Thursday, September 05, 2013

ஆசிரியர் தின சிறப்பு பதிவு



இரண்டு வருடம் ஆகிவிட்டது இன்றிலுருந்து மிகச்சரியாக.,

  கல்லூரி வாழ்க்கைக்குள் நான் முதலாக கால் வைத்தது, இன்று போலொரு ஆசிரியர் தினம் ஒன்றில் தான், பள்ளி வாழ்க்கைக்கு bye bye சொல்லிவிட்டு கல்லூரிக்குள் நுழைந்த போது டீன் ஏஜ் பருவத்தின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டிருந்தேன் நான், எல்லை என்றாலே எப்போதுமே ஆபத்திற்கு உட்பட்டது தானே, காதல்,ஆசை,காமம்,குழப்பம்,இச்சை என குழந்தை பருவத்தில் அனுபவிக்காத எத்தனையோ விசயங்கள் விடலை வயதில் விருட்சம் போல வளர்ந்து ஒவ்வொரு பதின்ம வயது பையன்களையும் பெண்களையும் பயமுறுத்த துவங்கிவிடுகிறது.

நானும் பயந்து தான் போயிருந்தேன்,பதின்ம வயதின் எல்லைக்கோட்டை நோக்கி நகர நகர இந்த பயமும் அதிகமாகிக்கொண்டே செல்லும், என்பதை அனுபவபூர்வமாக.. மனப்பூர்வமாக.. Authentic காக என்னால் சொல்ல முடியும்.

பள்ளிப்படிப்பு,எனக்கு வாய்த்தது,இராமேஸ்வரம் என்று அனைவராலும் அழைக்கப்படும் அந்த குட்டித்தீவில்தான் , (எங்கள் ஊர்,ஊர்மக்கள் பற்றியெல்லாம் இன்னொரு நாளில் விரிவாக பேசலாம்). குழந்தைப்பருவம் என்பது ரொம்பவே special அல்லவா,கவலைகள் ,குழப்பங்கள்,சிக்கல்கள்,பொறுப்புகள்,வெறுப்புகள் இப்படி நிறைய "கள்" களுக்கு குழந்தைகள் ராஜாங்கத்தில் ஊசி நாட்டும் அளவிற்கு கூட இடமில்லை !குழந்தைப்பருவம் என்பது எந்த வயது வரை என்று சரியாக எனக்கு சொல்லத்தெரியவில்லை,ஏனென்றால் அது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது என்பது என் கருத்து.குழந்தையாக பிறக்கும் நம்மிடமிருந்து  குழந்தைத் தனங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடிக்க துவங்கிவிடுகிறது இந்த உலகம்,சிலர் சீக்கிரமே குழந்தைதனங்களை தொலைத்து விடுகிறோம்,சிலர் கொஞ்சம் தாமதமாக,அதிர்ஷ்டவசமாக அதை தொலைக்காத அபூர்வமான வெகு சிலரும் இருக்கக்கூடலாம்.

சரி, கட்டுரையின் ஆரம்பத்தில் கல்லூரி என்று ஆரம்பித்திருந்தேன் அல்லவா,அதை தொடரலாம்...

கல்லூரிக்குள் நுழைந்த முதன் நாள் ,ஒரு விழா போலவே இருந்தது, புதிதாக கல்லூரி வந்திருந்த அத்தனை பேரும் ஆடிடோரியத்தில் (Auditorium ) குழுமி இருந்தோம் கல்லூரி பற்றிய அறிமுக உரையுடன் ஆரம்பித்த அந்த மேடை நிகழ்வு இன்னும் என் நினைவில் இருக்கிறது.
கல்லூரி வாழ்க்கைக்கு புதியவர்களுக்கான அட்வைஸ்கள் ,ராகிங்க்,தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகள்,என பல விசயங்களை பேசி முடித்துவிட்டு எங்களையெல்லாம் வகுப்புவாரியாக வரிசைப்படுத்தி வகுப்பறைகளுக்குள் அனுப்பிவைத்தனர்.

முதல் வருடம் கனவுகளுடன் ஆரம்பித்தது கல்லூரி வாழ்க்கை, "ஹையா நானும் காலேஜ் படிக்கிறேன்" இந்தியாவில் மேல்நிலை கல்வி முடித்து மேற்படிப்புக்குள் நுழையும் அந்த முப்பத்திச் சொச்சம் சதவீத மாணவர்களுள் நானும் ஒருவனாக கல்லூரிக்குள் நுழைந்திருந்தேன் !!

படிப்பு என்பதற்கு மேலாக பல விசயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறது கல்லூரிவாழ்க்கை,இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கக்கூடலாம் என்று நினைக்கிறேன்

1.புதிய இடமும்,அது சார்ந்த பழக்கமும்
2.வயது

பதின்ம வயதின் எல்லையில் நின்றிருக்கும் சமயத்தில் தான்  பலர் கல்லூரிக்குள் நுழைகிறோம் !
பதின்ம வயதின் படியில் கால் வைத்து வருடங்கள் சில கழிந்திருந்தாலும் கூட ஆரம்ப நிலையை விட இந்த எல்லை நிலை கொஞ்சம் slippery ஆனது என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

நல்லவேலையாக இந்த வழுக்குத்தரைப் பருவம் எனக்கு வழுக்கவில்லை,:)

ஆண் பெண் என இருபாலரில் பலர் இந்த slippery வயதில் தான் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறார்கள்,அதுவும் Co-Ed கல்லூரிகளில் இதற்கான வாய்ப்புகள் அதிகம் எனலாம்.

அதே போல சில பழக்கங்கள் நம்மை அடிமையாக்க முயல்வதும் இந்த பதின் பருவத்தில் தான்,அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாகும் அற்புத பருவம் பலருக்கு அற்பமாக முடிவது இப்படித்தான்.,

கல்லூரி முதல் வருடம் பரிட்சை முடிந்து பரிட்சை பலன்களை அண்ணா யூனிவர்சிட்டி வெளியிட்டிருந்தது. கிணறு தாண்டும் பூனை போல முதல் வருடத்தை தாவிவிட்டேன், "ஆத்தா நான் பாஸாயிட்டேன்..." முதல் வருட தாவல் சில பல குருட்டு நம்பிக்கைகளைக் கொடுத்திருந்தது,பர்ட்சைக்கு முதல் நாள் படித்தாலே போதும் (சிலருக்கு இது உண்மையாக இருக்கக்கூடும்,இந்த விதிக்கு அடியேன் விதிவிலக்கு போலும்..),எதையெழுதி வைத்தாலும் வாத்தி மார்கள் மார்க் போட்டுவிடுவார்கள்,இன்னும் நிறைய... பாஸாகி விடலாம் என்ற தெனாவட்டு கொஞ்சம் நிறையவே வந்திருந்த்து...
இரண்டாம் வருடம்...
கல்லூரி வாழ்வில் அநேக பேருக்கு ஆப்பு வைத்து கொண்டிருந்த அல்லது வைத்துக்கொண்டிருக்கும் அந்த அரியர்ஸ் என் வாழ்க்கையிலும் வந்தது.செமஸ்டர் ரிசல்ட் பார்த்து செம கடுப்பான சமயம் அது.முட்டிக்கொண்டிருந்தது கண்ணீர்,எனக்கு கம்பேனி கொடுக்க சக நன்பர்கள் சகவாசத்தில் இருந்தாலும் ,ஆசுவாசப்பட என் மனம் தயாராய் இல்லை.அட வுடு மச்சி காலேஜ் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் என்று அரியர் அனுபவசாலிகள் அட்வைஸ் செய்தார்கள் !!... ம்ம் ஹூம் ....அன்றைய தினம் ரிசல்டுக்கு முன் ரிசல்டுக்கும் பின் என இரண்டாக பிரிக்கப்பட்டது.
யாருடனும் சரியாக பேசவில்லை,உண்மையை சொல்ல வேண்டுமானல் பேச முடியவில்லை,பேச பிடிக்கவில்லை..

பாஸாகி விட்டு குதிக்கும் நபர்களை குரு குரு வென பார்த்திருந்தேன்,அவர்களின் சந்தோசம் ஏனோ எனக்கு மட்டும் (எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை) கோபத்தை கொடுத்தது.

அரியருக்கு புதியவர்களை தேடிப் பிடித்தது என் பாழாய்ப்போன மனம், அதில் என் நன்பர்கள் இரண்டு பேர் கிடைத்தார்கள்,அதிர்ஷ்டவசமாக நாங்கள் மூவரும் ஒரே ரூம் ??? (அதனால தான் அரியர் வந்திருக்குமோ?) எங்கள் ரூம் மேட்களில் பாலா ஒருவன் மட்டும் ஆல் க்ளியர் !!

குரு,பாலாஜி,நான் மூவரும் குழுவாக இணைந்து அரியர்ஸ் தந்த ஆப்பினை வீட்டில் எப்படி சொல்வது,இந்த மனக்குழப்பத்தை தீர்க்க வழி என்ன என்று யோசிக்கத் துவங்கினோம் (அடக் கடவுளே!! )

ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தோம் "நம்மால் முடிவு எடுக்க முடியவில்லை,என்கிற முடிவுக்கு" முடிவில் ஒரு ஆசிரியரிடம் சென்று இது பற்றியெல்லாம் சொல்லி அட்வைஸ் வாங்க முடிவு கட்டினோம் !

அந்த அரியரின் ஆரம்ப தினத்தின் பொன்மாலை பொழுதில் ...கல்லூரி முடிந்து எல்லோரும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள்,ஏனோ நாங்கள் வீடு திரும்பாமல் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தோம் !

எங்கள் இயற்பியல் பேராசிரியரின் அறை திறந்திருந்தது! திறமையாக பாடம் சொல்லித்தரும் மிக்க்குறைவான ஆசிரியர்களில் அவரும் ஒருவர், கல்லூரி முதல் வருடத்தில் பரிட்சயம் ஆனவர் அவர்,முதல் வருடத்தின் இரண்டு செமஸ்டர்களும் அவரே எங்களுக்கு பிஸிக்ஸ் வாத்தியார்!!.

வகுப்புக்கு நோட்ஸ் கொண்டுவராமல் மனப்பாடமாக பாடம் சொல்லித்தருவார்,பாடம் முடித்ததும் கேள்வி கேட்க நேரம் தருவார்,நேரம் போதவில்லை என்றால் ஓய்வு நேரத்தில் வர சொல்வார், வகுப்பில் உள்ள அத்தனை மாணவர்களையும் நம்பர்களாக அல்லாமல் நன்பர்களாக பார்க்கும் நல்ல ஆசிரியர் அவர் !! வகுப்பில் இருக்கும் அத்தனை பேரையும் பெயர் சொல்லி அழைக்க கூடியவர் (நான் அவரின் ஞாபக சக்தியை வியப்பதுண்டு).

மனம் முன் ஓடிய பிலாஸ் பேக்கினை மையமாக்க் கொண்டு ,இவரிடம் போய் அட்வைஸ் கேட்கலாம் என்று ஒருவாறு முடிவு செய்தோம்! அறைக் கதவின் அருகே போய் மூன்று பேரும் நின்றிருந்தோம், எதுவும் பேசவில்லை,எதுவும் கேட்கவில்லை...

நேரத்துளிகள் காலமெனும் கடலுக்குள் காலமாகிக்கொண்டிருந்தன... அவரே எங்களைப் பார்த்தார் !! என்ன விசயம் என்பதை அவர் பாணியில் ஆச்சரியமாக,புன்னகையுடன் கேட்டார்..

நானே முதலில் வாய் திறந்தேன், அரியர் பற்றி சொல்லிக்கொண்டு அழுதே விட்டேன்,முட்டிக்கொண்டிருந்த கண்ணீர் கொட்டியே விட்டது !...

தன் பணியை அன்று ஒரு நாள் எங்களுக்காக ஒதுக்கி வைத்துவிட்டு எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எங்கள் ஒவ்வொருவருக்குமாக  கவுன்ஸ்லிங்க் கொடுத்தார், பேசினோம்... 

என்ன பேசினோம் என்பதை அடுத்தப்பாகத்தில் பகிர்ந்து கொள்கிறேன் (வாசகர்கள் விரும்பின் மட்டும்) ,அது ரொம்பவே சென்சிடிவான விசயம் என்பதால்...

காலமெனும் வெள்ளத்தில் நான் திசை மாற்றப்படவில்லை.இந்த ஆசிரியர் தினத்தில் எங்க ராஜா சாருக்காக நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்..

Hats Off sir, 

ஆசிரியர் தினம் பற்றிய எனது பழைய கட்டுரை,மறக்காம இதையும் படிங்க...!! :)

எனக்கு ஆசிரியர்களை சுத்தமா பிடிக்கவே பிடிக்காது


                                                                                 

Labels: , , ,

Wednesday, September 05, 2012

எனக்கு ஆசிரியர்களை சுத்தமா பிடிக்கவே பிடிக்காது


அனைவருக்கும் என் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ! 

 

     ந்த கட்டுரைக்கு நான் ஏன் இந்த மாதிரி எதிர்மறையான தலைப்பு வைத்திருக்கிறேன் என்று நீங்கள் என்னை வினவலாம்,கோபம் கூட படலாம்.கொஞ்சம் பொறுமையாக இந்த கட்டுரையை வாசித்து விடுங்கள்...
   ற்போதைய காலகட்டத்தில் ஆசிரியர் என்பவர் ஒரு எதிரியை போலவே மாணவர்களால் பார்க்கப்படுகிறார்.தனக்கு பிடிக்காத விசயங்களை செய்ய சொல்லும் ஒரு நபராகத்தான் ஆசிரியர் பெரும்பாலும் மாணவர்களுக்கு அறிமுகமாகிறார்.இதை நாம் “இதெல்லாம் சகஜம் தானே” என்று மிக சாதாரணமாக நினைக்கலாம்.ஆனால் இதன் பாதிப்பு பலமானததன் வகுப்பு மாணவனால் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி பற்றி உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.
  ந்த அளவு ஆசிரியர்கள் மீது மாணவர்கள் கொலைவெறி யுடன் நடந்து கொள்ள என்ன காரணம் இருக்கும்?? இந்த கனமான கேள்விக்கு நான் பதில் கூற முயலவில்லை...என் கருத்துக்களை மட்டும் கூறுகிறேன்,தவறு இருப்பின் தாராளமாக பின்னூட்டத்தில் கூறலாம்...




                                                     ஆசிரியை உமா மகேஸ்வரி

ஒய் திஸ் கொலைவெறி??



 கல்வி முக்கோணம் என்று ஒரு கருத்துறு(Concept) உள்ளது ஆசிரியர் ,மாணவர் ,பெற்றோர் ஆகிய மூவரும் இந்த முக்கோணத்தின் மூன்று பக்கங்களாக அமைகின்றனர்.எந்த இடத்தில் குறை ஏற்ப்பட்டாலும் கற்றலை அது பாதிக்கிறது.கல்வி கற்கும் மாணவனையும்,முக்கோணத்தின் மற்ற இரு பக்கங்களில் உள்ளாவர்களையும் பாதிக்கிறது.மாணவன் செய்யும் தவறுகள் ஒவ்வொன்றுக்கும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஏதோ ஒரு வகையில் பங்குதாரர்கள்.ஒரு மாணவன் ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்தான் என்பதை பரபரப்புடன் பார்க்கும் நாம் மாணவர்கள் தங்களை தாங்களே மாய்த்து கொள்வதை பெரிய செய்தியாக பார்ப்பதில்லை. “நாய் மனிதனை கடித்தால் அது சாதரண செய்தி,ஆனால் மனிதன் நாயை கடித்தால் அது பரபரப்பு செய்தி.” இது மாதிரி தான் நாம் மாணவர்களின் தற்கொலைகள் பற்றிய செய்திகளை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்.இந்த முக்கோணத்தின் படி சிந்திக்கிற போது மாணவர்களை தீர்மானிக்கிற பொறுப்பு ஆசிரியர் மற்றும் பெற்றோர் கையில் உள்ளது என்ற முடிவுக்கு நம்மால் வரமுடிகிறது.

இதற்கு தீர்வு இருக்கிறதா ??
 ஏன் இல்லை...தீர்வெல்லாம் இருக்கத்தான் செய்கிறது ஆனால் அதை நடைமுறை படுத்துவதில் தான் சிக்கலே.இந்த தீர்வை நான் கட்டுரையின் முடிவில் கூறுகிறேன்.அதற்கு முன் உங்களிடம் ஒரு நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.
 நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம் ஒருமுறை எங்கள் வகுப்பில் ஒரு கலந்துரையாடல் நடந்த்து ,அதன் தலைப்பு “சமூகத்திற்கு பெரிதும் சேவை செய்பவர்கள் ஆசிரியர்களா?, அல்லது மருத்துவரா?.” அந்த தலைப்பை தந்தவர் ஆசிரியர்.அதனால் பெரும்பான்மையான மாணவர்கள் ஆசிரிய பணியே பெரிதும் சேவை செய்யும் பணி என்பது மாதிரி பேசினர்.என்னுடைய முறை வந்த போது நான் “மருத்துவப்பணியே மக்களுக்கு பெரிதும் சேவை செய்கிறது.ஒரு சமூகத்தில் யார் வேண்டுமானாலும் ஆசிரியராக இருக்க முடியும்,ஆனால் யார் வேண்டுமானாலும் மருத்துவராக இருக்க முடியாது.இது புரிந்து கொள்ள கொஞ்சம் சிரம்மாக இருக்கலாம்.ஒரு விசயத்தை தெரிந்து வைத்திருக்கும் ஒரு நபர் தெரியாத நபருக்கு சொல்லிக்கொடுக்கும் போது அவர் ஆசிரியர் ஆகிறார்.மருத்துவருக்கு மருத்துவத்தை கற்று கொடுத்தவர் அவர் ஆசிரியர் தான்.கூலி வேலையில் அனுபவசாலி வேலையில் புதிதாக சேர்ந்த நபருக்கு தொழில் சொல்லிக்கொடுக்கும் போது அந்த இடத்தில் அவர் ஆசிரியர் ஆகிறார்.ஆக ஆசிரியர் என்பது யாராலும் எடுக்க முடிந்த அவதாரம்,மருத்துவத்துறையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ‘ஆசிரியர் பணி’ ஒன்றும் பெரிதும் சேவை கிடையாது.” என்று நான் என் கருத்தை கூறினேன்.

 கொலைவெறி தீர தீர்வு என்ன:

1.கல்வி என்பது வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை(அது என்ன என்ன விசயங்கள் என்று சந்தேகம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் கேட்கலாம்.) கற்றுக்கொடுக்கும் போது.மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் இருப்பர்.கல்வி அவர்களுக்கு கசக்காது.

2.படிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட மதிப்பெண் பெறுகிற மாணவர்களை உருவாக்குவது என்றில்லாமல்.கற்ற மாணவர்களை உருவாக்க வேண்டும்

3.”கற்க கசடற“ என்று மாணவ சமுதாயத்தை நோக்கி மட்டும் எப்போதும் சொல்லும் நமது நாக்குகள் “கற்பிக்க கசடற “ என்று ஆசிரியர்களுக்கும் சொல்லட்டும்.

4.ஒழுக்கத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பெற்றோர்களும் ,ஆசிரியர்களும் முதலில் அதை அவர்கள் கடைபிடித்துவிட்டு மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.

5.பாடபுத்தகங்களை மட்டும் வாசித்து,அதை நெட்டுறு போட்டு பாடம் கற்பிக்கிறேன் பேர்வழி என்று தங்களை சொல்லிக்கொள்ளும் ஆசிரியர்கள் திருந்த வேண்டும்.

6.மாணவர்களை நன்றாகபடிப்பவர்கள்,
சுமாராக படிப்பவர்கள்,படிக்காதவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை பாரபட்சத்தோடு நடத்துவதை விட்டு விட்டு ஓரே மாதிரியாக அவர்களை நட்த்த வேண்டும்.(படிப்பில் ஆர்வ்ம் இல்லாத மாணவர்களுக்கும் ஆர்வம் வருகிற மாதிரி பாடங்கள் சொல்லி த்தரப்ப்ட வேண்டும்.)
7.மாணவர்களின் மன்நிலையை செதுக்கி சீர் படுத்தும் விதமாக மன ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
8.கண்டிப்பு,கவனம்,கனிவு இவைகளுடன் மாணவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும்.
9.ரசாயணம்,பௌதீகம்,சாத்திரம்,இலக்கியம் இவைகளோடு வாழ்க்கையும் கற்றுத்தரப்பட வேண்டும்.
10.மகாத்மா காந்தி சொல்லியது மாதிரி ஒரு நல்ல கல்வி என்பது கை,தலை,மற்றும் இதயம்(பணம்,அறிவு ) இம்மூன்றையும் நிறைவு செய்கிற ஒன்றாக இருக்க வேண்டும்-(“A good education should serves the  head heart and hand”) .
11.நீதி போதனை,விளையாட்டு போன்ற வகுப்புகள் சரியாக சொல்லித்தரப்பட வேண்டும்.(பெறும்பான்மையான கல்வி நிறுவன்ங்களில் பி.டி,ஓவியம்,நீதி போதனை போன்ற வகுப்புகளை வாடகைக்கு எடுத்து வகுப்பு நடத்தும் புண்ணியவான்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்).
12.பெற்றோர்கள் அதிக பணம் வாங்கும் பள்ளிகள்,ஆங்கிலத்திலேயே கல்வி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் சிறந்தவை என்கிற மோகத்தில் இருந்து வெளிவர வேண்டும்.
13.மாணவர்கள் மூளைக்குள் படிப்பை திணிக்கும் போக்கு களையப்பட வேண்டும்.படிப்பு என்பது வற்புருத்தலால் வரக்கூடியது அல்ல.அது வற்புறுத்த வற்புறுத்த வழி மாறி போவது,திணிக்க திணிக்க திசை மாறி போவது.
14.பெற்றோர்களே !..ஆசிரியர்களே...! மணவர்களுடம் மனமாற பேசுங்கள்.
 
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் –என்று சொல்வார்கள் எனக்கு கல்வி சொல்லிக்கொடுத்த கடவுள்களுக்கு என் நன்றிகள்....
"ஆசிரிய பெருமக்களே ! நான் மரமாக செழித்து வளர நீங்கள் வேர்களாக இருந்தீர்கள்.,வேர்களுக்கு நன்றி    சொல்கிறது வளரும் இந்த மரம் !"



Labels: , , , , ,