Sunday, March 26, 2017

பாரதிச்சூடி-2

ஆண்மை தவறேல் !



ஆண்மை என்பது ஆண் தன்மை என்பதன் சுருக்க வடிவு , ஆண்களுக்கான குணங்கள் என்று இதனை பொருள் கொள்ளக் கட்டாயமில்லை , ஆண் குணங்கள் என எடுத்துக்கொள்ள வேண்டும்., அன்பு , பாசம், இரக்கம், கருணை, தாய்மை என்கிற குணங்கள் பெண் தன்மை கொண்ட குணங்கள் அதே மாதிரி வீரம், தைரியம், அறம், நேர்மை, அதிகாரம், மாட்சிமை , போராட்ட குணம்,அச்சம் தவிர்த்து செயல்படும் குணம், மன உறுதி போன்றவை ஆண்மையின்பாற்பட்டவை.

ஆணிடத்தில் அன்பு,இரக்கம் போன்ற பெண் குணங்களும் இருக்க முடியும் அதேபோல பெண்ணிடத்தில் வீரம், துணிவு போராட்டகுணம் போன்ற ஆண்மை குணங்களும் இருக்க முடியும்.

அச்சம்,மடம் நாணம்,பயிற்பு எனும் பெண்களின் நாற்குண பட்டியலை நாம் நன்கறிவோம் , இதேமாதிரி ஆண்களுக்கான நாற்குண பட்டியலொன்றும் உண்டு அதன்படி அறிவு(மெய்ப்பொருள் காணும் பார்வை) நிறை(காக்கவேண்டிய விசயங்களை காத்தலும், போக்கவேண்டியதை போக்கி நடத்தலுமாகிய குணம்) ஓர்ப்பு(ஆராய்ந்து உணர்தல்), கடைப்பிடி (நன்னெறி வழுவாமை) ஆகியன ஆண்மையின் குணங்கள்.

 ஆண்மை குணங்கள் பொதுவாக  .சமூகத்தை வழி நடத்த, எளியவர்களை காக்க, துன்பங்கள் போக்க, குழப்பங்கள் தீர்க்க உதவவேண்டும் அதுவே ஆண்மையின் நேரிய வடிவம். அதிகார து
ஷ்பிரயோகம், பெண்களுக்கெதிரான வன்முறைகள், எளிய மனிதர்களை ஏமாற்றி செயல்படுதல் , வஞ்சகம் சூழ்ச்சி இவையெல்லாம் ஆண்மையின் தவறிய வடிவம்.

 பாரதியின்  வாக்கை உற்று நோக்குவோம்,  ஆண்மையை தவறாக பயன்படுத்தாதே என்கிற அர்த்தத்தில் தான் அவன் அதை சொல்லியிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

 அச்சம் தவிர்த்தல் ஆண்மை குணம், அஞ்சுவதற்கஞ்சாது செயல்படுதல் ஆண்மை தவறுதல், பெண்களை காக்கும் குணம் ஆண்மை, அடிமை செய்தல் என்பது ஆண்மை தவறுதல், ஆட்சி செய்தல் என்பது ஆண்மை , அதை முறையற்று கொடுங்கோல் முறையில் செய்வது ஆண்மை தவறுதல்.

ஆண்மை தவறாக பயன்படுத்தப்படும் குடும்பங்கள் உருப்பட்டதில்லை, ஆண்மை தவறிய சமூகங்கள் ஒரு போதும் முன்னேறியதில்லை, ஆண்மை தவறிய தேசங்கள் ஒரு போதும் செழித்ததில்லை, அதனால் தான் பாரதி சொல்கிறான் " ஆண்மை தவறேல்" .



 

Post Comment

3 comments:

  1. அருமையான விளக்கம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பாரதியின் சிந்தனையை உள் வாங்கி எழுதியது சிறப்பு.

    ReplyDelete

கருத்து சொல்ல வந்த உங்களுக்கு என் நன்றிகள்.,உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள்....