Sunday, December 01, 2013

பெண் வடிவில் பூக்கும் அதிசய மலர் !!


     சில மாதங்கள் முன்பு அலுவலகத்தில் பழைய மாத இதழ்களை புரட்டிக்கொண்டிருந்தேன்,அதில் ஒன்றில் கீழ்காணும் படத்துடன் - நாரிலதா மலர் - பெண் வடிவில் இமயமலைப்பகுதிகளில் மலரும் அதிசய மலர்.என்று இருந்தது !!


     கவிதைகளிலும்,திரைப்பட பாடல்களிலும், கொஞ்சல்களின் போதும் பெண்களை செல்லமாக பூவே,மலரே என வர்ணித்துச் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம், அட ! ஒரு பூவே பெண் வடிவில் பூத்திருக்கிறதா.

     இந்த செய்தியை வாசித்தபோது நானும் இப்படித்தான் ஆச்சரியப்பட்டேன்.அதன் பின்பாக சில நிமிடத்திற்குள் "அட இப்படி ஒரு பூ இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று என் அறிவு அசரீரி மனதிற்குள் சத்தம் போட்டது"... 
    "மெய்ப்பொருள் காண்பதறிவு " அல்லவா !




    பெண் வடிவ மலர்: (நாரிலதா மலர்) ஒரு அலசல் :



     இந்த மலர் நாரி ஃபூல்,நாரிலதா என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது,இதனை ஹிந்தி மொழியில் பிரித்து போட்டு அர்த்தம் கொள்ளும்போது நாரி - பெண், லதா- சிறு கொடி வகை தாவரம், ஃபூல்-பூ என்று அர்த்தங்கள் கிடைக்கின்றன.

     இந்த மலர் இந்தியாவின் இமயமலையின் மலையோர பகுதிகளிலும்,இலங்கை,தாய்லாந்து போன்ற நாடுகளிலும் மலர்வதாக சொல்லப்படுகிறது, லியதம்பர மாலா(Liyathambara Mala)
     என்று இலங்கை யிலும், நரீபொல் (nareephol)என்று தாய்லாந்திலும் இந்த மலருக்கு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

    இன்னொரு முக்கியமான விசயம் இந்த நாரிலதா மலர் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்குமாம் !

    நம்ம பாபாஜி மாதிரியான ரிஷிகள் இமயமலையில் தவம்,தியானம் செய்யும்போது அவர்களின் கவனத்தை கலைக்க இந்த பெண் வடிவ மலர் மலர்வதாக கர்ண பரம்பரை கதை  (செவி வழிக்கதை) ஒன்று சொல்லப்படுகிறது.

    உண்மையிலேயே இப்படியோரு மலர் இருக்கிறதா ?

      இணையத்தில் இந்த மலர் பற்றி தேடினால் , உண்மை என்றும் "பொய்" என்றும் இரண்டு பதில்களும் கிடைக்கின்றன.(அட இன்னாப்பா கன்பீஸ் பண்ற என்று கடுப்பாகாதீர்கள் !)

      இப்படியொரு பெயரில் மலர் ஒன்று இருக்கிறது என்பது உண்மை,ஆனால் இதன் பெயரில் எங்கள் அலுவலக மாத இதழில் வெளியிடப்பட்டிருந்த புகைப்படமும்,பெரும்பாலான இணையத்தளங்களில் இருக்கும் படங்களும் பொய்யானவை.

     இணையத்தில் நாரிலதா மலர் என்ற பெயருடைய மலரின் பெயரில் போலியான புகைப்படம் பரப்பப்பட்டுள்ளது,பல தளங்களில் இந்த போலிப்படமும் வியப்புக்கட்டுரையும் தான் உள்ளன,ஒன்றிரண்டு ஆங்கில இணையத்தளங்கள் விளக்கம் தருகின்றன, தமிழில் நிறைய வலைப்பூக்களில் இந்த மலரின் போலியான படத்தை பகிர்ந்து ஆச்சரியக்குறியோடு சில வரிகளையும் டைப்பி வைத்திருக்கின்றனர்.
    விக்கிபீடியாவில் நாரிபொன் என்கிற பெண் வடிவ பழத்தைப் பற்றின கட்டுரை தான் இருக்கிறது.  நரிலதா மலர் பற்றின கட்டுரை முன்பு இருந்ததாகவும் குழப்பத்தின் காரணமாக அது நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.


    போலிப் புகைப்படமும் நாரிலதா மலரும்:


    1.லதா என்றால் கொடி என்று ஹிந்தி மொழியில் அர்த்தம், இது மரத்தில் மலர்வதாக காண்பிக்கப்பட்டுள்ளது
    2.மலருக்கே உரித்தான இதழ்,மகரந்தம் என்ற எந்த பாகமும் தட்டுப்படவில்லை
    3.ஒரு மலரில் மலர்க்காம்பு தலையில் இணைந்துள்ளது,சிலதில் பின்புறத்தில் இணைந்துள்ளது.
    4.அச்சில் வார்த்த மாதிரி அனைத்தும் ஒரே மாதிரி வடிவில் இருக்கின்றன.

     நீங்கள் இந்த படத்தை உற்றுப்பார்க்க பார்க்க உங்களுக்கு இப்படியாக இன்னும் சிலபல விசயங்கள் தட்டுப்படும் !! 

    இந்த படம் போட்டோஷாப் எடிட்டிங்க் ஆகவோ, அல்லது மரத்தில் பொம்மைகளை ஒட்டிவைத்து எடுக்கப்பட்ட புகைப்படமாகவோ இருக்கலாம்.
     ஜப்பானில் தர்பூசணி பழங்களை வளரிளம் பருவத்தில் அவைகளை சதுர வடிவ டப்பாக்களில்,அடைத்துவிடுகிறார்கள்,இவை வளரும் போது டப்பாக்களின் எல்லைகளுக்குள்ளாக அடைபட்டு சதுர வடிவிலேயே வளர்கின்றன,அடுக்கி வைக்க, ஏற்றுமதி செய்ய எளிதாக இருக்கும் என்று இப்படிச் செய்கிறார்களாம்,இந்த படத்தில் இருப்பதும் இப்படியானதொரு எல்லைகளுக்குட்பட்டு வளர்ந்த பழமாக கூட இருக்கலாம்.

    நாரிலதா மலரின் உண்மைப் புகைப்படம் !



    இந்த மலர் ஆர்கிடேசி(Orchidaceae) மலர் குடும்பத்தில் ஹெபனேரியா தொகுப்பைச் சேர்ந்தது ,(Genara of Habenaria).

    கொசுறு தகவல்:
    பெண் வடிவ பழம்:


    சில இணையத்தளங்களில், மேலே நீங்கள் பார்த்த விடியோவில் இருப்பது மாதிரியான ஒரு ஜந்துவை காட்டி இதுதான் நாரிலதா மலர் என சத்தியம் செய்யாத குறையாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
    விடியோவில் அவர்கள் குறிப்பிடும் ஜந்து நரிபொன் அல்லது மக்காளிபொன் என்று தாய்லாந்து பாஷையில் அழைக்கப்படும் ஒரு பழம்  (தாய் பாஷயில் பொன் என்றால் பழம் ).
    தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்-ற்கு அருகேயிருக்கும் புத்த மடாலயத்தில் இந்த பழம் இரண்டு வைத்து பராமரிக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
    தாய்லாந்து புத்த மடாலயம்

    புத்த மத புராணத்தில் இந்த பழத்தின் இருப்பை பறைசாற்றும் பழங்கதையொன்று காணப்படுகிறது. 


    ' பழ' ங்கதை :

    பெண் வடிவ பழம் - நரிபொன்
    இந்த கன்னி ரூப கனி பற்றின கதை புத்த மத நூலான வசந்தரா ஜாதகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    (புத்தரின் முற்பிறப்புகள் அதாவது முந்தைய புத்தர்கள் பற்றின கதைகளை ஜாதக கதைகள் என புத்தமதத்தில் குறிப்பிடுகிறார்கள்).
    விபஸ்ஸி புத்தரின் காலத்தில் புசத்தி என்ற பெண் வாழ்ந்து வாந்தாள். அவள் புத்தருக்கு சந்தனத்தை அர்ப்பணித்து வணங்குவது வழக்கம். ஒரு நாள் அவள் விபஸ்ஸி புத்தரிடம் அடுத்த புத்தன் தனது வயிற்றில் பிறக்க வேண்டும் என வரம் கேட்கிறாள். அவரும் அருள்கிறார்.

    அதற்கடுத்தப் பிறப்பில் அவள் இந்திரனின் மனைவியாக பிறக்கிறாள், அதற்கடுத்தப் பிறப்பில் உயர்குடிபெண்மணியாக அரசகுலப் பெண்ணாக புசத்தி என்கிற அதே பெயரிலேயே அவதரிக்கிறாள். சஞ்சயன் என்கிற அரசனுக்கு பட்டத்து ராணியாகிறாள். அவளுக்கு கொடுத்த வரத்தின் படி புத்தக்கடவுள் போதி சத்துவர் புசத்தியின் வயிற்றில் பிறக்கிறார். இளவரன் வசந்தரா என்கிற பெயரில் வளர்கிறார்.

    இளவரசன் வசந்தரனுக்கு தேவி மாத்ரி என்கிற பெண் மணம் செய்து வைக்கப்படுகிறாள். இளவரசன் வசந்திரனின் குடும்பத்தை பாதுகாக்க இந்திரன் இமயமலைக்கு அருகே ஹிமாவனம் என்கிற கானகத்தை நிர்மாணித்து வசந்திரனை அவனது மனைவியுடன் குடியமர்த்துகிறான்.

    கானகத்தில் இருக்கும் கந்தர்வர்கள், காம எண்ணம் கொண்ட தவமுனிகள், இன்னபிற துஷ்டர்களிடமிருந்து காக்க பதினாறு மக்காளிபழ மரங்களை தன் மந்திர சக்தியால் உருவாக்குகிறார். அந்த மரத்தில் அச்சு அசலாக பெண் வடிவில் பழங்கள் காய்த்ததாம் !  மோகவயப்பட்ட முனிகளோ கந்தர்வர்களோ, இன்ன பிறர்களோ அந்த கனிகளின் கவர்ச்சியால் கவரப்பட்டு அதனை கவர்ந்து சென்று அதனோடு புணரும்போது அவர்கள் 4 மாத நெடுஉறக்கம் ஆட்கொள்ளுமாம், துயில் கலைந்து எழுகிற போது அவர்கள் வலிவு குறைந்தவர்களாக இருப்பார்களாம் . வலிவில்லாத அவர்களால் வசந்திரனின் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படாது!
    உலகின் முதல் Sex Toy :) !!

    இந்த பழங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கனியவில்லை மாற்றாக தேவி மாத்ரி கானகத்தில் பழங்களோ, பூவோ பறிக்க வெளியே செல்லும் போது இந்த மரங்களில் மக்காளி பழங்கள் கனிந்தனவாம். ஒரு கிளையில் 5 கன்னி கனிகளாக கனிந்த இந்த கனிகளுக்கு கனிந்த மூன்றாம் நாளில் மாதவிடாய் ஏற்படுமாம். ஏழாவது நாளில் காய்ந்து சுருங்கிப்போகுமாம்.
    அப்படியாக காய்ந்து சுருங்கிப்போன கனிகள் தான் மேற்சொன்ன தாய்லாந்தின் புத்த மடாலயத்தில் இருப்பது என்றும் சொல்லப்படுகிறது.


    பதினாறு வயது இளம்பெண்ணின் உருவம், தங்கநிற கருமணிகளுடன் கூடிய நீலவிழிகள், கரிய கூந்தல் , கண் பறிக்கும் அழகு, நிர்வாண மேனி என காமுற்றவர்களை கவரும் சகல தகுதிகளுடன் கனிந்த நாள் முதலாய் மரம் முழுக்க ஆடிப்பாடி ஆர்ப்பரித்து அழைப்பு விடுத்து. அழகில் மயங்கி அடைபவர் வலிமையை அழித்தனவாம் .இந்த மரங்கள் இமயமலையின் ஹிமவன பிரதேசத்தில் இன்றளவும் இருப்பதாகவும், தவவலிமை கொண்டவர்களால் மட்டுமே அதை காண முடியும் என்றும் புத்த மத கொள்கையாளர்கள் நம்புகின்றனர்.


    உண்மையை உண்மையென்றும் உண்மையல்லாதவைகளை உண்மையல்லாதவை என்றும் தெரிந்துகொள்.
                                           -கௌதம புத்தர்

       ------------------------------------------------------------------------------------------------
        பின்னிணைப்புகள்:

        உதவிய கட்டுரைகள்: 
        http://www.hoax-slayer.com/nareepol-tree.shtml
        https://en.wikipedia.org/wiki/Nariphon
        http://waynedhamma.blogspot.in/2008/11/origins-of-makaliporn.html
        http://www.pseudoparanormal.com/2011/04/naree-pon.html
        http://waynedhamma.blogspot.in/2009/05/amazing-makkaliporn-of-wat-prangmuni.html

      -----------------------------------------------------------------------------------------------------------------

Labels: , , ,

Saturday, March 16, 2013

கடல் மீன்கள்

(ராமேசுவரம் மீனவர்களின் வாழ்க்கைப் பதிவு)



                                               "ஒரு நாள் போவார்
ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்"


  து ஒரு ஞாயிற்றுக்கிழமை...
நம்மில் பெரும்பாலோருக்கு ஓய்வு நாளாக மட்டுமே பழகிப்போன வாரத்தின் இறுதி நாள், இராமேசுவர மீன்பிடி கடற்கரைப் பகுதி ஒரு திருவிழா போல மனித கூட்டத்தை நிறைத்துக்கொண்டு அந்த கடலோர உழைப்பாளர்களின் உழைப்பில் குதூகளித்துக் கொண்டிருந்தது.

  குவியல் குவியலாக,கூடை கூடையாக ,பெட்டிப் பெட்டியாக கடற்கரை ஓரமெங்கும் இறந்த மீன்களின் இறுதிஊர்வலம் மிக விமரிசையாக,மீனவர்களின் ஆதரவுடன் சந்தோசமாக நடந்து கொண்டிருந்தது.

  ந்த இறந்து போன மீன்கள்தான் ,லட்சக்கணக்கான அந்த மீனவ மக்களின் உயிர் வளர்க்கும் ஆதாரமாக உள்ளது.
நம் உணவாக உருமாற்றம் அடைந்த இந்த இறந்த மீன்களுக்காக நாம் அதிகம் கவலைபடுவதில்லை , இருந்தாலும் இந்த மீன்களை நம் உண்வாக மாற்றித்தர மீனவர்கள் மிகுந்த சிரமப் படுகிறார்கள் கடலில் அவர்கள் படுகிற கஷ்டங்கள் நம்மில் பலருக்கு தெரிவதில்லை

மீனவர்கள் எப்படி மீன் பிடிக்கிறார்கள்?,அவர்கள் படுகிற கஷ்டங்கள் என்ன?

இந்த பதிவில் அவைகளை பதிகிறேன்….

    வாரத்தில் திங்கள்,புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே கடலுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி உண்டு,மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் முன் மீன் வளத்துறையினரிடமிருந்து டோக்கன் என அழைக்கப்படுகிற அனுமதிச்சீட்டை பெற வேண்டும் காலை ஆறு மணிக்கு டோக்கன் விநியோகம் துவங்குகிறது இந்த அனுமதிச்சீட்டு 24 மணி நேரம் மீன் பிடிக்க அனுமதி தருகிறது, அதாவது இந்த அனுமதிச்சீட்டு  24 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும், இந்த சீட்டு இன்றி மீன்பிடிப்பது குற்றமாகும்.மீன்பிடி தொழிலுக்கு டீசல் விசைப்படகுகள்(fishing boats) பயன்படுத்தப் படுகின்றன.

அனுமதிச்சீட்டினை பெற்ற பிறகு...

   மீன்பிடி வலை,விசைப்படகை இயக்க தேவையான டீசல் அடங்கிய பேரல்கள்,பிடிக்கிற மீன்களை கெட்டு போகமல் பராமரிக்க தேவையான ஐஸ்கட்டிகள் போன்ற பொருட்களுடன் தயாராக இருக்கிற விசைபடகுகள் மீனவர்களுடன் கடலலைகளைக் கிழித்துக் கொண்டு கடலுக்குள் பாய்கிறது.

[காலை 6 மணிக்கு கடலுக்குள் சீறிப்பாய்கிற படகுகள் மறுநாள் காலையில் தான் கரைக்குத் திரும்புகின்றன.]

   டலுக்குள் சென்றவுடன் மீனவர்கள் கரைக்கும் தங்களுக்குமான உறவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்குகிறார்கள்ஆழ்கடல் பகுதிகளில் தொலை தொடர்புக்கு பயன்படுத்தப்படும் செல் பேசிகள் செயல் படுவதில்லை.கடலுக்குள் உயிரை பணயம் வைத்து செல்கிற மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதலுக்கு உட்ப்பட்டு உயிரிழந்தாலோபடகில் ஏற்படும் பிரச்சனை அல்லது இயற்கை சீற்றங்களுக்கு இரையாகினாலோ...
அவர்களுக்கு உடனடியாக உதவ அங்கு யாரும் இல்லை.

   டலுக்குள் குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் கயிறு மூலம் வலையை கடலுக்குள் இறக்கிக் கொண்டே செல்கிறார்கள்,வலையை கடலுக்குள் விடும் போது படகின் வேகம் பாதுகாப்பு கருதி குறைக்கப்படுகிறது.

  கடல் நீரின் ஆழத்தைப் பொறுத்து 60 முதல் 70 பாகம் [ஒரு பாகம் =ஐந்தரை அடி] வலையை கடலுக்குள் இறக்குகின்றனர்

  றக்கி விடப்பட்ட வலை இரண்டு முதல் மூன்று மணி நேரம் அப்படியே விடப்படுகிறது ,இந்த நேர இடைவெளியில் கடல் மீன்கள் வலைக்குள் சிக்கி கொள்கின்றன.
சில சமயங்களில் ஒரு படகின் வலை மற்ற படகுகளின் வலைகளுடன் சிக்கிக்கொள்ளும்.அப்படி வலைகள் சிக்கி கொள்ள நேரிட்டால் மீன்கள் வலைகளில் சிக்காது,எனவே ஒரு படகுக்கும் இன்னொரு படகுக்கும் இடையே 100 மீட்டர் இடைவெளி விட்டு மீன்பிடிக்கிறார்கள்.

  பின்பு கடலுக்குள் வீசியெறியப்பட்ட மீன்பிடி வலை மீனவர்களின் பெரும் முயற்சியால் மேலே இழுக்கப்படுகிறது.

  வலையை மேலே இழுக்க கயிறு மற்றும் வின்ச் (winch) எனப்படும் கயிறு சுழற்றும் கருவியும் பயன் படுத்தப்படுகிறது, வின்ச்சை சுழற்றி வலையை மேலே இழுக்கிறார்கள்

வின்ச்


  வலையை படகின் உள்ளே இழுத்த பின்பு வலையில் சிக்கி இருக்கிற மீன்கள் வகை வாரியாக தரம் பிரிக்கப் படுகிறது(வலையில் மீன்கள் மட்டுமல்லாமல்,கடற்சிப்பிகள்,சங்குகள் போன்றவைகளும் சிக்குகின்றன அவைகளும் பிரித்து வைக்க படுகின்றன)

  வலையை கடலுக்குள் வீசுதல்,வீசிய வலையை மேலே எடுத்தல்,வலையில் சிக்கிய மீன்களை பிரித்து பெட்டிக்குள் அடைத்தல் ஆகிய இந்த செயல் முறை "பாடு" என அழைக்கப்படுகிறது.

சராசரியாக ஒரு நாளில் 8 முதல் 10 "பாடு" வரை மீன் பிடிக்கிறார்கள்.

  மீனவர்கள் தங்களுக்கான காலை சாப்பாட்டை கடலுக்குள் கிளம்புவதர்க்கு முன்னரே வீட்டிலிருந்து எடுத்து வந்து விடுகிறார்கள், விசைப் படகுகளில் சமையலரை தனியாக உள்ளது, இங்கு அவர்களுக்கு தேவையான சாப்பாடு சமைக்கப்படுகிறது (மீனுடன்...)மீனவர்களுக்கு தேவையான டீ, காபி போன்ற தேவைகளையும் இந்த சமையலறை நிறைவு செய்கிறது.

மீனவர்கள் பொழுதுபோக்கிற்காக ரேடியோ எடுத்து செல்வதுண்டு. தற்போதைய கால கட்டத்தில் செல் பேசியிலேயே பொழுது போக்கு அம்சங்கள் வந்து விட்டதால் ரேடியோக்கள் காலாவதியாகி விட்டன

  ரவு நேரங்களில் கூட "பாடு" நடந்து கொண்டு தான் இருக்கும்.இரவுகளில் பாட்டரி விளக்குகள் விசைப் படகுகளை ஒளியூட்டுகின்றன..
கடல் நாள் என்று அழைக்கப்படும் மீன்பிடி நடைபெறும் நாட்களில் எல்லாம் நட்சத்திரங்களுக்கு போட்டியாக  மீன் பிடி படகுகள் கடலுக்குள் ஒளி வீசிக்கொண்டிருக்கும்

காலையில் மீன்பிடி பணிக்கு செல்கிற மீனவர்கள்
வெயில், மழை,காற்று என் எந்த பிரச்சனையையும் பொருட்படுத்தாமல் நாளின் 24 மணி நேரமும் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்

கடல் நாட்களின் போது அவர்களின் கண்கள் தூக்கதை இழந்து விடுகிறது, அவர்களது உடல் ஓய்வை மறந்து விடுகிறது.
பல சமயங்களில் எல்லை தாண்டி மீன் பிடித்தாக காரணம் சாட்டப்பட்டு இலங்கை கடல் பாதுகாப்புப் படை வீரர்களால் (வீரர்?) சுட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம் முடிவடைந்தவுடன்(மீன் பிடித்து முடித்தவுடன் இல்லை?) விசைப்படகுகள் கரையை நோக்கி த் திரும்புகின்றன

மீனவர்கள் பாடுபட்டு பிடித்த மீன்கள் மீன்பிடி விசை படகின் உரிமையாளருக்குத்தான் சொந்தம்

 மீன்கள் கடற்கரைக்கு அருகாமையில் உள்ள விசைப்படகின் உரிமையாளருக்கு சொந்தமான மீன் கம்பேனி என அழைக்கப்படுகிற இடங்களில் எடை போடப்பட்டு விநியோகஸ்தர்களுக்கும்,மீன் வியாபாரிகளுக்கும்  விற்பனை செய்யப் படுகின்றன.

கரைக்குத்திரும்பிய மீனவர்கள் மீன்களை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு தங்கள் கூலிகளை ப் பெற்றுக்கொண்டு வீடுகளுக்குத் திரும்புகிறார்கள்

அடுத்த நாள் மீண்டும் மீன்பிடிக்க தயாராவதற்க்காக
  லேபில்கள்: kadakarai,kadarkarai pathivukal,rameswaram patriya katturai,இராமேஸ்வரம் மீனவர்கள்,இலங்கைப் படை மீனவர் தாக்குதல்,வலை,மீன்,கடல்,விஜயன்,vijayan durai,விஜயந்துரை,கடற்கரை,கடற்கரை,கடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரைகடற்கரை,கடற்கரை, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai, kadakarai,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan,vijayan

Labels: , , , ,

Wednesday, August 15, 2012

நம் சுதந்திரத்தை பயன்படுத்துவது எப்படி??


"அனைவரும் உறங்குகிற வேளையில் இந்தியா விழித்து கொண்டது"
-----------------------------------------------------------------------------------ஜவஹர்லால் நேரு


28 மாநிலங்கள்
யூனியன் பிரதேசங்கள்
18 ஆட்சி மொழிகள்
325 மொழிகள், 1652 கிளை மொழிகள்
1.10 பில்லியன் மக்கள்
பல்வேறு மதங்கள்
பல ஆயிரம் ஜாதிகள்
பல்வேறு நாகரிகங்கள்
என பல்வேறு வண்ணங்களின் கலவையின் உருவமாக நிற்கும்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசு
நம் இந்தியா

 இந்த இனிய நாளில் சுதந்திர இந்தியா தனது 66 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறதுவாசகர்களுக்கும்,நன்பர்களுக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
 
  சுதந்திரம் என்கிற விசயம் யாரும் யாருக்கும் கொடுக்கக்கூடிய ஒன்றோ,அல்லது யாரிடமிருந்தும் பெருகின்ற ஒன்றோ கிடையாது.அது ஒரு தன்னிச்சையான உணர்வு.அடிமையாக இருக்கின்ற போதும் கூட ஒருவர் சுதந்திர உணர்வுடன் இருக்க முடியும். அதே நேரம் ஒருவருக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டாலும் கூட அடிமை உணர்வுடன் கூட ஒருவர் இருக்க முடியும். அடிமைபட்டு கிடந்த காலத்திலும் கூட பல தலைவர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட்டதை நாம் நினைவு கொள்ள வேண்டும்.
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோம் என
ஆடுவோமே! பள்ளு பாடுவோமே!"
-என அடிமைப்பட்டு கிடந்த காலத்திலும் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என சொன்ன பாரதியை பற்றி சிந்தித்து பாருங்கள்.
ந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என இன்றைய தினத்தின் இரவு பன்னிரெண்டு மணிக்கு வெள்ளையன் அறிவித்துவிட்டு சென்றான்.இருட்டில் கிடைத்த்தால் தான் என்னவோ இன்னமும் கூட இந்தியாவில் பல பேர் வாழ்க்கை விடியாமல் இருக்கிறது....
 ந்தியாவில் இன்றளவும் செயன்முறையில் உள்ள பல விசயங்கள் ஆங்கிலேயன் தந்த அருட்கொடையே!கல்வி,அரசியல்,சட்டம்,அரசு வேலை வாய்ப்புகள் போன்ற பல விசயங்கள் அவன் தந்த அடிப்படைய்லேயே தான் இன்றும் இருக்கின்றன அந்நியன் தந்த விசயங்களை அப்படியே பயன்படுத்தும் நமக்கு சுதந்திர உணர்வு சுயமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு தான்.!

 "நம் இந்தியர்களில் பலர் விளையாட்டு விசயத்தில் தேசப்பற்றுடன் இருக்கிறோம்,ஆனால் தேசிய விசயங்களில் விளையாட்டாகவே இருந்துவிடுகிறோம்."

-என்று யாரோ ஒரு நபர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.
அது உண்மை தான் .இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி பெறும் வேளையில் பொங்கி எழும் நாம்,ஒரு அரசிய்ல் வாதியின் தவறான செய்கை வெளியில் தெரியும் போது வாய்மூடி கைகட்டி இருந்து விடுகிறோம்.சரி அது கிடக்கட்டு விடுங்கள்.நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தை பயன்படுத்துவது எப்படி??
இன்று நாம் நமது கருத்துக்களை வெளியிட்டு கொண்டிருக்கிறோம் இல்லையா... இது சுதந்திரத்தின் வெளிப்பாடு தான்.

நம் சுதந்திரத்தை பயன்படுத்துவது எப்படி??

 நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற சுயநல உணர்வின் அதீத தன்மையால் சுயம் கெட்டு போய் கிடக்கிறது.சுயநலம் பற்றிய சிந்தனை அதிகமாகும் போது..நாடுபற்றிய சிந்தனை குறுகி விடுகிறது சுயநல சிந்தனை மூலம் ஒருவரின் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்பதாக நினைத்தே "சுயநல உணர்வு" உருவாகிறது,ஆனால் வாழின் பெறும்பாலான பிரச்சனைகளுக்கு "சுயநல உணர்வின்" அதீத தன்மையே காரணம்.
உங்கள் அருகில் ஒருவர் உணவின்றி இருக்கின்ற போது..உங்களிடம் நிறைவான உணவு இருந்தால் அதை முழுமையாக தானம் செய்து விட வேண்டும் என தேவையில்லை,உங்களால் இயன்ற அளவு சிறிதளவு உதவுங்கள்.
 கொடுத்தால் குறைந்து விடும் என்று சுயநல எண்ணம் சொல்லிக்கொடுக்கிறது..நல்ல மனதுடன் கொடுக்கும் எதுவும் குறந்து போவதில்லை.நான் உங்களுக்கு சொல்கிறேன்....
"கொடுக்கிற எண்ணம் உடையவர்களுக்கே நிறைய கிடைக்கும்"
  இது கொஞ்சம் முரண்பாடாக தெரியலாம்.ஆனால் இயற்கை விதி இதுதான்.
 ன்று கல்வியில் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்று அரசியல்வாதிகள் தம்ப்ப்ட்டம் அடித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில்... இந்தியாவில் பல உள்ளங்கள் உணவின்றி ,உறக்கமின்றிபணமின்றி,பலமின்றி இருந்து கொண்டிருக்கின்றனர்.
       
·         எங்கள் உயிர்களை.,
பசியெனும் நெருப்பு
வறுமை அடுப்பில்
உணவாய் சமைத்துக் கொண்டிருக்கிறது..
உணர்வு உள்ளவர்களே
உணவு தாருங்கள்
நாங்கள்
உணவாவதற்கு முன்னால்

கல்வியின் வாசம் அறியாத எத்தனையோ பிள்ளைகள் நம்மருகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.நம்மால் முடிந்தால் அந்த உள்ளங்கள் கல்வி பெற நாம் உதவ முடியும்.
நம் ஒவ்வொரு தேவைக்கும் பிறரையோ,அரசையோ குறை சொல்லும் போக்கை குறைத்துக்கொண்டு,நம் நிலைபற்றி நினைத்துக்கொள்வோம்,
நம்மை சுதந்திரத்தால் நிறைத்துக்கொள்வோம்.

வாருங்கள் நமக்கு கிடைத்திருக்கும் இந்த சுதந்திரத்தை கொண்டாடுவோம்..கொண்டாட்டம் அறியாத நபர்களுக்கும் சுதந்திரத்தின் அருமையை உணர்த்துவோம்.. சுதந்திரம் என்பது ஒரு நாள் மட்டும் கொண்டாடும் விசயமல்ல !..

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்
அதை உணர்ந்து செயல்படுவோம் தினம் தினம்.


Labels: , , , ,

Thursday, May 24, 2012

பொறியியல் கல்வி-வழிகாட்டல்


என்ன படிக்கலாம்?,எங்கு படிக்கலாம்?-(கல்வி சந்தை ஒரு அலசல்)

 +2 தேர்வு முடிவுகள் வந்து விட்டன என்ன படிப்பு படிக்கலாம்,எந்த கல்லூரியில் படிக்கலாம் போன்ற அலசல்கள் மாணவர்களிடையே அதிகம் அலைமோதும் நேரம் இது... தேர்வு முடிவுகள் மாணவர்களை அதிகம் பாதிக்கிறதோ இல்லையோ பெற்றோர்களை அதிகமாகவே பாதித்து விடுகிறது, தன் பிள்ளை அதிக மதிப்பெண் வாங்கியிருக்கிறான்  (அ) வாங்கியிருக்கிறாள்,என்று சொல்லிக்கொள்வது பெற்றோர்களுக்கு ஒரு கௌரவமாக இருக்கிறது...மதிப்பெண் குறைவை அவர்கள் கௌரவ குறைச்சலாக கருதுகிறார்கள்.சமீப காலமாக மக்களிடையே இந்த எண்ண ஓட்டம் அதிகரித்துள்ளது.

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள்:

  பெரும்பான்மையான மாணவர்களும் பெற்றோர்களும் மருத்துவம் மற்றும் பொறியயல் படிப்பை மட்டுமே சிறந்த படிப்புகளாக கருதுகிறார்கள்.இவை அதிகம் சம்பாதிக்க துணை செய்யும் படிப்புகள் என்கிற மோகம் மக்களிடையே பரவலாக உள்ளது.
மருத்துவப்படிப்பிற்கான "கட்-ஆப்" மதிப்பெண் மற்றும் மருத்துவப்படிப்பிற்கான இடங்கள் (mere 1,653 (excluding 635 additional seats surrendered by self-financing colleges)  
மருத்துவத்துறையை நாடும் மாணவர்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மெயின்டைன் செய்கிறது.



            மெடிக்கல் கட்-ஆப் ஒரு ஒப்பீடு: நன்றி THE HINDU

பொறியியல் படிப்பில் சேர தகுதிகள் அதிகம் தேவைப்படுவதில்லை,பன்னிரென்டாம் வகுப்பு தேர்வாகி இருந்தால் மட்டும் போதும் கட் ஆப் மதிப்பெண் குறைவாக இருந்தால் பணம் கொடுத்து சீட் வாங்கி விட முடியும்,என்ஜினியரிங்க் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகம்.ஆக என்ஜினீயரிங்க் துறையை மாணவர்கள் தேர்வு செய்கின்றனர்.

ற்போது தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் விற்பனை துவங்கிய ஒரே வாரத்தில், 2 லட்சம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துவிட்டன


பொறியியல் படிப்பின் தற்போதைய நிலை:

ண்மையான ஆர்வம் காரணமாக பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களை விட ஆர்வக்கோளாராக,தெளிவான சிந்தனையின்றி பொறியியலை நாடும் மாணவர்கள் அதிகம்,இது மட்டுமில்லாமல் சில மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் விருப்பம் இல்லாமல் இருந்த போதிலும் அவர்களின் பெற்றோர் வற்புறுத்தல் காரணமாக இந்த படிப்பில்ல் வந்து மாட்டிக்கொள்ளும் மாணவர்களும் அதிகம்.(எங்கள் கல்லூரியிலேயே இது போன்ற நன்பர்களை நான் சந்தித்து இருக்கிறேன்).
ப்படி ஆர்வமில்லாமல் ஒரு படிப்பில் நுழையும் போது அந்த படிப்பில் பிடிப்பு இல்லாமல் போகிறது,பாடங்களை படிக்க முடியாமல்,புரிந்துகொள்ள முடியாமல் மாணவர்கள் திணருகிறார்கள்,மன அழுத்தம் அதிகரித்து படிப்பை தொடர முடியாமல் பாதியிலேயே கை விடுகிறார்கள்.சில மாணவர்கள் தற்கொலை வரை கூட செல்லத்துணிகிறார்கள்.

 1997 ம் ஆண்டில் வெறும் 90ஆக இருந்த, தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு நிலவரப்படி, 535ஆக உயர்ந்தது. கடந்த 2007ம் ஆண்டில் கூட, 277 இன்ஜினியரிங் கல்லூரிகள் தான் இருந்தன. நான்கு ஆண்டுகளில் இருமடங்காக, இன்ஜினியரிங் கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டில் புதியதாக மேலும், 15 இன்ஜினியரிங் கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன.

மிழகத்தில் உள்ள அத்தனை கல்லூரிகளும் சிறந்த கல்லூரிகள் என்று கூறி விட முடியாது.சரியான அடிப்படை வசதிகள் இல்லாமல் கூட பல கல்லூரிகள் தங்களை சிறந்த கல்லூரிகள் என்று மார்தட்டிக்கொண்டு வலம் வந்து கொண்டு இருக்கின்றன.


                              படம்:நன்றி:ஜூ.வி

ல கல்லூரிகள் தகுதி குறைவான ஆசிரியர்களை நியமித்துக்கொண்டு தன் கல்லூரிகளில் பாடம் கற்பித்து வருகின்றன,தகுதி குறைவான ஆசிரியர்கள் அதிக சம்பலம் எதிர்பார்பதில்லை இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் கனிசமான தொகையை சேமிக்க முடியும் என்பதால் பெரும்பான்பை கல்வி நிறுவனங்கள் இப்படிப்பட்ட ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் வாழ்வில் விளையாடுகின்றன.
ஆண்டுதோறும் நாடுமுழுவதும், 15 லட்சம் மாணவர்கள் இன்ஜினியரிங் படித்து வெளிவரும் நிலையில், இதன் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும், 2.25 லட்சமாக உள்ளது.இதில் வேலைக்கு தகுதியானவர்கள் 10 முதல் 14 % மட்டுமே என்கிறது ஓர் ஆய்வு. 

 "மிகச் சிறந்த கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம் 95 ஆகவும், மூன்றாம் மற்றும் நான்காம் தர கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம், 30 முதல் 50 சதவீதமாகவும் இருக்கிறது. எனினும், 30 சதவீதம் பேர் தான் படிப்பிற்கேற்ற துறையில் வேலை பெறுகின்றனர்; 20 சதவீதம் பேர் உயர்கல்விக்கும், 30 சதவீதம் பேர் சம்பந்தமே இல்லாத வேலைக்கும் சென்று விடுகின்றனர். படிப்பை நிறைவு செய்யாமலும், வேலை கிடைக்காதவர்களும், மீதமுள்ள 20 சதவீதத்தினர்'' என்கிறார், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
 
டிப்பை தேர்வு செய்யும் முன்னர் இந்த படிப்பு நமக்கு ஏற்றதுதானா?? என்று ஒருமுறை சிந்தியுங்கள்,சிந்திக்க முடியாத பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உதவுங்கள்,என்ஜினியரிங்க் மருத்துவம் ஆகிய இரண்டு படிப்புகள் மட்டுமே நல்லது என்கிற மோகத்திலிருந்து மீண்டு மாணவர்கள் தங்களின் தகுதி,திறமை,ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் படிப்புகளை தேர்வு செய்யுங்கள்.என் ஜினியரிங்க் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்கள் தயவு செய்து தாங்கள் தேர்வு செய்யும் துறை சார்ந்த தகவல்கள்,தாங்கள் தேர்வு செய்யப்போகும் கல்லூரியி தரம் போன்றவற்றை தீர்க்க்மாக ஆராய்ந்து விட்டு தேர்வு செய்யவும்.

படிப்பு முக்கியம் தான் ஆனால் வாழ்க்கை அதை விட முக்கியம்.

புள்ளி விவர உபயம்:
THEHINDU

Labels: , , , , , , , , ,