Tuesday, October 07, 2014

இலக்கியங்களால் என்ன பயன் ???

இலக்கியங்களால் என்ன பயன் ???

 சோற்றிற்கு உதவாத தேவையற்ற விசயம் என்று சொல்லிக்கொண்டு பெரும்பான்மையான மக்களால் தட்டிக் கழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிற இந்த இலக்கியங்களால் இந்த சமூகத்திற்கு என்னப் பயன் பெரிதாய் விளைந்து விடப்போகிறது...

எல்லாவற்றிலும் எதாவது ஒரு பலனை,பயனை எதிர்நோக்கியே அநேகர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இந்த புத்தகத்தை படித்தால் எங்கு வேலைக்குச் செல்லமுடியும் ?, இதை எழுதிக் கொண்டிருக்கிறாயே ! இதனால் என்ன லாபம் ?, நிகர லாபம் சுழி என வருகிற விசயங்களையெல்லாம் சுழித்துவிட்டு நகரவே எல்லோரும் விருப்பப் படுகிறோம்.இலக்கியப் படிப்பைப் பட்டப்படிப்பாக எடுத்துப் படிப்பது குறைந்திருப்பதன் காரணமும் இந்த பயன் வேண்டி படித்தலின் பாதிப்பு தான்.

இப்படியான சமூகத்தில் இலக்கியம் வாசிப்பவனாக, இலக்கியம் படைப்பவனாக வாழ்வதென்பது சிரமம் தான், ஆனால் இலக்கியம், எப்போதும் தனக்கென ஒரு உலகத்தை எல்லா காலக் கட்டத்திலும் அமைத்துக் கொள்கிறது, அந்த வகையில் தான் நானும் , நீங்களும், இன்னும் சிலரும்,  இந்த கால சமூகத்தில் இலக்கியங்களை எழுதிக் கொண்டிருக்கும் இலக்கிய எழுத்தாளர்களும்.

சரி , தலைப்பை தொடரலாம்...

இலக்கியங்களால் என்ன பயன்...


இலக்கியங்களால் பயன் என்ன?


நிகழ் கால நிகழ்வுகளை வார்த்தைகளாக்கி வைத்து கடந்தகாலப் பதிவுகள் என்ற பெயரில் எதிர்காலத்திற்குக் கடத்தும் வேலையைத் தானா இந்த இலக்கியங்கள் செய்தன, செய்துக்கொண்டிருக்கின்றன, அல்லது செய்யப்போகின்றன.

இலக்கியங்கள் என்பவை ஒட்டு மொத்த சமூகத்திற்குமாக எழுத்தாளனால் எழுதி வைக்கப்படும் டைரிக்குறிப்புகளா...
பதிவு செய்வதும் , டைரி எழுதுவதும் சாதாரண வார்த்தைகளாலேயே சாத்தியம் தானே !! பின்பு ஏன் புதிர்த்தனமான ,புரியாத மாதிரியான எழுத்துநடை.

வார்த்தைகள் என்பவை வெறும் வார்த்தைகள் மட்டுமே அல்ல ,ஒவ்வொரு வார்த்தையும் ஒரு கோப்பை மாதிரி ;வார்த்தைகள்- எண்ணங்களை சுமந்து செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கோப்பைகள்.அவைகளுக்குள் எல்லோராலும் தங்கள் எண்ணங்களை முழுமையாக நிறைத்து விட முடிவதில்லை , அதேமாதிரி சில உணர்வுகளை ஏற்கனவே அமைத்து வைத்திருக்கும் ரெடிமேட் கோப்பைகளுக்குள் நிறைக்க முடிவதும் சாத்தியமானதாக இல்லை,

 சதுர,செவ்வக என ரெடிமேட் வடிவ கற்கள் கொண்டு வித வித கட்டிடங்கள்,மாளிகைகள் என கட்டுவது மாதிரி ரெடிமேட் கோப்பைகளை உடைத்து, செதுக்கி, குறுக்கி என எதையாவது செய்து ரெடிமேட் வார்த்தைகளால் சுமக்கவே முடியாத எண்ணங்களை சுமக்கும் கொள்கலன்களை உருவாக்குவதன் முயற்சி தான் புதிர்த்தனமான இலக்கிய  நடைக்கான காரணம்.

இலக்கியம் என்பதன் நிகர பலன் எண்ணப் பதிவு என்பது தான் , இன்னொரு விசயத்தையும் சொல்ல வேண்டி இருக்கிறது, சாமானிய மக்களால் புரிந்து கொள்ள முடியாத மாதிரி வார்த்தையமைப்புகளால் எழுதப்படுகிற எல்லாமும் இலக்கியம் ஆகி விட முடியாது.,

அது சரி ..! எழுதப்பட்டிருக்கும் ஒரு விசயம் இலக்கியம் தான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? இலக்கியம் என்பது இதுதான் என வரையறைகள் ஏதேனும் உள்ளனவா ?

ஈரடி இருநூறு என்கிற நூல் 
“இலக்கியம் என்ப இயழலகு நீதி இலக்காக இன்பந் தரின்” 
-என இலக்கியத்திற்கு இலக்கணம் சொல்கிறது.

பள்ளிக்காலங்களில் தமிழ் பாடத்தில் பிரித்தெழுதுக என்கிற பிரிவொன்றை நீங்கள் நிச்சயம் சந்தித்திருப்பீர்கள் என நம்புகிறேன்
அம்முறையின் அடிப்படையில் , இலக்கியம் என்பதை இலக்கு + இயம் எனப் பிரிக்கிறார்கள் இலக்கை இயம்புதல்,  அதாவது சொல்லுகிற விசயத்தின் நோக்கம் துல்லியமாக கேட்பவரை அல்லது வாசிப்பவரை சென்றடையுமாறு சுவைபட சொல்லுதல்.

இலக்கியங்கள் என்பவை கவிதை,கட்டுரை,கதை,நாடகம் என எந்த அவதாரத்தில் வேண்டுமானாலும் இருக்க முடியும் புனைவு,இருத்தலியல்,நாட்டாரியல், ஹைக்கூ,லெமரிக்,வெண்பா என எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்க முடியும்.

இலக்கியங்களின் வகைகள் இவ்வளவுதான் என எண்ணிச் சொல்லிவிட முடிவதில்லை, இலக்கியங்கள் எண்ணிக்கைகளுக்குள் அடைபடுவதென்பதும் சாத்தியமில்லை,அவை காலப்போக்கில் எல்லை மீறி வளரக்கூடியவை,அல்லது குறையக்கூடியவை இப்போதைய காலகட்டத்தில் இலக்கிய வகைகள் அதிகமாகி இருக்கின்றன, சிறுவர்களுக்கும் புரிகிற மாதிரி எழுதுவது சிறுவர் இலக்கியம், விஞ்ஞான விசயங்களை விளங்கிக் கொள்ளும் வகையில் எழுதுவது விஞ்ஞான இலக்கியம் ,திரைப்படமாக எடுப்பது திரைப்பட இலக்கியம், தலித்தியப் பதிவுகள் தலித்திய இலக்கியம், இப்படி பட்டியலை நீட்டிக் கொண்டே போக முடியும்.

இலக்கியங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் அவைகளால் என்ன பயன் ?
 • ஒட்டு மொத்த சமூகத்தின் குரலாக, சமூகத்திற்கான குரலாக ஒலிப்பது.
 • நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம்,வாழ்க்கை என நடப்புக்காலத்தை பதிவு செய்வது.
 • பதிவு செய்த உணர்வை அச்சுப் பிசகாமல் படிப்பவருக்குக் கடத்துவது.

இதனால் என்ன பயன் என்கிறீர்களா !!

இலக்கியங்கள் என்பவை காலத்தின் பதிவுகளை கால வெளியில் சுமந்து செல்லும் வாகனங்கள் எனலாம்.
அந்தக் காலத் தமிழ் 

உதாரணத்திற்கு , இந்த கட்டுரைக்கு ஆயுள் கெட்டி என வைத்துக்கொள்ளுங்களேன் (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்...)
 “இலக்கியத்தின் பயன் என்ன?” என்று கேட்டுக் கொண்டு ஒரு சமூகம் வாழ்ந்தது என பின்னால் வரப்போகிற சமூகத்திற்கு டிஜிட்டல் அகழ்வாராய்ச்சி செய்து யாராவது எதிர்காலத்திய தமிழில் மொழி பெயர்த்து வாசித்துக்காட்ட முடியும் அல்லவா ! அப்போதும் அங்கே ஒரு கூட்டம் இலக்கியத்தால் என்ன பயன் என்று கேட்டுக்கொண்டிருக்கலாம் .எல்லாக் காலங்களிலும் எல்லோருமே இருக்கத்தானே செய்கிறோம்.


 

Post Comment

7 comments:

 1. வணக்கம்
  சிறப்பானஆய்வு பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அட்டகாசமான கட்டுரை விஜயன்... இங்கே தற்போதைய சூழலில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் எழுத்தே இலக்கியம் என கருதும் நோக்கு இருக்கிறது.. இலக்கியம் எல்லாவற்றையும் கடந்தது. இலக்கு + இயம்

  ReplyDelete
 3. நல்ல ஆராய்ச்சி .தன்னை சுற்றி நடப்பவற்றை கறபனை கலந்து சுவாரசியமாக படைப்பதை இலக்கியம் என்று கொள்ளலாம்
  இலக்கியம் படைக்கப் போகிறேன் என்று சொல்லி ஒருவன் இலக்கியம் படைக்க முடியாது. அதை காலம்தான் சொல்ல வேண்டும். கம்பராமாயணம் சிலப்பதிகாரம் எல்லாம் மாபெரும் இலக்கியங்களாக திகழப் போகின்றன என்றுநினைத்துப் படித்திருக்க மாட்டார்கள். ஷேக்ஸ்பியருக்கே தெரிந்திருக்காது தான் இலக்கியவாதியாக போற்றப் படுவோம் என்று.

  ReplyDelete
 4. இல்லக்கியங்களைக் குறித்து நீ எழுப்பிய கேள்விகள் இது வரை நீ சொன்னது போலவே பலரால் கேட்க்கப்பட்டதுதான்... நமில் பலருக்கு நேரடியான அனுபவமும் இதில் நிச்சயம் இருக்கும்... இலக்கியம் என்பது என் வகையில், எழுதுபவர்களைப் பொருத்த வரையில் அது உணர்வுகளுக்கான ஒரு வடிகால், ஆழ்ந்த மிக நீண்ட தனிமையிலிருந்து விடுபடுவதற்க்கான ஒரு வழி, படிப்பவர்களைப் பொறுத்த மட்டிலும் கூட இதே வகையான அனுபவத்தை அவர்களும் பெறக்கூடும், அதனையும் தாண்டி இலக்கியம் காலத்தின் கண்ணாடி, இலக்கியங்கள் அவை அவை எழுதும் கால கட்டத்தை அப்போதைய மனிதர்களின் வாழ்வு முறையை மாறி வரும் பண்பாட்டு நெறிதனை பொருளாதர சூழலை அடுத்து வரக் கூடிய தலைமுறையினருக்கு காட்டக் கூடியவையாக இருக்கின்றன.. சிலர் கேட்க்கலாம் இவை எல்லம் தான் இப்போதைய அரசாங்க புள்ளி விவரங்களிலேயே கிடக்கின்றனவே என்று, அராஅங்க புல்லி விவரங்கள் என்றும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை, ஆனால் இலக்கியங்கள் அப்படிப்பட்டவை அல்ல, அவை சமூகத்தின் அனைத்து நிலை மனிதர்களாலும் அவர்களின் கண் முண் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்படுபவை... நாமே பழங்கால மன்னர்களின் வரலாற்றினை அறிந்து கொள்ள கல் வெட்டுக்களை விட பழைய இலக்கியங்களை அதிகம் நாடுவதே இதற்க்கு சாட்சி

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. " இலக்கியங்கள் என்பவை காலத்தின் பதிவுகளை கால வெளியில் சுமந்து செல்லும் வாகனங்கள் எனலாம்.... "

  இந்த பதிவின் ஹைக்கூவாக திகழும் வரி !!!

  கற்பனையின் வாயிலாக பூரணத்தை அடையும் முயற்சிதானே இலக்கியம் ?!

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr


  எனது புதிய பதிவு : தமிழர் என்றோர் இனமுண்டு...

  http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post.html

  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

  ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....