கடவுளை சந்தித்தேன்..
(வாழ்க்கையை வெறுத்தவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கதை:)
கதைக்குள் பயணிக்கும் முன்...
(முன்னெச்சரிக்கை:)
இந்த கதை நான் எழுதும் கதையாக புதிதாக உங்களுக்கு அறிமுகமாகலாம்.,அல்லது நீங்கள் இந்த கதையை முன்பே சந்தித்திருக்கலாம்..எது எப்படி இருந்தாலும் இதை நீங்கள் ஒருமுறை படித்து விடுங்கள்.இது உங்களுக்கு ஏதாவதொரு வகையில் உதவும்..நான் ஆங்கிலத்தில் வாசித்த ஒரு கதையின் தாக்கமே இக்கதை...இக்கதையின் மூலம் என்னுடையது அல்ல...மூலக்கதையில் சிற்சில மாற்றங்கள் செய்து எனது நடையில் சொல்லி இருக்கிறேன் ...
எனக்கு வாழ்க்கையே பிடிக்க வில்லை, என்னுடன் யாருமே சரியா பேசமாட்டேன்-கிறார்கள்,எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி எல்லாம் நடக்கிறது,எனக்கு ராசியே இல்லை,நான் துவங்கும் காரியங்கள் வெற்றி அடைவதே கிடையாது...பேசாமல் செத்து போய் விடலாம்... என்று
வார்த்தைகளை மனதிற்குள் கூறிய படியே ,புலம்பல்களுடன் நடந்து கொண்டிருந்தேன்.
எப்படி சாகலாம் என்று யோசித்த எனக்கு தன்னை அறிமுகபடுத்திக்கொண்டது எங்கள் வீட்டிற்கு அருகே இருந்த அந்த பெரிய மலை .மலையின் மீது ஏறி அங்கிருந்து குதித்து செத்து விடலாம் என்று என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக நம்பிக்கையுடன் மலையின் மீது ஏற துவங்கினேன்....
அது உயரமான மலை,மலை மீது ஏறும் போது தான் என் மனம் இப்படி சிந்திக்க துவங்கியது."சாவதற்கு எத்தனையோ எளிய வழிகள் இருக்கும் போது நான் ஏன் இதை தேர்வு செய்தேன்"(உங்கள் மனதில் "விண்ணை தாண்டி வருவாயா சிம்பு பேசும் வசனம் நினைவுக்கு வரலாம்).என்று நினைத்து கொண்டேன்.சாவிற்கு நான் எடுத்த முயற்சி கூட தோற்றுவிடுமோ என்கிற அச்சத்தில் "கடவுளே!" என்று அழுது புலம்பினேன்...
இடி சத்தம்..... பயங்கர வெளிச்சம்......ஒரு சிறு நடுக்கம்.....நான் மலையிலிருந்து கீழே விழுந்து விட்டேன்.சில வினாடிகள் கடந்திருக்கும் புவி ஈர்ப்பின் வேகம் என்னை கீழே இழுத்த்து...நான் கீழே விழுந்து கொண்டிருந்தேன்... சாவை நெருங்கும் போது தான் சாவின் பயம் தெரிகிறது...
"நான் சாக விரும்ப வில்லை ,வாழ வேண்டும்...எனக்கு பயமா இருக்கு கடவுளே என்னை காப்பாத்து..."
கீழே விழுந்து விட்டேன்..
"மலையிலிருந்து கீழே விழுந்தும் நான் ஏன் சாகவில்லை?".
என் அருகே ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்,ஆஜானபாகுவான உருவம்,அழகான தோற்றம்,அவரிடம் நான் மெல்ல கேட்டேன் "நீங்க யாரு?"
ஹா...ஹா... இது அந்த புது ஆசாமியின் சிரிப்பு...
சிரித்து முடித்து விட்டு பேச துவங்கினார்.... "நீ கீழே விழும் போது என்னை கூப்பிட்டாய் அதனால் தான் வந்தேன்..."
"நான் உங்களை கூப்பிட வில்லையே..." இது நான்
"கடவுளே என்னை காப்பாத்து என்று என்னை அழைத்தாய் அதனால் தான் உன்னை காப்பாற்றினேன்...நீ இன்னும் சாகாமல் இருக்க நான் தான் காரணம்."
ஹா...ஹா... இது என் சிரிப்பு..
மதங்கள் எனக்கு கற்பித்த கடவுளுக்கும் இவருக்கும் ஆயிரம் வித்தியாசங்கள்...மிக சாதரணமாக இருந்தார்...கையில் ஆயுதங்கள் இல்லை..என் மதத்தில் சேர்ந்து கொள் என்று என்னிடம் அவர் சொல்லவே இல்லை...
திரைப்பட பாணியில் "நீங்கள் கடவுள் தான் என்பதற்கு ஆதாரம் என்ன...? ஏதாவது மாயாஜாலங்கள் செய்து காட்டுங்கள் " என்று எனக்கு கேட்க தோன்றவில்லை..
அவர் கடவுள் தானா என்ற தர்க்க ஆராய்ச்சி செய்ய என் மனதில் சக்தி இல்லை.என்னை சாவிலிருந்து காப்பாற்றிய அவர் எனக்கு கடவுளாகாவே தெரிந்தார் "என் சாவிற்கு காரணமான சங்கதிகளை கண்ணீர் துளிகளுடன் அவரிடம் கொட்டி வைத்தேன்...,
அந்த மலைக்கு அருகிலிருந்த காட்டிற்குள் என்னை அழைத்து சென்றார்...மூங்கில் காடு அது...தரையெங்கும் புற்கள்... சரசர சத்தத்துடன் நானும் கடவுளும் காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தோம்....
கடவுள் பேச துவங்கினார்....
"நான் இந்த காட்டில் புல்லையும் ,மூங்கிலையும் ஒரே நேரத்தில் தான் விதைத்திருந்தேன்....சில நாட்கள் கடந்திருந்தன..புல் மெல்ல தலை நீட்ட துவங்கியிருந்தது...மூங்கில் விதைக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு சுவடும் இல்லை,சில மாதங்கள் சென்றன, புல் செழித்து வளர்ந்து தரை முழுக்க பசுமையாக பரவி இருந்தது..மூங்கில் இருந்த இடத்தில் வளர்ச்சிக்கான சிறு தடம் கூட இல்லை
ஒரு வருடம் கடந்திருக்கும் சிறு முளையாக தரையை முட்டிக்கொண்டிருந்தது மூங்கில்.புல்லை விட அது சிறியதாக தான் இருந்தது.அருகில் இருந்த புல்லுடன் அது தன்னை ஒப்பிட்டு பார்க்கவில்லை.
இரண்டாம் வருடம் புல்லை விட வலிமையாகவும் ,உயரமாகவும் வளரத்துவங்கியிருந்தது, மூன்று வருடங்கள் கடந்திருக்கும் உயர...உயர... உயர்ந்து கொண்டிருந்தது மூங்கில்... காட்டின் மிக உயர்ந்த மரமாக அது சில வருடங்களில் வளர்ந்திருந்தது.
புல் முளைக்க ஆரம்பித்திருந்த தருணங்களில் புதைந்திருந்ததாக நம் கண்களுக்கு தெரிந்த அந்த மூங்கில் கீழே தன் வேர்களை பரப்பி கொண்டிருந்தது.எவ்வளவு உயர்ந்து வளர வேண்டுமோ அவ்வளவு கீழே நம் வேர் இருக்க வேண்டும்.புல் வெளியே தலை காட்ட துவங்கியிருந்த பொழுதுகளில் மறைவாக மண்ணிற்குள் புதையுண்டு,தன் வேர்களை கீழே செலுத்தி கொண்டிருந்தது மூங்கில் மேலே உயர்வதற்காக..."
நான் கடவுளை இடைமறித்தேன் என் மனதில் இருந்த்தை அவரிடம் கேட்டு விட்டேன்.."என்னை நீ ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்??,என் வாழ்வில் தொடர் தோல்விகள் ஏன் வர வேண்டும்.??"
"சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க கவலைகள் அவசியம்...வெற்றி இனிமை நிறைந்ததாக இருக்க தோல்விகள் அவசியம், உயரமாக வளர...ஆழமாக வேர் செலுத்துதல் அவசியம்...."
" கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்வியில் இப்போது எனக்கு நம்பிக்கை இல்லை எனக்கு புது வாழ்வு தந்த அந்த நபர் கடவுளாக தான் காட்சி அளித்தார்"
கண் விழித்து பார்த்தேன் என் எதிரே கம்பீரமாக உயர்ந்து நின்று கொண்டிருந்தன காடு முழுவதும் மூங்கில் மரங்கள்...
Tweet | ||||
//என் மதத்தில் சேர்ந்து கொள் என்று என்னிடம் அவர் சொல்லவே இல்லை...// ஹா ஹா ஹா இது உன் வார்த்தை தானே :-)
ReplyDeleteநல்லதொரு ரிப்ரஷிங் கதை விஜயன்... நல்லதொரு ஆக்கம்
அழகான கதை... மிகவும் பிடித்துள்ளது... நல்லதொரு ஆக்கம்...
ReplyDeleteஅருமையானதொரு கதை சகோதரரே. மிகவும் இரசித்தேன்.
ReplyDelete
ReplyDelete"சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க கவலைகள் அவசியம்...வெற்றி இனிமை நிறைந்ததாக இருக்க தோல்விகள் அவசியம், உயரமாக வளர...ஆழமாக வேர் செலுத்துதல் அவசியம்...." மறுக்க முடியாத உண்மை... அருமையான கதை...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட
வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - சிம்லா நகர்வலம்
தன்னம்பிக்கை ஊட்டும் கதை. வாழ்த்துக்கள்.
ReplyDelete