Wednesday, March 29, 2017

பாரதிச்சூடி -4

 ஈகை திறன்

                                             

ஈகை திறன் என்பதை பெரும்பாலான தமிழ் வல்லுனர்கள் கொடுக்கும் திறன் என்று அர்த்தம் சொல்லியிருக்கிறார்கள்.

ஈகை என்பது "தன்னிடம் உள்ளதை தானமாக கொடுப்பது" திறன் என்றால் சக்தி அல்லது ஆற்றல் .

அப்படியே அர்த்தம் பண்ணினால் அப்படித்தான் !! யோசிக்க முடியும்.

இந்த செய்யுளை கொடுக்கும் சக்தி என பொருள் கொள்தல் தவறு, பாரதி தன் புதிய ஆத்திச்சூடியை கட்டளை தோரணையில் சொல்கிறான் , "ஈகை திறன் '' என்பதும் கட்டளை வாக்கியமே , அந்த முறையில் இதை அர்த்தப்படுத்தினால் " கொடுப்பது திறன் என்றொரு அர்த்த தொனியில் "ஈகை திறன்" ஒலிக்கிறது. பாரதி அப்படித்தான் சொல்லியிருப்பான்.

பாரதியின் வார்த்தைகளுக்கு விளக்கம் தேட அகராதிகளை புரட்டினால் அவன் பிடிகொடுக்க மாட்டான், அவன் வாழ்க்கையினின்று நாம் அவன் பாடல்களை பொருள் கொள்ள வேண்டும்.

தனக்கே சோறில்லாத பொழுதில் குருவிகளுக்கு அரிசி தூவிக்கொண்டிருக்கும் பாரதி நிச்சயம் கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து பின் கொடு என்கிற பொருளில் இந்த வரிகளை உச்சரித்திருக்க வாய்ப்பில்லை.

 கொடுப்பதில் ஒரு kick இருக்கிறது என்பதை கொடுப்பதன் திறனை உணர்ந்த நபர்களால் தான் இயலும்., பாரதி அந்த Kick ஐத்தான் சொல்கிறான்.

எதைக்கொடுக்கிறாயோ அதையே பெறுவோம் என்கிறது ஒரு தத்துவம்,  அந்த தத்துவத்தோடும் பாரதி சொல்லும் ஈகை திறனை ஒப்பிட்டு நோக்க முடிகிறது.
கொடுங்கள் அப்பொழுதுதான் பெறுவதற்கான தகுதி உமக்குண்டு என்று சொல்லாமல் சொல்கிறான் பாரதி !

பாரதியின்பொருளாதார நிலை உலகறிந்ததே ! இன்னிலையில் ஒருநாள் பாரதிக்குஅவர் பணிபுரியும் பத்திரிக்கையின் ஆசிரியர் பணம் கொடுக்கிறார், பணத்தோடு தன் நண்பர்களோடு வெளியே வரும் பாரதி பழக்கூடையோடு வாடிய முகத்துடன் அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தியை காண்கிறான்.என்னம்மா உன் கவலை என்கிறான் "பழமெல்லாம் விக்கல சாமி" என்கிறாள், வைத்திருந்த மொத்த காசையும் கொடுத்து கூடை பழத்தையும் தானே வாங்கிக் கொள்கிறான். பாரதி சொல்லும் ஈகை திறன் என்பது கொடுப்பதற்கேற்ப இருப்பேற்படுத்திக்கொண்டு கொடுக்கும் திறன் அல்ல The power of giving :) , கொடுப்பதால் ஏற்படும் மனநிறைவு காரணமாக உள்ளத்து ஊற்றெடுக்கும் ஆற்றலைப் பற்றியது.

அவன்சொல்வது ஈகைத்திறனை அல்ல ஈகையின் திறனை,ஈகை தரும் திறனை.

கொடுங்கள் நிச்சயம் அதைவிட அதிகமாக பெறுவீர்கள் .

Monday, March 27, 2017

பாரதிச்சூடி-3

இளைத்தல் இகழ்ச்சி:

 பாரதி குறிப்பிடும் இளைத்தல் என்பதை உடல் இளைத்தல் என்பதாக மட்டுமல்லாது  பின்னடைதல், சோர்வடைதல் என்கிற  அர்த்தத்திலும் எடுத்துக்கொள்ள வேண்டும்,  பின்னடைதல் ,சோர்ந்து ஓய்தல்  இகழ்ச்சி.

அறிவு,ஆற்றல், மனஉறுதி, செயல்பாடு,சிந்தனை ஆகிய வாழ்வின் எல்லா படிகளுக்கும் இந்த இளைத்தல் இகழ்ச்சி பொறுந்தும்.

இருக்கும் நிலையினின்று முன்னேற வேண்டும், அதுவிடுத்து இருப்பினும் தாழ்தல் இகழ்ச்சி என்கிறான் பாரதி.

அவ்வை ஏற்பது இகழ்ச்சி அதாவது  இரந்து(பிச்சையெடுத்து) வாழ்தலை இகழ்ச்சி என்கிறாள், பாரதி வாழ்நிலை யில் தாழ்ந்து இறங்கி வாழ்தலை (இளைத்தலை) இகழ்ச்சி என்கிறான்.

ஆண்மை தவறாதிருக்க அச்சம் தவிர்க்க வேண்டும், ஆண்மை தவறினால் இளைத்தல் ஏற்படும் , இளைத்தல் இகழ்ச்சி. ஆண்மை தவறேலை emphasize செய்கிறது.

தேங்கும் நதி சாக்கடையாகும், ஓடும் நதியே கடலைச்சேரும்.இகழ்ச்சி என்பது அவமானம் ,மானக்கேடு, கேலி, இழிவு , அவச்சொல் போன்றவற்றினை பெறும் நிலை. இருக்கும் நிலையினின்று இறங்குதல் மாபிழை ! அது இகழ்ச்சி தரும் இழி நிலை!


Sunday, March 26, 2017

பாரதிச்சூடி-2

ஆண்மை தவறேல் !



ஆண்மை என்பது ஆண் தன்மை என்பதன் சுருக்க வடிவு , ஆண்களுக்கான குணங்கள் என்று இதனை பொருள் கொள்ளக் கட்டாயமில்லை , ஆண் குணங்கள் என எடுத்துக்கொள்ள வேண்டும்., அன்பு , பாசம், இரக்கம், கருணை, தாய்மை என்கிற குணங்கள் பெண் தன்மை கொண்ட குணங்கள் அதே மாதிரி வீரம், தைரியம், அறம், நேர்மை, அதிகாரம், மாட்சிமை , போராட்ட குணம்,அச்சம் தவிர்த்து செயல்படும் குணம், மன உறுதி போன்றவை ஆண்மையின்பாற்பட்டவை.

ஆணிடத்தில் அன்பு,இரக்கம் போன்ற பெண் குணங்களும் இருக்க முடியும் அதேபோல பெண்ணிடத்தில் வீரம், துணிவு போராட்டகுணம் போன்ற ஆண்மை குணங்களும் இருக்க முடியும்.

அச்சம்,மடம் நாணம்,பயிற்பு எனும் பெண்களின் நாற்குண பட்டியலை நாம் நன்கறிவோம் , இதேமாதிரி ஆண்களுக்கான நாற்குண பட்டியலொன்றும் உண்டு அதன்படி அறிவு(மெய்ப்பொருள் காணும் பார்வை) நிறை(காக்கவேண்டிய விசயங்களை காத்தலும், போக்கவேண்டியதை போக்கி நடத்தலுமாகிய குணம்) ஓர்ப்பு(ஆராய்ந்து உணர்தல்), கடைப்பிடி (நன்னெறி வழுவாமை) ஆகியன ஆண்மையின் குணங்கள்.

 ஆண்மை குணங்கள் பொதுவாக  .சமூகத்தை வழி நடத்த, எளியவர்களை காக்க, துன்பங்கள் போக்க, குழப்பங்கள் தீர்க்க உதவவேண்டும் அதுவே ஆண்மையின் நேரிய வடிவம். அதிகார து
ஷ்பிரயோகம், பெண்களுக்கெதிரான வன்முறைகள், எளிய மனிதர்களை ஏமாற்றி செயல்படுதல் , வஞ்சகம் சூழ்ச்சி இவையெல்லாம் ஆண்மையின் தவறிய வடிவம்.

 பாரதியின்  வாக்கை உற்று நோக்குவோம்,  ஆண்மையை தவறாக பயன்படுத்தாதே என்கிற அர்த்தத்தில் தான் அவன் அதை சொல்லியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

 அச்சம் தவிர்த்தல் ஆண்மை குணம், அஞ்சுவதற்கஞ்சாது செயல்படுதல் ஆண்மை தவறுதல், பெண்களை காக்கும் குணம் ஆண்மை, அடிமை செய்தல் என்பது ஆண்மை தவறுதல், ஆட்சி செய்தல் என்பது ஆண்மை , அதை முறையற்று கொடுங்கோல் முறையில் செய்வது ஆண்மை தவறுதல்.

ஆண்மை தவறாக பயன்படுத்தப்படும் குடும்பங்கள் உருப்பட்டதில்லை, ஆண்மை தவறிய சமூகங்கள் ஒரு போதும் முன்னேறியதில்லை, ஆண்மை தவறிய தேசங்கள் ஒரு போதும் செழித்ததில்லை, அதனால் தான் பாரதி சொல்கிறான் " ஆண்மை தவறேல்" .


Saturday, March 25, 2017

பாரதிச்சூடி-1

அச்சம் தவிர் !



எதிர்கொள்ளல் என்பதில் தான் எல்லாமுமே இருக்கிறது , நம்மை சார்ந்தவை , நாம் சார்ந்தவை , சந்திக்கும் நிகழ்வுகள் ,சிந்திக்கும் நினைவுகள் , எதிர்படும் உறவுகள், அது தரும் உணர்வுகள் என எல்லாமுமே

எதிர்கொள்ளுதல்  என்பதை எளிமையாய் எதிர்கொள்வதற்கான எளிய மந்திரம் "அச்சம் தவிர்" .

 அச்சம் என்பது survival instinct எனப்படும் உயிர் வாழ தேவையான அவசிய உணர்வு, இயற்கை ஆபத்துக்களில் இருந்தும், தீங்கில் இருந்தும் நம்மை தற்காத்துக்கொள்ளவே இந்த அச்சம் என்கிற உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது, ஆனால் பல சமயங்களில் பலரிடத்தில் தற்காக்க உதவ வேண்டிய அச்சம் நம்மை முன்னேற விடாமல் முடக்கிவிட முயல்கிறது.

பயம் என்பது மேல்மனம் சார்ந்தது, அச்சம் என்பது ஆழ்மனம் சார்ந்தது.அச்ச உணர்வு உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது. உயிரை காத்துக்கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் உபாயம் அச்சம், அதனால் தான் அச்சம் ஏற்படும் போது இதயம் அதிக ரத்த ஓட்டத்தை நிகழ்த்த இதயத்தை வேகப்படுத்தி துடிப்பை அதிகம் செய்கிறது. அச்சத்தை அடுத்து நாம் இயங்க வேண்டுமாயின் , அந்த ஆபத்திலிருந்து தப்ப வேண்டுமாயின் அச்ச உணர்வை அதன் பின் தவிர்க்க வேண்டியது அவசியமாகிறது.

பாரதியின் வார்த்தை சாதூர்யத்தை கவனியுங்கள் அச்சத்தை ஒழி என்று அவன் சொல்லவில்லை , அச்சம் தவிர் என்கிறான், அது வரத்தான் செய்யும் ,இயற்கை உணர்வு , ஆழ்மன பதிவு அச்சத்தை அழிப்பதென்பது இயலாது, அது தவறானதும் கூட ஆகவே தான் அது வந்த பின் அதை தவிர் என்கிறான்.

அச்சம் என்கிற உணர்வு இல்லாத ஒன்றை இருப்பதாக நினக்கிறபோது அல்லது இருக்கிற ஒன்றை இல்லாமல் போய்விடுமோ என்று நினைக்கிற போது உருவாகிறது. அச்சம் உடலியல் சார்ந்த தற்காப்பு உணர்வு தான் ஆனால் அது கடந்த கால நிகழ்வுகளின் பதிவுகள் மற்றும் எதிர்கால கற்பனைகளால் ஆனது. ஆக அது 90 சதவீதம் மனம் சார்ந்த உணர்வு எனவே அதை தவிர்த்தல் மனம் வைத்தால் சாத்தியமானதே!

அச்சம் தவிர் என்று அவன் சொல்வது , அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்கிற condition apply குறியீட்டோடுதான் :) .  நெருப்பு சுடும் , சுடத்தான் செய்யும் அறிவேன் அதை நான் தொடுவேன் என்பது அறியாமை. அச்சம் தவிர் என்பது நம் எதிர்கொள்ளும் வலிமையை அதிகப்படுத்துவதற்கானது, அதிக பிரசங்கித்தனங்களுக்காக அல்ல .

விமானம் கீழே விழுந்தால் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற அச்சத்தின் விளைவு தான் பாராசூட் என்ற உயிர்காக்கும் உபாயம். காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல் , என்றொரு பாடல் வரி உண்டு. அச்சம் அவசியம் ஆனால் அதன் பின் நாம் செயல்பட்டாக வேண்டும், முன்னேறியாக வேண்டும் , நம் செயலை இந்த அச்சம் என்கிற உணர்வால்   முடக்கவிடுவது முட்டாள்த்தனம்.

அச்சம் வரும் ,வரத்தான் செய்யும் வந்தபின் மனதிற்குள் சொல்லிக்கொள்வோம், "அச்சமில்லை அச்சமில்லை  !!" மனம் நம்பும் , அச்சம் விலகும் , செயல்படுவோம், வெற்றிகொள்வோம் .

Friday, March 24, 2017

பாரதிச்சூடி

பாரதிச்சூடி:

காப்பு:

பரம்பொருள் வாழ்த்து
-----------------------------------------------------------------
ஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.


காப்பு விளக்கம்: ( விளக்கம் எழுதத்துணியும் என்னை பாரதி மன்னிப்பானாக)

-------------------------------------------------------------------------------------------------

பிறை நிலா சூடி மோன நிலையில் தியானித்திருக்கும் சாம்பல் மேனியான் (சிவன்)

பாற்கடலில் படுத்திருக்கும் கருனிறத்தான்(திருமால்)

மகமது நபிக்கு வேதம் உரைத்தவன் (அல்லா)

ஏசுவின் தந்தை (பரமபிதா)

மதங்கள் பலவொடு உருவகம் பலவென (பலரால் )உணரப்படாத,பலவென பரவிடும் பரம் பொருள்  ஒன்றே !

அதன் இயல்பு சுடர்மிகு அறிவு !
அந்த நிலை கண்டவர்கள் அல்லல் அகற்றினர்.(தம் அல்லலையும்,பிறர் அல்லலையும்)

அதன் அருளை வாழ்த்தி அழியா வாழ்வினை அடைவோம் !

-----------------------------------------------------------------------------------------------------

: ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு விதமாய் , ஒவ்வொரு பெயரில் ஒன்றென அறியாது, ஒன்றென உணராது வணங்கும் ஒவ்வொரு கடவுளும் ஒன்றே! சுடர்மிகு அறிவே அதன் இயல்பு, இறை இயல்பாம் அவ்வறிவை அறிந்தவர்க்கு அல்லல் இல்லை ! அந்த இறையின் அருளை வாழ்த்தி அழிவிலா அமர வாழ்வு அடைவோம்.

பாரதிச்சூடி

பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி:

பாரதியின் வார்த்தைகள் மீது அவன் வாழ்ந்த வாழ்க்கையின் மீது எனக்கு எப்போதும் தீராக்காதல் உண்டு, தமிழுக்கு புதிய வார்த்தைகளை கொடுத்தவன் பாரதி., காட்சிப்பிழை (எனக்கு மிகப்பிடித்த பாரதிவார்த்தை :) ) , பேசும்பொற்சித்திரம் ,அக்கினிக்குஞ்சு (நெருப்பை பறவையாக உருவகித்திருக்கும் அவன் சொல்லாண்மை ) அவன் படைப்பு கடலுக்குள் மூழ்கினால்  இன்னும் இதுபோல நிறைய முத்தெடுக்கலாம்.

அவன் ஆத்திச்சூடி ஒன்று எழுதியுள்ளான்,அவ்வையின் ஆத்திச்சூடிக்கு  எதிர்வீட்டில் குடிவைக்கலாம் அதை :) அவள் அறம் செய விரும்பு என்கிறாள்,இவன் ஊன் மிக விரும்பு என்கிறான், அவள் ஆறுவது சினமென ஆற்றுப்படுத்துகிறாள், இவன் அச்சம் தவிர், ரவுத்திரம் பழகு என ஊற்றுப்படுத்துகிறான் .

அவ்வையின் வாக்கு அக்கால மாந்தருக்கு , பாரதியின் வாக்கு இக்கால மாந்தருக்கு, அவ்வையின் ஆத்திச்சூடி out of date ஆகியது கண்டு அதை update செய்தவனாக நான் பாரதியை காண்கிறேன்.

பாரதி ஆத்திச்சூடி  ஒன்றே போதும் வாழ்வியல் கற்க . சர்வநிச்சயமாய் சொல்வேன் , வாழ்வியல் கற்க கட்டுக்கட்டான கட்டை புத்தகங்கள் , தலையணை அளவு புத்தகங்கள், மணிக்கணக்கான பிரசங்கங்கள், சாமியார் அறிவுரைகள் தேவையில்லை. ஒற்றை பாரதி போதும், அக்கினிக்குஞ்சுகளை பிரசவிக்கும் அக்கினிப்பறவை அவன், முட்டைகளுக்குள் இருக்கும் நம்மை அடைகாத்து உயிர்செய்யும் கனல் அவன் வார்த்தைகள். வாருங்கள், நாளொரு பாட்டாய் அவன் ஆத்திச்சூடிக்கு புதுப்பொருள் கற்போம், நம் பாட்டன் பாரதி கற்றுக்கொடுத்த வாழ்வியலை கற்போம்.

காப்பு - பரம்பொருள் வாழ்த்து
-----------------------------------------------------------------
ஆத்திச்சூடி , இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும்மெழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபொற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் த ந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

அறிவே தெய்வமென காப்பு சொல்லி கரம்கூப்பி ஆரம்பிக்கிறான்.


குறிப்பு: பாரதியார் பாடல்களுக்கு பொருளுரை சொல்வது மடத்தனம் என அறிந்தும் மாய மனமென்னை எழுதப்பணிக்கிறது .இந்த பொருளுரை இக்கால சந்ததியினருக்கு அவசியம் என ஆறுதல் சொல்கிறது.

தினம் ஒரு ஆத்திச்சூடியும் அது சார்ந்த என் பார்வையும் இந்த blog- ல் இடம்பெறும். வார்த்தைகளை நீட்டி முழக்காமல் முடிந்த வரை microblogging ரகத்தில் சிற்சில வார்த்தைகளில் சொல்ல வேண்டும் :)

பாரதி காப்பு : அறிவேதுணை