Friday, March 20, 2015

கொலைகார செல்போன்கள்





 ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி  எல்லோர் கையிலும் மிகச் சாதரணமாக ரகம் ரகமாக  விஞ்ஞான விரலாக முளைத்திருக்கும் இந்த செல்போன் களை உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை எனக் கூறினால் சட்டென மறுக்கத்தான் தோன்றுகிறது. அத்தனை அவசியமாகவும், வாழ்வின் முக்கிய அங்கமாகவும் அவை மாறிப்போயிருக்கின்றன.

இவற்றால் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப்போகிறது ?? என கேட்கிறவர்களுக்கு ஆராய்ச்சியாளர்களும்,  மருத்துவர்களும்

கதிர்வீச்சு நோய்கள்,  கவனச்சிதறடிப்பால் ஏற்படும் விபத்துகள், கண், காது, மூளை பாதிப்புகள், ஆண்மைக்குறைப்பு என பட்டியல் போட்டுக்கொண்டே போகிறார்கள்.

செல்போன் களால் வருகிற பாதிப்புகளில் 99 சதவீத உடல்நிலை மற்றும் மனநிலை பாதிப்புகளுக்கு அவை வெளிப்படுத்துகிற கதிர்வீச்சுக்கள் தான் காரணமாக அமைகின்றன

உண்மையிலேயே இவை உயிர்க்கொல்லிகளா !! இவற்றின் தவிர்க்க இயலா  தாக்குதல்களில்  இருந்து தப்பித்துக்கொள்ள வழிகள் ஏதும் உள்ளனவா?  இந்த கட்டுரையில் இது பற்றி சிறிது விரிவாகக் காணலாம் .

கதிர் வீச்சில்லாத செல்போன்கள் சாத்தியமா !!

செல்போன் களில் நாம் பேசுகிற பேச்சுக்கள் , இன்டர்நெட் டேட்டா, எஸ்.எம்.எஸ் என அனைத்து வகையான பரிவர்த்தனைகளும் கதிர்வீச்சுக்களாகவே கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றன.

செல்போன் களில் நாம் ஒருவருக்கு அழைப்பு அல்லது எஸ்.எம்.எஸ்  செய்யும்போது , நமது பேச்சு முதலில் மின் காந்த கதிர்வீச்சாக மாற்றப்படுகிறது, பின் நமது செல்போன்  "அடித்தள நிலையம்"  எனப்படும் செல்போன் கோபுரங்களுக்கு அந்த கதிர்வீச்சை அனுப்பி வைக்கும். ( செல் கோபுரத்தைவிட்டு நீங்கள் மிகத்தொலைவில் இருக்கும் போது , கதிர்வீச்சின் வீச்சு சற்றே கூடுதலாக இருக்கும்). இந்த கோபுரங்களில் இருக்கும் கருவிகள் செல்போன் களில் இருந்து பெறப்பட்ட கதிர்வீச்சுகளை அவற்றின் ஆற்றலை அதிகப்படுத்தி தொலை தூரத்திற்கோ, அல்லது செயற்கை கோளுக்கோ அனுப்பி வைக்கின்றன, அங்கிருந்து நீங்கள் அழைப்பு விடுத்த நபரின் செல்போனை நீங்கள் அனுப்பிய அந்த தகவல் கொண்ட கதிர்வீச்சு அடைகிறது.

ஆக கதிர்வீச்சை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் செல்போன் களை கதிர்வீச்சு இல்லாமல் கற்பனை செய்வது கூட அபத்தமானது.

கண்ணுக்குத்தெரியாத கதிர்வீச்சுகள்   :

ஏகப்பட்ட செல்போன்கள் கோடிக்கணக்கில் உலகம் முழுக்கப் பயன்பாட்டில் உள்ளன,  இவை ஏற்படுத்தும் மின் காந்த அலைகள் நம்மைச் சுற்றிலும் கண்ணுக்குத்தெரியாமல் அலை அலையாகப் பரவி இருக்கின்றன , மின் காந்த அலைகளை பார்க்கும் சக்தி நம் கண்களுக்கு இருக்குமானால் பனிமூட்டத்தினைப் போல பார்வையை மறைத்து நம்மைப் பார்க்கவிடாமல் தடுமாறச் செய்யும் அளவுக்கு அவை பரவி இருப்பதைப் பார்க்க முடியும்.

(Gass meter என்கிற கருவி மூலம் இந்த கதிர்வீச்சை அளக்க முடியும் என்கிறார்கள்.)

மைக்ரோ வேவ் அடுப்புகள், மின்சார கம்பிகள், ரேடியோ, தொலைக்காட்சி, இப்படி நிறைய மின் சாதனங்கள் மின் காந்த கதிர்வீச்சை வெளிப்படுத்துகின்றன. ஆனால் செல்பேசிகள் உடன் ஒப்பிடும்போது இவை வெளிப்படுத்துகிற கதிர்வீச்சு மிகக்குறைவு எனலாம்.

அதுமட்டுமில்லாமல் இன்ன பிற கதிரியக்க சாதனங்களை நாம் கையோடே தூக்கி சுமந்து கொண்டு திரிவதில்லை, காதோடு கதை பேச விடுவதில்லை, நெஞ்சோடு (சட்டைப்பைக்குள்) அணைப்பதில்லை, கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவதும் இல்லை.

அதுசரி., 

செல்போன் கதிர்வீச்சால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன ?
படம் நன்றி : http://www.inspirationgreen.com/

செல்போன் களின் ஆதிக்கம் 1980 களில் தான் ஆரம்பம் ஆகின, கதிர்வீச்சுக்களைப் பற்றியோ, அதன் விளைவுகளைப் பற்றியோ எந்த செல்போன் நிறுவனமோ, அரசோ, அதன் பயன்படுத்தும் மக்களோ கண்டுகொள்ளவே இல்லை !

1993 ல் டாக்டர் ஜார்ஜ் கார்லோ என்ற ஒரு மருத்துவ விஞ்ஞானி செல்போன்கள் கதிர்வீச்சுகளை அதிக அளவு வெளிப்படுத்துகின்றன, அவற்றால் பல நோய்கள் ஏற்படுகின்றன என்று அவர் கூறிகினார். இல்லை இல்லை என செல் நிறுவனங்கள் மறுக்க 1993 முதல் 1999 வரை ஒரு மாபெரும் ஆராய்ச்சியை மேற்கொண்டு 

1999-ல் Cell Phones: Invisible Hazards in the Wireless Age (செல்போன்கள் - நவயுக தகவல் யுகத்தில் மறைமுக அபாயம்)  என்ற பெயரில் தனது ஆராய்ச்சி முடிவை  புத்தகமாக்கி வெளியிட்டார். அதன் அடிப்படையில்

  • ஒரு நாளில் 26 நிமிடத்திற்கு மேல் செல்போனை பயன்படுத்துகிறவர் கதிர்வீச்சின் தாக்குதலுக்கு ஆளாகிறார்.
  • செல்போன் கதிர்வீச்சுகள் நமது உடலுக்குள் ஏற்படும் உயிரி கதிர்வீச்சை  (Bio-magnetic field) சிதைக்கிறது.
  • இந்த கதிர்வீச்சுகள் உடலில் உள்ள செல்களை சூடேற்றி அளவிற்கு வல்லமை கொண்டவை
  • உடல் செல்களுக்குள் நடைபெரும் தகவல் பரிமாற்றத்தில் குளறுபடிகள் செய்கின்றன.
  • செல்சுவற்றை கடினமாக்கி DNA சிதைவை ஏற்படுத்துகின்றன.
  • செல் உயிரிழப்பை தூண்டுகின்றன.
  • மரபியல் கோளாறுகள்
  • மூளை சார்ந்த நோய்கள் 
  • தூக்கமின்மை
  • கவனச்சிதைவு
  • தலைவலி
  • காது பிரச்சினைகள்

டாக்டர்  ஜார்ஜ் கார்லோவின் ஆய்வு முடிவுகள் மக்களை நிறைய வே பயமுறுத்தத் துவங்கின . அதன் பிறகு பற்பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.அவை அத்தனையும் கூட செல்போன்கள் ஆபத்தானவை என்பதையே மறுபடியும் வழிமொழிந்தன. 2011 ல் அகில உலக கேன்சர் ஆராய்ச்சி மைய (IARC) அறிக்கையின்படி செல்போன் கதிர்வீச்சுக்கள் Group 2B - கார்சினோஜெனிக் (அதாவது "கேன்சருக்கு காரணமாகக் கூடும்"  வகை). வகையைச்சேர்ந்தவை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. செல்போன் கதிர்வீச்சுகள் BBB ( blood–brain barrier ) என்ற ரத்ததிற்கும் , நரம்பிற்கும் இடையேயான தடைச்சுவற்றை உடைத்து நரம்புகளுக்குள் ரத்தம் புக வைக்கும் வல்லமை உடையன என ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.


உங்களின் செல் போனின் மின் காந்த கதிர்வீச்சை கணக்கிடுவது எப்படி ?

ஒவ்வொரு அலைபேசியும் வெவ்வேறு அளவிலான கதிர்வீச்சுக்களை வெளியிடுகின்றன, பேசிக்கொள்ள மட்டுமே பயனளிக்கும் பழைய ரக அலைபேசிகளைவிட , அதிகப்படியான பயன்களைத் தருகிற புது ரக அலைபேசிகள் அதிகப்படியான கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன.

செல்போன் கள் வெளியிடுகிற  கதிர்வீச்சின் அளவை SAR எனக் குறிக்கிறார்கள், புதிதாகத் தயாரித்து வெளியாகும் செல்பேசிகளில் அந்தந்த நிறுவனங்கள் இந்த SAR -ன் அளவை வெளியிட்டே ஆக வேண்டும் என்று புதுச்சட்டம் வேறு போட்டிருக்கிறார்கள்.

நீங்கள் புதிதாக மொபைல் போன் வாங்குவதற்கு முன் அதன் கதிவீச்சு அளவையும் மறக்காமல் பார்த்துவிட்டு வாங்குங்கள்.

உங்கள் செல்போனில் *#07# அழுத்துங்கள் . உங்கள் செல் போனின் SAR அளவு காட்டப்படும் , இம்முறை மூலம்  SAR அளவு சில அடிப்படை ரக, பழைய ரக மொபைல்களில் காட்டப்படுவதில்லை, அவ்வகை மொபைல்கள் உடையவர்கள் பயனர் கையேட்டை கவனிக்கவும் , இல்லையெனில் அதன் இணையத்தளத்தை கவனிக்கவும் , அங்கும் இல்லையெனில்

http://sarvalues.com/

இணையத்தளத்தில் உங்கள் மொபைலின் மாடல் எண்ணைத் தேடிப்பார்க்கவும். 

SAR அளவு :

 Specific Absorption Rate SAR என்பதன் சுருக்க வார்த்தை , இதை "உடல் கிரகிக்கும் கதிர்வீச்சளவு " என அர்த்தம் கொள்ளலாம் . இது W/kg (ஒரு கிலோகிராம் செல்லால் கிரகிக்கப்படும் வாட், வாட் என்பது ஆற்றலின் அளவுமுறை ) எனக் குறிக்கப்படுகிறது.

பாதுகாப்பான SAR எண்ணளவு: 

இந்த SAR அளவு ஒரு வாட்டிற்கும் குறைவான அளவாகவே இருக்க வேண்டும் . அனுமதிக்கப்பட்ட அளவு 1.6 W/Kg  (அமெரிக்க தர )



கதிர்வீச்சுக்களின் பாதிப்பில் இருந்த தற்காத்துக்கொள்ள சில யோசனைகள்? 

கதிர்வீச்சுத்தாக்குதலை முற்றிலுமாக தவிர்க்க இயலாது,ஆனால் குறைத்துக்கொள்ள முடியும், இதற்கு பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு உதவலாம்.
"செல்"லக்குட்டி
                                  
  1. பயன்பாடு இல்லாத சமயங்களில் அலைபேசிகளை தூர வைக்கவும்,செல்பேசி தேவைப்படாத சமயங்களில் ஏரோப்ளேன் மோடில் இடவும். (ஏரோப்ளேன் மோடில் கதிர்வீச்சு சுத்தமாக இருக்காது).
  2. குழந்தைகளிடம் விளையாட்டுப்பொருள் தானே என எண்ணிக் கொடுக்க வேண்டாம், பெரியவர்களைவிட குழந்தைகள் கதிர்வீச்சால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.
  3. சிக்னல் இல்லாத சமயங்களில் (டவர் லைன்) அதிகம் பேச முயற்சிக்க வேண்டாம்


சிக்னல் இல்லாத போது பேசினால்... 

  1. பேன்ட் பாக்கெட்,சட்டை உள் பாக்கெட் என அதிமறை பிரதேசங்களுக்குள் வைக்கும் போது கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது. தவிர்க்கவும்
  2. அதிக நேரம் பேசும் போது ஹெட்செட் பயன்படுத்தவும்.(ப்ளுடூத் ஹெட்செட்கள் கதிர்வீச்சைக் குறைக்காது (அவையும் கதிர்வீச்சால் இயங்கும் சாதனங்களே).
  3. தலைமாட்டில்  வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவும்.
  4. இன்டர்நெட் தேவையில்லா சமயங்களில் டேட்டாவை ஆஃப் செய்வது உத்தமம்
  5. செல்போனில் பேசும் போது காதோடு சேர்த்து அழுத்திக்கொண்டு பேசுவதை தவிர்க்கவும்.
  6.  கையை வைத்து செல்போனை மூடி மறைத்துக்கொண்டு பேசுவது கூடாது, மறைப்பு ஏற்படுத்தும்போது கதிர்வீச்சின் அளவு அதிகமாகும்.
அழுத்தி மூடும் போது அதிக கதிர்வீச்சு !
       7. மின் கம்பிகள் அருகே நின்று செல்போன் பேசக்கூடாது.       (மின்சாரம் தாக்கக்கூடும்).                                                                
                                               


Labels: , , , ,

Saturday, February 02, 2013

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-9



கடந்த பதிவில் இணைய உலகின் இணைப்பிற்கு முன்னோடியான தந்தி முறைப்பற்றியும்,இணையம் பற்றி தீர்க்கதரிசனம் சொன்ன ஜூல்ஸ் வெர்னெ பற்றியும் பார்த்தோம்.இந்த பதிவில் கம்பி வழி தகவல் தொடர்பின் அசுர வளர்ச்சியை பார்க்கலாம்.

தகவல் யுகத்தின் உதயம்:

 தகவல் யுகம் தன்னை உருவாக்கி கொண்டது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான்.இதன் பிறப்பு தாமதமாக இருந்தாலும் வளர்ச்சி கொஞ்சம் வேகமாகத்தான் இருந்தது. தந்தி,ரேடியோ,தொலைபேசி,தொலைக்காட்சி என்று வேகமாக வளரத்துவங்கியது.

   கடலுக்கடியில் கம்பி புதைக்கும் பணியை செய்யும் கப்பல்கள் -1858

கண்டங்களை இணைத்த கம்பிகள்:

 தந்தி முறையின் தந்தையான சாமுவேல் மோர்ஸ்,(தந்தி வழியாக பரிமாறிக்கொள்ளப்படும் மோர்ஸ் குறியீடு (படம் பார்க்க:க்ளிக்குக) எனும் ஒலிக்குறிப்புகள் இவர் கண்டறிந்தது தான்) அவர்கள் கடலுக்கடியில் கம்பிகளை அமைத்து கண்டங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என்று அவர் தந்தியை கண்டுபிடித்த காலத்திலேயே கூறியிருந்தார்

 கம்பி வழி தகவல் தொடர்பு வலுப்பெற ஆரம்பித்த உடன் 1857 -ம் வருடத்தில் அமெரிக்க-இங்கிலாந்து நாடுகளுக்கிடையில்  தந்தி தொடர்பு ஏற்படுத்த கடல் வழியாக தகவல் தொடர்பு கம்பிகள் அமைக்க ஏற்பாடு ஏற்படுத்தப்பட்டது.


கடலுக்கடியில் சென்று கண்டங்களை இணைத்த கம்பிகள்....!

(இந்த திட்டத்திற்கான பணத்தை அமெரிக்க -இங்கிலாந்து அரசுகள் பகிர்ந்து கொண்டன.)


கடலுக்கடியில் கம்பி புதைக்கும் இந்த கடினமான பணியை Cyrus West Field மற்றும் Atlantic Telegraph Company ஆகிய இரு நிறுவனங்கள்  அட்லான்டிக் கடலுக்கடியில் துவக்கின.,

பல போராட்டங்களுக்கு பிறகு இவை 1858 ஆகஸ்ட் -ல் செயல்படத் துவங்கின.
ஆகஸ்டு 16 -ல் முதல் முதலாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையே வாழ்த்து தந்தி பரிமாறிக்கொள்ளப்பட்டது.கண்டம் விட்டு கண்டம் பரிமாறிக்கொள்ளப்பட்ட முதல் எலக்ட்ரானிக் தகவல் இது தான் .இந்த தந்தியை இங்கிலாந்து மகாராணி விக்டோரியா அனுப்ப  அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் புச்சனன் (James Buchanan)  பெற்றுக்கொண்டார்.

(இந்த கம்பிகள் வழியாக ஒரு எழுத்தை,அல்லது ஒரு எண்ணை அனுப்ப இரண்டு நிமிடம் தேவைப்பட்டது.முதன்முதலில் அனுப்பட்ட செய்தியை முழுமையாக பெற 17 மணி நேரம் ஆனதாம் !)


மூன்று வாரங்களுக்கு பிறகு...

 இந்த இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு சரியாக மூன்று வாரங்கள் கடந்திருந்த வேளையில் கம்பி வழியாக தவறுதலாக அதிக மின்னழுத்தம் (Voltage)அனுப்ப பட்டதன் விளைவாக கம்பிகள் கருகிப்போயின..

 கம்பி நீட்டிய பழைய கம்பிகளில் இருந்த குறைகளை நீக்கி 1866 - ஜூலை 28 ல் மீண்டும் கடல் வழி கம்பி புதைத்தல் பணி மறுபடியும் நிறைவேற்றப்பட்டது.

1866 -ல் மீண்டும் இணைப்பு....! கிரேட் ஈஸ்டர்ன் கப்பல்


           Great Eastern கப்பலில் இருந்த கம்பி புதைக்கும் கருவி (Grappling Hook)

  இந்த புதிய கம்பிகள் மூலம் ஒரு நிமிடத்தில் 8 எழுத்துக்களை அனுப்ப முடிந்தது. அதிக தூரம் தகவல் அனுப்பும் போது ஏற்படும் தகவல் இழப்பை தடுக்க சில புதிய கருவிகளும் இணைப்பில் இணைந்தன.

1870 -ல் ஒரே கம்பி வழியாக பல தகவல்களை அனுப்பும் முறை கொண்டுவரப்பட்டது.

1873, 1874, 1880, மற்றும் 1894 வருடங்களில் மேலும் பல புதிய கம்பிகள் புதைக்கப்பட்டன19-ம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் பிரிட்டிஸ்,பிரான்ஸ்,ஜெர்மனி,அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உரிமையான தகவல் தொடர்பு கம்பிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களின் நாடுகளை இணைக்க துவங்கியிருந்தன ,கம்பிகளின் உதவியால் கண்டங்கள் இணைய ஆரம்பித்தன...

அடுத்த பதிவில் கணினிகளின் வளர்ச்சியைப்பற்றி பார்ப்போம்:

தொடர்ந்து வாசித்து ஆதரவு தாருங்கள்.தங்கள் சந்தேகங்கள்,கேள்விகள்,கருத்துக்கள் போன்றவைகளை மறக்காமல் கமென்டில் குறிப்பிடவும்

Labels: , , , , ,

Wednesday, November 07, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-10


(தீபாவளி சிறப்பு பதிவு)

சென்ற வாரம் கம்பி இணைப்பு கண்டங்களை எப்படி இணைத்தது என்று பார்த்தோம்.இந்த வாரம் கணினியின் வரலாற்றை பார்க்கலாம் என்று கட்டுரையை முடித்திருந்தேன்...கணினியின் வரலாற்றுக்குள் பிரேவேசிக்கும் முன் இந்த வாரம் கம்பி இணைப்பு சம்பந்தமான சில அரிய புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன்....


கம்பி இணைப்பின் காரணாகர்த்தாக்கள்.அந்த தாடிக்காரர் (மோர்ஸ்) தான் தந்தியை கண்டுபிடித்தவர்



 கடல் வழியாக கம்பிகளை அனுப்ப முடியும் என்று இவருதாங்க சொன்னாரு (சாமுவேல் மோர்ஸ் தாடி இல்லாமல்)

இவரு பேரு "சார்லஸ்.T .பிரைட்" அட்லான்டிக் கம்பி கம்பேனியின் தலைமை பொறியியலாளர் (24 வயது !) . இவரு 24 வயதில் 2 டஜன் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கியிருந்தாராம் !.இந்த போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது 20 வயது.


1857 -ல் கடலுக்கடியில் கம்பி புதைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கப்பல்கள். நயகரா மற்றும் டென்டர்.இந்த கப்பல்கள் 1265 மைல் நீள கம்பியை கொண்டுஅமெரிக்க -ஐரோப்பா கண்டங்களை இணைத்தது 



இது தான் அந்த கம்பி ! (1857 வருடம்.மூன்று வாரங்கள் மட்டுமே இவை செயல் புரிந்தன)







அதிக மின்னழுத்தத்தால்பாதிக்கப்பட்ட பழைய கம்பிகளுக்கு மாற்றாக வந்த மேம்படுத்தப்பட்ட

கம்பிகள்.



புதிய கம்பிகளை புதைத்த புதிய கப்பல் Great Eastern.  இதில் 10,000 பணியாளர்கள் இருந்தார்களாம் ! 


இந்த கப்பலை கட்டின புண்ணியவான் இவரு தான்.k.Brunal



சுத்தி...சுத்தி... தொழிற்சாலையிலிருந்து கம்பி கப்பலுக்குள் பறிமாற்றப்படுகிறது.

கம்பி கப்பலில் இருந்து விடுவிக்கப்பட்டு புதைக்கப்படுகிறது.
1 ,2, 3, 4 குட்டி கப்பல்கள் Terrible,Sphinx,Hawk, மற்றும் Carroline


தானியங்கி கம்பி வெளியேற்றும் அமைப்பு 



 பல கரங்கள் கம்பியை கரை நோக்கி இழுக்கும் காட்சி
இடம்:Valentina,அயர்லாந்து
நாள் :1866 -ஜூலை 7







செய்தியில் கம்பி !





கௌரவம் ! 


காசு


தபால் தலை


 வெற்றி! வெற்றி!

வெற்றி ! வெற்றி! தந்தி தரையை அடைந்த சந்தோசத்தை கொண்டாடும் மக்கள்






பட்டாசு வெடித்து கொண்டாடும் அமெரிக்கா !

வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

குறிப்பு:

இந்த புகைப்படங்கள் 1959 ம் வருடம் வெளியான THE ATLANTIC CABLE , BY BERN DIBNER எனும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.



சந்தேகங்கள்,கேள்விகள்,கருத்துக்கள் போன்றவைகளை மறக்காமல் கமென்டில் குறிப்பிடவும். ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம் தொடர் தீபாவளியை முன்னிட்டு அடுத்த வாரம் வெளிவராது.




Labels: , , , , ,

Wednesday, September 26, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-4

இணையத்தின்வரலாறு-பாகம்-4


இணையம் வழியாக பரிமாறிக்கொள்ளப்பட்ட முதல் செய்தி:

ணையத்தின் முன்னோடியான ஆர்பா செயல்பாட்டிற்கு நான்கு முனைப்புள்ளிகளுடன்(Nodes) வந்தது.அவை பற்றிய விவரங்களை கடந்த பதிவில் பார்த்தோம்.இணையத்தில் முதன் முதலாக பரிமாறிக்கொள்ளப்பட்ட செய்தியை பற்றியும்,உலகின் முதல் இணைய இணைப்பான ஆர்பா எப்படி தன் செயல்பாட்டை துவக்கியது என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.
நான்கு கணிப்பொறி இணைப்புடன் தன் பயணத்தை துவக்கிய இன்டர்நெட்

பட விளக்கம்:

இதில் வட்டத்திற்குள் எழுதி இருப்பது கணிப்பொறியின் வகை (தற்காலத்தில்HCL,HP,Dell இந்த மாதிரி,அந்த கால கணிப்பொறிகள்).வட்டத்திற்கு வெளியே எழுதி இருப்பது ஆர்பா-நெட் –ல் முதன்முதலாக இணைந்த 4 நிறுவனங்கள்(பார்க்க :கடந்த பதிவு).IMP என்பது தற்காலத்தில் பயன்படுத்தப்படும் Router மற்றும் Modemகளின் முன்னோடி Interface Message Processor. "ஆர்பா –இணையத்தில்" IMP உதவியுடன் தான் 4 நிறுவனங்களின் கணிப்பொறிகளும் இணைக்கப்பட்டன.


ஆர்பா-நெட் சோதனை ஓட்டம் :

ஆர்பா-நெட் தன் சோதனை ஓட்டத்திற்கு தயாரானது.UCLAகலிபோர்னியா யுனிவர்சிட்டி ,லாஸ் ஏஞ்சல்ஸ்-ல்.கணிப்பொறித்துறை பேராசிரியரான க்ளெயின்ராக் (Kleinrock).அவரது மாணவர்கள் சிலருடன் ஸ்டான்போர்டு பல்கலை., இல் உள்ள கணிப்பொறிக்கு லாக்-இன் செய்து தகவல் அனுப்ப திட்டமிட்டனர்.இங்கே டைப் செய்யும் ஒவ்வொரு எழுத்தும் ஸ்டான்போர்டில்(SRI) உள்ள கனிணியில் தெரிய வேண்டும் என்பது திட்டத்தின் நோக்கம்.
LOGIN” என்னும் வார்த்தையை அனுப்புவதற்காக தன் விரல்களை லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா யுனிவர்சிட்டி (UCLA)கணிப்பொறியில் வைத்து ஒவ்வொரு எழுத்தாக அழுத்த ஆயத்தமானார்.

UCLA பேராசிரியர் க்ளெயின்ராக் (Kleinrock)அவர்களின் பேட்டியில் இருந்து...
நாங்கள் ஸ்டான்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்திர்கு தொலைபேசி அழைப்பு விடுத்து,தொலைபேசி மூலமாக இணைந்து கொண்டோம்.பின் நாங்கள்
எங்கள் கணிப்பொறியில் “L” எனும் எழுத்தை டைப் செய்து விட்டு.
தெரிகிறதா? என்று SRI –இடம் கேட்டோம்...
தெரிகிறது என்று பதில் வந்தது.
பிறகு “O” டைப் செய்து விட்டு கேட்டோம்
O” தெரிகிறது என்று பதில் வந்தது..
G” டைப் செய்யும் போது கணிப்பொறி செயல்பாட்டை இழந்தது(System Crash )
புரட்சியின் துவக்கம் உதயமானது”

LO”-இதுதான் இணையம் வழியாக பரிமாறிக்கொள்ளப்பட்ட முதல் செய்தி...
ஆர்பா தன்னை கொஞ்சம் கொஞ்சமாக புதுப்பித்துக்கொண்டது,ஆர்பாவின் புகழ் அமெரிக்க நிறுவனங்களிடையே பரவ துவங்கியது.
ஜூலை 1970 -ல் ஆர்பாவில் 15 நிறுவனங்கள் இணைந்தன.

15 நிறுவனங்களின் பட்டியல்:
• University of California at Los Angeles (UCLA)
• Stanford Research Institute (SRI)
• University of California at Santa Barbara (UCSB)
• University of Utah
• Bolt Beranek and Newman (BBN)
• Massachusetts Institute of Technology (MIT)
• RAND Corporation
• SDC
• Harvard
• Lincoln Labs
• Stanford
• University of Illinois at Urbana Champaign (UIUC)
• Case Western Reserve University (CWRU)
• Carnegie Mellon University (CMU)
• NASA-Ames

1971 -ல் ஆர்பா அமெரிக்க மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏப்ரல் 1971 -ல் ஆர்பாவின் நிலை

ஆர்பாவில் இணையும்நிறுவனங்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வந்தது.1973 -ல் ஆர்பாவில் 35 -ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்திருந்தன.
இந்த பதிவை ஒரு கேள்வியுடன் முடித்துக்கொள்கிறேன்..ஆர்பா தொடங்கப்பட்டதன் நோக்கம் பற்றி முதல் பதிவில் பார்த்தோம் அந்த நோக்கம் நிறைவேறியதா?? அடுத்த பதிவில் பார்க்கலாம்.


இந்த கட்டுரையை வாசிக்கும் நல்லுள்ளங்கள் தங்கள் சந்தேகங்கள்,கேள்விகள்,கருத்துக்கள் போன்றவைகளை கமென்டில் மறக்காமல் குறிப்பிட்டு செல்லுங்கள்


Labels: , , , , ,

Monday, September 17, 2012

ஆச்சரியங்கள் நிறைந்த மாய உலகம்-3

இணைய உலகின் வரலாறு பாகம்-3

இணையத்தின் விதையை விதைத்தவர் யார்:

நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும்,விசயமும் ஒரு காலத்தில் தனி மனிதனின் சிந்தனையாக இருந்தவைகள் தான்.இணையமும் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல
1958 ல் அமெரிக்க அரசு உருவாக்கிய ஆர்பாவில் பணியாற்றிய கணினி ஆராய்ச்சியாளராக இருந்த JCRலிக்லிடர் (Joseph Carl Robnett Licklider) என்பவர் தான் இணையத்தின் (Internet)சிந்தனையை முதன் முதலில் கூறியவர்.அதாவது இணையத்தின் விதையை விதைத்தவர் இவர் தான்.அதன் பின்பு பல விஞ்ஞானிகளால் நீரூற்றி வளர்க்கப்பட்டது,
1960 ஆம் ஆண்டு JCR கணினிக்கும் மனிதருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் பற்றிய தன் ஆராய்ச்சி கட்டுரையை ( Man-Computer Symbiosisஎன்ற தலைப்பில்) சமர்ப்பித்தார்.

இணையத்தின் விதையை விதைத்த JCR இவர் தாங்க

தில் இவர் “உலகின் நூலகங்களில் காணப்படும் தகவல்களை அனைத்தையும் கணினிகள் மூலம் இணைத்து அனைவரும் தகவல்களை பயன்படுத்திக்கொள்ளும் விசயம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்”

"A network of such [computers], connected to one another by wide-band communication lines [which provided] the functions of present-day libraries together with anticipated advances in information storage and retrieval and [other] symbiotic functions."
J.C.RLicklider

இந்த ஆராய்ச்சி கட்டுரையின் Copy வேண்டுவோர் கமெண்டிலோ, இமெயில் மூலமோ என்னை தொடர்பு கொள்ளலாம்.

1962 ஆகஸ்ட் மாதம் தன் நன்பர் வெல்டன் கிளார்க்(welden clark) உடன் இணைந்துஇணையம் பற்றிய மற்றுமொரு ஆராய்ச்சி கட்டுரையை (On-Line Man Computer Communication)வெளியிட்டார்.கணினி வலையமைப்பை பற்றி விரிவாக பேசிய உலகின் முதல் கட்டுரை இது தான்.
ம்ம JCR – ன் ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் அறிவால் இவருக்கு ஆர்பாவில் புதிய பிரிவாக ஆரம்பிக்கப்பட்ட Information Processing Techniques Office (IPTO) வில் பணி வாய்ப்பு கிடைத்தது.இங்கிருந்து தான் இவர் ஆர்பா நெட்-ன் விதையை தூவினார்.
இணைய உலகில் நாம் பயன்படுத்தும் பல கருத்துக்கள் (graphical computing, point-and-click interfaces, digital libraries, e-commerce, online banking, and software that would exist on a network ) இவர் முன்னிருத்திய விசயங்கள் தான்.
1964 ல் J.C.R. Massachusetts Institute of Technology (MIT)எனும் நிறுவனத்தின் Project MAC ( Man and Computer) எனும் கருத்துருவின் தலைமை பொறுப்பாளியாக பொறுப்பேற்றார்.ஆர்பா இந்த பிராஜக்டிற்கு 2 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்திருந்தது,குறிப்பிடத்தக்கது.
இதன் பின் ஐந்து வருடங்கள் கழித்து JCR ஆரம்பித்து வைத்த திட்டம் JCR ற்கு பிறகு வந்த ஆர்பா விஞ்ஞானிகளான Lawrence Roberts மற்றும் Robert Taylor ஆகியோரால் ஆர்பாநெட் எனும் பெயரில் 1969 ஆம் ஆண்டு
உருப்பெற்றது.

ஆரம்ப கால ஆர்பாநெட் :

இது தான் ஆரம்ப கால ஆர்பா நெட்


1969 அக்டோபர் 29 ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் உள்ள University of California -ம், ஸ்டான்போர்டு ஆராய்ச்சி நிறுவனமும் (SRI) வலைத்தொடர்பில் இணைக்கப்பட்டன அதன் பின் டிசம்பர் மாதம்சான்டா பார்பராவில் உள்ள University of California –ம்,University of Utah-ம் இணைந்தன
ஆரம்ப கால ஆர்பாநெட் நான்கு நிறுவனங்களிலுள்ள கணிப்பொறிகளை இணைத்தது.இந்த நான்கு நிறுவனங்களின் கணினிகள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டன.
கணினிகளிடையேயான இணைப்புகள் கம்பி வழி இணைப்புகள் (Wired).இவை IMP என்ற Interface Message Proccessor மூலமாக தொடர்பில் இணைக்கப்பட்டன.இந்த IMP தற்காலம் நாம் பயன் படுத்தும் ரவுட்டர்கள் மற்றும் மோடம்களின் முன்னோடி இதன் வேகம் 50 kpbs.

இன்று நாம் பயன்படுத்தும் இணையமாக இந்த ஆர்பாநெட் எப்படி மாறியது?? அடுத்த வாரம் பார்க்கலாம்..
இந்த கட்டுரையை வாசிக்கும் நல்லுள்ளங்கள் தங்கள் சந்தேகங்கள்,கேள்விகள்,கருத்துக்கள் போன்றவைகளை கமென்டில் மறக்காமல் குறிப்பிட்டு செல்லுங்கள்.

 

Labels: , , , , , ,