நிலா
“ எப்படி ஆரம்பிப்பது? “... எழுத ஆரம்பிக்கிற பொழுதுகளில் எல்லாம் இந்த
கேள்வி என் மண்டையை குடையாமல் இருந்ததேயில்லை இதே கேள்வியுடன் தான் அரைமணி நேரமாய்
அமர்ந்திருந்தேன்...
நாளைக்குள்ளாக
எழுதிக் கொடுத்தாக வேண்டும் எழுத உட்கார்ந்திருக்கும் இந்தக் கதையை . வாரம் ஒரு
கதைக்கு நான் பொறுப்பு என எடிட்டரிடம் ஜம்பமாய்
வாக்குக் கொடுத்துள்ளேன் , கொடுக்காமல் விட்டால் , வாங்குகிற சம்பளத்தைவிட
அதிகமாய் வாங்கிக்கட்டிக்கொண்டாக வேண்டும்.
சரி , வெளியில் ஒரு
நடை நடந்துவிட்டு வந்தாலாவது சிந்தனை ஓட ஆரம்பிக்கும் என சிந்தித்தபடி . எழுந்து
நெட்டி முறித்துக்கொண்டே என்னை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த கம்ப்யூட்டர்
திரையின் மீது படர்ந்திருந்த பார்வையை ஜன்னல் கம்பிகளின் வழியாக வெளியில்
அனுப்பினேன்...
பாதி திறந்த ஜன்னல்
வழியே நான் பார்வை செலுத்திய போது பாராமுகமாய் நிலா எங்கேயோ
பார்த்துக்கொண்டிருந்தது.
ஜன்னலை
சார்த்திவிட்டு வாசற்புறமாய் நகர்ந்தேன்...
வெளியே, கவிதா
மீனுக்குட்டிக்கு சோறூட்டிக் கொண்டிருந்தாள், வழக்கம் போலவே தலையை
திசைக்கொருமுறையாய் திருப்பித் திருப்பி தின்னாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்
மீனுக்குட்டி.
மீனுக்குட்டி ,
கவிதாவின் அச்சு அசல் 3D மினிஜெராக்ஸ் . ரெண்டு வருசத்துக்கு முன்னால் என்னை
அப்பாவாக்கி , உயிராக அவதாரம் எடுத்த என் முதல் உயிர்த்துளி.
“மீனு.... சாப்டலைனா
பூச்சாண்டிட்ட பிடிச்சுக் கொடுத்துடுவேன்” என குழந்தைக்கு பூச்சாண்டிக்
காட்டிக்கொண்டிருந்தாள் கவி, மிரட்டி வேலை வாங்குவதில் பொல்லாத கில்லாடி அவள்...
ஏன் மீனு மட்டும் இவள் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறாள் என புரியவில்லை !!..
அப்படியே கதவோரம்
நின்றபடி கவிதாவின் பார்வையில் படாமல் கவிதாவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.
பூச்சாண்டி என என்னைக் காட்டிச் சொன்னாலும் சொல்லிவிடுவாள்.
அம்மாவான பின்னாலும்
கூட அழகு குறையாமல் அப்படியே தான் இருக்கிறாள் என் கவிதா, கவியின் குட்டிப்பிரதி
“மேய்ய்ய்ங்க் மா....!” என குதலைமொழியில் எதையோ பேசிக்கொண்டிருந்தாள்.இல்லாத அந்த
பூச்சாண்டிக்காக மீனுக்குட்டி பயப்படுவதாக தெரியவில்லை...
வேறு எதாவது சொல்லித்
தான் அவளுக்குச் சோறூட்டியாக வேண்டும்.
கவிதாவின் கை வான்
நோக்கி நீளத்துவங்கியது.,
“நிலாப் பாரு.... நிலாப்
பாரு...”
மீனுக்குட்டி ,
அங்குமிங்குமாய் ஆட்டிக்கொண்டிருந்த தலையை மெல்லமாய் மேலே உயர்த்தி நிலாப்
பார்த்தாள்.
மேலே தலை உயர்த்தியதால்
தானாக திறக்கப்பட்ட வாய்க்குள் சோற்றை அள்ளித் திணித்தாள் கவிதா.
“ஆஆஆங்க்ங்க்.....”
கன்னம், உதடு, மூக்கு
என சோறு பரவ ஆரம்பித்திருந்தது...
மெல்லமாய் நான் அவள்
பக்கமாய் நகர ஆரம்பித்திருந்தபோது மீனுவை சேலை முந்தானையால் துடைத்துவிட்டபடி சிரித்துக்கொண்டிருந்தாள் ...
“சாப்டலைனா அப்பாவ
அடிக்கச் சொல்லுவேன்....இந்தாங்க இவளுக்கு ரெண்டு கொடுங்கங்க..” என என்னை மீனுவிடம் வில்லனாக்கிக்
கொண்டிருந்தாள்,
மீனு மெல்லமாய்
என்னைப் பார்த்து சிரித்தாள்., அவள் சிரித்ததன் காரணம் தெரியவில்லை, ஒருவேளை நான்
அடிக்கப்போவதாய் நினைத்து அடியிலிருந்து தப்பிக்க அவள் பிரயோகிக்கும் ஆயுதமா,
இல்லை நானா அடி கொடுக்கப் போகிறேன் என கிண்டலுக்குச் சிரிக்கிறாளா !
“கவி நீ சோறு
ஊட்டிட்டு இரு நான் அப்படியே ஒரு வாக் போயிட்டு வந்துட்றேன்”
“ சார் தம் பத்தவைக்க
போறீங்க்ளோ !!”
அவள் கேட்டக்
கேள்வியை கேட்டும் கேட்காதது போல கேட்டுக்கொண்டே... அசட்டு சிரிப்புடம் மெல்ல
நகர்ந்தேன்...
“ இந்த கன்ட்றாவிய
விடுங்க னு சொன்னா கேக்குறீங்க்ளா!! “
நானும் விட வேண்டும்
என்று தான் நினைக்கிறேன், , A temporary solution for the creativity dryness என்பதாக என்னைத் தொற்றிக்கொண்டு நிரந்தரமாகிப்
போயிருக்கும் அன்றாட பழக்கமாகிவிட்டது., இப்போதைக்கு நாளுக்கு 2 எனக்
குறைத்துள்ளேன்., விட்டுவிட வேண்டும்.
மேகங்களுக்கிடையே
நீந்தி விளையாடிக்கொண்டிருந்த நிலவை நோக்கி புகை ஊதிக்கொண்டு நின்றிருந்தேன்,
நிலால ஒரு பாட்டி
வடைசுடுகிறாளாம்... கவிதாவின் கதையை வாய்பிளந்து நம்பிக் கொண்டிருந்தாள் மீனு,
ஒருகாலத்தில் நானும் கூட இந்த மீனுவைப் போல எங்க அம்மா சொன்ன வடைசுட்டக் கதையை
வாய்பிளந்து நம்பிக்கொண்டிருந்திருப்பேனோ !!
நானும் கூட கவிதாவின் கதையை காதில் வாங்கியபடி நிலாவையே வெறித்துக்கொண்டிருந்தேன்.
அட !! இன்னமும் கூட
அந்த பாட்டி நிலாவிலேயே தான் இருக்கிறாள் !! , வடைசுட்டப் படியே !! அவளைப்
பார்க்கிற கண்களில் மட்டுமே அவள் படுகிறாளோ... ஒருவேளை கவிதாவுக்கு உதவி
செய்வதற்காக கவிதாவின் கதையிலிருந்து நிலாவிற்கு இடம் மாறி மீனுவை வாய்ப் பிளக்க
வைத்து கவிதாவை மீனுவுக்கு சோறு ஊட்ட வைத்து வேடிக்கைப் பார்க்க நிலாவிற்கு
சென்றிருப்பாளோ !.
படர்ந்து வந்த
மேகமொன்று நிலவை மறைக்கத் துவங்கியிருந்தது., மீனு “நிங்க்..ங்க் ங்க். மா...”என
காற்றில் கைபிசைந்து கொண்டிருந்தாள்... ஒரு வேளை நிலா எங்கே என கேட்டிருப்பாளோ, என்னவோ !
பிடிக்கப்
பிடிக்காமல் பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை காலின் கீழிட்டு கசக்கி விட்டு... அவள்புறமாய்
நடந்தேன்...
கவிதாவும் மீனுவும்
நிலா பார்த்து கொண்டு நின்றிருந்தார்கள்.. பரவாயில்லை., ஒரு கிண்ணத்துச் சோற்றை
மீனுவை தின்ன வைத்துவிட்டார்கள் கவியும், நிலாவும், நிலாவில் வடைசுட்டுக்
கொண்டிருந்த பெயர் தெரியாத பாட்டியும் சேர்ந்து.
கிண்ணத்தை என்
கைகளில் கொடுத்து “உள்ள வச்சுருங்க” என சொல்லியபடியே மீனுவை கீழிருந்து மேலாக
இடுப்புரசி இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
“எழுத்தாளரே ரொம்ப யோசிச்சு யோசிச்சு சொட்டத்
தலை ஆயிராதீங்க !!... சாப்பிட்டுவிட்டு எனர்ஜடிக் கா உக்கார்ந்து எழுதுங்க ! “ எனச்
சொல்லிவிட்டு கண்ணடித்தாள்.
மெல்ல நகன்ற அவளை எட்டிப்பிடித்தேன்,
கவிதாவின்
கண்களுக்குள் பிரதிபலித்துக் கொண்டிருந்த நிலா என் கண்களுக்குள் அவள் கண்களோடு
சேர்ந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
சாப்பிட்டுவிட்டு முடித்ததும், ஜன்னலை திறந்து வைத்து விட்டு என் கம்ப்யூட்டர் டேபிளில் மறுபடியும் உட்கார்ந்தேன்.
பாராமுகமாய் இருந்த
நிலவின் பார்வை இப்போது என் பக்கமாய் விழுந்து கொண்டிருந்தது ..
நிலவைப் பார்த்து புன்னகைத்தபடியே “நிலா”
எனத் தலைப்பிட்டு இந்த கதையை எழுத ஆரம்பித்திருக்கிறேன்...
Tweet |
ஒரு வருசத்துக்கு முன்னாடி படித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது கடல்...
ReplyDelete