Tuesday, September 29, 2015

கணினிக்குத் தமிழ் கற்றுக்கொடுப்போம் !

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
- மகாகவி பாரதிட்டுத்திக்கும் சென்று எல்லாக் கலைகளையும் தமிழுள் சேர்த்தால் தமிழ் சாகாவரம் பெற்று சாகாது நிலைத்திருக்குமெனச் சாத்திரமுரைக்கிறார் பாரதி.
மெல்லத் தமிழ் இனி சாகுமெனக் கூறிய பேதையொருவனின் வாக்கைப் பொய்ப்பிக்கத் தமிழ்த் தாய் தமிழர்களை நோக்கி அறைகூவல் விடுத்து கூறுவது போலப் பாரதியார் மேற்காண் வரிகளைத் தன் கவிதையொன்றில் குறிப்பிடுகிறார்.

தற்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் யுகத்தைக் கலியுகம் என்று குறிப்பிடுவதைவிடக் கணினி யுகம் என்று குறிப்பிடுவது மிகப்பொருத்தமாக இருக்கும். எங்கும் எதிலும் கணினியின் பயன்பாடு. எல்லாத் திக்குகளிலும் பரவிக்கிடக்கிறது கணினியின் ஆதிக்கம்.

இன்னொரு முக்கியமான விசயம், தற்காலத்தில் எல்லோருக்கும் துளியளவேனும் கணினியின் பரிட்சயம் வாய்த்திருக்கிறது.

கரன்ட் பில்ல நெட்ல கட்டு!எனப் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத என் அம்மாச்சி சொல்கிறார். படிப்பறிவு அறவே இல்லாத பலருக்கும் கூடப் பேஸ்புக், வாட்ஸாப், இணையப் பயன்பாடு இவற்றைப் பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது. நம்முள் தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்களுக்குக் கூட இணையத்தைத் தமிழில் கையாள தெரிந்திருக்கிறது. கையடக்கச் சமர்த்து (Smart gadgets ) கருவிகளைக் கையாளும் சாமர்த்தியம் இருக்கிறது. இணையத்தில் அவர்கள் செய்திகள் வாசிக்கிறார்கள், யூட்யூபில் காணொளி பார்க்கிறார்கள், தமிழ் வலைப்பூக்களை வாசிக்கிறார்கள் , வலைப்பூக்கள் எழுதவும் செய்கிறார்கள்.

கணினி யுகத்தில் தமிழ்:

உலகின் இன்னபிற மூலைகளில் இருந்த இனங்கள் காட்டுமிராண்டிகளாகக் காலம் கழித்துக்கொண்டிருந்த காலத்திலேயே கவிதை, இலக்கியம், இலக்கணம், என வளர்ந்த மொழியாய் வலம் வந்த மொழி நமது. அறம்,பொருள்,இன்பம் என மறை வகுத்து வாழ்ந்த மக்கள் நாம்.

நம் தமிழ் மொழிக்கு ஆயுள் ரொம்பக் கெட்டி ! நம் தமிழை அழிந்துவிடும் நிலையில் இருக்கும் அரிய மொழி என்று யாராவது கூறினால் எனக்கு அவ்வளவு கோபம் வரும் . உலகில் தமிழ் பேசுபவர்களின் மொத்த எண்ணிக்கை 68,776,460 என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறார்கள். கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம் !. உலக மக்கள் தொகை 7.3 பில்லியன் (73 க்குப் பக்கத்தில் எட்டு பூஜ்ஜியங்கள்). தமிழர்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் தோராயமாக 0.9 சதவீதம் வருகிறது. தமிழ் அழிந்துபோகும் என்பதில் எனக்கு அபிப்ராயம் இல்லை.

கடல்கோளினால் முற்றிலும் அழிக்கப்பட்டபின்பும் கூட அழியாது அவனியில் இருக்கிறது, மூவாயிரம் வருடத்திற்கு முன் எழுதின தமிழ் புத்தகங்களையெல்லாம் இன்றும் கூடப் பத்திரமாக வைத்திருக்கிறோம். (இணைய நூலகங்களிலும் !). ஆண்டாண்டு காலத்திற்கும் அழியாதிருக்கும் அபூர்வ வரம் நம் தமிழ் மொழிக்கு வாய்த்திருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியும் தமிழும்?

தொழில்நுட்ப வளர்ச்சியால் தமிழ் நசிந்து வருகிறது என்று நம்மில் ஒருசாரார் சொல்லிக்கொண்டு திரிகிறோம், அதேபோல கணினி வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஆங்கிலம் மீதான மோகத்தை அதிகரித்திருக்கிறது , தமிழ் மீதான பற்றைக் குறைத்துள்ளது எனவும் சொல்கிறோம்..

 சமூகத்தின் இத்தகைய சிந்தனை போக்குகளால் தொழில்நுட்பம் கற்றவர்கள் தமிழை ஒதுக்கித்தள்ளுறார்கள் என்கிற கருத்தும் பரவலாக பரவியுள்ளது.

இவையெல்லாம்  உண்மைதானா !?

தமிழின் வாசனையே இல்லாத பன்னாட்டு நிறுவனப் பணிகளில் பணிபுரியும் பலரும் கூட இன்று தமிழில் வலைப்பூக்கள் எழுதுகிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் அயல் தேச தமிழ் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்கள். (ஆங்கிலமே உயர்வு என்று சொல்லி தமிழைத் தரக்குறைவாக மதிப்பிடும் ஒரு சில அரைவேக்காட்டு ஆங்கிலச் சூரப்புலிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள், இருந்தாலும் தமிழ் பற்றுடைய தொழிநுட்பவியலாளர்களால் அவர்களின் ஒளி மங்கி விடுகிறது) .

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் , நம் தமிழ் மொழிக்கு கணினி எழுத்துருக்கள் (Fonts) உருவாக்கி, அதற்கு பிரத்யேக இருமக்குறிகளை சித்தரித்து செந்தமிழை கணினிக்குள் கொண்டுவந்தது தமிழ் பற்று கொண்ட ஒரு தொழில்நுட்பவியளாளரின் முயற்சி தானே !

ஒரு காலத்தில் தமிழை கணினிகள் புரிந்து கொள்ளும் வடிவில் குறிமாற்றம் (Encoding) செய்வதில் பல குளறுபடிகள் இருந்திருக்கின்றன, TSCII , TAM, TAB, ஸ்ரீலிபி, இன்டோ-கோடிங்க் .. இப்படி பல்வேறு கோடிங்க் முறைகளை பயன்படுத்தி தமிழை கணினிக்குள் உள்ளீடு செய்திருக்கிறோம்!

ஒரு கணினியில் ஒருவகை குறிமாற்ற முறையில் எழுதப்பட்ட தமிழ், அத்தகைய குறிமாற்றமுறை (Encoding) இல்லாத வேறொறு கணினியில் கட்டமும், வட்டமுமாக, தமிழாக அல்லாமல் வேறு ஏதோ ஒன்றாக தெரிந்திருக்கிறது. அதேபோல அத்தகைய encoding  அறியாத அச்சுப்பொறியில் அவ்வெழுத்துக்கள் அச்சாகாது.

( ஒருவகையாக இந்த குளறுபடிகளெல்லாம் இப்போது குறைந்திருக்கின்றன. :) )

இப்படியாக பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்களை குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற்று இன்றைக்கு  எல்லாக் கணினிகளிலும் நாம் படிக்கும் (TACE-16 Unicode encoding  )  தொழில்நுட்பமாகக் கொண்டுவந்தது தொழில்நுட்பம் கற்ற தமிழர்களின் முயற்சி தானே !

கல்வெட்டுக்கள், களிமண் வார்ப்புகள், ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், காகிதங்கள் எனத் தனது எழுத்துப்பதிவை பதித்த தமிழ் இன்று சிலிக்கன் சில்லுகளுக்குள் ஈரிலக்க குறிமுறையில் (Binary Encoding) பதியப்படுகிறது.

தமிழ் இலக்கியங்கள், புத்தகங்கள், அகராதிகள், நிகண்டுகள் எனத் தமிழ் மொழி இலக்கமுறையாக்கதின்பாற்பட்டு (Digitalization) கணினிக்குள் வந்துவிட்டது !

இப்போதைய காலகட்டத்தில்..

கணிப்பொறியை தமிழ் மொழி இடைமுகத்தின் (Tamil System Interface) மூலம் இயக்கக்கூடிய இயக்குத்தளங்கள் (Operating Softwares) வந்திருக்கின்றன, தமிழில் இயங்கக்கூடிய கையடக்கக் கருவிகள் வந்திருக்கின்றன.

கணினிக்குத் தமிழ் கற்றுக்கொடுத்து , தமிழ் மூலம் கணினிக்கு நிரல் எழுதும் (கட்டளை இடும்) எழில்” , "ஸ்வரம்" என்கிற கணினி மொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்ப உலகத்திற்குள் தமிழ் தனது காலடித் தடத்தைப் பதித்து மெல்ல நடைபயிலத் துவங்கியிருக்கிறது.

ஊர் கூடி தேர் இழுப்போம் !
(கணினித்தமிழ் வளர்ச்சியில் நம் பங்கு)

கணினித் தமிழ் வளர்ச்சியில் நம்மால் பங்களிக்க முடியுமா ?

கட்டாயம் முடியும்.

தமிழ் விக்கிப்பீடியாவில்  கட்டுரைகள்  இன்னும் நிறைய தகவல் எழுதப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள், அதை ஒரு முழுமையான தகவல் களஞ்சியமாக மாற்ற ,  நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும்  வேண்டும். அதில் யார் வேண்டுமானாலும் பெயரை பதிவு செய்து கொண்டு கட்டுரை எழுதலாம், நிபுனர்கள்,அறிஞர்களின் சரிபார்ப்புக்குப் பின் நம் தகவல்கள் அங்கீகரிக்கப்படும்,

 உதாரணமாக உங்கள் ஊர் ஒரு உலகறியா கிராமமாக இருந்து அதற்குத் தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கம் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், அதை நீங்களே தகவல் சுத்தமாகத் தெளிவான சான்றுகளோடு எழுதலாம். இது போல இன்னும் விடுபட்ட பல விக்கிப் பக்கங்களை நாம் எழுதலாம். அதேபோல பிழையான செய்திகள்,தகவல்கள் நம் கண்ணில் படக்கூடுமானால் அதை திருத்தி எழுதலாம். இப்பணியில் கற்றறிந்த சான்றோர் பலர் தங்கள் பங்களிப்பை அளித்திருக்கிறார்கள் இன்னும் அளிக்கப்பட வேண்டும்.

பத்திரிக்கைகளில் நம் படைப்புகளைப் பிரசுரம் செய்யும் முன் அதன் பதிப்பாசிரியர்க்குழு அதிலிருக்கும் பிழைகளைச் சரிபடுத்திப் பின் வெளியிடும் ஆனால் நாமே ஆராய்ச்சி செய்து, நாமே சிந்தித்து, நாமே தட்டச்சுச் செய்து, நாமே எழுதும் வலைப்பூக்களில் வெளியிடும் படைப்புகளில் அந்த வாய்ப்பு இல்லை . ஆக இயன்ற வரை தமிழ் மொழியை இணையத்தில் பிழையின்றிப் பதிவு செய்வோம்.

வெறும் எழுத்துப் பதிவுகளோடு மட்டும் நின்றுவிடாது ஒளி,ஒலி வடிவத்திலும் நல்ல தமிழ் படைப்புகள் இணையத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.


தொழில்நுட்பக்கல்வி தமிழ் வழியில் புரிகிற வடிவில் , நடைமுறையில் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் சொல்லித்தரப்படவேண்டும். பாரதியார் சொல்வது மாதிரி அயல் தேச மொழியினர் கண்ட நுட்பங்களை, அறிவை தமிழில் சேர்க்க வேண்டும். படைப்பிலக்கியப் பங்களிப்போடு நிறைய அறிவியல் புத்தகங்களும் எழுதப்பட வேண்டும். (தெரிந்து., தெரியாதவர்கள்., தெரிந்து கொள்ளும் விதத்தில் எழுதப்பட வேண்டும்)

விரலி, பணிபட்டை, கோப்பகம்... எனத் தமிழில் ஆங்கிலக் கலைச்சொற்களைத் தமிழ்ப்படுத்திச் சேர்ப்பதில் மட்டும் ஆர்வம் காட்டுவதை விடுத்து தொழில்நுட்ப கருவிகளைத் தமிழர்கள் கண்டுபிடிக்க வேண்டும் ,
அவைகளுக்குத் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் . தமிழ் உலகெங்கும் உச்சரிக்கப்படச் செய்ய வேண்டும்.

ஆங்கிலம் என்பது வெறும் மொழி அறிவே ! அது பிற அறிவியல் நுட்பங்களைக் கற்க உதவுகிறது. தமிழில் பிற நாட்டினர் கண்டறிந்த அறிவுசார் கலைகளைக் கொணர்ந்து வந்து தொழில்நுட்பம் கற்க ஆங்கிலம் அவசியம் என்கிற மொழிக்கட்டுப்பாட்டை உடைத்தெறிய வேண்டும்.

எதிர்காலத் தமிழ் கணினி:

எதிர்காலக் கணினிகள்  என்னவெல்லாம் செய்யும் !!

அவை தமிழ் படிக்கும். தமிழ் பேசும் , தமிழைப் புரிந்து கொள்ளும்.

தமிழ் மொழி ஆங்கிலம் போல அசையற்ற மொழி கிடையாது. So என்றால் ஸோ, Me என்றால் மீ, Some என்றால் ஸோமீ கிடையாது சம் என்று கேடுகெட்ட ரகத்திலான விதிகள் கிடையாது, ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான உச்சரிப்பு முறை உண்டு, மிகத்தெளிவான புணர்ச்சி விதிகள், இலக்கண விதிகள் உண்டு, ஆகக் கணினிக்குத் தமிழ் வாசிக்கக் கற்றுக்கொடுப்பது எளிதான காரியமாகத்தான் இருக்கும் என நம்புகிறேன்.

புத்தகங்களை நகலெடுத்துக் கணினியில் ஏற்றி அதை எழுத்தாக மாற்றும் OCR மென்பொருட்கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் நம் கையில் இருக்கும் ஒரு புத்தகத்தைக் கணினி வாசித்துக்காட்டும், பார்வை அற்றவர்களுக்கு வார்த்தைகளை வாசித்துக்காட்டி அவர்கள் படிக்க உதவி செய்யும். அவர்கள் சொல்லும் வார்த்தைகளை எழுத்துக்களாக்கும் ஒலிவார்ப்பு மென்பொருள்கள் (Speech to text converter) அவர்கள் எழுதுவதற்கு உதவி செய்யும்.

எதிர்காலத்தில் Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு சித்தாந்தம் மூலம் கணிப்பொறிக்கு நாம் தமிழ் கற்றுக்கொடுப்போம். அடம்பிடிக்காமல் அந்த இயந்திரக்குழந்தை நம்மிடமிருந்து , கற்றுக்கொள்ளும்.

இலக்கிய மொழி இன்று இலக்க மொழியாகி (Digital Language) இணையம் வரைக்கும் வந்திருக்கிறது.இன்னும் இது வளரும் என வாழ்த்துவோம்

                             தரணியெங்கும் தழைத்தோங்கட்டும் தமிழ் !


உறுதிமொழி:

கணினிக்குத் தமிழ் கற்றுக்கொடுப்போம் " எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்.
இப்படைப்பு, வகை-(1) கணினியில் தமிழ் வளர்ச்சி - கட்டுரைப் போட்டி
(கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரை) வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காக எழுதப்பட்டது

உதவிக்குறிப்புகள் :

புள்ளிவிவரங்கள்:

தமிழ் மென்பொருட்கள் பட்டியல்:

தமிழ் இலக்கண விதிகள்:
http://tech.neechalkaran.com/p/tamil-grammar.html

சந்திப்பிழை திருத்தி:

http://dev.neechalkaran.com/p/naavi.html

தமிழ் இயக்குத்தளங்கள்:


 

Post Comment