Monday, December 26, 2016

ஊர்சுற்றியின் குறிப்புகள் -1

யாதுமாகி நின்றாய் !

யாதுமாகி நின்றாய் காளி எங்கும் நீ நிறைந்தாய்
தீது நன்மை யாவும் நின்றன் திவ்ய லீலையன்றோ
                                                                                           -பாரதி

இடம் @சந்திரப்பூர் - மகராஷ்ட்ரா

முன் குறிப்பு:
பணி நிமித்தமாக ஒருவாரமாக இங்கு தான் இருக்கிறேன், ஒருவழியாக கதை,வரலாறு,கலாச்சாரம் என்று கொஞ்சம் தகவல்கள்  சேர்த்தாயிற்று , சுற்றிப்பார்க்க எத்தனித்திருந்த இடங்களையும் பார்த்தாயிற்று, கட்டுரை எழுத வேண்டியதுதான் பாக்கி :) விக்கிப்பீடியாத்தனமாக தகவல் குறிப்புகளாக இல்லாமல் பயணக்குறிப்புகளாக ...

சந்திரப்பூர்: மகராஷ்ட்ர மாநிலத்தின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று. மாவட்ட தலைநகர். இயற்கைவளமும், கனிம வளமும் நிறைந்த பூமி, காடு சூழ் நிலப்பரப்பு.

நிலக்கரி, இரும்புத்தாது ,காப்பர் தாது, சிமென்ட் உற்பத்திக்கான தாதுக்கள் என கனிம வளம் கொழிக்கும் ஊராக இருப்பதால் ஊரைச்சுற்றிலும் சுரங்கங்களும், ஆலைகளும், தொழிற்சாலைகளும் நிறைய இயங்குகின்றன. அனல் மின் நிலையம் ஒன்றும் இருக்கிறது . (மகராஷ்ட்ராவின் மிகப்பெரிய அனல் மின் நிலையம்  (3340MW)).

கருப்புத்தங்க நகரம், தொழில் நகரம் , மகராஷ்ட்ரத்தின்  அதிக மாசுநிறைந்த நகரம். சந்திரப்பூர்

இந்த ஊரின் எந்த திசையில் சென்றாலும் பெரிய பெரிய மதில் சுவர்களும், பெரிய நுழைவாயில்களும் (15, 20 அடி உயர வாயில்கள்) நிறைந்திருக்கின்றன, இந்த ஊரின் வரலாற்றை வாசித்து அதை இந்த கட்டுரையில் நான் எழுத இந்த சுவர்களும், நுழைவாயில்களும் தான் முக்கிய காரணம். :) .


நான் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள சுவர்


சுவரின் கதை:

எட்டாம் நூற்றாண்டின் பாதிகளில் துவங்கி 1700 வரைக்குமாக சுமார் எட்டரை நூற்றாண்டு காலமாக சந்திரப்பூர் நகரம் (ஆப்போது சந்திரப்பூர் என் கிற பெயர் சூட்டப்பட்டிருக்கவில்லை)  கோண்டு  என்ற பழங்குடியின மன்னர்களின் ஆட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறது. 

சந்திரப்பூர் நகரை நிர்மாணித்த பெருமை அந்த மன்னர்களின் பட்டியலில் பத்தாவதாக வந்த  பல்லால்ஷா வையே சாரும்.

ராஜா காண்ட்க்ய பல்லால்ஷா:

(Ballal sha)பல்லால் ஷா

 அவரது தந்தை செர்ஷாவின் மரணத்தினைத் தொடர்ந்து இள வயதிலேயே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார் பல்லால்ஷா .  சிர்ப்பூர் என்கிற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு  ராணி சமேத ராஜாவாக செவ்வனே ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

திடீரென ராஜா பல்லாஷாவின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது, உடல் முழுக்க கொப்புளம் கொப்புளமாக உருவாகிறது.எந்த மருத்துவம் செய்தும் பலன் ஏற்படவில்லை, ராணி ராஜாவை தனியாக ராத்தங்க சொல்கிறாள், ராஜா வார்தா நதிக்கரை அருகே ஒரு இடத்தில் வசிக்கத்துவங்குகிறார் , அந்த இடத்திற்கு  பல்லால்ப்பூர் என்று நாமகரணம் சூட்டி ஒரு கோட்டையை கட்டுகிறார்.

தற்போதைய சந்திரப்பூர் நகரம் இருக்கும் இந்த இடத்திற்குப்பக்கமாக  ஒரு நாள் வேட்டைக்கு  வந்திருந்தபோது  பல்லால்ஷாவிற்கு தாகம் எடுத்திருக்கிறது, சுற்றிலும் தண்ணீரை தேடுகிறார் கிடைக்கவில்லை, ஜர்பத் நதி வற்றிப்போய்க் கிடக்கிறது. ஜர்பத் நதியின் வற்றிய நதிக்கரையை வலம் வந்த ராஜாவின் பார்வையில் ஒரு நீர் சுணை கண்ணில் படுகிறது, அந்த சுணையின் துளையிலிருந்து சுரந்து வந்த அந்த நீரை குடித்துவிட்டு முகம் கை கால் கழுவி கொண்டு குதிரையேறி அரண்மனைக்குச் செல்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல உறக்கம் கொள்கிறார். வழக்கம்போல அடுத்த நாள் காலை ராணியைப் பார்க்க சிர்ப்பூர் சென்றிருந்த போது, ராஜாவின் முகத்திலும்,கைகளிலும் கொப்புளங்கள் குறைந்திருந்ததை கண்ணுற்ற ராணி வியந்துபோய் காரணம் கேட்கிறாள், ராஜா முந்தின நாள் தான் நீர் அருந்திய கதையை சொல்கிறான், தானும் அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என கேட்கிறாள் ராணி , ராஜா குதிரையிலேற்றிக் கூட்டிச்செல்கிறார்.

ஜர்பத் நதிக்கரை - புல் வெளி - கரையோற கல் சுணை- அந்த கல்லில் பசுவின் பாத குழம்படிகள் வடிவில் இருந்த ஐந்து துளைகளின் வழியாக நீர் சுரந்துகொண்டிருந்தது, சுரந்தபடியே இருந்தது. ராஜா அந்த நீரில் குளிக்கிறான், கொப்புளங்கள் அத்தனையும் மாயமாக மறைகின்றன.

அன்ச்சாலேஸ்வரர் கோவிலில் அடியேன்


அரண்மனை திரும்பி துயில் கொள்கின்றனர்,தம்பதியர் இருவரும். ராஜாவின் கனவில் சிவ பெருமான் தோன்றி அந்த புனித நீர் இருந்த இடத்தில் ஒரு கோவிலை கட்டும்படி கூறுகிறார். ராஜா தான் கண்ட கனவை ராணியிடம் கூறுகிறார்.ராணியும் , ராஜாவை அந்த புனித நீர் இருக்கும் புண்ணிய இடத்தில் கோவில் ஒன்றை நிர்மாணிக்கக் கோருகிறாள். ஜர்பத் நதிக்கரையையொட்டி ராஜா பல்லால்ஷா அன்ச்சாலேஷ்வரர் கோவிலை கட்டுகிறார்.இந்த கோவிலில் இருக்கும் சிவபெருமான் உருவத்தில் ஆவுடையார் மட்டுமே இருக்கிறது , லிங்கம் இல்லை, ஆவுடையாரின் உள்ளே கைக்கெட்டாத ஆழத்தில் சுணை இருக்கிறது. அதை இறைத்து தெளிக்க ஒரு குவளையும் கட்டித்தொங்கவிடப்பட்டுள்ளது.

கோவில் கட்டும் பணியை பார்வையிட வருகை புரிவதை வழக்கமாக்கிக்கொண்டு தினசரி அரண்மனைக்கும் ,நதிக்கரைக்குமாக வந்து திரும்பிக்கொண்டிருந்தார் பல்லால்ஷா. அப்படி திரும்பிக்கொண்டிருந்த ஒரு நாள் முயல் ஒன்று நாயொன்றை துரத்திச்செல்லும் விசித்திர காட்சியை காண்கிறார் ராஜா, துரத்தும் அந்த முயலை ஆச்சர்யமும் விரைவுமாக குதிரைப்பாய்ச்சலில் பின் தொடர்ந்து செல்கிறார். துரத்திக்கொண்டிருந்தது  முயல், பயந்து ஓடிக்கொண்டிருந்தது நாய், பல கி.மீ க்களாக பயந்து ஓடிக்கொண்டிருந்த நாய் துவங்கின இடத்திற்கு வந்ததும் வெறித்தனமாக திரும்பி முயலை முழுங்கிவிடுகிறது. ஆச்சர்யத்தின் உச்சத்த்தில் களைத்துப்போய் அரண்மனை திரும்பிய ராஜா, இந்த விவரங்களை ராணியிடம் கூறுகிறார்.முயலின் நெற்றியில் பிறை வடிவ சந்திரக்குறியீடு இருந்ததையும் கூறுகிறார்.

"இது ஒரு நல்ல சகுனம் ,  முயல் நாயைத்துரத்திக்கொண்டுபோன அந்த இடத்திலெல்லாம் கோட்டைச் சுவர் எழுப்புங்கள், நாய் முயலை எதிர்த்து தோற்றுப்போன இடத்திலும், நாய் முயலை கொன்ற இடத்திலும் கோட்டை அரண் கொண்ட முகப்பு கட்டுங்கள்"., என்கிறாள் ராணி.

ராணியின் வார்த்தைகளுக்கிணங்க  ராஜா சுவர்சூழ் நகரை கட்டுவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்கிறான், அன்ச்சாலேஷ்வரர் கோவில் கட்டும் பணியும் இணையில் (Parallel ஆக) நடந்து கொண்டிருக்க, கோட்டைச்சுவரும்,தடுப்பு அரணும் கொண்ட அந்த கோட்டை சூழ் பட்டினத்தை நிர்மாணிக்க ஆரம்பிக்கிறான்.

எட்டு வாசல் , இரண்டு சுவர்முன் முகப்புகள்,  சுற்றிலும் சுவர் சூழ சந்திரப்பூர் கோட்டைப்பட்டினம் உருவெடுக்க ஆரம்பித்தது.

                                                                                                                   பயணம் தொடரும்....சமர்ப்பணம்:
நீண்ட நாட்களாக உருப்படியாக எதையும் எழுதவில்லை என்று அடிக்கடி என்னை திட்டித்தீர்க்கும் அன்பு நன்பன் வெற்றிவேலிற்கு இந்த தொடர் பதிவு சமர்ப்பணம். 

Post Comment

Sunday, November 27, 2016

கலகல வகுப்பறை

கலகல வகுப்பறை
****************************
‘கலகல வகுப்பறை’ என்ற தமது அமைப்பின் மூலம், வகுப்பை எப்படி கலகலப்பாக நகர்த்தலாம் என்று ஆர்வமுள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி முகாம்களை நடத்திவரும் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் சிவா, ரமணன், பாலமுருகன், முத்துக்குமார் மற்றும் இவர்களோடு இணைந்து செயல்பட்டு வரும் முதுகலை ஆசிரியர் தோழர் சுரேஷ் காத்தான் ஆகியோருக்கு, இரண்டு விஷயங்களுக்காக என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
1) முதலில் ‘கலகல வகுப்பறை’ என்ற இந்த தலைப்புக்காக.
2) இரண்டாவதாக, வகுப்பறைகள் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பதே அரிது. அடுத்தகட்டமாக, தமது வகுப்பறைகளை கலகலப்பாகக் கொண்டுசெல்ல முயற்சிப்பது என்பது இன்னும் கொஞ்சம் கூடுதலான அரிய செயல். தமது வகுப்பறைகளையும் கடந்து, ஆர்முள்ள ஆசிரியர்களை அடையாளம் கண்டு, அவர்களது வகுப்பறைகளையும் கலகலப்பாக மாற்றுவதற்காக அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது என்பது எழுந்து நின்று வணங்குவதற்குரிய தகுதியைப் பெற்றது.
ஒரு பள்ளியில் ஆகச் சிறந்த வகுப்பறையாக ஒரு வகுப்பறையைத் தேர்ந்தெடுத்து அதற்கு விருது வழங்குவதற்காக ஒரு குழுவினரோடு அந்தப் பள்ளிக்குச் செல்வதாக வைத்துக்கொள்வோம். எந்த வகுப்புக்கு அந்த விருது போய்ச் சேரும் எனில், அந்தப் பள்ளியிலேயே மிகவும் அமைதியான வகுப்பறைக்காகத்தான் அது இருக்கும். இது குறித்து பேசும்போது, அந்தக் குழுவைச் சார்ந்த யாரோ ஒருவர், அந்த வகுப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களைப் பற்றிப் பேசும்போது, தன்னையும் அறியாமல் இப்படி சொல்லிவிடவும் கூடும் -
‘இப்படி ஒரு அமைதியை நான் எங்கும் பார்த்ததில்லை. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி’
உண்மையும் அதுதான். எந்த வகுப்பறை அமைதியாக இருக்கிறதோ அதுதான் மிக நல்ல வகுப்பறை என்றுதான் இன்றைய பொதுப்புத்தி எடுத்துக்கொள்கிறது. அமைதிதான் சிறப்புக்கான அளவுகோல் என்று கொள்வதெனில், இந்த வகுப்பறையை விடவும் இந்த ஊரின் மயானம் மிக அமைதியாக இருக்குமே. அமைத்திக்குதான் விருது என வைத்துக்கொண்டால், அந்த விருதை மயானத்துக்கு அல்லவா கொடுக்க வேண்டும்.
வகுப்பை அமைதியாக வைத்திருக்கும் ஆசிரியரே சிறந்த ஆசிரியராகக் கொள்ளப்படுகிறார். ‘அவர் வகுப்பில் இருந்தால் அந்த வகுப்பு அமைதியாக எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கும்’ என்று அதை சிலர் நியாயப்படுத்தவும் செய்வார்கள். மாணவர்களைப் பேசாமல் பார்த்துக்கொள்வது ஆசிரியரிடம் எதிர்பார்க்கப்படும் ஒரு குணம் என்றால், மயானக் காவலர் இதைவிட பேரமைதியை கட்டிக் காக்கிறாரே. ‘எனில், ஆசிரியரைவிடவும் மயானக் காவலர் அமைதியைப் பேணுவதில் சிறந்தவர்தானே’ என்று கேட்டால், ‘பிணங்கள் பேசாதே’ என்று பதிலுரைக்கக்கூடும். பிணங்கள்தான் பேசாதே என்றால், அதே குணத்தை மாணவர்களிடமும் எதிர்பார்ப்பது தவறல்லவா?
இன்னும் சரியாகச் சொல்வதெனில், மாணவர்களைப் பேசவிடாமல் ஒரு ஆசிரியர் பார்த்துக்கொள்கிறார் என்றால், அவர் இருக்கும்வரை அந்த வகுப்பு மாணவர்களைப் பிணங்களைப்போல பாதுகாக்கிறார் என்றுதானே பொருள். அது குற்றமல்லவா?
தனது வகுப்புகளை அமைதியாகப் பராமரிக்கும் ஆசிரியர்களைப் பெற்றோர்களே மிகச்சிறந்த ஆசிரியர்களாகப் பார்க்கிறார்கள்தான். தங்களது பிள்ளைகளை நாற்பத்தி ஐந்து நிமிடம் பிணங்கள் மாதிரி வைத்திருக்கும் ஒரு நபரைக் குற்றவாளியாகப் பார்க்காமல், ஆகச் சிறந்த ஆசிரியராகப் பார்ப்பதற்கான காரணம் எளிதானது. தம் பிள்ளையைப் பிணம் மாதிரி நடத்துகிறார் என்கிற உண்மையை அவர்கள் உணராதிருக்கிறார்கள். தமது வகுப்பை அமைதியாகப் பராமரிப்பது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிற ஆசிரியரும், தமது வகுப்பில் பிள்ளைகளைப் பாடம் கவனிக்கும் பிணங்களாக வைத்திருக்கிறோம் என்கிற உண்மையை முழுமையாக உணராதிருப்பதே அவர் அப்படி நடந்துகொள்வதற்குரிய காரணமாக இருக்கிறது.
இவ்வாறு விவாதத்தைத் தொடங்கும்போது, எடுத்த எடுப்பிலேயே ஒரு ஐயம் கிளம்பும். வகுப்பிலே மாணவர்களைப் பேச அனுமதித்தால், அது கற்றலை சேதப்படுத்தாதா?
இல்லை, அப்படியெல்லாம் ஒருபோதும் நிகழ்ந்துவிடாது. எவ்வளவுதான் அறிவைப் புகட்டி அனுப்பினாலும், பிணத்தின் குணத்தோடு மாணவனை வெளியே அனுப்பினால், அவன் அறிவுள்ள ஒரு பிணமாகத்தானே இருப்பான். தான் சார்ந்த துறையில் அவன் பெற்றிருக்கும் அறிவானது, அந்தத் துறையில் அவனை மிக உச்சத்துக்குக் கொண்டுபோகவே செய்யும். தன் துறை சார்ந்த பிரச்னைகளை, சிக்கல்களை மிக எளிதாக அவனால் கையாள இயலும். ஆனால், சமூகம் சார்ந்த, மண் சார்ந்த எந்த ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் அவனது தலையீடோ பங்களிப்போ இருக்காது.
இது மாதிரியான மாணவர்களைத்தான் இங்கிலாந்து தனது காலனி நாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து எதிர்பார்த்தது. இப்படி ஒரு கல்வித் திட்டத்தைத்தான் இந்தியாவில் வடிவமைக்க வேண்டும் என்று மெக்காலேவும் இங்கிலாந்து அரசாங்கத்துக்குப் பரிந்துரைத்தார். அதை அச்சுப் பிசகாமல், அப்படியே இங்கிலாந்தும் வடிவமைத்துத் தந்தது. எது நடந்தாலும் கேள்வி கேட்காத, சுதந்தரம் பற்றிய சொரணை உணர்ச்சி துளியும் அற்ற, சகலமும் மரத்துப்போன இந்திய ஊழியர்களை இங்கிலாந்துக்கு ஏராளமாக இந்தக் கல்விமுறை அள்ளி வழங்கியது.
இந்தக் கல்வித் திட்டத்தின் மூலம் இரண்டு லாபங்களை இங்கிலாந்து அனுபவித்தது.
1) இங்கிலாந்திலிருந்து அலுவலகப் பணியாளர்களை இந்தியாவுக்குக் கொண்டுவந்தால், அவர்களுக்கு நிறைய ஊதியம் தர வேண்டும். அந்த வேலையை செய்யக்கூடிய ஊழியர்களை இந்தியாவிலேயே தயாரித்ததன் மூலம் குறைந்த ஊதியத்துக்கு அவர்களுக்கு ஊழியர்கள் கிடைத்தார்கள். இதன்மூலம், அவர்களுக்கு செலவு மிச்சமானது. பச்சையாகச் சொல்லப்போனால், அவர்களது லாபம் அதிகரித்தது.
2) குறைந்த ஊதியத்தில் வேலை செய்கிறோம் என்ற உணர்வு மட்டுமல்ல, சுதந்தரத்தைப் பற்றியும்கூட நினைத்துவிடாத, மரத்துப்போன ஊழியர்களையும் இந்தக் கல்வித் திட்டம் இங்கிலாந்துக்குத் தந்தது.
காமன்வெல்த் போட்டிகள் நடந்தபொழுது, காமன்வெல்த்தில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை எழுந்தது. காமன்வெல்த் என்பது இங்கிலாந்து அடிமைப்படுத்தி வைத்திருந்த நாடுகளின் கூட்டமைப்பு. அதுவே ஒரு அடிமைத்தனத்தை பளிச்செனக் காட்டக்கூடிய ஒரு அமைப்பு.
சரியான, நாட்டுப்பற்றை அடித்தளமாகக் கொண்டிருக்கக்கூடிய கல்விக் கட்டமைப்பு இருந்திருக்குமானால், காமன்வெல்த் என்ற அமைப்பையே இந்த நாடுகள் நிராகரித்திருக்கும்.
நாட்டுப்பற்றை உறுதிமொழி எடுப்பதன் மூலம் மட்டும் கொண்டுவந்துவிட முடியாது. அதற்கேற்ற கல்விக் கட்டமைப்பை நாம் கட்டியாக வேண்டும். அதற்கு, இருக்கிற கட்டமைப்பை நாம் தகர்த்தெறிந்தாக வேண்டும். அதற்கு முன்னோட்டமாக இருக்கிற அமைப்பை விமர்சனத்துக்குக் கொண்டு போக வேண்டும்.
விமர்சனத்தையும் உடைசலையும் செய்யும் அதே வேளையில், சரியான மாற்றையும் ஒருசேர நாம் கொண்டு செல்ல வேண்டும்.
இதை, முற்றாய் முழுசாய் மேற்சொன்ன தோழர்கள் கையெடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், இத்தகைய காரியத்துக்கான கருவிகளுள் ஒன்றாக நான் இவர்களைப் பார்க்கிறேன்.
பெற்றோர்களிடம், இந்தக் கல்விக் கட்டமைப்பு அடிமைகளையே பெரும்பாலும் உருவாக்குகிறது என்பதைக் கொண்டு போக வேண்டும். இந்தக் கட்டமைப்பிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு பணிபுரிய வேண்டிய ஊழியர்கள்தான் ஆசிரியர்கள். இவர்களால் தனியாக இந்தக் கட்டமைப்பைச் செய்துவிட முடியாது. அது பெற்றோர்களும், பொதுமக்களும் முன்கை எடுக்க, ஆசிரியர்கள் கை இணைய வேண்டிய விஷயம்.
அதற்கான பிரசாரங்களை பொதுமக்களிடம் முன்னெடுக்க வேண்டும்.
அதேவேளை, வகுப்பறையை நல்ல மனிதர்களை உருவாக்கும் பட்டறையாக மாற்றிதர வேண்டிய அவசியம் ஆசிரியர்களுக்கு இருக்கிறது.
இதைச் செய்ய ஆசிரியர்களால் முடியும். எப்படி இதைச் செய்வது என்பதைத்தான் மேற்சொன்ன தோழர்கள் ‘கலகல வகுப்பறை’ என்ற தங்கள் அமைப்பின் மூலம் களமெடுத்து நகர்கிறார்கள். கரம் குவித்து வாழ்த்துகிறோம்.
எல்லாம் சரி, சத்தமான வகுப்பறைகள் கற்றலைக் கெடுத்துவிடாதா? ஒழுங்கீனத்தைக் கொண்டுவராதா? என்று சிலர் கேட்கக்கூடும். அவர்களுக்கு நமது பதில் இரண்டு.
1) வகுப்பறைகள் சத்தமாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல வகுப்பறைக்கான நிபந்தனை என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. அதேநேரம், அமைதியை நிபந்தனையாக்க வேண்டாம் என்ற கோரிக்கையைத்தான் முன் வைக்கிறோம்.
2) ஒழுங்கையோ, கற்றலையோ இது ஒருபோதும் பாதிக்காது என்பதற்குக் கீழ் வரும் சம்பவத்தை உதாரணமாகத் தருகிறோம்.
தோழர் பொன்னீலன் அவர்கள், முதன்மைக் கல்வி அலுவலராக இருந்தபோது, ஆண்டாய்வுக்காக ஒரு பள்ளிக்குப் போகிறார். அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரும் இவரும் நல்ல தோழர்கள். அனைத்து வகுப்புகளையும் முதன்மைக் கல்வி அலுவர்கள் ஆய்வு செய்வதில்லை. மாவட்டக் கல்வி அலுவலர் சில வகுப்புகளையும், உடன் வந்திருக்கும் ஆசிரியர்கள் வேறு வகுப்பகளையும் ஆய்வு செய்வார்கள். பொதுவாக, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளைத்தான் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.
ஆனால், தலைமை ஆசிரியரோடு இணைந்து பள்ளியை முற்றாகப் பார்வையிடுவார்கள். அதைத்தான் தோழர் பொன்னீலன் அவர்களும் செய்கிறார். அனைத்து வகுப்புகளையும் சுற்றிக்காட்டிய தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பை மட்டும் அவருக்குக் காட்டவில்லை.
தோழர் பொன்னீலன் அவர்கள், அந்த வகுப்பைப் பார்த்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்க, அதை தட்டிக் கழிப்பதில் தலைமை ஆசிரியர் குறியாக இருந்திருக்கிறார். அவரது விடாப்பிடியான கோரிக்கைக்கும், இவரது நழுவும் முயற்சிக்கும், இருவருக்கும் அவரவருக்கான நியாயங்கள் இருக்கவே செய்தன.
அப்படி ஒரு வகுப்பே இல்லை போலும். இல்லாத வகுப்பை கணக்குக் காட்டி, ஒரு ஆசிரியரைக் கூடுதலாக வைத்திருக்கிறார்போல. எனில், ஒரு ஆசிரியருக்கான சம்பளம் அரசுக்கு இழப்புதானே. இது நிரவலுக்கான விஷயமாச்சே என்ற அதிகாரியின் சிந்தனை, தோழருக்கும் இருந்திருக்கக்கூடும். அந்த வகுப்பு ஒரு உடைந்த கட்டடத்துக்குள் நடக்கிறது. அதைப்போய் அதிகாரியிடம் காட்டுவதா என்ற தயக்கம் தலைமை ஆசிரியருக்கு.
அழுத்தம் அதிகமாகவே, வேறு வழியின்றி அந்த வகுப்புக்கு அழைத்துப்போகிறார். போனால், ஹே என்று சத்தம், வகுப்பில். தலைமை ஆசிரியர், வகுப்பை நெறிப்படுத்த வேண்டும் என்ற உந்துதலில், வேகம் கூட்டினார். தோழர் பொன்னீலனோ, தலைமை ஆசிரியரை வர வேண்டாம் என்று தடுத்துவிட்டு, தான் மட்டும் சென்று, வகுப்பில் என்ன நடக்கிறது என்று ஜன்னல் வழியாக யாரும் அறியாமல் கண்காணிக்கிறார். தலைமை ஆசிரியர் தலையில் அடித்துக்கொண்டும், தன் நேரத்தை நொந்தபடியேயும் அங்கேயே நிற்கிறார்.
உள்ளே, ஒடிசலான மிக இளம் வயது ஆசிரியை வரைபடம் நடத்திக்கொண்டிருக்கிறார். அதுதான் இவ்வளவு சத்தம்.
சுவரில் இந்திய வரைபடம் தொங்குகிறது. ஆசிரியர் ஒரு மாணவனை பெயர் சொல்லி விளிக்கிறார். அவனிடம், ‘நீ மும்பை போக வேண்டும். எதில் போகிறாய். ரயிலா? விமானமா?’ என்கிறார். ரயில் என்கிறான். அவனிடம் ஒரு குச்சி தரப்படுகிறது. ‘சரி, மும்பைக்கு போ’ என்கிறார். அந்தப் பையன், ‘கூ… ஜிக்கு புக்கு ஜிக்கு புக்கு’ என்றபடியே ரயிலில் பயணித்து மும்பையைத் தொடுகிறான். ஓ என்று சத்தமிட்டுக் கொண்டாடுகிறது வகுப்பு.
அடுத்த பையன், விமானத்தில் காஷ்மீர் போனான். இன்னுமொருவன், காரில் கொல்கத்தா போனான். இப்படியே. ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஊராகப் போனார்கள்.
இப்போது, அந்த வரைபடம் கழற்றப்படுகிறது. ஊர் பெயர்கள் இல்லாத வெற்று வரைபடம் ஒன்று அங்கு மாட்டப்படுகிறது.
ஆசிரியை, மும்பை போன மாணவனை இந்த முறை பைக்கில் மும்பைக்குப் போகப் பணிக்கிறார். அவனும், பைக்கை கிளப்பிக்கொண்டு போகிறான். ஆனால், மும்பைக்குப் பதில் காஷ்மீர் போகிறான். சிரிப்பால் அதிர்கிறது வகுப்பு. ‘டீச்சர், ரமேசு காஷ்மீர் போயிட்டான் டீச்சர்’ என்று வகுப்பே இரண்டு படுகிறது.
‘அவன் போன பைக் சரியில்ல. ஏண்டா ரமேசு…’ என்றவாறே, சரியான இடத்தை அவனுக்குக் கற்பிக்கிறார் ஆசிரியை. இப்படியே நகர்கிறது, ஆய்வு பற்றிய எந்தக் கவனமும் இல்லாமலே அந்த வகுப்பு. அதற்கு மேல் நிற்க முடியாதவராகத் திரும்புகிறார் பொன்னீலன். அலுவலகம் வரும்வரைக்கும் ஏதும் பேசவில்லை. அந்த வகுப்பில் ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தலைமை ஆசிரியருக்குப் படுகிறது.
ஆசிரியர் கூட்டம் தொடங்கியதும், குறைகளை புன்னகையோடும் ஒரு தந்தைக்கே உரிய பாங்கோடும் அடுக்குகிறார். அதை எப்படி சரி செய்வது என்றும் ஆலோசனைகளைத் தருகிறார்.
இறுதியாக, அந்தக் குறிப்பிட்ட வகுப்பைப் பற்றிம் பேசுகிறார். ஆசிரியை எழுந்து நிற்கிறார். ‘மேப் டிராயிங் இப்படி நடத்தலாம்னு எனக்குத் தெரியாது மகளே. இப்படியே நடத்து. இப்படித்தான், கற்றல் கலகலப்பாக இருக்க வேண்டும்’ என்று பாராட்டினார்.
கற்றலை சேதப்படுத்தாமல் மேம்படுத்தக்கூடிய கலகல வகுப்புகளே இந்த நொடியின் தேவை.
தினமணி.காம் 27.11.2015


 

Post Comment

Sunday, November 20, 2016

அன்புள்ள திரைப்பட ரசிகனுக்கு

முன் குறிப்பு:

உனக்கொரு கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டுமென்றெனக்கு நீண்ட நாட்களாகவே ஒரு குட்டி ஆசை . இதென்ன விசித்திரமாய் ஓர் ஆசை என யோசிக்க மாட்டாய் என நம்புகிறேன்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

நலம், நலமே விழைகிறேன்.,

நீ செய்த உதவிகளுக்கும், உனக்கும் நான் நிறையவே கடன்பட்டிருக்கிறேன். Thank you for being a friend of mine.

நீ அதிகமாக நேரம் செலவிடும் அந்த சில பேரின் சராசரி தான் நீ , என்றொரு வாசகம் உண்டு. அது உண்மையோ, பொய்யோ, அதை நான் நம்புகிறேன். எனக்குத்தெரிந்து என்னுடன் மணிக்கணக்கில் காலம் தெரியாமல் பேசும் நபர்களின் பட்டியலில் உனக்கொரு இடமுண்டு. அந்தவகையில் யோசித்தால் என்னில் உன் குணங்கள், வார்த்தைகள்,பேச்சு,ரசனை,சிந்தனை என்கிற வகையில் சில துளிகள் "நீ" கலந்திருக்கலாம். இந்த வினாடியில் நம் ராமேஸ்வரம் ரபி அண்ணன் சொல்லும் "நானாகிய நீ" என்கிற வார்த்தையின் அர்த்தச் செழிப்பை வியக்கிறேன், ஒருவகையில் நாம் எல்லோருமே "நாமாகிய யாரோ" தான் இல்லையா.  காதலி ,நன்பன், ரோல்மாடல், அப்பா, நடிகன் இப்படியாக... எத்தனை பேரின் சாயங்கள் நம்மில் நம்மையேயறியாமல் பூசப்பட்டிருக்கிறது.

நீ கொடுத்த "பிங்க்" திரைப்படத்தை நேற்று தான் பார்த்தேன், எனக்கும் படம் பிடித்திருந்தது. நல்ல திரைப்படம். அருமையான வசனங்கள், நேர்த்தியான காட்சியமைப்புகள், Fantastic characterization .இதுபோன்ற திரைப்படங்கள் தற்போதைய நம் தேசத்திற்கு மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.

பெண்கள் உடுத்தும் ஆடை தான் எங்களை தூண்டுகிறது, அவளின் பேச்சு எங்களுக்கு அவள் அப்படிப்பட்டவள் என நினைக்க வைக்கிறது, அவளுக்கு மது, புகைப் பழக்கம் உண்டு அதனால் அவள் ஒரு --------------, அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தாள் அதனால் அவள் என்னை காதலிக்கிறாள்,அழைக்கிறாள்,------------ ,--------------- என அநேக விசயங்களில்  அவளின் எண்ணங்களை நமக்கு நாமே கற்பனையாக சில பல கற்பிதங்களின் அடிப்படையில் நினைத்துக்கொள்கிறோம். அவளை தொடுவதில் தவறில்லை என தொட முனைகிறோம்.

" NO Means NO" கோர்ட் சீனில் அமிதாப் பேசும் அந்த கடைசி  வசனம் எத்தனை அழுத்தமானது, பெண்கள் பற்றிய நமது தர்க்கங்கள், சரி, தவறுகள், என்கிற கோட்பாடுகள் அத்தனையையும் தகர்த்தெரியும் வசனம். "அவள் உங்கள் தோழியாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், அடுத்த வீட்டுப் பெண்ணாக இருக்கலாம், உறவுமுறையாக இருக்கலாம், ஒரு விபச்சாரியாக இருக்கலாம்.. அவள் வேண்டாம் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் வேண்டாம் என்பது தான், NO means NO". நம் தேசத்தில் நாம் பாதுகாக்க வேண்டியது பெண்களை இல்லை ஆண்களை என்கிறது இந்த திரைப்படம்.

"மலரினும் மெல்லியது காமம்-சிலரதன்
செவ்வி தலைப்படு வார் "

என்கிறது திருக்குறள், எத்தகையதொரு சீர்த்த பண்பட்ட நாகரிகத்தினராய் இருந்த நாம் இப்படி சீரழிந்து சிதைக்கப்பட்டிருக்கிறோம் என நினைக்கையில் கோபம் தான் வருகிறது. காமம் என்பது மலரினும் மெல்லியது, சிலரதன் மெய்யறிந்து அதன் முழுப் பயனை அனுபவிக்கிறார்கள் என்கிறான் வள்ளுவன். மலரினும் மெல்லியதென மதிக்கப்பட்ட அந்த வஸ்துவை கொலை ஆயுதத்தினும் கொடியதாய் சித்தரித்து வைத்திருக்கிறோம், எத்தனை தூரம் நம் இனம் கலாச்சாரம் விட்டு பிரிந்து,திரிந்து கேவலப்பட்டு நிற்கிறது,

அக்கால பெண்மணிகள் குடிக்கவில்லை, இக்காலத்து பெண்மணிகள் குடிக்கிறார்கள், கூத்தடிக்கிறார்கள், இப்படிப்பட்டவள்களுக்கு இப்படியெல்லாம் இருக்கிறவள்களுக்கு இப்படியாகப்பட்ட நிலைதான் வரும் என வார்த்தைகளை அள்ளிக்கொண்டு விதண்டாவாதம் பேச வரும் கலாச்சார காவலர்கள் , நம் தமிழ்க் கலாச்சாரத்தில் விரலிக்கூத்து, இந்திரன் திருவிழா ,காமன் பண்டிகை என்றெல்லாம் இருந்ததையும் பெண்களும் கள்ளருந்தி களித்திருந்த கதைகள் கூறும் அகத்திணை இலக்கியங்களையும் படித்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன்.

பார் ! ,எத்தனை தூரம் என்னை யோசிக்க வைத்திருக்கிறது இந்த திரைப்படம் .தேச அளவில் இந்த திரைப்படம் நிறைய விமர்சிக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.


திரைப்படங்கள் மூலம் கருத்து சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா, அது சரியான மீடியம் தானா என்கிற கேள்வி இந்த நேரத்தில் எனக்குள் எழுகிறது. சினிமா ஒரு வெகுஜன ஊடகம் , ஒரே சமயத்தில் பலதரப்பட்ட எண்ண அலைவரிசை உள்ள நிறைய பேர் ஒரே அரங்கில் இருட்டில் பணம் கொடுத்து அமர்ந்து படம் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் அந்த இருட்டறையில் ஒவ்வொரு விசயத்தை எதிர்பார்த்திருப்போம். திரைப்படங்கள் என்பவை ஒரு என்டெர்டெய்னராக இருக்க வேண்டும் என சிலர் நினைத்திருப்போம், அது கலையாம்சமானதாக இருக்க வேண்டும் என சிலர் நினைத்திருப்போம் இருசாராரையும் திருப்தி செய்யவேண்டும் என்கிற முயற்சியில் டைரக்டர் படம் காட்டவேண்டும், இல்லையென்றால் போட்ட காசை எடுக்க முடியாது. இருந்தாலும் திரைப்படங்களுக்கென சில பிரத்யேக குணாதிசயங்கள் இருக்க வேண்டும், களிப்பூட்ட வேண்டும்,கதைசொல்ல வேண்டும், தெரியாத விசயங்களை சொல்ல வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும்,சிந்திக்க வைக்க வேண்டும் அல்லது எதையாவது ஒன்றை உருப்படியாக செய்ய வேண்டும். திரைப்படம் என்பது வெறுமனே காட்சிகளின் தொகுப்பு அல்ல, Slideshow ல் அடுத்தடுத்த ஸ்லைடுகளை நகர்த்துவது மாதிரி காட்சிகளை நகர்த்திவிட்டு நானும் டைரக்டர் தான் என மார்தட்டிக்கொள்ளும் மடையர்களை பார்க்கையில் சிரிப்பு தான் வருகிறது. AYM திரைப்படம் எனக்கு வெறுமனே காட்சிகளின் நகர்வாகத் தான் கண்ணில் பட்டது. நம் நன்பர்கள் சிலரிடம் படம் எப்படி என்றேன் சிலர்  ஆஹா,ஓஹோ என்றார்கள், சிலர் First half OK, second half சொதப்பல் என்றார்கள், ஒரு தடவை பார்க்கலாம் என்றார்கள்., ஒரு தடவை பார்க்கலாம் என்பதெல்லாம் என்ன மாதிரியான விமர்சனம் என புரிபட மாட்டேன் என்கிறது, அப்புறம் ஒரு திரைப்பட்த்தை First half, second half  என கூறுபோட்டு விமர்சிக்கும் கூறுகெட்ட விமர்சன கர்த்தாக்கள் எல்லாம் எந்த கிரகத்திலிருந்து வந்தார்கள் என தெரியவில்லை, நேற்று நான் சாப்பிட்ட பிரியானி, முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி நல்லா இல்லை என்று சொல்வது எத்தனை அபத்தமோ, ஒரு முழு திரைப்படத்தை பிரித்து பார்த்து விமர்சிப்பதும் அபத்தம் தான் என நான் கருதுகிறேன். இடைவேளை என்பது நம் சவுகரியத்துக்காக விடப்பட்ட்து, படத்தை கூறுபோட்டு பிரிக்கும் குறுக்குக் கோடு அல்ல என்பது எத்தனை பேருக்கு புரியும்.

விகடனில் பஞ்சு அருணாச்சலம் திரைத்தொண்டர் என்றொரு தொடர் எழுதியிருந்தார், வாசித்திருப்பாய் என நம்புகிறேன். அத்தொடரின் இறுதி வாரத்திற்கு முந்தைய வார தொடரில் " இன்று 90 % திரைப்படங்கள் தோற்பதற்கு காரணம் வெறுமனே காட்சிகளை கோர்த்து எழுதுவது தான்" என்கிறார். Absolutely right.

ஆனால் அகிரா குரோஷோவாவின் DREAMS என்று ஒரு திரைப்படம் உண்டு , காட்சிகளின் கோவையாகத்தான் அந்த படம் இருக்கும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு நபருக்கு வரும் வெவ்வேறு கனவுகளின் தொகுப்பு. கனவுகள் எப்படி முழுமையாக இல்லாமல், லாஜிக் இல்லாமல், சம்பந்தா சம்பந்தமில்லாத காட்சிகளை இணைத்து வருமோ, அப்படியே இருக்கும் அந்த திரைப்படம் Segments of dreams., ஆனால் அந்த திரைப்படம் ஆஹா, ஓஹோ வென பேசப்பட்டது, இன்றளவும் உலகப்புகழ் டைரக்டர்கள், திரை விமர்சகர்கள் அந்த திரைப்படத்தை கொண்டாடுகிறார்கள்., ஒரு திரைப்படத்தை சம்பந்தா சம்பதாமில்லாத காட்சிகளின் கோவையாக்க் கூட செய்ய முடியும், உலகப்புகழ் திரைப்படமாக செய்ய முடியும் என்பதற்கு அகிராவின் ட்ரீம்ஸ் ஒரு உதாரணம். ஆனால் அந்த காட்சிகள் நிஜமான கனவுகள் போல இருக்கும், நம் எண்ண ஓட்டத்தை சில கணமாவது நிறுத்தும் வல்லமையோடு இருக்கும், ஒவ்வொரு கனவும் ஒரு கதை போல இருக்கும் நாம் காணும் கனவுகள் மாதிரியே..  அதனால் தான் அந்த திரைப்படம் இன்றளவும் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.

Moving + Pictures இரண்டு வார்த்தைகள் இணைந்து உருவான கூட்டுவார்த்தை தான் Movies என்பது, ஆனால் அதற்கான அர்த்தம் இன்று கொஞ்சம் கெட்டிப்பட்டுவிட்டது. எடிசன் சினிமாவை கண்டுபிடித்த ஆரம்ப காலத்தில் வெறும் சலன காட்சிகளை காண்பதற்கு மக்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்தனர், ஆனால் இன்றும் அதே மாதிரி மான் ஓடுவதையும், நாய் குரைப்பதையும், கால், கைகளை அசைப்பதையும், நடப்பதையும், ஓடுவதையும் தியேட்டர்களில் காண்பித்தால் எப்படி இருக்கும், வெறுப்பாக இருக்காது., திரையை கிழிக்கலாம் என்கிற அளவுக்கு கோபம் வராது, பாதியில் கிளம்பி வந்துவிடவேண்டும் என்று தோன்றாது... "கடவுள் இருக்கிறான் கொமாரு" திரைப்படத்தை பார்த்துவிட்டு என் ரூம் மேட்ஸ் இருவர் பாதியிலேயே எழுந்து வந்துவிட்டார்கள், பணம் கொடுத்த பாவத்திற்காக சிலர் அதை தொடர்ந்திருக்கிறார்கள், அதிர்ஷ்ட வசமாக நான் அந்த படத்திற்கு போக வில்லை. ஏன் இப்படியெல்லாம் பணம் போட்டு படம் எடுத்து ரிலீஸ் செய்கிறார்கள். எந்த நம்பிக்கையில் இப்படியெல்லாம் படம் எடுக்கிறார்கள்.

என்னவென்று தெரியவில்லை உன்னோடு அதிகம் பேசியதிலிருந்து நானும் திரைப்படங்கள் பற்றி அதிகம் பேசுகிறேன், நேற்று வெற்றிவேலுடன் பேசிக்கொண்டிருந்த போது கூட தோராயமாக ஒரு மணி நேரம் திரைப்படம் பற்றி பேசியிருப்பேன். இப்போதெல்லாம் இளைய சமுதாயம் சந்திந்துக்கொண்டால் திரைப்படங்கள் பற்றித்தானே அதிகம் பேசுகிறோம் என அவன் வசவ வேறு செய்தான். ஆனால் பேச்சென்பதன் சாரம்சம் பகிந்து கொள்ளுதல் தானே எதை பகிந்து கொண்டால் என எங்களுக்கு நாங்களே சமாதானம் ஆகிக்கொண்டோம், Caring and sharing இது தானே அன்பின் சாரம்சம், பிடித்ததை பிடித்தவர்களோடு பகிர்ந்து கொள்ளுதலின் ஆனந்தம் அளவற்றது, காதல் என்கிற விசயம் கூட இந்த மையப்புள்ளியைப் பற்றித்தான் நகர்வதாய் நம்புகிறேன்… Caring and sharing.

கடந்த ஞாயிறு யூட்யூபில் ஹெலன் கெல்லரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "The miracle worker " என்றொரு படம் பார்த்தேன்., அருமையான படம், படம் பார்த்து முடித்து விட்டு கீழே கமென்டுகளை நோட்டமிட்டேன், இதே சாயலில் ஹிந்தியில் ஒரு திரைப்படம் இருப்பதாக அன்பர் ஒருவர் கமென்ட் இட்டிருந்தார், இந்திய திரைப்படங்களை பொத்தாம் பொதுவில் திட்டியும் இருந்தார்., அமிதாப் பச்சன் நடிப்பில் "BLACK " என்ற பெயரில் வெளியான அந்த திரைப்படத்தின் கதையை விக்கியில் படித்தேன். அது மிராக்கில் ஒர்க்கர் திரைப்படத்தின் சாயல் இல்லை அப்பட்டமான சாயம் என பட்டது, யாரோ ஒருத்தரின் படைப்பை தன் சொந்த படைப்பு என கொண்டாடுவது தவறு என்றே தோன்றுகிறது, "கதை,திரைகதை,வசனம்,டைரக்சன் " எல்லாம் நானே, என தம்பட்டம் அடித்துக்கொள்வதில் அப்படி என்ன தான் பெருமையோ, கதை வேறொருவருடையது., திரைகதை வேறொருவருடையது, இது இந்த படத்தால் Inspire ஆகி எடுக்கப்பட்டது என்றெல்லாம் ஏன் நம் தேசத்து டைரக்டர்கள் சொல்லிக்கொள்வதில்லை என யோசிக்கத் தோன்றுகிறது.

திரைப்படங்கள் பற்றிய என பார்வைகளை தொகுத்து எனது Blog ல் ஒரு கட்டுரையாக எழுதலாம் என தோன்றுகிறது J , உன் கருத்துக்களை சொல், ஏதாவது நல்ல திரைப்படங்கள் இருந்தால் பகிர்ந்துகொள்.

அன்புடன்,

விஜயன் துரைராஜ்

   

 

Post Comment

Wednesday, November 09, 2016

வார்தைகளின் வார்த்தைகள்எல்லா இடத்திலும் எல்லோரிடத்திலும் எல்லோராலும் ஒரே மாதிரி இருந்துவிட முடிவதில்லை , ஆளுக்கேற்ற மாதிரி ஆடை உடுத்தி இடத்திற்கேற்ற மாதிரி நடிக்க வேண்டிய நாகரீக கோமாளிகளாகத்தான் நாமனைவரும் இருக்கிறோம், "உண்மையாக யாருமே இல்லை" என வருத்தப்படுகிறவர்களால் கூட உண்மையான முகங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதும், அவர்களால் கூட உண்மையான முகத்துடன் எப்போதும் இருக்க முடிவதில்லை என்பதும் தான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

அவன் ஒரு நடிக்கத்தெரியாத அப்பாவி, மிக எளிதில் மனமுடைந்து போகும் இலகுமன பிராணி , ஆளுக்கேற்ற மாதிரி பச்சோந்தியாக தெரியாத படுபாவி., போலிகளை கண்டு கண்டு கடுப்பாகி வெறுப்பின் உச்சத்தில் யாவரையும், யாவற்றையும் வெறுத்து ,தனது நம்பிக்கையை வார்த்தைகள் கொண்டு கிழித்தெறிந்து எரித்தழிக்க முயல்கிறான் அவன் . வார்த்தைகள் மெல்ல மெல்ல அர்த்தமிழந்து அவனிடத்தில் மௌனமாகிப்போய் நிற்கிற போது அவன் வார்த்தைகளை வார்த்தைகளால் ஏசுகிறான்... (வார்த்தைகளும்  வாய்திறந்து அவனோடு பேசின ...)

ஏய் வார்த்தைகளே !!
ஏய் வார்த்தைகளே !!

உங்களை வீசித்தானே எல்லோரும்
காரியம் சாதித்துக் கொள்கிறார்கள் !
என் கைக்கு மட்டும் ஏன் உங்களை
வீசி எரியும் வித்தை வாய்க்கவில்லை

உங்களை கொண்டு தானே
என்னை ஏமாற்றுகிறார்கள்
ஏன் நீங்கள் என்னிடத்தில்
வாய் திறந்து சொல்லவில்லை !

உங்களை நம்பித்தானே
என்னையே மறுதலித்து
என்னையும் அடமானம் வைத்தேன்
ஏன் நீங்கள் தடுக்கவில்லை !

அவனி முழுக்க நிறைந்திருக்கும்
அத்தனை வர்த்தைகளும்
ஆதரவேதுமின்றி !
அர்த்தமிழந்து அலையட்டும் !

ஹ்ம் ..

உங்களை ஏசக் கூட
உங்கள் உதவிதானே
தேவைப்படுகிறது
எங்களுக்கு !
அந்த திமிரோ ?

உங்களையே சேர்த்து
உங்களிடத்தில் கேட்கிறேன்
உள்ளது உள்ளபடி
உண்மை சொல்வீர்களா ??

உங்களின் நிரந்தர இருப்பிடம் எங்கே ?
எங்கே இருக்கிறீர்கள் நீங்கள் ?
பேச்சின் பின்னாலா ?
எழுத்தின் பின்னாலா ?
வாசிப்பின் பின்னாலா ?

பின்னும் நாங்களில்லை
முன்னும் நாங்களில்லை
எல்லாமும் எல்லோரும்
எங்கள் பின் இருப்பதனை
அறியாயோ மானிடனே !
சர்வம் வார்த்தை மயம் !!

உங்களைக்கொண்டு தானே
நாங்களே பேசிக்கொள்கிறோம்
நீங்கள் கூட பேசுவீர்களா?
இத்தனை கால மௌனம்
உடைபட்ட மாயம் ?

இதுவரைக்கும் எம்மை யாரும்
உம்மைப்போல எரித்ததில்லை
உண்மையைச் சொல்லச் சொல்லி
உலுக்கியும் எடுத்ததில்லை.

ஓ!
அழுதிட்ட பொழுதுகளில்
அறுதலாய் வரவில்லை
அடித்துலுக்கிக் கேட்கையிலே
பதில் சொல்ல வந்தீர்களோ??

பேசப்படும் பொருளும்
பேச்சும் பொருளும் நாமே !!
பேச்சில் மறைந்திருக்கும்
சத்தமும் அமைதியும் நாமே !!

கேட்கிற சக்தியிருந்தால்
கேட்கமலேயே கேட்கும்
நாங்கள் கூறும்
ஆறுதல்கள் அறிவுரைகள்
அமைதியான பேருரைகள் !

ஏனெனக்குக் கேட்கவில்லை?

அழுகிற பொழுது அழுகையிலும்
சிரிக்கிற பொழுது சிரிப்பினிலும்
பேசுகிற போழுது பேச்சினிலும்
எதன்போதும் ஏதோ ஒன்றால்
எப்போதும் எம் குரலை
மறைத்து விடுகிறீர்கள் !!

மறுபடியும் உம்மை கேட்கிறேன்
ஏனெனக்கு
உங்களை வீசியெறிந்து
காரியம் சாதித்துக் கொள்ளும்
வல்லமை வாய்க்கவில்லை?

யாருக்கும் கேட்டிராத எம் குரலை கேட்பவனே !!
வல்லமை இல்லையென்று
சொன்னவன் எவனுனக்கு !!
எதைக் கொண்டு எமையிழுத்தாய் !

 எப்போதும் எம்மருள் தப்பாது உமக்குண்டு !
 ஒரு நிமிசம்....
 கயவர்களுக்கும் கூட
 உன் வல்லமை வாய்த்திருக்கிறதே ??
 காரணம் ??

 எம்மை நம்பி வாய்திறக்கும் யாவருக்கும்
 நன்று தீது பாராமல் எங்களருள் கிடைப்பதுண்டு !!

 எல்லோர் வார்த்தைகளையும் நம்பி விடாதே
 ஆனால் வார்த்தைகளின் உள்ளிருக்கும்
 வார்த்தைகளின் வார்த்தைகளை நம்பு !!....
 வேறு யாரோ கூப்பிடுகிறார்கள்
 வருகிறோம் !!!!
    
   

 

Post Comment

Thursday, June 30, 2016

பேஸ்புக்'கில் ஆபாச படம்: உஷார் பதிவு (பேஸ்புக்கும் பெண்களும் பாகம்- 8)

(பேஸ்புக்கும் பெண்களும் பாகம்- 8)

பேஸ்புக்'கில் ஆபாச படம்: மாணவி தற்கொலை

   "  'பேஸ்புக்'கில், தன் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வெளியானதால், அதிர்ச்சியுற்ற இளம்பெண் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.    "
                                                   -தினமலர் 28.6.2016 

                              


சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி என்ற அந்த ஊரில் ஒரு தறி நெசவாளியின் மகள் வினுப்பிரியா, 21 வயது. பி.எஸ்.சி பட்டப்படிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு உதவியாக இருந்து வந்திருக்கிறாள். படித்த பிள்ளையாயிற்றே  பேஸ்புக்கில் இல்லாமல் இருப்பாளா ! 

பேஸ்புக்கில் விஸ்தாரமான நட்புவட்டத்தை வளர்த்து வைத்திருந்திருக்கிறாள். 

 "செம", "super", "cute", "அழகா இருக்க" என பெண் பிள்ளைகளிடம் வழிகிற கூட்டம், இவளிடமும் வலிய வந்து வழிந்திருக்கிறது. வயசுக்கோளாறு, ஆர்வக்கோளாறு வினுப்பிரியாவும் தனது புகைப்படங்களை பேஸ்புக்கில் அவ்வப்போது பதிந்து கொண்டு வந்திருக்கிறாள். 

இந்நிலையில் கடந்த பதினாறாம் தேதி "மைதிலி வினுப்பிரியா" என்கிற பெயரில் போலி பேஸ்புக் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் வினுப்பிரியாவின்  புகைப்படங்கள் அரைநிர்வாண நிலையில் இருக்கும் வேறு படங்களுடன் மார்ப்பிங்க் செய்யப்பட்டு வினுப்பிரியாவின் அப்பாவின் செல்பேசி எண்ணுடன் பரப்பப்பட்டிருக்கிறது., ( மார்ப்பிங்க் :  ஒரு படத்தின் உடல் அமைப்புடன் வேறு புகைப்படத்தில் இருக்கும் தலையை கணினி உதவியுடன் ஒட்டும் செயல்)  .அதே தினம் வினுப்பிரியாவின் அப்பாவின் செல்பேசிக்கு யாரோ ஒருத்தன்  கால்  செய்து "ஒன் பொன்ன அடக்கி வைக்க மாட்டியா.." என ஆபாசமாக பேசியிருக்கிறான்.   17 ந்தேதி வினுப்பிரியாவின் அத்தைப்பையன் வினுப்பிரியாவின் அப்பாவிடம் உங்கள் மகளின் படம்  பேஸ்புக்கில்  ஆபாசமாக வெளி வந்திருக்கிறது என சொல்லியிருக்கிறான்.

மகளை திட்டியிருக்கிறார்கள்., பின் போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள் , அளித்தும் பலனில்லை, இந்த மார்ப்பிங்க் செயலை செய்தது யார் என கண்டறிய இயலவில்லை.

" முதலில், என்னை மன்னித்து விடுங்கள். என் வாழ்க்கை முடிந்தபின், நான் வாழ்ந்து என்ன செய்யப்போகிறேன். எனக்கு வாழ பிடிக்கவில்லை. அம்மா, அப்பாவே என்னை நம்பாதபோது, நான் உயிரோடு இருந்து, என்ன பிரயோஜனம்; அவர்களே என்னை பற்றி கேவலமாக பேசுகின்றனர். சத்தியமாக சொல்றேன், என் போட்டோவை, நான் யாருக்கும் அனுப்பவில்லை; எந்த தப்பும், நான் செய்யவில்லை. என்னை நம்புங்கள். மீண்டும் ஒருமுறை சாரி... சாரி..."

என  கடிதம் எழுதி வைத்துவிட்டு  (27 ந்தேதி)  செத்துப்போய் விட்டாள் ! 

இப்போது அந்தபோலி பேஸ்புக் கணக்கை போலீசார்  முடக்கியிருக்கிறார்களாம்,  தாமதம் !!

**********

நேற்று செய்தித்தாளில் இந்த செய்தியை பார்த்ததும் பகீர் என்றது ! அடப்பாவிகளா !! ஒரு பெண் பிள்ளையை உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், அவள் உங்களுக்கு பிடி கொடுக்கவில்லையென்றால் இப்படிப்பட்ட கேடுகெட்ட வேலையில் ஈடுபடுவீர்களா!! நரநாய்களா ! என கோபம் வந்தது . அந்த பெண்ணையும் அவளை கன்னி வயது வரை கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களையும் யோசித்துப்பாருங்கள் .

சரி!  பேஸ்புக்கில் பெண்கள் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது ஆபத்தானதா ! 

ஏற்கனவே இது தொடர்பாக ஒரு பதிவு எழுதியிருந்தேன் . ( கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்து அதை வாசிக்கலாம் )


இந்த பதிவில் பேஸ்புக்கில் பெண்கள் புகைப்படங்களை ஏற்றுவதற்கு முன் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகளப் பற்றி பார்ப்போம்.

**********


சைக்கலாஜிக்கலாக பெரும்பான்மையான பெண்கள் ( சிறும்பாண்மை யினரில் இருக்கும் பெண்கள் என்னை மன்னிப்பீராக). பகட்டாக உடுத்திக்கொள்ள வேண்டும், அலங்காரம் செய்துகொள்ள வேண்டும், நகை அணிய வேண்டும்  அதையெல்லாம் க்யூட்டான ஸ்மைலி எடுத்து பேஸ்புக்கில் அப்லோட் செய்து பலரது லைக்குகளை வாங்க வேண்டும்  என்கிற மனோநிலையில் தான் இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

பெண்கள் மொக்கை ஸ்டேட்டஸ் போட்டாலே லைக்கித் தொலைக்கும் நம் காய்ந்துபோய்கிடக்கும் ஆண் சமூகமும் பெண்களின் புகைப்படங்களை "அஹோ", "ஒஹோ" "சூப்பர்", "க்யூட்" என பாராட்டித்தள்ளி ஜொள்ளு மழையுடன், லைக் மழையையும் பொழிந்து தள்ளி விடுகிறோம்.

லைக்குவதோடு மட்டும் நில்லாமல் சில நல்ல உள்ளங்கள் பெண்களின் புகைப்படங்களை மார்ப்பிங்க் எனப்படும் அந்த " தலை மாற்றி - உடல் மாற்றி வித்தையை" பிரயோகித்து ஆபாசமாக சித்தரித்து வக்கிர புத்தியோடு வலம்வர வைத்துவிடுகிறார்கள்.

ஒருகாலத்தில் பொதுக்கழிப்பிட சுவர்களில் கரியாலும், ரயில் கழிவறைகளில் பேனாவாலும், குறிகளையும், குறியீடுகளையும் வார்த்தைகளையும் , பிடிக்காத பெண்களின் மொபைல் எண்களையும், காதலை மறுத்த பெண் பிள்ளைகளின் மொபைல் எண்களையும் விபச்சாரத்திற்கு அணுகவும் என்கிற மாதிரி கிறுக்கி வைத்த கூட்டம் தான் நாம் என்பதை நவீன வடிவில் பறைசாற்றத்துவங்கியுள்ளோம் !! வாழ்க பாரத சமுதாயம் !

பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட இந்த நாசமாய்ப்போன கல்வி முறையில் நல்லொழுக்கத்திற்கும், நீதி போதனைக்கும், ஆண்களுக்கு பெண்களை மதிப்பதற்கும், பெண் பிள்ளைகளுக்கு காமவெறியர்களிடமிருந்து எச்சரிக்கையாக நடந்துகொள்வதற்கும் பாடங்கள் அமைத்து பாடதிட்டத்தில் பங்கு கொடுக்க வேண்டும், அப்போது தான் இந்த நிலைமை சிறிதளவேனும் மாறும். :/

சரி பேஸ்புக்கில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகளைப் பார்க்கலாம்.

முக்கியமான முன்னெச்சர்க்கைகள் :

1. உங்களது உண்மையான புகைப்படத்தை profile படமாக வைக்கலாம் தவறில்லை, ஆனால் அதற்கு முன் "only me" என்கிற ஆப்சனை தேர்வு செய்து பகிரவும். ( இதை எப்படி செய்வது என அறிய இந்த பதிவை க்ளிக் செய்து வாசிக்கவும்)

2. உங்கள் புகைப்படத்தை தனியாக பதியாமல் ஒரு கொலாஜாக (பல புகைப்படங்களை சேர்த்து ஒரே படமாக) செய்து பதிவேற்றும் போது அதன் பிக்ஸல் க்ளேரிட்டி குறைவாகும்.பிக்ஸல் க்ளேரிட்டி குறைவான படங்களை பெரும்பாலும் மார்ப்பிங்க் கில்லாடிகள் விரும்புவதில்லை. 

3. அறியாத நபர்களின் friend Request களை ஏற்க வேண்டாம்.

4. உங்கள் ஈமெயில் ஐ.டி. மொபைல் எண் போன்றவைகளை பொதுவில் வைக்க வேண்டாம்.

step 1: உங்கள் டைம்லைனிற்கு சென்று About என்பதை க்ளிக் செய்க -> பின்பு contact and basic info என்பதை செலக்ட் செய்யவும்.
step 1

step 2: பின் மவுஸ் கர்சரை மொபைல் எண் அல்லது ஈமெயில் அருகே கொண்டு சென்றால் edit என்ற எழுத்து வரும் அதை க்ளிக் செய்க.

step 3:  அதில் only me என்பதை செலக்ட் செய்து "save changes கொடுக்கவும்.
step 3
ஈமெய்ல் ஐ.டி மற்றும் மொபைல் எண் இரண்டிற்கும் only me கொடுத்து save changes கொடுத்துவிடவும்.

5. உங்களது நன்பர்கள், ஃபாலோவர்  பட்டியலை மறைத்து வையுங்கள் (எப்படி என்பதற்கு இந்த பதிவை வாசியுங்கள்)

6. உங்களது பேஸ்புக் பாஸ்வேர்டை வேறு யாருக்கும், நன்பருக்குக்கூட கூற வேண்டாம், அப்படியே கூறினாலும் உடனடியாக மாற்றி விடுங்கள்.

7. உங்களுக்கு தொந்தரவு தரும் பேஸ்புக் நபர்களை block செய்யுங்கள்

8. உங்கள் புகைப்படங்களை பகிரும் போது பொதுவில் பதிய வேண்டாம். யாருடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமோ , அவர்களோடு மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள். 


தொடரும்.....Refrence:
http://www.dinamalar.com/news_detail.asp?id=1552386
http://www.vikatan.com/news/coverstory/65665-should-we-be-ashamed-if-our-naked-body-is-revealed.art

 

Post Comment

Saturday, June 25, 2016

தாய்மொழிப் பற்று அவசியமா ?? (2)

 "மொழி  என்பது வெறுமனே சத்த சமாச்சாரம் அல்ல"


மொழிகள் - உருவங்களற்ற உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும்   உருவம் கொடுத்து உரைக்க உதவி செய்கின்றன.  மனித இனத்தை மிருகக்கூட்டத்திடமிருந்து பிரித்துக் கூட்டி வந்த மேய்ப்பன் மனிதர்கள் பேசின மொழி தான் எனலாம். மனிதன் எப்போது மொழிகளின் அவசியத்தை உணர்ந்து தனக்கே தனக்கென , அல்லது தங்களது கூட்டத்தினருக்கான பிரத்யேக மொழியை உருவாக்கத் துவங்கினானோ அப்போதிருந்துதான் நாகரிக வளர்ச்சி என்பது துவங்க துவங்கியிருக்க வேண்டும் என்பது என் கருத்து.

மொழி எப்படி தோன்றியது ?

மொழி இன்ன தேதியில் இன்ன இடத்தில் இன்னவரால் கண்டுபிடிக்கப்பட்டது என உறுதியாக சொல்லிவிட முடியாது., முந்தின பதிவில் பார்த்தது மாதிரி  மொழிகளின்உருவாக்கத்தில் இனம்,கலாச்சாரம்,காலநிலை,சுற்றுப்புறம்,தட்பவெப்பம்,உணவுப்பழக்கம், என பல்வேறு காரணங்கள் பங்கெடுத்திருக்கின்றன. இந்த பல்வேறு காரணங்கள் கொண்ட பட்டியலின் பலனாகவே மொழி என்பது உருவாகியிருக்கிறது. 

மொழி உருவாக்கத்தின் அடிப்படையான காரணங்கள் மூன்று

1.தகவல் பரிமாற்றம் 
2.தப்பிப் பிழைத்தல் 
3.தகவமைப்பு 


இது பற்றியெல்லாம் விரிவாக பார்க்கலாம் , அதற்கு முன்னால் மிருகங்களின் உலகில் சஞ்சரித்து அவைகளின் மொழிகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மிருகங்கள் பேசுமா ? :

மிருகங்கள் பேசுமா ? என சிந்திக்கும் போது முதலில் எனக்கு,  பஞ்ச தந்திரக்கதைகளும் , ஈசாப் நீதிக்கதைகளும் தான் நினைவுக்கு வருகின்றன. :)

சரி,

மொழி என்பது வார்த்தைகள் மற்றும் வார்த்தைகளின் அடுக்குமுறையால் விளையும் அர்த்தங்கள் என சிந்திக்கும்பட்சத்தில் மிருகங்களுக்கு மொழி கிடையாது என சொல்லலாம். அதேசமயம் மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான சமாச்சாரம் என்கிற பட்சத்தில் சிந்திக்கிற போது மிருகங்களுக்கு மொழி உண்டு எனலாம். 


மிருக மொழிகளில் அநேகமாக வார்த்தைகள் கிடையாது, குறியீடுகள், உடலியக்க அசைவுகள், சத்தங்கள் மட்டுமே இருக்கின்றன. (சிம்பான்ஸி, பபூன் குரங்குகள் வார்த்தைகள் மூலம் உரையாடிக்கொள்கின்றன என்கிறார்கள் ஆனால் அவையும் limited தான் 384 வார்த்தைக் குறியீடுகள் இருப்பதாக சொல்கிறார்கள்  ). 

எங்க வீட்டு கிளி பேசுமே !! என யாராவது சண்டைக்கு வரலாம் , கிளிகளைப் பொறுத்தவரையில் அவை எண்ணங்களை ஒலியாக்கி பேசுவதில்லை, வெறுமனே சத்தங்களாகவே புரிந்து கொண்டு பேசுகின்றன. தீவிர பயிற்சி மூலம் கிளிகளை நம் மொழியை புரிந்துகொண்டு பேச வைக்க முடியும்.

சில ஆராய்ச்சியாளர்கள்   மிருக உலகத்திற்குள் சஞ்சரித்து அவற்றின் மொழியை கஷ்டப்பட்டு புரிந்து கொண்டு நம் மொழியோடு ஒப்புமைப்படுத்தி சொல்லியிருக்கிறார்கள். தேனீக்களின் நடன மொழியை கண்டுபிடித்ததற்காக ஒரு ஆராய்ச்சியாளருக்கு நோபல் பரிசெல்லாம் கூட கொடுத்திருக்கிறார்கள். 

*******

மிருக மொழி - சில சுவாரஸ்யமான தகவல்கள் :

நாய் மொழி :

நம் கண்களுக்கு தினந்தோறும் தரிசனம் தந்து கொண்டு இருக்கும் நாய்களைப்பற்றி,   அவைகளின் பரிபாஷைகள் பற்றி பேசாமல் போனால் இந்த கட்டுரை அதன் ஜென்ம சாபல்யத்தை அடையாது போகலாம்.

முன்பின் அறியாத புது நபர்களை கண்டால் குரைக்கும், தெரிந்தவர்கள் வந்தால் வாலாட்டும், பிரியமானவர் வந்தால் வாஞ்சையோடு வாலாட்டி துள்ளிக்குதிக்கும்..  நாயுலகில் நாமறிந்த மொழி  இவ்வளவாகத்தான் அநேகமாக இருக்கும்.

நாய்களின் மொழியில்  இன்னும் கூட விசயங்கள் இருக்கிறது, கீழே இருக்கும் படங்களை கவனியுங்கள்.சிம்பான்சி, உராங்குட்டான் ரக குரங்குகளுக்கு, நாய்களுக்கு, யானைகளுக்கு, டால்பின் களுக்கு மனித மொழியை கற்றுக்கொள்ளும் அறிவு இருக்கிறது, அவைகளால் பேச முடியவில்லை என்றாலும் புரிந்து செயல்படும் வகையில் பழக்கப் படுத்த முடியும். (மிருகங்கள் மொழியை வார்த்தைகளாக அல்லாமல் சத்தங்களாகவே புரிந்து கொள்கின்றன).

சிம்பான்சிகளை மனிதர்களோடு உரையாடும் வகையில் உருவாக்கப்பட்ட வார்த்தைகள் (வார்த்தைக்குறியீடுகள் - lexigrams) கொண்ட அட்டையின் உதவியோடு மனிதர்களோடு பேச வைக்க முடியுமாம்.


           பயிற்றுநர்  Sue_Savage உடன் Bonobos குரங்குகள்_Panbanisha_&_Kanzi _2006

மிருக மொழி பற்றி தேடி தேடிப் படித்துக்கொண்டிருக்கையில் என்னை மிக ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஜந்து அலெக்ஸ் எனும் கிளி ,

ஆப்ரிக்க கிளி  அலெக்ஸ் (தோற்றம் :1967 மறைவு:2007)
                                       
ஒரு செல்லப்பிராணிகள் கடையில் இந்த கிளியை வாங்கி ஐரின் பெப்பர்பெர்க் என்ற அந்த மொழியியல் வல்லுநர் அதற்கு அலெக்ஸ் என பெயர் வைத்த போது இதன் வயது 1. அலெக்ஸ் (Alex என்ற பெயர் Avian -பறவை, Language- மொழி, Experiment -ஆராய்ச்சி என்பதன் சுருக்க வார்த்தை acronym). பயிற்சி - பயிற்சி - இடைவிடாத பயிற்சி.
                                                                     

கையில் ஏதாவது ஒரு பொருளை நீட்டி இது என்ன, என்ன நிறம், எத்தனை, என்ன வடிவம் என கேட்டால் கேட்கிற கேள்வியை மிகச்சரியாக புரிந்து கொண்டு பதில் சொல்லியது (ட்ரெய்னிங்க் அப்படி). உன்னுடைய நிறம் என்ன என கேட்டால் க்ரே என சொல்லுமாம். உலகில் தன்னைப்பற்றி பேசிய மனிதனல்லாத ஒரே உயிரினம் இந்த கிளி தான் என்கிறார்கள். அதுமட்டுமின்றி இல்லாத பொருளைப் பற்றி கேட்டால் அதை இல்லை என சரியாக சொல்லி இருக்கிறது,  உதாரணமாக அந்த இடத்தில் வாழைப்பழங்கள் இல்லை என வைத்துக்கொள்வோம், இங்கு  எத்தனை வாழைப்பழங்கள் உள்ளன எனக்கேட்டால் , வாழைப்பழங்கள் இல்லை என சொல்லியிருக்கிறது (பூச்சியத்தை புரிந்து கொண்ட ஒரே மனிதனல்லாத உயிரினம் என்கிறார்கள்).
 
எத்தனை சிகப்பு !! எத்தனை ஊதா !! ( பயிற்றுநர் பெப்பர்பெர்க் உடன் அலெக்ஸ்)

தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்தால் , அல்லது அது அயர்வாக உணரும் சமயங்களில் "i wanna go " என சொல்லிவிட்டு கூண்டுக்கு நகர்ந்துவிடுமாம்.

6 வரையிலான எண்கள் , 7 நிறங்கள், 5 வடிவங்கள், நூற்றுக்கணக்கான வார்த்தைகள், 50 வகையான பொருட்களை அடையாளம் காணல், குட்டிக்கணக்குககள் என ஒரு ஐந்து வயது குழந்தைக்கான அறிவு அந்த அலெக்ஸிற்கு இருந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளார்கள்.

இந்த ஜந்துவை பற்றி மேலும் தெரிந்து கொள்ள: http://alexfoundation.org/

இது ஒரு புறம் இருக்க ஐன்ஸ்டீன் என்ற பெயருடைய இன்னொரு கிளி பல குரல்களில் பேசி அசத்துகிறது.

பொதுவாக மனிதர்களைத் தவிர்த்து மனிதர்களைப் போல பேசத்தெரிந்த ஒரே ஜீவராசிகள் பறவைகள் தான் , காகங்கள், (பாரதியாரின் காக்காய் பார்லிமென்ட் கதை நினைவுக்கு வருகிறது :) )  மைனாக்குருவிகள், போன்றவைகளுக்கும் பயிற்சி கொடுத்தால் பேச வைக்க முடியுமாம், ஆனால் கிளிகள் தான் கெத்து காட்டுகின்றன.

என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இன்னொரு மொழி, தேனிக்களின் நடன மொழி.

*******

தேனீக்களின் நடன மொழி : 

தேனீக்கள் நடன அசைவுகள் மூலம் பேச்சில்லாமலேயே  பேசிக்கொள்கின்றன என்பதை கேள்வியுறும் போது "அட !! " சொல்ல தோன்றுகிறது.

அப்படி என்ன தான் நடன மொழியியின் மூலம் அவை பேசிக்கொள்கின்றன.

உணவு இருக்கும் இடத்தை ஒரு தேனி அறிந்து கொண்ட உடன் உணவிருக்கும் இடத்தை அது தன் கூட்டுக்குச் சென்று  உடனிருக்கும் தேனிக்களுக்கு உடலசைவுகளாக உணர்த்துகின்றன.

தேன் அங்க இருக்கு !!
                                                   
ஒரு நாள் ஆஸ்திரேலிய உயிரியலாளர்  Karl Von Frisch தோட்டத்தில் பூக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் , அப்போது பூவில் ஒரேயொரு தேனீ அமர்ந்து தேனருந்தி கொண்டிருந்திருக்கிறது, பின் சில விநாடிகளுக்கு அந்த தேனி மறைந்துவிட்டு இன்னும் சில தேனீக்களின் பட்டாளத்தோடு திரும்பி வந்து பூக்களை மொய்த்துக்கொண்டிருந்திருக்கிறது. தேனை கண்டு சென்ற முதல்  தேனீ எப்படி மற்ற தேனீகளுக்கு தேனிருக்கும் இடத்தை சொல்லியிருக்கும் என ஆராய்ச்சி செய்யத்துவங்கியுள்ளார்.
சூரியனின் திசை, புவியின் ஈர்ப்பு சக்தி, அதன் உயிரி கடிகாரம் (இன்ன இன்ன நேரத்தில் சூரியன் இன்ன இன்ன திசையில் தான் இருக்கும் என்பதை தீர்மானிக்கும் தேனிக்களின் உள்ளார்ந்த அறிவு), புறஉதா கதிர்களை கண்டறியும் திறன், திசை காணும் அறிவு இவைகளை அடிப்படையாகக் கொண்டு தேனிக்கள் நெளிவு சுளிவுகளுடன் கூடிய அந்த நடனத்தை ஆடி அதன் கூட்டில் உள்ள மற்ற தேனீக்களுக்கு சூரியனின் திசையிலிருந்து உணவு இருக்கும் இடத்தின் கோணம், திசை,  தூரம் போன்றவற்றை கூறுகின்றன.

 இந்த வீடியோவைப் பாருங்கள் , விளக்கமாக விளங்கிக்கொள்ள முடியும்.


இந்த நடனமொழியை கண்டுபிடித்து உலகத்துக்கு அறிவித்த ஆஸ்திரேலிய உயிரியலாளர்  Karl Von Frisch க்கு 1973 க்கான நோபல் பரிசு கிடைத்தது .
தேனீ க்களுடன் ...

*******

இது போல ஒவ்வொரு பிராணியும், தாவரமும் தத்தங்களுக்குள் தங்களுக்கே உரித்தான பிரத்யேக, சங்கேத மொழி முறைமைகளைப் பயன்படுத்தி உயிவாழ்தலுக்கு அவசியமான கருத்துக்களைப்   பரிமாறிக்கொள்கின்றன.

அஃறினைகளின் உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் மொழிகளை ஆராய்ந்து  அவைகளை ரோபட்டுகளுக்குச் சொல்லிக்கொடுக்க முடியுமா என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் பிராணிகளின் மொழி நம் மொழி போல விசாலமானவைகள் அல்ல, Limited !  

இரை தேடுதல் ,இணை கவர்தல் , இனம் காணல் என குறுகிய எல்லைகளுக்குட்பட்ட குறைவான குறியீடுகளுடன் இருப்பவை. நம் பேசிக்கொள்ளும் மொழிகள்  போல சிக்கலான  சொல் அடுக்குகள், இலக்கண முறைகள் எல்லாம் கொண்டவைகள் அல்ல.

மனிதர்களைப்போல பள்ளிக்கூடங்கள் நடத்தி அவைகளின் எதிர்கால சந்ததியினர்களுக்கு அவைகள் பாடங்கள் 
சொல்லிக் கொடுப்பதில்லை. மொழியை  குரலாக, எழுத்துக்களாக, வீடியோவாக பதிவு செய்யும் தொழில்நுட்ப அறிவு அவைகளுக்குக் கிடையாது. புதிதாக பிறக்கும் ஒவ்வொரு விலங்குக்கும், தாவரத்துக்கும் inborn ஆகவே, தன்னிச்சையாகவே அதனதன் மொழியறிவும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இன்னும் பேசலாம்.... 

Post Comment