எப்போதும் எதாவதொன்றை எழுதிக்கொண்டே இருக்கிறாய்
கதையோ!, கட்டுரையோ !
நாவலோ !, அல்லது எழுத
எதுவுமே சிக்காத போது யாருக்காவது கடிதமோ !...
ஆச்சரியமாக இருக்கிறது, சமயத்தில்
பொறாமையாகவும்…
"எதையாவது உருப்படியா எழுது டா !!, நல்லா எழுதுற ஆனா எழுத தான் மாட்டேன்ற "..
எப்போது போன் செய்து பேசினாலும் இதை நீ சொல்லாமல் இருந்ததில்லை, "ம்ம் எழுதுறேன் .." என நானும் சொல்லத்தான்
செய்கிறேன்.
இப்போது கூடப் பார் , ஒரு மாதம் முன்பு
நீ எழுதிய கடிதத்திற்கு இப்போது தான் பதில் எழுதிக்கொண்டிருக்கிறேன். :)
கடந்த என் பிறந்த நாளின் போது , பிறந்த நாள் பரிசு எனக் கூறி என்னுடனான உனது ராமேஸ்வர நாட்களைக் கடிதமாக்கி
எழுதியிருந்தாய். ஒரு வருடத்திற்கு முன்பான நிகழ்வுகளை அலைகளாக்கி
கடத்தியிருந்தாய் .நினைவுகளுக்குப் பத்திரமாக வைத்திருக்கிறமைக்கு என் நன்றிகள்.
உனக்கு நினைவிருக்கிறதா !! ஊருக்கு வந்திருந்தபோது கூட வானவல்லியை என்
லேப்டாபில் டைப்படித்துக்கொண்டிருந்தாய், அப்போது வானவல்லியின் இரண்டாம் பாகம் ஓடிக்கொண்டிருந்தது., பேச்சுவாக்கில்
வர்மம், பிராணசக்தி பற்றி
நான் கூறிக்கொண்டிருந்தவற்றைப் புத்தகங்களில் லேசாக Refer செய்துவிட்டு வானவல்லியில் ஒரு சண்டைக்காட்சியில்
பயன்படுத்திவிட்டாய். Amazing !
இப்போதைய நிலையில் டைப்பி.. டைப்பி.. டன் கணக்கில் வார்த்தைகளை எழுதி குவித்து இருக்கிறாய் .வானவல்லி நான்கு பாகங்கள் கண்டிருக்கிறது. ( நீ நல்லா வருவ டா ).
வானவல்லியின் வெளியீட்டு விழாவிற்கு எனது பாராட்டுக்கள். நிச்சயம் வருகிறேன்.
வாய்ப்பு கிடைத்தால் குறைந்தது ஐந்து நாட்களாவது விடுமுறை எடுத்துவிட்டு
மறுபடியும் ராமேஸ்வரம் வா !
**********************
இப்போதெல்லாம் யாரும் கடிதங்கள் எழுதிக்கொள்வதில்லை, அதற்கான அவசியமும் குறைந்துவிட்டது. செல்போன்
பேச்சு, மெசஞ்சர்
அரட்டைகள் போன்ற இன்ஸ்டன்டான வஸ்துக்களுக்குள் சிக்கி கடித பரிவர்த்தனைகள் மூலம்
பேசிக்கொள்ளும் வழக்கம் கிட்டத்தட்ட செத்துவிட்டது,
செத்துக்கிடக்கும் இந்த வழக்கம் மறுபிறப்பு பெற நீ அரும்பாடுபட்டு வருவது
கண்டு மகிழ்கிறேன். சரமழையெனக் கடிதக்கனைகளை வீசிக்கொண்டிருக்கிறாய், சமீப நாட்களாக உனக்கு நீயே கூடக் கடிதம்
எழுதிக்கொண்டாய். நின் பணி சிறக்க வாழ்த்துக்கள் !
சில பல நாட்களுக்கு முன்னர் கடிதம் எழுதுவதற்கு ஏதேனும் வடிவமிருக்கிறதா என
வினவியிருந்தாய், கடிதஇலக்கிய
விதிமுறை,வரைமுறைகள்
பற்றிக் கேட்டிருந்தாய்.
கடிதம் எழுதுவதற்கு இலக்கிய வடிவம் என்றெல்லாம் எதுவும் கிடையாது, அன்பே, நன்பரே போன்ற salutation கள் கூடக்
கட்டாயமில்லை என நினைக்கிறேன், பொதுவாக நான் என்
கடிதங்களை நாள்,கிழமை இட்டு
ஆரம்பிப்பது வழக்கம், சிலர் நாள்,இடம் எழுதி முடித்திருப்பார்கள்., அவரவர் விருப்பம் போல வடிவமைத்துக்கொள்ளலாம்.
அனுப்புநர்,பெறுநர், பொருள் என எழுதுகிற வகையறாக்களைப் பள்ளி
நாட்களில் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள், இந்த மாதிரியான official கடிதங்கள்
வேண்டுமானால் விதிமுறை,வரைமுறை
கொண்டிருக்கக்கூடும், நமக்குள் அதாவது
உறவுகளுக்குள்,நட்புகளுக்குள்
எழுதிக்கொள்ளும் கடிதங்களுக்கு No Rules :). என்னவும் எழுதலாம், எதுவும் எழுதலாம், எப்படியும் எழுதலாம். இலக்கியம் , இலக்கணம் எதுவும் கிடையாது. புரிந்தால் சரி !! அவ்வளவுதான் !
அது சரி , கடிதம் என்பது
இலக்கியமா !!.. இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்., தகவல் பரிமாற்றம் , விசய பரிவர்த்தனை இவைகள் தான் கடிதங்களின் ஆதார
சுருதி., கடிதத்தை இலக்கிய
வகைக்குள் சேர்த்தால் Whats app ,SMS, FB வகையறாக்களில் Chat செய்வதைக்கூட
இலக்கியம் எனக் கூறவேண்டிய சிக்கல்கள் வரலாம், விவாதங்கள் எழலாம்.
எழுத்தாளர் அசோகமித்ரன் ஒரு பேட்டியில் "சினிமாக்கள் இலக்கியம்
இல்லை" எனக் கூறியிருந்தார். Cinema is just a form of art , Not
Literature . அதே வகையில் தான்
கடிதங்களும் , கடிதம் எழுதுதலை
ஒரு கலை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம், இலக்கியம் என்பதெல்லாம் அபத்தம்.
நேரு தன் மகள் இந்திராவிற்கு உலகச் சரித்திரத்தை கடிதம் மூலம்
சொல்லிக்கொடுத்திருக்கிறார், கி.ரா வும்
கு.அழகிரிசாமியும் இசை,இலக்கியம்,அரசியல்,சமூகம்,கதைகள் எனச் சகலத்தையும் பேசியிருக்கிறார்கள்., பிரபல எழுத்தாளர்கள், பல தலைவர்கள் தங்கள் கடிதங்களுக்குள் பல அற்புத,
உயரிய கருத்துக்களைப்
பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். சில கடிதங்கள் வராலாறு சொல்லும் ஆவணங்களாகக் கூட
இருக்கின்றன. இவைகள் புத்தகங்களாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன !
நல்லது :)
நேதாஜி , சே போன்ற
தலைவர்கள் அவர்களின் காதலிகளுக்கு எழுதின கடிதங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டுப்
புத்தகங்களாகியிருக்கின்றன. நினைக்கையில் அபத்தமாகப் படுகிறது., நாம் நம் காதலிகளுக்கு எழுதின கடிதங்களை ஊர்
பொதுவில் ஊரார் வாசிக்கப் புத்தகமாக்கி வைத்தால் நமக்கு எப்படி இருக்கும். ஒருவேளை
இந்தத் தலைவர்கள் உயிருடன் இருந்தபோது இந்தக் கடிதங்கள் வெளியாகியிருக்கக்
கூடுமானால் அவர்கள் reactions எப்படி
இருந்திருக்கும், கட்டாயமாகத்
தொகுத்தவனைத் தொலைத்துக்கட்டியிருப்பார்கள் :)
அடுத்தவனின் அந்தரங்கக் குறிப்புகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல்
மனிதனாகப் பிறந்த அத்தனைப்பேருக்கும் பொது, பக்கத்துவீடு, எதிர்வீடு என எட்டிப்பார்த்துப்பேசுவதைப் புரணி
என்கிறோம், பிரபலங்களின்
காதல் கடிதங்களை மேய்தல், அரசியல்,இலக்கியம் , அரசியல், சினிமா என celebrity களின் அந்தரங்களை ஆராய்தலை பொது அறிவு என்கிறோம்
Meaning is matter of context ஆனால் சாராம்சம்
ஒன்றுதான்.
எனக்கு புதுமைப்பித்தன் அவர் மனைவிக்கு எழுதின கடிதங்களின் தொகுப்பான
"கண்மணி கமலாவிற்கு" படிக்க வேண்டுமென ஆசை :) புத்தகம் சிக்கினால்
வாங்கி அனுப்பி வை !
சமீபத்தில் சாரு.நிவேதிதாவின் "தீராக்காதலி"
வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆரம்பகாலத் தமிழ் சினிமா நாயகர்கள் பற்றிய அருமையான
தொகுப்பு இது. இதில் தீராக்காதலி எனச் சாரு நிவேதிதா குறிப்பிடும் கே.பி.சுந்தராம்பாள்
, அவர் காதலன்
கிட்டப்பாவுக்கு எழுதின சில கடிதங்களைச் சாரு இப்புத்தகத்தில் வாசிக்கக்
கொடுத்திருக்கிறார்.அத்தனை ரசம். அதில் ஒரு சின்ன Sample தருகிறேன் !
".... எது எப்படியிருந்தாலும் தாங்கள் உடம்பை
ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளவும்.தங்கள் உடம்பு இளைத்தால் உங்களைத்
திட்டமாட்டேன்.கிட்டம்மாளைத் தான் கேட்பேன் என்று அவளிடம் சொல்லுங்கள்.அடிக்கடி
வெளியில் சுத்த வேண்டாம், தூக்கம் முழிக்க
வேண்டாம்.காலாகாலத்தில் சாப்பிடவும்.அனாவஸ்ய விஷயங்களில் புத்தியை செலவு செய்ய
வேண்டாம்.நானும் அப்படியே நடக்கிறேன்.மாதமும் ஆய்விட்டது.தங்களுக்குத் தெரியாத
விஷயமல்ல.அவ்வளவுதான் நான் எழுதலாம்.நேரில் வாருங்கள் உங்களை நான் என்ன செய்கிறேன்
பாருங்கள் !"
-இப்படிக்குத் தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள், சுந்தரம்.
கிட்டம்மாள் , SG கிட்டப்பாவின்
அதிகாரப்பூர்வ மனைவி, ஆனால் சுந்தராம்பாள்
அதிகாரபூர்வமானவர் இல்லை, காதலி.
உண்மையாகவே தீராக்காதலி. தன்னுடன் மூன்று ஆண்டுகள் மட்டுமே கந்தர்வனாக வாழ்ந்த
கிட்டப்பா இறந்த பிறகு KBS தன் வாழ்க்கை
முழுக்க (47 ஆண்டுகள்)
விதவைக்கோலம் பூண்டிருக்கிறார். இன்னும் நிறையச் சான்றுகள் சொல்லலாம் Divine
Love !
கற்றது தமிழ் திரைப்படத்தில் ஆனந்தி பிராபகர் இடையிலான கடிதங்கள் எனக்கு மிகப்
பிடிக்கும் Haunting lines… அதில்
ஆன்ந்தியின் கடிதமொன்று “வாரத்துக்கு ஒரு
தடவயாவது குளி... சாக்ஸ தொவச்சுப் போடு... “ எனச் சொல்லும் ! எத்தனை சிலாகிதம்!!, உரிமை !!, இவைகளையெல்லாம் போனில் பேசும்போது கூடச் சொல்ல
முடியும் தான் இருந்தாலும் பதில் பேச ஆளின்றி வார்த்தைகளை மட்டும் கடக்கையில் அது
கொடுக்கும் அந்த உணர்வு !! போன் பேச்சுக்களில் ஒருபோதும் சாத்தியமில்லை என்றே
படுகிறது !! ( டைரக்டர் ராம் ஒரு அற்புதமான படைப்பாளி )
இதை எல்லாம் நினைக்கையில் பேசாமல் கடிதங்களை இலக்கியங்கள் எனச் சொல்லலாமா
என்று கூடத் தோன்றுகிறது !
கடிதமென்பது இலக்கியம் இல்லை என்கிற என் முந்தைய வரிகளை இப்படியாக Compromise
செய்து கொள்கிறேன் :
கடித வடிவத்தைப் பயன்படுத்திக் கதை சொல்லுதல், கடிதங்களைக் கதைகளுக்குள் சொல்லுதல் போன்றவைகளை
இலக்கியம் எனலாம், கடித
பரிவர்த்தனைகளை மட்டுமே வைத்து எழுத்தாளர் சுஜாதா சில கதைகள் எழுதியிருக்கிறார்.
(அவரின் இரு கடிதங்கள் என்கிற கதையொன்றை உனக்கு ஈமெயிலில் அனுப்பி இருக்கிறேன் !!
படி !!)
But கடிதங்கள் இலக்கியம் கிடையாது , இலக்கியம் படைக்கிறேன் பேர்வழி எனக் கடிதம்
எழுதுகிறபோது கடிதம் தன் சாயலை இழக்க வாய்ப்பிருக்கிறது எனத் தோன்றுகிறது . ஒருவரை
நோக்கி சொல்லும் கருத்தை பலரை மனதில் வைத்துப் பேசும்போது Originality இருக்காது !
சுபாஷ் சந்திரபோஸ் அவர் காதலிக்கு எழுதின கடிதங்கள் நாளை புத்தகமாகும் என
நினைத்து எழுதியிருந்தால் விசேஷ கொஞ்சல்கள் மற்றும் காதல் ரசம் அதில் Miss ஆகி இருக்கலாம்.
இப்போதைக்கு இது
போதும் ! இன்னுமொரு கடிதத்தில் இன்னும் கொஞ்சம் பேசலாம்.
வரலாற்று புதினத்தில் இருந்து தற்போது அறிவியல் புதினம் பக்கமும்
தலைப்பட்டிருக்கிறாய் , அறிவியல் புதினம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது, எழுத
ஆரம்பித்துவிட்டாயா !!
இன்னும் எழுதுகிறேன் ,
Tweet | ||||
வாவ் ! superb விஜயன் !
ReplyDelete//அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள், சுந்தரம்.//என்னவொரு ஆத்மார்த்தமான வரிகள் .
இனிமே நானும் முடிவு பண்ணிட்டேன் எல்லாருக்கும் கடிதம்தான் :)
ப்ளாகில் எழுதபோறேன் ..
வாழ்த்துக்கள் வெற்றி அன்ட் விஜயன் :)
இதேபோல கடிதங்களால் உங்கள் அன்பு மென்மேலும் வளரட்டும் ..