்பாவின் செல்பேசிக்கு யாரோ ஒருத்தன்  கால்  செய்து "ஒன் பொன்ன அடக்கி வைக்க மாட்டியா.." என ஆபாசமாக பேசியிருக்கிறான்.   17 ந்தேதி வினுப்பிரியாவின் அத்தைப்பையன் வினுப்பிரியாவின் அப்பாவிடம் உங்கள் மகளின் படம்  பேஸ்புக்கில்  ஆபாசமாக வெளி வந்திருக்கிறது என சொல்லியிருக்கிறான்.

மகளை திட்டியிருக்கிறார்கள்., பின் போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள் , அளித்தும் பலனில்லை, இந்த மார்ப்பிங்க் செயலை செய்தது யார் என கண்டறிய இயலவில்லை.

" முதலில், என்னை மன்னித்து விடுங்கள். என் வாழ்க்கை முடிந்தபின், நான் வாழ்ந்து என்ன செய்யப்போகிறேன். எனக்கு வாழ பிடிக்கவில்லை. அம்மா, அப்பாவே என்னை நம்பாதபோது, நான் உயிரோடு இருந்து, என்ன பிரயோஜனம்; அவர்களே என்னை பற்றி கேவலமாக பேசுகின்றனர். சத்தியமாக சொல்றேன், என் போட்டோவை, நான் யாருக்கும் அனுப்பவில்லை; எந்த தப்பும், நான் செய்யவில்லை. என்னை நம்புங்கள். மீண்டும் ஒருமுறை சாரி... சாரி..."

என  கடிதம் எழுதி வைத்துவிட்டு  (27 ந்தேதி)  செத்துப்போய் விட்டாள் ! 

இப்போது அந்தபோலி பேஸ்புக் கணக்கை போலீசார்  முடக்கியிருக்கிறார்களாம்,  தாமதம் !!

**********

நேற்று செய்தித்தாளில் இந்த செய்தியை பார்த்ததும் பகீர் என்றது ! அடப்பாவிகளா !! ஒரு பெண் பிள்ளையை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், அவள் உங்களுக்கு பிடி கொடுக்கவில்லையென்றால் இப்படிப்பட்ட கேடுகெட்ட வேலையில் ஈடுபடுவீர்களா!! நரநாய்களா ! என கோபம் வந்தது . அந்த பெண்ணையும் அவளை கன்னி வயது வரை கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களையும் யோசித்துப்பாருங்கள் .

சரி!  பேஸ்புக்கில் பெண்கள் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது ஆபத்தானதா ! 

ஏற்கனவே இது தொடர்பாக ஒரு பதிவு எழுதியிருந்தேன் . ( கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து அதை வாசிக்கலாம் )


இந்த பதிவில் பேஸ்புக்கில் பெண்கள் புகைப்படங்களை ஏற்றுவதற்கு முன் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகளப் பற்றி பார்ப்போம்.

**********


சைக்கலாஜிக்கலாக பெரும்பான்மையான பெண்கள் ( சிறும்பாண்மை யினரில் இருக்கும் பெண்கள் என்னை மன்னிப்பீராக). பகட்டாக உடுத்திக்கொள்ள வேண்டும், அலங்காரம் செய்துகொள்ள வேண்டும், நகை அணிய வேண்டும்  அதையெல்லாம் க்யூட்டான ஸ்மைலி எடுத்து பேஸ்புக்கில் அப்லோட் செய்து பலரது லைக்குகளை வாங்க வேண்டும்  என்கிற மனோநிலையில் தான் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

பெண்கள் மொக்கை ஸ்டேட்டஸ் போட்டாலே லைக்கித் தொலைக்கும் நம் காய்ந்துபோய்கிடக்கும் ஆண் சமூகமும் பெண்களின் புகைப்படங்களை "அஹோ", "ஒஹோ" "சூப்பர்", "க்யூட்" என பாராட்டித்தள்ளி ஜொள்ளு மழையுடன், லைக் மழையையும் பொழிந்து தள்ளி விடுகிறோம்.

லைக்குவதோடு மட்டும் நில்லாமல் சில நல்ல உள்ளங்கள் பெண்களின் புகைப்படங்களை மார்ப்பிங்க் எனப்படும் அந்த " தலை மாற்றி - உடல் மாற்றி வித்தையை" பிரயோகித்து ஆபாசமாக சித்தரித்து வக்கிர புத்தியோடு வலம்வர வைத்துவிடுகிறார்கள்.

ஒருகாலத்தில் பொதுக்கழிப்பிட சுவர்களில் கரியாலும், ரயில் கழிவறைகளில் பேனாவாலும், குறிகளையும், குறியீடுகளையும் வார்த்தைகளையும் , பிடிக்காத பெண்களின் மொபைல் எண்களையும், காதலை மறுத்த பெண் பிள்ளைகளின் மொபைல் எண்களையும் விபச்சாரத்திற்கு அணுகவும் என்கிற மாதிரி கிறுக்கி வைத்த கூட்டம் தான் நாம் என்பதை நவீன வடிவில் பறைசாற்றத்துவங்கியுள்ளோம் !! வாழ்க பாரத சமுதாயம் !

பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட இந்த நாசமாய்ப்போன கல்வி முறையில் நல்லொழுக்கத்திற்கும், நீதி போதனைக்கும், ஆண்களுக்கு பெண்களை மதிப்பதற்கும், பெண் பிள்ளைகளுக்கு காமவெறியர்களிடமிருந்து எச்சரிக்கையாக நடந்துகொள்வதற்கும் பாடங்கள் அமைத்து பாடதிட்டத்தில் பங்கு கொடுக்க வேண்டும், அப்போது தான் இந்த நிலைமை சிறிதளவேனும் மாறும். :/

சரி பேஸ்புக்கில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகளைப் பார்க்கலாம்.

முக்கியமான முன்னெச்சர்க்கைகள் :

1. உங்களது உண்மையான புகைப்படத்தை profile படமாக வைக்கலாம் தவறில்லை, ஆனால் அதற்கு முன் "only me" என்கிற ஆப்சனை தேர்வு செய்து பகிரவும். ( இதை எப்படி செய்வது என அறிய இந்த பதிவை க்ளிக் செய்து வாசிக்கவும்)

2. உங்கள் புகைப்படத்தை தனியாக பதியாமல் ஒரு கொலாஜாக (பல புகைப்படங்களை சேர்த்து ஒரே படமாக) செய்து பதிவேற்றும் போது அதன் பிக்ஸல் க்ளேரிட்டி குறைவாகும்.பிக்ஸல் க்ளேரிட்டி குறைவான படங்களை பெரும்பாலும் மார்ப்பிங்க் கில்லாடிகள் விரும்புவதில்லை. 

3. அறியாத நபர்களின் friend Request களை ஏற்க வேண்டாம்.

4. உங்கள் ஈமெயில் ஐ.டி. மொபைல் எண் போன்றவைகளை பொதுவில் வைக்க வேண்டாம்.

step 1: உங்கள் டைம்லைனிற்கு சென்று About என்பதை க்ளிக் செய்க -> பின்பு contact and basic info என்பதை செலக்ட் செய்யவும்.
step 1

step 2: பின் மவுஸ் கர்சரை மொபைல் எண் அல்லது ஈமெயில் அருகே கொண்டு சென்றால் edit என்ற எழுத்து வரும் அதை க்ளிக் செய்க.

step 3:  அதில் only me என்பதை செலக்ட் செய்து "save changes கொடுக்கவும்.
step 3
ஈமெய்ல் ஐ.டி மற்றும் மொபைல் எண் இரண்டிற்கும் only me கொடுத்து save changes கொடுத்துவிடவும்.

5. உங்களது நன்பர்கள், ஃபாலோவர்  பட்டியலை மறைத்து வையுங்கள் (எப்படி என்பதற்கு இந்த பதிவை வாசியுங்கள்)

6. உங்களது பேஸ்புக் பாஸ்வேர்டை வேறு யாருக்கும், நன்பருக்குக்கூட கூற வேண்டாம், அப்படியே கூறினாலும் உடனடியாக மாற்றி விடுங்கள்.

7. உங்களுக்கு தொந்தரவு தரும் பேஸ்புக் நபர்களை block செய்யுங்கள்

8. உங்கள் புகைப்படங்களை பகிரும் போது பொதுவில் பதிய வேண்டாம். யாருடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமோ , அவர்களோடு மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். 


தொடரும்.....Refrence:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1552386
http://www.vikatan.com/news/coverstory/65665-should-we-be-ashamed-if-our-naked-body-is-revealed.art

 

Post Comment

Saturday, June 25, 2016

தாய்மொழிப் பற்று அவசியமா ?? (2)

 "மொழி  என்பது வெறுமனே சத்த சமாச்சாரம் அல்ல"


மொழிகள் - உருவங்களற்ற உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும்   உருவம் கொடுத்து உரைக்க உதவி செய்கின்றன.  மனித இனத்தை மிருகக்கூட்டத்திடமிருந்து பிரித்துக் கூட்டி வந்த மேய்ப்பன் மனிதர்கள் பேசின மொழி தான் எனலாம். மனிதன் எப்போது மொழிகளின் அவசியத்தை உணர்ந்து தனக்கே தனக்கென , அல்லது தங்களது கூட்டத்தினருக்கான பிரத்யேக மொழியை உருவாக்கத் துவங்கினானோ அப்போதிருந்துதான் நாகரிக வளர்ச்சி என்பது துவங்க துவங்கியிருக்க வேண்டும் என்பது என் கருத்து.

மொழி எப்படி தோன்றியது ?

மொழி இன்ன தேதியில் இன்ன இடத்தில் இன்னவரால் கண்டுபிடிக்கப்பட்டது என உறுதியாக சொல்லிவிட முடியாது., முந்தின பதிவில் பார்த்தது மாதிரி  மொழிகளின்உருவாக்கத்தில் இனம்,கலாச்சாரம்,காலநிலை,சுற்றுப்புறம்,தட்பவெப்பம்,உணவுப்பழக்கம், என பல்வேறு காரணங்கள் பங்கெடுத்திருக்கின்றன. இந்த பல்வேறு காரணங்கள் கொண்ட பட்டியலின் பலனாகவே மொழி என்பது உருவாகியிருக்கிறது. 

மொழி உருவாக்கத்தின் அடிப்படையான காரணங்கள் மூன்று

1.தகவல் பரிமாற்றம் 
2.தப்பிப் பிழைத்தல் 
3.தகவமைப்பு 


இது பற்றியெல்லாம் விரிவாக பார்க்கலாம் , அதற்கு முன்னால் மிருகங்களின் உலகில் சஞ்சரித்து அவைகளின் மொழிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மிருகங்கள் பேசுமா ? :

மிருகங்கள் பேசுமா ? என சிந்திக்கும் போது முதலில் எனக்கு,  பஞ்ச தந்திரக்கதைகளும் , ஈசாப் நீதிக்கதைகளும் தான் நினைவுக்கு வருகின்றன. :)

சரி,

மொழி என்பது வார்த்தைகள் மற்றும் வார்த்தைகளின் அடுக்குமுறையால் விளையும் அர்த்தங்கள் என சிந்திக்கும்பட்சத்தில் மிருகங்களுக்கு மொழி கிடையாது என சொல்லலாம். அதேசமயம் மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான சமாச்சாரம் என்கிற பட்சத்தில் சிந்திக்கிற போது மிருகங்களுக்கு மொழி உண்டு எனலாம். 


மிருக மொழிகளில் அநேகமாக வார்த்தைகள் கிடையாது, குறியீடுகள், உடலியக்க அசைவுகள், சத்தங்கள் மட்டுமே இருக்கின்றன. (சிம்பான்ஸி, பபூன் குரங்குகள் வார்த்தைகள் மூலம் உரையாடிக்கொள்கின்றன என்கிறார்கள் ஆனால் அவையும் limited தான் 384 வார்த்தைக் குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள்  ). 

எங்க வீட்டு கிளி பேசுமே !! என யாராவது சண்டைக்கு வரலாம் , கிளிகளைப் பொறுத்தவரையில் அவை எண்ணங்களை ஒலியாக்கி பேசுவதில்லை, வெறுமனே சத்தங்களாகவே புரிந்து கொண்டு பேசுகின்றன. தீவிர பயிற்சி மூலம் கிளிகளை நம் மொழியை புரிந்துகொண்டு பேச வைக்க முடியும்.

சில ஆராய்ச்சியாளர்கள்   மிருக உலகத்திற்குள் சஞ்சரித்து அவற்றின் மொழியை கஷ்டப்பட்டு புரிந்து கொண்டு நம் மொழியோடு ஒப்புமைப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள். தேனீக்களின் நடன மொழியை கண்டுபிடித்ததற்காக ஒரு ஆராய்ச்சியாளருக்கு நோபல் பரிசெல்லாம் கூட கொடுத்திருக்கிறார்கள். 

*******

மிருக மொழி - சில சுவாரஸ்யமான தகவல்கள் :

நாய் மொழி :

நம் கண்களுக்கு தினந்தோறும் தரிசனம் தந்து கொண்டு இருக்கும் நாய்களைப்பற்றி,   அவைகளின் பரிபாஷைகள் பற்றி பேசாமல் போனால் இந்த கட்டுரை அதன் ஜென்ம சாபல்யத்தை அடையாது போகலாம்.

முன்பின் அறியாத புது நபர்களை கண்டால் குரைக்கும், தெரிந்தவர்கள் வந்தால் வாலாட்டும், பிரியமானவர் வந்தால் வாஞ்சையோடு வாலாட்டி துள்ளிக்குதிக்கும்..  நாயுலகில் நாமறிந்த மொழி  இவ்வளவாகத்தான் அநேகமாக இருக்கும்.

நாய்களின் மொழியில்  இன்னும் கூட விசயங்கள் இருக்கிறது, கீழே இருக்கும் படங்களை கவனியுங்கள்.சிம்பான்சி, உராங்குட்டான் ரக குரங்குகளுக்கு, நாய்களுக்கு, யானைகளுக்கு, டால்பின் களுக்கு மனித மொழியை கற்றுக்கொள்ளும் அறிவு இருக்கிறது, அவைகளால் பேச முடியவில்லை என்றாலும் புரிந்து செயல்படும் வகையில் பழக்கப் படுத்த முடியும். (மிருகங்கள் மொழியை வார்த்தைகளாக அல்லாமல் சத்தங்களாகவே புரிந்து கொள்கின்றன).

சிம்பான்சிகளை மனிதர்களோடு உரையாடும் வகையில் உருவாக்கப்பட்ட வார்த்தைகள் (வார்த்தைக்குறியீடுகள் - lexigrams) கொண்ட அட்டையின் உதவியோடு மனிதர்களோடு பேச வைக்க முடியுமாம்.


           பயிற்றுநர்  Sue_Savage உடன் Bonobos குரங்குகள்_Panbanisha_&_Kanzi _2006

மிருக மொழி பற்றி தேடி தேடிப் படித்துக்கொண்டிருக்கையில் என்னை மிக ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜந்து அலெக்ஸ் எனும் கிளி ,

ஆப்ரிக்க கிளி  அலெக்ஸ் (தோற்றம் :1967 மறைவு:2007)
                                       
ஒரு செல்லப்பிராணிகள் கடையில் இந்த கிளியை வாங்கி ஐரின் பெப்பர்பெர்க் என்ற அந்த மொழியியல் வல்லுநர் அதற்கு அலெக்ஸ் என பெயர் வைத்த போது இதன் வயது 1. அலெக்ஸ் (Alex என்ற பெயர் Avian -பறவை, Language- மொழி, Experiment -ஆராய்ச்சி என்பதன் சுருக்க வார்த்தை acronym). பயிற்சி - பயிற்சி - இடைவிடாத பயிற்சி.
                                                                     

கையில் ஏதாவது ஒரு பொருளை நீட்டி இது என்ன, என்ன நிறம், எத்தனை, என்ன வடிவம் என கேட்டால் கேட்கிற கேள்வியை மிகச்சரியாக புரிந்து கொண்டு பதில் சொல்லியது (ட்ரெய்னிங்க் அப்படி). உன்னுடைய நிறம் என்ன என கேட்டால் க்ரே என சொல்லுமாம். உலகில் தன்னைப்பற்றி பேசிய மனிதனல்லாத ஒரே உயிரினம் இந்த கிளி தான் என்கிறார்கள். அதுமட்டுமின்றி இல்லாத பொருளைப் பற்றி கேட்டால் அதை இல்லை என சரியாக சொல்லி இருக்கிறது,  உதாரணமாக அந்த இடத்தில் வாழைப்பழங்கள் இல்லை என வைத்துக்கொள்வோம், இங்கு  எத்தனை வாழைப்பழங்கள் உள்ளன எனக்கேட்டால் , வாழைப்பழங்கள் இல்லை என சொல்லியிருக்கிறது (பூச்சியத்தை புரிந்து கொண்ட ஒரே மனிதனல்லாத உயிரினம் என்கிறார்கள்).
 
எத்தனை சிகப்பு !! எத்தனை ஊதா !! ( பயிற்றுநர் பெப்பர்பெர்க் உடன் அலெக்ஸ்)

தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தால் , அல்லது அது அயர்வாக உணரும் சமயங்களில் "i wanna go " என சொல்லிவிட்டு கூண்டுக்கு நகர்ந்துவிடுமாம்.

6 வரையிலான எண்கள் , 7 நிறங்கள், 5 வடிவங்கள், நூற்றுக்கணக்கான வார்த்தைகள், 50 வகையான பொருட்களை அடையாளம் காணல், குட்டிக்கணக்குககள் என ஒரு ஐந்து வயது குழந்தைக்கான அறிவு அந்த அலெக்ஸிற்கு இருந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளார்கள்.

இந்த ஜந்துவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://alexfoundation.org/

இது ஒரு புறம் இருக்க ஐன்ஸ்டீன் என்ற பெயருடைய இன்னொரு கிளி பல குரல்களில் பேசி அசத்துகிறது.

பொதுவாக மனிதர்களைத் தவிர்த்து மனிதர்களைப் போல பேசத்தெரிந்த ஒரே ஜீவராசிகள் பறவைகள் தான் , காகங்கள், (பாரதியாரின் காக்காய் பார்லிமென்ட் கதை நினைவுக்கு வருகிறது :) )  மைனாக்குருவிகள், போன்றவைகளுக்கும் பயிற்சி கொடுத்தால் பேச வைக்க முடியுமாம், ஆனால் கிளிகள் தான் கெத்து காட்டுகின்றன.

என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இன்னொரு மொழி, தேனிக்களின் நடன மொழி.

*******

தேனீக்களின் நடன மொழி : 

தேனீக்கள் நடன அசைவுகள் மூலம் பேச்சில்லாமலேயே  பேசிக்கொள்கின்றன என்பதை கேள்வியுறும் போது "அட !! " சொல்ல தோன்றுகிறது.

அப்படி என்ன தான் நடன மொழியியின் மூலம் அவை பேசிக்கொள்கின்றன.

உணவு இருக்கும் இடத்தை ஒரு தேனி அறிந்து கொண்ட உடன் உணவிருக்கும் இடத்தை அது தன் கூட்டுக்குச் சென்று  உடனிருக்கும் தேனிக்களுக்கு உடலசைவுகளாக உணர்த்துகின்றன.

தேன் அங்க இருக்கு !!
                                                   
ஒரு நாள் ஆஸ்திரேலிய உயிரியலாளர்  Karl Von Frisch தோட்டத்தில் பூக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் , அப்போது பூவில் ஒரேயொரு தேனீ அமர்ந்து தேனருந்தி கொண்டிருந்திருக்கிறது, பின் சில விநாடிகளுக்கு அந்த தேனி மறைந்துவிட்டு இன்னும் சில தேனீக்களின் பட்டாளத்தோடு திரும்பி வந்து பூக்களை மொய்த்துக்கொண்டிருந்திருக்கிறது. தேனை கண்டு சென்ற முதல்  தேனீ எப்படி மற்ற தேனீகளுக்கு தேனிருக்கும் இடத்தை சொல்லியிருக்கும் என ஆராய்ச்சி செய்யத்துவங்கியுள்ளார்.
சூரியனின் திசை, புவியின் ஈர்ப்பு சக்தி, அதன் உயிரி கடிகாரம் (இன்ன இன்ன நேரத்தில் சூரியன் இன்ன இன்ன திசையில் தான் இருக்கும் என்பதை தீர்மானிக்கும் தேனிக்களின் உள்ளார்ந்த அறிவு), புறஉதா கதிர்களை கண்டறியும் திறன், திசை காணும் அறிவு இவைகளை அடிப்படையாகக் கொண்டு தேனிக்கள் நெளிவு சுளிவுகளுடன் கூடிய அந்த நடனத்தை ஆடி அதன் கூட்டில் உள்ள மற்ற தேனீக்களுக்கு சூரியனின் திசையிலிருந்து உணவு இருக்கும் இடத்தின் கோணம், திசை,  தூரம் போன்றவற்றை கூறுகின்றன.

 இந்த வீடியோவைப் பாருங்கள் , விளக்கமாக விளங்கிக்கொள்ள முடியும்.


இந்த நடனமொழியை கண்டுபிடித்து உலகத்துக்கு அறிவித்த ஆஸ்திரேலிய உயிரியலாளர்  Karl Von Frisch க்கு 1973 க்கான நோபல் பரிசு கிடைத்தது .
தேனீ க்களுடன் ...

*******

இது போல ஒவ்வொரு பிராணியும், தாவரமும் தத்தங்களுக்குள் தங்களுக்கே உரித்தான பிரத்யேக, சங்கேத மொழி முறைமைகளைப் பயன்படுத்தி உயிவாழ்தலுக்கு அவசியமான கருத்துக்களைப்   பரிமாறிக்கொள்கின்றன.

அஃறினைகளின் உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் மொழிகளை ஆராய்ந்து  அவைகளை ரோபட்டுகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் பிராணிகளின் மொழி நம் மொழி போல விசாலமானவைகள் அல்ல, Limited !  

இரை தேடுதல் ,இணை கவர்தல் , இனம் காணல் என குறுகிய எல்லைகளுக்குட்பட்ட குறைவான குறியீடுகளுடன் இருப்பவை. நம் பேசிக்கொள்ளும் மொழிகள்  போல சிக்கலான  சொல் அடுக்குகள், இலக்கண முறைகள் எல்லாம் கொண்டவைகள் அல்ல.

மனிதர்களைப்போல பள்ளிக்கூடங்கள் நடத்தி அவைகளின் எதிர்கால சந்ததியினர்களுக்கு அவைகள் பாடங்கள் 
சொல்லிக் கொடுப்பதில்லை. மொழியை  குரலாக, எழுத்துக்களாக, வீடியோவாக பதிவு செய்யும் தொழில்நுட்ப அறிவு அவைகளுக்குக் கிடையாது. புதிதாக பிறக்கும் ஒவ்வொரு விலங்குக்கும், தாவரத்துக்கும் inborn ஆகவே, தன்னிச்சையாகவே அதனதன் மொழியறிவும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இன்னும் பேசலாம்.... 

Post Comment

Sunday, June 12, 2016

நல்லதங்காள்_கதை


நல்லதங்காள்_கதை :


தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதையாகும். நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான். நல்லதம்பி-நல்ல தங்காள் வாழ்க்கை சிறந்த அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது.தற்போது நல்லதங்காள் சிறுதெய்வமாக வழிபடப்படுகிறாள். திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில் நல்ல தங்காளுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருவிழாவும் நடக்கிறது.

அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல_தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.

பஞ்சம் :


திருமணம் ஆன இளம் வயதிலேயே நல்ல தங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். இந்நிலையில், மானாமதுரையில் மழை பொய்த்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழையே இல்லை. உண்ண உணவு இன்றி மக்கள் பலரும் மாண்டனர். நல்ல தங்காள் குடும்பமும் அந்நிலைக்கு ஆளானது. அவள், அண்ணன் கொடுத்தனுப்பிய சீதனப் பொருட்களை ஒவ்வொன்றாக விற்றாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது. மனம் உடைந்த நல்ல தங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தான் பிறந்த அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கு வந்தாள்.

மூளியலங்காரி :

அப்போது அவளது அண்ணன் நல்லதம்பி வேட்டையாடக் காட்டுக்கு சென்று இருந்தார். அண்ணன் வரும்வரை அரண்மனையில் தங்கி இருக்கலாம் என்று எண்ணிய நல்ல தங்காள் அங்கு சென்றாள். ஆனால் நல்ல தம்பியின் மனைவி மூளியலங்காரியோ, பல நாட்கள் பட்டினி கிடந்த நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் உண்ண உணவு கூட கொடுக்காமல் அரண்மனையை விட்டே துரத்தினாள்.

தற்கொலை :

மூளியலங்காரியின் கடும் சொற்களால் மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் வந்த வழியே திரும்பினாள்.

"எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்டேனே... இனி, யாரை நம்பி நான் வாழப்போகிறேன்? என் பிள்ளைகள் எப்படி வாழப்போகிறார்கள்?" என்று பலவாறு யோசித்தாள்.

அப்போது, அவளது குழந்தைகள், ‘அம்மா பசிக்குது... ஏதாவது வாங்கிக் கொடும்மா...’ என்று அழ ஆரம்பித்து விட்டனர். அவளது கையிலோ பணமோ அல்லது பொருளோ எதுவும் இல்லை.

குழந்தைகளின் பசியைப் போக்க வழி தெரியாமல் தவித்த அவளுக்கு அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணறு கண்ணில் பட்டது. நேராகக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள்.

பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டாள். ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு கொன்ற பிறகு, தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள்.

மனைவியின் உதாசீனத்தால் தனது தங்கை, பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த நல்லதம்பி துடிதுடித்தான்.  அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் 
அந்த கவலையில் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான்

சிவபெருமான்_அருள் :

அண்ணன் - தங்கை பாசம் என்றால் இதுவல்லவா? என்று மெச்சிய சிவனும், பார்வதியும் அங்கே தோன்றினர். தற்கொலை செய்த நல்லதங்காள், அவளது பிள்ளைகளை உயிர் பெறச் செய்ததோடு, நல்ல தம்பியையும் உயிர்ப்பித்தனர்.

அப்போது நல்ல தங்காளும், நல்லதம்பியும், “நாங்கள் இறந்தது, இறந்ததாகவே இருக்கட்டும். மனிதப் பிறவி எடுத்து மாண்டவர்கள் மீண்டும் உயிர் பெற்றார்கள் என்ற வரலாறு ஏற்பட வேண்டாம். எனவே நாங்கள் இறந்ததாக கருதி அருள் புரிய வேண்டும்” என கூறினார்கள்.

சிவனும் அவ்வாறே அவர்களின் வேண்டுகோளை ஏற்றுகொண்டார்.

இந்த ஒரே காரணத்துக்காக நல்லதங்காள் தெய்வமாகிவிட்டாள்.

நல்லதங்காள்_கோயில் :

நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வத்திராயிருப்பு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயர் அர்ச்சுனாபுரம். பச்சை ஆடை போர்த்திய வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது அர்ச்சுனாபுரம். அங்கே வயல்வெளிக்கு மத்தியிலேயே கோவில் கொண்டுள்ளாள் நல்லதங்காள்.

கோயில்_அமைப்பு :

நல்லதங்காள் கோவில் அமைப்பு மற்ற கோயில்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்ல தங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கேதான் என்று சொல்கிறார்கள்.

விழாக்கள் :

இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் நடைபெறும் பொங்கல் விழாவில் நல்லதங்காளின் உறவினர் வழித் தோன்றல்களாக வந்தவர்கள், மானாமதுரையில் இருந்து இங்கு வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன், மாதம்தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது.

சிறப்பு :

இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டினால் குடும்ப உறவு பலப்படும், திருமணமாகாத பெண்கள் வந்து மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கைகூடும், வாழ்வில் நலம் ஏற்படும் என்பது இக்கோயில் பக்தர்களின் நம்பிக்கை.

பயண_வசதி :

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கிராமத்திற்குச் செல்ல நேரடியாகப் பேருந்து வசதி இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்துவத்திராயிருப்புக்குச் சென்று, அங்கிருந்து சிற்றுந்து மூலமாக அர்ச்சுனாபுரம் செல்ல முடியும்.


# copy pasted story

 

Post Comment

Friday, June 10, 2016

இறைவி (விரிவான , short & simple விமர்சனம்)

இறைவி  (படம் பார்க்கும் முன் சில எச்சரிக்கைகள்)
--------------------------------------------------------------------------------------------------------------

3 பெண்களின் கதை


இந்த திரைப்படம் :  பார்த்து முடித்த பிறகு  உங்களை ...... 


சுத்த மொக்கை, இழுவை, ஒரு  ------ ம் இல்லை போன்ற அனாயச திட்டல்களை உங்கள் திருவாயிலிருந்து  உதிரச் செய்யலாம்.

அல்லது

ஆண் ஆதிக்க இனம், பெண் அடங்கின இனம் ., கனவர்கள் கொடுமைக்காரர்கள் , பெண்கள் தியாகிகள் , ஆண் என்பவன் துஷ்டன் , பெண் ஓர் இறைவி ,  போன்ற புரிதல்களை  உங்களுக்குள் ஏற்றலாம் 

அல்லது 

பெண்களின் உணர்வுகளை பேசியிருக்கும் அற்புதமான திரைப்படம் என அங்கலாய்க்க வைக்கலாம்.

அல்லது

பெண்ணியம் பற்றிய வெளிப்படையான கருத்துக்களை  பேசியிருக்கும் அதிமுக்கியத் திரைப்படம்  (கொஞ்சம் அதிகமாகவே முக்கிவிட்டது )  , உலக திரைப்பட லெவல் என்றெல்லாம் யாரோ சொல்லிய விமர்சனங்களை கேட்டுவிட்டு படம் பார்க்க கிளம்பினால் நீங்கள் இந்த படத்தை நம்ம புரிஞ்சுக்க மெச்சுரிட்டி இல்லையோ என குழம்ப வைக்கலாம் .

அல்லது

உங்கள் அறிவுக்கும் , ஞானத்திற்கும், ஆற்றலுக்கும் ஏற்ற வகையில் விமர்சனம் என்கிற பெயரில் எதையாவது பேஸ்புக்கிலோ, பிளாக்கிலோ  எழுத வைக்கலாம்

அல் ரைட் ,

படம் பார்த்தவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள் என புள்ளிவிவரம் சிக்கியிருக்கிறது. சில விமர்சக கத்துக்குட்டிகள் விமர்சனம் என்கிற பெயரில் படத்தின் கதையையெல்லாம் கூட  சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். 

இவ்விடம் நீயெல்லாம் திரைப்பட விமர்சனம் எழுதலைனு யார் கேட்டது என மைன்ட் வாய்ஸில் யாராவது திட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது. மன்னிக்க !! எழுதியே ஆக வேண்டுமென முடிவெடுத்து விட்டேன்.

விமர்சனம்: 
--------------------------------------------

மூன்று பெண்கள் - வாழ்க்கையில் அவர்களின் லட்சியங்கள் -அவர்களுக்கு கிடைத்த கணவன்மார்கள் - அவர்களால் உடைந்துபோன அவர்களின் கனவுகள்  - இது தான் இறைவியின் கதை

1. கதை, கதைக்களம், கதாப்பாத்திரங்கள்

 • இது ஒரு multi protogonist  ரக  திரைப்படம்  "ஹீரோ அல்லது ஹீரோயின் மைய " படம் அல்ல. இதனால்  ஹீரோ மைய ( hero-centric ) ரசிக சிகாமணிகளுக்கு படம் சலிப்பூட்டும் வாய்ப்பிருக்கிறது.
 • த்ரில்லர் + காமெடி + ரொமான்ஸ் + கருத்து என மிக்ஸ் ஜூஸ் அடித்திருக்கிறார்கள். ( Mixing  சுவையை பாதிக்காமல் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம் என தோன்றுகிறது) .
 • படம் ஆரம்பிக்கும் போது "பாலச்சந்தர் , சுஜாதா, மற்றும் பாலுமகேந்திரா" ஆகியோருக்கு  நன்றி சமர்ப்பிக்கப் படுகிறது. சந்தேகத்திற்கிடமின்றி திரைப்படத்தில் இம்மூன்று ஆளுமைகளின் படைப்புகளின் தாக்கமும் இருக்கிறது. 
 • நல்ல திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவது கடினம் என்கிற பாலுமகேந்திரா அவர்களின்  கருத்து திரைப்படத்தில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கிறது., எஸ்.ஜே சூர்யா கேரக்டர் இதன் வெளிப்பாடாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது ஆனால் கேரக்டரின் குணாதிசியங்களின் சித்தரிப்பில் நிறைய குறைகள் உள்ளன. முரண்பாடுகள் தென்படுகின்றன. பாலச்சந்தர் திரைப்படங்களின்  வசன வீச்சு பின்பற்றப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா அவர்களின் "ஜன்னல் மலர்"  நாவல் இத்திரைப்படத்திற்கான Partly inspiration ஆக இருந்திருக்கிறது. 
 • Partly inspired by சுஜாதாவின்  "ஜன்னல் மலர்"  நாவல் என டைட்டில் கார்ட் போட்டிருக்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கியமான Part டே அங்கிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பது சொல்லியே ஆக வேண்டிய முக்கியத்தகவல். படத்தின் 7 முக்கிய கதாப்பாத்திரங்களுள் விஜய் சேதுபதி (மைக்கேல்), அஞ்சலி  (பொன்னி) , பாபி சிம்ஹா (ஜகன்) கதாப்பாத்திரங்கள் ஜன்னல் மலரின் உபயம் , பாபி சிம்ஹா வின் திரைப்பெயர்  ஜன்னல் மலர் நாவலில் பிரயோகிக்கப்பட்ட அதே பெயர் .
முக்கிய கதாப்பாத்திரங்கள்:

 •  எஸ்.ஜெ. சூர்யா - அருள் 
 • பாபி சிம்ஹா - ஜெகன்
 • விஜய் சேதுபதி - மைக்கேல் (ராதரவி வீட்டு வேலையாளின் பையன்)
 • அஞ்சலி - பொன்னி ( மைக்கேலின் மனைவி)
 • கமாலினி முகர்ஜி - யாழினி (அருளின் மனைவி)
 • பூஜா தேவரியா - மலர்விழி (மைக்கலின் காதலி) 
 • கருணாகரன் - ரமேஸ் (ஜகன் மற்றும் மைக்கேலின் நன்பன்)
 •  ராதா ரவி - அருள் மற்றும் ஜெகனின் அப்பா
 • வடிவுக்கரசி - அருள் மற்றும் ஜெகனின் அம்மா
 • கதைக்களம் : இது ஒரு Multilayered கதைக்களம் கொண்ட திரைப்படம்,  2 layer கள் முக்கியமானவை 1) ஒரு சிற்பியின் குடும்பமும், அது சார்ந்த சூழலும்., இந்த plot ல் ராதாரவி, வடிவுக்கரசி SJ சூர்யா, கமாலினி பாபிசிம்ஹா போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்கள் 2)  அங்கு பணி புரியும் நபர் ஒருவரின் மகனின் வாழ்க்கை ( இந்த பகுதி முழுதும் சுஜாதாவின் ஜன்னல் மலரின் சாயல் )  விஜய் சேதுபதி, அஞ்சலி, பூஜா தேவ்ரியா முக்கிய கதாப்பாத்திரங்கள்.  இந்த இரண்டு plot களையும் இணைக்கும் கதாப்பாத்திரம் பாபி சிம்ஹாவாகிய ஜெகன்.

2.காட்சியமைப்புகள், திரைகதை,வசனம்

 • திரைகதை : சொதப்பலான திரைகதையமைப்பு . திரைகதையில்  எதிர்பார்க்காத திருப்பம் ஒன்று  வைக்கப்படிருந்தாலும் கூட  திரைகதையில்  நேர்த்தி (perfectness ) missing. தேவையற்ற காட்சிகள் ஒன்றிரண்டு இருக்கின்றன கத்தரி போட்டிருந்திருக்கலாம். 
 • வசனம்:  குறியீடு  வசனங்கள் நிறைய வருகின்றன, க்ளைமேக்ஸில் எஸ்.ஜே சூர்யா பேசும் வசனம் hats off சொல்ல வைக்கிறது. அதேபோல திருமணமான அஞ்சலி (பொன்னி) கேரக்டரிடம் பாபிசிம்ஹா (ஜெகன்)  ஐ லவ் யூ சொல்லும் போது.. "எனக்கு ஒரே ஒரு தடவ கல்யாணம் ஆச்சு, ஒரு கொழந்த இருக்கு ஆனா என்னை யாரும் லவ் பண்ணதில்ல நீதான் பர்ஸ்ட், ... யோசிச்சி சொல்றேன்" என அஞ்சலி கேரக்டர் பேசும் வசனம் சிலிர்க்க வைத்தது. வசனங்கள் படத்தின் ப்ளஸ்.
 • காட்சியமைப்புகள்:  அருமையான காட்சியமைப்புகள் .No Comments. 
 • ரசித்த காட்சிகள்:   மலர்  கேரக்டரில் வரும் பூஜா தேவரியா முகம் முழுக்க வண்ணங்கள் பூசியபடி படுக்கையில் கிடந்த காட்சி , ஜன்னலோரமாய் அஞ்சலி அமர்ந்திருந்த காட்சி, கமாலினி - சூர்யா காதல் காட்சிகள்,  மழை காட்சிகள் ,  போன்றவைகளை மிக ரசித்தேன் . 

3. இசை:

இசை:  பின்புலம் ( BGM) - அருமை , படத்தில் இடையிடையே இளையராஜாவின் இசை தூவப்பட்டிருக்கிறது !. இரண்டு,மூன்று இடங்களில் கதையோடு இழையோடும் மழைத்துளி சத்தம் அழகு .

பாடல்கள் :   சொல்லத்துடிக்குது மனசு , மனிதி , காதல் கப்பல் போன்ற பாடல்கள் கதையோடு ஒன்றி இருக்கின்றன, இசையும் அருமையாக இருக்கிறது.  படத்தின் துவக்கத்தில் வரும் ஒன்னு ரெண்டு பாடல் வெறும் சத்த கூச்சல் (Audience Attraction pulling காக ), ஒத்தையிலே நிக்கிறேன்டி..  என்ற ஜெயில் பாடல் பாய்ஸ் திரைப்படத்தில் வரும் ஏ.ஆர் ரஹ்மானின் "ஜெயிலே ஜெயிலே சென்ட்ரல் ஜெயிலே .. " இசை தழுவல் போல ஒலிக்கிறது.

4. மதிப்பெண்

( + )  கதை, காட்சியமைப்பு,வசனம், BGM, கருத்து, கதாப்பாத்திரங்களின் தேர்வு மற்றும்  அவர்களின் நடிப்பு,.

( - ) சொல்லப்பட்டிருக்கும் விதம், திணிக்கப்பட்டிருக்கும் கருத்து, திரைகதை நேர்த்தி, தேவையற்ற காட்சிகள் (Scenes). 

கடற்கரை மதிப்பெண் :  10 க்கு 5  


5. ஒன் லைன் விமர்சனம் 


 •  இறைவி:-   குறியீடு பின்குறிப்பு: இந்த படம் பெண்கள் பற்றின படம்னு, பெண்ணியம் பேசும் படம்னு நிறைய பேர் சொல்றாங்க , எனக்கு அப்படி எந்த வெளக்கெண்ணயும் தோணல. டைட்டிலுக்கு கீழே  சில WOmen களின் கதைனு  சப்டைட்டில் ஒன்னு வச்சிருக்காரு  டைரக்டரு இதுவும் கூட குறியீடு தான் னு நெனக்கிறேன். மத்தபடி எல்லா WOmen களும், MEN களும், WOMEN களும் பார்க்கவேண்டிய படம் தான்.

 

Post Comment

உங்களுக்கு மிக பிடித்த புத்தகங்கள் என்ன !, ஏன் அவை பிடிக்கும் ?


 கீழ்காணும்  படிவத்தை நிரப்புங்கள்

தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகளுக்கு "மின்புத்தகங்கள்" பரிசளிக்கப்படும் .இந்த தகவல்கள் புள்ளி விவரங்களுக்காக மட்டுமே சேகரிக்கப்படுகிறது. தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படமாட்டாது என உறுதியளிக்கப்படுகிறது.

 

Post Comment