இந்த இந்திய தேசத்தில்
என் சக உயிரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் சகலமானவர்களுக்குமாக இந்த கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அன்புள்ள என் சகதேசவாசிக்கு,
நலம், நலமே விழைகிறேன்.
சிறு வயதில் எனது
பள்ளிக்கூடப் புத்தகங்களில் வேற்றுமையில் ஒற்றுமை என்ற ஒற்றை வரியில் நம் பாரத தேசத்தின்
வரையறையை வாசித்தவள் நான், அது உண்மை என்று மனதாற நம்பியவள்.
மொழியால், இனத்தால்,
உடையால், இன்னபிற பலவற்றால் மாநிலம் தோறும் நம் மக்கள் வேறுபட்டேக் கிடக்கிறோம், அந்த
வேற்றுமைகளை ஊதி ஊதி தூண்டிவிட்டு நம்மை நெருப்பாகப் பற்ற வைத்து குளிர் காய ஒருக்
கூட்டம் துடித்துக் கொண்டிருக்கிறது.
அந்த நயவஞ்சகக்
கூட்டத்தினர் நம் மக்களின் ஒற்றுமையை வேரறுக்கக் கூறும் நஞ்சு வார்த்தைகளை இனிப்புத்தடவி
மிக மிக எச்சரிக்கையாக அதை நாம் நஞ்சென்று அறியாத வண்ணம் நமக்கு நாள்தோறும் ஊட்டிக்கொண்டிருக்கின்றனர்.
நாமும் அந்த நஞ்சு வார்த்தைகளை எழுத்துக்களாக, மேடைப்பேச்சுக்களாக, வீடியோக்களாக, மீம்ஸ்களாக
உண்டு உண்டு நம் சக மனிதனை இனத்தால், மொழியால், பண்பாட்டால் வெறுப்பதை சரி என்று நியாயப்படுத்தக்
கற்றுக்கொண்டோம்.
‘பாரத தேசம் பார்க்கெலாம்
திலகம், நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்’ என்றானே பாரதி, ஹிப் ஆப் குழு ஒன்றின்
லோகோவாக மாறியிருக்கிறானே அதே பாரதி தான், அந்த மகாகவி பாரதியே வந்து நம்மிடையே பாடி
நாமெல்லாம் இந்தியர், இந்தியா என்பது முகம் தமிழகம் என்பது முகத்தில் உள்ள முக்கிய
அங்கம். முகத்தில் தான் மூக்கிருக்கிறது, கண் இருக்கிறது, வாய் இருக்கிறது என்று விளக்கம்
கொடுத்தாலும் கூட விளங்கிக் கொள்ளப் போவதில்லை நாம், பாரதியை தமிழினத் துரோகி, பார்ப்பான்
என்றெல்லாம் இட்டுக் கட்டி ஒதுக்கி வைக்கும் மனநிலை கொண்ட மக்களாகத் தான் நாம் தற்போதைய
சூழலில் மாற்றப் பட்டிருக்கிறோம்.
வேற்றுமைகளைத்
தூண்டி விட்டு நயவஞ்சக நரிக்கூட்டம் நம்மை மந்தையிலிருந்து பிரித்துக் கூட்டிப் போகும்
போது ‘வாவ் நான் ஸ்பெசல், மந்தை ஆடுகளிலிருந்து நான் தனி’ என்று மனதிற்குள் நினைத்தபடி
நாம் நகர்கிறோம் பலி ஆடு நாம் என அறியாமலேயே.
வேற்றுமைகளை பூதாகரமாகக்
காட்டி உங்களை உங்கள் சமூகத்திற்கு எதிராக சிந்திக்க வைக்கிறவன் எவனும் தலைவனே அல்ல,
அவன் சமூக விரோதி. பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்று பகைவனையும் நேசிக்கச் சொல்லித்தருபவனே
தலைவன்.
எதிரி என்பவன்
எதிர்க்கப் பட வேண்டியவன் தானே அவனை ஏன் நான் நேசிக்க வேண்டும் என நீங்கள் யோசிக்கலாம்.
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது, ஒரு மனிதனிடமிருக்கும் எதிரான குணங்களை
எதிர்ப்பதற்கும், அந்த மனிதரை எதிர்ப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. மனிதரை எதிர்க்கிற
செயன்முறையில் நாம் அந்த மனிதரின் எதிர்க்குணங்கள் நீங்கிய பின்னரும் கூட அந்த மனிதரை
எதிர்த்துக் கொண்டே இருப்போம், எதிரான கருத்துகள் தவறென்று திருந்திய பின்னரும் கூட
அதே மனிதரை நாம் எதிர்த்துக் கொண்டிருப்போம்.
2020 ல் இந்தியா
வல்லரசாகும் என்று ஒரு புண்ணியவான் கனவுத் திட்டம் ஒன்றை கற்பனையில் வைத்திருந்ததை
நாம் மறந்திருக்க மாட்டோம் என்று நம்புகிறேன்.
தனித்தனி மனிதர்களாய்
நாம் தனிமைப் படுத்தப்பட்டால் நம்மை அடிமை செய்தல் மிக எளிது என்ற சூட்சுமம் தான் நம்மை
வேற்றுமைகளின் பெயரால் பிரித்தாள முயற்சிக்கும் சூழ்ச்சி.
ஒவ்வொரு மாநிலமும்
தனி நாடாக்கப் பட வேண்டும் என்று ஒவ்வொரு மாநிலமும் முன் வரலாம், தனி நாடாதல் சரி தான்
என நாமும் கருத்து சொல்லிக் கொண்டுத் திரியலாம். ஆனால் கைலாசா நாட்டை நிர்மாணிப்பது
போல வேறுபட்ட கருத்தோட்டம் கொண்ட இனக்குழுவினருக்கு தனி நாடு செய்தல் ஒன்றும் அவ்வளவு
எளிதல்ல என்பதே என் கருத்து.
ஒற்றைத் தேசத்தின்
ஒரே மாநிலமாக இருப்பவனுக்கே தண்ணீர் தராத சமூகம், தேசப் பற்றைக் காரணம் சொல்லி நம்மை
அப்பாலே போ அந்நிய தேசமே என்று அண்டை நாடுகள் துணையோடு போர் செய்து எதிர்க்கும்.
மறுபடியும் நாம்
தனியாய்ப் பிரிந்த தாய்நாட்டில் ஒவ்வொரு பாகமாகப் பிரித்து தனி நாடு கேட்க முயன்று
கொண்டிருப்போம்.
பிரிந்து ஒதுங்குதல்
என்பது கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு தனியாய்ப் போகும் மனோநிலையின் பரந்துபட்ட வடிவம்
தான்.
வட நாட்டின் ஏதோ
ஒரு மூலைக்குப் பணி நிமித்தமாக சில மாதங்கள் சென்றிருந்தபோது, ஹோட்டல் உணவெல்லாம் உடம்புக்கு
ஆகாது என்று அறிவுரை சொல்லி, வேண்டாமென மறுத்தும் கேட்காமல் தன் வீட்டிலிருந்து எனக்கும்
சமைத்து எடுத்து வந்த தோழியை நினைத்துக் கொள்கிறேன்.
நடு ரோட்டில் மயங்கி
விழுந்த என்னை மீட்டெடுத்த அந்த முகம் தெரியாத வடநாட்டு நண்பனை நினைத்துக் கொள்கிறேன்.
இந்து மத நம்பிக்கையாளன்
ஒருவன் நாட்டு நலன் பற்றி கருத்து சொன்னால் அவனை பார்ப்பனிய ஆதரவாளன் என்பதும், சங்கி
என்பதும் எவ்வகையில் சரியாகும். அது தான் சரி என்று அவன் நம்பிக் கொண்டிருக்கும் நம்பிக்கை
மீது தான் நாம் கோபம் கொள்ள வேண்டுமே அன்றி அவன் மேலல்ல. அவன் வரையில் அவன் நினைத்துக்
கொண்டிருப்பது சரி, நாம் நினைத்துக் கொண்டிருப்பது தவறு.
சக இஸ்லாமியப்
பணியாளரிடம் , நண்பர்களிடம் விழாக்காலங்களில் இன்னமும் நாம் பிரியாணி கேட்டுக் கொண்டிருக்கிறோம்
தானே.
பல அப்பாவிகள்
சாகக் காரணமாக இருந்த ஒருத்தன் இஸ்லாமியன் என்பதனால் , சக இஸ்லாமியத் தோழர்களை, உறவுகளை
நாம் வெறுப்பது எவ்வகையில் சரியாகும்.
வட நாட்டுக்காரன்
ஒருவன் தவறு செய்கிறான் என்பதற்காக உங்கள் தோழனாக/ தோழியாக இருக்கும் வடநாட்டரை தீண்டத்
தகாதவனாக எதிர்ப்பது எவ்வகையில் சரியாகும்.
முன்னொரு காலத்தில்
நம் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தித்தான் அந்நிய தேசத்தினர் நம் நாடு புகுந்து நம்மை
அடிமை செய்து நம்மை அவர்களின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.
நான் அனாமிகா,
உங்கள் வசிப்பிடத்திற்கருகே வசிக்கும் மற்றுமொருப் பெண். பணி முடிந்த தினத்தின் இறுதியில்
வீடு திரும்ப வாகனம் தேடிக்கொண்டிருப்பவள் , பேருந்தில் கூட்ட நெரிசலில் உங்கள் அருகே
சங்கோஜமாக உடல் குறுக்கி நின்று கொண்டிருப்பவள் , ஒரு சக மனுஷி, The so called தாய்க்குலம்.
இந்த கடிதத்துடன்
சுதந்திர தின விழாவிற்கான அழைப்பிதழையும் இணைத்துள்ளேன், சுற்றமும் நட்பும் சூழ தவறாது
கலந்து கொள்ள வேண்டும். நிச்சயம் நான் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன்.
நமது அடிமை சாசன
பிரமான பத்திரத்தை 1947-ஆம் ஆண்டின் ஆகஸ்டு 15 நள்ளிரவில் வெள்ளைக்கார அரசாங்கம் நம்மால்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கைகளில் ஐந்தைந்து ஆண்டுகள் அடிமைகளாய் கிடக்க
சுயாட்சி என்னும் பெயரில் திருத்தி எழுதிக் கொடுத்துவிட்டுப்போனதே , அந்த நிகழ்வின்
நினைவாக வருச வருசம் வருகிறதே.. அந்த விடுமுறைதினத்திற்கான அழைப்பிதழ் அல்ல இது.
“நள்ளிரவில் தனி
ஒரு பெண் தைரியமாக நடமாடும் நாளே உண்மையான சுதந்திர தினம்” என சொல்லிவிட்டுப்போனாரே
காந்தி, அந்த நள்ளிரவுக்கான அழைப்பிதழ்.
கூட்டம் கூட்டமாய்
மானபங்கம் செய்யப்பட்ட வாச்சாத்திப்பெண்கள், நிர்பயா, ஜிஷா, ஹாசினி, நந்தினி, தனம்,
ஆசிஃபா, அழக்கூட தெரியாத அந்த எட்டு மாதக்குழந்தை, லிஃப்டுக்குள் மூச்சுத்திணறிய வடநாட்டு
சிறுமி, மீடியா வெளிச்சத்திற்கு வராமல் செத்துப்போன இன்னும் நிறைய பெண்கள், எப்போது
நான் என பயத்துடன் வாழும் பெண்கள், இவர்கள் அத்தனை பேரின் சார்பாக அனாமிகாவாகிய நான்
உங்கள் அத்தனை பேரின் கைகளிலும் இந்த அழைப்பிதழை கொடுக்க வந்திருக்கிறேன்.
பிறந்து , வளர்ந்து
, இரையாகி இறந்து போன அந்த அத்தனை பெண்களிடம் பொதுவாக ஒன்று இருந்தது, ஆம் அந்த ஒற்றைப்பொருளை
மையப்படுத்தித்தான் அத்தனை குரூரங்களும் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன, நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
அந்த ஒற்றைப்பொருளுக்குள் தான் நாம் நமது சமூகத்தின் மான, அவமானங்களையும், கவுரவுத்தையும்,
ஒழுக்கத்தையும் பூட்டி பூட்டி பாதுகாத்து வைத்து வந்திருக்கிறோம். வைத்தும் கொண்டுள்ளோம்.
ஆதி காலம் தொட்டு
இந்த பொருளை அழிப்பதையும் சிதைப்பதையும், அபகரிப்பதையும் தான் வீரம், அதிகாரம், ஒடுக்குமுறை
போன்றவற்றின் வெளிப்பாடாக பெரும்பாலுமாக நம் வரலாறுகளின் ரத்தக்கறைபடிந்த பக்கங்களுக்குள்
பதிவு செய்து வைத்திருக்கிறோம். அதையே நம்மில் பலர் அறியாமையால் நம்பியும் தொலைக்கிறோம்.
நாம் அத்தனை பேருமே
பிறப்பதற்கு காரணமாக நம்மை ஒரு சிறுதுளியாக உள்வாங்கி பாதுகாத்து , பராமரித்து, பிரசவித்து
முழு மனிதனாக இந்த பூமிக்குள் வெளியேற்றக் காரணமாய் இருந்த அந்த ஒற்றைப் பொருளை, நம்
பிறப்பின் வாசலாக இருந்த அந்தப் பொருளை (பெண் உறுப்பை) எப்படி நாம் சிதைக்க முன்வந்தோம்
என்றே இப்போதும் யோசித்துக்கொண்டிருக்கிறேன் . மாதர் தம்மை இழிவு செய்தபடி கொழுத்துத்திரியும் இந்த மடைமயை நாம் கொழுத்த வேண்டாமா ?
Image courtesy: vikatan
பார் புகழும் இந்த
பாரத தேசத்தில் பெண் உறுப்பை தெய்வமாக வழிபட கோவிலெல்லாம் கூட இருக்கிறது. அசாம் மாநிலத்திலிருக்கும்
காமாக்கியா கோவிலில் யோனி தான் தெய்வமாக நின்று அருள் பாலிக்கிறது. எத்தனை சீரிய நாகரிகம்
நம்முடையது. பிறப்பின் ஊற்றாக போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டிய பெண்மையை நாம் எஞ்ஞனம்
இழிவு செய்ய முற்பட்டோம்.
மனிதன் தவிர்த்து
இந்த பிரபஞ்சத்தில் வாழும் எந்த மிருகமும் தன் சக உயிரின் பெண் உறுப்பின் மீது தனது
ஆக்ரோசத்தை, வன்மத்தை, அதிகாரத்தை, ஆனவத்தைக் காட்டி தனது வீரத்தையும், ஆண்மையையும்
நிலைநாட்டியதாக நான் கேள்விப்பட்டதில்லை. விருப்பில்லாமல் உறுப்பைத்தொட விரும்பும்
கீழோராக நாம் எப்போது மாறிப்போனோம் எனத் தெரியவில்லை.
இப்பொழுதும் கூடதாமதமில்லை , புள்ளிவிவரங்களால் சதா நம்மை பயமுறுத்திக்கொண்டே
இருக்கும் மீடியாக்களை புறந்தள்ளிவிட்டு அகல விழிகளால் இந்த தேசத்தை விசாலப் பார்வையால்
கண்போம்.
பெண்மையை மதிக்கும்
மனிதர்களின் எண்ணிக்கையோடு , குற்றம் செய்கிறவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பாருங்கள்,
எண்ணிக்கையில் இங்கு நாம் தான் அதிகம். இனியும் கூட நாம் நினைத்தால் நல்லதொரு தேசத்தை
இங்கிருந்து கூட நாம் உருவாக்கலாம். எதிர்கால சமூகத்தை சிருஷ்டிக்க நம்மால் முடியும்.
உங்கள் பிள்ளைகளுக்கு
வீரத்தை சொல்லிக்கொடுங்கள், தைரியத்தை சொல்லிக்கொடுங்கள், குற்றம் செய்கிறவர்களிடமிருந்து
தப்பிப்பதற்கு தற்காப்புக் கற்றுக்கொடுங்கள், தவறானவர்களை தவிர்க்க சொல்லிக்கொடுங்கள்.
வீரம் மிக்க கதைகளை குழந்தைப்பருவத்திலிருந்தே சொல்லிக்கொடுங்கள், அடங்காப் பிடாரி,
அதிகப்பிரசங்கி, பெண்பிள்ளையா அடக்க ஒடுக்கமா இரு, ஆம்பள அழக்கூடாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டு
ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் பேதம் காட்டி வளர்க்காமல் சமத்துவத்தை சொல்லிக்கொடுங்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு
அதிக அன்பு காட்டி வளர்ப்பது நல்லது தான் , அதே நேரம் அவர்களையும் அன்பு மிக்க, அன்பை
உணரும் ஜீவிகளாக வளருங்கள். தாய்மையை வணங்கும் பண்பு நம் தேசத்தில் மிக முக்கியமான
ஒன்று. தாய்மையை மதிப்பது உயிரின் இயல்பு. தாயை, தன் சகோதரியை, தன் வீட்டு பெண்களை
மதிக்கும் ஆண் பிற பெண்களையும் அவர்களின் பெண்மையையும்
நிச்சயம் மதிப்பான்.
உங்கள் தர்க்கங்களை
நம்பிக்கைகளை குழந்தைகள் மீது திணிக்காமல் அவர்களுக்கு நல்லது கெட்டதுகளை மட்டும் அடையாளம்
காட்டி வெறுமனே அவர்கள் வளர உதவுங்கள்.
தண்டனைகளுக்குப்
பயந்து தவறு செய்யாதிருக்க நாம் ஒன்றும் காட்டுமிராண்டி சமூகம் அல்ல , உலகின் பிற தேசத்தினர்
காடுமிராண்டிகளாய் வாழ்ந்த காலத்திலேயே நவ நாகரிகமாய், சீரிய பண்பாட்டுடன் வாழ்ந்தவர்கள்
நாம். நமக்குத் தெரியும் இனிவரும் உலகை புத்துலகாய் செய்ய என்ன செய்ய வேண்டுமென.
இன்னமும் யோனிகளின்
வழியாகத்தான் நாமெல்லாம் பிறந்து கொண்டிருக்கிறோம்.
சுற்றமும் , நட்பும்
சூழ இந்த சுதந்திர தினத்திற்கு நிச்சயம நீங்கள் வர வேண்டும். பிறக்கப் போகும் இந்த
புதிய தினத்துக்கு நாளும் , இடமும் நாம் குறித்தாக வேண்டும்.
பொதுபுத்தி பாலியல் வறட்சியும் – தனி நபர் கற்பழிப்புகளும் | #Yours Shamefully
யூட்யூபில் அதிகம் பார்க்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அதிகம் பகிரப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த வைரல் குறும்படமான Yours Shamefully பற்றிய விவாதம் தான் இந்த கட்டுரை…
Yours Shamefully
12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் வக்கிரங்களுக்கு மட்டுமே தூக்கு தண்டனை என்கிற சட்டத்திருத்தம் நடைமுறைப் படுத்தப்பட்ட நடப்பு ஆண்டில் (2018 ஆம் வருடம் ) நடப்பது போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது கதை. 12 வயதும் 45 நாட்களுமான குழந்தை ஃபாத்திமா, ஆதவன் மற்றும் டேனியல் தாமஸ் என்கிற இரண்டு பேரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கிற்கு இறுதித் தீர்ப்பு வழங்கவிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெமினி . இது தான் இந்த குரும்படத்தின் ஒன்லைன் கதை.
தூக்குத் தண்டனை கட்டாயமில்லை என்கிற நிர்பந்தம் – 2067 க்குப் பிறகான பெண்களின் நிலை பற்றி அவரது மகளின் திருமண பந்தத்தை தொடர்புபடுத்தி நீதிபதிக்கு வரும் ஒரு Fantasized கனவு – அவர் என்ன தீர்ப்பு வழங்கினார் என்கிற மக்களின் எதிர்பார்ப்பு. இந்த மாதிரி வழக்குகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்கிற டைரக்டர் விக்னேஷ் கார்த்திக்- ன் கருத்து தான் இந்தப் படத்தின் ஹார்ட் பீட். இக்குறும்படம் கிட்டத்தட்ட இதை பார்க்கும் எல்லோராலும் பாராட்டப்படுகிறது, இக்குறும்படத்திற்கு வந்திருக்கும் டிஸ்லைக்குகளும், நெகடிவ் கமெண்ட்களும் முழு படம் பார்க்க பொறுமை இன்றி அந்த நீதிபதி காணும் கனவு காட்சியை மட்டும் கண்டுவிட்டு கடுப்பானவர்கள் என்றே நினைக்கிறேன். 2067- க்கு பின் நடப்பதாகக் காட்டப்படும் அந்தக் காட்சி மட்டும் படமாக எடுக்கப்பட்டிருப்பின் ஒட்டுமொத்தமாக எல்லோரும் நெகடிவாகத்தான் இந்த படத்தை விமர்சித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
2067-க்குப் பிறகான பெண்களின் நிலை என்று காட்டப்படும் அந்தக் காட்சியில் போலிஸ் பாதுகாப்போடுதான் பெண்கள் நடமாடுகிறார்கள், பாலியல் கொடுமைகளாலும், பெண் குழந்தைகளை விரும்பாத பெற்றோர்களாலும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து குறைந்து (2013- 1000 ஆண்களுக்கு 950 பெண்கள் , 2026ல் – 1000 ஆண்களுக்கு 785 பெண்கள் என 2064 – ல் 1000 ஆண்களுக்கு 270 பெண்கள் எனக் குறைவதாக இந்த குறும்படத்தில் ஒரு பயடேட்டா முன்வைக்கப்படுகிறது. 2016 ல் மட்டும இந்திய தேசம் முழுக்க 36000 பாலியல் வக்கிர புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனவாம்! ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டே போகும் இந்நிலை இப்படியே தொடர்ந்தால்.. பெண் குழந்தைகள் வளரும் முன்னரே பாலியல் பசிக்கு இறையாகி சாகடிக்கப்படுவார்கள்.
இந்நிலை இப்படியே தொடர்ந்தால்… என்கிற நூலைப் பிடித்துக்கொண்டு மிக நேர்த்தியாக தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் விக்னேஷ் கார்த்திக். கடந்த காலம் எப்படி இருந்ததோ அதன் அடிப்படையில் தான் நிகழ்காலம் இருக்கும் , அதே மாதிரி நிகழ்கால செயல்களின் தாக்கம் எதிர்காலத்தை பாதிக்கும். தற்போதைய நிலவரப்படி தினசரி 50 க்கும் மேற்பட்ட பாலியல் கொலை வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக அரசு புள்ளிவிவரம் சொல்கிறது. பதியப்படாமல் பலியாகும் அபலைகள் எத்தனை பேரோ தெரியவில்லை! இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் பெண்களின் எண்ணிக்கை குறைந்து விடும் தான், இக்கருத்தைத் தான் இக்குறும்படத்தின் முதல் பகுதி சித்தரித்திருக்கிறது.
நீதிபதி ஜெமினியின் கனவில் வரும் காட்சியில் 2067ம் வருடத்திய இந்திய அரசு ஒவ்வொரு பெண்ணும் ஆண்களின் எண்ணிக்கையை ஈடு கட்டுவதற்காக குறைந்தது இரண்டு திருமணமாவது செய்து கொள்ள வேண்டும் என சட்டம் போடுகிறது, தனது மகளுக்கு இரண்டாம் கனவனை தேடிக் கட்டிவைக்கும் கணம் நீதிபதி அவர்கள் இரண்டு கணவன்மார்களுடன் படுக்கையில் தன் மகள் இருக்கும் திடுக்கிடும் காட்சியைக்கண்டு அதிர்ச்சியில் கண் விழிக்கிறார்.
இந்த குறும்படம் எழுப்பும் கேள்விகள்:
1)ஹாஸினி, ஆசிஃபா பானு, என எத்தனை குழந்தைகளை நாம் காமுகர்களுக்கு சாகக்கொடுக்கப் போகிறோம்.
2)இத்தகைய மிருகங்களை கொடுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.வெறுமனே தூக்குதண்டனை போதாது. அப்பொழுது தான் இதற்குப் பின் வருகி்ற காமுகர்கள் இதை பாடமாக எடுத்துக்கொண்டு திருந்துவார்கள் .
3)கற்பழிப்புக் கொலைகள் தொடரும் பட்சத்தில் ஆண்களுக்கான பெண்களின் எண்ணிக்கை குறைந்து போய் 1000 ஆண்களுக்கு வெறும் 270 பெண்கள் என்பதாக குறைந்துபோகும் காலம் வரலாம். அப்போது ஆண்களின் ஆசையை ஈடுகட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் 2 திருமணங்கள் கட்டாயம் எனும் சட்டபூர்வமாக சொல்லப்படலாம்.
இந்தக் குறும்படம் நிலைப்படுத்தும் கேள்விகள் நம் பொதுபுத்தி மனோநிலையில் ஏற்கனவே இருந்த ஒன்று தான், நம் வீட்டாருக்கு இப்படியொரு நிலைமை வந்தால் நாம் என்ன செய்வோம் என்கிற சைக்காலஜிக்கல் தாக்குதல் தான் இதுவும் “நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கல” என்கிற வசவின் மாறுபட்ட வடிவம் தான் இத்திரைப்படம் சொல்லும் விசயமும், நாம் இத்தகு பிரச்சினைகளுக்கு சிந்திக்கும் தண்டனைகளும்.
ஏன் நாம் ஒரு விசயத்தை சரியா, தவறா என மனசாட்சிப்படி சிந்திக்காமல், பயத்தின் அடிப்படையில் சிந்திக்கிறோம், பயமுறுத்தும் வகையில் தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்று ஏன் யோசிக்கிறோம்?
பொதுபுத்தி பாலியல் வறட்சியும் – தனி நபர் கற்பழிப்புகளும் :
தாகம் வந்தால் தண்ணீர் குடிக்க வேண்டும், என்பது நடைமுறை நியதி ஆனால் தண்ணீரைப் பார்க்கும்போதெல்லாம் தாகம் கொள்ளும் மனப்பான்மை நோய்மை. பெண்களைப் பார்க்கும் போதெல்லாம் காமுறும் வக்கிர சமூகமாக நாம் மாறி இருக்கிறோம். இந்த குறும்படத்தை விளம்பரபடுத்தி அதிக பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட யுக்தியைப் பாருங்கள். படுக்கையில் இரண்டு ஆண்களுக்கு நடுவில் படுத்திருக்கும் ஒரு பெண். அந்த யூட்யூப் சேனலில் பகிரப்படும் விசயங்கள் பெரும்பாலும் பாலியல் சார்ந்தவைகளும், கிசுகிசுகளுமாகத்தானே இருக்கிறது.
நாமும் யூடியூபில் அதிகமாய் இப்படிப்பட்ட கருமங்களைத் தானே தேடித்தேடி பார்க்கிறோம். டிரெண்டிங்க் ஆக்கித் தொலைக்கிறோம், கண் சிமிட்டும் கன்னி, புருவம் உயர்த்தி புன்னகைக்கும் அழகி இப்படி நாம் டிரெண்டிங் செய்த வீடியோக்களின் பின்னனியில் நம் மனதிற்க்குள் இருக்கும் காம உணர்வை நாம் சொறிந்து கொண்டு சுகப்படும் காரணம் மறைமுகமாக இருக்கத்தானே செய்கிறது. தேடி பல வீடியொக்கள் பார்த்து , பிறர் வாட பல செயல்கள் செய்யும் நல்லவர்கள் தானே நாமெல்லாம்.
மறைமுகமாக மனதிற்குள் தவறு செய்யும் மனிதர்களான நாம், உணர்ச்சிப்பெருக்கு எல்லைமீறி டோபமைன் சுரப்பில் சுரணைகெட்டு தன் சுயநினைவு மறந்து வெளிப்படையாக தவறு செய்பவர்களை தண்டிக்க சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்பதே நிதர்சனம்.
வெறிபிடித்த மன நிலையில் இருக்கும் ஒருவனுக்கு என்ன சொன்னாலும் எடுபடாது, ஆக வெறிபிடித்த எல்லோரையும் கொன்றுவிட வேண்டும், வெறி பிடிக்கும் அபாயம் இருக்கும் எல்லோரையும் கொன்று விட வேண்டும்.
மனங்கள் தோறும் கொலைவெறித்தனம் தலைவிறித்தாடும், அரசாங்கமே கொலை செய்கிறது கொலை செய்வது பாவமில்லை, தவறு செய்பவன் என நம் மனதிற்கும் தோன்றும் பட்சத்தில் கொன்று போடலாம் தவறே இல்லை என சப்கான்ஷியஸாக நம்பும் சமூகமாக நாமெல்லாம் கொலைகார சமூகமாக மாறுவோம். சர்வ நிச்சயமாக மாறுவோம்.
பயமுறுத்த வேண்டும், ஆணுருப்பை பொது இடத்தில் வைத்து அறுக்க வேண்டும், தலையை வெட்டிக்கொள்ள வேண்டும், சுட்டுக்கொள்ள வேண்டும் … யாவரும் காணும் வகையில் சித்திரவதை செய்து சாகடிக்க வேண்டும்.இதை பார்க்கும் யாரும் அடுத்த இப்படி செய்ய பயப்பட வேண்டும்… சரி தான் , இந்த தண்டனைகள் யாவுமே சரிதான் , சிகரெட்டு டப்பாக்களில் புற்றுநோய் புகைப்படத்தை மிகக்கொடுரமாக சித்தரித்து , வாங்கிப் புகைத்தால் உனக்கும் இது வரும் என பயமுறுத்துகிறோமே, போதாக்குறைக்கு திரைப்படங்கள் துவங்கும் முன் புகையின் பாதிப்பை சொல்லி பயமுறுத்துகிறோமே! பயமுறுத்தி பயப்பட்டு நல்லவர்களாகிவிடும் நல்லவர்களா நாம்.
உடனடி நிவாரனம், தற்காலிக விடுதலை என்கிற மனப்பான்மை உடன் சிந்திக்கும் நாம், நிரந்தர தீர்வு பற்றியும் யோசிக்க வேண்டும்.
நிரந்தர தீர்வுகள் என்பவை மனதளவில் நம் எதிர்கால ஆணும் , பெண்ணும் ஒருவரையொருவர் பரஸ்பரமாக சக உயிராக பாவித்து, புரிந்து வாழும் சூழலை உருவாக்குவதில் இருந்து துவக்கலாம்.
எதிர்கால சமூகம் என்பது நம் குழந்தைகள் தானே. அவர்களுக்கு நல்லது கெட்டதுகளை உளவியல் ரீதியில் மனதில் பதியும் படி புரிய வைப்பது மூலம் நல்லதொரு அரோக்கியமான சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடியும். என் மனதில் பட்ட சில நிரந்தர தீர்வுகளை இங்கு தருகிறேன்.
நீங்கள் உங்களுக்கு பட்டதை கமெண்ட்டில் கருத்தாக பதிவு செய்யுங்கள்…
1) திருத்தவே முடியாத மிருகங்களை கொல்வதில் தவறில்லை, ஆக 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு தூக்குதண்டனை என்பது எல்லா வயது பெண்களுக்கு நடக்கும் கொடூரங்களுக்கும் தரப்பட வேண்டும்.
2) பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும் அவர்கள் நம் சக உயிரிகள் என்ற சிந்தனை ஆண் குழந்தைகள் மனதில் ஆழமாக பதிக்கப்பட வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக சேவை நிறுவனங்கள் இதை முன்னெடுக்க வேண்டும், அரசு சிலபஸ் போடும் அதன் பின் சொல்லிக்கொடுப்போம் என எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். (ஒரு பெண்ணின் பிறப்புறப்பில் கைவிட்டு அவள் குடலை ஒருத்தன் இழுக்கிறான் என்றால், அவளை அவன் உயிரினமாகவே மதிக்கவில்லை என்று தானே பொருள்).
3) பாலியல் வறட்சியை ஏற்படுத்தும் சமாச்சாரங்களிலிருந்து விலகி இருக்க மனோ தி்டம் வேண்டும். கலை, இலக்கிய ஈடுபாடும், பெண் பிள்ளைகளுடன் சகஜமாக இயல்பாக பழக உரையாட பதின்மத்தில் இருக்கு ஆண் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான சூழல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
4)ஆண் பெண் உடலில் நடக்கும் பதின்ம மாற்றங்களை பக்குவமாக சொல்லிக்கொடுக்க வேண்டும்.
5) பெண்களுடன் ஆரோக்கியமாக பழகும் ஆண்களை பெண்கள் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும்., காதல் எனப்பழகி நண்பர்களுக்கு இரையாக்கும் நல்ல உள்ளங்களிடமிருந்து விலகி இருக்க , கெட்டப்புத்திக்காரர்களை நல்லவர்கள் என நம்பாதிருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
கிமு:585-ல் எலக்ட்ரான் ! எலக்ட்ரான் என்ற வார்த்தை நகைகளில் அலங்காரக்கல்லைப்போலப் பயன்படுத்தப்படும் ஆம்பர் என்னும் ஒரு வகை மரப்பிஸினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தையான ilektron என்ற வார்த்தையிலிருந்தே பிறந்தது !
எலக்ட்ரான் நகைகள்
ஆம்பர் பிஸினுக்குள் சிக்கியிருக்கும் கொசு
ஆம்பர் பிஸின்
மரப்பிஸினுக்கும் , அணுத்துகளுக்கும் என்ன சம்பந்தம் மொட்டைத்தலையும் , முழங்காலும் போல என யோசிக்கத் தோன்றுகிறதா ! ஆம்பர் பிஸினையும், அணுத்துகள் எலக்ட்ரானையும் முடிச்சுப் போட்டு ஒரு கதை இருக்கிறது. எலக்ட்ரானை அடிப்படையாக வைத்து செயல்படும் எலக்ட்ரானிக்ஸை கற்றுக்கொள்ளப்போகும் நாம் இந்த கதையை சும்மானாச்சுக்கும் தெரிந்து வைத்துக்கொள்வோம் !
தாலஸும் எலக்ட்ரானும்
கி.மு. 585-ல் தன்னிடமிருந்த ஆம்பர் நகைகளில் சேர்ந்த தூசியை , கம்பளித்துணியால் துடைத்து சுத்தம் செய்கிறார் கிரேக்க அறிஞர் தாலஸ். கம்பளியால் தேய்க்கப்பட்ட அந்த ஆம்பர் பிஸின் மேலும் மேலும் தூசிகளை இழுத்ததே அன்றி சுத்தமான பாடில்லை,
அந்த ஆம்பரின் அருகில் தாலஸ் ஒரு பறவையின் இறகை கொண்டு செல்கிறார் , ஆம்பர் அதனையும் இழுக்கிறது. பேய், பிசாசு, மாயம், மந்திரம் என்றெல்லாம் தாலஸ் இந்த நிகழ்வை முடிவுகட்டாமல் இயற்கையை ஆராய்ந்து அறிய வேண்டும் என்கிற குறிப்போடு "( ἤλεκτρον ) எலக்ட்ரானை (γούνα) ஹூனாவால் தேய்க்கும் போது ஒருவித ஈர்ப்பு சக்தி ஏற்பட்டு அது தூசு, இறகு போன்றவற்றை ஈர்க்கிறது என்று எழுதி வைக்கிறார்.
தூசிகளை ஈர்த்த இந்த ஈர்ப்பு சக்திக்கு என்ன காரணம் என்பது கிட்டத்தட்ட 2000 வருசங்கள் கழித்து 1800 களில் தூசி தட்டப்படுகிறது. . .
குறிப்பு: எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த பதிவுகளுக்கென பிரத்யேகமாக EEETamilஎன்ற பெயரில் இன்னொரு தளம் ( Blog ) ஆரம்பித்துள்ளேன் .
இந்த தொடரின் அடுத்த பாகம் eeetamil.blogspot.in தளத்தில் வெளியாகும். கடற்கரை வலைத்தளத்தில் வெளியாகாது, ஆகவே இந்த தொடரை தொடர்ந்து வாசிக்க விரும்பும் நண்பர்கள் EEETamileeetamil.blogspot.in வலைத்தளத்தில் இணைந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்..
1600-ல் பியர்ரி கஸாண்டி (Pierre Gassendi) என்ற பிரெஞ்சு அறிஞர் லுக்ரடியஸின் “பொருட்களின் இயல்நிலை பற்றி” என்கிற கவிதைத்தொகுப்பை வாசித்துவிட்டு அணு பற்றிய கருத்துக்களால் மிகவும் ஈர்க்கப்படுகிறார்., அதுபற்றி அதிதீவிரமாக யோசிக்கிறார்.,
அணுக்களே, நம் அகிலத்தின் விதைகள்.
பொருட்களின் உருவாக்கம் , சிதைவு, உருமாற்றம் மற்றும் அதன் அழிவு என்பதெல்லாம் அணுக்களின் இணைவு மற்றும் தளர்வின் காரணமாகவே ஏற்படுகிறது,
அணுக்கள் நகரும், சத்தம் என்பது அணுக்களின் நகர்வினாலேயே ஏற்படுகிறது.
காற்று அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் காற்று அணுக்கள் நெருக்கம் அடைவது தான் ..
என்றெல்லாம் இவர் அணு பற்றி மேலும் சில புதிய சிந்தனைகளை சொல்லி வைக்கிறார், அணுவைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதை ஆராய்ச்சி செய்து மட்டும் தான் அறிந்து கொள்ள முடியும் என இவர் கூறிய கருத்து அணு என்கிற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?, அதை நாம் எப்படி தெரிந்து கொள்வது என அவர் காலத்திய அறிவு ஜீவிகள் பலரை யோசிக்க வைத்தது. அணு பற்றிய ஆராய்ச்சி என்கிற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தியதாலோ என்னவோ! இவரை நவீன அணுவியல் கொள்கையின் தந்தை என அறிவியலாளர்கள் அழைக்கிறார்கள்.
இந்திய அணுக்கொள்கை :கி.மு 600 களில் இந்தியாவில் ஆச்சார்யர் கனத் என்றழைக்கப்பட்ட கஷ்யப முனிவர் தனது வைஷேசிக சூத்திரம் என்கிற புத்தகத்தில் “ உலகில் உள்ள அனைத்தும் அணு என்கிற கண்ணுக்கேத் தெரியாத துகளால் உருவானவை, அவை ஒன்றோடொன்று இணைந்து மூலக்கூறுகளை உருவாக்குகிறது”, என்று கிரேக்க அறிஞர்கள் அணு பற்றி யோசிப்பதற்கு முன்னரே குறிப்பிட்டு இருக்கிறார். (இந்த நூல் கி.மு.648-ல் யுவான்சுவாங்க்- ஆல் சீன மொழியில் மொழிபெயர்ப்பும் செய்யப்பட்டிருக்கிறது,) ஆனால் அணு பற்றிய இந்திய`க் கருத்துக்கள் உலகம் முழுக்க பரவிட வில்லை, அதேசமயம் நம் பழங்கால இந்திய அறிவு புற உலகம் சார்ந்து விஞ்ஞானமாக விரியாமல் அக உலகம் சார்ந்து யோகம்,தியானம் என்று மெய்ஞானமாக மலர்ந்திருக்கிறது..
***************************
அணு பற்றிய ஆராய்ச்சிகள்:
பியர்ரி கஸாண்டியின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அணு என்னும் வஸ்து இருக்கிறதா என்று 1662-ல் ராபர்ட் பாய்ல் எனும் வேதியியல் விஞ்ஞானி ஆராய்ச்சி செய்கிறார். முதன் முதலில் அணுவின் இருப்பைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர் இவரே ! அவர் எப்படி , எதை வைத்து , என்ன ஆராய்ச்சி செய்தார் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னர், ஆராய்ச்சி செய்வது என்பதைப் பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ளலாம், ஆராய்ச்சி செய்வது எப்படி? அறிவியல் உலகம் ஆராய்ச்சி செய்து முடிவுகளை கண்டறிய நான்கு படிநிலைகளைக் கொண்ட ஒரு வழிமுறையை வகுத்துள்ளது.,
கவனித்தல் & தகவல் சேகரிப்பு : நிகழும் ஒரு விஷயத்தை உற்று நோக்கி , அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும், பின் அதுசார்ந்த தகவல்களை புத்தகங்கள், அதைப் பற்றிய முந்தைய ஆராய்ச்சிக் குறிப்புகள், வல்லுநர்களின் பதில்கள் , என எப்படியெல்லாம் சேகரிக்க முடியுமோ அப்படியெல்லாம் முயன்று போதுமான வகையில் சேகரித்துக்கொள்ள வேண்டும் . ராபர்ட் பாய்ல் அவருக்கு முந்தைய அறிவியலாளர்கள் அணு பற்றி கூறின அத்தனை தகவல்களையும் திரட்டிக்கொண்டார்.
கருத்துரு உருவாக்குதல்: அதன்பின் நமது ஆராய்ச்சியின் பலனாக என்னக் கிடைக்கப்போகிறது என்பதை ஒரு கருத்துருவாக உருவாக்க வேண்டும், ஆங்கிலத்தில் இதை Hypothesis என்கிறார்கள் . இந்த கருத்துருக்கள் உண்மையா? அல்லது பொய்யா ?என்பதை கண்டறிவதே ஆராய்ச்சியின் நோக்கம்.
சோதனை: இது தான் முக்கியமான படிநிலை, அதாவது நாம் உருவாக்கி வைத்திருக்கும் Hypothesis உண்மையா , பொய்யா என கண்டறியும் வழிமுறை. என்ன செய்ய வேண்டும் ,எப்படி செய்ய வேண்டும் எத்தனை முறை சோதனை செய்ய வேண்டும், என்பவைகளையெல்லாம் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். , சோதனைகள் செய்தல், சோதனை முடிவுகளை பட்டியலிடுதல் பொன்ற செயல்பாடுகள் இந்த நிலையின் கீழ் வருகின்றன.
சோதனை முடிவு: ஆராய்ச்சி ,நமக்குதோன்றின கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறதா, நாம் கற்பிதம் செய்து கொண்ட Hypothesis சரியா ? , ஆராய்ச்சியின் பலனாக வேறு ஏதாவது புதிய விஷயங்கள் கிடைத்துள்ளனவா என்று ஒரு முடிவுக்கு வருதல்.
ராபர்ட் பாய்லின் ஆராய்ச்சி:
ராபர்ட் பாய்ல்
ராபர்ட் பாயில் தனது ஆரய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட Hypothesis கள் :
1)காற்று என்பது அணுக்களால் ஆனது
2)காற்று அணுக்களால் ஆனது என்று நிரூபணம் செய்தால் அணுவின் இருப்பு உண்மை .
இந்த ஆராய்ச்சிக்கு ராபர்ட் பாய்ல் எடுத்துக்கொண்டது 5மீட்டர் நீளமுள்ள ஒரு J வடிவ குழாய் அதன், மேல்முனை திறந்த நிலையிலும், கீழ்முனை அடைக்கப்பட்டும் இருந்தது. மேல்முனை வழியே திரவ நிலை உலோகமான பாதரசத்தை ஊற்றினார்.
ஊற்றப்பட்ட பாதரசம் படத்தில் காட்டப்பட்டிருப்பது மாதிரி , J வடிவ குழலினுள் சிறிது காற்று வெளியை விட்டுவிட்டு நிரம்பிக் கொண்டது, பிறகு அவர் இன்னும் கொஞ்சம் பாதரசத்தை ஊற்றினார் , இப்போது காற்று மேலும் அழுத்தப்பட்டது, பாதரசத்தை ஊற்ற ஊற்ற காற்று இன்னும் இன்னும் அழுத்தப்படுவதை பாய்ல் கவனிக்கிறார்.
பாயிலின் பரிசோதனை
எந்த விகிதத்தில் அதாவது இத்தனை எடை பாதரசம் ஊற்றும் போது, இத்தனை இன்ச் அளவு காற்று அழுத்தப்படுகிறது என்பதை ஒவ்வொரு முறையும் குறிப்பெடுத்துக்கொள்கிறார், (அழுத்தமும், அளவும் நேர்விகிதத்தில் இருக்கிறது, இவ்விரணடின் பெருக்கற்பலன் மாறிலி என பாய்ல் சொன்ன, இந்த விதி பாய்லின் விதி என்று அழைக்கப்படுகிறது.)
எப்படி காற்று அழுத்தப்பட்டது ? , சிறிய வெளிக்குள் அது எப்படி பொருந்திக்கொண்டது ? என்றெல்லாம் பாய்ல் யோசித்து ஒரு லாஜிக்கல் முடிவுக்கு வருகிறார். ஒரு பஞ்சை அழுத்தும் போது அது சிறியதாக சுருங்குகிறது,அதேமாதிரி ஒரு பிரெட்டை அழுத்தும்போது அது சிறியதாக சுருங்குகிறது., ஏனென்றால் அவற்றில் சிறு சிறு துளைகள் கொண்ட இடைவெளிகளுடன் கூடிய அமைப்பு இருக்கிறது. அழுத்தும்போது அவைகளின் சிறுசிறு துளை இடைவெளிகளில் இருக்கும் காற்று வெளியேறி பஞ்சின் பகுதிகள் அல்லது பிரெட்டின் பகுதிகள் நெருங்கி வருகின்றன. காற்றை அழுத்தும் போதும் இதே மாதிரியான ஒரு விஷயம் தான் நிகழ்ந்திருக்க முடியும் , அதாவது காற்றில் உள்ள அணுக்கள் அதிக இடைவெளிகள் கொண்டவை, அவற்றை அழுத்தும் போது, நெருக்கும்போது அவை அந்த இடைவெளிகளை மீறி நெருங்கி வருகின்றன. ஆக காற்றும் சிறு சிறு அணுக்களால் ஆனவை தான் , ஆக அணு என்கிற ஒன்று நிச்சயம் கற்பனை வாதம் கிடையாது, அப்படி ஒன்று சர்வ நிச்சயமாக இருக்கிறது என தன் ஆய்வு முடிவை உலகுக்கு உரைக்கிறார்.
இடைவெளிகளுடன் காற்றணுக்கள்: அழுத்தம்=நெருக்கம்
அணு பற்றிய இன்னபிற முக்கியமான ஆராய்ச்சிகளையும் , எலக்ட்ரான் எப்படி கண்டறியப்பட்டது என்பது பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்... -----அறிவோம்...
கடவுளுக்கு சக்தி இருக்கிறதோ !இல்லையோ!, கடவுளைவிட , நாம் வேண்டும் பிரார்த்தனைகளுக்கு பல மடங்கு சக்தி உண்டு ! இங்கு, இப்போது, இந்நிலையில், எனக்கே எனக்காக பாடி வைத்தது போலிருக்கும் பாரதியின் ரெடிமேட் வரிகளை மனதாற மறுபடியும் வாசித்துக் கொள்கிறேன்... .
எல்லாம் வல்ல அந்த மகாசக்தி எல்லோரையும் காத்து அருள் செய்யட்டும் !
கிரேக்க அறிஞர்
லியூசிப்பஸ் (Leucippus ) ஒரு
கல்லை எடுத்து கையில் வைத்தபடி யோசனை செய்ய ஆரம்பித்தார். “இந்தக் கல்லை உடைத்தால்
சிறுசிறு கற்கள் கிடைக்கும், அதையும் உடைத்தால் மணல் போன்ற துகள்கள் கிடைக்கும்,
அந்த துகள்களையும் மேலும் மேலும் உடைத்துக்கொண்டே போனால்... முடிவில், என்னக்
கிடைக்கும் ? ”.
அந்தக் கல்லை
அடித்து நொறுக்க ஆரம்பித்தார், அந்த மணல் போன்ற மிகமிகச்சிறிய துகளைப் பார்த்தபடி
ஒரு முடிவுக்கு வந்தார்.
ல்யூசிப்பஸ் (leucippus ,கிமு 450)
“எந்தவொரு பொருளையும் உடைத்துக்கொண்டே போனால் முடிவில் உடைக்கவே
முடியாத ஒரு பொருள் கிடைக்கும், அதாவது உலகில் உள்ள எல்லாப்பொருட்களும் உடைக்க
முடியாத இப்படியான இந்த சிறுசிறு துகள்களின் இணைவில் உருவானவை தான்” என.
தான் யோசித்துக்
கண்டறிந்த இந்த உண்மையை லியூசிபஸ் தனது சீடர்களுடன் அமர்ந்து விவாதிக்கலானார்.
டெமாக்ரிடஸ் (கி.மு 460 – கி.மு. 370)
அவரது சீடர்களுள்
ஒருவரான டெமாக்ரிடஸ் (Democritus, கி.மு 460 –
கி.மு. 370)என்பவரை இந்த சிந்தனை
அதிகம் பாதிக்கிறது, பிரிக்கமுடியாதஅந்தஇறுதித்துகளைடெமாக்ரிடஸ்உடைக்கமுடியாதபொருள்என்றுகிரேக்கமொழியில்அர்த்தம்வரும்வகையில்A-TOM-OS என்று
பெயரிடுகிறார்.
குருவை மிஞ்சும்
சிஷ்யனாக அவர் இந்த கருத்தை மேலும் யோசித்து அவரது சிந்தனை முடிவுகளை புத்தகமாக
வெளியிடுகிறார்.
1.உலகில் உள்ள எல்லாப் பொருட்களுமே வெவ்வேறு வடிவிலான, வெவ்வேறு
எடையிலான வெவ்வேறு குணங்களை உடைய கண்ணுக்குத்தெரியாத மிகமிகச்சிறிய ரகரகமான
ஆட்டமஸ்களால் Atomos ஆனவை.
2.ஆட்டமஸ்களை ஆக்கவோ அழிக்கவோ இயலாது.
3.ஆட்டமஸ்கள் இணையும் போது ஏற்படும் இடைப்பட்ட இடைவெளியில்
எதுவும் இல்லை ,அது வெற்றிடம்.
4.கனமான பொருட்களில் ஆட்டமஸ்களின் எண்ணிக்கை அதிகமாக
இருக்கும்.
5.ஆட்டமஸ்களை அவற்றின் இடவமைவுகளை மாற்றி அமைத்தால் ஒரு
பொருளை இன்னொரு பொருளாக மாற்றவியலும்.
அணு பற்றி அண்டம்
பற்றி ஆராய்ச்சி செய்து டெமாகிரிடஸ் 72 புத்தகங்கள்
வெளியிடுகிறார். டெமக்கிரிடஸின் ஆட்டமிஸக் கருத்துக்கள்
அரிஸ்டாட்டில் போன்ற அவர் காலத்திய பிரபல அறிஞர் பெருமக்கள் பலரால் ஆதரிக்கப்
படவில்லை
அந்தக் காலத்தில் புத்தகங்களை அச்சடிக்க அச்சு எந்திரங்கள் எல்லாம்
கிடையாது, ஒவ்வொரு பிரதியையும் பாபிரஸ் இலைகளால் தயாரிக்கப்பட்ட காகிதங்களில் கைப்பட
எழுதி பிரதி செய்து தான் வெளியிட வேண்டும். டெமக்கிரிடஸின் கருத்துகள்
பிரபலமடையவில்லை , ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால் அவரது புத்தகங்கள் அதிகம் பிரதியெடுக்கப்படவில்லை.
டெமாக்ரிடஸின் 72 புத்தகங்களில் ஒன்றுகூட தற்போது இல்லை.
பாப்பிரஸ் புத்தகம்
ஆனால் அவர்கூறிய
அணு பற்றிய கொள்கைகளை மேற்கோள் காட்டி எழுதப்பட்ட பிற நூல்கள் மூலம்
டெமக்கிரிட்டஸின் கருத்துக்கள் தற்காலம் வரைக்கும் தப்பிப் பிழைத்திருக்கின்றன.
டெமாகிரிடிஸின்
கருத்துக்களை ஆதரித்தவர்களுள் மிக முக்கியமானவர் கிரேக்க அறிஞர் எபிக்யூரஸ் (Epicurus ,கி.மு 341 – கி.மு. 270.) எபிக்யூரஸ் தனது புத்தகங்களில் டெமாகிரிடிஸின்
ஆட்டமிஸ கருத்துக்களை ஆதரித்து எழுதுகிறார்,
எப்பிகியூரஸ்
எபிக்யூரஸ் கூறிய கருத்துக்களை
விளக்கும் வகையில் அவரது சீடர்களில் ஒருவரான டைட்டஸ் லுக்ரடியஸ் (Titus Lucretius, கி.மு 99- கி.மு 55 ) என்ற ரோமானிய
கவிஞர் ஆறு சிறு புத்தகங்களாக (புத்தகங்கள்
= அத்தியாயங்கள்) பிரித்து, 7400 அடிகளில் “பொருட்களின் இயல்நிலை பற்றி” (“De Rerum Natura” ) என்ற ஒரு கவிதைத்
தொகுப்பை வெளியிடுகிறார்.
Lucretius (கி.மு 99- கி.மு 55 )
அதில் முதல் இரு புத்தகங்கள் ஆட்டமிஸம் பற்றியவை.
எபிக்யூரஸ்,
எழுதிய புத்தகங்களின் பிரதிகளில் சிதிலிமடைந்து சிதைந்து போன நிலையில் சிக்கிய சில
பக்கங்களும் , புராதன கிரேக்க நூலகம் ஒன்றில் கிடைத்த லியூக்ரடியஸின் முழுக்கவிதைத்தொகுப்பும் டெமாக்கிரிடஸின் ஆட்டமிஸக்கருத்துக்களை
அழியாமல் காத்தவைகளுள் முக்கியமானவைகள்.
இந்த கவிதைத்
தொகுப்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு புராதான புத்தகங்களை
பராமரிக்கும் நூலகங்களால் பிரதியெடுத்து பராமரிக்கப்படுகின்றன.
கி.பி.1417 –ல்
டைட்டஸ் லியூக்ரடியஸின் கவிதையை Poggio Bracciolini
என்ற பழங்கால
எழுத்துக்களை பராமரிக்கும் இத்தாலிய ஆராய்ச்சியாளர் பிரதியெடுத்து வைக்கிறார்.
Poggio Bracciolini
1454-ல் கட்டன்பெர்க்
Guttenberg
என்ற ஜெர்மானியரால் அச்சு
எந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் சிதிலமடைந்த புராதான நூல்கள் பல மறு உயிர்
பெற்றன எனலாம், அவ்வகையில் டெமக்கிரடஸின் ஆட்டமிஸ கருத்துக்களை மையமாகக்கொண்டு
எழுதப்பட்ட லுக்ரடியஸின் “பொருட்களின் இயல்நிலை பற்றி” என்கிற கவிதைத்தொகுப்பு 1473
ல் அச்சிலேறுகிறது.
"பொருட்களின் இயல்நிலைப் பற்றி" அச்சடிக்கப்பட்ட பிரதி
அச்சிலேறிய பிறகு
கிரேக்க அறிஞர்கள் சிந்தனையில் மட்டும் ஆட்டம்போட்ட ஆட்டமிஸம் என்கிற அணு பற்றிய
சித்தாந்தம் உலகின் பிற தேசத்தினராலும் படிக்கப்படுகிறது.