Wednesday, March 29, 2017

பாரதிச்சூடி -4

 ஈகை திறன்

                                             

ஈகை திறன் என்பதை பெரும்பாலான தமிழ் வல்லுனர்கள் கொடுக்கும் திறன் என்று அர்த்தம் சொல்லியிருக்கிறார்கள்.

ஈகை என்பது "தன்னிடம் உள்ளதை தானமாக கொடுப்பது" திறன் என்றால் சக்தி அல்லது ஆற்றல் .

அப்படியே அர்த்தம் பண்ணினால் அப்படித்தான் !! யோசிக்க முடியும்.

இந்த செய்யுளை கொடுக்கும் சக்தி என பொருள் கொள்தல் தவறு, பாரதி தன் புதிய ஆத்திச்சூடியை கட்டளை தோரணையில் சொல்கிறான் , "ஈகை திறன் '' என்பதும் கட்டளை வாக்கியமே , அந்த முறையில் இதை அர்த்தப்படுத்தினால் " கொடுப்பது திறன் என்றொரு அர்த்த தொனியில் "ஈகை திறன்" ஒலிக்கிறது. பாரதி அப்படித்தான் சொல்லியிருப்பான்.

பாரதியின் வார்த்தைகளுக்கு விளக்கம் தேட அகராதிகளை புரட்டினால் அவன் பிடிகொடுக்க மாட்டான், அவன் வாழ்க்கையினின்று நாம் அவன் பாடல்களை பொருள் கொள்ள வேண்டும்.

தனக்கே சோறில்லாத பொழுதில் குருவிகளுக்கு அரிசி தூவிக்கொண்டிருக்கும் பாரதி நிச்சயம் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து பின் கொடு என்கிற பொருளில் இந்த வரிகளை உச்சரித்திருக்க வாய்ப்பில்லை.

 கொடுப்பதில் ஒரு kick இருக்கிறது என்பதை கொடுப்பதன் திறனை உணர்ந்த நபர்களால் தான் இயலும்., பாரதி அந்த Kick ஐத்தான் சொல்கிறான்.

எதைக்கொடுக்கிறாயோ அதையே பெறுவோம் என்கிறது ஒரு தத்துவம்,  அந்த தத்துவத்தோடும் பாரதி சொல்லும் ஈகை திறனை ஒப்பிட்டு நோக்க முடிகிறது.
கொடுங்கள் அப்பொழுதுதான் பெறுவதற்கான தகுதி உமக்குண்டு என்று சொல்லாமல் சொல்கிறான் பாரதி !

பாரதியின்பொருளாதார நிலை உலகறிந்ததே ! இன்னிலையில் ஒருநாள் பாரதிக்குஅவர் பணிபுரியும் பத்திரிக்கையின் ஆசிரியர் பணம் கொடுக்கிறார், பணத்தோடு தன் நண்பர்களோடு வெளியே வரும் பாரதி பழக்கூடையோடு வாடிய முகத்துடன் அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தியை காண்கிறான்.என்னம்மா உன் கவலை என்கிறான் "பழமெல்லாம் விக்கல சாமி" என்கிறாள், வைத்திருந்த மொத்த காசையும் கொடுத்து கூடை பழத்தையும் தானே வாங்கிக் கொள்கிறான். பாரதி சொல்லும் ஈகை திறன் என்பது கொடுப்பதற்கேற்ப இருப்பேற்படுத்திக்கொண்டு கொடுக்கும் திறன் அல்ல The power of giving :) , கொடுப்பதால் ஏற்படும் மனநிறைவு காரணமாக உள்ளத்து ஊற்றெடுக்கும் ஆற்றலைப் பற்றியது.

அவன்சொல்வது ஈகைத்திறனை அல்ல ஈகையின் திறனை,ஈகை தரும் திறனை.

கொடுங்கள் நிச்சயம் அதைவிட அதிகமாக பெறுவீர்கள் .

 

Post Comment

Monday, March 27, 2017

பாரதிச்சூடி-3

இளைத்தல் இகழ்ச்சி:

 பாரதி குறிப்பிடும் இளைத்தல் என்பதை உடல் இளைத்தல் என்பதாக மட்டுமல்லாது  பின்னடைதல், சோர்வடைதல் என்கிற  அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும்,  பின்னடைதல் ,சோர்ந்து ஓய்தல்  இகழ்ச்சி.

அறிவு,ஆற்றல், மனஉறுதி, செயல்பாடு,சிந்தனை ஆகிய வாழ்வின் எல்லா படிகளுக்கும் இந்த இளைத்தல் இகழ்ச்சி பொறுந்தும்.

இருக்கும் நிலையினின்று முன்னேற வேண்டும், அதுவிடுத்து இருப்பினும் தாழ்தல் இகழ்ச்சி என்கிறான் பாரதி.

அவ்வை ஏற்பது இகழ்ச்சி அதாவது  இரந்து(பிச்சையெடுத்து) வாழ்தலை இகழ்ச்சி என்கிறாள், பாரதி வாழ்நிலை யில் தாழ்ந்து இறங்கி வாழ்தலை (இளைத்தலை) இகழ்ச்சி என்கிறான்.

ஆண்மை தவறாதிருக்க அச்சம் தவிர்க்க வேண்டும், ஆண்மை தவறினால் இளைத்தல் ஏற்படும் , இளைத்தல் இகழ்ச்சி. ஆண்மை தவறேலை emphasize செய்கிறது.

தேங்கும் நதி சாக்கடையாகும், ஓடும் நதியே கடலைச்சேரும்.இகழ்ச்சி என்பது அவமானம் ,மானக்கேடு, கேலி, இழிவு , அவச்சொல் போன்றவற்றினை பெறும் நிலை. இருக்கும் நிலையினின்று இறங்குதல் மாபிழை ! அது இகழ்ச்சி தரும் இழி நிலை! 

Post Comment

Sunday, March 26, 2017

பாரதிச்சூடி-2

ஆண்மை தவறேல் !ஆண்மை என்பது ஆண் தன்மை என்பதன் சுருக்க வடிவு , ஆண்களுக்கான குணங்கள் என்று இதனை பொருள் கொள்ளக் கட்டாயமில்லை , ஆண் குணங்கள் என எடுத்துக்கொள்ள வேண்டும்., அன்பு , பாசம், இரக்கம், கருணை, தாய்மை என்கிற குணங்கள் பெண் தன்மை கொண்ட குணங்கள் அதே மாதிரி வீரம், தைரியம், அறம், நேர்மை, அதிகாரம், மாட்சிமை , போராட்ட குணம்,அச்சம் தவிர்த்து செயல்படும் குணம், மன உறுதி போன்றவை ஆண்மையின்பாற்பட்டவை.

ஆணிடத்தில் அன்பு,இரக்கம் போன்ற பெண் குணங்களும் இருக்க முடியும் அதேபோல பெண்ணிடத்தில் வீரம், துணிவு போராட்டகுணம் போன்ற ஆண்மை குணங்களும் இருக்க முடியும்.

அச்சம்,மடம் நாணம்,பயிற்பு எனும் பெண்களின் நாற்குண பட்டியலை நாம் நன்கறிவோம் , இதேமாதிரி ஆண்களுக்கான நாற்குண பட்டியலொன்றும் உண்டு அதன்படி அறிவு(மெய்ப்பொருள் காணும் பார்வை) நிறை(காக்கவேண்டிய விசயங்களை காத்தலும், போக்கவேண்டியதை போக்கி நடத்தலுமாகிய குணம்) ஓர்ப்பு(ஆராய்ந்து உணர்தல்), கடைப்பிடி (நன்னெறி வழுவாமை) ஆகியன ஆண்மையின் குணங்கள்.

 ஆண்மை குணங்கள் பொதுவாக  .சமூகத்தை வழி நடத்த, எளியவர்களை காக்க, துன்பங்கள் போக்க, குழப்பங்கள் தீர்க்க உதவவேண்டும் அதுவே ஆண்மையின் நேரிய வடிவம். அதிகார து
ஷ்பிரயோகம், பெண்களுக்கெதிரான வன்முறைகள், எளிய மனிதர்களை ஏமாற்றி செயல்படுதல் , வஞ்சகம் சூழ்ச்சி இவையெல்லாம் ஆண்மையின் தவறிய வடிவம்.

 பாரதியின்  வாக்கை உற்று நோக்குவோம்,  ஆண்மையை தவறாக பயன்படுத்தாதே என்கிற அர்த்தத்தில் தான் அவன் அதை சொல்லியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

 அச்சம் தவிர்த்தல் ஆண்மை குணம், அஞ்சுவதற்கஞ்சாது செயல்படுதல் ஆண்மை தவறுதல், பெண்களை காக்கும் குணம் ஆண்மை, அடிமை செய்தல் என்பது ஆண்மை தவறுதல், ஆட்சி செய்தல் என்பது ஆண்மை , அதை முறையற்று கொடுங்கோல் முறையில் செய்வது ஆண்மை தவறுதல்.

ஆண்மை தவறாக பயன்படுத்தப்படும் குடும்பங்கள் உருப்பட்டதில்லை, ஆண்மை தவறிய சமூகங்கள் ஒரு போதும் முன்னேறியதில்லை, ஆண்மை தவறிய தேசங்கள் ஒரு போதும் செழித்ததில்லை, அதனால் தான் பாரதி சொல்கிறான் " ஆண்மை தவறேல்" . 

Post Comment

Saturday, March 25, 2017

பாரதிச்சூடி-1

அச்சம் தவிர் !எதிர்கொள்ளல் என்பதில் தான் எல்லாமுமே இருக்கிறது , நம்மை சார்ந்தவை , நாம் சார்ந்தவை , சந்திக்கும் நிகழ்வுகள் ,சிந்திக்கும் நினைவுகள் , எதிர்படும் உறவுகள், அது தரும் உணர்வுகள் என எல்லாமுமே

எதிர்கொள்ளுதல்  என்பதை எளிமையாய் எதிர்கொள்வதற்கான எளிய மந்திரம் "அச்சம் தவிர்" .

 அச்சம் என்பது survival instinct எனப்படும் உயிர் வாழ தேவையான அவசிய உணர்வு, இயற்கை ஆபத்துக்களில் இருந்தும், தீங்கில் இருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ளவே இந்த அச்சம் என்கிற உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது, ஆனால் பல சமயங்களில் பலரிடத்தில் தற்காக்க உதவ வேண்டிய அச்சம் நம்மை முன்னேற விடாமல் முடக்கிவிட முயல்கிறது.

பயம் என்பது மேல்மனம் சார்ந்தது, அச்சம் என்பது ஆழ்மனம் சார்ந்தது.அச்ச உணர்வு உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது. உயிரை காத்துக்கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் உபாயம் அச்சம், அதனால் தான் அச்சம் ஏற்படும் போது இதயம் அதிக ரத்த ஓட்டத்தை நிகழ்த்த இதயத்தை வேகப்படுத்தி துடிப்பை அதிகம் செய்கிறது. அச்சத்தை அடுத்து நாம் இயங்க வேண்டுமாயின் , அந்த ஆபத்திலிருந்து தப்ப வேண்டுமாயின் அச்ச உணர்வை அதன் பின் தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.

பாரதியின் வார்த்தை சாதூர்யத்தை கவனியுங்கள் அச்சத்தை ஒழி என்று அவன் சொல்லவில்லை , அச்சம் தவிர் என்கிறான், அது வரத்தான் செய்யும் ,இயற்கை உணர்வு , ஆழ்மன பதிவு அச்சத்தை அழிப்பதென்பது இயலாது, அது தவறானதும் கூட ஆகவே தான் அது வந்த பின் அதை தவிர் என்கிறான்.

அச்சம் என்கிற உணர்வு இல்லாத ஒன்றை இருப்பதாக நினக்கிறபோது அல்லது இருக்கிற ஒன்றை இல்லாமல் போய்விடுமோ என்று நினைக்கிற போது உருவாகிறது. அச்சம் உடலியல் சார்ந்த தற்காப்பு உணர்வு தான் ஆனால் அது கடந்த கால நிகழ்வுகளின் பதிவுகள் மற்றும் எதிர்கால கற்பனைகளால் ஆனது. ஆக அது 90 சதவீதம் மனம் சார்ந்த உணர்வு எனவே அதை தவிர்த்தல் மனம் வைத்தால் சாத்தியமானதே!

அச்சம் தவிர் என்று அவன் சொல்வது , அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்கிற condition apply குறியீட்டோடுதான் :) .  நெருப்பு சுடும் , சுடத்தான் செய்யும் அறிவேன் அதை நான் தொடுவேன் என்பது அறியாமை. அச்சம் தவிர் என்பது நம் எதிர்கொள்ளும் வலிமையை அதிகப்படுத்துவதற்கானது, அதிக பிரசங்கித்தனங்களுக்காக அல்ல .

விமானம் கீழே விழுந்தால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற அச்சத்தின் விளைவு தான் பாராசூட் என்ற உயிர்காக்கும் உபாயம். காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல் , என்றொரு பாடல் வரி உண்டு. அச்சம் அவசியம் ஆனால் அதன் பின் நாம் செயல்பட்டாக வேண்டும், முன்னேறியாக வேண்டும் , நம் செயலை இந்த அச்சம் என்கிற உணர்வால்   முடக்கவிடுவது முட்டாள்த்தனம்.

அச்சம் வரும் ,வரத்தான் செய்யும் வந்தபின் மனதிற்குள் சொல்லிக்கொள்வோம், "அச்சமில்லை அச்சமில்லை  !!" மனம் நம்பும் , அச்சம் விலகும் , செயல்படுவோம், வெற்றிகொள்வோம் .

 

Post Comment

Friday, March 24, 2017

பாரதிச்சூடி

பாரதிச்சூடி:

காப்பு:

பரம்பொருள் வாழ்த்து
-----------------------------------------------------------------
ஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.


காப்பு விளக்கம்: ( விளக்கம் எழுதத்துணியும் என்னை பாரதி மன்னிப்பானாக)

-------------------------------------------------------------------------------------------------

பிறை நிலா சூடி மோன நிலையில் தியானித்திருக்கும் சாம்பல் மேனியான் (சிவன்)

பாற்கடலில் படுத்திருக்கும் கருனிறத்தான்(திருமால்)

மகமது நபிக்கு வேதம் உரைத்தவன் (அல்லா)

ஏசுவின் தந்தை (பரமபிதா)

மதங்கள் பலவொடு உருவகம் பலவென (பலரால் )உணரப்படாத,பலவென பரவிடும் பரம் பொருள்  ஒன்றே !

அதன் இயல்பு சுடர்மிகு அறிவு !
அந்த நிலை கண்டவர்கள் அல்லல் அகற்றினர்.(தம் அல்லலையும்,பிறர் அல்லலையும்)

அதன் அருளை வாழ்த்தி அழியா வாழ்வினை அடைவோம் !

-----------------------------------------------------------------------------------------------------

: ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு விதமாய் , ஒவ்வொரு பெயரில் ஒன்றென அறியாது, ஒன்றென உணராது வணங்கும் ஒவ்வொரு கடவுளும் ஒன்றே! சுடர்மிகு அறிவே அதன் இயல்பு, இறை இயல்பாம் அவ்வறிவை அறிந்தவர்க்கு அல்லல் இல்லை ! அந்த இறையின் அருளை வாழ்த்தி அழிவிலா அமர வாழ்வு அடைவோம்.

 

Post Comment

பாரதிச்சூடி

பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி:

பாரதியின் வார்த்தைகள் மீது அவன் வாழ்ந்த வாழ்க்கையின் மீது எனக்கு எப்போதும் தீராக்காதல் உண்டு, தமிழுக்கு புதிய வார்த்தைகளை கொடுத்தவன் பாரதி., காட்சிப்பிழை (எனக்கு மிகப்பிடித்த பாரதிவார்த்தை :) ) , பேசும்பொற்சித்திரம் ,அக்கினிக்குஞ்சு (நெருப்பை பறவையாக உருவகித்திருக்கும் அவன் சொல்லாண்மை ) அவன் படைப்பு கடலுக்குள் மூழ்கினால்  இன்னும் இதுபோல நிறைய முத்தெடுக்கலாம்.

அவன் ஆத்திச்சூடி ஒன்று எழுதியுள்ளான்,அவ்வையின் ஆத்திச்சூடிக்கு  எதிர்வீட்டில் குடிவைக்கலாம் அதை :) அவள் அறம் செய விரும்பு என்கிறாள்,இவன் ஊன் மிக விரும்பு என்கிறான், அவள் ஆறுவது சினமென ஆற்றுப்படுத்துகிறாள், இவன் அச்சம் தவிர், ரவுத்திரம் பழகு என ஊற்றுப்படுத்துகிறான் .

அவ்வையின் வாக்கு அக்கால மாந்தருக்கு , பாரதியின் வாக்கு இக்கால மாந்தருக்கு, அவ்வையின் ஆத்திச்சூடி out of date ஆகியது கண்டு அதை update செய்தவனாக நான் பாரதியை காண்கிறேன்.

பாரதி ஆத்திச்சூடி  ஒன்றே போதும் வாழ்வியல் கற்க . சர்வநிச்சயமாய் சொல்வேன் , வாழ்வியல் கற்க கட்டுக்கட்டான கட்டை புத்தகங்கள் , தலையணை அளவு புத்தகங்கள், மணிக்கணக்கான பிரசங்கங்கள், சாமியார் அறிவுரைகள் தேவையில்லை. ஒற்றை பாரதி போதும், அக்கினிக்குஞ்சுகளை பிரசவிக்கும் அக்கினிப்பறவை அவன், முட்டைகளுக்குள் இருக்கும் நம்மை அடைகாத்து உயிர்செய்யும் கனல் அவன் வார்த்தைகள். வாருங்கள், நாளொரு பாட்டாய் அவன் ஆத்திச்சூடிக்கு புதுப்பொருள் கற்போம், நம் பாட்டன் பாரதி கற்றுக்கொடுத்த வாழ்வியலை கற்போம்.

காப்பு - பரம்பொருள் வாழ்த்து
-----------------------------------------------------------------
ஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

அறிவே தெய்வமென காப்பு சொல்லி கரம்கூப்பி ஆரம்பிக்கிறான்.


குறிப்பு: பாரதியார் பாடல்களுக்கு பொருளுரை சொல்வது மடத்தனம் என அறிந்தும் மாய மனமென்னை எழுதப்பணிக்கிறது .இந்த பொருளுரை இக்கால சந்ததியினருக்கு அவசியம் என ஆறுதல் சொல்கிறது.

தினம் ஒரு ஆத்திச்சூடியும் அது சார்ந்த என் பார்வையும் இந்த blog- ல் இடம்பெறும். வார்த்தைகளை நீட்டி முழக்காமல் முடிந்த வரை microblogging ரகத்தில் சிற்சில வார்த்தைகளில் சொல்ல வேண்டும் :)

பாரதி காப்பு : அறிவேதுணை

 

Post Comment

Monday, February 13, 2017

காமம் - காதல் - கண்ணாமுச்சி

  காதல் என்கிறார்களே அப்படியென்றால் என்னவாக இருக்கும் என யோசிக்கிறேன், "You cannot do thinking and loving together" என்று ஒரு ஆங்கில புலவன் சொன்னது நினைவுக்கு வருகிறது. அப்படியென்றால் உணர்ந்து பின் அதை  யோசித்து எழுதும் கவிதைகளில் காதல் இருக்காதா? என அவனிடத்தில் கேட்கவேண்டும்  !.,

Anyhow யோசித்தே ஆக வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன், :)  


காதல் என்றால் என்ன ! 

" மனம் ஒத்த ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் நேசிப்பது (இருதலை) அல்லது ஒரு எதிர்பாலினம் மற்றொரு எதிர்பாலினத்தின் மீது ஆசை கொள்வது (ஒருதலை)."

 பரிட்சையில் இரண்டு மார்க் கேள்விக்கு பதிலெழுதும் தோரணையில் ஒரு வரையறையை எழுதிவிட்டேன் :) ஆனால் அதை வாசித்து யோசிக்கையில் ஆசை ,நேசம் என்கிற வார்த்தைகளில் காதலை சொல்வது அபத்தமாகப் படுகிறது . காதல் என்றால் காதல் தான் , அதற்கு விளக்கம் தர இயலாது,(பின்ன என்னத்துக்கு இந்த கட்டுரை என கோபப் படாதீர்கள்) ஆனால்  அதை விளங்கிக் கொள்ள இயலும் .

காதலை வார்த்தைகளில் சொல்ல முற்படுகிற முயற்சிகள் அத்தனையும் பெரும்பாலும் கவிதையாய் வடிவெடுக்கக் காரணம் அதன் இந்த "விளக்க முடியாது ஆனால் விளங்கிக்கொள்ள முடியும்"  என்கிற விசித்திர மிஸ்ட்ரித்தனத்தினால் தான்.

யோசித்துப்பார்த்தால் மிஸ்ட்ரி மாதிரி தான் தெரிகிறது , எதையும் தன்னால் விளக்க முடியும் என்கிற  விஞ்ஞானம் காதல் என்கிற வஸ்துவை  ஹார்மோன்கள் செய்யும் விளைவின் கெமிஸ்ட்ரி என்கிறது.

 கண்ணுக்குத் தெரியாத மிஸ்டரியா  இல்லை கண்ணுக்குத்தெரிந்த  கெமிஸ்டரியா என இந்த கட்டுரையில் காதலை ஆராயலாம்.

காமம் - காதல்- கண்ணாமூச்சி:

"Sex is the genesis of Love"
                                       -Osho


     "இந்த பிரபஞ்சத்திலுள்ள அத்தனை விசயங்களும்
      சமநிலையை நோக்கியே பயணிக்கின்றன ".

எதிர் எதிர் விசயங்களின் இணைவு தான் சமநிலை,அதுவே முழுமையும் கூட.இரவும் பகலும் இணையும் போதுதான் ஒரு நாள் முழுமை பெறுகிறது, எதிர்களின் இணைவுதான் முழுமை என்பதை கொஞ்சம் யோசித்தால் நாம் புரிந்து கொள்ள முடியும் இருட்டு-வெளிச்சம்,இன்பம்-துன்பம்,இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்,

இது போலவே ஆண் பெண் இணைவும் முழுமையை சொல்கிறது.ஆண் மீது பெண்ணும், பெண் மீது ஆணும் கொள்ளும் ஈர்ப்பு சம நிலைக்கான தேடல் தான்.

ஒரு குழந்தை தாயின் கர்பத்தில் உருவாகும் போது அது ஆணாகவோ பெண்ணாகவோ உருவாவதில்லை, ஆண்தன்மை,பெண்தன்மை இரண்டும் ஒருங்கே பெற்ற நிலையாக உருவாகிறது.இந்த நிலையை இரண்டுமற்ற நிலை(ரெண்டுங்கெட்டான்) என்று சொல்வதை விட இரண்டுமான நிலை என்று சொல்வது பொருந்தும்.ஒருவார காலம் வரை அந்த குழந்தை ஆண்,பெண் இரண்டும் கலந்த அர்த்தநாரியாகவே அதாவது 100% முழுமையானதாக இருக்கிறது (விஞ்ஞானம் இதனை ஆதரபூர்வமாக நிரூபித்துள்ளது).ஒரு வாரத்திற்கு பிறகே அது ஆணாகவோ, பெண்ணாகவோ மாற்றம் அடைகிறது.ஆணுக்கும் மார் காம்புகள் இருப்பதற்கு இது தான் காரணம் என்கிறது அறிவியல். அப்படி அந்த கரு ஆணாக மாற்றம் அடையும் போது பெண் என்கிற தன்மையை தன்னகத்தே இழந்து விடுகிறது.பெண்ணாக மாற்றம் அடையும் போது ஆண் என்கிற தன்மையை தன்னகத்தே இழந்து விடுகிறது.

ஆண்,பெண் என்று அந்த குழந்தை பால் வேறுபாட்டுடன் பிறக்கும் போது முழுமையின் இழப்பாகவே பிறக்கிறது.இழந்துவிட்ட பாகத்தை இணைத்துக்கொள்ள ஆர்வம் கொள்கிறது.ஒரு உயிர் முழுமை பெற வேண்டுமானால் ஆண்,பெண் இணைவு அவசியமாகிறது.(சில ஞானிகளும்,யோகிகளும் தங்களுக்குள் மறைந்துவிட்ட அந்த ஆண் அல்லது பெண் தன்மையை இணைத்துக் கொண்டு பிற உயிரின் துணையின்றியே முழுமை பெறுகிறார்கள்,ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமில்லை)

முழுமை பெற வேண்டும் என்ற பேரார்வம் ஆணுக்கு பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் ஈர்ப்பாக பரிமானம் எடுக்கிறது.
இந்த ஈர்ப்பு தான் காமம்.காமத்தின் காரணமாகத்தான் பூ மலர்கிறது, குயில் கூவுகிறது,தோகை விரித்து மயில் ஆடுகிறது.

தூய காதல் என்பது மனசை பார்த்து வருவது, உடம்பை பார்த்து வருவதெல்லாம் உண்மையான காதலாக இருக்காது என டயலாக் பேச ஆசையாகத் தான் இருக்கிறது, நிதர்சனமாக சொல்லவேண்டுமென்றால் காதலில் காமம் கலந்து இருக்கிறது, இந்த உலகத்தில் காமம் இருப்பதினால் தான் இந்த காதலும் இருக்கிறது.

 செவ்வி தலைப்படுதல் :

 இன்னொன்றும் சொல்லியாக வேண்டி இருக்கிறது, உதாரணமாக தாகம் என்பது ஒரு உணர்வு , தாகமெடுத்தால் நீர் தேடுகிறோம்,குடிக்கிறோம். நீரை பார்க்கிற போதெல்லாம் எனக்கு தாகமெடுக்கிறது என்றால் அது நோய்மை, அது அரோக்கியமானதன்று, அப்பேர்ப்பட்ட , 'சீர்கெட்ட, நீர் ண்ட  போதெல்லாம் அதை தாகத்தோடு அணுகும் ஒரு சமூகத்தை ' உருவாக்கி வைத்திருக்கிறோம் நாம்., தாகம் கொண்டு பானையை உடைக்கும் கயவர்களுக்கு தண்டனைகளைக் கொடுப்பதைப் பற்றிய பேச்சை எடுக்கும் நாம்., இந்த நோய்மை சமூகத்துக்கு மருந்து கண்டறிந்து கொடுக்க வேண்டும் என யோசிக்க வேண்டும்.

மொழியின் பண்பட்ட வடிவம் கவிதை என்பது போல, காமத்தின் பண்பட்ட வடிவை காதல் எனலாம்.

உலகின் நிலைப்பாட்டிற்காக இயற்கை நமக்குள்ளே வைத்துள்ள ரகசியம் காமம்.

கோபம்,சந்தோசம்,அழுகை இது போல காமம் என்பதும் ஓர் உணர்வு,ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் முன் இடம்,பொருள்,ஏவல்...காலம்,நேரம்,பின் விளைவு என சகலவிதமான முறைகளில் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். இது காம உணர்வுக்கும் பொருந்தும்.இல்லையென்றால் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வேறுபாடு இல்லை.

"எல்லா உயிர்களின் உள்ளேயும் காமமாய் உருவெடுத்து நிற்கும் தேவியே ! உன்னை வணங்குகிறேன்"  - என்ற அர்த்தத்தில்  ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் இருக்கிறது .(உடனே ஸமஸ்கிருதத்தை எதிர்க்க கிளம்பி விடாதீர்கள் ! . இதன் ஆழ்ந்த அர்த்தத்தை அரை நொடி அசைபோடுங்கள்., நல்ல விசயங்கள் எங்கிருந்தாலும் ஏற்றுக்கொள்வது தான் தமிழன் கலாச்சாரம்).

கலாச்சாரம், நாகரிகம் என்றெல்லாம் நாகிழிய வக்கணையாக பேசுகிறோமே! அதெல்லாம் போலித்தனமான கேலிக்கூத்து தானோ என நினைக்கத்தோன்றுகிறது.பழந்தமிழ் இலக்கியங்களில் சர்வ சாதரணமாக பேசப்பட்ட விசயங்களையெல்லாம் இந்த நவநாகரிக யுகத்தில் கெட்ட வார்த்தைகளாக மாற்றி வைத்திருக்கிறோம்

 "
மலரினும் மெல்லியது காமம் -சிலரதன் 
செவ்வித் தலைப்படுவார்                                    -  திருக்குறள்: 1289

                                                               "

மலரை விட மெல்லியது என  வள்ளுவன் சொல்கிறான், மலரைவிட மெல்லியது என நாம் நினைக்க வேண்டிய விசயத்தை கொலை ஆயுதத்தின் கொடியதாக சித்தரித்து வைத்திருக்கிறோம்.

ஒரு பெண்ணை நான் இச்சையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற கண்ணோட்டதில் பார்ப்பதற்கும் காதலோடு பார்ப்பதற்கும் ஒரு மெல்லிய கோடு தான் இருக்கிறது.,அதைத் தான் இந்த வள்ளுவன் செவ்வி தலைப்படுவர் சிலர் என்கிறானோ என்னவோ ! .

காமம் என்கிற அந்த ஜீவசக்தியை எதிர்த்து போரிட்டு ஒழிக்க முற்படுவதெல்லாம் கடைந்தெடுத்த முட்டாள் தனம், அதை புரிந்துகொண்டு கடந்து போக வேண்டும், காதல் என்பது அதற்கான  அநேக வழிகளில் ஒரு வழி.
 

Post Comment

Monday, February 06, 2017

"சகிக்கல" ஆட்சியில் தமிழகம்...


அன்பார்ந்த தமிழினமே!

நக்கலும் நையாண்டியுமாக பேசிச்செல்வதிலும்,பேஸ்புக்கில் கமென்ட் இடுவதிலும்,மீம்ஸ்,வீடியோ என காமெடி செய்து பகிர்வதிலும்,ரசிப்பதிலும் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு நிகரென இந்திய தேசத்தின் எந்த மாநிலத்தவரும் இல்லை, உலகின் எந்த நாட்டினரும் இல்லை என சர்வ நிச்சயமாக நம்புகிறேன்.

"இடுக்கன் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வதஃதொப்ப தில்"

என்ற அய்யனின் வாக்குப்படி செயல்படுகிறோமா , இல்லை இது இப்படித்தான் என சர்வசாதரணமாக எடுத்துக்கொண்டு நகரும் வகைக்கு மரத்துப்போன மனிதர்களாக ஆக்கப்பட்டு விட்டோமா !

"பீட்டாவை தடை செய்" "ஜல்லிக்கட்டு வேண்டும்" என கொதித்தெழுந்த சிங்கத் தமிழினமே , புரட்சிக்கு புதிய இலக்கணம் செய்து அறப்போராட்டமாக ஆர்ப்பாட்டம் செய்த வீரத் தழினினமே ! இலங்கையில் நம்மவரை சித்திரவதை செய்தபோது சேர்ந்தழுத அன்புத் தமிழினமே !

உரிமைகள் பறிக்கப்பட்டது குரல் கொடுத்தோம், உண்மைகள் மறுக்கப்பட்டது குரல் கொடுத்தோம். இது குரல் கொடுப்பதற்கான நேரம் என நம்புகிறேன்,உண்மைக்காக ,உரிமைக்காக உரக்கக் குரல் கொடுப்போம் என நம்புகிறேன்.

உலகின் அறிவார்ந்த இனம் என அறியப்பட்ட இனம், அறியப்பட்டுக்கொண்டிருக்கும் இனம் ஆள்வதற்கு ஆளின்றி நிராதராவாக நின்றுகொண்டிருக்கிறது.

வெட்கம்,வேதனை,வருத்தம்

மக்களால் மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சிக்குப்பெயர் தான் மக்களாட்சியாம். எம் மக்கள் ஒட்டுமொத்தமாக வேண்டாமென சேர்ந்தொதுக்கும் ஆட்சி எப்படி எங்களுக்கு மக்களாட்சி ஆகும்.

எண்ணம் தான் புரட்சியின் விதை, ஒரே எண்ணம் ஒன்றுபோலான எண்ணம்,ஒன்றுபட்ட எண்ணம். நாம் எண்ணத்தால் ஒன்றுபட்டிருக்கிறோம் என நம்புகிறேன், ஒற்றுமையாக செயல்படுவோம் என்றும் நம்புகிறேன்.

பேஸ்புக்கும், வாட்சப்பும் அமெரிக்க சந்தைப்பொருட்கள் தான், ஆனால் அவை கருத்துப்பறிமாற்றத்திற்கான சமூக வலைத்தளங்கள்., இவற்றைக்கொண்டு என்ன செய்துவிட முடியும் நக்கலும்,நையாண்டியும் செய்து மீம்ஸ்சும்,வீடியோக்களும் உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள முடியும், ஸ்டேட்டஸ் போட்டு , செல்பி எடுத்து லைக்குகள் வாங்க முடியும், பொழுதுபோக்க முடியும் ,அதே சமயம் , சமூகத்தின் அவலங்களை அடித்துநொறுக்கி அதை பழுதும் பார்க்க முடியும்.ஒத்த கருத்துடைய நபர்களை ஒன்றிணைத்துப் புரட்சியும் செய்ய முடியும்.

சமீபத்தில் (2011 ல்) எகிப்தின் துனீஷிய தேசத்திலே சர்வதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெகுண்டெழ காரணமாக இருந்த விதை யூட்யூபில் பதியப்பட்டு,பேஸ்புக்கில் பகிரப்பட்ட ஒற்றை வீடியோ தான் . மக்களை ஒன்றினைத்து புரட்சி செய்ய துணையாய் நின்றது பேஸ்புக் தான்.

அறிவார்ந்த தமிழினமே ! எதை செய்தால் மாற்றம் சாத்தியமோ அதை செய்ய துணிந்தெழு. சிரித்துவிட்டு நகர்வதிலும்,அழுது புலம்புவதிலும் பயனில்லை,பலனில்லை.

மீம்ஸ்களும் ,ஸ்டேட்டஸ்களும் தவறில்லை, நக்கல்,நையாண்டி,காமெடி என்பதையும் தாண்டி உன் அறிவை பட்டைத்தீட்டு ,மாற்றம் சித்திக்கும் என மனதாற நம்பு., ஒன்றுபட்ட மனங்களை ஒன்று திரட்டு ஒன்றாய் போராடுவோம் !

இது மக்களாட்சி, நம் தேசம் ஜனநாயக தேசம், என்ன செய்தால் தீர்வு கிடைக்கும் என தீர்மாணி, அறிவையையும் உணர்வையும் சரியாக கையாண்டு தீர்வு கொள் !

 

Post Comment

Sunday, January 01, 2017

பெண் கட்டிய காதல் மாளிகை : ஊர் சுற்றியின் குறிப்புகள் -2

ஊர் சுற்றியின் குறிப்புகள் -2 

@  சந்திரப்பூர், மகாராஷ்ட்ரா

இந்த சந்திரப்பூர் நகரத்தில் இத்தனைப்பெரியதாய், பிரம்மாண்டமாய் ஜர்பத் நதிக்கரை ஓரமாக இத்தனை கவித்துவமாக , அன்ச்சாலேஸ்வரர் கோவிலுக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் இந்த கட்டிடம் பெண்ணொருத்தி கட்டிய  காதல் நினைவுச்சின்னம் என்பதை அறிந்த போது, இது பற்றி கட்டாயம் எழுதியே ஆக வேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். 

ராஜா -ராணி கதை

காதல் கோட்டை        

முன் குறிப்பு:
கடந்த பதிவில்  சந்திரப்பூர் நகரம் சுற்றி பரவியிருக்கும் சுவரின் கதையையும், அன்ச்சாலேஸ்வரர் கோவிலின் கதையையும் எழுதியிருந்தேன். நாய் ஓடுச்சாம், முயல் துரத்துச்சாம் இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு என சிலர் என்னிடம் கேட்டிருந்தனர். இது போன்ற கதைகள் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றன,  வளர்ந்துவிட்ட நகர மனிதர்களுக்குள் இருக்கும் குழந்தைத்தனங்களை தொட்டுச்சீண்டும் விரல்களாய் இருக்கின்றன. முயல் துரத்தியதா, நாய் ஓடியதா, உண்மையிலேயே ராஜா பல்லார்ஷா தான் அந்த சுவரை நிர்மாணித்தானா? என்றெல்லாம் நானும் பார்த்ததில்லை தான் , ஆனால் ஊரைச்சுற்றி சுவர் இருக்கிறது, மக்களிடையே இந்த கதையும் இருக்கிறது.

ராணி கட்டிய நினைவுச்சின்னம்:


இந்திய வரலாற்றிலேயே இந்த வகையிலான கட்டிடம் இது ஒன்று மட்டும் தான், (உலகிலேயே என்று சொல்லலாமா என தெரியவில்லை !!). ஒரு பெண் ஆணுக்கென்றொரு நினைவுச்சின்னத்தை கட்டியுள்ள கதை எனக்கு புதியதாய் இருந்தது.

மன்னர்களின் பட்டியல்

 ராணி ஹிராய் :பட்டியலில் 17 வதாக இருக்கும் வீர்ஷா வின் (Bir sah - என்று இருக்கிறது, வெள்ளைக்காரனுக்குத்தான் நம்ம மொழி நாக்குல வராதே. ) மனைவி. ராணி ஹிராய் - வீர்ஷா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை இல்லை, ஒரேயொரு மகள்.

குழந்தைப்பருவம் கடந்து குமரியாகிவிட்ட பிறகு இளவரசியை சந்திரப்பூரின் அருகேயிருக்கும் தேவ்காட் என்கிற ஊரின் இளவரசன் துர்க்காஷாவிற்கு மணமுடித்துக் கொடுக்கின்றனர். அவன் இளவரசிக்கு தொடர்ந்து தொந்தரவுகள் தரவே தந்தையிடம் வந்து முறையிடுகிறாள் மகள், படையெடுத்துச் சென்று பலிதீர்க்கிறான் வீர்ஷா. படையெடுத்து பலிகொண்ட துர்க்காஷாவின் தலையை சந்திரப்பூரிலுள்ள மகா காளிதேவிக்கு படையலாக வைக்கிறான். (வீரம் என்பதா விசித்திரம் என்பதா !).
 
ராஜா வீர்ஷா அவுரங்கஷீப் காலத்தில் நடந்த ஒரு மொகலாய  படையெடுப்பில் , ராஜா வீர்ஷா தனக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நேரமது. ராஜபுத்திர மன்னன் ஹிராமனால் கொல்லப்படுகிறான் .

ஹிராய்-வீர்ஷா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் 1704  முதல் 1719 வரை 15 வருடங்கள் அவளே ஆட்சிப்பொறுப்பை கையிலேற்றுக்கொண்டு சந்திரப்பூரை ஆட்சி செய்ய துவங்கினாள். (1691 ல் ராம்ஷா என்கிற சிறுவனை தத்தெடுத்து அவனை அரியணை ஏற்றிவைத்ததாகவும் குறிப்புகள் கிடைக்கின்றன). 15 வருடங்களுக்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை தமது தத்துமகன் ராம்ஷாவிடம் ஒப்படைத்துவிடுகிறாள்.

அவளது ஆட்சி காலத்தில் அவள் தனது கனவனுக்கென  ஒரு நினைவுச் சின்னத்தை கட்டுகிறாள். அழகிய கலை வேலைப்பாடுகளுடன், சிற்பங்களுடன் கூடிய அந்த காதல் மாளிகையை கட்டுகிறாள்.

சுற்றிலும் மதில் சுவர்களுடன் பெரிய அழகிய மாளிகைபோல இருக்கிறது ராஜா வீர்ஷாவின் சமாதி.

இந்த மாளிகையின் நுழைவுவாயிலில் இருக்கும் கிளியின் உருவம்,பூ வேலைப்பாடுகள் மற்றும் கல்லில் நுணுக்கமாக செதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்த ஜன்னல்கள் , கட்டிடத்தின் மீது ஒய்யாரமாக நின்று கொண்டிருக்கும் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.

மகராஷ்ட்ரத்திலேயே ஒரு ராஜாவுக்கு என  அமைந்த மிகப்பெரிய நினைக்கட்டிடம் இது தான் . அது மட்டுமின்றி இந்தியாவிலேயே ஒரு பெண் தனது காதலின் நினைவாக எழுப்பிய நினைவுக்கட்டிடம் இது மட்டும் தான்.வீர்ஷாவின் சமாதி (long shot)
வீர்ஷாவின் சமாதி (close up shot )

மஹாகாளி மந்திர்:


                                    


அதன் பிறகு தனது கனவன் துர்க்காஷாவின் தலையை பலியாக கொடுத்த அந்த மகாகாளி தேவியின்  கோவிலையும் மறுசீரமைப்பு செய்து கட்டுகிறாள். அந்த கோவிலின் சிற்ப வேலைப்பாடுகளும், வாயிற்கதவுகளும்,ஜன்னல்களும் அழகிய கலை நுணுக்கங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறன .ாணி ஹிராய் கட்டினாகாளி கோவில்

மகாகாளி கோவிலில் கூட்டம் எந்நேரமும் அலைமோதுகிறது, நம்மூர் காளி கோவில்கள் மாதிரியே கெடா ,சேவல் வெட்டி சோறு பொங்க கூட்டம் கூட்டமாக கூடமெங்கும் மக்கள் கூடியிருக்கிறார்கள்.மாவிளக்கு போடுகிறார்கள். 
சுயம்பு உருவில் மஹாகாளி அம்மன்
இந்த மகாகாளி அம்மன் இருக்கும் கர்பகிரகம் நிலத்திற்குக் கீழ் அமைந்துள்ளது. படியிரங்கி, தலைகுனிந்து உள்ளே சென்றுதான் அம்மனை தரிசிக்க முடியும். (தலைவணங்கி உள்ளே சென்றால் தான் காளியின் தரிசனம் ).
உறங்கும் அம்மன் : நித்ரா தேவி
இந்த கோவிலில் சுரங்கப்பதை போன்று பாதை வழியாக சென்றால் இன்னுமொரு அம்மன் சிலை உள்ளது உறங்கிய நிலையில். இவளை உறக்கத்தின் கடவுள் என சொல்லுகிறார்கள்.(இந்த சுரங்க வழி காலையிலும் ,மாலையிலும் மட்டுமே திறக்கப்படுகிறது,மதியான நேரத்தில் பூட்டப்பட்டு இருக்கும்).

மஹாகாளி கோவில் சுவர் ஓவியம்
ாகாளி கோவிின் உத்ிரம் ிக்க:  ல்ேலைப்ப


தனது  கனவனின் நினைவாக நினைவு மாளிகை கட்டி, கனவனின் வெற்றிச்சின்னமாக காளிகோவிலைக்கட்டி வீரமங்கையென சந்திரப்பூரை ஆட்சி செய்த அந்த ராணி ஹிராய் யியை மனதில் நினத்து வியந்தபடியே அந்த கட்டிடத்தை சுற்றிக்கொண்டிருந்தேன்.

காதல்- கோட்டைச் சிற்பங்கள்
பின் குறிப்புகள்: 
 
ராணி ஹிராயி கட்டிய காதல் கோட்டை பராமரிப்போ,பாதுகாப்போ இல்லாமல் கிடப்பதால் காதல் பறவைகள் சில தங்கள் நினைவுக்குறிப்புகளையும், ஹார்ட்டின் அம்பு சகிதமாக தங்கள் பெயர்களையும் இந்த கட்டிட சுவர்களில் கிறுக்கி வைத்துள்ளன.

ஆள் அரவமற்ற ஊர் ஒதுக்க பகுதியாக இருப்பதால் சிலபல ஜோடிகள் இங்கு கட்டிட மறைவுகளில் கைகோர்த்தபடி காட்சியளிக்கிறார்கள்.

இத்தனை சிறப்பு வாய்ந்த கட்டிடம் சீண்டுவோர் அற்று கிடப்பது தான் மனவேதனையாக இருந்தது.
                                                                                                                                                       பயணம் தொடரும்
...

 

Post Comment