Monday, November 16, 2015

மழை அதிகாரம்

                                 மழை அதிகாரம்


மழையைப் பழித்தல் 
வேலைக்குப் போக முடியல,
பொழப்ப கெடுத்துருச்சு,
நாசமாய்ப்போற மழை,
மழையால டிராபிக் ஜாம் ஆகிடுச்சு,
சாக்கடை நெரஞ்சுடுச்சு,
ரோட்டுல நடக்க முடியல

நமக்குலாம் மழை தேவையா !,
போய் வேற எங்கயாவது பெய்ய வேண்டியதுதானே !
நாம இப்ப மழைய கேட்டோமா ?!


மழையை வியத்தல்:


 வானிருந்து பூமி வருதலால் அது அமிழ்தம்

                           - அறத்துப்பால் அதிகாரம் 2 .  வான் சிறப்பு

லகில் உயிர் நிலைத்திருப்பதற்கான மூலக் காரணங்களுள் தண்ணீரின் பங்கு கணிசமானது, அதிமுக்கியமானது.

தண்ணீர் - உலகிலும் சரி , உடலிலும் சரி முக்கால்வாசி இடத்தை இதுதான் ஆக்கிரமித்திருக்கிறது.நிலமும் சரி, உடலும் சரி தண்ணீர் போட்ட பிச்சை தான்.

எல்லா வகையிலும் மழை தான் தண்ணீரின் ஆதாரம்..

மழையைப் பொருத்தவரை அசுரத்தனம், அதீதம், அநியாயம், அதிகம் என்றெல்லாம் வரையறைகள் வைப்பது தவறு. பூமியின் தேவைக்கருதி அது பெய்கிறது., உங்களுடைய, என்னுடைய தேவைகருதி அல்ல.

சிலப்பதிகாரத்தின் வாழ்த்துப்பாடலில் இளங்கோவடிகள் மாமழை போற்றுதும் எனப் பாடி மழையை வணங்குகிறார், ( தற்போது தமிழகம் கண்டுகொண்டிருப்பது ஒருவகையில் மாமழை தான். மா.. மழை !).

                                    *****

டந்த சில தினங்களாக முன்பெப்போதும் போலில்லாது மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் அநேக இடங்களை மூழ்கடித்து இன்னமும் பெய்துகொண்டிருக்கிறது. சில இடங்களை சிறிதும் இரக்கமின்றி தலைமுழுக தயாராகிக் கொண்டிருக்கிறது.

மழையில் நனைந்தபடி நடத்தல், மழையை ரசித்தபடி தேநீர் பருகுதல், பெய்து தேங்கிய மழைநீரில் காகிதக்கப்பல் விடுதல்... இவையெல்லாம் ரசிப்பதற்கும், நினைப்பதற்கும் அழகாய்த்தான் இருக்கின்றன. ஆனால் உண்மை வேறுவிதமாக வடிவெடுத்திருக்கிறது.

"வேலைக்கு போக முடியல", " பொழப்ப கெடுத்துருச்சு, "நசமாய்ப்போற மழை", " இந்த மழையால டிராபிக் ஜாம் ஆகிடுச்சு, சாக்கடை நெரஞ்சுடுச்சு, ரோட்டுல நடக்க முடியல", ...

அநேக இடங்களில் மழை அழையா விருந்தாளியாக அவமதிக்கப்படுகிறது. நன்றியை தன் வாழ்வின் அங்கமாக கொண்ட தமிழினம் நன்றிகெட்டு எப்படி இப்படி ஆனதென்று தெரியவில்லை. உனக்கு வந்தா தெரியும் என என்னை நீங்கள் கைகாட்டலாம்., எனக்கு கவலையில்லை., மழையைப் பழித்தல் தவறு என்கிற என் கருத்தை நான் மாற்றிக்கொள்ளப்போவதில்லை.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா ! பெரும்பாலும் நாம் சுயநலமானவர்கள், குடை கொண்டுபோகாத போது , ஒதுங்குவதற்கு இடம் இல்லாதபோது, கொடியில் துணி காயப்போட்டிருக்கும்போது, மாடியில் கருவாடோ,வடகமோ,வற்றலோ உலரும்போது, மழை பெய்ய ஆரம்பித்தால் மழையைப் பழிக்கிறோம்.

வீடுநோக்கி செல்லும் குடையற்ற தினங்களில் நான் வீட்டிற்கு போகும் வரை மழை பெய்ய வேண்டாம் என நினைத்துக்கொள்கிறோம்.

பள்ளி/கல்லூரி நாட்களில் மழையின் காரணமாக விடுமுறை ஆக வேண்டுமென அடைமழை வேண்டி ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம். வேண்டாத தினங்களில் அலுவலகங்கள் மழைக்குள் மூழ்கி விடுமுறை கிடைக்காதா ? என ஏங்குகிறோம்.

நமக்கு உதவுவது மட்டும்தான் நல்லது, என்கிற சித்தாந்தம் நமக்குள் வேர்விட்டு ,கிளைவிட்டு மரமாகி காடாக விரவிக்கிடக்கிறது. எதுவும் உடனுக்குடன் பலன் தர வேண்டும் என்கிற இன்ஸ்டன்ட் கலாச்சார புத்திக்கு மழைநீர் நிலத்திற்குள் சென்று நாளைய சந்த்திக்கு உதவும் என்று சொன்னால் உறைக்கப்போவதும் இல்லை, அவர்கள் அதை நம்பபோவதும் இல்லை.

மாமழை !

சென்னையைப் பற்றி பேசியே ஆக வேண்டும் , சென்னையைப்பற்றி பேசாவிட்டால் இந்த மழைக் கட்டுரை ஜென்ம சாபல்யம் அடையாது. 
இந்திய பெருநகரங்களில் தண்ணீரை மிகக்குறைவாகப் பயன்படுத்தும் புண்ணியபூமி சென்னை என்கிறது ஒரு புள்ளிவிவரம். காரணம் தண்ணீர் சிக்கனம் இல்லை, தண்ணீருக்கான பற்றாக்குறை. பற்றாக்குறையைப் போக்கிக்கொள்ள மக்கள்கூட்டம் ஆழ்துளையிட்டு பூமிக்குள்ளிருக்கும் நீரை உறிஞ்சுகிறது.

தமிழக தலைநகராம் சென்னையில் ஒரு வருடம் குப்பைக்கொட்டியவன் என்கிற முறையில் ஒரு விசயம் சொல்கிறேன். தமிழகத்திலேயே மிக மோசமான குடிநீர் சென்னையில் தான் இருக்கிறது, அதற்கு மெட்ரோ வாட்டர் என புனைபெயர் வேறு !

தண்ணீரை காசுக்கு வாங்கி குடிப்பது கௌரவம் என்னும்  நிலை மாறி சாவைத்தள்ளிப்போடும் சாகசக்கலை என்னும் அளவிற்கு சென்னையின் நிலைமை இருக்கிறது.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள் ,

சமநிலை என்பது பிரபஞ்ச தத்துவம். 

குறைகிற போது நிறைத்து சமன்செய்ய முயல்வது தான் இயற்கையின் குணம். காற்றழுத்தம் குறைவுபட்டால் அதிகமாக இருக்கும் இடத்திலிருக்கும் காற்று குறைவழுத்தத்தை நோக்கி நகரும், எலக்ட்ரான்களை குறைவு படுத்தினால் மின்னோட்டம் உருவாகி அவை சம்மாகும், நிலத்திற்குள்ளிருக்கும் நீரின் அளவை குறைத்துக்கொண்டே வந்தால் சமப்படுத்த தன்னால் ஆனதை இயற்கை செய்யும்.

மழையே பெய்யாது என நம்பி ! தண்ணீர் வற்றிப்போன ஆறு, குளம் , ஏரி, கண்மாய் என அத்தனையிலும் வீடுகட்டிக்கொண்டு வாழ்கிறோமே ! அந்த இடங்களில் மழை நீர் வந்தால் அது மழையின் பிழை என்று சொல்வது நியாயமா !?

அண்டை மாநிலங்களிடம் நீர் கேட்டு அழுகிறோமே கேரளத்திலும், கர்நாடகத்திலும் மரங்கள் அதிகம் இருக்கின்றன, அங்கே மனிதர்களுக்கு மட்டுமின்றி மரங்களுக்கும் காடுகள் இருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் நாம் யோசிக்கின்றோமா !
                                          *****


  • தமிழகத்தில் காமராசர் ஆட்சிக்குப் பிறகு அணைகளே அமையவில்லையாமே !!
  • பெய்த மழைத் தண்ணீரை வெளியேற்ற அரசாங்கம் என்ன செய்யும் , மோட்டார் போட்டு மறுபடியும் மண்ணுக்குள் அனுப்புமா, வடிகால் அமைத்து கடலுக்கு அனுப்புமா !? வற்றட்டும் என அப்படியே விட்டுவிடுமா !!
  • நிவாரண நிதி என்று எவ்வளவு பணம் கொடுப்பார்கள்
  • வரப்போகும் புயலுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் ?
  • இந்த மழை எப்போது நிற்கும்?

ஏதேதோ எண்ணங்கள் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது ! வீட்டிற்கு வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது,

கட்டுரையை பதிவதற்கு முன் மழையை எட்டிப்பார்த்தேன்..

சர சர குரலில் மறுபடியும் ஒரு மழைத்துளி என்னிடத்தில் பேசியது ...

"வியக்கவும் வேண்டாம், பழிக்கவும் வேண்டாம் .. , நகர மட்டும் கொஞ்சம் இடம் கொடுங்கள். "

அடித்தாலும் அணைத்தாலும் அவள் அன்னை என்போமே மழையும் கூட நம் அன்னை தான் !
ஹையா!! லீவு உட்டாச்சு 



Labels: , , , ,

7 Comments:

At Mon Nov 16, 08:05:00 pm , Anonymous Anonymous said...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுதியிருக்கும் கட்டுரை...

வாழ்த்துக்கள் டா...

நானும் உன்னைப் போன்றுதான், ஒருநாளும் மழையைப் பழித்ததில்லை...

எப்போதுமே மகிழ்ச்சிதான்...

 
At Mon Nov 16, 08:44:00 pm , Blogger Priya said...

நீண்ட இடைவெளிக்கு பின் நெத்தியடி பதிவு

 
At Mon Nov 16, 08:44:00 pm , Blogger Priya said...

நீண்ட இடைவெளிக்கு பின் நெத்தியடி பதிவு

 
At Mon Nov 16, 10:01:00 pm , Blogger கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

அற்புத விளக்கம்...பதிவு சிறப்பாக உள்ளது நீ ண்ட நாடகளுக்கு பின்... த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 
At Mon Nov 16, 10:02:00 pm , Blogger வாழ்க்கை said...

Ji, I thought to write same content in fb. But u have done it. Super ji..

 
At Tue Nov 17, 07:26:00 pm , Blogger கரந்தை ஜெயக்குமார் said...

குளங்கள்யும் ஏரிகளையும் தூர்த்து
கான்கிரீட் காடுகளாக மாற்றி விட்டோம்
தண்ணீரை சேமிக்க என்ன செய்தோம்
அருமையான பதிவு நண்பரே

 
At Tue Nov 17, 10:46:00 pm , Blogger Ranjani Narayanan said...

நீர் நிலைகளை வற்றச் செய்துவிட்ட நமக்கு இயற்கை தன் சீற்றத்தின் மூலம் சரியான பாடம் கற்பித்திருக்கிறது. பாடத்தைக் கற்றோமா என்பது அடுத்த மழையின் போது தெரிந்துவிடும்.

 

Post a Comment

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....

Subscribe to Post Comments [Atom]

<< Home