Sunday, December 01, 2013

பெண் வடிவில் பூக்கும் அதிசய மலர் !!


     சில மாதங்கள் முன்பு அலுவலகத்தில் பழைய மாத இதழ்களை புரட்டிக்கொண்டிருந்தேன்,அதில் ஒன்றில் கீழ்காணும் படத்துடன் - நாரிலதா மலர் - பெண் வடிவில் இமயமலைப்பகுதிகளில் மலரும் அதிசய மலர்.என்று இருந்தது !!


     கவிதைகளிலும்,திரைப்பட பாடல்களிலும், கொஞ்சல்களின் போதும் பெண்களை செல்லமாக பூவே,மலரே என வர்ணித்துச் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம், அட ! ஒரு பூவே பெண் வடிவில் பூத்திருக்கிறதா.

     இந்த செய்தியை வாசித்தபோது நானும் இப்படித்தான் ஆச்சரியப்பட்டேன்.அதன் பின்பாக சில நிமிடத்திற்குள் "அட இப்படி ஒரு பூ இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று என் அறிவு அசரீரி மனதிற்குள் சத்தம் போட்டது"... 
    "மெய்ப்பொருள் காண்பதறிவு " அல்லவா !




    பெண் வடிவ மலர்: (நாரிலதா மலர்) ஒரு அலசல் :



     இந்த மலர் நாரி ஃபூல்,நாரிலதா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது,இதனை ஹிந்தி மொழியில் பிரித்து போட்டு அர்த்தம் கொள்ளும்போது நாரி - பெண், லதா- சிறு கொடி வகை தாவரம், ஃபூல்-பூ என்று அர்த்தங்கள் கிடைக்கின்றன.

     இந்த மலர் இந்தியாவின் இமயமலையின் மலையோர பகுதிகளிலும்,இலங்கை,தாய்லாந்து போன்ற நாடுகளிலும் மலர்வதாக சொல்லப்படுகிறது, லியதம்பர மாலா(Liyathambara Mala)
     என்று இலங்கை யிலும், நரீபொல் (nareephol)என்று தாய்லாந்திலும் இந்த மலருக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

    இன்னொரு முக்கியமான விசயம் இந்த நாரிலதா மலர் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்குமாம் !

    நம்ம பாபாஜி மாதிரியான ரிஷிகள் இமயமலையில் தவம்,தியானம் செய்யும்போது அவர்களின் கவனத்தை கலைக்க இந்த பெண் வடிவ மலர் மலர்வதாக கர்ண பரம்பரை கதை  (செவி வழிக்கதை) ஒன்று சொல்லப்படுகிறது.

    உண்மையிலேயே இப்படியோரு மலர் இருக்கிறதா ?

      இணையத்தில் இந்த மலர் பற்றி தேடினால் , உண்மை என்றும் "பொய்" என்றும் இரண்டு பதில்களும் கிடைக்கின்றன.(அட இன்னாப்பா கன்பீஸ் பண்ற என்று கடுப்பாகாதீர்கள் !)

      இப்படியொரு பெயரில் மலர் ஒன்று இருக்கிறது என்பது உண்மை,ஆனால் இதன் பெயரில் எங்கள் அலுவலக மாத இதழில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படமும்,பெரும்பாலான இணையத்தளங்களில் இருக்கும் படங்களும் பொய்யானவை.

     இணையத்தில் நாரிலதா மலர் என்ற பெயருடைய மலரின் பெயரில் போலியான புகைப்படம் பரப்பப்பட்டுள்ளது,பல தளங்களில் இந்த போலிப்படமும் வியப்புக்கட்டுரையும் தான் உள்ளன,ஒன்றிரண்டு ஆங்கில இணையத்தளங்கள் விளக்கம் தருகின்றன, தமிழில் நிறைய வலைப்பூக்களில் இந்த மலரின் போலியான படத்தை பகிர்ந்து ஆச்சரியக்குறியோடு சில வரிகளையும் டைப்பி வைத்திருக்கின்றனர்.
    விக்கிபீடியாவில் நாரிபொன் என்கிற பெண் வடிவ பழத்தைப் பற்றின கட்டுரை தான் இருக்கிறது.  நரிலதா மலர் பற்றின கட்டுரை முன்பு இருந்ததாகவும் குழப்பத்தின் காரணமாக அது நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.


    போலிப் புகைப்படமும் நாரிலதா மலரும்:


    1.லதா என்றால் கொடி என்று ஹிந்தி மொழியில் அர்த்தம், இது மரத்தில் மலர்வதாக காண்பிக்கப்பட்டுள்ளது
    2.மலருக்கே உரித்தான இதழ்,மகரந்தம் என்ற எந்த பாகமும் தட்டுப்படவில்லை
    3.ஒரு மலரில் மலர்க்காம்பு தலையில் இணைந்துள்ளது,சிலதில் பின்புறத்தில் இணைந்துள்ளது.
    4.அச்சில் வார்த்த மாதிரி அனைத்தும் ஒரே மாதிரி வடிவில் இருக்கின்றன.

     நீங்கள் இந்த படத்தை உற்றுப்பார்க்க பார்க்க உங்களுக்கு இப்படியாக இன்னும் சிலபல விசயங்கள் தட்டுப்படும் !! 

    இந்த படம் போட்டோஷாப் எடிட்டிங்க் ஆகவோ, அல்லது மரத்தில் பொம்மைகளை ஒட்டிவைத்து எடுக்கப்பட்ட புகைப்படமாகவோ இருக்கலாம்.
     ஜப்பானில் தர்பூசணி பழங்களை வளரிளம் பருவத்தில் அவைகளை சதுர வடிவ டப்பாக்களில்,அடைத்துவிடுகிறார்கள்,இவை வளரும் போது டப்பாக்களின் எல்லைகளுக்குள்ளாக அடைபட்டு சதுர வடிவிலேயே வளர்கின்றன,அடுக்கி வைக்க, ஏற்றுமதி செய்ய எளிதாக இருக்கும் என்று இப்படிச் செய்கிறார்களாம்,இந்த படத்தில் இருப்பதும் இப்படியானதொரு எல்லைகளுக்குட்பட்டு வளர்ந்த பழமாக கூட இருக்கலாம்.

    நாரிலதா மலரின் உண்மைப் புகைப்படம் !



    இந்த மலர் ஆர்கிடேசி(Orchidaceae) மலர் குடும்பத்தில் ஹெபனேரியா தொகுப்பைச் சேர்ந்தது ,(Genara of Habenaria).

    கொசுறு தகவல்:
    பெண் வடிவ பழம்:


    சில இணையத்தளங்களில், மேலே நீங்கள் பார்த்த விடியோவில் இருப்பது மாதிரியான ஒரு ஜந்துவை காட்டி இதுதான் நாரிலதா மலர் என சத்தியம் செய்யாத குறையாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
    விடியோவில் அவர்கள் குறிப்பிடும் ஜந்து நரிபொன் அல்லது மக்காளிபொன் என்று தாய்லாந்து பாஷையில் அழைக்கப்படும் ஒரு பழம்  (தாய் பாஷயில் பொன் என்றால் பழம் ).
    தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்-ற்கு அருகேயிருக்கும் புத்த மடாலயத்தில் இந்த பழம் இரண்டு வைத்து பராமரிக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
    தாய்லாந்து புத்த மடாலயம்

    புத்த மத புராணத்தில் இந்த பழத்தின் இருப்பை பறைசாற்றும் பழங்கதையொன்று காணப்படுகிறது. 


    ' பழ' ங்கதை :

    பெண் வடிவ பழம் - நரிபொன்
    இந்த கன்னி ரூப கனி பற்றின கதை புத்த மத நூலான வசந்தரா ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    (புத்தரின் முற்பிறப்புகள் அதாவது முந்தைய புத்தர்கள் பற்றின கதைகளை ஜாதக கதைகள் என புத்தமதத்தில் குறிப்பிடுகிறார்கள்).
    விபஸ்ஸி புத்தரின் காலத்தில் புசத்தி என்ற பெண் வாழ்ந்து வாந்தாள். அவள் புத்தருக்கு சந்தனத்தை அர்ப்பணித்து வணங்குவது வழக்கம். ஒரு நாள் அவள் விபஸ்ஸி புத்தரிடம் அடுத்த புத்தன் தனது வயிற்றில் பிறக்க வேண்டும் என வரம் கேட்கிறாள். அவரும் அருள்கிறார்.

    அதற்கடுத்தப் பிறப்பில் அவள் இந்திரனின் மனைவியாக பிறக்கிறாள், அதற்கடுத்தப் பிறப்பில் உயர்குடிபெண்மணியாக அரசகுலப் பெண்ணாக புசத்தி என்கிற அதே பெயரிலேயே அவதரிக்கிறாள். சஞ்சயன் என்கிற அரசனுக்கு பட்டத்து ராணியாகிறாள். அவளுக்கு கொடுத்த வரத்தின் படி புத்தக்கடவுள் போதி சத்துவர் புசத்தியின் வயிற்றில் பிறக்கிறார். இளவரன் வசந்தரா என்கிற பெயரில் வளர்கிறார்.

    இளவரசன் வசந்தரனுக்கு தேவி மாத்ரி என்கிற பெண் மணம் செய்து வைக்கப்படுகிறாள். இளவரசன் வசந்திரனின் குடும்பத்தை பாதுகாக்க இந்திரன் இமயமலைக்கு அருகே ஹிமாவனம் என்கிற கானகத்தை நிர்மாணித்து வசந்திரனை அவனது மனைவியுடன் குடியமர்த்துகிறான்.

    கானகத்தில் இருக்கும் கந்தர்வர்கள், காம எண்ணம் கொண்ட தவமுனிகள், இன்னபிற துஷ்டர்களிடமிருந்து காக்க பதினாறு மக்காளிபழ மரங்களை தன் மந்திர சக்தியால் உருவாக்குகிறார். அந்த மரத்தில் அச்சு அசலாக பெண் வடிவில் பழங்கள் காய்த்ததாம் !  மோகவயப்பட்ட முனிகளோ கந்தர்வர்களோ, இன்ன பிறர்களோ அந்த கனிகளின் கவர்ச்சியால் கவரப்பட்டு அதனை கவர்ந்து சென்று அதனோடு புணரும்போது அவர்கள் 4 மாத நெடுஉறக்கம் ஆட்கொள்ளுமாம், துயில் கலைந்து எழுகிற போது அவர்கள் வலிவு குறைந்தவர்களாக இருப்பார்களாம் . வலிவில்லாத அவர்களால் வசந்திரனின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படாது!
    உலகின் முதல் Sex Toy :) !!

    இந்த பழங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கனியவில்லை மாற்றாக தேவி மாத்ரி கானகத்தில் பழங்களோ, பூவோ பறிக்க வெளியே செல்லும் போது இந்த மரங்களில் மக்காளி பழங்கள் கனிந்தனவாம். ஒரு கிளையில் 5 கன்னி கனிகளாக கனிந்த இந்த கனிகளுக்கு கனிந்த மூன்றாம் நாளில் மாதவிடாய் ஏற்படுமாம். ஏழாவது நாளில் காய்ந்து சுருங்கிப்போகுமாம்.
    அப்படியாக காய்ந்து சுருங்கிப்போன கனிகள் தான் மேற்சொன்ன தாய்லாந்தின் புத்த மடாலயத்தில் இருப்பது என்றும் சொல்லப்படுகிறது.


    பதினாறு வயது இளம்பெண்ணின் உருவம், தங்கநிற கருமணிகளுடன் கூடிய நீலவிழிகள், கரிய கூந்தல் , கண் பறிக்கும் அழகு, நிர்வாண மேனி என காமுற்றவர்களை கவரும் சகல தகுதிகளுடன் கனிந்த நாள் முதலாய் மரம் முழுக்க ஆடிப்பாடி ஆர்ப்பரித்து அழைப்பு விடுத்து. அழகில் மயங்கி அடைபவர் வலிமையை அழித்தனவாம் .இந்த மரங்கள் இமயமலையின் ஹிமவன பிரதேசத்தில் இன்றளவும் இருப்பதாகவும், தவவலிமை கொண்டவர்களால் மட்டுமே அதை காண முடியும் என்றும் புத்த மத கொள்கையாளர்கள் நம்புகின்றனர்.


    உண்மையை உண்மையென்றும் உண்மையல்லாதவைகளை உண்மையல்லாதவை என்றும் தெரிந்துகொள்.
                                           -கௌதம புத்தர்

       ------------------------------------------------------------------------------------------------
        பின்னிணைப்புகள்:

        உதவிய கட்டுரைகள்: 
        http://www.hoax-slayer.com/nareepol-tree.shtml
        https://en.wikipedia.org/wiki/Nariphon
        http://waynedhamma.blogspot.in/2008/11/origins-of-makaliporn.html
        http://www.pseudoparanormal.com/2011/04/naree-pon.html
        http://waynedhamma.blogspot.in/2009/05/amazing-makkaliporn-of-wat-prangmuni.html

      -----------------------------------------------------------------------------------------------------------------

Labels: , , ,

17 Comments:

At Sun Dec 01, 11:09:00 pm , Blogger வெங்கட் நாகராஜ் said...

நல்ல அலசல்..... நர் - நாரி! நாரி என்றால் பெண்...

த.ம. 1

பூக்களின் படங்கள் அழகு.

 
At Mon Dec 02, 02:28:00 am , Blogger Seeni said...

mmm...
nalla alasal...

itharku munnaal valai poovil paarththa ninaivu..
naan nampumpadiyaakavum athu illai...

 
At Mon Dec 02, 05:12:00 am , Blogger கரந்தை ஜெயக்குமார் said...

அழகுப் படங்கள்

 
At Mon Dec 02, 07:48:00 am , Blogger Vijayan Durai said...

சரிசெய்து விட்டேன், நன்றி வெங்கட் அண்ணா

 
At Mon Dec 02, 07:50:00 am , Blogger Vijayan Durai said...

ஆம் சீனி அண்ணா ! கருத்துக்கு நன்றி!

 
At Mon Dec 02, 08:14:00 am , Blogger Priya said...

நல்ல பதிவு... நாரிலதா மலர்களின் முதல் புகைப்படங்கள் பார்த்த உடனேயே அவை போலி என்றே சொல்ல வைக்கின்றன... அவற்றின் உண்மையான புகைப்படங்களையும் இங்கு பகிர்ந்தது சிறப்பு...மற்ற தகவல்களும் படங்களும் அருமை... வாழ்த்துக்கள்...

 
At Mon Dec 02, 08:58:00 am , Blogger வெற்றிவேல் said...

அழகான படங்களுடன் கூடிய தெளிவான விளக்கங்கள் நண்பா...

தொடருங்கள்...

 
At Mon Dec 02, 09:33:00 am , Blogger திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பாக இருக்கிறது... நன்றி...


கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

 
At Mon Dec 02, 10:32:00 pm , Blogger Vijayan Durai said...

வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ப்ரியா அக்கா :)

 
At Tue Dec 03, 05:39:00 am , Blogger அருணா செல்வம் said...

நாரிலதா.... என்பது கற்பனையான மலராகத் தான் இருக்கும்.

இப்படி ஒரு மலரைக்குறித்து எந்த ஒரு புத்தகத்திலும் படித்ததாக நினைவில் இல்லை.
கேள்வியும் பட்டதில்லை. ஆனாலும் அந்த மலர் ஒரே அளவாகவும் மொட்டு, மலர்ந்தது என்று எதுவும் இல்லாமல் ஒரே சீராக அழகாகச் செய்யப்பட்டு இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.

 
At Tue Dec 03, 06:35:00 am , Blogger Vijayan Durai said...

நன்றி சார் :)

 
At Tue Dec 03, 06:39:00 am , Blogger Vijayan Durai said...

நன்றி நன்பா :)

 
At Tue Dec 03, 06:46:00 am , Blogger Vijayan Durai said...

ம் ! கருத்துக்கு நன்றிகள் !, தங்களின் கட்டுரைப்போட்டி பற்றிய பதிவை பார்த்தேன், தலைப்பினை அறிய காத்திருக்கிறேன் ! போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 
At Tue Dec 03, 06:59:00 am , Blogger Vijayan Durai said...

ஆமாம் ! முதல் படத்தில் காட்டப்பட்டுள்ள நாரிலதா மலர்கள் உண்மை இல்லை,ஆனால் இந்த மலர் உண்மை என்றே சொல்லப்படுகிறது ! கட்டுரையின் இறுதியில் இருக்கும் படத்தை பார்த்தீர்களா. :) //ஆனாலும் அந்த மலர் ஒரே அளவாகவும் மொட்டு, மலர்ந்தது என்று எதுவும் இல்லாமல் ஒரே சீராக அழகாகச் செய்யப்பட்டு இருக்கிறது.// ம்ம் !
//நாரிலதா.... என்பது கற்பனையான மலராகத் தான் இருக்கும்.// :) நம் தமிழ் இலக்கியங்களில் மனோரஞ்சித மலர் (மனம் விரும்பிய மணம் வீசும் மலர்),அனிச்சம் (மோப்பக்குழையும் மலர்) போன்ற மலர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன, இப்போதைய காலகட்டத்தில் இவைகளை வாசிக்கும் போது Absurd அகத்தான் தோன்றுகின்றன இவை ,இவை கற்பனைகளாக இருந்திருக்குமோ என்றே நாம் நினைக்கிறோம் .நாரிலதா என்பதை தமிழில் மொழிபெயர்த்தால் "பெண்கொடி" என்ற பெயர் கிடைக்கிறது,இது பெண் வடிவில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ! இம்மலர் கற்பனை கிடையாது,இம்மலர் பற்றிய வதந்திகள் தான் கற்பனை :) வரவுக்கும் ,கருத்துக்கும் நன்றிகள் ! அருணா செல்வம்

 
At Mon Dec 23, 03:54:00 pm , Blogger Nanjil said...


மனிதனின் கற்பனை மனம் இல்லாத ஒன்றை நம்ப வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது
நாரிமலர் போலத்தான் நாங்கள் கடல் கன்னியை கண்டோம் என்று வரும் படங்களும் செய்திகளும் என நினைக்கிறேன்
கீழுள்ள படத்தையும் பாருங்கள்

http://shuangxingfu.blogspot.com/2011/06/passion-fruit-shaped-like-mans-sexual.html

 
At Sat Dec 28, 08:32:00 pm , Blogger Vijayan Durai said...

:)

 
At Wed Mar 15, 12:20:00 pm , Blogger Unknown said...

Oh
Thank you for this valuable information

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home