Friday, March 20, 2015

கொலைகார செல்போன்கள்





 ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி  எல்லோர் கையிலும் மிகச் சாதரணமாக ரகம் ரகமாக  விஞ்ஞான விரலாக முளைத்திருக்கும் இந்த செல்போன் களை உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை எனக் கூறினால் சட்டென மறுக்கத்தான் தோன்றுகிறது. அத்தனை அவசியமாகவும், வாழ்வின் முக்கிய அங்கமாகவும் அவை மாறிப்போயிருக்கின்றன.

இவற்றால் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப்போகிறது ?? என கேட்கிறவர்களுக்கு ஆராய்ச்சியாளர்களும்,  மருத்துவர்களும்

கதிர்வீச்சு நோய்கள்,  கவனச்சிதறடிப்பால் ஏற்படும் விபத்துகள், கண், காது, மூளை பாதிப்புகள், ஆண்மைக்குறைப்பு என பட்டியல் போட்டுக்கொண்டே போகிறார்கள்.

செல்போன் களால் வருகிற பாதிப்புகளில் 99 சதவீத உடல்நிலை மற்றும் மனநிலை பாதிப்புகளுக்கு அவை வெளிப்படுத்துகிற கதிர்வீச்சுக்கள் தான் காரணமாக அமைகின்றன

உண்மையிலேயே இவை உயிர்க்கொல்லிகளா !! இவற்றின் தவிர்க்க இயலா  தாக்குதல்களில்  இருந்து தப்பித்துக்கொள்ள வழிகள் ஏதும் உள்ளனவா?  இந்த கட்டுரையில் இது பற்றி சிறிது விரிவாகக் காணலாம் .

கதிர் வீச்சில்லாத செல்போன்கள் சாத்தியமா !!

செல்போன் களில் நாம் பேசுகிற பேச்சுக்கள் , இன்டர்நெட் டேட்டா, எஸ்.எம்.எஸ் என அனைத்து வகையான பரிவர்த்தனைகளும் கதிர்வீச்சுக்களாகவே கொடுக்கல் வாங்கல் செய்யப்படுகின்றன.

செல்போன் களில் நாம் ஒருவருக்கு அழைப்பு அல்லது எஸ்.எம்.எஸ்  செய்யும்போது , நமது பேச்சு முதலில் மின் காந்த கதிர்வீச்சாக மாற்றப்படுகிறது, பின் நமது செல்போன்  "அடித்தள நிலையம்"  எனப்படும் செல்போன் கோபுரங்களுக்கு அந்த கதிர்வீச்சை அனுப்பி வைக்கும். ( செல் கோபுரத்தைவிட்டு நீங்கள் மிகத்தொலைவில் இருக்கும் போது , கதிர்வீச்சின் வீச்சு சற்றே கூடுதலாக இருக்கும்). இந்த கோபுரங்களில் இருக்கும் கருவிகள் செல்போன் களில் இருந்து பெறப்பட்ட கதிர்வீச்சுகளை அவற்றின் ஆற்றலை அதிகப்படுத்தி தொலை தூரத்திற்கோ, அல்லது செயற்கை கோளுக்கோ அனுப்பி வைக்கின்றன, அங்கிருந்து நீங்கள் அழைப்பு விடுத்த நபரின் செல்போனை நீங்கள் அனுப்பிய அந்த தகவல் கொண்ட கதிர்வீச்சு அடைகிறது.

ஆக கதிர்வீச்சை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் செல்போன் களை கதிர்வீச்சு இல்லாமல் கற்பனை செய்வது கூட அபத்தமானது.

கண்ணுக்குத்தெரியாத கதிர்வீச்சுகள்   :

ஏகப்பட்ட செல்போன்கள் கோடிக்கணக்கில் உலகம் முழுக்கப் பயன்பாட்டில் உள்ளன,  இவை ஏற்படுத்தும் மின் காந்த அலைகள் நம்மைச் சுற்றிலும் கண்ணுக்குத்தெரியாமல் அலை அலையாகப் பரவி இருக்கின்றன , மின் காந்த அலைகளை பார்க்கும் சக்தி நம் கண்களுக்கு இருக்குமானால் பனிமூட்டத்தினைப் போல பார்வையை மறைத்து நம்மைப் பார்க்கவிடாமல் தடுமாறச் செய்யும் அளவுக்கு அவை பரவி இருப்பதைப் பார்க்க முடியும்.

(Gass meter என்கிற கருவி மூலம் இந்த கதிர்வீச்சை அளக்க முடியும் என்கிறார்கள்.)

மைக்ரோ வேவ் அடுப்புகள், மின்சார கம்பிகள், ரேடியோ, தொலைக்காட்சி, இப்படி நிறைய மின் சாதனங்கள் மின் காந்த கதிர்வீச்சை வெளிப்படுத்துகின்றன. ஆனால் செல்பேசிகள் உடன் ஒப்பிடும்போது இவை வெளிப்படுத்துகிற கதிர்வீச்சு மிகக்குறைவு எனலாம்.

அதுமட்டுமில்லாமல் இன்ன பிற கதிரியக்க சாதனங்களை நாம் கையோடே தூக்கி சுமந்து கொண்டு திரிவதில்லை, காதோடு கதை பேச விடுவதில்லை, நெஞ்சோடு (சட்டைப்பைக்குள்) அணைப்பதில்லை, கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவதும் இல்லை.

அதுசரி., 

செல்போன் கதிர்வீச்சால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன ?
படம் நன்றி : http://www.inspirationgreen.com/

செல்போன் களின் ஆதிக்கம் 1980 களில் தான் ஆரம்பம் ஆகின, கதிர்வீச்சுக்களைப் பற்றியோ, அதன் விளைவுகளைப் பற்றியோ எந்த செல்போன் நிறுவனமோ, அரசோ, அதன் பயன்படுத்தும் மக்களோ கண்டுகொள்ளவே இல்லை !

1993 ல் டாக்டர் ஜார்ஜ் கார்லோ என்ற ஒரு மருத்துவ விஞ்ஞானி செல்போன்கள் கதிர்வீச்சுகளை அதிக அளவு வெளிப்படுத்துகின்றன, அவற்றால் பல நோய்கள் ஏற்படுகின்றன என்று அவர் கூறிகினார். இல்லை இல்லை என செல் நிறுவனங்கள் மறுக்க 1993 முதல் 1999 வரை ஒரு மாபெரும் ஆராய்ச்சியை மேற்கொண்டு 

1999-ல் Cell Phones: Invisible Hazards in the Wireless Age (செல்போன்கள் - நவயுக தகவல் யுகத்தில் மறைமுக அபாயம்)  என்ற பெயரில் தனது ஆராய்ச்சி முடிவை  புத்தகமாக்கி வெளியிட்டார். அதன் அடிப்படையில்

  • ஒரு நாளில் 26 நிமிடத்திற்கு மேல் செல்போனை பயன்படுத்துகிறவர் கதிர்வீச்சின் தாக்குதலுக்கு ஆளாகிறார்.
  • செல்போன் கதிர்வீச்சுகள் நமது உடலுக்குள் ஏற்படும் உயிரி கதிர்வீச்சை  (Bio-magnetic field) சிதைக்கிறது.
  • இந்த கதிர்வீச்சுகள் உடலில் உள்ள செல்களை சூடேற்றி அளவிற்கு வல்லமை கொண்டவை
  • உடல் செல்களுக்குள் நடைபெரும் தகவல் பரிமாற்றத்தில் குளறுபடிகள் செய்கின்றன.
  • செல்சுவற்றை கடினமாக்கி DNA சிதைவை ஏற்படுத்துகின்றன.
  • செல் உயிரிழப்பை தூண்டுகின்றன.
  • மரபியல் கோளாறுகள்
  • மூளை சார்ந்த நோய்கள் 
  • தூக்கமின்மை
  • கவனச்சிதைவு
  • தலைவலி
  • காது பிரச்சினைகள்

டாக்டர்  ஜார்ஜ் கார்லோவின் ஆய்வு முடிவுகள் மக்களை நிறைய வே பயமுறுத்தத் துவங்கின . அதன் பிறகு பற்பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.அவை அத்தனையும் கூட செல்போன்கள் ஆபத்தானவை என்பதையே மறுபடியும் வழிமொழிந்தன. 2011 ல் அகில உலக கேன்சர் ஆராய்ச்சி மைய (IARC) அறிக்கையின்படி செல்போன் கதிர்வீச்சுக்கள் Group 2B - கார்சினோஜெனிக் (அதாவது "கேன்சருக்கு காரணமாகக் கூடும்"  வகை). வகையைச்சேர்ந்தவை எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. செல்போன் கதிர்வீச்சுகள் BBB ( blood–brain barrier ) என்ற ரத்ததிற்கும் , நரம்பிற்கும் இடையேயான தடைச்சுவற்றை உடைத்து நரம்புகளுக்குள் ரத்தம் புக வைக்கும் வல்லமை உடையன என ஒரு ஆராய்ச்சி முடிவு சொல்கிறது.


உங்களின் செல் போனின் மின் காந்த கதிர்வீச்சை கணக்கிடுவது எப்படி ?

ஒவ்வொரு அலைபேசியும் வெவ்வேறு அளவிலான கதிர்வீச்சுக்களை வெளியிடுகின்றன, பேசிக்கொள்ள மட்டுமே பயனளிக்கும் பழைய ரக அலைபேசிகளைவிட , அதிகப்படியான பயன்களைத் தருகிற புது ரக அலைபேசிகள் அதிகப்படியான கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன.

செல்போன் கள் வெளியிடுகிற  கதிர்வீச்சின் அளவை SAR எனக் குறிக்கிறார்கள், புதிதாகத் தயாரித்து வெளியாகும் செல்பேசிகளில் அந்தந்த நிறுவனங்கள் இந்த SAR -ன் அளவை வெளியிட்டே ஆக வேண்டும் என்று புதுச்சட்டம் வேறு போட்டிருக்கிறார்கள்.

நீங்கள் புதிதாக மொபைல் போன் வாங்குவதற்கு முன் அதன் கதிவீச்சு அளவையும் மறக்காமல் பார்த்துவிட்டு வாங்குங்கள்.

உங்கள் செல்போனில் *#07# அழுத்துங்கள் . உங்கள் செல் போனின் SAR அளவு காட்டப்படும் , இம்முறை மூலம்  SAR அளவு சில அடிப்படை ரக, பழைய ரக மொபைல்களில் காட்டப்படுவதில்லை, அவ்வகை மொபைல்கள் உடையவர்கள் பயனர் கையேட்டை கவனிக்கவும் , இல்லையெனில் அதன் இணையத்தளத்தை கவனிக்கவும் , அங்கும் இல்லையெனில்

http://sarvalues.com/

இணையத்தளத்தில் உங்கள் மொபைலின் மாடல் எண்ணைத் தேடிப்பார்க்கவும். 

SAR அளவு :

 Specific Absorption Rate SAR என்பதன் சுருக்க வார்த்தை , இதை "உடல் கிரகிக்கும் கதிர்வீச்சளவு " என அர்த்தம் கொள்ளலாம் . இது W/kg (ஒரு கிலோகிராம் செல்லால் கிரகிக்கப்படும் வாட், வாட் என்பது ஆற்றலின் அளவுமுறை ) எனக் குறிக்கப்படுகிறது.

பாதுகாப்பான SAR எண்ணளவு: 

இந்த SAR அளவு ஒரு வாட்டிற்கும் குறைவான அளவாகவே இருக்க வேண்டும் . அனுமதிக்கப்பட்ட அளவு 1.6 W/Kg  (அமெரிக்க தர )



கதிர்வீச்சுக்களின் பாதிப்பில் இருந்த தற்காத்துக்கொள்ள சில யோசனைகள்? 

கதிர்வீச்சுத்தாக்குதலை முற்றிலுமாக தவிர்க்க இயலாது,ஆனால் குறைத்துக்கொள்ள முடியும், இதற்கு பின்வரும் வழிமுறைகள் உங்களுக்கு உதவலாம்.
"செல்"லக்குட்டி
                                  
  1. பயன்பாடு இல்லாத சமயங்களில் அலைபேசிகளை தூர வைக்கவும்,செல்பேசி தேவைப்படாத சமயங்களில் ஏரோப்ளேன் மோடில் இடவும். (ஏரோப்ளேன் மோடில் கதிர்வீச்சு சுத்தமாக இருக்காது).
  2. குழந்தைகளிடம் விளையாட்டுப்பொருள் தானே என எண்ணிக் கொடுக்க வேண்டாம், பெரியவர்களைவிட குழந்தைகள் கதிர்வீச்சால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.
  3. சிக்னல் இல்லாத சமயங்களில் (டவர் லைன்) அதிகம் பேச முயற்சிக்க வேண்டாம்


சிக்னல் இல்லாத போது பேசினால்... 

  1. பேன்ட் பாக்கெட்,சட்டை உள் பாக்கெட் என அதிமறை பிரதேசங்களுக்குள் வைக்கும் போது கதிர்வீச்சின் அளவு அதிகரிக்கிறது. தவிர்க்கவும்
  2. அதிக நேரம் பேசும் போது ஹெட்செட் பயன்படுத்தவும்.(ப்ளுடூத் ஹெட்செட்கள் கதிர்வீச்சைக் குறைக்காது (அவையும் கதிர்வீச்சால் இயங்கும் சாதனங்களே).
  3. தலைமாட்டில்  வைத்துக்கொண்டு உறங்குவதை தவிர்க்கவும்.
  4. இன்டர்நெட் தேவையில்லா சமயங்களில் டேட்டாவை ஆஃப் செய்வது உத்தமம்
  5. செல்போனில் பேசும் போது காதோடு சேர்த்து அழுத்திக்கொண்டு பேசுவதை தவிர்க்கவும்.
  6.  கையை வைத்து செல்போனை மூடி மறைத்துக்கொண்டு பேசுவது கூடாது, மறைப்பு ஏற்படுத்தும்போது கதிர்வீச்சின் அளவு அதிகமாகும்.
அழுத்தி மூடும் போது அதிக கதிர்வீச்சு !
       7. மின் கம்பிகள் அருகே நின்று செல்போன் பேசக்கூடாது.       (மின்சாரம் தாக்கக்கூடும்).                                                                
                                               


Labels: , , , ,

6 Comments:

At Fri Mar 20, 07:54:00 pm , Blogger கரந்தை ஜெயக்குமார் said...

மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே
நன்றி
தம +1

 
At Fri Mar 20, 11:01:00 pm , Blogger Unknown said...

Useful

 
At Sat Mar 21, 07:29:00 am , Blogger திண்டுக்கல் தனபாலன் said...

இப்போது அதிகம் பயன்படுத்தும் Samsung-ல் அதிகம்...

 
At Sat Mar 21, 09:30:00 am , Blogger ஜோதிஜி said...

அலைபேசிகளின் பயன்பாடுகள் குறித்து எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு இந்த தகவல்கள் மிக முக்கியமானது. நன்றி. வலைதளத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை உணர்ந்து தொடக்கம் முதல் ஆக்க பூர்வமாக பயன்படுத்தும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

 
At Sat Mar 21, 10:31:00 am , Blogger Unknown said...

விழிப்புணர்யூட்டும் பதிவுக்கு நன்றி !
sar யை வாங்கும்போதே கவனிக்கலாம் ,மேனுவலில் குறிப்பிடப் பட்டிருக்கும் !

 
At Mon Apr 13, 06:31:00 am , Blogger stalin wesley said...

ஆபத்துகள் அதிகம் தான்

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home