வருசத்துல ஒரு நா.. (ள்)
(தீபாவளி சிறுகதை)
சமர்ப்பணம்:
தீபாவளியை தவறவிட்ட, தவறவிட்டுக்கொண்டிருக்கும் அத்தனைப்பேருக்கும் இந்த கதை சமர்ப்பணம்.
நீங்கள் அங்கே
இருக்கிறீர்கள்,
நான் இங்கே , நான் இதை எழுதியதும் நீங்கள்
வாசிப்பதும் வேறு வேறான காலவெளியில் நிகழ்கிறது, நிகழ்காலம்
என்று நாம் சொல்லுகிற சொல்லிக்கொள்கிற இந்த நிகழும் காலம் தன் ஒவ்வொரு
மணித்துளியையும் கடந்த காலம் என்னும் பாதளத்திற்குள் பாய்ச்சியபடியே முன்னோக்கி
நகர்ந்தபடி இருக்கிறது. "கடந்தகாலம்" ஒரு ரிலே ரேஸ்க்காரன் மாதிரி
எதிர்காலத்தின் கைகளில் நம்மை இடமாற்றி விட்டபடி ஓடிக்கொண்டிருக்கிறது.
வழக்கம் போலவே எதையோ
சொல்ல வந்து எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்., இதை வாசித்துக்கொண்டிருக்கிற உங்களுக்கு
இப்போது நான் ஒரு கதை சொல்லலாம் என நினைத்திருந்தேன். எனது கடந்த வருடத்திய
தீபாவளியை பற்றிய கதை.
வருடம் தவறாமல் ஐப்பசி மாத அமாவாசைக்கு முந்தைய
நாளான சதுர்த்தசி திதியில் தீபாவளிகள் மறக்காமல் வந்து விடுகின்றன.
"வருசத்துல ஒரு நா..(ள்) " என ஆரம்பித்து ஒரு நீண்ட உரை கொடுத்துக்
கொண்டிருந்தார் அம்மா "உம்..."
உம்.." உம்.".... "மகாராஸ்ட்ரா- ஒஸ்மனாபாத்"...
"உம்" "வந்துட்டு இருக்கேன்., தீபாவளிக்குள்ள
வந்துருவேன்". என சொல்லிவிட்டு போனை கட் செய்தேன்.
நேற்றே முடிந்திருக்க
வேண்டிய வேலை.. ப்ச்... கொஞ்சம் தாமதம் செய்துவிட்டது..சீனியர் என்ஜினியர் கணேஸ் ஜி. எங்களை விட்டுவிட்டு தீபாவளிக்கு. கிளம்பிவிட்டதன் விளைவு !!
"இப்படி
ஆன்சைட் வேலைனு வந்துட்டாலே இப்படித்தான்
தம்பி, தீபாவளி,பொங்கல் என
பண்டிகைகள் எல்லாத்தையும் மறந்துடனும்.லீவ் இருந்தாலும் லீவ் எடுத்துக்க
முடியாத படிக்கு வேலைகள் இருக்கும்"
முந்தைய நாள் சைட் எஞ்சினியர் செல்வராஜ் சார் சொன்னதை நினைத்துக் கொண்டேன்.
அவர் இந்த
தீபாவளிக்கும் ஊருக்குப் போகவில்லை, (கடந்த ஐந்து வருடங்களாக எந்த
தீபாவளிக்கும் போனதில்லை என சொல்லி இருந்தார்).
உலகத்தில் இப்படியும்
சில ஜீவன்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன., பண்டிகைகளையும் ,சந்தோசங்களையும் துறந்தவாறு வெளிநாடுகளில் இருக்கும் எனது சொந்தங்களை
நினைத்துக்கொண்டேன்.
சைட் விட்டுக் கிளம்பிய போது சாயங்காலம், செல்வராஜ் சார் எங்களிடையே கைகொடுத்து "ஹேப்பி தீபாவளி "
சொல்லிக்கொண்டிருந்த போது அவர் தவறவிட்ட "தீபாவளிக்களின் சந்தோசம்"
அவரின் குரலில் தெரிந்தது. "எப்படியும் நாளைக்கு காலைல கிளம்பினாக் கூட
போய்டலாம் ..." அப்போது அவருக்கு ஹேப்பி தீபாவளி சொல்வது அபத்தமாகப் பட்டது.
தேங்க்யூ சார் என சொல்லி வைத்தேன்...
அடுத்த நாள்
விடிந்தால் தீபாவளி... எப்படியும் விடுமுறை கிடைத்துவிடும் வந்துவிடுவேன் என
சொல்லியிருந்தேன். இன்னும் கிழம்பவே இல்லை எப்படியும் ஊர் போய்சேர வேகமாய் போனால்
கூட குறைந்தபட்சம் 24 மணி நேரம் தேவை.
பெங்க்ளூர் வரை
கம்பெனி வாகனம்,
அதன் பின் பஸ் பிடித்து ராமேஸ்வரம் வந்தாக வேண்டும்.
"பெங்களூருக்கே
சஞ்சே ஆறு கண்டே ஒலகே ஹோக் புடுத்வி"
இன்னோவாவை வேகமாக
பெங்க்ளூர் நோக்கி முடுக்கியிருந்தார் வெங்கட் அண்ணா, அவர்
ஒருவரே தான் டிரைவ் செய்து கூட்டிப்போக வேண்டும், வண்டிக்குள்ளிருக்கும்
எங்கள் யாருக்கும் டிரைவிங்க் தெரியாது.
நான் ,
ஜெயராஜ்,ரஞ்சித் ,வெங்கட் அண்ணா
அனைவருமே தீபாவளியை டார்கெட் செய்து தான் ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்,
எங்கள் எல்லோருக்காகவும் ஊரில் ஒரு தீபாவளி குடும்பத்துடன் காத்துக்
கொண்டிருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலையில்
தென் திசையில் விரைந்து கொண்டிருந்தோம்.. (எண் என் நினைவில் இல்லை ),
ரஞ்சித் திருச்சி, ஜெயராஜும், வெங்கட்
அண்ணாவும் பெங்களூர் , நான் ராமேஸ்வரம் வந்தாக வேண்டும்.
அவ்வப்போது சில தமிழக
(TN) எண்ணிட்ட நேசனல் பெர்மிட் லாரிகள் வடக்குப் புறமாக அதாவது மகாராஸ்டிரம்
நோக்கி விரைந்தபடி கண்ணில் பட்டப்படியே கடந்து கொண்டிருந்தன. காய்கறி,பழம், கல் என எதாவது போய்க்கொண்டிருக்கக்கூடும்.
இந்த லாரி டிரைவர்கள் எல்லாம் நாளை தீபாவளி கொண்டாடுவார்களா என
யோசித்துக்கொண்டேன்.
சாலை வழியாக பயணத்தின்
நீளம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது... "சாய்ங்காலத்திற்குள்
பெங்களூர் போய்டலாம் " ரஞ்சித் சொன்னபோது காலை....மதியமாகிவிட்டிருந்தது.
இதற்கு முந்தைய
தீபாவளிக்கு சென்னையில் இருந்து சென்றிருந்தபோது கண்ட அந்த அகோர கூட்டத்தை நினைத்த
போது பீதியாக இருந்தது. பஸ் கிடைக்கவில்லை , ரயிலில் அன்ரிஸர்வ்ட்
கம்பார்ட்மென்டில் 10 மணி நேரம் நின்றுகொண்டே சென்றிருந்தேன்.
கண்டதையும் நினைத்து
மண்டையை குழப்பிக்கொண்டிருந்தபோது... இன்னோவா ஒரு தாபா முன் நின்றது., மதியான சாப்பாட்டை முடித்துக்கொண்டு பயணத்தின்
இரண்டாம் பாதியை தொடர்ந்தோம்.
இரண்டாம் பாதியில்
என்னென்ன நடந்ததென்று எனக்கு நினைவில்லை., கண்விழித்த போது மணி மாலை 6.48
, வண்டியில் எப்.எம்
ரேடியோ, ஜன்னலோரமாய் பெங்களூரு பெயர் தாங்கிய பெயர்பலகைகள்.
பெங்களூரு வந்துவிட்டது.,
ஊர் வந்துவிட்டமாதிரி ஒரு சந்தோசம்... வேலையில் சேர்ந்த இந்த சில மாதங்களில் மணி
அடித்ததும் எச்சில் சுரக்கும் பாவ்லோவின் நாய் மாதிரி பெங்க்ளூர் பார்த்ததும்
சந்தோசம் கொள்ள பழகி விட்டிருந்தோம்.
பெங்களூரில்
பட்டாசுகள் அத்தனை பிரசித்தி இல்லை போலும் , சிற்சில வான வேடிக்கை வெடிகள்
மட்டும் கண்ணில் பட்டன, நம் ஊரை நினைத்துக்கொண்டேன்.
எடுத்துச்சென்ற
கருவிகளையெல்லாம் எடுத்து ஆபிஸிற்குள் வைத்துவிட்டு , ‘பத்து
மணி நேரத்திற்குள்’ எங்களை பெங்களூரு அழைத்து வந்து சேர்ப்பித்த வெங்கட்
அண்ணாவுக்கும், பக்கத்தில் படுத்துறங்கி வந்த ஜெயராஜுக்கும்
"ஹேப்பி தீபாவளி" சொல்லிவிட்டு ரஞ்சித்தும் நானும் சாட்டிலைட்
பஸ்ஸ்டான்ட் சென்றோம் , காத்திருந்து பஸ் ஏறிய போது இரவு
பத்து மணி.
இடித்துப்பிடித்து
ஏறியதில் ,
உட்கார இருக்கை கிடைத்தது. நான் பீதியடைந்து பயந்த அளவுக்கு எல்லாம்
பஸ்ஸில் கூட்டம் இல்லை, எல்லோரும் எங்களுக்கு முன்பே
கிழம்பிவிட்டார்களோ என்னவோ.
வெளியில் திருவிழா
சந்தை மாதிரி கூட்டம் நின்றுகொண்டிருந்தது.சில நிமிடங்களுக்குள் பஸ் நிறைந்தது.
லக்கேஜ் பேக்கை காலுக்குக் கீழ் வைத்துவிட்டு , டிக்கெட் எடுத்துவிட்டு ,
ரஞ்சித் வாங்கி வந்த "மாஸாவை" குடித்துவிட்டு , இருக்கையில் சாய்ந்தபோது , வெளியில் யாரோ
கன்டக்டரிடம் சண்டைப்போட்டுக்கொண்டிருந்தார்கள். முன்னால் வருபவர்களுக்கு இடம்
கிடைத்துவிடுகிறது, பின்னால் வருபவர்கள் அவர்களை
திட்டியபடியே ஏறுகிறார்கள், அவர்களுக்குப் பின்னும்
வருபவர்கள் கன்டக்டரை கண்டபடி திட்டியபடி பயணத்தை தொடர வழியை யோசிக்கிறார்கள்.
"வந்துட்டே
இருக்கேன்...இப்பத்தான் பெங்களூர்ல இருந்து கிளம்புறேன்... காலைல
வந்துடுவேன்.. " வீட்டிலிருந்து வந்த
போனை எடுத்து பதில் சொல்லிக்கொண்டிருந்த போது
நகரப்பேருந்து நகர ஆரம்பித்தது ,மணி :10.30 .
கூட்டம் கூட்டமாய், கும்பல்
கும்பலாய், குடும்பம் குடும்பமாய் நிறைய பேர்
நின்றுகொண்டிருந்தார்கள் , சிலர் அலைபேசிகளை காதுகளில்
வைத்தபடி... எல்லோருமே என்னைப்போலவே யாரோ ஒருவருக்கு "வந்துகொண்டே
இருக்கிறேன்..." என சொல்லிக்கொண்டிருப்பார்களோ !!.,
ஓடிவந்த யாரோ ஒருவரை
ஒரு போலீஸ் அதிகாரி கம்பால் அடித்துக்கொண்டிருந்தார். ஏன் எதற்கென்றெல்லாம்
தெரியவில்லை. பயணம் ஆரம்பிக்கும்போதே பயணித்து வந்த பயணக்களைப்பில்
சாய்ந்துறங்கிவிட்டேன்.
அதிகாலையில் இடையில்
ஓரிடத்தில் இறங்கி டீ குடித்தோம் , ட்ரைவர் முகம் கழுவிக்கொண்டார்
., “ஹோ !! இன்றைக்குத்தானே தீபாவளி , வீட்டில்
இருந்திருந்தால் இந்நேரத்திற்கு எழுப்பிவிட்டிருப்பார்கள், எண்ணெய்
குளியலுக்குத் தயாராய் அமர வைத்திருப்பர்கள், கறிக்கடையில்
கறிவாங்கிவிட்டு அப்பா திரும்பியிருப்பார்...”
உறங்கி விழித்த போது
திருச்சி வந்துவிட்டிருந்தது., தீபாவளி !! பட்டாசு சத்தம் ஆங்காங்கே ,அவ்வப்போது கேட்டுக்கொண்டிருந்தது.
"ஹேப்பி தீபாவளி"
சொல்லி ரஞ்சித் விடைபெற்றுக்கொண்டான். பஸ் ஸ்டான்டில் நின்றுகொண்டிருந்த பஸ்களில்
பயணிகள் கூட்டம் பயமுறுத்தும் அளவு இல்லை,
பஸ்ஸை தேடிக்கொண்டிருந்தேன்...
பஸ் ட்ரைவர்கள்
வீட்டிலெல்லாம் தீபாவளி இருக்கும் தானே , பின்னெப்படி இவர்கள் பஸ்
ஓட்டுகிறார்கள், தீபாவளியுடன் காத்திருக்கும் குடும்பங்களை
நினைத்துக் கொள்வார்களா ?? இல்லை... பழகிப் போயிருக்குமா
தேடிப்பிடித்து
ஏறிக்கொண்டேன் ராமேஸ்வரம் பஸ்ஸில், 7மணிக்கு பஸ் எடுப்பார்களாம்.
மணி பார்க்க செல்போனை
எடுத்தேன் .,
பேட்டரியில் சார்ஜ் காலியாகி , செல் சொல்லாமல்
மயங்கிவிட்டிருந்தது.
பஸ்ஸில் இரண்டு மூன்று
இருக்கைகள் காலியாகத்தான் கிடந்தன , பஸ் நகர்ந்தது. டிக்கெட்
எடுத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்க்கத்துவங்கினேன் ,வெளியில் யாரோ ஒருவர் கஸ்டமர்கேர் பிரதிநிதியை காலையிலேயே
கடிந்துகொண்டிருந்தார்.
இன்னும் 6 மணிநேரம்
ஆகும் , வீட்டிலிருந்து எனக்கு கால் செய்ய முயன்றிருப்பார்களோ என்னவோ !! சார்ஜ்
வேறு இல்லை, ஜன்னல் சீட்டில் அமர்ந்தபடி வேடிக்கையை
தொடர்ந்தேன்... லக்கேஜ் பேக்கை கட்டிப்பிடித்தபடி அப்படியே தூங்கிவிட்டேன்.
காரைக்குடி கடந்து ஒரு
இடத்தில் பயங்கர உலுக்கலுடன் பஸ் குழுங்கியது ரோட்டிற்கு கீழ் இறங்கி பள்ளத்தில்
குதித்து,
சில நிமிட முக்கல்களுக்குப் பின் கிழம்பியது.
விழித்துவிட்டிருந்தேன்...
பஸ் ஊர் நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
சாலையோரமாக பட்டாசு பற்ற வைத்துக் கொண்டிருந்த அரை
டிரவுசர் சிறுவர்கள் சில பேர் எனது பால்ய கால தீபாவளிக்களை கண் முன் காட்டிவிட்டு
ஓடிச்சென்றார்கள்,
எனது இப்போதைய தீபாவளி மாதிரி வெடித்துச்சிதறியது அவர்கள் பற்ற
வைத்தப் பட்டாசு.
எனக்காவது பாதி நாளில்
துவங்கி இருக்கிறது ,
எத்தனை பேர் தங்களுடைய தீபாவளிக்களை இழந்து பணிசெய்து
கொண்டிருக்கிறார்கள் இன்றைய தினத்தில்... பஸ்டிரைவர்கள்,லாரி
ட்ரைவர்கள், கால்சென்டர் எக்ஸிகியூட்டிவ்கள், செல்வராஜ் சார் மாதிரி ஆன்சைட் ஊழியர்கள்,
அயல்தேசத்தில் பண்புரிபவர்கள்...
தீபாவளி
சந்தோசங்களெல்லாம் குழந்தைப்பருவத்துடனேயே முடிந்துவிடுகின்றனவோ !
30 மணி நேர பயணம் முடித்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.....
வீடு வந்து சேர்ந்ததும்
எனக்காக காத்திருந்த எண்ணெயை என் மீது தேய்த்து குளிக்க வைத்துவிட்டார்கள்...
குளித்து,சாப்பிட்டுவிட்டு
தூங்கிவிட்டேன்...தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்,பட்டாசுகள்,புது ரிலீஸ் திரைப்படங்கள்,பார்ட்டிகள் நான்
இல்லாமல் தீபாவளி
நகர்ந்து முடிந்திருந்தபோது ,
விழித்திருந்தேன்...
பின்குறிப்பு :
இந்த கதையை எழுதி
முடித்துவிட்டு திரும்ப வாசித்து சரிபார்க்கையில் என்னுடன் பெங்களூரில் பணிபுரிந்த
கார்த்திக் மகராஸ்ட்ராவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருப்பதாக செல்போனில்
செய்தி கூறினார்...
அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
----------------------------------------------------------------------------------------------------
தீபாவளி தொடர்புடைய பதிவுகள்:
பாகம் -2
Tweet |
இனிய நல்வாழ்த்துகள் :)
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள். :)
ReplyDeleteஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDelete//பஸ் ட்ரைவர்கள் வீட்டிலெல்லாம் தீபாவளி இருக்கும் தானே , பின்னெப்படி இவர்கள் பஸ் ஓட்டுகிறார்கள், தீபாவளியுடன் காத்திருக்கும் குடும்பங்களை நினைத்துக் கொள்வார்களா ?? இல்லை... பழகிப் போயிருக்குமா//
ReplyDeleteஇப்படியும் நினைக்க நல்ல மனங்களால் மட்டுமே முடியும்