Saturday, January 30, 2016

வழிப்போக்கனின் வார்த்தைகள் - 1

நல்லவர்களும்...  கெட்டவர்களும்...


" சமநிலையை நோக்கிய பயணமே - பிரபஞ்சத்தின் இயக்க ரகசியம்"
                                                                                                               -வழிப்போக்கன்

துவக்கமும் முடிவும் இன்றி நீண்டுகிடக்கிற மாயப்பாம்பென ஊர்ந்துகொண்டேயிருக்கிறது காலம். காலசர்ப்பத்தின் ஊர்தலின் முன்னால் நம் இருப்பு எத்தனை துச்சம் !! என எண்ணிப்பார்க்கிறேன், இந்த மிகச்சிறிய கால நீளத்திற்குள் தான் நாம் எத்தனை ஆட்டம் போட்டு விடுகிறோம்.

கொலை,கொள்ளை, கற்பழிப்பு எனச் செய்திதாள்களின் பக்கங்கள் நிறைக்கப்படுகின்றன. தீமைகள் வலுத்துவிட்டன, நல்லவர்கள் என்கிற அரிய இனம் அழிவை நோக்கிப் பயணித்துக்கொண்டு இருக்கிறது.

மேம்போக்காகச் சிந்திக்கிற போது அல்லது பார்க்கிற போது தீயவைகள் பெருகி விட்டது போலத்தான் தெரிகிறது, (அப்படி என்றால் அது உண்மை இல்லையா!?)

எங்குப் பார்த்தாலும் சுயநலம், யாரைப் பார்த்தாலும் சுயநலம், ஊருக்குள்ள நலவங்களையே பார்க்க முடியறது இல்லை, எனச் சதா சர்வகால உச்சாடனம் செய்துகொண்டு சுற்றித்திரிகிற சாமானியன் தான் நானும் கூட.

சமீபத்தில் சென்னையை இயற்கை அன்னை தலைமுழுகிவிட முடிவெடுத்து சென்னைக்கு ஜலசமாதி கட்டிக்கொண்டிருந்த வேலையில் அன்பு , பாசம், இரக்கம், கருணை, இன்னபிறக்கள் என அடுத்தடுத்து எடுத்து வைத்துச் சுயநலம்,ஏமாற்றிப்பிழைத்தல்,வஞ்சகம் போன்ற நெகட்டிவ் விசயங்களைச் சரிகட்டிவிட்டு இயற்கை அன்னையின் கையில் இருந்த தராசு தட்டை சமன்செய்து விட்டோம்.இயற்கை அன்னையும் சென்னையை முழுகடிக்கவில்லை. Thank God ! இல்லை இல்லை Thank Humanity! .

நாம் முன்னெச்சரிக்கை, முன்யோசனை, திட்டமிடல் என எத்தனை பிரயத்தனமாக இருந்தாலும் கூட நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டியது நடந்துவிடத்தான் போகிறது.நம்மால் அதை மாற்றி விடவோ ! நடக்காமல் தடுக்கவோ செய்துவிட முடியாது ,ஆனால் நடப்பதிலிருந்து தப்பிக்கவும் தற்காக்கவும் முடியும்.

அந்த வகையில் சென்னை மூழ்கினபோது அதை மீட்டெடுத்த அன்புக் கரங்களைக் கண்டு மெய்யாலுமே மெர்சலாகிவிட்டேன், அடேங்கப்பா !! ரகம் ரகமாய் வகைபிரித்துக்கொண்டு உதவியிருக்கிறார்கள், சமூக ஊடகங்களை இப்படியும் பயன்படுத்த முடியுமா , அதன் மூலம் கூட உதவ முடியுமா என அசத்தியிருக்கிறார்கள் , அரசாங்கம் உதவும், என அசால்ட்டாக இல்லாமல் களம் இறங்கி உதவியிருக்கும் உள்ளங்களை நினைத்துப் பார்க்கையில் மெய் சிலிர்க்கிறது.

ச்ச்ச ! ஊருக்குள்ள நல்லவங்களும் இருக்காங்கப்பா, எல்லாருமே திருடங்க இல்லை !.

"சமநிலையே பிரபஞ்சத்தின் ஆதார தத்துவம்" என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு, எத்தனைகெத்தனை இருள் இருக்கிறதோ அத்தனைக்கத்தனை வெளிச்சம் , எத்தனை நெகடிவோ, அதற்குச் சமமாக அதே அளவு பாஸிடிவ் , அந்த வகையில் எத்தனைக்கெத்தனை தீமைகளும் கொடூரங்களும் இருக்கின்றனவோ அதனைச் சரிப்படுத்திச் சமன் செய்யும் அளவுக்கு நன்மைகளும், மனிதத்தன்மையும் இருக்க வேண்டும் என நம்புகிறேன், சர்வநிச்சயமாக இப்படியாகத்தான் இருக்கும் .

நேற்று மார்க்கெட்டை கடந்து நடந்துபோய்க்கொண்டிருக்கையில் ஒரு காட்சி, சைக்கிளின் பின்புற கேரியரில் கட்டி வைத்திருந்த தக்காளி பை தவறி கீழே விழ , தக்காளிகள் சிதறி ஓட சைக்கிளை ப்ரேக் அடித்து நிறுத்தி திரும்பிப் பார்க்கிறான் அந்தச் சிறுவன். விழுந்த மாத்திரத்தில் யாரென்று தெரியாத யாரோ ஒருவர் சிதறிய காய்கறிகளைப் பையினுள் அடுக்கி பையனிடம் கொடுக்கிறார்.

அந்த இடத்தில் , என்னையும் சேர்த்து நிறையப் பேர் அந்தக் காட்சியின் ஃபிரேமிற்குள் வருகிறார்கள் ...

அந்தப் பையனுக்கு உதவி கிடைத்த அதே இடத்தில் உதவுபவர்களைப் பார்த்துப் பழித்துப் பேசி பிழைக்கத் தெரியாதவன் என்று சொல்கிற நிலை கெட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். காய்கறிப்பை கீழே விழுவது மாதிரி மாட்டியதற்காக அந்தப் பையனை திட்டுகிற சமநிலைவாதிகளும் இருக்கிறார்கள். பக்கத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களையும் என்னையும் ஏமாற்றி உதவுகிற மாதிரி பாசாங்கு செய்து பாதிக்குப் பாதியை யாருக்கும் தெரியாமலேயே திருடுகிற ஒட்டுண்ணிகளும் இருக்கிறார்கள்.

அதே இடத்தில்தான் , கவனித்து , பயன் கருதாது உண்மையாக உதவுபவர்களும் இருக்கிறார்கள்.

காமாலை கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் என்பது மாதிரி நம் கண் பிழைகளை மட்டுமே பார்த்துப் பார்த்துப் பழகிப்போய் எல்லோரையுமே திருடர்களாகவும், ஏமாற்றுபவர்களாகவும், வஞ்சகர்களாகவும் பார்க்கத்துவங்கிவிட்டது.

நாகரிக காட்டு மிருகங்களுக்கு மத்தியில் நம்மைச் சுற்றிலும் ரத்தமும் சதையுமாக , சத்தமும் வார்த்தையுமாக ரகம் ரகமாய் மனிதர்களும் வாழ்கிறார்கள். அவர்களைக் கண்டுகொள்வதற்கான அடிப்படைத்தகுதிகள் தெளிந்த மதியும் , திறந்த கண்களும் மட்டுமே !

பாதி நிரம்பிய அமுத குவளையைப் பார்த்து , பாதிக் காலியாக இருக்கிறது என்று புலம்பாமல், நிரம்பி இருப்பதை நிறந்து உண்டு இன்புற்று இருந்து வாழ்வோம் !

                                                                                    வார்த்தைகளோடு வருகிறேன்...


 

Post Comment

Tuesday, January 19, 2016

பயணங்கள் முடிவதில்லை ...

"பயணங்கள் முடிவதில்லை" என்ற இந்த தொடர்பதிவுப் பயணத்தை தொடர அழைத்திருக்கும் வரலாற்று நூல் ஆசிரியர் ,, பிரபல பதிவர் ,எழுத்தாளர் , இலக்கியவாதி  நன்பர் வெற்றிவேலிற்கு நன்றி .

பயணங்கள் முடிவதில்லை ...

"இலக்கு ஏதுமின்றி பயணிக்கிற  பயணிகள் பாக்கியவான்கள் ".
                                                                                 - எழுதப்படாத ஒரு புத்தகத்திலிருந்து


கானக வழியாக   பெங்களூரூ To  கலசா
 பயணித்துச் செல்கிற இடங்களைவிட,  பயணங்களை அதிகம் விரும்புகிறவன் நான்.

சென்னையில் வசித்திருந்த காலங்களில் அங்கு கிடைக்கும் 50 ரூபாய் பேருந்து பயணச்சீட்டை (எந்த இடத்திற்கும்  சென்னைக்குள் பயணிக்க ஒரு நாள் Bus pass) வாங்கிக்கொண்டு இறங்கும் இடம் பற்றிய பிரக்ஞை ஏதும் இன்றி  சுற்றியிருக்கிறேன் :) .

மறக்க முடியாத பயணம் என்றவுடன் பலரது மனங்கள் நீண்ட பயணங்களைத்தான் அசைபோடுகின்றன (இந்த தொடர்பதிவை ரிவர்ஸ் கியரில் லிங்க் லிங்க் காக பயணித்து அடியேன் அவதானித்து கண்டறிந்த உண்மை ). :)


 சப் கான்சியஸாக நம் ஒவ்வொருவரின் மனமும் இலக்கில்லாத நீண்ட பயணத்தை விரும்புகிறது என நினைக்கிறேன், தூக்கி சென்றிருக்கும் சுமைகளை மறந்து, இறங்க வேண்டிய இடத்தை மறந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டு, கதை கேட்டுக்கொண்டு, கதை சொல்லிக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, எதையாவது யோசித்துக்கொண்டு, அன்புத்துணையை ஆரத்தழுவிக்கொண்டு, மடி மீதோ, தோள் மீதோ சாய்ந்துகொண்டு, பக்கத்து சீட் குழந்தையின் குறும்புகளை ரசித்துக்கொண்டு, சைட் அடித்துக்கொண்டு ......

சரி ! ஏன் இப்போது இவையெல்லாம் இங்கு சொல்லிக்கொண்டிருக்கிறேன் ! வேறொன்றுமில்லை , இந்த தொடருக்கான தலைப்பு செய்த விளைவு !

இலக்கில்லாத பயணங்கள் மட்டுமே முடிவில்லாது தொடர முடியும். முடிவில்லாத பயணம் என்பது இலக்கில்லாதிருந்தால் மட்டுமே சாத்தியமாக முடியும்.

இப்போது கேள்விகள்...

1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?



முதல் ரயில் பயணம் என் நினைவில் இல்லை ! இருந்தாலும் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் கைக்குழந்தையாக இருந்த காலத்தில் ரயில் கம்பார்ட்மென்டின் இரு லக்கேஜ் வைக்கும் கம்பிகளுக்கு நடுவே சேலையில் கட்டிய தூழிக்குள் என்னைத் தொங்க வைத்து ரயிலின் தாலாட்டலில் தூங்க வைத்தபடி பயணிப்பார்களாம்.
அம்மாவும் நானும் , ஒரு ரயில் பயணத்தில்
                                        
நினைவில் இருக்கும் முதல் ரயில் பயணம் (திருச்சிக்கு தாத்தாவோடு  பயணித்தது., மங்கிய மஞ்சள் விளக்கு வெளிச்சம், மரக்கட்டை சீட்,எனது அப்போதைய வயதைச் சரியாக டி.டி.ஆரிடம் சொன்னது, டி.டி.ஆர் கையில் தாத்தா 20 ரூபாய்  கொடுத்தது என ..) நினைவில் இன்னமும்  பத்திரமாகவே இருக்கிறது.  

2. மறக்கமுடியாத பயணம் எது?

மறக்க முடியாத பயணம்.. :) ,வேலை விசயமாக மகராஸ்டிரம் முழுக்க திரிந்துகொண்டிருந்த நேரத்தில் , முப்பது மணிநேரப்பயணமாக தீபாவளிக்கு முந்தைய நாள்  காலையில் மகராஸ்ட்ரத்தின் ஒஸ்மனாபாத்-ல் இருந்து  பயணத்தைத் தொடங்கி, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்களில் இருந்த இடைவெளிகளை ஒவ்வொரு இடமாக மாறி மாறி கடந்து தீபாவளி தினத்தின் மதியத்தில் வீடு வந்து சேர்ந்தது. தீபாவளியை உறக்கத்தில் தீர்த்தது :) .

அந்த சோகக்கதை இந்த லிங்க்-ல் விரிவாக இருக்கிறது.

மகராஸ்ட்ர மலைப்பிரதேசம்:பனாலா


3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

சுமையில்லாமல் பயணிக்க .

வராஹ நதிக்கரையோரம்


4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

பயணத்தில் விரும்பி கேட்கும் இசை : இளையராஜா

5. விருப்பமான பயண நேரம்?

பொதுவாக என் பயணங்கள் பஸ், ரயில் என்று மட்டுமே இருந்ததனாலோ என்னவோ பயணத்தை துவங்குவதில் விருப்பமான நேரம் என்று  எதையும் வரையறை செய்து சொல்ல மனம் குழம்புகிறது.

பயணத்தின் போது தூங்காது தூங்கி  கடக்கும் இரவுகளும், தூக்கம் கலைந்த பின்னான  அதிகாலைகளும்  மிகப் பிடிக்கும்.

6. விருப்பமான பயணத்துணை. 

வினோத் குமார்,  பாலாஜி, வெற்றிவேல், உதேஷ்,  சீனு அண்ணா .

7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

பொதுவாக தனியாக பயணிக்கும் பயணங்களில் மட்டும் தான் புத்தகம் வாசிப்பேன். எந்த புத்தகமாயினும் வாசிப்பேன் , ஆனால் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் , சின்ன நாவல்கள் என அதிக பக்கங்களுக்கு தொடராத கையடக்க வகையறா புத்தகங்கள் மட்டும் பயண விருப்பம்.

8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்? 

Cycle Ride from Rameswaram to dhanushkodi !

ஒரு வேளை பைக் ஓட்டத்தெரிந்தால் பைக்  ரைட் என சொல்லி இருப்பேனா எனத் தெரியவில்லை, :)  ஆனால் வேகமாக ஓட்டிக் கடப்பதில்  அந்தப் பயணப் பயன் கிட்டாது போகும் என்பது என் கருத்து. இரு புறங்களிலும் கடல் , நடுவில் சாலை, களைப்பில் நிழலாற மரங்கள்.  (  கடலலைகளில் கால் நனைக்கையில் களைப்பின் உச்சம் நனைந்து கரைந்து மறைந்து போவது !! Chanceless ).

9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்? 


இல்லை , ( with conditions apply) .

பொதுவாக முணுமுணுத்தல்கள்  இருந்ததில்லை, சிற்சில நேரங்களில் சில பாடல் வரிகள் , கடக்கும் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனதிற்குள் தோன்றுவதுண்டு.

10. கனவுப் பயணம் ஏதாவது?


நிறையா இருக்கு வெற்றி ..  பெரிய்ய்ய... லிஸ்ட் இருக்கு... தமிழ்நாட்டுலயே பாக்காத இடம் இன்னும் ஏகப்பட்டது இருக்கு... , தாஜ்மகால், இமயமலை, நயாக்ரா அருவி, வெனிஸ் நகரம், சிங்கப்பூர் , பிரமிட்....

உலகத்தையே சுத்தனும்னு  கனவு இருக்கு... (பொதுவாக  மலை, அலை , மற்றும்  கலை பிரதேசங்களை நோக்கிய பயணம் மிக மிக மிக ... பிடிக்கும் ).

கனவுப்பயணம் !! இன்னதென்று ... ஒற்றை பதிலில் சொல்ல வேண்டுமென்றால் ,

பயண இடம் சார்ந்து என் பதில் செர்பியாவில் இருக்கும் நிக்கோலா டெஸ்லா மியூசியத்தை சாவதற்குள் பார்த்துவிட வேண்டும் என்பது .

பயணம் சார்ந்து என் பதில் கப்பலில்  ரொம்ப தூரம் பயணிக்கனும்னு  :)


தொடர் அழைப்பு

புது அழைப்பு

1. வினோத் குமார்
2.பிரசாந்த்

மறு அழைப்பு:

3. சீனு அண்ணா
4.அரசன் அண்ணா
5.முரளி சார் (மூங்கில் காற்று)
4.பிரியா அக்கா

இந்த தொடர் பதிவை முதன் முதலில் துவங்கி தமிழ் வலையுலகில் வலம் வர வைத்த திருமதி.மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களுக்கு நன்றிகள்.




 

Post Comment